என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • ஒருநாள் போட்டிகளுக்கு இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு.
    • முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றனர்.

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அந்த அணியுடன் டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணை கேப்டனாக சூர்யா குமார் யாதவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒருநாள் தொடரில் இந்திய அணி வேகப்பந்து பிரிவில் முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றனர். 


    இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் ஜனவரி 10ந் தேதி நடைபெறுகிறது. கொல்கத்தாவில் ஜனவரி 12ந் தேதி 2வது ஒருநாள் போட்டியும், திருவனந்தபுரத்தில் ஜனவரி 15ந் தேதி 3வது ஒருநாள் போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி விபரம் வருமாறு: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீப்பர்), இஷான் கிஷன் (வி.கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்.), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப். யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

    • முதல் டி20 போட்டி ஜனவரி 3-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.
    • இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டார்.

    மும்பை:

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி 20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி ஜனவரி 3-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வங்காள தேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரின்போது இடது கை விரலில் காயம் அடைந்தார். அவர் காயத்தில் இருந்து குணமடைய சில நாட்கள் ஆகலாம் என்று தெரிகிறது.

    இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமனம் செய்து பிசிசிஐ அறிவித்துள்ளது.

    டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் வருமாறு:

    ஹரதிக் பாண்ட்யா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷண், ருத்ராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, முகேஷ் குமார்.

    • வீர சாவர்க்கரை தேசத்தந்தை என்று பா.ஜனதாவினர் பேசுவதில்லை.
    • சுதந்திர இயக்கத்தில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு எந்த பங்கும் இல்லை

    மும்பை :

    துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், " எங்களை பொருத்தவரை நாட்டிற்கு 2 தேசத்தந்தை உள்ளனர். மகாத்மா காந்தி பண்டைய இந்தியாவின் தேசத்தந்தை, புதிய இந்தியாவின் தேசத்தந்தை பிரதமர் மோடி" என்று தெரிவித்தார். இவரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியும், காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியும் கடுமையான எதிர்ப்புகளை முன்வைத்தனர்.

    இந்த நிலையில் அம்ருதா பட்னாவிஸ் கருத்து குறித்து உத்தவ் பாலாசாகேப் சிவசேனா அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வீர சாவர்க்கரை தேசத்தந்தை என்று பா.ஜனதாவினர் யாரும் பேசுவதில்லை. கடுமையான சிறைவாசம் அனுபவித்த வீர சாவர்க்கரை எப்போதும் ஆர்.எஸ்.எஸ். எதிர்த்துள்ளது. இப்போது இவர்கள் இந்தியாவை பழைய இந்தியா, புதிய இந்தியா என்று பிரிக்கிறார்கள்.

    பிரதமர் நரேந்திர மோடியை புதிய இந்தியாவின் தந்தை என்று கூறிய அம்ருதா பட்னாவிசின் கருத்தை பா.ஜனதா ஏற்றுக்கொள்கிறதா? சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தால் பெற்ற சுதந்திரத்தை பா.ஜனதா அங்கீகரிக்கவில்லையா?

    இன்று புதிய இந்தியாவில் பசி, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், பயங்கரவாதம் என்ற பூதங்கள் தலை தூக்கி உள்ளன. எனவே பிரதமர் மோடியை புதிய இந்தியாவின் தந்தையாக்குவது அவரை அவமதிக்கும் செயலாகும்.

    மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற பட்டம் இந்திய மக்களால் வழங்கப்பட்டது. தேசத்தின் தந்தை யார் என்பது இங்கு பிரச்சினை இல்லை. சுதந்திர போராட்டத்தில் பா.ஜனதாவின் பங்களிப்பு என்ன என்பது தான் கேள்வி.

