என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பெட்ரோல் பங்கில் யானை ஒன்று புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பெட்ரோல் பங்கில் யானை சுற்றித் திரிந்த காட்சிகளை பார்த்த பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது.
இந்த பெட்ரோல் பங்கில் யானை ஒன்று புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் பங்கில் யானையைப் பார்த்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.
இதுதொடர்பான காட்சிகள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. பெட்ரோல் பங்கில் யானை சுற்றித் திரிந்த காட்சிகளை பார்த்த பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
யானை ஊருக்குள் வந்த சம்பவம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்று ஆற்காடு சுரேஷின் படத்தில் ரத்தக்கறை கத்தியை கும்பல் வைத்துள்ளது.
- 3 நாட்டு வெடிகுண்டுகள், 5 பட்டாக்கத்திகளை சம்பவ இடத்திலேயேவிட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கத்தியை ஆற்காடு சுரேஷின் உருவப்படத்தில் கொலை கும்பல் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கை நேற்றிரவு கொலை செய்ததும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்று ஆற்காடு சுரேஷின் படத்தில் ரத்தக்கறை கத்தியை கும்பல் வைத்துள்ளது.
நேற்று ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் என்பதால் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றுவிட்டு கத்தியை வைத்ததகாக தகவல் வெளியாகியுள்ளது .
கத்தியை வைத்தபின் திருவள்ளூர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவருடன் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார்.
கொலை செய்த பிறகு பதற்றத்தில் 3 நாட்டு வெடிகுண்டுகள், 5 பட்டாக்கத்திகளை சம்பவ இடத்திலேயேவிட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது.
- பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார்.
- பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உடன் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இருந்தனர்.
கன்னியாகுமரி:
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார்.

அந்த வகையில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக விஜய் வசந்த் சந்தித்தார். அவர்களுக்கு சால்வை அணிவித்தார்.

அப்போது, பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உடன் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இருந்தனர்.
- கம்பா் தெருவில் இருந்து வரும் வாகனங்கள் ஜவஹா் சாலையை நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ரமணா நகா் பிரதான தெருவில் இருந்து ஜவஹா் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பெரம்பூா் மாா்க்கெட் அருகே மெட்ரோ ரெயில் பணி நடைபெற உள்ளது. இப்பணி காரணமாக இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சோதனை அடிப்படையில், அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, மாதவரம் நெடுஞ்சாலை, மேல்பட்டி பொன்னப்பன் தெரு, லட்சுமி அம்மன் கோவில் தெருவில் இருந்து ஜவஹா் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக அந்த வாகனங்கள், சுப்பிரமணியம் தெருவில் திரும்பி வீர சாவா்க்கா் சாலை வழியாக செல்லலாம். அதேபோல, ஜவஹா் சாலையில் உள்ள மேற்குத் தெருக்களான ஆசாத் தெரு, திருவள்ளுவா் தெரு, ஜீவானந்தன் தெரு ஆகியவை மூடப்படும்.
இந்த தெருக்களிலிருந்து வரும் வாகனங்கள் சுப்பிரமணியம் தெரு, சுபாஷ் சந்திரபோஸ் தெரு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
கம்பா் தெருவில் இருந்து வரும் வாகனங்கள் ஜவஹா் சாலையை நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, கம்பா் தெரு, இளங்கோ தெரு, சிதம்பரம் தெரு ஆகிய இடங்களிலிருந்து வரும் வாகனங்கள் கவுதமா் தெரு, அசோகா் தெரு வழியாக ஜவஹா் சாலை அல்லது மாதவரம் நெடுஞ்சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
மேலும், ரமணா நகா் பிரதான தெருவில் இருந்து ஜவஹா் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக வாகனங்கள், எஸ்.எஸ்.வி.கோவில் சாலை, வீர சாவா்க்கா் தெரு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் பல்வேறு கோணங்களில் விசரணை நடைபெற்று வருகிறது.
- ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருந்ததாக எந்தத் தகவலும் இல்லை.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
கொலை நடந்த 3 மணிநேரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் பல்வேறு கோணங்களில் விசரணை நடைபெற்று வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் பின்னணி இருப்பதாக தெரியவில்லை. ஆம்ஸ்ட்ராங் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.
எந்த இடத்தில் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் அரசியலுக்கு வந்த பிறகு நிறைய பேருடன் முன்விரோதம் இருந்துள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், சதி திட்டம் தீட்டியது யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருந்ததாக எந்தத் தகவலும் இல்லை.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், சதி திட்டம் தீட்டியது யார் ? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் பொன்னை பாலுவுக்கு உள்ள தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பொன்னை பாலு, திருமலை மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேரடியாக அச்சுறுத்தல் இருந்ததாக தகவல் இல்லை.
