என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர்.
- பழனி நகரின் முக்கிய வீதிகள் வழியே பழனி முருகன் கோவிலை அடைந்தனர்.
பழனி:
பழனி முருகன் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இந்த ஆண்டு இத்திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரையாகவும் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் தைப்பூச திருவிழா நிறைவடைந்த பிறகும் ஏராளமான பக்தர்கள் பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் அலகுகுத்தியும், காவடிகள் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
அதன்படி கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் 300-க்கும் மேற்பட்டோர் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர். முன்னதாக அந்த குழுவை சேர்ந்த பக்தர்கள் 18 பேர் சண்முகாநதியில் இருந்து பறவைக்காவடியில் பழனிக்கு வந்தனர். இதற்காக பெரிய 2 கிரேன் மூலம் பறவைக்காவடி எடுத்து காரமடை, நால்ரோடு சந்திப்பு, புதுதாராபுரம் சாலை, குளத்துரோடு, திருஆவினன்குடி என பழனி நகரின் முக்கிய வீதிகள் வழியே பழனி முருகன் கோவிலை அடைந்தனர்.
மேலும் 10-க்கும் மேற்பட்டோர் 15 அடி நீள அலகுகுத்தியும் வந்தனர். ராட்சத கிரேன் மூலம் பறவைக்காவடியில் வந்த பக்தர்களை பொதுமக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். இதுகுறித்து அந்த குழுவை சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், கடந்த 49 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் இருந்து பாதயாத்திரையாக வருகிறோம். தைப்பூச திருவிழா முடிந்த பிறகு வால்பாறையில் இருந்து பாதயாத்திரையாக பழனி சண்முகாநதிக்கு வந்து பின் அங்கிருந்து பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் பழனிக்கு வருவோம் என்றனர்.
- சாலையின் இருபுறங்களில் 47,700 மரக்கன்றுகள் நடப்பட்டு நன்கு பராமரிக்கப்படுகிறது.
- 3 ஊர்களுக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால், கனரக வாகனங்கள் போக்குவரத்து நெரிசலும், பயண நேரமும் குறையும்.
சென்னை:
சென்னை - கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன், நில எடுப்பு, பிற துறை சார்ந்த குழாய்களை மாற்றியமைத்தல் மற்றும் பராமரிப்பு செலவினம் உட்பட 1141 கோடியே 23 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், 109 கிலோ மீட்டர் நீளத்திற்கு 10 மீட்டர் சாலையாக அகலப்படுத்தப்பட்டு, சாலை பாதுகாப்பு அம்சங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட செய்யூர்-பனையூர் இணைப்புச் சாலை உள்ளிட்ட செய்யூர்–வந்தவாசி-போளூர் சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலியில் திறந்து வைத்தார்.
இத்திட்டத்தில், மருதாடு, வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 3 ஊர்களுக்கு புறவழிச் சாலைகள், மழை நீர் வடிகால்கள், 5 உயர்மட்ட பாலங்கள், 14 சிறு பாலங்கள், 225 குறு பாலங்கள், சாலைப் பாதுகாப்பினை உறுதிசெய்ய தெருவிளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக கழிப்பறை வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையின் இருபுறங்களில் 47,700 மரக்கன்றுகள் நடப்பட்டு நன்கு பராமரிக்கப்படுகிறது.
இந்த சாலையானது, கிழக்கு கடற்கரைச் சாலை, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழுப்புரம்-மங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கின்றது.
இத்திட்டத்தில் மருதாடு, வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 3 ஊர்களுக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால், கனரக வாகனங்கள் போக்குவரத்து நெரிசலும், பயண நேரமும் குறையும். நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் ரூ.92.45 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 6 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்கள், 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், 4 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள 6 கூடுதல் வட்ட செயல்முறை கிடங்குகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
- முதுநகரில் உள்ள அஞ்சலை அம்மாள் சிலைக்கு த.வெ.க. சார்பில் மாவட்ட செயலாளர் மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி கடலூர் மாவட்டம் முதுநகரில் உள்ள அஞ்சலை அம்மாள் சிலைக்கு பல்வேறு கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் அஞ்சலை அம்மாள் சிலைக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட வீரர் அஞ்சலை அம்மாள் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
- ரசாயனம் என்பதால் தீ கொளுந்து விட்டு எரிவதுடன் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.
- தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை திருமுல்லைவாயில் சுதர்சன் நகர் பகுதியில் உள்ள தின்னர் தயாரிக்கும் நிறுவனத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ரசாயனம் என்பதால் தீ கொளுந்து விட்டு எரிவதுடன் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.
