என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மழைகாலங்களிலும் கடல் நீர் சாலை வரை வந்து விடும்.
- ஜே.சி.பி.எந்திரம் மூலம் 2 முறை மணல் அகற்றப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது.
பொன்னேரி:
பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய 2-வது உவர்ப்பு நீர் ஏரி ஆகும். இப்பகுதியை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட மீனவகிராமங்கள் உள்ளன. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பழவேற்காடு பகுதியை சேர்ந்த எண்ணூர் காட்டுப்பள்ளி அதானி துறைமுகம், எல்.என்.டி. துறைமுகம், மற்றும் சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்பவர்கள் பழவேற்காடு- காட்டுப்பள்ளி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
தாங்கல்பெரும்புலம் ஊராட்சிக்குட்பட்ட கருங்காலி பகுதியில் உள்ள இந்த சாலை கடற்கரைக்கு மிக அருகில் உள்ளது.
இதனால் கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் போதும், மழைகாலங்களிலும் கடல் நீர் சாலை வரை வந்து விடும். இதனால் சாலை மணலால் மூடப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை முழுவதும் கடல் நீர் புகுந்து மணலால் மூடியதால் வாகன போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதானி துறைமுகம் சார்பில் ஜே.சி.பி.எந்திரம் மூலம் 2 முறை மணல் அகற்றப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பழவேற்காடு பகுதியில் கடல் அலை சீற்றமாக காணப்படுகிறது. இதனால் கருங்காலி பகுதியில் பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலை சுமார் 1/2 கி.மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் வடிந்து மணலாக நிரம்பி உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள். அவர்கள் மணல் உள்ள பகுதியில் இருசக்கர வாகனங்களை தள்ளிக்கொண்டு செல்கிறார்கள். பெரிய வாகனங்கள் வஞ்சிவாக்கம், காட்டூர், வாயலூர் வழியாக மாற்றுபாதையில் சுற்றி செல்கின்றன.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது கடல் அலை சீற்றத்தின் போது ஒவ்வொரு முறையும் சாலை மணலால் மூடப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். போக்குவரத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.
- பள்ளியில் திடீரென வாயு நெடி வீசியதால், மாணவ- மாணவிகள் அவசரமாக வெளியேற்றம்.
- மயக்கமடைந்த 3 மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதாக புகார் வெளியாகியுள்ளது.
பள்ளியில் திடீரென வாயு நெடி வீசியதால், மாணவ- மாணவிகள் அவசரமாக வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில், மாணவர்கள் சிலர் மயக்கம் அடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயக்கமடைந்த 3 மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு மேலும் 32 மாணவிகள் என மொத்தம் 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளியில் இருந்து மாணவர்களை வெளியேற்றப்பட்டதால், குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளி முன்பு பெற்றோர்கள் குவிந்துள்ளனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அருகே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வாயு வெளியேறியதா ? அல்லது பள்ளியில் உள்ள ஆய்வு கூடத்தில் இருந்து வாயு வெளியேறியதா ? என விசாரணை நடைபெற்று வருகிறது.
- 40 எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக பேசியதாக சபாநாயகர் மீது அவதூறு வழக்கு.
- எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கை ரத்து செய்ய கோரி மனு தாக்கல்.
சபாநாயகர் அப்பாவுக் எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செயலலிதா மரணத்திற்கு பிறகு 40 எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக பேசியதாக சபாநாயகர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
சபாநாயகர் பேச்சு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் வழக்கு தொடர்ந்தார்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பாவு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, "புகார்தாரர் தனிப்பட்ட முறையில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். வழக்கை தாக்கல் செய்ய கட்சி அவருக்கு எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை" என தெரிவித்தார்.
பின்னர், சபநாயகர் அப்பாவு எதிரான அவதூறு வழக்கை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.
