என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சுரங்கப்பாதை மீண்டும் குண்டும் குழியுமாக மாறி விட்டது.
    • நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையிலும் நீர்க்கசிவு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகள் சில ஆண்டுகளாகவே சீரழிந்து வருகிறது. சுரங்கப்பாதைகளில் ஏற்படும் நீர்கசிவு என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இந்த நீர்க்கசிவு காரணமாக சுரங்கப்பாதையில் உள்ள சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்கள் உருவாகி சுரங்கப்பாதை சாலை, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    குறிப்பாக சென்னை தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதை, நுங்கம்பாக்கம் லயோலா சுரங்கப்பாதை, எழும்பூர் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை ஆகியவை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன.

    தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதையில் நீர்க்கசிவு ஏற்பட்டு குண்டும் குழியுமாக காணப்பட்டதால், சில மாதங்களுக்கு முன்பு புதிதாக சாலை அமைக்கப்பட்டது. ஆனால் நீர் கசிவு தடுக்கப்படாததால் தொடர்ந்து கசிவு நீர் பெருக்கெடுத்து ஓடி, சாலை முழுவதையும் அரித்துவிட்டது. இதனால் சுரங்கப்பாதை மீண்டும் குண்டும் குழியுமாக மாறி விட்டது.

    நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையிலும் நீர்க்கசிவு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுரங்கப்பாதை சாலையில் அரிப்பு ஏற்பட்டு சாலை மேடு பள்ளமாக காணப்படுகிறது.

    இந்த 2 சுரங்கப்பாதைகளிலுமே நீர்கசிவு மற்றும் மேடு பள்ளம் காரணமாக அடிக்கடி வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்தை சந்தித்து வருகிறார்கள்.

    இதேபோல் எழும்பூர் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதையின் சாலையும் மிக மோசமான நிலையில் உள்ளது. இங்கும் அவ்வப்போது நீர்க்கசிவால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் சாலையும் மிக மோசமான நிலையில் உள்ளது.

    இந்த சுரங்கப்பாதைகள் சீரழிந்து கிடப்பதால் இந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்வதற்கும் தாமதம் ஆகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் தி.நகர் சுரங்கப்பாதையை கடக்க சுமார் 6 முதல் 10 நிமிடங்கள் ஆகிறது. நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையை கடக்க சுமார் 8 முதல் 10 நிமிடங்கள் ஆகிறது. எழும்பூர் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதையை கடக்க 5 முதல் 8 நிமிடங்கள் ஆகிறது. சாலை குண்டும் குழியுமாக இருப்பதாலேயே இவ்வளவு நேரம் ஆவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    இந்த சுரங்கப்பாதை இருக்கும் பகுதிகளில் நிறைய பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதனால் இந்த சுரங்கப்பாதைகள் வழியாக மாணவர்களை பள்ளிகளுக்கு கொண்டு விடும் பெற்றோர்கள் கடும் சிரமத்தை சந்திக்கிறார்கள்.

    துரைசாமி சுரங்கப்பாதை மேற்கு மாம்பலத்தையும், தி.நகரையும் இணைக்கும் முக்கியமான சுரங்கப்பாதை ஆகும். இங்கு போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரங்களில் கூட அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன. சுரங்கப்பாதையில் பெருக்கெடுத்து ஓடும் கசிவு நீராலும், சாலை மேடு பள்ளமாக இருப்பதாலும் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் நீர்க்கசிவு ஏற்பட்டு, சாலையில் அரிப்பு ஏற்பட்டு மணல் திட்டுக்களும் காணப்படுகின்றன. இந்த மணல் திட்டுக்களில் சிக்கும் இருசக்கர வாகனங்கள் வழுக்கி விழுந்து விபத்தை சந்திக்கின்றன.

