என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது நிகழ்ந்த வன்முறையால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
    • கவர்னர் கைலாஷ்நாதன் சுதந்திரத்துக்கு பாடுபட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    புதுச்சேரி:

    கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது நிகழ்ந்த வன்முறையால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆகஸ்டு 14-ந் தேதி பிரிவினை கொடுமைகளின் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

    இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள மேரி கட்டிடத்தில் பிரிவினை கொடுமைகளின் நினைவு தினம் கலைப்பண்பாட்டு துறை சார்பில் அனுசரிக்கப்பட்டது.

    இதில் கவர்னர் கைலாஷ்நாதன் கலந்துகொண்டு, பிரிவினையின்போது நடந்த கலவரத்தின் புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் சுதந்திரத்துக்கு பாடுபட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். அப்போது அவரை தியாகிகள் சந்தித்து, தங்களுக்கு வழங்கப்படும் ரூ.12 ஆயிரம் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். தங்களது வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதனை கேட்ட கவர்னர் கைலாஷ்நாதன் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.15 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் உங்களுக்கு உயர்த்திய உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.

    • பவுன்சர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சாஷன் மதுரை மேலூரை சேர்ந்தவர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.

    சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக புதுச்சேரி அரசு ரெஸ்டோபார்களுக்கு அனுமதியளித்துள்ளது. இந்த மதுபார்களில் மது அருந்தி விட்டு இசைக்கு ஏற்ப நடனம் ஆடலாம். இது கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் ஈர்த்து உள்ளது.

    இந்த ரெஸ்டோ பார்களில் குத்தாட்டம் போடுவதற்கென்றே பிற மாநில கல்லூரி மாணவர்கள், ஐ.டி. ஊழியர்களும் அதிகளவில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரியில் குவிகின்றனர்.

    இந்த ரெஸ்டோ பார்களால் புதுச்சேரியில் கலாச்சாரம் பாதிக்கப்படு கிறது என எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், ஏற்கனவே வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சென்னை தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மோஷிக் சண்முக பிரியன் (வயது21), சாஷன்(21) உள்பட சுமார் 15 மாணவர்கள் ஒரு மாணவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக புதுச்சேரிக்கு வந்தனர். அவர்கள் புதுச்சேரி மிஷன் வீதி, முத்து மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள தனியார் ரெஸ்டோபாரில் நேற்று இரவு மது அருந்தி குத்தாட்டம் போட்டனர்.

    ரெஸ்டோபார் நேரத்தை தாண்டி அவர்கள் தொடர்ந்து குத்தாட்டம் ஆடி, அட்டகாசம் செய்தனர். அவர்களை பவுன்சர்கள் மற்றும் பார் ஊழியர்கள் ரெஸ்டோபாரை மூடும் நேரம் வந்து விட்டது வெளியே செல்லுங்கள் என்று கூறினர். அதனை கேட்காமல் மாணவர்கள் மது போதையில் தொடர்ந்து குத்தாட்டம் ஆடிக்கொண்டே இருந்தனர்.

    இதனால் பார் ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பவுன்சர்கள் மற்றும் பார் ஊழியர்கள் மாணவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். வெளியே சென்ற மாணவர்கள் சிறிது நேரத்தில் மீண்டும் ரெஸ்டோ பாருக்கு திரும்பி வந்தனர். எங்களை ஏன் வெளியேற்றினீர்கள். எங்களை உள்ளே அனுமதியுங்கள். எங்களுக்கு மது வேண்டும் என்று கேட்டு தகராறு செய்தனர். அப்போது பார் உரிமையாளர் ராஜ்குமார், பவுன்சர்கள் மற்றும் பார் ஊழியர்கள் மாணவர்களை ரெஸ்டோ பாரை மூடிவிட்டோம் வெளியே செல்லுங்கள் என்று கூறினர்.

    அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர்கள் பார் உரிமையாளர் ராஜ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த ரெஸ்டோபார் பவுன்சர்கள் மற்றும் ஊழியர்கள் மாணவர்களை வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக வெளியேற்றினர்.

    அப்போது பவுன்சர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஆத்திரமடைந்த பார் சர்வீஸ் கேப்டன் கிச்சனுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து 2 மாணவர்களை பயங்கரமாக கத்தியால் குத்தினார்.

