மறைமலைநகரில் வன்னியர் சங்க தலைவர் வெட்டிக்கொலை

பட்டப் பகலில் நடந்த படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மறைமலைநகரில் வன்னியர் சங்க தலைவர் வெட்டிக்கொலை
Published on

மறைமலைநகர்:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட காட்டூர் மேட்டு தெரு, ரெயில் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் காட்டூர் காளிதாஸ் (வயது 34), இவர் செங்கல்பட்டு மத்திய மாவட்ட வன்னியர் சங்கத்தின் மாவட்ட தலைவராக பதவி வகித்து வந்தார். மேலும் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

நேற்று காலை காளிதாஸ் காரில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே ஜி.எஸ்.டி. சாலைக்கு வந்த நிலையில் அங்கு உள்ள கடையில் டீ குடித்து கொண்டிருந்தார்.

அப்போது காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென டீ கடைக்குள் புகுந்து அவர்கள் மறைத்து வைத்திருந்த வீச்சு அரிவாளால் காளிதாஸ்சின் தலையில் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே காளிதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது டீ கடையில் இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

அந்த நேரத்தில் 2 போக்குவரத்து போலீஸ்காரர்கள் கத்தியுடன் 5 பேர் டீக்கடைக்குள் இருந்து வெளியே ஓடிவந்து காரில் ஏறி வேகமாக செல்வதை கண்டனர். உடனே அவர்கள் மோட்டார் சைக்கிளில் காரை துரத்தி சென்றவாறு வாக்கி டாக்கி மூலம் ஊரப்பாக்கம் அருகே ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் விடாமல் துரத்திச் சென்ற போக்குவரத்து போலீசார் ஊரப்பாக்கம் அருகே சக போலீசார் உதவியுடன் காரை மடக்கினர். அப்போது காரில் இருந்து இறங்கி 4 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒருவனை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

மேலும் மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டீ கடைக்குள் படுகொலை செய்யப்பட்ட காளிதாஸ்சின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மறைமலைநகர் போலீசார் முன்விரோதம் காரணமாக காளிதாஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காளிதாஸ் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டு தீ போல் பரவியதை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மறைமலைநகர் ரெயில் நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் 24 மணி நேரத்திற்குள் பிடித்து உரிய தண்டனை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மறைமலைநகர் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டது.

காளிதாஸ் சொந்த ஊரான காட்டூர் மற்றும் மறைமலைநகர் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். பட்டப் பகலில் நடந்த படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com