என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இன்றைய முக்கிய செய்திகள்...
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும்.
    • அரசுப் பணியாளர்கள் அனைத்து பதிவுகளிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை பின்பற்றினால் தான் நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை பின்பற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் கடைகளின் பெயர் மற்றும் அறிவிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் வெளிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    துறைத்தலைமை அலுவலகங்களில் இருந்து அரசு, பிற அலுவலங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து பதிவுகளிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்த அவ்வப்போது இதுபோன்ற ஆய்வுகள் தேவை.
    • முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை தவறு என்று தீர்ப்பு அளித்தவர் குரியன் ஜோசப்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், தமிழக உரிமைகளை பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்று நேற்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இந்த நிலையில், மாநில உரிமைகளை பாதுகாக்க குழு அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் நன்றி தெரிவித்துள்ளார்.

    மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்த அவ்வப்போது இதுபோன்ற ஆய்வுகள் தேவை. மத்திய- மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி சார்ந்த கொள்கைகள், நிர்வகிக்கும் அதிகாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்துவது அவசியம், ஊதியம் வாங்கமாட்டேன் என்ற கோரிக்கையை முதலமைச்சர் கனிவுடன் ஏற்றுக் கொண்டார் என்றார்.

    மத்திய-மாநில அரசுகளின் அதிகார உறவுகள் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்டு உள்ள உயர்மட்டக்குழுவின் தலைவரான நீதிபதி குரியன் ஜோசப், 1979-ம் ஆண்டு கேரள ஐகோர்ட்டில் வக்கீல் பணியை தொடங்கியவர். 1987-ல் அரசு வக்கீலாகவும், 1994-1996 இடைபட்ட காலங்களில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும், 1996-ல் மூத்த வக்கீலாகவும் நிலை உயர்வு பெற்றார். அதன்பின்னர், 2000-ம் ஆண்டு கேரள ஐகோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கேரள ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக 2 முறையும், இமாசலபிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக 2010-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி முதல் 2013-ம் ஆண்டு மார்ச் 7-ந்தேதி வரையும் இருந்தார். அதனையடுத்து 2013-ம் ஆண்டு மார்ச் 8-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, 5 ஆண்டுகள் பணியாற்றி, 2018-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

    மேலும் கல்வி, சட்டச் சேவைகள் சார்ந்து பல்வேறு பொறுப்புகளிலும் இருந்துள்ளார். 2017-ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 4 நீதிபதிகளில் குரியன் ஜோசப்பும் ஒருவர். நீதிபதி நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர கொலீஜியத்தில் சீர்திருத்தம் தேவை என்று கூறியவர். குறிப்பாக முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை தவறு என்று தீர்ப்பு அளித்தவர் குரியன் ஜோசப்.

    • மாலை 5 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.
    • முதல்முறையாக முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்களின் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.

    துணை வேந்தர்களை நியமிக்கவும், நீக்கவும் மாநில அரசுக்கு அதிகாரத்தை மாற்றிய சட்டம் உச்சநீதிமன்றத்தில் வழியே சமீபத்தில் அமலுக்கு வந்தது. மேலும் முதல்முறையாக முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்களின் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அரிவாளால் வெட்டிய மாணவன் பள்ளியில் இருந்து நடந்தே சென்று போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளான்.
    • பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரிவாளால் வெட்டிய சக மாணவனை கைது செய்தனர்.

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி வகுப்பறையில் 8-ம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் சரமாரியாக வெட்டினான். தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் வெட்டு விழுந்ததால் பரபரப்பு நிலவியது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட 2 மாணவர்களுக்கு இடையே பென்சில் யாருடையது? என்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இச்சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, அரிவாளால் வெட்டிய மாணவன் பள்ளியில் இருந்து நடந்தே சென்று போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளான்.

    இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரிவாளால் வெட்டிய சக மாணவனை கைது செய்தனர்.

    இந்த நிலையில், சக மாணவன், ஆசிரியரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் சீர்திருத்த குழுமத்தில் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் தகுதியான நபர்களை கொண்டு மாணவனுக்கு கவுன்சிலிங் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவன் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.

    • சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
    • கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    சென்னை:

    சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை (வியாழக்கிழமை) மாலை 6.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

    நாளை காலையில் சட்டசபையில் சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது விவாதம், அமைச்சர்கள் பதிலுரை, வாக்கெடுப்பு ஆகியவை நடக்க உள்ளன. சட்டமன்ற அலுவல்கள் நாளை பிற்பகலில் நிறைவடைந்துவிடும்.

    அதைத்தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • முதலையை வனத்துறையினர் பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • ஆற்று பாலத்தின் அருகே முதலை நடமாட்டம் உள்ளதாக பதாகை வைக்க வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் செல்லும் ரோட்டில் அமராவதி ஆற்று பாலம் உள்ளது. இந்த ஆற்றுப்பாலத்தில் முதலை ஒன்று உலா வந்து கொண்டு இருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். உடுமலை அமராவதி அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடும் போது அமராவதி அணையில் இருந்து முதலைகள் தண்ணீர் வழியாக வந்து ஆற்றில் ஆங்காங்கே இருந்து வருகிறது.

    இதற்கு முன்பு சீதக்காடு, தாராபுரம் அகத்தீஸ்வரர் கோவில், வீராச்சிமங்கலம், தாளக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள அமராவதி ஆற்றில் முதலைகள் நடமாட்டம் இருந்து வந்தது. அப்போது தாராபுரம் ஈஸ்வரன் கோவில் அமராவதி ஆற்றில் முதலையை பிடிப்பதற்காக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முதலையை பிடிக்க முயற்சி செய்தனர். இருப்பினும் கடைசி நேரத்தில் முதலை தப்பி சென்றது.

    தற்போது முதலை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே முதலையை வனத்துறையினர் பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் முதலை நடமாட்டத்தால் அலங்கியம் அமராவதி ஆற்றுப் பாலம் பகுதியில் கீழே இறங்கி குளிக்கவும் துணி துவைக்கவும் வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    பக்தர்கள் தாராபுரம் வழியாக பழனிக்கு செல்லும்போது அலங்கியம் அருகில் உள்ள அமராவதி ஆற்றில் குளிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே அமராவதி ஆற்று பாலத்தின் அருகே முதலை நடமாட்டம் உள்ளதாக பதாகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • தகராறில் ஈடுபட்டவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
    • போலீசாருக்கும் திருமண மண்டபத்தில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இது பற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் அந்த மண்டபத்தில் மதுபோதையில் வாலிபர்கள் தகராறில் ஈடுபடுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது தகராறில் ஈடுபட்டவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போலீசாருக்கும் திருமண மண்டபத்தில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சப்-இன்ஸ்பெக்டரை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்துராஜ் வடசேரி போலீசாருக்கு புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கோட்டார் வைத்தியநாத புரத்தை சேர்ந்த விக்னேஷ், செல்வபிரகாஷ், செல்வசூரியாபிரதீப், தெங்கம்புதூரை சேர்ந்த சந்தோஷ், தாழக்குடியைச் சேர்ந்த அஜித், பறக்கையை சேர்ந்த ஆறுமுக முத்துப்பாண்டி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அஜித், செல்வபிரகாஷ், ஆறுமுக முத்துப்பாண்டி, செல்வ சூரியா பிரதீப் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    • நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.
    • பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும்.

    மெரினா கடற்கரைக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தி தவறானது. நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் என மாநிகராட்சி ஆணையர் குமரகுருபரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    • சத்துணவு ஊழியர்களின் பணியானது இதுவரை காலமுறை ஊதிய அடிப்படையில் நிலைப்படுத்தப்படவில்லை என்பது மிகப்பெரும் கொடுமையாகும்.
    • இதர அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் எதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவுப் பணியாளர்கள் தங்களை காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும், உரிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தும், தமிழ்நாடு அரசு அதனை நிறைவேற்ற மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

    சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் (எண்: 313) வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் இன்றுவரை அதனை வழங்காமல் ஏமாற்றி வருவது நம்பி வாக்களித்த சத்துணவு ஊழியர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

    தமிழ்நாட்டு ஏழை குழந்தைகளின் கல்வி தடைபடாமலிருக்க பெருந்தலைவர் காமராசர் 1955ஆம் ஆண்டு அரசுப்பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார். பின்னர் அத்திட்டம் 1982ஆம் ஆண்டு சத்துணவுத் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் சத்துணவு மையங்கள் அமைக்கப்பட்டு சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என்று பணியிடங்கள் உருவாக்கப்பட்டது.