    இதில் கல்லூரி மாணவர்கள் மோஷிக் சண்முக பிரியன், சாஷன் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் ரெஸ்டோ பாரை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர்.

    இதுகுறித்து உடனடியாக பெரியகடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து ரெஸ்டோபாரில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த 2 மாணவர்களை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, மாணவர் மோஷிக் சண்முக பிரியன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மற்றொரு மாணவர் சாஷன் அபாய கட்டத்தில் உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்த மாணவர் மோஷிக் சண்முக பிரியன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சாஷன் மதுரை மேலூரை சேர்ந்தவர்.

    இன்று காலை டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் தலைமையிலான போலீசார் ரெஸ்டோபாரை பார்வையிட்டனர். பின்னர் சி.சி.டி.வி. கார்டு டிஸ்க்கை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். பார் உரிமையாளர் ராஜ்குமார் அங்கு பணிபுரிந்த பவுன்சர்கள் மற்றும் பார் ஊழியர்கள் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கல்லூரி மாணவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். புதுச்சேரி ரெஸ்டோ பாரில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • ஊழியர்கள் கூட்டுப் போராட்டக் குழு மூலம் 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது.
    • தொழிற்சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை பி.ஆர்.டி.சி.யில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் ஒப்பந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரியும், நிரந்தர ஊழியர்கள் 7-வது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தியும் கடந்த 28-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால் இன்று 12-வது நாளாக பஸ்கள் ஓடவில்லை. இதனால் புதுச்சேரியை சுற்றி உள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதற்கிடையே, ஊழியர்கள் கூட்டுப் போராட்டக் குழு மூலம் 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த நிர்வாகம் முன் வந்தது. இதனை எழுத்து பூர்வமாக உறுதிமொழியாக அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என, போராட்ட குழு தெரிவித்தனர்.

    இந்த நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும் என பி.ஆர்.டி.சி. நிர்வாகம் எச்சரித்தது.

    இந்த நிலையில் புதுவை சட்டமன்றத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் சிவா, நேரு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் தொழிற்சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் ஒப்பந்த ஊழியர்களுக்கான சம்பளத்தை ரூ.10 ஆயிரம் உயர்த்துவதாகவும், நிரந்தர ஊழியர்களுக்கு அகவிலைப்படியை படிப்படியாக உயர்த்தி தருவதாகவும் உறுதி அளித்தார்.

    இதனையடுத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

    இன்று மாலை முதல் பஸ்களை இயக்குவதாக கூறி முதலமைச்சர் ரங்கசாமியிடம் தெரிவித்து சென்றனர். முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தையில் பி.ஆர்.டி.சி மேலாண் இயக்குனர் சிவக்குமார் இருந்தார்.

    • வெட்டப்பட்ட நாயின் கால்களை அங்கு உயிரோடு இருக்கும் நாய்களும், பூனை குட்டிகளும் கடித்து கொண்டு இருந்தது.
    • அசோக் ராஜ், ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை நேதாஜி சாலை ரெயில் நிலையத்தையொட்டி, மூங்கில் பொருட்கள் விற்பனை செய்து கொண்டு ஒரு குடும்பம் பல வருடங்களாக பிளாட் பாரத்தில் வசித்து வருகின்றனர்.

    அவர்களுடன் நாய், பூனை குட்டிகள் வசிப்பது வழக்கம். இந்த நிலையில் காலை 8.30 மணி அளவில் வாய்ஸ் பார் வாய்ஸ்லெஸ் தலைவர் அசோக்ராஜ் அந்த பக்கமாக சென்றார்.

