search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கடையில் ஜூஸ், சாண்ட்விச் ஓசியில் கேட்டு வாக்குவாதம்: பெண் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
    X

    கடையில் ஜூஸ், சாண்ட்விச் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஏட்டு, மற்றும் போலீஸ்காரரை படத்தில் காணலாம்.

    கடையில் ஜூஸ், சாண்ட்விச் ஓசியில் கேட்டு வாக்குவாதம்: பெண் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

    • இந்த சம்பவம் தாம்பரம் மாநகர போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • 3 பெண் போலீசார் மீதும் கமிஷனர் நடவடிக்கை மேற்கொண்டார்.

    வண்டலூர் :

    தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ள வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, அதே போலீஸ் நிலையத்தில் பணிபுரிபவர்கள் பெண் போலீஸ் ஏட்டு ஜெயமாலா, ஆயுதப்படை போலீசார் ஐஸ்வர்யா, கவுசல்யா. இவர்கள் கடந்த 4-ந் தேதி இரவு மணிமங்கலம், படப்பை, கரசங்கால், சோமங்கலம் பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு ஜூஸ் கடையில் உணவு பொருட்களை கேட்டு வாக்குவாதம் செய்தனர். அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. வீடியோ காட்சியில் பதிவான விவரம் வருமாறு:-

    படப்பையில் உள்ள ஒரு ஜூஸ் கடைக்கு பெண் போலீசார் 4 பேரும் செல்கின்றனர்.

    இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமிக்கு ஓசியில் ஜூஸ், சாண்ட்விச் கேட்டு கடை உரிமையாளரிடம் போலீஸ் ஏட்டு ஜெயமாலா செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

    அப்போது அவருடன் ஆயுதப்படை போலீசார் ஐஸ்வர்யா, கவுசல்யா உடன் இருக்கிறார்கள்.

    போலீஸ் ஏட்டு ஜெயமாலா கடையில் பிளாஸ்டிக் டப்பாவில் இருந்து 6 சாக்லேட்டுகளை எடுத்து சக போலீசாரிடம் கொடுத்து விட்டு கல்லா பெட்டி பகுதியில் நின்றுக் கொண்டிருந்த கடை ஊழியரிடம் 'ஏன் சாண்ட்விச் போடவில்லை?' என்று கேட்கிறார்.

    அப்போது ஊழியர் 'மிஷின் ரிப்பேர். அதனால் சாண்ட்விச் இன்று போடவில்லை' என்கிறார்.

    உடனே 'இன்ஸ்பெக்டர் மேடத்துக்கு ஒரு ஜூஸ் போடு' என்று ஊழியரிடம் கேட்கிறார்.

    இதற்கிடையே ஊழியர் தனது செல்போனில் இருந்து கடை உரிமையாளருக்கு போன் செய்து ஏட்டு ஜெயமாலாவிடம் கொடுக்கிறார்.

    ஏட்டு ஜெயமாலா, 'மேடத்துக்கு ஜூஸ் வேணும். வாரத்துக்கு ஒரு ஜூஸ், ஒரு சாண்ட்விச் தர முடியாதா? நீ போலீஸ் நிலையத்திற்கு வந்து மேடத்தை பாரு, எப்ப வர 5 மணிக்கு வரியா. சரி உங்களுக்காகதான் நாங்க இரவு ரோந்து பணியில் ஈடுபடுகிறோம், எங்களுக்காக ஒரு ஜூஸ், சாண்ட்விச், 2 ரூபாய் சாக்லேட் தர முடியாதா?' என்கிறார்.

    எதிர் முனையில் பேசிய கடை உரிமையாளர் , 'டீ மட்டும் குடித்துவிட்டு போங்க' என்கிறார். 'அந்த டீயை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது' என்று கேட்டுவிட்டு ஏட்டு ஜெயமாலா செல்போன் இணைப்பை துண்டித்து விடுகிறார்.

    இதனை தொடர்ந்து அவர் ஒரு வாட்டர் பாட்டிலை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஆடியோ உடன் தெளிவாக பதிவாகி இருந்தன. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கடை உரிமையாளர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததால் பரபரப்பானது.

    இந்த சம்பவம் குறித்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் கடை உரிமையாளர் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், டீ கடைக்கு சென்று ஓசியில் ஜூஸ், சாண்ட்விச் கேட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டது தொடர்பாக வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, போலீஸ் ஏட்டு ஜெயமாலா, ஆயுதப்படை போலீசார் ஐஸ்வர்யா, கவுசல்யா ஆகிய 4 பேரையும் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் தாம்பரம் மாநகர போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் பகுதியை சேர்ந்த திருமண நிச்சயதார்த்தம் செய்த ஜோடியை படப்பை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட மணிமங்கலம் போலீசார் மிரட்டி கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கி உள்ளனர். அவர்களை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் பணியிடை நீக்கம் செய்து சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×