- தமிழ்நாடு முழுவதும் 24 ஆயிரத்து 610 முழு நேர ரேஷன் கடைகள், 10 ஆயிரத்து 164 பகுதி நேர ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
- பொதுமக்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை:
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கூட்டுறவுத் துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 24 ஆயிரத்து 610 முழு நேர ரேஷன் கடைகள், 10 ஆயிரத்து 164 பகுதி நேர ரேஷன் கடைகள் என மொத்தம் 34 ஆயிரத்து 774 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் அனைவரும் தீபாவளிப் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மக்கள் ரேஷனில் பொருட்களை பெறும் வகையில் அனைத்து முழு நேர மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகளும் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழுவதுமாக வழக்கம்போல் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
- தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 66 ஏக்கர் பரப்பளவிலான குளம் உள்ளது. கடந்த சில நாட்களாக ஈரோடு, திருப்பூர் மாவட்ட எல்லை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வேமாண்டம் பாளையம் குளத்துக்கு அதிக அளவில் தண்ணீர் வந்தது.
இதனால் வேமாண்டம்பாளையம் குளம் இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பி உபரிநீர் வெளியேறியதுடன், அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் நம்பியூர்-புஞ்சைபுளியம்பட்டி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
மேலும் இரவு கனமழை பெய்தால் சேதம் ஏற்படாமல் இருக்க நம்பியூர் தாசில்தார் ஜாகிர் உசேன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் லோகநாயகி மற்றும் வரப்பாளையம் போலீசார் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- சுப்பையா அவர்களின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
- முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
சென்னை:
முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த சுப்பையா (வயது 57) என்பவர் கடந்த 21.10.2024 அன்று பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (25.10.2024) உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
காவல் உதவி ஆய்வாளர் திரு. சுப்பையா அவர்களின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
காவல் உதவி ஆய்வாளர் சுப்பையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
சென்னை வியாசர்பாடி பணிமனை பேருந்து எண். VYJ 1399, மகாகவி பாரதியார் நகரில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிவந்த ஜெ.ஜெகன் குமார் (பணி எண்.C52200) பயணி ஒருவருடன் ஏற்பட்ட வாய்தகராறின் போது அப்பயணி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நேற்று இரவு உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்த அரசு மாநகரப் பேருந்து நடத்துனர் ஜெகன் குமாரின் குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் பணியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த நடத்துநர் ஜெகன்குமாரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பல மசோதாக்கள் கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
- சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்டத்திற்கும், அமைச்சரவை விதிக்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.
நெல்லை:
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினர்களை நியமிக்க முழு உரிமை உள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக சவிதா ராஜேஷ் நியமிக்கப்பட்டதில் குறையேதும் இல்லை. ஆனால் புதிய உறுப்பினர் சவிதா பல்கலைக்கழக வளாகத்தில் ஏ.பி.வி.பி. மாணவர்களுடன் 'செல்பி' எடுத்து விளம்பரப்படுத்தியது தவறு. பொது நலனில் நடுநிலையுடன் செயல்படவேண்டும்.
இந்த பிரச்சினை தொடர்ந்து வருவதால் தான் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கு முதலமைச்சருக்கு அதிகாரம், அரசிடம் முழுமையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட 10 மசோதாக்கள் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல மசோதாக்கள் கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கவர்னர் திருப்பி அனுப்பும் மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் கவர்னர் அதற்கு அனுமதி தரவேண்டும் என்பது விதி. ஆனால் அவர் சட்டவிதி மற்றும் மரபுபடி நடப்பதில்லை.
சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்டத்திற்கும், அமைச்சரவை விதிக்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். அவர் ஆர்.எஸ்.எஸ். விதிப்படி நடப்பது போல் உள்ளது. கூடங்குளம் அணு உலை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. கூடங்குளம் அணுக்கழிவுகளை என்ன செய்வதென்று தெரியாத நிலை உள்ளது. தொடர்ந்து புற்றுநோய் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடற்கரை பகுதிகளில் இந்த நோய் அதிகரித்து வருகிறது. ராஜஸ்தான் பாலைவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அணுக்கழிவுகளை கொண்டு செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் எரிந்து சேதமானதாக போலீசார் தெரிவித்தனர்.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மூலப்பிள்ளையார் கோவில் வண்டிக்கார தெரு பகுதியில் ஒரு குக்கர் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தேக்ராஜ் (50) என்பவர் நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல நிறுவனத்தில் பணி முடிந்த பின் ஊழியர்கள் மற்றும் மேலாளர் மாதேஸ் ஆகியோர் நிறுவனத்தை பூட்டி விட்டி வீட்டிற்கு சென்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் அந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அந்த பகுதியினர் மேலாளர் மாதேசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த அவர் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், அன்னதானப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
உடனே தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே மளமளவென பரவிய தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சி அளித்ததால் தீயணைப்பு வீரர்கள் அருகில் செல்ல முடியாமல் தவித்தனர் .
தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தூரத்தில் நின்று தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அக்கம் பக்கம் பரவாமல் தடுத்து தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் அந்த நிறுவனத்தில் இருந்த குக்கர் தயாரிக்கும் பல லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் எரிந்து சேதமானதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த நிறுவனம் பாதி அளவு எரிந்து உருக்குலைந்து காட்சி அளித்தது.
மின் கசிவால் இந்த தீ விபத்து நடைபெற்றதாக போலீசார் கூறினர். மேலும் வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இந்தாண்டு பெய்த கோடை மழையில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து ஜூலை மாத இறுதியில் 25.75 அடியை எட்டியது.
- வசிஷ்ட நதி ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.
இந்த அணையால், குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பாளையம், சந்திரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில், 5,011 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீர் ஆதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.
இந்தாண்டு பெய்த கோடை மழையில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து ஜூலை மாத இறுதியில் 25.75 அடியை எட்டியது. அணையில் 35.06 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது. இதனையடுத்து ஆகஸ்ட் மாதத்தில் பெய்த பருவமழையால் ஆகஸ்டு 31-ந் தேதி அணையின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்தது. அணையில் 98 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.
தொடர்ந்து அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான சித்தேரி, குதிமடுவு, பெரியகுட்டி மடுவு, சந்தமலை, அருநூற்றுமலை பகுதியில் இந்த மாதம் பெய்த பருவ மழையால், அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்து, 197 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று மாலை 4:30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தொடர்ந்து 4 மணி நேரம் கன மழை பெய்தது. நேற்று ஒரே நாளில் 15 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தத்தால், அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 65 அடியை எட்டியது.
அணையில் 237 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. அணைக்கு தொடர்ந்து வினாடிக்கு 284 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்று மாலைக்குள் ஆனைமடுவு அணை முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பும் என்பதால் அணை ஆயக்கட்டு பாசன விவசாயிகளும், வசிஷ்ட நதி ஆற்றுப்படுகை கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதே போல ஏத்தாப்பூர், கரியகோவில், வீரகனூர், நத்தக்கரை மற்றும் சேலம் மாநகர் உள்பட பல பகுதிகளிலும் நேற்று கன மழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆனைமடுவில் 153 மி.மீ. மழை கொட்டியது. சேலம் மாநகர் 16.6, ஏற்காடு 1.8, வாழப்பாடி 3.9, ஆத்தூர் 6.2, கெங்கவல்லி 14, ஏத்தாப்பூர் 22, கரியகோவில் 16, வீரகனூர் 29, நத்தக்கரை 11, மேட்டூர் 0.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 276.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
- மூன்றடைப்பு போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
களக்காடு:
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒரு மினி லாரி ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அதனை நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள படலையார்குளம் ஜே.ஜே. நகரை சேர்ந்த சுடலை மகன் மகேஷ் (வயது 20) என்பவர் ஓட்டிச்சென்றார்.
இன்று அதிகாலையில் அந்த மினிலாரி நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு நான்குவழி சாலையில் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் மூன்றடைப்பு பாலத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது எதிரே வந்த மினிலாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பஸ்சின் முன் பகுதி கண்ணாடி உடைந்தது. அதே நேரத்தில், மினிலாரியின் முன்பக்க பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் மினி லாரி டிரைவரான மகேஷ், முதலை குளத்தை சேர்ந்த உசிலவேல் (36) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இடிபாட்டில் சிக்கி உடல் நசுங்கி பலியாகினர்.
