என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியல், மேற்கு வங்காள மக்களின் வாழ்வைப் பாதிக்கிறது.
    • ஒடுக்குமுறை உத்திகளால் எங்களின் உத்வேகத்தை தடுத்துவிட முடியாது.

    கொல்கத்தா :

    மேற்கு வங்காள மாநிலம் கூச் பிகாரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

    அதில் அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    மேற்கு வங்காளத்தின் மீதான அக்கறையின்மை காரணமாக, நமக்கு வழங்கவேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காமல், மாநில மக்களை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்குகிறது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியல், மேற்கு வங்காள மக்களின் வாழ்வைப் பாதிக்கிறது.

    அவர்கள் தங்களின் ஒடுக்குமுறை உத்திகளால் எங்களின் உத்வேகத்தை தடுத்துவிட முடியாது. நமக்கு உரிய நிதியைப் பெறாமல் நாங்கள் பின்வாங்க மாட்டோம். நமது மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை, கொடுங்கோல் சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்.

    பா.ஜ.க.வின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தி, வருகிற பஞ்சாயத்து தேர்தலில் மட்டுமல்லாமல், அடுத்த ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலிலும் அவர்களைத் தோற்கடிப்போம்.

    மத்தியில் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரு மகா கூட்டணியை உருவாக்குவதற்கு நாங்கள் முயன்று வருகிறோம். ஆனால் மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரசும் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுகின்றன. இந்த மோசமான உறவை நான் முறியடிப்பேன்.'

    இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

    மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வுடன் உறவு வைத்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகளை மம்தா விமர்சிப்பது இது 10 நாட்களில் 2-வது முறை.

    ஆனால் மம்தாவின் குற்றச்சாட்டை பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளுமே நிராகரித்துள்ளன.

    • ஒரு ரெயில் மீது பின்னால் வந்த மற்றொரு ரெயில் மோதி விபத்து
    • அந்த வழித்தடத்தில் 14 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மேற்கு வங்காள மாநிலம் பங்குராவில் உள்ள ஒண்டா ரெயில் நிலையத்தில் இரண்டு  ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. ஒரு ரெயில் மீது பின்னால் வந்த ரெயில் பயங்கரமாக மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரெயில்கள் என்பதால் உயிரிழப்பு ஏதும் இல்லை. டிரைவர் ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் கராக்புர்- பங்குரா- அத்ரா ரெயில் பாதையில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 14 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 3 ரெயில்கள் மாற்றிவிடப்பட்டுள்ளன என முதற்கட்ட தகவல் வெளியாகின.

    இதுகுறித்து தென்கிழக்கு ரெயில்வே ''ரெயில்வே பராமரிப்பு ரெயில் ஒண்டகிராம் ரெயில் நிலையத்தில் இருந்து மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது, சிகப்பு விளக்கு போடப்பட்டிருந்த நிலையில், சரக்கு ரெயில் அதை கவனிக்காமல் வந்தது. பிரேக் பிடிக்க முயன்றும் முடியாமல் மோதிவிட்டது. இதில் 8 பெட்டிகள் தடம் புரண்டன'' எனத் தெரிவித்துள்ளது.

    • மேற்கு வங்காளத்தில் ஜூலை 8-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது.
    • 2019 மக்களவை தேர்தலில் வடக்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் அடுத்த மாதம் 8-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி பஞ்சாயத்து தேர்தலுக்கான பிரச்சாரத்தை வரும் திங்கட்கிழமை தொடங்குகிறார்.

    வடக்கு வங்காளத்தில் உள்ள கூச் பெஹார் மாவட்டத்தில் பொது பேரணியுடன் தொடங்க உள்ளார்.

    2019 மக்களவை தேர்தலில் வடக்கு வங்காளத்தில் இருந்து ஒரு தொகுதி கூட திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்பதை கருத்தில் கொண்டு, ஆளும் கட்சித் தலைமை அப்பகுதிக்கு தற்போது முக்கியத்துவம் அளித்து வருகிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

    அலிபுர்துவார் மாவட்டத்திலும் இதுபோன்ற பேரணியில் முதல் மந்திரி உரையாற்றுவார். அதன் விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என் அக்கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்தார்.

