என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • திருக்கழுக்குன்றம் தாலுகாவில் ஜமாபந்தி வருவாய் தீர்வாய நிகழ்ச்சி, கடந்த மே.30ல் துவங்கி நேற்று நிறைவடைந்தது.
    • பேரூராட்சி தலைவர் யுவராஜ், தனி சப் கலெக்டர் சாகிதா பர்வீன், தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் தாலுகாவில் "ஜமாபந்தி" வருவாய் தீர்வாய நிகழ்ச்சி, கடந்த மே.30ல் துவங்கி நேற்று நிறைவடைந்தது. இதில் 857 பேருக்கு, 2.07, கோடி ரூபாய் மதிப்பு, இலவச வீட்டு மனை பட்டா, சமூக பாதுகாப்பு, குறு, சிறு, நடுத்தர தொழில் மேம்பாடு, வேளாண்மை, தோட்டக்கலை, பொறியியல் உள்ளிட்ட துறைகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் எம்.பி செல்வம், திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ பாலாஜி, செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ பாபு, ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், தனி சப் கலெக்டர் சாகிதா பர்வீன், தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • மழையால் செங்கல்பட்டில் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • மரம் விழுந்தபோது அவ்வழியாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் செல்லவில்லை.

    செங்கல்பட்டு:

    கடந்த 2 மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் மற்றும் வயதானவர்கள் வரை வெயிலின் தாக்கத்தால் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் வெயிலின் வெப்பத்தில் இருந்தும், அனல் காற்றில் இருந்தும் மக்களை காப்பாற்றும் வகையில் செங்கல்பட்டில் நேற்று பலத்த மழை பெய்தது. நேற்று மாலை 6 மணியளவில் செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

    சுமார் 45நிமிடம் கனமழை பெய்தது. இந்த மழையால் செங்கல்பட்டில் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால அந்த பகுதி மக்கள் வெப்பம் தணிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    சென்னை அசோக் நகர், 7 -வது அவென்யூ பகுதியில் சாலையோரம் இருந்த ராட்சத மரம் காற்றின் வேகம் காரணமாக நேற்று இரவு 9 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் வேரோடு சரிந்து சாலையில் விழுந்தது. சாலையை முழுவதுமாக ஆக்கிரமித்தபடி மரம் விழுந்ததால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது.

    தகவலறிந்து அசோக் நகர் இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போக்குவரத்து போலீசாரும் வரவழைக்கப்பட்டு சாலையில் கிடந்த மரத்தை எந்திரங்கள் கொண்டு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மரம் முழுவதுமாக வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. மரம் விழுந்தபோது அவ்வழியாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் செல்லவில்லை. இதனால் உயிர் சேம் தவிர்க்கப்பட்டது.

    • நேற்று முன்தினம் முதல் குணசேகரன், அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் மாயமாகி உள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்பத்துடன் மாயமான தம்பதியை தேடி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம், ராதா நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது49). இவரது மனைவி வசுமதி (35) இவர்களது மகன்கள் அஜித்குமார் (13), மித்தேஷ் (10). நேற்று முன்தினம் முதல் குணசேகரன், அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் மாயமாகி உள்ளனர். அவர்கள் எங்கு சென்றார்கள்? என்று தெரியவில்லை.

    அவர்களது வீடு திறந்து கிடக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த வசுமதியின் அண்ணன் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்பத்துடன் மாயமான தம்பதியை தேடி வருகிறார்கள்.

    • முந்திரி கொட்டையை பிரித்து எடுத்து விற்பனை செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.
    • பழம் 1 கிலோ 20 ரூபாய்க்கும், கொட்டை 400 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    பழத்தின் வெளியே விதை கொண்ட ஒரே பழமான முந்திரி பழம், தமிழ் நாட்டில் அரியலூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது இதன் சீசன் துவங்கி பழங்களை பறித்து, அதிலிருந்து கொட்டையை பிரித்து எடுத்து விற்பனை செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் முந்திரி காடுகள் கிழக்கு கடற்கரை சாலையில் அதிகளவில் இருந்தது. காலப்போக்கில் அவை மனை பிரிவுகளாகவும், பண்ணை வீடுகளாகவும் மாறியதால் பெரும்பாலான முந்திரி காடுகள் அழிந்தன. ஒரு சில பகுதிகளில் மட்டும் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தற்போது மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி, திருவிடந்தை, வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் குறைந்த அளவில் காணப்படும் முந்திரி காடுகளில் அறுவடை பருவம் துவங்கியதால் விவசாயிகள் பழங்களை பறித்து, பழம் 1 கிலோ 20 ரூபாய்க்கும், கொட்டை 400 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறார்கள்.