    அப்போது அவர்கள் மாமிசத்தை வெட்டி கொண்டு இருந்தனர். சந்தேகம் அடைந்த அவர் சோதனை செய்ததில் அது நாய் குட்டிகளின் மாமிசம் என்பது உறுதியானது. வெட்டப்பட்ட நாயின் கால்களை அங்கு உயிரோடு இருக்கும் நாய்களும், பூனை குட்டிகளும் கடித்து கொண்டு இருந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அசோக் ராஜ், ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த மாமிசத்தை கைப்பற்றி, அவர்களை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    நகர பகுதியில் அவ்வப்போது நாய், பூனை குட்டிகள் காணாமல் போவதாக வாய்ஸ் பார் வாய்ஸ்லெஸ்க்கு தகவல் வந்த நிலையில், கையும் களவுமாக அவர்கள் பிடிபட்டது அதை உறுதி செய்கிறது. மேலும் இவர்கள் இந்த நாய், பூனை மாமிசத்தை தாங்கள் உண்ண சமைத்தார்களா, இல்லை பொது மக்களுக்கும் விற்பனை செய்கிறார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஆணவ படுகொலை விவகாரங்களில் திருமாவளவன் பதுங்குகிறார்.
    • தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல் துறையினரே கொலை செய்யப்படுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வந்த முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமியிடம் தங்களின் ஆசி தனக்கு அரசியலிலும் தேவை என தெரிவித்தார். இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி, அவருக்கு வாழ்த்து கூறினார்.

    பின்னர் முன்னாள் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் மற்றும் புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே வருகிற 2026-ம் ஆண்டில் பயணிக்கும். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற சில வழிமுறைகள் உள்ளது. நடைமுறை என்னவோ அதையொட்டி மத்திய அரசு செயலாற்றும்.

    தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுவேன் என கூறும் திருமாவளவன் போன்றோர், ஆணவ கொலைகளை அனுமதித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான கண்டனத்தை கூறுகிறார்களே தவிர, ஆட்சியின் மீது கடுமையான விமர்சனம் வைக்க தயங்குகின்றனர்.

    ஆணவ கொலைகள் தடுக்கப்பட வேண்டும். சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலிமையாக இவர்கள் சொல்வதில்லை. ஆணவ படுகொலை விவகாரங்களில் திருமாவளவன் பதுங்குகிறார்.

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல் துறையினரே கொலை செய்யப்படுகின்றனர். போலீஸ் நிலையத்தில் ஒரு தற்கொலை நடந்துள்ளது மிகவும் வேதனையாக உள்ளது. தமிழகத்தில் விளம்பர அரசியல் தான் நடக்கிறது.

    வளர்ச்சியடைந்த பாரதம் என்ற மத்திய அரசு திட்டத்தின் காப்பி தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம். கடந்த 4 ½ ஆண்டுகளாக தமிழக ஆட்சியாளர்கள் மக்கள் குறையை தீர்க்காமல், கேட்காமல் என்ன செய்தார்கள்.? என மக்கள் கேள்வி கேட்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊழியர்களின் குறைந்தபட்ச ஊழியத்தை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
    • போராட்டத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்த சம்பளத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 28-ந் தேதி முதல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து பி.ஆர்.டி.சி. மேலாண் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்த நிலையில் எழுத்துப் பூர்வமான உறுதிமொழி கடிதம் கேட்டனர். ஆனால் நிர்வாகம் தரப்பில் உறுதிமொழி கடிதம் வழங்காததால் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 11-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது.

    இந்தநிலையில் போரட்டத்தில் ஈடுபட்டு வரும் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் சிவக்குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:-

    புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக விதிகளின்படி குறைந்தபட்ச ஊதிய கொள்கைளை முறையாக அமல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊழியத்தை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிநிரந்தரம் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு எதிராக கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

    கடந்த 28-ந் தேதியில் இருந்து 11 நாட்களாக ஒப்பந்த விதிகளை மீறி தொடர்ந்து சட்ட விரோதமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தின் ஒப்பந்த உடன்படிக்கை மற்றும் கொள்கையின்படி, முன் அனுமதியின்றி தொடர்ந்து 8 நாட்களுக்கு மேல் பணிக்கு வராத ஊழியர்களின் மீது பணி நீக்கம் போன்ற ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். மீறினால் 'எஸ்மா' (அத்தியாவசிய சேவை பராமரிப்பு சட்டம்) எந்த முன்னறிவிப்பு இன்றி பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார். எனவே விரைவில் அவர்கள் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் போன்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
    • சிலைகளை அழகுபடுத்துவதற்கு எளிதில் நீக்கக்கூடிய அலங்கார ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாசுக் கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நமது முன்னோர்கள், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வண்ணம் தீட்டாத, களிமண் சிலைகளை வைத்து பூஜை செய்து நீர்நிலைகளில் கரைத்தனர். இதனால், நீர் நிலை மாசுபடவில்லை. தற்போது, வண்ணம் தீட்டிய சிலைகளை வைத்து வழிப்பட்டு, கரைப்பதால் நீர்நிலைகள் மாசடைகிறது.

