என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • வீட்டில் இருந்த அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த காரணையை சேர்ந்தவர் குமார் (வயது 56). சிற்பி. இவர், அதே பகுதியில் சிற்ப பட்டறை நடத்தி வந்தார்.

    வீட்டில் இருந்த அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாமல்லபுரத்தில் மகளிர் ஜி20 மாநாடு இன்று தொடங்கியது.
    • இந்த மாநாட்டை மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தொடங்கி வைத்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கோவளம் சாலையில் உள்ள ரேடிசன் புளூபே ரிசார்ட்டில் ஜி 20 உச்சி மாநாட்டின் ஓர் அங்கமான, டபிள்யூ-20 மாநாட்டை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு நாட்டு பெண் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

    இந்த மாநாட்டில் பெண்களின் நலன், பாதுகாப்பு, மருத்துவம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பெண்கள் நலன் குறித்து பல்வேறு கலந்துரையாடல் அமர்வுகள் நடந்தது.

    நாளையும் இதன் தொடர்ச்சியாக பல்வேறு துறைகள் சார்ந்த வல்லுநர்கள், நிபுணர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.

    வெளிநாட்டு பிரதிநிதிகளின் பாதுகாப்பு கருதி மாநாடு நடைபெறும் நட்சத்திர ஹோட்டல் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது.

    • சென்டிவாக்கம் என்ற இடத்தில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • விபத்து நடந்ததும் சாலையோரம் நிறுத்தி இருந்த லாரியை அங்கிருந்து ஓட்டி டிரைவர் தப்பி சென்று விட்டார்.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கம் அருகே உள்ள காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவரது மனைவி ராணி(42). இவர்களது மகன் வழி பேத்தி அக்ஷயா (வயது 4).

    நேற்று மாலை சேகர் தனது மனைவி மற்றும் பேத்தியுடன் செங்கல்பட்டு அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் 3 பேரும் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    அச்சரப்பாக்கம் அருகே சென்டிவாக்கம் என்ற இடத்தில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சேகர், அவரது மனைவி ராணி, பேத்தி அக்ஷயா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    செங்குன்றம் அருகே உள்ள அலமாதியில் இருந்து பால்கேன்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று நேற்று நள்ளிரவு செங்குன்றம் நோக்கி வந்து கொண்டு இருந்தது. வேனை வியாசர்பாடியை சேர்ந்த ராஜேந்திரன்(45) ஓட்டினார். உடன் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் உஜால்(25), மாணிக்ராய்(32) இருந்தனர்.

    செங்குன்றம் அருகே அம்பேத்கர் நகர் பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பால்வேன் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது மோதியது. இதில் வேனின் முன்பகுதி நசுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் ராஜேந்திரன், உஜால், மாணிக்ராய் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்தியே பலியானார்கள். விபத்து நடந்ததும் சாலையோரம் நிறுத்தி இருந்த லாரியை அங்கிருந்து ஓட்டி டிரைவர் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி விசாரணை நடத்தி வருகிறார்.

    • நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கோமளா குளியல் அறைக்கு சென்றார்.
    • கோமளா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த மேல் தெரு பி.வி.களத்தூரை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகள் கோமளா என்ற அஸ்வினி (வயது22). ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழில்சாலையில் வேலை செய்து வந்தார்.

    நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அவர் குளியல் அறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் சென்று பார்த்தபோது அங்கு அஸ்வினி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
    • 6 மாத காலம் கணினி பயிற்சி மற்றும் தட்டச்சு தமிழ், ஆங்கிலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு வட்டார மேலாளர் பணியிடம், மற்றும் திருப்போரூர்-2, புனித தோமையார் மலை-1, மதுராந்தகம்-1 என மொத்தம் 4 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்திற்கு 1 கணினி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வட்டார மேலாளர் பணிக்கான கல்வித்தகுதி:- ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 6 மாத காலம் கணினி பயிற்சி (எம்.எஸ்.ஆபிஸ்) பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மகளிர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும்.

    வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கான கல்வித்தகுதி விவரம்:-

    ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 3 மாத காலம் கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாட்டு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும்.

    கணினி உதவியாளருக்கான கல்வித்தகுதி:-

    பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 6 மாத காலம் கணினி பயிற்சி மற்றும் தட்டச்சு தமிழ், ஆங்கிலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    ஒரு வருடம் முன் அனுபவம் இருத்தல் வேண்டும். செங்கல்பட்டு மற்றும் அருகில் உள்ள மாவட்டத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும்.

