என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.
    • சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.

    இந்நிலையில், சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    "மூத்த சிபிஐ-எம் தலைவர் சீதாராம் யெச்சூரியின் மறைவால் ஆழ்ந்த வருத்தம். இந்திய அரசியலில் அவர் ஆற்றிய தாக்கம் என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல்கள். ஓம் சாந்தி!" - ஆளுநர் ரவி.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பள்ளி, கல்லூரி மாணவர்கள் 'கூல் லிப்' எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர்.
    • போதைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் அருகே கூல் லிப் எனப்படும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்பாக பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் கைதானார் ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் 'கூல் லிப்' எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர் என கருத்து தெரிவித்த நீதிபதி, தமிழகத்தில் கூல் லிப் போதைப்பொருளுக்கு தடை விதித்திருந்தாலும் பிற மாநிலங்களில் கூல் லிப் விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய போதைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது என்று வேதனை தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், தற்போது பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் வன்முறைக்கு இத்தகைய போதைப்பொருட்கள் பயன்பாடு முக்கிய காரணம். ஆகவே இத்தகைய போதைப் பொருளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து ஏன் நாடு முழுவதும் தடை செய்யக் கூடாது? என மத்திய , மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    • வேலூரில் வீட்டுப் பணிக்காக சிறைக் கைதியை பயன்படுத்தியதாக டி.ஐ.ஜி. ராஜலட்சுமி மீது புகார்
    • டி.ஐ.ஜி. உள்பட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் என்பவரை வேலூர் சிறைத்துறை பெண் டி.ஐ.ஜி. ராஜலட்சுமி அவரது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதோடு, ரூ.4.5 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை திருடியதாக குற்றம்சாட்டிக் கொடுமைப்படுத்தியதாகவும் சிவகுமாரின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி. உள்பட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    • திருமாவளவன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • மத்தியில் ஆளும் பாஜகவை மதவாத கட்சி என்று மக்கள் நினைக்கவில்லை.

    கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வரலாம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டில் பங்குபெற அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தார்.

    திருமாவளவன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

    திருமாவளவன் குடியை நிறுத்துவதற்கு அழைப்பு விடுக்கிறாரா ? அல்லது புது முடிச்சு போட அழைப்பு விடுக்கிறாரா ? என்று எனக்கு தெரியவில்லை.

    ஆனால், புதிய முடிச்சுக்காததான் அதிமுக, விஜய் கட்சிக்கு எல்லாம் திருமாவளவன் அழைப்பு விடுத்திருக்கிறார். இதில் என்னவென்றால் மதவாத கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க மாட்டாராம்.

    மத்தியில் ஆளும் பாஜகவை மதவாத கட்சி என்று மக்கள் நினைக்கவில்லை. இது அப்பட்டமாக திராவிட முன்னேற்றக் கழகத்தை மிரட்டுவதற்கும், புதிய அணியை திரட்டுவதற்கும் தான் திருமாவளவனின் புதிய யுக்தி என்றுதான் சொல்ல வேண்டும்.

    ஏனென்றால், மது தான் இவர்களது கொள்கை என்றால், ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் என்ன செய்துக் கொண்டிருந்தனர். கள்ளக்குறிச்சி உள்பட போதையால் பல பிரச்சனைகள் நடந்துக் கொண்டிருக்கிறது.

    மதுபோதையில் தான் தமிழகத்தில் அத்தனை பிரச்சனைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. திடீரென திருமாவளவனுக்கு ஒரு ஞானோதயம் வந்திருக்கிறது. இந்த ஞானோதயம் எதற்கு வந்திருக்கிறது என்றால், 2026ம் ஆண்டு எப்படி இருக்கும் என்ற சந்தேகம் வந்ததின் பேரில், ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு மது ஒழிப்பை ஒரு காரணமாக அவர் சொல்கிறார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • முடிவில் மகாவிஷ்ணு பற்றி மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

    சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதாகி இருக்கும் மகாவிஷ்ணுவை காவலில் எடுத்துள்ள போலீசார் நேற்று இரவு 11.30 மணி அளவில் அவரை அழைத்து கொண்டு திருப்பூருக்கு புறப்பட்டுச் சென்றனர். இன்று காலையில் திருப்பூரை சென்றடைந்த போலீசார் முதலில் மகாவிஷ்ணுவிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் திருப்பூர் குளத்து பாளையத்தில் உள்ள மகாவிஷ்ணுவின் பரம்பொருள் 'பவுண் டேசன்' அமைப்பின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    அங்கு பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்கள் செல்போன்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த போலீசார் அதில் இடம்பெற்றுள்ள தகவல்களை திரட்டியுள்ளனர். மகாவிஷ்ணுவின் வங்கி கணக்குகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். பரம்பொருள் பவுண்டேஷனுக்குக்கு யார்-யாரெல்லாம் பணம் அனுப்பியுள்ளனர்? சட்ட விரோதமாக பண பரிமாற்றங்கள் எதுவும் நடைபெற்று உள்ளதா? என்பது பற்றிய தகவல்களையும் போலீசார் திரட்டியுள்ளனர்.

    முன்னணி தொலைக் காட்சியின் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று தனது பேச்சு திறமையை வெளிக் காட்டிய மகாவிஷ்ணு அதனை வைத்தே பிரபலமாக முடிவு செய்தார். இதனை தொடர்ந்து பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பை நிறுவி வெள்ளை உடைக்கு மாறி இருக்கிறார். பின்னர் குறுந்தாடியை வைத்துக் கொண்டு சொற்பொழிவாற்ற தொடங்கினார். இப்படித்தான் மகாவிஷ்ணுவின் சொற்பொழிவு பயணம் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மகாவிஷ்ணு சொற்பொழி வாளராக மாறியது எப்படி? அவரது பின்னணியில் இருப்பவர்கள் யார்? யார்? என்பது பற்றிய விசாரணையையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். சென்னை பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவில் யார் மூலமாக கலந்து கொண்டீர்கள்? அதற்கு யார் யாரையெல்லாம் சந்தித்தீர்கள்? என்பது போன்ற விவரங்களையெல்லாம் கேட்டு போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

    இதன் முடிவில் மகாவிஷ்ணு பற்றி மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மூட்டை, மூட்டையாக குட்கா, புகையிலை பதுக்கல்.
    • முகமது அலிஜின்னாவை போலீசார் கைது செய்தனர்.

    வேளச்சேரி:

    வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி சந்திப்பு அருகே இன்ஸ்பெக்டர் விமல் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பெரிய பையுடன் வந்தார்.

    அவரிடம் சோதனை செய்தபோது பையில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர் அதே பகுதி பெரியார் நகரை சேர்ந்த முகமது அலிஜின்னா (38) என்பது தெரிந்தது.

    இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்று போலீசார் சோதனையிட்டனர். அங்கு மூட்டை, மூட்டையாக குட்கா, புகையிலை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வெளி மாநிலங்களில் இருந்து தடைசெய்யப்பட்ட, புகை யிலை, குட்கா, பான்மசாலா, உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்து பதுக்கி வைத்து வேளச்சேரி, ஆதம்பாக்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு கடந்த ஒரு ஆண்டுக் கும் மேலாக விற்பனை செய்து வந்தது தெரிந்தது.

    இதையடுத்து முகமது அலிஜின்னாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 230 கிலோ குட்கா, புகையிலை பொருட் கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • வேளச்சேரி சாலையில் உள்ள ஐ.ஐ.டி. நுழைவு வாயிலில் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • நுழைவு வாயிலில் இருந்து அழைத்து செல்ல போதிய பஸ் வசதி இல்லை.

    சென்னை:

    சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து செல்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வளாகத்தில் வாகனங்களின் வேகத்தை 20 கி.மீ. ஆக குறைத்துள்ளது.