    • நாவலூரில் உள்ள சுங்கச்சாவடி மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
    • பழைய மாமல்லபுரம் குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    திருப்போரூர்:

    பழைய மாமல்லபுரம் சாலை நாவலூரில் சுங்கச்சாவடி உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் பணிக்காக அரசு சார்பில் சென்னையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை மூடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் நான்கு சுங்கச்சாவடிகள் மூடப்பட்டன. நாவலூரில் உள்ள சுங்கச்சாவடி மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்கு பழைய மாமல்லபுரம் குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாவலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்று அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதமும் அனுப்பி உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஓ.எம்.ஆர். சாலையில் சுமார் 3 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இவர்கள் அனைவரும் நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    தற்போது பழைய மாமல்லபுரம் சாலையில் துரைப்பாக்கம், காரப்பாக்கம் சோழிங்கநல்லூர், நாவலூர் பகுதிகளில் மெட்ரோ ரெயில் பணிக்காக சாலையின் நடுவில் ராட்சத தூண்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    ஆனால் நாவலூரில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    • இந்த சம்பவம் தாம்பரம் மாநகர போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • 3 பெண் போலீசார் மீதும் கமிஷனர் நடவடிக்கை மேற்கொண்டார்.

    வண்டலூர் :

    தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ள வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, அதே போலீஸ் நிலையத்தில் பணிபுரிபவர்கள் பெண் போலீஸ் ஏட்டு ஜெயமாலா, ஆயுதப்படை போலீசார் ஐஸ்வர்யா, கவுசல்யா. இவர்கள் கடந்த 4-ந் தேதி இரவு மணிமங்கலம், படப்பை, கரசங்கால், சோமங்கலம் பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு ஜூஸ் கடையில் உணவு பொருட்களை கேட்டு வாக்குவாதம் செய்தனர். அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. வீடியோ காட்சியில் பதிவான விவரம் வருமாறு:-

    படப்பையில் உள்ள ஒரு ஜூஸ் கடைக்கு பெண் போலீசார் 4 பேரும் செல்கின்றனர்.

    இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமிக்கு ஓசியில் ஜூஸ், சாண்ட்விச் கேட்டு கடை உரிமையாளரிடம் போலீஸ் ஏட்டு ஜெயமாலா செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

    அப்போது அவருடன் ஆயுதப்படை போலீசார் ஐஸ்வர்யா, கவுசல்யா உடன் இருக்கிறார்கள்.

    போலீஸ் ஏட்டு ஜெயமாலா கடையில் பிளாஸ்டிக் டப்பாவில் இருந்து 6 சாக்லேட்டுகளை எடுத்து சக போலீசாரிடம் கொடுத்து விட்டு கல்லா பெட்டி பகுதியில் நின்றுக் கொண்டிருந்த கடை ஊழியரிடம் 'ஏன் சாண்ட்விச் போடவில்லை?' என்று கேட்கிறார்.

    அப்போது ஊழியர் 'மிஷின் ரிப்பேர். அதனால் சாண்ட்விச் இன்று போடவில்லை' என்கிறார்.

    உடனே 'இன்ஸ்பெக்டர் மேடத்துக்கு ஒரு ஜூஸ் போடு' என்று ஊழியரிடம் கேட்கிறார்.

    இதற்கிடையே ஊழியர் தனது செல்போனில் இருந்து கடை உரிமையாளருக்கு போன் செய்து ஏட்டு ஜெயமாலாவிடம் கொடுக்கிறார்.

    ஏட்டு ஜெயமாலா, 'மேடத்துக்கு ஜூஸ் வேணும். வாரத்துக்கு ஒரு ஜூஸ், ஒரு சாண்ட்விச் தர முடியாதா? நீ போலீஸ் நிலையத்திற்கு வந்து மேடத்தை பாரு, எப்ப வர 5 மணிக்கு வரியா. சரி உங்களுக்காகதான் நாங்க இரவு ரோந்து பணியில் ஈடுபடுகிறோம், எங்களுக்காக ஒரு ஜூஸ், சாண்ட்விச், 2 ரூபாய் சாக்லேட் தர முடியாதா?' என்கிறார்.

    எதிர் முனையில் பேசிய கடை உரிமையாளர் , 'டீ மட்டும் குடித்துவிட்டு போங்க' என்கிறார். 'அந்த டீயை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது' என்று கேட்டுவிட்டு ஏட்டு ஜெயமாலா செல்போன் இணைப்பை துண்டித்து விடுகிறார்.

    இதனை தொடர்ந்து அவர் ஒரு வாட்டர் பாட்டிலை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஆடியோ உடன் தெளிவாக பதிவாகி இருந்தன. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கடை உரிமையாளர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததால் பரபரப்பானது.

    இந்த சம்பவம் குறித்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் கடை உரிமையாளர் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், டீ கடைக்கு சென்று ஓசியில் ஜூஸ், சாண்ட்விச் கேட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டது தொடர்பாக வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, போலீஸ் ஏட்டு ஜெயமாலா, ஆயுதப்படை போலீசார் ஐஸ்வர்யா, கவுசல்யா ஆகிய 4 பேரையும் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் தாம்பரம் மாநகர போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் பகுதியை சேர்ந்த திருமண நிச்சயதார்த்தம் செய்த ஜோடியை படப்பை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட மணிமங்கலம் போலீசார் மிரட்டி கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கி உள்ளனர். அவர்களை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் பணியிடை நீக்கம் செய்து சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    • கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் இறந்த தகவல் அறிந்து செம்பாக்கம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
    • கிராம மக்கள் அனைவரும் திரண்டுவந்து இருவரது உடலுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

    திருப்போரூர்:

    திருப்போரூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார்.