தேர்தல் நடத்தை விதிக்காக ஆம்ஸ்ட்ராங்கின் கைத்துப்பாக்கி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணையில் கிடைத்துள்ள பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
சென்னையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 4,000 பேர் உள்ளனர். ஜூலை 2023 முதல் ஜூன் 2024 வரை 1,192 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் மீது 7 வழக்குகள் பதியப்பட்டிருந்தன. அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
ஆற்காடு சுரேஷ் கொலைக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா ? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னையில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் கொலை குற்றங்கள் குறைந்தள்ளன. சென்னை மிகவும் பாதுகாப்பாபன நகரமாக உள்ளது,
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரியான துப்பு கிடைத்த பிறகே 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பா.ஜ.க. அரசு 3 சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளது. அந்த சட்டத்தின் வார்த்தை வாயில் வராது.
- இந்தியை நுழைக்க வேண்டும் என்பதற்காக இது போன்று பா.ஜ.க. செய்துள்ளது.
சென்னை:
மத்திய அரசு புதிய 3 குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதனை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அரசியலமைப்புக்கு எதிரான, ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. சட்டத் துறை சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இதற்காக பந்தல் போடப்பட்டு இருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வக்கீல்கள் கலந்து கொள்ளும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. தி.மு.க. சட்டத்துறை நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ தலைமை தாங்கினார். அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிர மணியன், தயாநிதி மாறன் எம்.பி., சட்டத்துறை தலைவர் இரா.விடுதலை, சட்டத்துறை இணை செய லாளர் இ.பரந்தாமன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டத்துறை இணை செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ. வுமான கே.எஸ்.ரவிச்சந்திரன் வரவேற்றார்.
இந்த போராட்டத்தில் ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன், மூத்த பத்திரிகையாளர்கள் இந்து என்.ராம், ஏ.எஸ்.பன்னீர்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேயக் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி., தி.மு.க. சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளர் வழக்கறிஞர் இரா.கிரிராஜன் எம்.பி., மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தை பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பா.ஜ.க. அரசு 3 சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளது. அந்த சட்டத்தின் வார்த்தை வாயில் வராது. இதற்கு தான் ஆதியில் இருந்து இந்தியை நாம் எதிர்த்தோம். அதிகாரத்தில் இருக்கும் யாரும் தங்களை கேள்வி கேட்கக் கூடாது என பா.ஜ.க. நினைக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு இந்நேரம் இந்த சட்ட திருத்தங்களை குப்பை தொட்டியில் வீசி இருக்க வேண்டும்.
சர்வாதிகாரத்தின் தொனியை திணிப்பதுதான் இந்த 3 சட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த சட்டங்களின் பெயரை நீதிமன்றங்களில் உச்சரிக்க வேண்டும்.
இந்தியை நுழைக்க வேண்டும் என்பதற்காக இது போன்று பா.ஜ.க. செய்துள்ளது. இந்த சட்ட திருத்தங்களை எதிர்த்து நியாயமான கருத்து கூறியிருக்க வேண்டியவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. ஆரம்பத்திலேயே ஒன்றிய அரசின் போக்கை கிள்ளி எறிய வேண்டும். சட்டக்குழு இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
உண்ணாவிரதத்தில்முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:-
மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதில் 90 முதல் 95 சதவீதம் வரை பழைய சட்ட திருத்தத்தை தான் கொண்டு வந்துள்ளார்கள். ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, காப்பி அடித்து உள்ளார்கள். இதை சொன்னால் மத்திய அரசு மறுக்கிறது. விவாத்திற்கு தயாராக இருக்கிறார்களா? இது பற்றி பட்டிமன்றமே நடத்தலாம். அதில் பழைய பிரிவு, புதிய பிரிவு குறித்து விவாதிக்கலாம்.
513 பிரிவுகளில் 46 பிரிவுகளில் கை வைத்து இருக்கிறார்கள். பொதுவாக திருத்தம் செய்ய வேண்டும் என்றால் திருத்தம் கொண்டு வரலாம். அதை போல் சட்டத்தை நீக்க வேண்டும் என்றால் நீக்கலாம். ஆனால் புதிய சட்டம் என்று கொண்டு வருகிறார்கள். உதாரணத்திற்கு 302 கொலை குற்றம் என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும். அதை 203-க்கு மாற்றி இருக்கிறார்கள். அதனால் என்னவாகும் என்றால் சட்டத்தில் குழப்பம் வரும். எல்லாரும் மீண்டும் சட்டத்தை படிக்க வேண்டியது வரும். நீதித்துறையில் குழப்பம் ஏற்படும். முதலில் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றால் சட்ட கமிஷனுக்கு அனுப்பியிருக்க வேண்டும். பாராளுமன்ற நிலைக் குழுவில் எல்லாரும் விவாதித்து இருக்க வேண்டும்.