    சுதந்திர இயக்கத்தில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு எந்த பங்கும் இல்லை. எனவே அவர்கள் சர்தார் வல்லபாய் படேல் மற்றும் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் போன்ற காங்கிரசுடன் தொடர்புடைய தலைவர்களை திருடுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடிகை தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    • இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டிருந்தார்

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரபல தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மா (வயது 20), திடீரென மரணம் அடைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    வசாய் பகுதியில் இன்று நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்ற அவர், மேக்கப் அறைக்கு சென்றார். பின்னர் அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர் தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெறுகிறது.

    நடிகை துனிஷா வரும் 4-ம் தேதி தனது 21-வது பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இறந்த சம்பவம் ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அலிபாபா தாஸ்தென்- இ- காபுல் என்ற தொடரில் துனிஷா சர்மா கதாநாயகியாக நடித்து வருகிறார். அவரை சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பின்தொடர்கின்றனர். இன்று படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் போடப்படும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்ததார். அதுதான் அவர் வெளியிட்ட கடைசி பதிவாகும்.

    • சந்திரசேகர் பவன்குலே நில பரிவர்த்தனை தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
    • அதன்பிறகு தான் நாங்கள் அந்த பிரச்சினையை கையில் எடுத்தோம்.

    மும்பை :

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, கடந்த உத்தவ் தாக்கரே ஆட்சியின் போது மந்திரியாக இருந்த போது நாக்பூரில் குடிசைப்பகுதி மக்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை குறைந்த விலைக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்த பிரச்சினையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நில மோசடியை அம்பலப்படுத்தியது பா.ஜனதா தான் என உத்தவ் பாலாசாகேப் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், " முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நில மோசடியை அம்பலப்படுத்தியது பா.ஜனதா கட்சி தான். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர் பவன்குலே, பிரவீன் தட்கே, நாகோ கானர் நாக்பூர் நில பரிவர்த்தனை தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதன்பிறகு தான் நாங்கள் அந்த பிரச்சினையை கையில் எடுத்தோம்.

    துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் ஆதரவாளர்களான பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டேயை அம்பலப்படுத்த விரும்பியது தெளிவாக தெரிகிறது.

    நான் பா.ஜனதா மாநில தலைவராக இருக்கும் போது தேவேந்திர பட்னாவிசை முதல்-மந்திரியாக பார்க்க விரும்புகிறேன் என சந்திரசேகர் பவன்குலே கூறிய மறுநாளே நாக்பூர் நில மோசடி அம்பலமாகி உள்ளது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நிலமோசடியை திசைத்திருப்ப திஷா சலியன் மரணம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    விரைவில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யிடம் புகார் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகாராஷ்டிராவில் ஆண்- பெண் விகிதம் கடுமையான வித்தியாசத்தில் உள்ளது.
    • ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

    புனே :

    மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி இளைஞர்கள் பலர் திருமண வேடத்தில் குதிரையில் கம்பீரமாக ஊர்வலம் சென்றனர். பேண்டு வாத்தியங்கள் முழங்கியபடி, ஆட்டம் பாட்டத்துடன் அவர்கள் சென்றனர்.

    இந்த ஆர்ப்பரிப்பை பார்த்த பலர், கலெக்டர் அலுவலகத்தில் ஏதோ கூட்டு திருமண விழா நடக்கப்போவதாக நினைத்துவிட்டனர். ஆனால் அவர்கள் நூதன போராட்டம் செய்தது பின்னர் தான் தெரியவந்தது.

    ஊர்வலகத்தின் போது திருமண உடையில் குதிரையில் மிடுக்காக சென்றாலும், கலெக்டர் அலுவலகம் சென்றதும் அவர்களது முகத்தில் கவலை தொற்றி கொண்டது. கலெக்டரை சந்தித்த அவர்கள், திருமண வயதை கடந்தும் தங்களுக்கு மணப்பெண்கள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும் தங்களுக்கு அரசே மணப்பெண்கள் பார்த்து தர வேண்டும் என்ற நூதன கோரிக்கை மனுவையும் அவரிடம் கொடுத்தனர்.

    இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்த ஜோதி கிராந்தி பரிஷத் அமைப்பின் நிறுவன தலைவர் ரமேஷ் பரஸ்கர் கூறியதாவது:-

    எங்களது ஊர்வலத்தை பார்த்து மக்கள் கேலி செய்யலாம். ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால் மகாராஷ்டிராவில் ஆண்- பெண் விகிதம் கடுமையான வித்தியாசத்தில் உள்ளது. ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

    இதனால் திருமண வயதை அடைந்த பிறகும் இளைஞர்களுக்கு மணப்பெண்கள் கிடைப்பதில்லை. பெண் சிசுக்கொலைகள் தான் இந்த பாலின வித்தியாசத்துக்கு முக்கிய காரணம். இந்த ஏற்றத்தாழ்வுக்கு அரசே பொறுப்பு. கருவில் பாலினம் கண்டறியும் தடுப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்து அரசை வலியுறுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மகாராஷ்டிராவில் தற்போது பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 889 பெண்கள் என்ற அடிப்படையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • நமது நாட்டிற்கு தேசத்தந்தை என்றால் அது மகாத்மா காந்தி.
    • புதிய இந்தியாவின் தந்தை என்றால் அது பிரதமர் மோடி என்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநில துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ். அம்மாநிலத்தில் மிகவும் பிரபலமான இவர் பல்வேறு விழாக்களில் அதிகம் கலந்துகொள்வார்.

    இந்நிலையில், துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்நாவிஸ், நமது நாட்டிற்கு இரு தேசத் தந்தைகள் இருக்கிறார்கள் என கூறினார்.

    மேலும், நமது நாட்டிற்கு தேசத்தந்தை என்றால் அது மகாத்மா காந்தி. அதேபோல், புதிய இந்தியாவின் தந்தை என்றால் அது நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி என இந்தியாவுக்கு 2 தேசத்தந்தைகள் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

    • 2047-க்குள் இந்தியா வல்லரசாக உருவாக வேண்டும்.
    • இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது.

    மும்பை :

    பால விகாஸ் பரிஷத் அமைப்பின் நிறுவனர் சூரஜ் பிரகாஷின் நூற்றாண்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

    இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியர்களாகிய நாம் நமது தலையை மெருமிதத்தால் நிமிர்த்திக் கொண்டுள்ளோம். முன்பு நம்மை சீண்டுவார் இல்லை. இன்று நாம் ஜி20 மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறோம்.

    இப்போது அறிவுறுத்தியது போல் முன்பு ரஷியாவிடம் போர் தொடுக்க வேண்டாம் என்று கூறியிருந்தால் அவர்கள் நம்மை அசட்டை செய்திருப்பார்கள். (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி 'போர் தொடுப்பதற்கான காலம் இது அல்ல' என ரஷிய அதிபர் புதினிடம் நேரடியாக தெரிவித்திருந்தார்).

    இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில் நாம் அடைந்த வெற்றிகளை நாமே வியந்து பார்க்கிறோம். 2047-க்குள் இந்தியா வல்லரசாக உருவாக வேண்டும். அதற்கான பாதையை வகுத்து இந்தியா முன்னேறும் என்று நான் நம்புகிறேன்.

    ஆனால் வளர்ச்சிப் பாதையில் செல்லும்போது பிற நாடுகளை பின்பற்றக் கூடாது. அப்படி பின்பற்றினால் நம்மால் வளர இயலாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 196 ரன்களை குவித்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 142 ரன்களில் சுருண்டது.

    மும்பை:

    இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா பெண்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. கார்ட்னர் 32 பந்தில் 66 ரன்னும், கிரேஸ் ஹாரிஸ் 35 பந்தில் 64 ரன்னும் குவித்தனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்து அசத்தியது.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி களமிறங்கியது. தீப்தி ஷர்மா மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 53 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 142 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது.

    ஆஸ்திரேலியாவின் ஹீதர் கிரஹாம் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி விருது அஷீக் கார்ட்னருக்கு வழங்கப்பட்டது.