    அதனை மீறினால் ரூ.10 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. இதை கண்டித்து இன்று வேளச்சேரி சாலையில் உள்ள ஐ.ஐ.டி. நுழைவு வாயிலில் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    நுழைவு வாயிலில் இருந்து அழைத்து செல்ல போதிய பஸ் வசதி இல்லை. மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை பெற்றோர்கள் நேரடியாக பள்ளிக்கு அழைத்து செல்லும் பழைய நடைமுறையே செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

    • தப்பியோடிய பஞ்சாயத்து தலைவியின் கணவர் முருகேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
    • மண் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட டிராக்டர், ஜே.சி.பி எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இருக்கன்துறையை சேர்ந்தவர் முருகன் என்ற முருகேசன் (வயது 45). இவரது மனைவி இந்திரா. இவர் இருக்கன்துறை பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார்.

    இந்நிலையில் முருகேசன் அந்த பகுதியில் உள்ள குளத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்று அள்ளி வந்தார். ஆனால் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிய குளத்தில் மட்டு மல்லாது, அரசு விதிகளை மீறி அந்த குளத்தின் அருகே இருந்த சங்கனேரி குளத்திலும் திருட்டுத்தனமாக அவர் மண் எடுப்பதாக புகார்கள் எழுந்தது.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட குளத்திற்கு சென்று மண்டல துணை தாசில்தார் பாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த குளத்திற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் டிராக்டர் மற்றும் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக மண் அள்ளப்பட்டது உறுதியானது.

    இதனைத்தொடர்ந்து மண்டல துணை தாசில்தார் பாலகிருஷ்ணன் கூடங்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றார்.

    தொடர்ந்து அங்கு மண் திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வள்ளியூர் அருகே உள்ள திருமலாபுரத்தை சேர்ந்த தனராஜ், ஆனந்தகுமார் என்ற 2 டிரைவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். போலீசார் வருவதை கண்டதும் முருகேசன் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து முருகேசன் உள்பட 3 பேர் மீதும் போலீசார் மண் திருட்டு வழக்குப்பதிவு செய்து தனராஜ், ஆனந்த குமார் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய பஞ்சாயத்து தலைவியின் கணவர் முருகேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் மண் கடத்தலில் பயன்படுத்தப்பட்ட டிராக்டர், ஜே.சி.பி எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நிலங்களில் எல்லை கற்கள் நடுவதற்கும், வேலி அமைத்து பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • விரைவில் கோவில் பெயரில் பட்டா பெற்று நிலங்களை பாது காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    வத்திராயிருப்பு:

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மாவட்டம்தோறும் கோவில் நிலங்களை மீட்க தனி வட்டாட்சியர் உள்பட புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டது. அதிகாரிகள் கோவில்களில் ஆய்வு செய்து நிலங்களை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாவூத்து உதயகிரி நாதர் கோவில் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது கோவிலுக்கு சொந்தமாக 349 ஏக்கர் புஞ்சை நிலங்கள், 39 ஏக்கர் நஞ்சை நிலங்கள் கோவில் பரம்பரை அறங்காவலர் காசிகிரி பெயரில் இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு கோவில் பெயரில் நிலங்களை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு தற்போதைய கோவில் அறங்காவலர் ரூபாபாய் சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து 43 பட்டா எண்களில் உள்ள 388 ஏக்கர் நிலங்கள் கோவில் பெயரில் மாற்ற வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். இதையடுத்து தனி வட்டாட்சியர் மாரிமுத்து, நில அளவையர், இந்து சமய அறநிலை யத்துறை ஆய்வாளர் முத்து மணிகண்டன் ஆகியோர் நிலங்களை ஆய்வு செய்து வேறு ஏதேனும் ஆக்கிரமிப்பு உள்ளதா? என விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து அந்த நிலங்களில் எல்லை கற்கள் நடுவதற்கும், வேலி அமைத்து பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து வட்டாட்சியர் மாரிமுத்து கூறுகையில், உதயகிரிநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 388 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு அளவீடு செய்யும் பணி முடிவடைந்து உள்ளது. விரைவில் கோவில் பெயரில் பட்டா பெற்று நிலங்களை பாது காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • குழந்தைகள் வார்டில் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பாளையங்கோட்டை செந்தில் நகரை சேர்ந்தவர் மாரி செல்வம். இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு சந்திரலிங்கம் (வயது 2), சூரியலிங்கம்(2) ஆகிய இரட்டை குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் மாரி செல்வம் இறந்து விட்டார்.