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அச்சரவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 75). இவர், கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை செம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர்.

    இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி ராமு உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    கணவர் இறந்த துக்கத்தை தாங்காமல் ராமுவின் மனைவி தங்கமணி (65) தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார். திடீரென நெஞ்சை பிடித்தபடி கீழே விழுந்தார். உடனே அங்கு இருந்தவர்கள் தங்கமணியை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று காலை தங்கமணியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதைத்தொடர்ந்து அவரது உடலும் செம்பாக்கம் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் இறந்த தகவல் அறிந்து செம்பாக்கம் கிராமமே சோகத்தில் மூழ்கியது. கிராம மக்கள் அனைவரும் திரண்டுவந்து இருவரது உடலுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் இருவரது உடல்களும் அடக்கம் செய்வதற்கான ஒரே வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டன. மயானத்தில் இருவரது உடல்களும் அருகருகில் அடக்கம் செய்யப்பட்டன.

    • முதன்மை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் தலைமையில் துவக்க விழா நடைபெற்றது.
    • கடன் பெறுவதற்கான எழிய முறை, கால அவகாசம் உள்ளிட்ட சேவைகளை பற்றி விவாதிக்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி எம்.எஸ்.எம்.இ. எனப்படும் குறு, சிறு, நடுத்தர தொழிலுக்கான செயலாக்க மையத்தை சென்னையில் முதல்முறையாக திறக்கிறது. இதன் துவக்க விழா, வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்றது.

    இதில் குறு, சிறு, நடுத்தர தொழில் செய்து வருபவர்கள், புதிய தொழில் துவங்குவோர் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்., எம்.எஸ்.எம்.இ கடன் பெறுவதற்கான எழிய முறை, கால அவகாசம், கடன் அளவு அதிகரித்தல் உள்ளிட்ட சேவைகளை பற்றி விவாதிக்கப்பட்டது.

    தற்போது 100 ஆண்டுகளை கடந்து 21 மாநிலங்களில், 533 கிளைகளுடன், 50 லட்சத்திற்கு மேல் வாடிக்கையாளர்கள் கொண்ட இந்த தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியானது, எம்.எஸ்.எம்.இ செயலாக்க மையத்தை தற்போது தான் முதல் முறையாக திறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 54 நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வந்து ஜாதி சான்றிதழ் வழங்க இணையதளத்தில் பதிவு செய்தனர்.
    • தாசில்தார் ராஜேஸ்வரி, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக மாமல்லபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் 54 நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வந்து ஜாதி சான்றிதழ் வழங்க இணையதளத்தில் பதிவு செய்தனர்.

    பூஞ்சேரி பகுதிக்கான இந்த சிறப்பு முகாமில் செங்கல்பட்டு கோட்டாட்சியர் இப்ராஹீம், திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • விபத்தில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • அரசு பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மதுராந்தகம்:

    தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 23). சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் அச்சரப்பாக்கம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவ்வழியே சென்னையில் இருந்து சேலம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது.

    அந்த நேரத்தில் சங்கர், அரசு பஸ்சென்ற பாதையில் எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் திடீரென அரசு பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் நசுங்கியதில் தீப்பிடித்தது. இதில் பஸ்சின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கினர். அவ்வழியே சென்றவர்கள் பஸ்சின் முன்பகுதியில் ஏற்பட்ட தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    அச்சரப்பாக்கம் போலீசார் பலியான சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அரசு பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • மேற்கு தாம்பரம் காந்தி ரோடு பகுதியில் புதிய குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர்.

    மேற்கு தாம்பரம் காந்தி ரோடு பகுதியில் புதிய குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதில் வடமாநில தொழிலாளர்கள் சிலர் தங்கி அங்கேயே பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை கட்டுமான பணிக்காக அங்கு இருந்த பலகைகளை எடுத்த போது நல்லபாம்பு ஒன்று படமெடுத்து சீறியது.

    இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர்.

    • ஆத்திரம் அடைந்த கோகுல்நாத் அருகே கிடந்த கல்லால் பன்னீர்செல்வத்தின் முகத்தில் தாக்கினார்.
    • கல்லால் தாக்கியதில் பன்னீர்செல்வம் படுகாயம் அடைந்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம்(59), தொழிலாளி. கோகுல்நாத்(22). இவர்கள் இருவரும் சேர்ந்து மதுகுடித்தபோது தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த கோகுல்நாத் அருகே கிடந்த கல்லால் பன்னீர்செல்வத்தின் முகத்தில் தாக்கினார். இதில் பன்னீர்செல்வம் படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல்நாத்தை கைது செய்தனர்.

    ×