தின்னர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ அருகே உள்ள தனியார் பள்ளிக்கும் பரவியது. பள்ளி மாணவர்களின் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானது.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
- பா.ம.க கவுரவ தலைவர் ஜி.கே. மணி முன்னிலை வகித்தார்.
- சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாத வரை அனைத்து சமூகத்திற்கும், உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காது என்றும் வலியுறுத்தினார்கள்.
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதி பேரவை சார்பில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் பா.ம.க.தலைவர் டாக்டர் அன்புமணி தலைமையில் நடந்தது. அப்போது அனைத்து சமூகங்களை ஒன்று திரட்டி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலை தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி வரவேற்றார். பா.ம.க கவுரவ தலைவர் ஜி.கே. மணி முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் விளக்கி பேசினார்கள். த.மா.கா. சார்பில் துணைத்தலைவர் விடியல் சேகர், அமைப்பு செயலாளர் ஜி. ஆர். வெங்கடேஷ், அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ., தமிழ் நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் என்ஜினீயர் டி. விஜயகுமார், தமிழர் தேசம் கட்சி தலைவர் கே.கே. செல்வகுமார், பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சை முத்து, தென் இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன், கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் கவுண்டர், யாதவ மகா சபை செயலாளர் சேது மாதவன் ஆகியோர் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதின் அவசியம் பற்றியும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாத வரை அனைத்து சமூகத்திற்கும், உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காது என்றும் வலியுறுத்தினார்கள்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் பா.ம.க. எம்.எல்.ஏ. இரா.அருள், சென்னை மாவட்ட தலைவர்கள் ஜெயராமன், வெங்கடேசன் மற்றும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி வ.மு.பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வழக்கறிஞர் பாலு நன்றி கூறினார்.
- தலைவர்களின் சிலைகள், கட்சி கொடிகளை சொந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே?
- மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
மதுரை:
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் முத்துக்கிருஷ்ணன், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திருவாரூர் குடவாசல் சாலை பகுதியில் நாச்சியார் கோவில் குளக்கரை பகுதியில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். சிலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலை பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ பாதிப்பு இல்லாத வகையில் தான் உள்ளது. இருப்பினும் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியியல் பிரிவு அதிகாரிகள் எம்.ஜி.ஆர். சிலை அதன் அருகில் உள்ள கட்சிக்கொடியை அகற்றுமாறு நோட்டீஸ் அனுப்பினர்.
எம்.ஜி.ஆர். சிலையை அகற்றக்கூடாது என அ.தி.மு.க. சார்பிலும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 3 முறை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் சிலையை தன்னிச்சையாக அகற்றக்கூடாது, எம்.ஜி.ஆர். சிலை அகற்றப்பட்டால் மக்கள் வருத்தமடைவார்கள். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு சிலை மற்றும் அதனருகில் உள்ள அ.தி.மு.க. கொடியை அகற்ற வழங்கிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களின் தலைவர்களின் சிலைகள், கட்சி கொடிகளை சொந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே? பொது இடங்களில் வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. இயக்கமாக இருந்தாலும் சரி. கட்டாயமாக அனுமதிக்க முடியாது.
எனவே இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய நேரிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை திரும்ப பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
- உயிரிழந்த ஜமுனாவின் கணவருக்கு 4 வாரத்திற்குள் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
- அவசர நேரத்தில் பயன்படும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணிநேரமும் ஆம்புலன்ஸ் தயாராக இருக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவிழிவேந்தன். இவர் தன்னுடைய மனைவி ஜமூனாவிற்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் மாம்பாக்கம் ஆரம்ப சுகாதர நிலைய மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அங்கு மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆகியோர் ஜமூனாவிற்கு பிரசவம் பார்த்ததில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அதிக ரத்த போக்கு ஏற்பட்டதையடுத்து ஜமுனாவை ஆரணி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்ததில், ஜமுனா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு 'தினந்தந்தி' நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், பிரசவத்தின் போது உயிரிழந்த ஜமுனாவின் கணவருக்கு 4 வாரத்திற்குள் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதர மருத்துவமனைகளிலும் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும். அவசர நேரத்தில் பயன்படும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணிநேரமும் ஆம்புலன்ஸ் தயாராக இருக்க வேண்டும். மருத்துவ வசதி, மருத்துவர் இருப்பதை உறுதி செய்ய அடிக்கடி நேரில் ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை இயக்குநருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 22-ந்தேதி பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 23 மற்றும் 24-ந்தேதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 25 மற்றும் 26-ந்தேதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- கோவை ஆர்.எஸ்.புரத்தில் கடந்த 14-ந்தேதி குண்டுவெடிப்பு நினைவு தினத்தை முன்னிட்டு மலரஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
- காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
கோவை:
கோவை மாநகர போலீசார் சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துக்கள் பதிவிடும் நபர்கள் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவ்வாறு கருத்து பதிவிட்டு சமூக பிரச்சனைகளை ஏற்படுத்தும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை மாநகர சட்டம் ஒழுங்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு என்பவர் எக்ஸ் வலைதளத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பெயரில் வலைதளத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையே பிரச்சனை ஏற்படும் வகையில் கருத்து பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அழகுராஜ், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பாக அர்ஜூன் சம்பத்துக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை செய்ய உள்ளனர்.
