என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. தனித்தனியாக போட்டியிட்டதால் வாக்குகள் சிதறி, தி.மு.க. பல இடங்களில் குறைவான வாக்குகள் பெற்றிருந்தாலும் வெற்றி பெற்றது.
- அ.தி.மு.க. கூட்டணியை விரிவுபடுத்தி வலுப்படுத்துவதற்காக அமித்ஷா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
போடி:
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் சூழலில், கட்சியில் நிலவும் உட்கட்சிப் பிரச்சினைகள் தீர்ந்து, பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவார்களா? என்ற பெரிய அரசியல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிலையில் போடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:
தமிழ்நாடு நல்லா இருக்க வேண்டும் என விரும்பும் அனைவரும் பிரிந்து இருக்கும் அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதையே விரும்புகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளதால் அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முடிவுகள் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. தனித்தனியாக போட்டியிட்டதால் வாக்குகள் சிதறி, தி.மு.க. பல இடங்களில் குறைவான வாக்குகள் பெற்றிருந்தாலும் வெற்றி பெற்றது.
இந்த நிலை மீண்டும் நடைபெறக்கூடாது என்பதே பா.ஜ.க. உயர்மட்டத் தலைவர்களின் கணிப்பு. எனவே அ.தி.மு.க. கூட்டணியை விரிவுபடுத்தி வலுப்படுத்துவதற்காக அமித்ஷா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க.வுக்கான வாக்குகள் சிதறாமல் ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே அவரின் முதன்மை நோக்கமாக உள்ளது என்றார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். இணைப்பு மீண்டும் சாத்தியமா என எதிர்பார்த்து இருக்கும் சூழலில், ஓ.பி.எஸி.ன் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 60 மோட்டார்சைக்கிள்கள், 3 கார்கள் நிறுத்துவதற்கு இட வசதியும் உள்ளது.
- கண்ணதாசன் நகரில் பஸ்களை ரோட்டோரம் வரிசையாக நிறுத்தி விடுவதால் பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது.
சென்னை:
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பஸ் நிலையங்கள் பயணிகளுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.
வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து இருந்ததால் பயணிகள் இரவு நேரத்தில் பஸ் நிலையத்திற்குள் நுழையவே பயந்தனர். குடிநீர், கழிப்பிட வசதி இல்லாமல் இருந்தது. பஸ் நிலையத்தை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இரவு நேரங்கள் மட்டுமின்றி பகல் வேளையிலும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியது. பாதுகாப்பற்ற நிலையில் மாநகர பஸ் நிலையங்கள் இருந்ததால் அதனை சீர்ப்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மிகவும் மோசமான நிலையில் இருந்த பஸ் நிலையங்கள் புதிதாக கட்டும் பணி பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு வட சென்னை பகுதியில் உள்ள பஸ் நிலையங்களை புதிதாக கட்டுவதற்கான நிதியினை ஒதுக்கினார். தற்போது கண்ணதாசன் நகர், திரு.வி.க.நகர், முல்லை நகர் பஸ் நிலையங்கள் கட்டும் பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. கண்ணதாசன் நகர் பஸ் நிலையம் ரூ.13.40 கோடி செலவில் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. தரை மற்றும் முதல் தளத்துடன் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடந்தது. 5,900 சதுர அடி தரை தளமும், 5,300 சதுர அடி முதல் தளமும் கட்டப்பட்டு உள்ளது.
மொத்த கட்டிட பரப்பளவு 11,200 சதுர அடியாகும். 16 பஸ்கள் நிற்கக் கூடிய வகையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நடை மேடைகளில் 100 பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் அமைகிறது.

60 மோட்டார்சைக்கிள்கள், 3 கார்கள் நிறுத்துவதற்கு இட வசதியும் உள்ளது. தரை மற்றும் முதல் தளத்தில் ஆண்-பெண் பொதுக்கழிப்பிட வசதி செய்யப்பட்டு உள்ளது. குடிநீர் வசதியும் செய்யப்படுகிறது.