    சென்னையில் உள்ள 16 சுரங்கப்பாதைகள் கிட்டத்தட்ட மோசமான நிலையிலேயே காணப்படுகின்றன. ஆதம்பாக்கம் தில்லை கங்காநகர் சுரங்கப்பாதை எப்போதுமே நீர்கசிவுடனும், வழுக்கும் தன்மையுடனும் காணப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை நீர்நிலையில் கட்டப்பட்டுள்ளதால் நீர்க்கசிவு என்பது எப்போதும் ஏற்படுகிறது.

    மேலும் சுரங்கபாதைகளின் பக்கவாட்டு பகுதிகளில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையும் குப்பைகளாக காணப்படுகிறது. அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் முகம் சுழித்தபடியே சுரங்கப்பாதையை கடந்து செல்கிறார்கள். பல சுரங்கப்பாதைகளில் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் குண்டும் குழியுமான சாலையில் சிக்கி விபத்துகள் ஏற்படுகிறது.

    பல சுரங்கப்பாதைகள் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி விடுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த சுரங்கப்பாதைகள் ஆண்டுக்கணக்கில் சீரழிந்து கிடக்கும் நிலையில், அதை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

    எனவே இந்த சுரங்கப்பாதைகளில் நீர்க்கசிவுகள் தடுக்கப்பட்டு சாலைகளில் உள்ள மேடு பள்ளங்கள் எப்போது சீரமைக்கப்படும் என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. இந்த சுரங்கப்பாதைகளை சென்னை மாநகராட்சி விரைவில் சீரமைத்து பாதுகாப்பான வாகன பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது வாகன ஓட்டிகள் அனைவரின் கோரிக்கையாகும்.

    • மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் பயங்கரவாதிகள் போன்று இந்தியர்களை வெளியேற்றியதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • வெளியுறவுத்துறை அமைச்சர் இது நடைமுறையில் உள்ளதுதான் என்கிறார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அமெரிக்கா ராணுவ விமானத்தின் மூலம், இந்தியர்கள் 104 நபர்கள் கைவிலங்குகள் மற்றும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, 40 மணி நேரத்திற்கும் அதிகமாக பயணத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதில் 19 பெண்களும் அடங்குவர். அவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே இருந்துள்ளது. மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் பயங்கரவாதிகள் போன்று இந்தியர்களை வெளியேற்றியதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வெளியுறவுத்துறை அமைச்சர் இது நடைமுறையில் உள்ளதுதான் என்கிறார். கொலம்பியா போன்ற ஒரு சிறிய நாடு, தனது நாட்டின் பிரஜைகளுக்கு துணை நின்று, அமெரிக்கா மீது தனது கோபத்தை காட்டியது. ஆனால், விஸ்வகுரு என்று பாஜகவினரால் பெருமைப்படுத்தப்பட்டு, ஒரு பொய் பிம்பத்தை கட்டி வைத்திருக்கும் பிரதமர் மோடியால் தனது குடிமக்களை அவமானத்திலிருந்து பாதுகாக்க முடியாதா?

    இதற்குதான் இந்திய நாட்டினரின் வரிப்பணத்தில் இருந்து 100 கோடிக்கும் மேல் செலவு செய்து 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியை நடத்தினாரா பிரதமர் மோடி?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • பெரும்பாலும் வைரஸ் தொற்றால்தான் ஜி.பி.எஸ். நோய் ஏற்படுகிறது.
    • சமீபத்தில் புனேவில் இந்நோயினால் 150 பேர் பாதிக்கப்பட்டனர்.

    ஜி.பி.எஸ். என்ற நோயினால் தமிழகத்தில் திருவள்ளூரை சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சிறுவன் முதலில் நடப்பதற்கு சிரமப்பட்டதால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வேறு ஏதும் அறிகுறி தெரியாததால் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அது ஜி.பி.எஸ். நோய் என்று கண்டுபிடித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் கடந்த 31-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தான்.