    • நான் ஒரு தாய், மக்களின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன்.
    • எனக்கு வாக்களித்தவர்களுக்காக கேள்விகளை எழுப்பி பதில்களை பெறுவதற்காக நான் அவைக்கு வந்துள்ளேன்.

    நாக்பூர்:

    மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில், உறுப்பினர்களுக்காக புதிய செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாசிக் மாவட்ட பகுதியை சேர்ந்தவரான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏ. சரோஜ் ஆஹிர் என்பவர், பிறந்து இரண்டரை மாதமே ஆன தனது கைக்குழந்தையுடன் அவைக்கு வருகை தந்துள்ளார்.

    இதுபற்றி ஆஹிர் கூறும்போது, நான் ஒரு தாய். மக்களின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன். கொரோனா பெருந்தொற்றால் இரண்டரை ஆண்டுகளாக நாக்பூரில் சட்டசபை கூட்டத்தொடர் எதுவும் நடைபெறவில்லை.

    நான் தற்போது தாயாகி இருக்கிறேன். ஆனால், எனக்கு வாக்களித்தவர்களுக்காக கேள்விகளை எழுப்பி பதில்களை பெறுவதற்காக நான் அவைக்கு வந்துள்ளேன் என அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதன் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தி பேசினார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏ.வான சரோஜ் ஆஹிருக்கு கடந்த செப்டம்பர் 30-ந்தேதி குழந்தை பிறந்தது. அவையில் பங்கேற்பதற்கு முன்பு,  முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை அவர் நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார்.

    • மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் லாரி தனியார் பஸ் மீது பின்பக்கமாக மோதியது.
    • மோதிய வேகத்தில் பஸ் டிரைவர் முன்பக்கமாக கீழே விழுந்து கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் இருந்து ஷாபூருக்கு தனியார் பஸ்சில் திருமண விழாவுக்காக 35 பேர் சென்று கொண்டிருந்தனர். மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டெய்னர் லாரி தனியார் பஸ் மீது பின்பக்கமாக மோதியது.

    மோதிய வேகத்தில் பஸ் டிரைவர் முன்பக்கமாக கீழே விழுந்து கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பஸ்சில் பயணித்த 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அருகில் இருந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • ஐ.என்.எஸ். மொர்முகோவ் போர்க்கப்பல் கடற்படையில் இணைந்தது.
    • இந்த கப்பலில் உள்ள உபகரணங்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டவை.

    மும்பைக் கடற்படைத் தளத்தில் இன்று மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐ.என்.எஸ். மொர்முகோவ் என்ற போர்க்கப்பல், இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. இதன் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள 2-வது போர் கப்பல் என்ற பெருமையை அது பெற்றது. 


    விழாவில் பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளதாவது: இந்தக் கப்பல் இந்தியக் கடற்படையின் திறன்களை மேம்படுத்துவதுடன், கடல் பாதுகாப்பை உறுதி செய்யும். தொழில்நுட்ப ரீதியிலான அதிநவீன ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் வல்லமை கொண்டது.  இதில் இடம்பெற்றுள்ள 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட உபகரணங்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டவை. இந்திய ராணுவம் தற்சார்பு நிலையை அடைவதற்கு இது உதாரணம். 


    இந்தியக் கடற்படை, கடல்சார் பாதுகாப்பைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், சமூக, பொருளாதார வளர்ச்சியிலும் பங்காற்றுகிறது. இந்திய கடல் பிராந்தியத்தைப் பாதுகாப்பதே, இந்தியக் கடற்படையின் முக்கிய இலக்கு. இந்திய பொருளாதார வளர்ச்சி கடல் மார்க்கமாக அதிகரிக்கும் வர்த்தகத்தைச் சார்ந்தே இருக்கிறது.

    எல்லைப்பகுதிகளையும், கடலோரப் பகுதிகளையும் பாதுகாக்கும் ஆயுதப்படையினர், தங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடியப் பங்களிப்பின் மூலம், இந்தியாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொள்ள நாடு தயாராக இருக்கிறது. ராணுவத்தில் பெரும்பாலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைக் கொண்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    ×