    இதனால் செந்தில்நகரில் உள்ள வாடகை வீட்டில் மஞ்சு தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். நேற்று காலையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த இரட்டை குழந்தைகள் அங்கிருந்த கொசுவர்த்தி சுருளை மிட்டாய் என நினைத்து கடித்து தின்றதாகவும், அதனை அவரது தாயார் மஞ்சு கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்றிரவு குழந்தைகள் 2 பேரையும் மஞ்சு தூங்க வைத்தபோது, அவர்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்கம் போட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சு உடனடியாக குழந்தைகள் 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார்.

    அங்குள்ள குழந்தைகள் வார்டில் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் 2 பேரும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மஞ்சு தனது முதல் கணவரை பிரிந்துவிட்டு, 2-வதாக மாரி செல்வத்தை திருமணம் செய்து கொண்டார். அவரும் சமீபத்தில் இறந்துவிட்டார்.

    இந்த நிலையில் தற்போது குழந்தைகள் விஷம் சாப்பிட்டதாக கூறப்படுவதால் பாளையங்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகாவிஷ்ணுவின் வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
    • பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பை நிறுவி வெள்ளை உடைக்கு மாறி இருக்கிறார்.

    சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதாகி இருக்கும் மகாவிஷ்ணுவை காவலில் எடுத்துள்ள போலீசார், அவரை நேற்று இரவு 11.30 மணி அளவில் அழைத்து கொண்டு திருப்பூருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

    இன்று காலையில் திருப்பூரை சென்றடைந்த போலீசார் முதலில் மகா விஷ்ணுவிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் திருப்பூர் குளத்து பாளையத்தில் உள்ள மகாவிஷ்ணுவின் பரம்பொருள் 'பவுண்டேசன்' அமைப்பின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    காலை 10.30 மணி அளவில் அலுவலகத்துக்குள் சென்ற போலீசார் கதவை மணிக்கணக்கில் பூட்டிக்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த போலீசார் அதில் இடம்பெற்றுள்ள தகவல்களை திரட்டியுள்ளனர். மகாவிஷ்ணுவின் வங்கி கணக்குகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பரம்பொருள் பவுண்டேஷனுக்குக்கு யார்-யாரெல்லாம் பணம் அனுப்பியுள்ளனர்? சட்ட விரோதமாக பண பரிமாற்றங்கள் எதுவும் நடைபெற்று உள்ளதா? என்பது பற்றிய தகவல்களையும் போலீசார் திரட்டியுள்ளனர்.

    முன்னணி தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று தனது பேச்சு திறமையை வெளிக்காட்டிய மகாவிஷ்ணு அதனை வைத்தே பிரபலமாக முடிவு செய்தார். இதனை தொடர்ந்து பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பை நிறுவி வெள்ளை உடைக்கு மாறி இருக்கிறார். பின்னர் குறுந்தாடியை வைத்துக்கொண்டு சொற்பொழிவாற்ற தொடங்கினார்.

    இப்படித்தான் மகாவிஷ்ணுவின் சொற்பொழிவு பயணம் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மகாவிஷ்ணு சொற்பொழிவாளராக மாறியது எப்படி? அவரது பின்னணியில் இருப்பவர்கள் யார்? யார்? என்பது பற்றிய விசாரணையையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    சென்னை பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவில் யார் மூலமாக கலந்து கொண்டீர்கள்? அதற்கு யார் யாரையெல்லாம் சந்தித்தீர்கள்? என்பது போன்ற விவரங்களையெல்லாம் கேட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இந்நிலையில் மகா விஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளையில் இருந்து ஹார்ட் டிஸ்க் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    ×