என் மலர்
நீங்கள் தேடியது "உத்தவ் பாலாசாகேப் சிவசேனா"
- வீர சாவர்க்கரை தேசத்தந்தை என்று பா.ஜனதாவினர் பேசுவதில்லை.
- சுதந்திர இயக்கத்தில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு எந்த பங்கும் இல்லை
மும்பை :
துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், " எங்களை பொருத்தவரை நாட்டிற்கு 2 தேசத்தந்தை உள்ளனர். மகாத்மா காந்தி பண்டைய இந்தியாவின் தேசத்தந்தை, புதிய இந்தியாவின் தேசத்தந்தை பிரதமர் மோடி" என்று தெரிவித்தார். இவரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியும், காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியும் கடுமையான எதிர்ப்புகளை முன்வைத்தனர்.
இந்த நிலையில் அம்ருதா பட்னாவிஸ் கருத்து குறித்து உத்தவ் பாலாசாகேப் சிவசேனா அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
வீர சாவர்க்கரை தேசத்தந்தை என்று பா.ஜனதாவினர் யாரும் பேசுவதில்லை. கடுமையான சிறைவாசம் அனுபவித்த வீர சாவர்க்கரை எப்போதும் ஆர்.எஸ்.எஸ். எதிர்த்துள்ளது. இப்போது இவர்கள் இந்தியாவை பழைய இந்தியா, புதிய இந்தியா என்று பிரிக்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடியை புதிய இந்தியாவின் தந்தை என்று கூறிய அம்ருதா பட்னாவிசின் கருத்தை பா.ஜனதா ஏற்றுக்கொள்கிறதா? சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தால் பெற்ற சுதந்திரத்தை பா.ஜனதா அங்கீகரிக்கவில்லையா?
இன்று புதிய இந்தியாவில் பசி, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், பயங்கரவாதம் என்ற பூதங்கள் தலை தூக்கி உள்ளன. எனவே பிரதமர் மோடியை புதிய இந்தியாவின் தந்தையாக்குவது அவரை அவமதிக்கும் செயலாகும்.
மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற பட்டம் இந்திய மக்களால் வழங்கப்பட்டது. தேசத்தின் தந்தை யார் என்பது இங்கு பிரச்சினை இல்லை. சுதந்திர போராட்டத்தில் பா.ஜனதாவின் பங்களிப்பு என்ன என்பது தான் கேள்வி.
சுதந்திர இயக்கத்தில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு எந்த பங்கும் இல்லை. எனவே அவர்கள் சர்தார் வல்லபாய் படேல் மற்றும் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் போன்ற காங்கிரசுடன் தொடர்புடைய தலைவர்களை திருடுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