    தற்போது தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 1,95,000 பணியாளர்களுடன் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் 65,000 சத்துணவு மையங்களில் நாள்தோறும் 55 லட்சம் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ– மாணவியர் பயன்பெற்று வருகின்றனர்.

    கடந்த 40 ஆண்டுகளாகப் பணியாற்றியும் சத்துணவு ஊழியர்களின் பணியானது இதுவரை காலமுறை ஊதிய அடிப்படையில் நிலைப்படுத்தப்படவில்லை என்பது மிகப்பெரும் கொடுமையாகும். அதோடு இதர அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் எதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை என்பது அவர்களின் உழைப்பினை உறிஞ்சி குருதியைக் குடிக்கும் கொடுங்கோன்மையாகும்.

    மேலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் அரசு நியமித்த சத்துணவு பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், பள்ளிகளில் புதிதாகத் தொடங்கப்பட்ட காலை உணவு தயாரிப்புப் பணியினை திமுக அரசு தனியாருக்கு வழங்குவது ஏன்?

    தனியார் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் தரகுத் தொகைக்காகவா? அல்லது சத்துணவு திட்டத்தையே மெல்ல மெல்ல தனியாருக்கு தாரைவார்ப்பதற்கான முன்னோட்டமா? என்ற ஐயமும் எழுகிறது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதுமுள்ள 1,95,000 சத்துணவுப் பணியிடங்களில் தற்போது 60,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதில் பெரும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

    ஆகவே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை மானிய கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ள நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் தயாரிக்கும் பணியையும் சத்துணவுப் பணியாளர்களிடமே முழுவதுமாக ஒப்படைத்து, அவர்களை காலமுறை ஊதியப் பணியாளர்களாக மாற்றி உரிய ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

    மேலும், தற்போது காலியாகவுள்ள 60,000 சத்துணவு பணியிடங்களை நேர்மையான முறையில் உடனடியாக நிரப்ப வேண்டுமெனவும், சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை மாதம் 10,000 ரூபாயாகவும், பணிக்கொடையை 5 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டுமெனவும், பணி மூப்பு மற்றும் கல்வித் தகுதி அடிப்படையில் சத்துணவு ஊழியர்களுக்குப் பதவி உயர்வும் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • சாட்டை சேனலில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்டக் கருத்தாகும்.
    • அவற்றிற்கு எந்த வகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் "திருச்சி துரைமுருகன் நடத்தும் சாட்டை வலையொளிக்கும் (YouTube Channel) நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்புமில்லை.

    அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்டக் கருத்தாகும். அவற்றிற்கு எந்த வகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    • முறைகேடு தொடர்பாக பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர்.-கள் அடிப்படையில் சோதனை- ED
    • எந்த எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் டாஸ்மாக்கில் சோதனை நடத்தியது என்பதை அறிந்து கொள்ள தாக்கல் செய்ய உத்தரவு.

    டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை கேட்டும், இந்த சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் முறைகேடு தொடர்பாக பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர்.-கள் அடிப்படையில் சோதனை நடத்தியதாக கூறப்பட்டது.

    அதற்கு சென்னை உயர்நீதிமன்றம் "டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த எஃப்.ஐ.ஆர்-களை தாக்கல் செய்ய வேண்டும்" என அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    எந்த எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் அமலாக்கத்துறை டாஸ்மாக்கில் சோதனை நடத்தியது என்பதை அறிந்து கொள்ள உத்தரவிட்டதாக தெரிவித்ததுடன், விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

    ×