ஆனால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் வெளியேற்றி விட்டு நிறைவேற்றிருக்கிறார்கள். சட்ட கமிஷனிடம் ஆலோசனை நடத்தாதது தவறு. 3 சட்டப்பிரிவுகளை அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றால், இது மோசமான அரசு தானே. தற்போது வந்துள்ள சட்டத்தால் ஜாமின் பெறுவது கடினமாக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஒரு நாளைக்கு 100 ஜாமின் மனுக்கள் வருகிறது. அங்கு போய் எல்லாரும் ஜாமின் வாங்க முடியாது. ஜாமின் கிடைப்பது என்பது சிறிய குற்றத்துக்கு 60 முதல் 90 நாட்கள் வரை ஆகலாம். அதை போல போலீஸ் காவல் முறையிலும் அவர்கள் சட்டத்தால் குழப்பம் ஏற்படும்.
ஒவ்வொரு மாநிலங்களும் புதிய சட்டங்களை எதிர்த்து சட்டசபைகளில் தீர்மானம் கொண்டு வரலாம். அதில் எதை மத்திய அரசு எடுக்கும் என்று சொல்ல முடியாது. மாநிலங்களுக்கு சட்டங்களில் திருத்தம் கொண்டுவர அதிகாரம் உண்டு. ஆனால் மத்திய அரசு அதை ஏற்காது. இந்த சட்டத்தால் மக்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். எனவே, இந்த சட்டத்தை நிறுத்தி வைத்து சட்ட கமிஷனுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இறுதியாக தி.மு.க. துணைப் பொதுச்செய லாளர் ஆ.ராசா எம்.பி, நிறைவுரையாற்றுகிறார்.
- எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- ஆட்சியினால் ஏற்படும் நன்மை, தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படுபவர்தான் அரசர் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
காவல் துறையினரைக் கண்டு ரவுடிகள் அஞ்சி ஓடிய காலம் மாறி, ரவுடிகள் ராஜ்யமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் சட்ட விரோத, சமூக விரோதச் செயல்களுக்கு தி.மு.க. துணைபோய்க் கொண்டிருக்கிறது. கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சி என்பது சமூகவிரோதிகளின் ஆட்சி என்று சொன்னால் அது மிகையாகாது.
அந்த வகையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை, பெரம்பூர், வேணுகோபால சுவாமி தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு இரவு சுமார் 7.00 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கொலைவெறித் தாக்குதலின்போது படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர்கள் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசினைக் கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராக சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதியை, ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவரை மக்கள் நடமாட்டம் மிகுந்த சென்னையின் பிரதான இடத்தில் வெட்டி சாய்க்கும் துணிச்சல் ரவுடிகளுக்கு வந்துவிட்டது என்றால், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு என்பது துளிகூட இல்லை என்பதுதான் அர்த்தம். ஒவ்வொரு முறையும் கொலைகள் நடைபெறும்போது, தனிப்படை அமைப்பதும், ஒரு சிலரை பிடித்து கைது செய்வதும், வாடிக்கையாக இருக்கிறதே தவிர, சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுத்ததாகத் தெரியவில்லை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு போல பல வழக்குகள் பல ஆண்டுகளாக சீரியல் போல ஒடிக் கொண்டிருக்கின்றனவே தவிர, கொலை செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்ததாகத் தெரியவில்லை.
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கொலைக்கு காரணமானவர்கள் அனைவரையும் கைது செய்து, அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
ஆட்சியினால் ஏற்படும் நன்மை, தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப செயல்படுபவர்தான் அரசர் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். ஆனால், கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சி என்பது தீமைகள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. எதையும் ஆராயவில்லை என்பது தெளிவாகிறது. இதிலிருந்தே தி.மு.க எதையும் ஆராயவில்லை என்பது தெளிவாகிறது என்று கூறியுள்ளார்.
- பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திருமலை திட்டம் போட்டு கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஆம்ஸ்ட்ராங்கின் கவனத்தை திசை திருப்பி பின்புறமாக இருந்து இடது பக்கமாக கழுத்தில் கொலையாளிகள் வெட்டியுள்ளனர்.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 8 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் போட்டு கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் வீடு உள்ள பகுதியில் இருக்கும் பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல ஒருவாரமாக நோட்டமிட்டு வந்த திருமலை, ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி தான் கட்டி வரும் வீட்டருகே குறைந்த அளவிலான நண்பர்களுடன் வருவதை நோட்டமிட்டு புன்னை பாலுவுக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும், இதன்பிறகே கொலை அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து என உளவுத்துறையும், குற்றப்புலனாய்வு பிரிவும் 3 முறை எச்சரித்ததாக தகவலும் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் குத்துச்சண்டை தெரிந்தவர் என்பதால் அவரை எவ்வாறு கொலை செய்வது என திட்டமிட்டு கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கின் கவனத்தை திசை திருப்பி பின்புறமாக இருந்து இடது பக்கமாக கழுத்தில் கொலையாளிகள் வெட்டியுள்ளனர். கணுக்காலில் வெட்டி நிலைகுலையச் செய்த பின் சரமாரியாக வெட்டியதில், ஆம்ஸ்ட்ராங்கின் இடது கழுத்தின் மேல் பகுதி, காது, இடது சுண்டு விரல் துண்டானதாக கூறப்படுகிறது.
வெட்டும் போது தடுக்க முயன்றால் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யவும் தயார் நிலையில் இருந்துள்ளனர்.
- நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப கிரிப்டோ கரன்சிகள் வாங்கி வைத்துக்கொள்ளலாம்.
- இணையதளம் மூலம் தன் விவரங்களை பதிவு செய்த அவர், முதலில் சிறிதளவு முதலீடு செய்த தொகைக்கு பெரியளவில் லாபம் கிடைத்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்தவர் 46 வயது நபர். தனியார் நிறுவன ஊழியர். இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி ஒரு குறுந்தகவல் (மெசேஜ்) வந்தது. அதில் ஒரு இணையதள முகவரி கொடுக்கப்பட்டிருந்தது.
அதில், நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப கிரிப்டோ கரன்சிகள் வாங்கி வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் இதன் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும். உங்களுக்கு பணம் தேவைப்படும்போது அதை விற்றால் லாபத்துடன் உங்கள் முதலீட்டு தொகை உங்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை நம்பி அந்த இணையதளம் மூலம் தன் விவரங்களை பதிவு செய்த அவர், முதலில் சிறிதளவு முதலீடு செய்த தொகைக்கு பெரியளவில் லாபம் கிடைத்தது. இதையடுத்து அவர் தன்னிடமிருந்த 66 லட்சத்து, 87 ஆயிரத்து, 500 ரூபாயை அனுப்பினார். ஆனால் அதன்பின் அந்த இணையதள பக்கம் முடங்கியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தன்னை தொடர்பு கொண்ட வாட்ஸ் அப் எண்களை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
- சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் அங்கிருந்த தனது வீட்டை இடித்துவிட்டு புதிதாக 3 மாடிகளை கொண்ட வீட்டை கட்டி வந்தார். தினமும் வீடு கட்டும் இடத்தில் சேர் போட்டு அமர்ந்து தனது ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருப்பார். பின்னர் அயனாவரம் வேணுகோபால் தெருவில் தற்போது வசித்து வந்த வீட்டுக்கு செல்வார்.
நேற்று இரவும் வழக்கம் போல புதிய வீட்டின் கட்டுமான பணிகளை பார்வையிட வந்த போதுதான் மர்ம கும்பலால் அவர் சரமாரியாக வெட்டப்பட்டார். கழுத்தில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த ஆம்ஸ்ட்ராங் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக 8 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. முதலாவதாக அயனாவரம் இல்லத்திற்கு ஆம்ஸ்ட்ராங் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு சடங்குகள் நிறைவு பெற்ற பிறகு பெரம்பூர் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்படுகிறது.
இதன்பின், செம்பியத்தில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு நாளை பிற்பகலுக்கு இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.
இதனிடையே, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார்.
- தாளவாடி பகுதி விவசாயிகள் கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் பயிர் செய்துள்ளனர்.
- யானையால் 1 ஏக்கர் கரும்பு சேதாரம் ஆனது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி பகுதி விவசாயிகள் கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சிக்கள்ளி கிராமத்தில் நேற்று இரவு 11 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் விவசாயி சங்கர் (30) என்பவர் தோட்டத்தில் புகுந்து கரும்பு பயிரை சேதாரம் செய்தது.
இதை கண்ட விவசாயி அக்கம் பக்கத்து விவசாயிகளுடன் யானையை விரட்டினர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை வனப் பகுதியில் விரட்டப்பட்டது. யானையால் 1 ஏக்கர் கரும்பு சேதாரம் ஆனது.
தொடர்ந்து வன விலங்குகள் விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் பெறும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32°-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்
இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.






