என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பொங்கல் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது.
    • இன்று ஜனவரி 11-ந் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 14-ந் தேதி கொண்டாடப்பட்டு உள்ளது. இதையொட்டி தொடர்ந்து அரசு விடுமுறை நாட்கள் வருவதால் சொந்த ஊர்களுக்கு செல்ல இப்போதே திட்டமிட்டு ரெயிலில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    ஜனவரி 10-ந் தேதி பயணம் செய்வதற்கு நேற்று முன்தினம் முன்பதிவு தொடங்கியது. சனி, ஞாயிறு அதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை வருவதால் வெளியூர் செல்பவர்களின் ரெயில்களில் 120 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்ய தொடங்கி விட்டனர்.

    பொங்கல் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டன.

    குறிப்பாக சென்னையில் இருந்து செல்லக்கூடிய தென் மாவட்ட ரெயில்களில் உயர் வகுப்பு படுக்கையை தவிர மற்ற இடங்கள் நிரம்பின.

    இந்த நிலையில் இன்று ஜனவரி 11-ந் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆன்லைன் வழியாக பெரும்பாலானவர்கள் உறுதியான டிக்கெட்டை எடுத்தனர். பொங்கலுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக பயணத்திற்கான இடங்கள் நிரம்பி விட்டன.

    நாளை (சனிக்கிழமை) ஜனவரி 12-ந் தேதி பயணத்திற்கான முன்பதிவு நடக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை மற்றும் கோவை மார்க்கமாக செல்லும் எல்லா ரெயில்களிலும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி இடங்கள் எல்லாம் நிரம்பி காத்திருப்போர் பட்டியலுக்கு வந்துவிட்டன.

    நாளை நடக்கும் முன்பதிவு இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொங்கலுக்கு முந்தைய 2 நாட்கள் பயணம் அதிகளவில் இருக்கும் என்பதால் 15, 16-ந் தேதிகளில் டிக்கெட் முன்பதிவு இதைவிட பலமடங்கு உயர வாய்ப்பு உள்ளது.

    • அன்றைய தினம் சிலைகளை கரைப்பதற்கு கடைசி நாள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட 17 வழித்தடங்களின் வழியாக மட்டுமே எடுத்துச் சென்று கரைக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் 1,500 விநாயகர் சிலைகள் கடந்த 7-ந்தேதி பூஜைக்காக வைக்கப்பட்டன.

    இந்த சிலைகளில் ஒரு பகுதி கடந்த 11-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் விநாயகர் சிலைகள் அதிக எண்ணிக்கையில் கரைக்கப்பட உள்ளன.

    நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று 1,300 சிலைகளுடன் பிரமாண்ட ஊர்வலம் நடைபெறுகிறது. அன்றைய தினம் சிலைகளை கரைப்பதற்கு கடைசி நாள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் சென்னை மாநகரில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை மாநகரம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட 17 வழித்தடங்களின் வழியாக மட்டுமே எடுத்துச் சென்று கரைக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • இந்தியா சார்பில் 12 விளையாட்டுகளில் 84 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.
    • மாரியப்பன் நாடு திரும்பினார்.

    சென்னை:

    மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்தது. இந்தியா சார்பில் 12 விளையாட்டுகளில் 84 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டியில் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களை வென்று 18-வது இடத்தை பிடித்தது. தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதலில் (டி.63 பிரிவு) வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இந்த நிலையில் மாரியப்பன் இன்று நாடு திரும்பினார். சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மாரியப்பன், ரியோ ஒலிம்பிக்கில் (2016-ம் ஆண்டு) தங்கமும், டோக்கியோ ஒலிம்பிக்கில் (2020) வெள்ளியும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வெளிமாநில வியாபாரிகள் திருப்பூர் நோக்கி வந்து ஆர்டர் கொடுப்பது அதிகரித்துள்ளது.
    • மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி போன்ற பகுதிகளுக்கு உள்நாட்டு ஆடைகள் அதிகம் தயாரித்து வழங்கப்படுகிறது.

