என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஏ.வி.எம். சரவணன் மறைவு: அமைதி, எளிமையை பண்பாக கொண்டவர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
- ஏ.வி.எம். சரவணன் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.
- ஏ.வி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு.
சென்னை:
ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க ஏ.வி.எம். நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏ.வி.எம். சரவணன் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ் திரையுலகின் பாதையை தீர்மானித்து உருவாக்கியதில் ஏ.வி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு ஏ.வி.எம். நிறுவனத்தின் பாதையை தீர்மானித்ததில் சரவணன் பங்கும் அளப்பரியது.
புதல்வராகவும், திரைத்துறை ஆளுமையாகவும் "அப்பச்சி" என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை ஏ.வி.எம்-க்குப் புகழ் சேர்த்தவர் சரவணன். பேரறிஞர் அண்ணாவின் "ஓர் இரவு", தலைவர் கலைஞரின் "பராசக்தி", முரசொலி மாறனின் "குலதெய்வம்" என ஏ.வி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏ.வி.எம்.சரவணன்.
கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் ஏ.வி.எம்-ன் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார். அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏ.வி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் 'தமிழ்த் திரை உலகில் பல புதுமைகளை புகுத்துவதற்கு காரணமாக இருந்த ஏ.வி.எம்.சரவணன் ஏராளமான கலைஞர்கள் தமிழ்த் திரை உலகில் நுழைவதற்கு காரணமாக இருந்தவர் என்று புகழாரம் சூட்டி உள்ளார்.