    2024 மக்களவை தேர்தலின் போக்கு எப்படி இருக்கும் என்பதற்கு பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் ஒரு அறிகுறியாக இருக்கும் என்பதால் இத்தேர்தல் அரசியல் அரங்கில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

    • மத்திய பாதுகாப்புப்படை உதவியுடன் வெற்றி பெற வெளியில் இருக்கும் நபர்கள் விரும்புகிறார்கள்
    • எந்த தேர்தலாக இருந்தாலும் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ்தான் வெற்றி பெறும்

    மேற்கு வங்காள மாநிலத்தில் அடுத்த மாதம் 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கலின்போது வன்முறை ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய பாதுகாப்புப்படை உதவியுடன் வேட்புமனு, தேர்தல் நடைபெற வேண்டும் என மேற்கு வங்காள மாநில உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். நீதிமன்றமும் மத்திய பாதுகாப்புப்படை பாதுகாப்புடன் வேட்புமனு நடைபெற வேண்டும் என உத்தரவிட்டது.

    உயர்நீதிமன்ற தீர்ப்பை பா.ஜனதா கட்சி வரவேற்றுள்ளது.

    இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் உறவினரும், எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி தெற்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் நாடாளுமன்ற தொகுதிக்குபட்ட பகுதியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா இந்த பஞ்சாயத்து தேர்தலில் எல்லா இடங்களிலும் தோல்வியை சந்திக்கும். அதேபோல் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் தோல்வியை சந்திக்கும். இதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். சட்டசபை, பாராளுமன்றம் என எந்த தேர்தலாக இருந்தாலும் மக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு அளிப்பார்கள். பா.ஜனதா புறந்தள்ளப்படுவார்கள்.

    மத்திய பாதுகாப்புப்படை துணையுடன் வெற்றி பெறலாம் என்று யாராவது நினைத்தால், அது அவர்களின் தவறாக இருக்கும். உங்களுக்கு (பா.ஜனதா) பாதுகாப்புப்படை உளளது. ஆனால், எங்களுக்கு மக்களுடைய ஆதரவு உள்ளது. எங்களுக்கு ஆதரவாக இருக்கும் மக்களை நாங்கள் நம்புகிறோம்.

    தேர்தலுக்கு முன் பிரச்சாரத்திற்காக இங்கு வரும் வெளியாட்களை சார்ந்து நாங்கள் இருக்கவில்லை. ஏனென்றால், அதற்குப்பின் தேவைப்படும்போது அவர்கள் இங்கு இருப்பதில்லை.

    திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வெளியில் இருப்பவர்களை எதிர்த்து போராட வேண்டும். அவர்கள் மத்திய படை துணையுடன் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்று விடலாம என நம்புகிறார்கள்.

    மத்திய அரசு எனது குடும்பத்தை துன்புறுத்துகிறது. இதனால் என்னுடைய அரசியல் நடவடிக்கையை தடுத்துவிட முடியாது.

    இவ்வாறு அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.

    • தினாஜ்பூர் மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்கள் 3 பேரை சுட்டுக்கொன்றனர்.
    • வீடு ஒன்றில் 7 பைகளில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 8-ந்தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளின் போது எதிர்கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களை மனுதாக்கல் செய்யவிடாமல் தடுத்ததாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இதற்கிடையில் தினாஜ்பூர் மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்கள் 3 பேரை சுட்டுக்கொன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

    இன்று காலை பாங்கூர் என்ற பகுதியில் ஆட்கள் யாரும் இல்லாத வீடு ஒன்றில் 7 பைகளில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி அறிந்ததும் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து சென்றனர்.

    7 பைகளில் இருந்த வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வெடிகுண்டுகளை பதுக்கி வைத்தது யார்?என்று தெரியவில்லை. பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதனை சீர்குலைக்கும் வகையில் நாசவேலைக்காக இந்த குண்டுகளை யாராவது வைத்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது மேற்கு வங்க மாநிலத்தில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • பஞ்சாயத்து தேர்தலில் எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல்
    • மத்திய பாதுகாப்புப்படை உதவியுடன் தேர்தலை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

    மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய போதுமான அவகாசம் வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், எதிர்க்கட்சி வேட்பாளர்களை வேட்புமனு செய்ய விடாமல் ஆளுங்கட்சி தடுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளன. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சில இடங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளது.

    இதனால் உள்ளாட்சி தேர்தலில் மத்திய பாதுகாப்புப்படை வீரர்களை பாதுகாப்பு பணியில் அமர்த்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் வன்முறையை உக்ரைன்- ரஷியா போருடன் ஒப்பிட்டு மேற்கு வங்காள மாநில பா.ஜனதா பொதுச்செயலாளர் அக்னிமித்ரா பால், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியை விமர்சனம் செய்துள்ளார்.

    உள்ளாட்சி தேர்தல் வன்முறை குறித்து அக்னிமித்ரா பால் கூறியிருப்பதாவது:-

    வேட்புமனு தாக்கல் செய்ய 5-6 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. எதிர்க்கட்சிகளுடன் எந்தவித ஆலோசனை நடத்தாமலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆலோசனைகள் பெறாமல் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்பது தெரிந்ததே. தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பா.ஜனதா மற்றும் மற்ற கட்சிகளின் வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்ய விடுவதில்லை.