இதேபோல இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மீதும் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை ஆர்.எஸ்.புரத்தில் கடந்த 14-ந்தேதி குண்டுவெடிப்பு நினைவு தினத்தை முன்னிட்டு மலரஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
இதில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது. அதன்பேரில் ஆர்.எஸ்.புரம் போலீஸ்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு காடேஸ்வரா சுப்பிரமணியத்துக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.
அதன்பேரில் நேற்றுமுன்தினம் இரவு காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவருடன் இந்து முன்னணியினரும், பா.ஜ.க.வினரும் சென்றனர். அப்போது அவர்கள் போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக போலீசார் காடேஸ்வரா சுப்பிரமணியம், கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ்குமார் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியில்லாமல் திரண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாக கூறி 2 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகர சட்டம்-ஒழுங்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்து, ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
- தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றபோது முதலமைச்சர் தெரிவித்தார்.
- இதுவரை சென்னையில் மட்டும் 60,000 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை ஷெனாய் நகரில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வருவாய்த்துறை செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி அமுதா கூறுகையில்,
* ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
* தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றபோது முதலமைச்சர் தெரிவித்தார்.
* இதுவரை சென்னையில் மட்டும் 60,000 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
* சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 86,388 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
- இது உதயநிதிக்கும் பா.ஜ.க. தலைவருக்குமான பிரச்சனை இல்லை.
- தனியார் பள்ளியில் காலையில் இலவச உணவு கொடுக்கிறார்களா?
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஒருமையில் விமர்சித்தது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
* மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான நிதியை பெற்றுத்தர துப்பில்லை.
* பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் தரம் அவ்வளவு தான். பெரிதாக ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
* தமிழகத்திற்கான நிதியை வாங்கி தருவதை விட்டு விட்டு பிரச்சனையை மடைமாற்றும் செயலில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார்.
* போஸ்டர் ஒட்டுவதாக கூறிய அண்ணாமலை தாராளமாக வரட்டும்.
* அண்ணா அறிவாலயத்திற்கு வருவதாக சொன்னார். தைரியம் இருந்தால் அண்ணாமலையை அண்ணாசாலைக்கு வரச்சொல்லுங்கள்.
* இது உதயநிதிக்கும் பா.ஜ.க. தலைவருக்குமான பிரச்சனை இல்லை. தமிழகத்திற்கான நிதி உதவியை கேட்டு பெற வேண்டும்.
* தனியார் பள்ளி என்ன சட்டவிரோதமாகவா நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஒன்றிய அரசிடம் அனுமதி வாங்கி தான் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
* தனியார் பள்ளியில் காலையில் இலவச உணவு கொடுக்கிறார்களா? சீருடை இலவசமாக கொடுக்கிறார்களா? தயவுசெய்து இதை அதோடு ஒப்பிடாதீங்க.
* உ.பி. கும்பமேளாவில் கூடிய கூட்டத்தை சமாளிக்க தெரியவில்லை.
* வாரணாசியில் சிக்கித் தவிக்கும் மாற்றுத்திறனாளி வீரர்கள் விமானம் மூலம் அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று கூறினார்.
- அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து அணிகளும் கூடி தனித்தனியாக ஆலோசனை நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
- அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு அணிகளின் சார்பிலும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தலை சந்திப்பதற்கு தயாராகி வருகிறார். சட்டமன்றத் தேர்தலில் எப்படி செயல்படுவது என்பது பற்றி அ.தி.மு.க.வில் உள்ள அனைத்து அணிகளும் கூடி தனித்தனியாக ஆலோசனை நடத்துவதற்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இதன்படி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு அணிகளின் சார்பிலும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அனைத்து உலக எம்.ஜி.ஆர்.மன்ற ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும் எம்.ஜி.ஆர். மன்ற மாநில செயலாளருமான பொன்னையன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. அவை தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிரான விஷயங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று மீண்டும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.