    திருப்பூர்:

    பின்னலாடை நகரான திருப்பூரில் உள்நாட்டு ஆடை தயாரிப்பு தொடங்கி வெளிநாடுகளுக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்த இடத்தை எட்டிப்பிடித்துள்ளது. அன்னிய செலாவணியை அதிகம் ஈட்டிக்கொடுத்து டாலர் சிட்டி என்ற பெருமையுடன் திகழ்கிறது. வெளிநாட்டு ஆடை ஏற்றுமதியால் உலகம் அறிய செய்தாலும் உள்நாட்டு ஆடை வர்த்தகமும் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு ஆடை வர்த்தகம் நடக்கிறது.

    பண்டிகை காலங்களில் உள்நாட்டு ஆடை உற்பத்தி அதிகம் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களுக்கு வெளிமாநிலங்களில் இருந்து திருப்பூர் நோக்கி வியாபாரிகள் வந்து ஆர்டர் கொடுத்து ஆடைகளை பெற்று செல்கிறார்கள்.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வெளிமாநில வியாபாரிகள் திருப்பூர் நோக்கி வந்து ஆர்டர் கொடுப்பது அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு உள்நாட்டு வர்த்தகம் அந்தளவுக்கு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஆர்டர் வருகையை பார்க்கும்போது, கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் திருப்பூர் எப்படி பரபரப்பாக இருந்ததோ அந்த நிலையை எட்டி இருக்கிறது என்று உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி போன்ற பகுதிகளுக்கு உள்நாட்டு ஆடைகள் அதிகம் தயாரித்து வழங்கப்படுகிறது. குறிப்பாக உள்ளாடைகள், பேஷன் ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் அதிகம் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்படுகிறது. உள்ளாடை தயாரிப்பில் திருப்பூருக்கு தனி இடம் உண்டு. பருத்தி ஆடைகளை பெரும்பாலும் தயாரித்து வந்த திருப்பூர் உள்நாட்டு உற்பத்தியாளர்கள், மெல்ல மெல்ல செயற்கை நூலிழை ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு தீவிரம் காட்டி வருகிறார்கள். பாலியஸ்டர் துணிகளில் பல ரகங்கள் உள்ளன.

    தற்போது துணிகளாகவே சந்தையில் விற்பனை செய்யப்படுவதால் துணிகளை வாங்கி ஆடைகளாக தயாரிப்பதற்கு சில நாட்களே ஆகும் நிலை உள்ளது. அந்தளவுக்கு நவீன எந்திரங்கள், கட்டமைப்பு வசதிகள் திருப்பூரில் இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள். பருத்தி துணிகளை தயாரிக்க முன்பெல்லாம், வர்த்தகர்கள் கூறியபடி நூல் எடுத்து அதை நிட்டிங் செய்து, தகுந்த நிறத்துக்கு சாயமேற்றி துணியாக கிடைப்பதற்கு 10 முதல் 15 நாட்கள் ஆகிவிடும். அதன்பிறகு பிரிண்டிங், எம்ப்ராய்டரி, தையல் என ஆடை தயாரிப்பு நடக்கும்.

    ஆனால் தற்போது பாலியெஸ்டர் மற்றும் பருத்தி துணிகளாகவே சந்தையில் எளிதில் கிடைப்பதால் பிரிண்டிங், எம்ப்ராய்டரிங், தையல் என 2 நாட்களுக்குள் ஆர்டர்களை முடிக்கும் அளவுக்கு தொழில்நுட்ப வசதி இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர்கள் வருகை அதிகரித்துள்ளது. உள்நாட்டு ஆடை தயாரிப்புக்கு தகுந்த சூழல் நிலவி வருகிறது. பருத்தி ஆடை தயாரிப்பில் இருந்து செயற்கை நூலிழை ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். பாலியெஸ்டர் துணிகளாகவே விரும்பிய வண்ணங்களில் சந்தையில் கிடைக்கிறது. ஆர்டர் கொடுத்த 2 நாட்களில் ஆடைகளை தயாரித்து அனுப்பும் அளவுக்கு நவீன தொழில்நுட்ப எந்திரங்கள் திருப்பூரில் உள்ளன. அதுபோல் அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இங்கு இருக்கிறது. தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. தேவையான தொழிலாளர்கள் இருந்தால் இன்னும் ஆர்டர்களை தைரியமாக எடுத்து அனுப்பி வைக்க முடியும்.