    இதனை தவிர்க்க விரிவான நெறிமுறைகளை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ளது. சுற்று சூழலுக்கு நலம் பயக்க, விநாயகர் சிலை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இயற்கையான மூலப்பொருட்களான களிமண் மற்றும் மண் போன்றவற்றால் செய்ய வேண்டும். சிலைகளை மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

    பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் போன்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது. சிலைகள் தயாரிக்க நச்சு மற்றும் எளிதில் மக்காத ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணப் பூச்சுக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சிலைகளை அழகுபடுத்துவதற்கு எளிதில் நீக்கக்கூடிய அலங்கார ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.

    விநாயகர் சிலைகளை தயாரிப்பவர்கள், உள்ளாட்சி துறைகளான நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் முன்பதிவு செய்ய வேண்டும். பிரசாதங்கள் வழங்க வாழை இல்லை, ஆலம் மற்றும் சால் இலைகள், மக்கும் காகித கோப்பைகள், தட்டுகள் மற்றும் மண் தட்டுகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

    பூக்கள், இலைகள், உடைகள் மற்றும் காகிதத்தால் செய்யப்பட்ட அலங்கார பொருட்கள் மற்றும் மக்கும் பொருட்கள் போன்ற வழிபாட்டு பொருட்களை, சிலைகளை நீர்நிலைகளில் விடுவதற்கு முன்பாக அகற்றப்பட்டு, சிலைகளை கரைக்க ஒதுக்கப்பட்ட இடங்களில் வைத்து, வண்ண குறியிடப்பட்ட தொட்டிகளில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை பிரித்து போட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • ரெயில் சேவை தஞ்சாவூர் முதல் காரைக்கால் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே புதுச்சேரி-விழுப்புரம் இடையே தினசரி காலை இயக்கப்படும் மெமு ரெயி்ல்கள் ஏற்கனவே வருகிற 5-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேலும் ஒரு வாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி விழுப்புரம்-புதுச்சேரிக்கு தினமும் காலை 5.25 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில் (வண்டி எண்:66063) வருகிற 6-ந் தேதி முதல் வருகிற 12-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கமாக புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு தினமும் காலை 8.05 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில் (வண்டி எண்:66064) வருகிற 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு தினமும் காலை 6.35 இயக்கப்படும் ரெயில் (வண்டி எண்:66051) வருகிற 10, 12-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மட்டும் 15 நிமிடங்கள் காலதாமதமாக புதுச்சேரி வந்தடையும்.

    திருச்சி-காரைக்காலுக்கு காலை 8.35 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (வண்டி எண்:76820) வருகிற 4-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயில் சேவை தஞ்சாவூர் முதல் காரைக்கால் வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல் காரைக்கால்-திருச்சிக்கு மதியம் 2.55 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (வண்டி எண்:76819) காரைக்காலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக தஞ்சாவூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில் சேவை காரைக்கால்-தஞ்சாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • த.வெ.க. கட்சி கொடியை ஆழ்கடலில் ஏந்தி தனது ஆதரவை வெளிப்படுத்தினார், He expressed his support by carrying TVK party flag into sea.
    • அரியாங்குப்பம் கடற்கரையில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் வரை ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் உதவியுடன் சென்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரியாங் குப்பத்தை சேர்ந்தவர் சரண் கல்லூரி மாணவர். நடிகர் விஜயின் தீவிர ரசிகரான இவர் த.வெ.க. கட்சியின் தொண்டராக இருந்து வருகிறார்.

    இவர் த.வெ.க. கட்சி கொடியை ஆழ்கடலில் ஏந்தி தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

    அரியாங்குப்பம் கடற்கரையில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் வரை ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் உதவியுடன் சென்றார். பின்னர் ஆழ்கடலுக்குள் த.வெ.க. கொடியை அசைத்து தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

    • பேராசிரியை பெயரில் சட்ட விரோத பணம் மற்றும் தகவல் பரிமாற்ற மோசடி கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
    • பல்வேறு பண மோசடி குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதால், சைபர் கிரைமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பெரிய காலாப்பட்டு தனியார் நர்சிங் கல்லுாரியில் பணியாற்றி வரும் பேராசிரியை ஒருவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் டெல்லி தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய அதிகாரி போல் பேசினார்.