    விண்ணப்பம் பெற வேண்டிய முகவரி-

    இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், செங்கல்பட்டு மாவட்டம். செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் (மகளிர் திட்டம்) காலியாக உள்ள பணியிடங்களுக்கு 20-06-2023 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி பயன்பெறலாம்.

    • மாமல்லபுரத்தில் டிரோன் கேமராக்களை பயன்படுத்த போலீசார் தடை விதித்து உள்ளனர்.
    • பல்வேறு நாட்டு ஆய்வு கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம், கோவளம் சாலையில் உள்ள "ரேடிசன் புளூபே" ரிசார்ட்டில் நாளை ஜி-20 உச்சி மாநாட்டின் ஒரு அங்கமான, டபிள்யூ-20 மாநாடு தொடங்குகிறது. இதில் பல்வேறு நாட்டு பெண் மருத்துவ பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பெண்களின் மகப்பேறு, மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கருத்துக்கள், அறிவியல் வளர்ச்சி, மருத்துவ பாதுகாப்பு குறித்து விவாதிக்கபட உள்ளது. மேலும், பல்வேறு நாட்டு ஆய்வு கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

    இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதிகள் சென்னை மற்றும் மாமல்லபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் வரை நடக்கும் இந்த மாநாட்டின் பாதுகாப்பிற்காக காஞ்சிபுரம், சேலம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வெளி மாவட்ட போலீசார் 700-க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரம் வந்துள்ளனர். அவர்கள் முக்கிய சாலைகள் மற்றும் புராதன சின்னங்கள் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இரண்டு நாள் மாநாட்டிற்கு வரும் பிரதிநிதிகள் 17-ந் தேதி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், அர்சுணன்தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம் ஆகிய புராதன சின்னங்களை சுற்றி பார்க்கிறார்கள்.

    இதைத்தொடர்ந்து 18, 19-ந் தேதிகளில், தொல்லியல்துறை சார்பில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மாநாட்டு குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

    இதையடுத்து இன்று முதல் மாமல்லபுரத்தில் டிரோன் கேமராக்களை பயன்படுத்த போலீசார் தடை விதித்து உள்ளனர். இன்று இரவுக்குள் அனைத்து பிரதிநிதிகளும் ஹோட்டல்களில் வந்து தங்க இருப்பதால் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரணீத் உத்தரவின் படி ஓட்டல்களி துப்பாக்கிஏந்திய போலீஸ் பாதுகாப்பும், வழித்தடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

    • பட்டப் பகலில் நடந்த படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மறைமலைநகர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட காட்டூர் மேட்டு தெரு, ரெயில் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் காட்டூர் காளிதாஸ் (வயது 34), இவர் செங்கல்பட்டு மத்திய மாவட்ட வன்னியர் சங்கத்தின் மாவட்ட தலைவராக பதவி வகித்து வந்தார். மேலும் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

    நேற்று காலை காளிதாஸ் காரில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே ஜி.எஸ்.டி. சாலைக்கு வந்த நிலையில் அங்கு உள்ள கடையில் டீ குடித்து கொண்டிருந்தார்.

    அப்போது காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென டீ கடைக்குள் புகுந்து அவர்கள் மறைத்து வைத்திருந்த வீச்சு அரிவாளால் காளிதாஸ்சின் தலையில் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே காளிதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது டீ கடையில் இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

    அந்த நேரத்தில் 2 போக்குவரத்து போலீஸ்காரர்கள் கத்தியுடன் 5 பேர் டீக்கடைக்குள் இருந்து வெளியே ஓடிவந்து காரில் ஏறி வேகமாக செல்வதை கண்டனர். உடனே அவர்கள் மோட்டார் சைக்கிளில் காரை துரத்தி சென்றவாறு வாக்கி டாக்கி மூலம் ஊரப்பாக்கம் அருகே ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    பின்னர் விடாமல் துரத்திச் சென்ற போக்குவரத்து போலீசார் ஊரப்பாக்கம் அருகே சக போலீசார் உதவியுடன் காரை மடக்கினர். அப்போது காரில் இருந்து இறங்கி 4 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒருவனை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    மேலும் மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டீ கடைக்குள் படுகொலை செய்யப்பட்ட காளிதாஸ்சின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மறைமலைநகர் போலீசார் முன்விரோதம் காரணமாக காளிதாஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காளிதாஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டு தீ போல் பரவியதை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மறைமலைநகர் ரெயில் நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் 24 மணி நேரத்திற்குள் பிடித்து உரிய தண்டனை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மறைமலைநகர் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டது.