    சில நிறுவனங்களில் விடுதி அமைத்து தொழிலாளர்களை தங்க வைத்து வேலைக்கு அமர்த்தியுள்ளனர். அவர்களுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை என்ற பிரச்சினை இல்லை. தீபாவளி ஆர்டர்களை ஆயுத பூஜையையொட்டி முடித்து அனுப்பி வைப்போம். தற்போது உள்நாட்டு ஆடை தயாரிப்பு பரபரப்பாக உள்ளது.

    கொரோனாவுக்கு முன்பு திருப்பூர், உள்நாட்டு ஆடை உற்பத்தி எப்படி இருந்ததோ அதுபோன்ற சூழல் இந்த ஆண்டு தென்படுகிறது. தீபாவளி பண்டிகை தொழிலாளர்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் உற்சாகமாக அமையும் என்று நம்புகிறோம். தமிழக அரசு பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க தயாராக உள்ளோம். அரசு எங்களுக்கு உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பூரில் தீபாவளி பண்டிகை ஆர்டர் அதிகரித்து உள்நாட்டு ஆடை தயாரிப்பு வேகமெடுத்துள்ளதால் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    திருப்பூர் பின்னலாடை தொழிலில் 21 மாநிலங்களை சேர்ந்த, 3 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பீகார், ஒடிசா, மேற்குவங்கம், உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர்கள் அதிகம்.

    பின்னலாடை நிறுவனங்களுக்கு, தீபாவளி கால ஆர்டர் என்பது மிகவும் முக்கியம். வடமாநிலங்களில் இருந்து ஆர்டர் பெறப்பட்டு, உற்பத்தி துவங்கியுள்ளது. 3 வாரங்களுக்குள், உள்ளாடைகள், பின்னலாடைகளை உற்பத்தி செய்து அனுப்பி வைக்க திருப்பூர் பரபரப்பாக மாறியுள்ளது.

    இந்நிலையில் பீகார், ஒடிசா மாநிலங்களில் இருந்து தகவல் வந்ததாக கூறி, அம்மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின், பண்டிகைக்கால ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தொழிலாளர் சொந்த ஊர் செல்வதால் உற்பத்தியாளர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர்.

    இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-

    சொந்த மாநிலம் செல்லும் தொழிலாளரிடம் விசாரித்தபோது, ரேஷன் கார்டு பதிவுக்காக செல்வதாக கூறுகின்றனர். பீகார் மற்றும் ஒடிசாவில் விசாரித்தபோது, நிலம் சீரமைப்பு பணி நடக்கிறது என்றும், உரிமையாளர்கள் வரும் 30ந்தேதிக்குள் கையெழுத்திட வேண்டுமென, அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உண்மை நிலையை ஆராய்ந்து வருகிறோம். உற்பத்தி பரபரப்பாக நடக்கும் நேரத்தில், தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது எங்களுக்கு புதிய சவாலாக மாறியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேந்திரன் வாழைத்தார் சுமார் 80 சதவீதம் வரை கேரள வியாபாரிகளால் வாங்கி செல்லப்படுகிறது.
    • இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை கேரள அரசு ரத்து செய்துள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

    இங்கு விளைவிக்கப்படும் நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாளி, ரோபஸ்டா வாழை ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாக நேந்திரன் வாழைத்தார் சுமார் 80 சதவீதம் வரை கேரள வியாபாரிகளால் வாங்கி செல்லப்படுகிறது.

    சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தார்கள், மேட்டுப்பாளையம் நால்ரோடு பகுதியில் செயல்படும் ஏல மையத்துக்கு கொண்டு வரப்பட்டு, ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஆண்டுதோறும் கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இங்குள்ள வாழை விவசாயிகள் நேந்திரன் வாழையை அதிகளவில் பயிரிடுவது வழக்கம்.

    இந்தநிலையில் சமீபத்தில் கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு உயிரிழப்புகளால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை கேரள அரசு ரத்து செய்துள்ளது.

    இதனால் மேட்டுப்பாளையம் ஏல மையங்களுக்கு கேரள வியாபாரிகளின் வருகை வெகுவாக குறைந்து நேந்திரன் வாழைத்தார்கள் தேக்கம் அடைந்துள்ளன.

    இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, வழக்கமாக ஓணம் பண்டிகை காலத்தில் போட்டி போட்டுக்கொண்டு நேந்திரன் வாழைத்தார்களை வாங்கி செல்லும் கேரள வியாபாரிகள் வராததால் வாழைத்தார்கள் தேங்கி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஓணம் பண்டிகை மாதத்தில் ஒரு கிலோ நேந்திரன் வாழைத்தார் ரூ.45 முதல் ரூ.55 வரை விலை போகும்நிலையில், தற்போது கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை மட்டுமே விலை கிடைக்கிறது என்றனர்.

    • ஓணம் பண்டிகையை யொட்டி சிறப்பு ரெயில் அறிவிப்பு.
    • கேரளாவுக்கு 3 சிறப்பு ரெயில்கள்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06161) மறுநாள் காலை 8.30 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

    மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (15-ந்தேதி) மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06163) மறுநாள் மதியம் 1.30 மணிக்கு கண்ணூா் சென்றடையும்.

    மறுமாா்க்கமாக கண்ணூரில் இருந்து திங்கட்கிழமை (16-ந்தேதி) பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    இந்த ரெயில்கள் பெரம்பூா், காட்பாடி, ஜோலாா் பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், பாலக்காடு, ஷொரனூா், திரூா், கோழிக்கோடு, வடகரை வழியாக இயக்கப்படும்.

    சென்னை எழும்பூரில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06160) நாளை காலை 8.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

    இந்த ரெயில் பெரம்பூா், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா் பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா், கொல்லம் வழியாக இயக்கப்படும்.

    இந்த ரெயில் மறுமாா்க்கமாக இயக்கப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய மந்திரி நிதின்கட்கரி கும்பகோணம் ஜெகநாதப்பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    • மத்திய மந்திரி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கும்பகோணம்:

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின்கட்கரி நாக்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து பின்னர் அங்கிருந்து ஹெலிபேட் மூலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கலைக் கல்லூரி மைதானத்திற்கு வந்தார்.

    அவரை மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், சுதா, பா.ஜனதா நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம் ஆகியோரும் வரவேற்றனர்.

    இதையடுத்து மத்திய மந்திரி நிதின்கட்கரி கும்பகோணம் ஜெகநாதப்பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் விக்கிரவாண்டி 4 வழி சாலை பணிகள் முடிந்துள்ள விவரங்களை அறிய தஞ்சாவூரில் இருந்து சோழபுரம் வரையிலான சாலை பணிகளை ஆய்வு செய்தார். அப்போது சாலை பணிகள் முடிந்துள்ள விவரங்கள் உள்ளிட்ட பலவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் சோழபுரத்திலிருந்து சேத்தியாத்தோப்பு பகுதி வரை 4 வழி சாலை திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வுகளை முடித்து கொண்டு திருச்சி சென்று விமானம் மூலம் நாக்பூர் செல்கிறார்.

    மத்திய மந்திரி வருகையை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • வழக்கு விசாரணையின்போது, அப்பாவுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் உள்ளார் என்று கூறப்பட்டது.
    • கோர்ட்டின் மீது தனக்கு மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளது.

    சென்னை:

    சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வில் இணைய தயாராக இருந்ததாகவும் அதை தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.

    இவரது பேச்சு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி சபாநாயகர் அப்பாவு-வுக்கு எதிராக அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, அப்பாவுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் உள்ளார் என்று கூறப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜரானார். அவர், கோர்ட்டு சம்மனை பெற மறுத்து விட்டதாக கூறியது தவறு. தனக்கு கோர்ட்டு சம்மன் ஏதும் வரவில்லை. கோர்ட்டின் மீது தனக்கு மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளது. இதுசம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் சபாநாயகர் அப்பாவு கூறினார்.

    இதையடுத்து வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26-ந்தேதிக்கு நீதிபதி ஜெயவேல் தள்ளிவைத்தார். நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, சென்னையில் இருந்த போதும் சரி, நெல்லை மாவட்டத்தில் சொந்த கிராமத்தில் இருந்த போதும் தனக்கு எந்த சம்மனும் வரவில்லை. சென்னையில் உள்ள வீட்டில் இருந்த காவலர்களிடம் கடிதங்கள் வந்தால் தெரிவிக்கும்படி கூறியிருந்தேன். அங்கேயும் எதுவும் வரவில்லை. இதுகுறித்து கோர்ட்டில் புகார் அளித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

    • சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு.
    • கடற்கரை மின்சார ரெயில் சேவையில் மாற்றம்.