    டைமண்ட் ஹார்பர், ஜாய்நகர், கேனிங், காக்விப், பர்தமான் பகுதிகளில் பா.ஜ.க.-வினர் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரும்பு கம்பிகள் கொண்டு தாக்கியுள்ளனர். இங்கு ரத்தக்களரியை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது ரஷியா- உக்ரைன் போரா? நாம் போருக்காக சண்டையிடுகிறோமா?.

    இந்த வன்முறைக்காகத்தான் கடந்த 6 முதல் 8 மாதங்களில் மேற்கு வங்காளத்தில் அதிகமான வெடிபொருட்கள் காணப்பட்டது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. காவல்துறையின் மந்திரியாக இருக்கும் மம்தா பானர்ஜி இதற்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. இதனால் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும். மத்தியப்படை வரவழைக்கப்படவில்லை என்றால், மேற்கு வங்காளம் போர்க்களமாகத்தான் இருக்கும். மத்திய படையை அனுப்பி வைக்க மத்திய தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இல்லையெனில் அனைத்து கட்சிகளின் தொண்டர்கள் ஏராளமானோர் உயிரிழக்க நேரிடும்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    • விரைந்து வந்த 8 தீயணைப்பு வண்டிகள் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவந்தன.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று இரவு 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் 3சி புறப்பாடு முனைய கட்டிடத்தின் செக்-இன் கவுண்டரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வண்டிகள் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவந்தன. தீ விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

    சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகளில் செக்-இன் பகுதியில் கடுமையான தீ விபத்தின் ஒரு பகுதியைக் காட்டின. விமான நிலைய அதிகாரிகள் முனையத்தில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

    இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா கூறுகையில், டி போர்டல் செக்-இன் கவுண்டரில் தீ விபத்து ஏற்பட்டது. புகை மூட்டத்தால், பயணிகள் மற்றும் ஊழியர்கள் முனைய கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. தீ அணைக்கப்பட்டுள்ளது. இயல்பான செயல்பாடு திரும்பி உள்ளது என தெரிவித்துள்ளார்.

    மேலும், செக்-இன் மற்றும் விமானங்கள் செயல்பாடு இரவு 10.15 மணிக்கு மீண்டும் தொடங்கும் என கொல்கத்தா விமான நிலையம் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தது.

    • தூதரக முயற்சிகளின் ஒரு பகுதியாக ஹிம்சாகர் மற்றும் லாங்ரா வகைகளை உள்ளடக்கிய மாம்பழங்கள் மம்தா பானர்ஜிக்கு வங்காளதேச பிரதமர் அனுப்பியுள்ளார்.
    • வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகள் அனைவருக்கும் மாம்பழங்களை ஷேக் ஹசீனா அனுப்பி உள்ளார்.

    இந்தியாவின் மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு அண்டை நாடான வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா 600 கிலோ மாம்பழங்களை பரிசாக அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக வங்காளதேச துணை தூதரக அதிகாரி ஒருவர் கூறும்போது, தூதரக முயற்சிகளின் ஒரு பகுதியாக ஹிம்சாகர் மற்றும் லாங்ரா வகைகளை உள்ளடக்கிய மாம்பழங்கள் மம்தா பானர்ஜிக்கு வங்காளதேச பிரதமர் அனுப்பியுள்ளார். கடந்த ஆண்டும் மாம்பழங்களை அனுப்பி இருந்தோம் என்றார்.

    அதேபோல் வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகள் அனைவருக்கும் மாம்பழங்களை ஷேக் ஹசீனா அனுப்பி உள்ளார்.

    கடந்த ஆண்டு பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் ஆகிய மாநில முதல்-மந்திரிகளுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மாம்பழங்களை அனுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெட்டியின் மேல் பிரதமர் மோடி, நம்பர் 7, லோக் கல்யாண்மார்க் என்ற முகவரி பொறிக்கப்பட்டு இருந்தது.
    • பிரதமர் மோடிக்கு இந்த ஆண்டு மம்தா பானர்ஜி 3 வகையான மாம்பழங்களை பரிசாக அனுப்பி உள்ளார்.

    கொல்கத்தா:

    அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும் பிரதமர் மோடியும், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் தனிப்பட்ட முறையில் நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள்.

    அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் வரும்போது எல்லாம் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசுவதும், அறிக்கை வெளியிடுவதும் உண்டு. என்றாலும் அவை அவர்களது நட்பை ஒருபோதும் சீர் குலைப்பது இல்லை.