    காளிதாஸ் சொந்த ஊரான காட்டூர் மற்றும் மறைமலைநகர் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். பட்டப் பகலில் நடந்த படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வாக்குவாதம் முற்றி அருணாசலம் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து கிருஷ்ணனை மிரட்டினார்.
    • கிருஷ்ணன் உத்திரமேரூர் போலீஸில் புகார் செய்தார்.

    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் ஒன்றியம் நாஞ்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் (வயது 43). இவர் குடித்துவிட்டால் தெருவில் வருவோர் போவோரை மிகவும் ஆபாச வார்த்தைகளால் திட்டி பேசியதாக கூறப்படுகிறது.

    இதனால் அவரது வீட்டின் அருகே உள்ள கிருஷ்ணன் (33) என்பவர் ஏன் இப்படி குடித்துவிட்டு வருவோர் போவோரை ஆபாசமாக திட்டிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டதாக தெரிகிறது. இதில் வாக்குவாதம் முற்றி அருணாசலம் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து கிருஷ்ணனை மிரட்டினார்.

    இது பற்றி கிருஷ்ணன் உத்திரமேரூர் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து அருணாசலத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.

    • மீனாட்சியின் முகம், தலை, கழுத்து உள்ளிட்ட உடல் முழுவதும் சரமாரியாக கிழித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
    • போலீசார் மேலும் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வண்டலூர்:

    வண்டலூர் அடுத்த கொளப்பாக்கம் அண்ணா நகர் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி மீனாட்சி (வயது44).

    சம்பவத்தன்று இரவு அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு மீனாட்சி தனியாக நடந்து வந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென மீனாட்சியிடம் ரகளையில் ஈடுபட்டனர். மேலும் 2 பேர் மீனாட்சியை தப்ப விடாமல் பிடித்து கொண்டனர். அப்போது மற்றொரு வாலிபர் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் மீனாட்சியின் முகம், தலை, கழுத்து உள்ளிட்ட உடல் முழுவதும் சரமாரியாக கிழித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் மீனாட்சி ரத்த வெள்ளத்தில் கதறி துடித்தார்.

    அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த தாக்குதல் நடந்துஇருப்பதாக தெரிகிறது. மீனாட்சி அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ரூ.3 லட்சம் வரை கடன் கொடுத்து இருந்ததாக தெரிகிறது. பணத்தை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் தாக்குதல் நடந்து இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் மேலும் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பஸ் நிலையத்தின் தரை தளத்தில் கடைகள், உணவகம், டீக்கடை, பியூட்டி பார்லர், மற்றும் டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகள் அமைகிறது.
    • அடிப்படை பணிகள் நடந்து வந்தாலும் அடுத்த மாத கடைசியில் பஸ் நிலையத்தை திறக்க முடிவு செய்துள்ளனர்.

    சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இது திறக்கப்படுகிறது.

    இந்த பஸ் நிலையத்தின் தரை தளத்தில் கடைகள், உணவகம், டீக்கடை, பியூட்டி பார்லர், மற்றும் டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகள் அமைகிறது.

    முதல் தளத்தில் டிரைவர்கள் கண்டக்டர்கள் தங்குவதற்கும், பொதுமக்கள் அமர்வதற்கும் டார்மெட்ரி வகையில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த பஸ் நிலையத்தின் வடிவமைப்பு குளறுபடி காரணமாக அதை சரி செய்யும் பணியை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக இந்த துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவ்வப்போது உயர் அதிகாரிகளுடன் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    மழை பெய்தால் இப்போது அங்கு தண்ணீர் தேங்குகிறது. அதை சரிசெய்ய வழிவகை காணுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். பஸ்கள் வந்து செல்லும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. அதை சரி செய்யும்படி கூறி உள்ளார். அதனடிப்படையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    பல்வேறு அடிப்படை பணிகள் நடந்து வந்தாலும் அடுத்த மாத கடைசியில் பஸ் நிலையத்தை திறக்க முடிவு செய்துள்ளனர்.

    இந்த புதிய பஸ் நிலையத்தில் 100 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகளை ஏலம் எடுக்க 1000 பேர்களுக்கு மேல் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

    அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல். ஏ.க்கள், எம்.பி.க்கள் வாரியத் தலைவர்கள் கவுன்சிலர்கள், ஒன்றிய செயலாளர்கள் என தி.மு.க.வில் உள்ள முக்கிய பிரமுகர்கள், பல பேர் கட்சியினருக்கு கடைகளை வாங்கி கொடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் போட்டி பலமாக உள்ளது.