    அவனுக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் நோய் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவனது வீட்டுக்கு அருகே சுகாதாரத்துறை முகாமிட்டு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டது. அதில், அந்தப் பகுதியில் அச்சுறுத்தும் வகையிலான நோய் பரவல் இல்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்தது. இருந்தபோதிலும், சுகாதாரமற்ற நீா், உணவில் ஜி.பி.எஸ். நோயை பரப்பும் பாக்டீரியாக்கள் காணப்படுவதால் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனா்.

    இதுகுறித்து அச்சிறுவனுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர்கள் கூறியதாவது:-

    இது நரம்பு மண்டலத்தை பாதித்து நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயால் பாதிக்கப்படுபவர்கள் முதலில் நடக்க சிரமப்படுவார்கள் உடலில் சோர்வும் இருக்கும். இந்த அறிகுறி இருப்பவர்கள் உடனே அருகிலுள்ள மருத்துவர்களை அணுகுவது நல்லது.

    இது அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடிய நோயாக இருந்தாலும் அதிகமாக இது ஆண்களையே பாதிக்கிறது. ஆனாலும் இதுகுறித்து அச்சப்பட வேண்டாம். ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் இதை குணப்படுத்தி விடலாம்.

    இந்த நோய் அரிதாகவே சிலரை தாக்குகிறது. பெரும்பாலும் வைரஸ் தொற்றால்தான் இந்த நோய் ஏற்படுகிறது. சமீபத்தில் புனேவில் இந்நோயினால் 150 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் குடித்த குடிநீர் மற்றும் உணவு முலம் இந்நோய் தொற்று பரவுவதாக ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் சி.ஜெஜூனி வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதான் இந்நோய்க்கு முக்கிய காரணியாக உள்ளது.

    இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.

    இது தொடா்பாக பொது நல மருத்துவ நிபுணா் பரூக் அப்துல்லா கூறியதாவது:-

    ஜி.பி.எஸ். பாதிப்பு ஏற்பட்டால் தொடக்கத்தில் உள்ளங்கை மற்றும் பாதத்தில் ஊசி குத்தியது போன்ற வலியும், மந்தமான உணா்வும் ஏற்படலாம். நாளடைவில் தசைகள் தளா்ந்து நடக்க முடியாமலும், கைகளை அசைக்க இயலாமலும் பக்கவாத நிலை உருவாகக் கூடும்.

    ஜி.பி.எஸ். நோய்க்கு பல்வேறு பாக்டீரியாக்கள், வைரஸ்கள் காரணமாக இருந்தாலும், கேம்பைலோபாக்டா் ஜேஜுனி என்ற பாக்டீரியாவால்தான் 35 சதவீத பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வகை பாக்டீரியா முறையாக சமைக்கப்படாத இறைச்சி, கொதிக்க வைக்கப்படாத பால் ஆகியவற்றில் அதிகம் காணப்படுகிறது. எனவே, பாலை நன்றாக கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். அதேபோன்று இறைச்சியை குறைந்தது 70 டிகிரி செல்சியஸ் கொதிநிலையில் வேக வைப்பது அவசியம்.

    அடிக்கடி கைகளை கழுவுவதையும், அசைவ உணவுகள் சூடாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

    புனேவிலும், கொல்கத்தாவிலும் ஏற்பட்ட பாதிப்புக்கு தண்ணீரில் கலந்திருந்த 'கேம்பைலோபாக்டா் ஜேஜுனி' பாக்டீரியாதான் காரணம் எனக் கூறப்படுகிறது.

    இந்த பாக்டீரியவானது 10,000 பேரில் ஒருவருக்கு ஜி.பி.எஸ். நோயை ஏற்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு பெரும்பாலானோருக்கு தானாகவே குணமாகிவிடும்.

    குழந்தைகள், எதிர்ப்பாற்றல் குறைந்தவா்கள், முதியவா்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்படலாம். அவா்களுக்கு எதிா்ப்பாற்றல் எதிா்வினை ஏற்பட்டு நரம்புகளின் வெளிப்புறத்தை கிருமிகள் தாக்கக்கூடும். இதற்கு 'மாலிக்யூலாா் மிமிக்ரி' எனப் பெயா்.