தகவல் அறிந்து அங்கு வந்த மூன்றடைப்பு போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று இடிபாட்டில் சிக்கியிருந்த 2 பேரின் உடல்களையும் கடும் போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து காரணமாக ரெயில்வே மேம்பாலத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சம்பவம் நடந்த பகுதியில் ரெயில்வே மேம்பால சாலை பணிகள் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் மட்டும் நான்குவழிச்சாலையின் ஒரு பகுதி அடைக்கப்பட்டு 2 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் தான் விபத்து நடந்துள்ளது.
திருவனந்தபுரத்திற்கு லோடு ஏற்றிக்கொண்டு சென்ற மினி லாரி டிரைவர் சற்று கண் அயர்ந்து இருக்கலாம். அதனால் தான் இந்த விபத்து நடந்திருக்க கூடும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- தி.மு.க. தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம் 11 மணிக்கு நடக்கிறது.
- தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்ககொள்ளப்பட்டுள்ளனர்.
28-ந்தேதி தி.மு.க.வின் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்/ DMK Constituency visitors Consultative Meeting held oct 28தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நியமனம் செய்யப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிப் பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 28.10.2024 (திங்கட்கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
இக்கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாநாட்டிற்கு நாளை ஒரு நாளே உள்ள நிலையில் மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- மாநாடு திடலினுள் பார்வையாளர்கள் வசதிக்காக 300 மொபைல் கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
விழுப்புரம்:
தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். இந்த கட்சியின் முதல் மாநாடு 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. விறுவிறுப்பான ஏற்பாடுகள், தமிழகம் முழுவதும் இருந்து திரளும் தொண்டர்கள் என தமிழக வெற்றிக்கழகம் அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கி வருகிறது.
இந்த அரசியல் மாநாட்டில் தான் விஜய் தனது கட்சியின் கொள்கை குறித்து பேச இருக்கிறார். தான் அறிமுகப்படுத்திய மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நட்சத்திரங்கள், யானை குறியீடுடன் கூடிய கொடி குறித்த விளக்கத்தையும் இந்த மாநாட்டில் தான் விஜய் பேச இருக்கிறார். 2026-ம் ஆண்டு தனது அரசியல் பாதை என்ன? கூட்டணியா, தனித்தா? என்பது குறித்தெல்லாம் இந்த மாநாட்டில் தான் விஜய் தெளிவுபடுத்த இருக்கிறார்.
ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் இன்றைக்கு விக்கிரவாண்டி நோக்கியே திரும்பி நிற்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் விஜய்யின் அரசியல் நடவடிக்கையை உற்று நோக்கியே வருகிறார்கள்.
மாநாட்டிற்கு நாளை ஒரு நாளே உள்ள நிலையில் மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திடலில் தொண்டர்கள் அமர்வதற்கு 75 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டு உள்ளது. 4 பகுதியாக பிரிக்கப்பட்டு இந்த இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
மாநாடு திடலினுள் பார்வையாளர்கள் வசதிக்காக 300 மொபைல் கழிவறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாற்றுதிறனாளிகளுக்காக தனியாக இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மாநாடு மைதானத்தில் தமிழன்னை, சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலை அம்மாள் மற்றும் சேரன், சோழன், பாண்டிய மன்னர்கள், அரசியல் தலைவர்கள் காமராஜர், பெரியார் மற்றும் அம்பேத்கர், கட்சித் தலைவர் விஜய் ஆகியோரது கட் அவுட்கள் மேடையின் இருபுறமும் வைக்கப்பட்டு உள்ளன.
மாநாட்டிற்கு வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் விஜய் ரசிகர்கள் 10 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை மாநாடு திடலில் நடைபெறும் பணிகளை பார்வையிட்ட மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறுகையில், 'தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டில் பங்கேற்பவர்கள் நலனுக்காக கண்காணிப்பு கேமரா, குடிநீர், கழிப்பிடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது. மாநாடு சிறப்பாக நடைபெறும் என்றார்.