    நட்பை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் விளையும் அதிக ருசிக்கொண்ட மாம்பழ வகைகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைப்பது வழக்கமாகும். கடந்த பல ஆண்டுகளாக மாம்பழம் அனுப்புவதை மம்தா பானர்ஜி மறக்காமல் செய்து வருகிறார்.

    அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று அவர் பிரதமர் மோடிக்கு மாம்பழம் பரிசு அனுப்பி வைத்தார். 4 கிலோ எடை கொண்ட பெட்டியில் அழகாக அலங்கரிக்கப்பட்டு அந்த மாம்பழங்கள் கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    அந்த பெட்டியின் மேல் பிரதமர் மோடி, நம்பர் 7, லோக் கல்யாண்மார்க் என்ற முகவரி பொறிக்கப்பட்டு இருந்தது. அனுப்புபவர் முகவரியில் மம்தா பானர்ஜி , மேற்கு வங்காள முதல்-மந்திரி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    பிரதமர் மோடிக்கு இந்த ஆண்டு மம்தா பானர்ஜி 3 வகையான மாம்பழங்களை பரிசாக அனுப்பி உள்ளார். கிம்சாகர், பஸ்லி, லட்சுமண் பாக் ஆகிய 3 வகை மாம்பழங்கள் இந்த ஆண்டு பரிசு பெட்டியில் இடம் பெற்றுள்ளன.

    பிரதமர் மோடிக்கு அனுப்பியது போல ஜனாதிபதி திரவுபதி முர்மு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் ஆகியோருக்கும் மம்தா பானர்ஜி இந்த ஆண்டு மாம்பழ பெட்டிகளை பரிசாக அனுப்பி உள்ளார். ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது பற்றி கடுமையாக விமர்சனம் செய்த மம்தா பானர்ஜி அடுத்த நாளே மாம்பழம் பரிசு அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மம்தா பானர்ஜி போல வங்கதேச பிரதமர் ஷேக் ஹஜினாவும் ஆண்டு தோறும் இந்திய தலைவர்களுக்கு மாம்பழம் அனுப்புவதை வழக்கத்தில் வைத்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களுக்கு 2,600 கிலோ மாம்பழங்கள் அனுப்பி இருந்தார்.

    • வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.
    • போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொல்கத்தா:

    கத்தார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை 3.29 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 541 பயணிகள் இருந்தனர்.

    அப்போது ஒரு பயணி திடீரென எழுந்து விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூச்சலிட்டார். இதனால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்,

    இது பற்றி உடனடியாக மத்திய தொழில்பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். ஆனால் இந்த சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதை அறிந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இதையடுத்து போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பக்கத்தில் இருந்த ஒருவர் தன்னிடம் இதுபற்றி கூறியதாக தெரிவித்தார்.

    உடனே போலீசார் அவரது தந்தையை விமானநிலையத்துக்கு வரவழைத்து விசாரித்த போது அந்த பயணிக்கு சற்று மனநலம் பாதிக்கப்ட்டு இருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக தந்தை தெரிவித்தார்.

    அந்த பயணி செய்த களேபாரத்தால் லண்டன் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • ஒடிசா ரெயில் விபத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • அரசு வேலைக்கான நியமன ஆணைகள் நாளை வழங்கப்படும் என மாநில அரசு கூறியுள்ளது.

    கொல்கத்தா :

    ஒடிசாவில் நடந்த கோர விபத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாநிலத்தை சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் விபத்தில் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்தில் உயிரிழந்த மேற்கு வங்காளத்தினரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார். இதைப்போல விபத்தில் கை, கால்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு பணி வழங்குவதாக அவர் கூறினார்.

    மேலும் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரெயிலில் பயணித்து, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ரெயில் விபத்து நடந்த பகுதியை ஏற்கனவே நேரில் சென்று பார்வையிட்ட மம்தா பானர்ஜி, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மேற்கு வங்காளத்தினரை பார்ப்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் ஒடிசா செல்ல இருப்பதாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதிக்கான காசோலை மற்றும் அரசு வேலைக்கான நியமன ஆணைகள் நாளை (புதன்கிழமை) வழங்கப்படும் என மாநில அரசு கூறியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. இவரின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி.
    • அபிஷேக் பானர்ஜி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவரது மனைவி ருஜிரா.

    மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. இவரின் அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி. நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவரது மனைவி ருஜிரா. இவரிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பல முறை பலகோடி ரூபாய் சுரங்க மோசடி தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளது.

    இந்த நிலையில் இவர் இன்று கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு புறப்பட சென்றார். அப்போது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

    ×