பொதுமக்கள் காத்திருந்து பயணிக்கக் கூடிய வகையில் பஸ் நிலையத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. தரை தளத்தில் 4 கடைகளும் முதல் தளத்தில் 4 வணிகப் பகுதிக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நவீன மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. பயணிகள் மட்டுமின்றி ஊழியர்கள் ஓய்வு எடுக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதிகாலையில் இருந்து இரவு வரை பயணிகள் பயம் இல்லாமல் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
பஸ் நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய பஸ் நிலைய பணிகளை ஆய்வு செய்து விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் புதிய பஸ் நிலையங்களை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முல்லைநகர், கண்ணதாசன் நகர் பஸ் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்தால் ரோட்டோரம் நிறுத்தப்படும் மாநகர பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் சென்று விடும்.
கண்ணதாசன் நகரில் பஸ்களை ரோட்டோரம் வரிசையாக நிறுத்தி விடுவதால் பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.
- கூட்டணியில் யாரை இணைப்பது என்பது தொடர்பாக இ.பி.எஸ்-க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்.
- எல்லோருக்கும் எல்லாம் என ஆசைகாட்டி அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி வருவதாக தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
சென்னையில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் பேசுகையில், "அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி துணைச் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தற்காலிக அவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு கூட்டத்தை நடத்தி தர வேண்டும் என்று முன் மொழிகிறேன்" என்றார்.
இதை திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிவதாக கூறினார். இதையடுத்து கே.பி.முனுசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,
* 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்.
* கூட்டணியில் யாரை இணைப்பது என்பது தொடர்பாக இ.பி.எஸ்-க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றம்.
* நீட், கல்விக்கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், 100 நாள் வேலையை 150-ஆக உயர்த்துவது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாத தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
* வடகிழக்கு பருவமழையின்போது மக்களை காக்க தவறிவிட்டதாக தி.மு.க. அரசிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
* கோவை, மதுரை மெட்ரோ விவகாரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம். முறையான தரவுகளுடன் மெட்ரோவிற்கு விண்ணப்பிக்கவில்லை என தீர்மானம் நிறைவேற்றம்.
* எல்லோருக்கும் எல்லாம் என ஆசைகாட்டி அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி வருவதாக தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
- நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
சென்னையில் அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தொடங்கியது.
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து தற்காலிக அவைத்தலைவராக கே.பி.முனுசாமி அ.தி.மு.க. பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்மகன் உசேன் உடல்நலக்குறைவால் பங்கேற்காததால் தற்காலிக அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவிற்கே சவால் விடுவதா? என தி.மு.க. அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
* மேல்முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றம்.
* நீதித்துறையின் தனித்தன்மை காக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே உறுதியாகப் பின்பற்றப்படும் என அரசு வலியுறுத்தி வருகிறது.
- தமிழ்நாட்டில் உள்ள, மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை உள்ளது.
மும்மொழிக் கொள்கை என்பது 1968-ல் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கல்விசார் கொள்கையாகும். இது இந்தி, ஆங்கிலம் மற்றும் நவீன இந்திய மொழி (முன்னுரிமை இந்தி பேசாத மாநில மொழி) ஆகிய மூன்று மொழிகளைக் கற்பதை வலியுறுத்துகிறது. இந்தக் கொள்கை, இந்திய மாநிலங்கள் தங்கள் மொழிக் கல்வி முறைகளை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதைப் பரிந்துரைக்கிறது.
இந்திய மொழிகளுக்கு இடையிலான நல்லுறவை வளர்ப்பதும், மாணவர்களுக்கு பல மொழிகளைக் கற்பிப்பதன் மூலம் அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதும் மும்மொழிக் கொள்கையின் நோக்கமாகும்.
இந்தி பேசும் மாநிலங்களுக்கு இந்தி, ஆங்கிலம் மற்றும் ஒரு நவீன இந்திய மொழி (இந்தி அல்லாத) ஆகியவற்றை முதன்மையாகக் கற்பிக்க வேண்டும்.
இந்தி பேசாத மாநிலங்களுக்கு இந்தி, ஆங்கிலம் மற்றும் ஒரு நவீன இந்திய மொழி (இந்தி அல்லது ஆங்கிலம் அல்லாத) ஆகியவற்றை முதன்மையாகக் கற்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே உறுதியாகப் பின்பற்றப்படும் எனத் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.
மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவது கட்டாயமாக்கப்படும் என்றும், அப்படிச் செய்யாவிட்டால் பள்ளிக் கல்வித் திட்டங்களுக்கான நிதியுதவி நிறுத்தப்படும் என்றும் மத்திய அரசு கூறி உள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் அந்த நிதியை விடுவிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதால் ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடம் இல்லை. தமிழ்நாடு அரசு, இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். பி.எம். ஶ்ரீ பள்ளிகள் (PM Shri) மட்டுமல்ல, தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக வேறு பல பிரச்சனைகளும் (தமிழ்நாடு அரசுடன்) இருக்கின்றன.

அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கின்றனர். தமிழக மக்களின் நலன்களை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. ஒட்டுமொத்த நாடும் தேசியக் கல்விக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டபோதும் தமிழ்நாடு அரசு ஏன் ஏற்க மறுக்கிறது? அந்த கொள்கைகள் தமிழ் மொழிக்கு எதிராக இருக்கின்றனவா? பிராந்தியத்தில் பயன்படுத்தப்படும் மொழி, கல்வியில் பிரதான மொழியாக இருக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. அதை அவர்கள் எதிர்க்கின்றனரா? தங்களின் சொந்த அரசியல் நலன்களுக்காக அவர்கள் மக்களை குழப்புகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள, மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை உள்ளது. உங்கள் தமிழ்நாட்டு மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுத் தேர்கின்றனர். பிறகு, ஏன் அந்த கொள்கைகளை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளக் கூடாது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்த மூன்றாவதாக ஒரு இந்திய மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை.
இது மறைமுகமாக இந்தியைத் திணிப்பதற்கான ஒரு வழியாகவே மாநிலத்தில் பார்க்கப்படுகிறது. இந்தியை அரசுப் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக கற்றுக் கொடுக்கும் முயற்சிகளை பல ஆண்டுகளாகவே தமிழ்நாடு எதிர்த்து வருகிறது.
பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்தே 'தமிழ் மற்றும் ஆங்கிலம்' என்ற இருமொழிக் கொள்கையில் தமிழ்நாடு அரசு உறுதியாக நிற்கிறது. மூன்றாவது மொழி என்ற பெயரில் இந்தி அல்லது சமஸ்கிருதம் மறைமுகமாகத் திணிக்கப்படுமோ? என்ற சந்தேகம் தமிழக கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் நீண்ட காலமாகவே உள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டாலும், தமிழ்நாட்டில் மட்டும் இது செயல்படுத்தப்படவில்லை, மாறாக இருமொழிக் கொள்கையே நடைமுறையில் உள்ளது.
பெரும் பணம் செலவழித்து தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மும்மொழிகளை கற்றுக் கொள்கிறார்கள். ஏழைக் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் இருமொழிக்கொள்கையே கற்கிறார்கள். போட்டித் தேர்வுகள் என்று வரும்போது தனியார் பள்ளிகளில் படிப்போர் முதலிடத்தை பெறுகின்றனர். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பின்தங்கியும் விடுகிறார்கள். ஓர் அரசே இதுபோன்ற சமுதாக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கலாமா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.
- ஈஷா அறக்கட்டளை தமிழ்நாட்டில் கடந்த 15 வருடங்களாக பல்வேறு பகுதிகளில் உள்ள மயானங்களை பராமரித்து வருகிறது.
- ஈஷா அறக்கட்டளை தற்போது தமிழக அரசுடன் இணைந்து 17 எரிவாயு தகன மயானங்களை பராமரித்து இயக்கி வருகிறது.
சென்னை:
ஈஷா அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் எரிவாயு மயானங்களில், 'வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை வழங்கும் திட்டத்தை', நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர், இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட உடல்களை கண்ணியத்துடன் முறைப்படி தகனம் செய்துள்ள ஈஷாவின் பணிகளை பெரிதும் பாராட்டினார்.
சத்குருவின் வழிகாட்டுதலில், ஈஷா அறக்கட்டளை தமிழ்நாட்டில் கடந்த 15 வருடங்களாக பல்வேறு பகுதிகளில் உள்ள மயானங்களை பராமரித்து வருகிறது. தமிழ்நாடு அரசுடன் இணைந்து ஈஷா நிர்வகிக்கும் மயானங்களில் பழமையான சடங்குகள் மற்றும் சக்திமிக்க இறுதிச் சடங்குகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளன. இதை ஈஷா வணிக நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறது.