    இவ்வாறு எதிா்வினை பாதிப்பால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போது வாத நோய் ஏற்படுகிறது. மூச்சு விடுவதற்கு தேவையான தசைகளும் தளா்ச்சி அடைவதால் சுவாச செயலிழப்பு ஏற்படுகிறது.அத்தகைய நிலையை எட்டுவோருக்கு மட்டுமே தீவிர சிகிச்சை அவசியம். மற்றவா்கள் அச்சப்படத்தேவையில்லை. விழிப்புணா்வு இருந்தால் போதுமானது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அனைத்து நாடுகளின் அரசு அலுவலர்கள் உள்பட சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.
    • பல தொழிலாளர்கள் சிறைப்பட வேண்டிய கொடுமைகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை:

    புலம்பெயர்வு குறித்த ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சர்வதேச ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளின் கலந்தாய்வுக் கூட்டம் ஐக்கிய நாடுகள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் கடந்த 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை ஐக்கிய நாடுகள் மன்ற அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் தலைவரும், கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவருமான பொன்குமார் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    தொழிலாளர்கள் தரமான வேலை, நல்ல சம்பளம் என்ற நோக்கோடு பல்வேறு நாடுகளுக்கு ஆண்டாண்டு காலமாக வேலைக்கு புலம் பெயர்ந்து சென்று வருகின்றனர். இவர்கள் வேலையோ, உறுதி அளிக்கப்பட்ட சம்பளமோ கிடைக்காமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

    அவர்களுடைய பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை அந்த நாட்டு முதலாளிகள் பறிமுதல் செய்து கொள்வதால் விரும்பிய நேரத்தில் அவர்களால் தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர். செய்த வேலைக்கு உரிய சம்பளமும் கிடைப்பதில்லை. அந்த நாட்டின் சட்ட திட்டங்களை அறியாத காரணத்தினால் பல தொழிலாளர்கள் சிறைப்பட வேண்டிய கொடுமைகள் நடைபெற்று வருகின்றன.

    இப்படி வெளிநாட்டில் உள்ள தமிழர்களை பாதுகாப்பதற்காக ஒரு வாரியத்தை அமைத்து பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.10 லட்சத்து 700 கோடி தொழிலாளர்கள் மூலம் அந்நிய செலவாணியாக இந்த அரசு பெற்றுள்ளது. ஆனால் இந்த அரசு இப்படிப்பட்ட வெளிநாடுகளில் பாதிக்கும் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

    இவ்வாறு பொன்குமார் கூறினார்.

    நிகழ்ச்சியில் புலம் பெயர்வோருக்காக பணியாற்றக் கூடிய தொழிற்சங்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆசியா, பசிபிக் சேர்ந்த அனைத்து நாடுகளின் அரசு அலுவலர்கள் உள்பட சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

    • அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
    • கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது

    அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கையில் மோசடி நடப்பதாக ஊடகங்களில் பேட்டியளித்த, மதுரையைச் சேர்ந்த வட்டச் செயலாளர் உதயகுமாரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அதிமுக கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த

    உதயகுமார். (15 கிழக்கு வட்டக் கழகச் செயலாளர்)

    இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

    கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • ஒரிஜினல் ரூபாய் நோட்டிற்கும் அதற்கும் வித்தியாசம் தெரியாத வகையில் டம்மி நோட்டுகள் காணப்பட்டன.
    • அதிகாரிகள் பணம் எண்ணும் எந்திரங்கள் மூலம் எண்ணினார்கள்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் கட்டுமான தொழில் செய்து வந்த யாகூப் என்பவர் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகளும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள். தொழில் அதிபர் யாகூப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

    வீட்டில் இருந்த பீரோவில் ரூ.50 லட்சம் ரொக்கப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது வீட்டில் ரூபாய் நோட்டு கட்டுகள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தது. கட்டுகட்டாக இருந்த ரூபாய் நோட்டுகளையும் கைப்பற்றி பார்த்த போது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்தது.