    ஆனால் எந்த கடைகளும் இன்னும் ஏலம் விடப்படவில்லை. சிங்கிள் வின்டோ சிஸ்டத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்வதா? அல்லது பொது ஏலத்தில் விடுவதா? என்று முடிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் ஒவ்வொரு கடைக்கும் சிபாரிசு பலமாக உள்ளது.

    இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டதற்கு புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஒதுக்கீடு பெறுவதற்கு கடும் போட்டி நிலவுவது உண்மைதான். இதை சமாளிப்பது பெரிய கஷ்டம். எனவே சி.எம்.டி.ஏ. வழி காட்டி விதிமுறைப்படி விரைவில் இதுபற்றி முடிவெடுப்போம் என்றார்.

    • மறைமலைநகரை அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளி.
    • தனியார் வங்கி அருகே வந்த போது மர்ம கும்பல் காளியை வழிமறித்தனர்.

    மறைமலைநகரை அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளி. இவர் செங்கல்பட்டு மாவட்ட வன்னியர் சங்க தலைவராக உள்ளார். இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் மறைமலைநகரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அங்குள்ள தனியார் வங்கி அருகே வந்த போது மர்ம கும்பல் காளியை வழிமறித்தனர். திடீரென அவர்கள் கத்தி, அரிவாளால் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த காளி அவர்களிடம் இருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனாலும் மர்ம கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த காளி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் காளி பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • படகிலுள்ள பழுதுகள் நீக்கி இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
    • ஆய்வுப்பணி 13.6.2023 அன்று காலை 7 மணிக்கு தொடங்கப்படும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை காஞ்சீபுரம் (இருப்பு) நீலாங்கரை அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள செங்கல்பட்டு மாவட்ட மீனவ கிராமங்களில் வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 7 மணியளவில் எந்திரம் பொருத்தப்பட்ட மற்றும் எந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகள் ஆய்வு நடைபெறவுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்ட கடல் மீன்பிடி படகு உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுக்காக முன்னேற்பாடு பணிகள்:

    ஆய்வு செய்யப்படவுள்ள படகுகளின் பதிவுச்சான்று, வரிவிலக்கு அளிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய், பாஸ் புத்தக நகல் மற்றும் ஆதார் அட்டை நகல்களை ஆய்வு குழுவினரிடம் அளிக்க வேண்டும்.

    மீன்வளத்துறையின் மூலம் வழங்கப்பட்ட தொலைத்தொடர்பு தகவல் சாதனங்கள் மற்றும் உயிர்காக்கும் கருவிகள் போன்றவற்றை உடன் வைத்திடுமாறும் ஆய்வு செய்யும் நாளில் ஆய்வுக்குழுவுக்கு அனைத்து விவரங்களையும் அளித்திடவும் அனைத்து படகு உரிமையாளர்கள் அளிக்கப்பட வேண்டும். எந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளில் வெளிப்பொருந்தும் எந்திரங்களின் படகில் பொருத்தியிருக்க வேண்டும்.

    பதிவு செய்யப்பட்டஎந்திரம் பொருத்தப்பட்ட எந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகளில் பதிவு எண் தெளிவாக எழுதியிருக்க வேண்டும். (ஸ்டிக்கர்) கண்டிப்பாக ஒட்டியிருக்க கூடாது.

    படகிலுள்ள பழுதுகள் நீக்கி இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    ஆய்வின்போது காண்பிக்கப்படாத படகுகள் மற்றும் பழுதுள்ள படகுகளின் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், அந்த படகுகள் இயக்கத்தில் இல்லாததாக கருதி அந்த படகுகளின் பதிவுச்சான்று உரிய விசாரணைக்கு பிறகு ரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஆய்வு நாளன்று படகை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பின்னொரு நாளில் ஆய்வு செய்ய கோரும் படகு உரிமையாளர்களின் கோரிக்கைகள் ஏற்க படமாட்டாது. நாட்டுப்படகு ஆய்வு செய்யப்படவுள்ள நாளில் படகு உரிமையாளர் அல்லது அவரது அதிகாரம் பெற்ற ஒரு நபர் படகை காண்பிக்க வேண்டும்.

    ஆய்வுப்பணி 13.6.2023 அன்று காலை 7 மணிக்கு தொடங்கப்படும். மீனவர்கள் ஆய்வு நடைபெறவுள்ள காரணத்தினால் 12.6.2023 இரவு முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது படகுகள் பதிவுச்சான்றில் உள்ள தங்குதளத்தில் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×