search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜி-20 மாநாடு- மாமல்லபுரத்தில் இன்று முதல் டிரோன் பறக்க தடை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
    X

    ஜி-20 மாநாடு- மாமல்லபுரத்தில் இன்று முதல் டிரோன் பறக்க தடை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

    • மாமல்லபுரத்தில் டிரோன் கேமராக்களை பயன்படுத்த போலீசார் தடை விதித்து உள்ளனர்.
    • பல்வேறு நாட்டு ஆய்வு கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம், கோவளம் சாலையில் உள்ள "ரேடிசன் புளூபே" ரிசார்ட்டில் நாளை ஜி-20 உச்சி மாநாட்டின் ஒரு அங்கமான, டபிள்யூ-20 மாநாடு தொடங்குகிறது. இதில் பல்வேறு நாட்டு பெண் மருத்துவ பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பெண்களின் மகப்பேறு, மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கருத்துக்கள், அறிவியல் வளர்ச்சி, மருத்துவ பாதுகாப்பு குறித்து விவாதிக்கபட உள்ளது. மேலும், பல்வேறு நாட்டு ஆய்வு கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

    இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதிகள் சென்னை மற்றும் மாமல்லபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் வரை நடக்கும் இந்த மாநாட்டின் பாதுகாப்பிற்காக காஞ்சிபுரம், சேலம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வெளி மாவட்ட போலீசார் 700-க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரம் வந்துள்ளனர். அவர்கள் முக்கிய சாலைகள் மற்றும் புராதன சின்னங்கள் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இரண்டு நாள் மாநாட்டிற்கு வரும் பிரதிநிதிகள் 17-ந் தேதி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், அர்சுணன்தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம் ஆகிய புராதன சின்னங்களை சுற்றி பார்க்கிறார்கள்.

    இதைத்தொடர்ந்து 18, 19-ந் தேதிகளில், தொல்லியல்துறை சார்பில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மாநாட்டு குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

    இதையடுத்து இன்று முதல் மாமல்லபுரத்தில் டிரோன் கேமராக்களை பயன்படுத்த போலீசார் தடை விதித்து உள்ளனர். இன்று இரவுக்குள் அனைத்து பிரதிநிதிகளும் ஹோட்டல்களில் வந்து தங்க இருப்பதால் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரணீத் உத்தரவின் படி ஓட்டல்களி துப்பாக்கிஏந்திய போலீஸ் பாதுகாப்பும், வழித்தடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×