    ரூபாய் நோட்டுகளை போலவே டம்மியான நோட்டுகள் அச்சடித்து கட்டுகட்டாக வைக்கப்பட்டு இருந்தது. அவை அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகளை போல அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    ஒரிஜினல் ரூபாய் நோட்டிற்கும் அதற்கும் வித்தியாசம் தெரியாத வகையில் டம்மி நோட்டுகள் காணப்பட்டன. அதனை அதிகாரிகள் பணம் எண்ணும் எந்திரங்கள் மூலம் எண்ணினார்கள். ரூ.9 கோடிக்கு போலி ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது.

    இது அதிகாரிகளுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

    ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளோடு போலி நோட்டுகளை சேர்த்து புழக்கத்தில் விட வைத்திருந்தாரா? கட்டுமான தொழில் ரீதியாக பிறருக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்கு இதுபோன்ற டம்மி நோட்டுகளை சேர்த்து வைத்திருந்தாரா? எதற்காக போலி நோட்டுகள் தயாரித்து வைத்திருந்தார் என்று அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    • தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியும் இதுதான்.
    • குழு அமைப்பது என்பது போகாத ஊருக்கு வழி தேடுவது போல் உள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண் 309-ல் "ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு 'புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்' என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் இப்போது பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு திட்டம், மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவை குறித்து ஆராய குழு அமைப்பது என்பதே அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயல்.

    மேற்படி மூன்று திட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் அரசு ஊழியர்களின் கோரிக்கை. தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியும் இதுதான். இந்த நிலையில், குழு அமைப்பது என்பது போகாத ஊருக்கு வழி தேடுவது போல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சுற்றுசுவர் அமைக்க பள்ளம்தோண்டிய போது சுமார் 3 அடி ஒரு அங்குலம் உயரம் கொண்ட ஜம்பொன் அம்மன் சிலை கிடைத்தது.
    • கோவில் வளாகத்தில் இன்று மீண்டும் ஏதாவது சிலை உள்ளதா என தோண்டி பார்க்க உள்ளனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மருதூர் தெற்கில் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கடந்த ஒரு ஆண்டாக கோவில் புதுபித்து கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அங்கு பணியாளர் சுற்றுசுவர் அமைக்க பள்ளம்தோண்டிய போது சுமார் 3 அடி ஒரு அங்குலம் உயரம் கொண்ட ஜம்பொன் அம்மன் சிலை கிடைத்தது.

    இது குறித்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிந்து அங்கு ஒன்று கூடி சிலையை எடுத்து அபிஷேகம் செய்து கோவில் வளாகத்தில் வைத்து உள்ளனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் வருவாய்துறையினர் வந்து சிலையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் கோவில் நிர்வாக அலுவலர் சக்தி கணேசன், எழுத்தர் கார்த்தி, மற்றும் வாய்மேடு போலீசார், வருவாய் துறையினர் கோவில் வளாகத்தில் இன்று மீண்டும் ஏதாவது சிலை உள்ளதா என தோண்டி பார்க்க உள்ளனர்.

    • பொதுத்தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வருகிற 13-ந் தேதி நடத்தப்பட உள்ளது.
    • துறை சார்ந்த இயக்குநர்கள், முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

    தமிழகத்தில் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. தற்போது இதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்தப் பொதுத்தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வருகிற 13-ந் தேதி நடத்தப்பட உள்ளது. இதில் துறை சார்ந்த இயக்குநர்கள், முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் பொதுத்தேர்வை சிறந்த முறையில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காதபடி நடத்தி முடிப்பதற்கான செயல்பாடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளன என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

    • மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை கண்காட்சியும் நடைபெற இருக்கிறது.
    • ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.

    ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்" எனும் மாபெரும் கருத்தரங்கம் வரும் 9-ந் தேதி திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கினை மண் காப்போம் இயக்கத்துடன் பி.எஸ்.என்.ஏ கல்லூரி மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி இணைந்து நடத்துகிறது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவையில் நடைபெற்றது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் கூறியதாவது:-

    தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்தோடும் விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் மண்வளத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தோடும் கடந்த 20 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

    இதுவரை தமிழகம் முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நேரடியாக இயற்கை விவசாய களப்பயிற்சி வழங்கியதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர்களுக்கு இயற்கை விவசாயம் சார்ந்த வழிகாட்டுதல்களை வாட்ஸ்-அப் குழுக்கள் மூலமாகவும் நேரடியாக அவர்களின் நிலங்களுக்கு சென்றும் வழங்கி வருகிறது. இதன் மூலம் 10,000 விவசாயிகள் இதுவரை இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறார்கள்.

    தற்போதைய சூழ்நிலையில், விவசாயிகள் ஒரே ஒரு பயிரை மட்டுமே நம்பி விவசாயம் செய்வதால், போதுமான விளைச்சலும், விளைச்சலுக்கு ஏற்ற விலையும் கிடைக்காமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள்.

    இதற்கு தீர்வாக ஈஷா மண் காப்போம் இயக்கம் "ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்" என்ற மாபெரும் கருத்தரங்கை திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ கல்லூரி மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கியுடன் இணைந்து வரும் 9-ந் தேதி நடத்த உள்ளது. இதில் 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

    இக்கருத்தரங்கில் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் ஒவ்வொரு நாளும் வருமானம் பெறுவது எப்படி என்பது குறித்த தங்களின் அனுபவங்களையும் ஒருங்கிணைந்த பண்ணை அமைக்க அரசு சார்பில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்தும் முன்னோடி விவசாயிகள் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

    குறிப்பாக ஆடு, மாடு, கோழி, வாத்து மற்றும் பயிர்கள் வளர்த்து வருடத்திற்கு 12 லட்சம் வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயி துளசிதாஸ், சிறுவிடை கோழிகள் மூலம் வருடத்திற்கு 12 லட்சம் வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயி அண்ணாதுரை, மீன் வளர்ப்பில் 30 வருட அனுபவம் கொண்ட சர்மஸ்த், ஆடு வளர்ப்பில் மாதம் 1 லட்சம் ஈட்டும் எம்.ஆர்.கே பண்ணை கௌதம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையில் கீரை சாகுபடி மூலம் சாதித்து வரும் கோவையை சேர்ந்த முன்னோடி விவசாயி கந்தசாமி உள்ளிட்டோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்களை பகிர உள்ளனர்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் நல்ல வருமானம் பெற முடியும் என்பதை விவசாயிகளுக்கு உணர்த்தும் விதமாக ஆடு, மாடு, கோழி, வாத்து, மீன் ஆகியவைகளை உள்ளடக்கிய 'மாதிரி ஒருங்கிணைந்த பண்ணை' ஒன்றை நிகழ்ச்சி நடைபெறும் கல்லூரி வளாகத்திலேயே அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதனுடன் விதைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சியும் நடைபெற இருக்கிறது."

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும்.
    • குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 8-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

    குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ரேசன் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.

    பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

    நாளை (வெள்ளிக்கிழமை), பிப். 8 (சனிக்கிழமை) மற்றும் 9-ந்தேதி (ஞாயிறுக்கிழமை) வார விடுமுறை நாட்கள். முகூர்த்தம் மற்றும் தை பூசத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களி்ல இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) அன்று 380 பஸ்கள் இயக்கப்படும்.

    8-ந் தேதி (சனிக்கிழமை) 530 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை வெள்ளிக்கிழமை அன்று 60 பஸ்களும் பிப். 8 சனிக்கிழமை அன்று 60 பஸ்களும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து நாளை 20 பஸ்களும் 8-ந் தேதி அன்று 20 பஸ்களும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 11,336 பயணிகளும் சனிக்கிழமை 634 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8,864 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×