    அதில், பேராசிரியை பெயரில் சட்ட விரோத பணம் மற்றும் தகவல் பரிமாற்ற மோசடி கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி போலீசார் தொடர்பு கொள்வர் என கூறினார்.

    இதையடுத்து, சிறிது நேரத்தில் பேராசிரியையிடம் தொடர்பு கொண்ட மற்றொரு மர்மநபர் டெல்லி போலீஸ் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

    அதில், பேராசிரியைக்கு மகாராஷ்டிரா முன்னாள் மந்திரி ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் பல்வேறு பண மோசடி குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதால், சைபர் கிரைமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    அந்த வழக்கில் இருந்து விடுவிக்க பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதை நம்பிய பேராசிரியை ரூ.9 லட்சத்து 69 ஆயிரத்து 362-ஐ மர்மநபருக்கு அனுப்பினார்.

    அதன் பிறகு சிலரிடம் பேராசிரியை விசாரித்தபோது பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்தார். இதையடுத்து பேராசிரியை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • ஏற்கனவே நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்த 3 பேர் ராஜினாமா செய்தனர்.
    • இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் புதிதாக 3 பேரை நியமனம் செய்து அறிவித்துள்ளது.

    புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்த ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ஆகியோர் ராஜினாமா செய்ய பாஜக உத்தரவிட்ட நிலையில், அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் புதிய நியமன எம்.பி.க்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    பாஜக மூத்த நிர்வாகி செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், காரைக்காலைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர். வரும் 15ஆம் தேதி சட்டப்பேரவையில் இவர்கள் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர்கள், சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகி வருகின்றனர்.
    • புதுவை அரசின் குரூப்-'சி' பணியை பொருத்தவரை வயது தளர்வு அளிக்க கூடிய அதிகாரம் கவர்னருக்கு மட்டுமே உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு துறைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நேரடி நியமனங்கள் செய்யப்படவில்லை.

    என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு துணை தாசில்தார், மருந்தாளுநர், சுகாதார உதவியாளர், வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நேரடியாக நிரப்ப விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டன. ஆனால் எந்த அறிவிப்பிலும் வயது வரம்பு தளர்வு அறிவிக்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர்கள், சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகி வருகின்றனர்.

    இதேபோல் சுகாதார துறையின் மருந்தாளுநர் பதவிக்கு வயது வரம்பில் தளர்வு கேட்டு சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. பல ஆண்டுகளாக புதுவையில் அரசு வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், ஒருமுறை வாய்ப்பாக வயது தளர்வு தர வேண்டும்.

    ஆன்லைனில் மட்டுமல்லாமல் நேரடியாக விண்ணப்பத்தை பெற்று எங்களை நேரடி நியமனத்திற்கான போட்டி தேர்வினை அனுமதிக்க வேண்டும் என, மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த வழக்கு, கடந்த 1-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் ஞானசேகரன் ஆஜரானார்.

    அப்போது கடந்த 10 ஆண்டுகளாக அரசு பணிக்கு நேரடி நியமனம் நடத்தப்படாத நிலையில், இவர்களுடைய கோரிக்கையை ஏன் பரிசீலனை செய்யக்கூடாது? இந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அரசு வக்கீல் அந்த மனுக்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் இந்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ள சூழ்நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிவித்தனர். அதை கேட்ட நீதிபதிகள், மனுதாரர்களின் கோரிக்கையை 2 வாரத்திற்குள் கவர்னர் பரிசீலனை செய்து, உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என, உத்தரவிட்டு, வழக்கை வருகிற 28-ந் தேதி ஒத்தி வைத்தனர்.

    புதுவை அரசின் குரூப்-'சி' பணியை பொருத்தவரை வயது தளர்வு அளிக்க கூடிய அதிகாரம் கவர்னருக்கு மட்டுமே உள்ளது. எனவே தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பிக்காமல், கவர்னர் 2 வாரத்திற்குள் முடிவெடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    ×