இன்று துவங்கப்பட்டுள்ள வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கான இலவச தகன சேவையானது, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் இறுதிச் சடங்குகளை கண்ணியத்துடன் எந்தவித நிதிச்சுமையுமின்றி மேற்கொள்ள உதவும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
ஈஷா அறக்கட்டளை தற்போது தமிழக அரசுடன் இணைந்து 17 எரிவாயு தகன மயானங்களை பராமரித்து இயக்கி வருகிறது. சென்னை, வேலூர், தஞ்சாவூர், நெய்வேலி மற்றும் கோவை மாவட்டத்தில் நஞ்சுண்டாபுரம், வீரகேரளம், துடியலூர், போத்தனூர், வெள்ளலூர், ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், காரமடை, கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள மயானங்களை பராமரித்து வருகிறது. இதனுடன் கூடுதலாக 3 மயானங்களின் பராமரிப்புப் பொறுப்பையும் ஈஷா அறக்கட்டளை ஏற்க உள்ளது.
இந்த மயானங்களில் அழகான பூங்காவைப் போன்று பசுமையான சூழலை உருவாக்குதல், மயானத்தை சுற்றி அடர் மரங்களை நட்டு பராமரித்தல், முறையான நடைபாதை வசதிகளை உருவாக்குதல், சுகாதாரமான முறையில் குளியல் மற்றும் கழிவறைகளை பராமரித்தல் மற்றும் அரசின் உதவியோடு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாத வகையில் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் எனப் பல்வேறு பணிகளை ஈஷா மேற்கொண்டு வருகிறது.
ஈஷா சார்பில் மயானங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இறந்தவர்களின் உடலை கண்ணியமாக கையாளவும், அந்த இறுக்கமான சூழலில் உரிய முறையில் நடந்து கொள்ளவும் சிறப்பான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

மேலும் மயான வளாகத்தில் இறந்தவர்களுக்கான இறுதி சடங்கு செய்வதற்கான மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனுடன் எரிவாயு மின் மயானங்களை பராமரிக்க மாசுக்கட்டுபாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி, அதனை உறுதி செய்யும் பணிகளிலும் ஈஷா ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சத்குருவின் நோக்கம், நாடு முழுவதும் 1000 முதல் 3000 மயானங்களை தத்தெடுத்து, அவற்றின் பாரம்பரியமான புனிதத்தையும், கண்ணியமான செயல்பாட்டு முறையையும் மீட்டெடுப்பதாகும்.
- மாவிலை தோரணங்களுடன் கூடிய பிரமாண்ட வரவேற்பு வளைவும் அமைக்கப்பட்டிருந்தது.
- செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களுக்கு 3 நுழைவு பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
அந்த வகையில் அ.தி.மு.க.வும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது. ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி எந்தவித முக்கியத்துவமும் அளிக்காமல் கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஆனாலும் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடந்துகொண்டே இருக்கின்றன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, டி.டி.வி. தினகரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இது அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக்கான பணிகள் வேகப்படுத்தப்பட்டு இருப்பதை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னையில் இன்று அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மண்டபத்தின் நுழைவு வாயில் அருகே உள்ள காலி மைதானத்தில் உணவு தயாரிப்பு கூடம், உணவு அருந்தும் கூடம், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவம் பொறித்த வரவேற்பு பதாகைகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த அனைத்து பேனர்களிலும் வருங்கால முதல்வர் என்கிற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. மாவிலை தோரணங்களுடன் கூடிய பிரமாண்ட வரவேற்பு வளைவும் அமைக்கப்பட்டிருந்தது.

காலை முதலே மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, செண்டை மேளம், புலியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நுழைவு வாயில் பகுதியில் நடந்து கொண்டிருந்தன. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்ட நிகழ்வுகளை வெளியே இருந்து பார்வையிடும் வகையில் எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு இருந்தது.
மண்டபத்தின் முகப்பு வாயில் தென்னை ஓலை, குருத்துக்களால் இரட்டை இலை சின்னத்துடன் அழகுற அமைக்கப்பட்டு இருந்தது. முகப்பில் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கரும்பு தோரணங்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
2026 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் என்பதை காட்டும் வகையில் மண்டபத்தின் நுழைவு வாயில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வடிவில் அமைக் கப்பட்டு இருந்தது. மண்ட பத்தின் உள்ளே வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. குடிநீர் வசதி, மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டி ருந்தது. தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தன.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களுக்கு 3 நுழைவு பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தன. செயற்குழு உறுப்பினர்கள் வருவதற்கு தனி பாதையும், பொதுக்குழு உறுப்பினர்கள் வருவதற்கு தனி பாதையும், சிறப்பு அழைப்பாளர்கள் வருவதற்கு தனி பாதையும் அமைக்கப்பட்டு இருந்தன.
செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோருக்கு தனித்தனியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. கூட்டத்துக்கு வந்தவர்களின் அடையாள அட்டைகள் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தனியார் பாதுகாவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து உறுப்பினர்கள் கார்களில் வந்ததால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம், நெற்குன்றம், மதுரவாயல், வானகரம் என ஒவ்வொரு பகுதிகளிலும் சாலையின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும், திரண்டு நின்று அவருக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தாரை, தப்பட்டை, செண்டை மேளம் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- நாட்டுப்புற மீனவர்களும் மற்றும் விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லக் கூடாது என்று மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு கடல் பகுதியில் கரைகளில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ராமேசுவரம்:
வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழக கரையோர பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசி வருகிறது. மணிக்கு சுமார் 50 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை கடல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இதே போல், ராமேசுவரம், மண்டபம் பகுதியில் இன்று கடல் காற்றின் வேகம் சுமார் 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ராமேசுவரம் மற்றும் மண்டபம் துறைமுகங்களிலிருந்து நாட்டுப்புற மீனவர்களும் மற்றும் விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லக் கூடாது என்று மீன்வளத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று ராமேசுவரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க அனுமதி சீட்டு வழங்கப்படாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
இதே போல், பாம்பன் பகுதியிலும் பலத்த கடல் காற்று காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதன் காரணமாக பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு கடல் பகுதியில் கரைகளில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- தங்கம் நேற்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
- தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,030-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,240-க்கும் விற்பனையாகிறது.
இதனை தொடர்ந்து, தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு எட்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 207 ரூபாய்க்கும் கிலோவுக்கு எட்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
09-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000
08-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
07-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
06-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320
05-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
09-12-2025- ஒரு கிராம் ரூ.199
08-12-2025- ஒரு கிராம் ரூ.198
07-12-2025- ஒரு கிராம் ரூ.199
06-12-2025- ஒரு கிராம் ரூ.199
05-12-2025- ஒரு கிராம் ரூ.196
- விஜய் இப்போது தான் வந்து இருக்கிறார்.
- ஒரு மீட்டிங் போட்டவுடன் எது வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எடப்பாளையம் கிராமத்தில் சுமார் 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளை கட்டி முடிக்கப்பட்ட பணிகளின் தரம் குறித்தும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் புதுச்சேரியில் த.வெ.க. கூட்டத்தின்போது விஜய், புதுச்சேரி முதலமைச்சரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:
த.வெ.க. தலைவர் விஜய் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இப்போது தான் அவர் வந்து இருக்கிறார். ஒரு மீட்டிங் போட்டவுடன் எது வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் கற்றுக்கொள்ள வேண்டியதே நிறைய இருக்கிறது.
கரூர் மக்கள் அளித்த பாடத்தில் கற்றுக்கொண்டு, இப்போது அவர் டயத்துக்கு வந்து டயத்துக்கு சரியாக போகிறார் என்றால் இப்போது தான் கொஞ்சம் பாடம் கற்றுக்கொண்டு உள்ளார். விஜய் எல்.கே.ஜி. படிச்சிட்டு இருக்காரு. வரட்டும் அவர் வரும்போது பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- மீதமுள்ள 9 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் உள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் புதிய ஊரக உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் 88 கிராம ஊராட்சிகளை புதிதாக உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இருந்த 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு 88 கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 9 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் உள்ளது. இதன்படி நீலகிரியில் மொத்தம் 95 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
- அடுத்த கட்ட சுற்றுப்பயணங்கள், தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
- ஈரோட்டில் விஜய் பிரசாரத்துக்கு 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளதால், த.வெ.க. பொதுக்கூட்டத்தை 2 நாட்கள் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இக்கூட்டத்தில் அடுத்த கட்ட சுற்றுப்பயணங்கள், தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஈரோட்டில் விஜய் பிரசாரத்துக்கு 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளதால், த.வெ.க. பொதுக்கூட்டத்தை 2 நாட்கள் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக செங்கோட்டையன் கூறியிருந்தார். இதுகுறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