    சென்னை:

    சென்னை ரெயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இரவு 8.25, 8.55, 10.20 மணிக்கும், திருவள்ளூருக்கு இரவு 7.50 மணிக்கும், கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.45 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று மற்றும் திங்கள்கிழமை (16-ந்தேதி) ரத்து செய்யப்படும்.

    கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை மற்றும் செவ்வாய்க்கிழமை (17-ந் தேதி) ரத்து செய்யப்படும்.

    மறுமாா்க்கமாக திருவள்ளூரில் இருந்து இரவு 9.35 மணிக்கும், கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 9.55 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில் இன்று மற்றும் 16-ந் தேதி ரத்து செய்யப்படும்.

    மேலும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூருக்கு இரவு 8.05 மணிக்கு மேல் புறப்படும் ரெயில்கள் அனைத்தும் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும்.

    அதுபோல் கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 10.10, 10.40, 11.15 மணிக்கு வரும் ரெயில்கள் எழும்பூருடன் நிறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • "பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து"-குறள் 978, அதிகாரம் 98.
    • சம்பவத்தை மையமாக வைத்து கனிமொழி எம்.பி. இக்கருத்தை பதிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
    • திருவள்ளூர் பற்றி பேசிய மகா விஷ்ணுவை 250 போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
    • மாற்றுத்திறனாளி ஆசிரியரை மகா விஷ்ணு அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

    சென்னை:

    சென்னை அசோக்நகர் பெண்கள் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் அசோக் நகர் பள்ளிக்கு இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் நேரில் செல்ல இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர். காலை 10.30 மணியளவில் அர்ஜூன் சம்பத் அசோக் நகர் பள்ளிக்கு நேரில் சென்றார்.

    ஆனால் அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து பள்ளிக்கூட வாசலில் வைத்து அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பள்ளி மாணவ-மாணவிகள் மத்தியில் பேசிய மகா விஷ்ணுவை பயங்கரவாதியை போல கைது செய்துள்ளனர். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் நடைபெறும் உபதேசங்களை யாரும் கண்டு கொள்வது இல்லை.

    ஆனால் திருவள்ளூர் பற்றி பேசிய மகா விஷ்ணுவை 250 போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். மாற்றுத்திறனாளி ஆசிரியரை மகா விஷ்ணு அவமதித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

    அசோக்நகர் பள்ளி கல்வியில் சிறந்த பள்ளியாகும். அந்த பள்ளியின் புகழை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அருகில் உள்ள சில தனியார் பள்ளிகள் திட்டம் தீட்டியுள்ளன. மகா விஷ்ணு கைது நடவடிக்கையில் சதி நடந்து உள்ளது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம்.

    அசோக் நகர் பள்ளிக்கு சென்று நடந்தது என்ன? என்பது பற்றி கேட்டறியலாம் என்பதற்காகவே சென்றேன். ஆனால் உள்ளே செல்வதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்ததால் திரும்பி வந்துவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பின்னணியில் அதிகார மையத்தில் இருப்பவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
    • படையப்பா நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அனைத்து வசதிகளுடன் பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், நகரத்திற்கு வெளியே 8.5 கி.மீ தொலைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தனியார் நில வணிக நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தின் மதிப்பை பல கோடி உயர்த்தும் நோக்குடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

    இதன் பின்னணியில் அதிகார மையத்தில் இருப்பவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

    ராசிபுரம் நகர மக்கள் மற்றும் வணிகர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, படையப்பா நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய பேருந்து நிலையத்தை தனியார் நில வணிக நிறுவனத்துக்கு சாதகமாக படையப்பா நகரில் அமைக்க தீர்மானிக்கப்பட்டதன் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட பேரங்கள், நடந்த ஊழல்கள் ஆகியவை குறித்து விரிவான விசாரணை நடத்தவும் அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×