search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஏக்நாத் ஷிண்டே தொடர்பான நில மோசடியை பா.ஜனதா தான் அம்பலப்படுத்தியது: சஞ்சய் ராவத்
    X

    ஏக்நாத் ஷிண்டே தொடர்பான நில மோசடியை பா.ஜனதா தான் அம்பலப்படுத்தியது: சஞ்சய் ராவத்

    • சந்திரசேகர் பவன்குலே நில பரிவர்த்தனை தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
    • அதன்பிறகு தான் நாங்கள் அந்த பிரச்சினையை கையில் எடுத்தோம்.

    மும்பை :

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, கடந்த உத்தவ் தாக்கரே ஆட்சியின் போது மந்திரியாக இருந்த போது நாக்பூரில் குடிசைப்பகுதி மக்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை குறைந்த விலைக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்த பிரச்சினையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நில மோசடியை அம்பலப்படுத்தியது பா.ஜனதா தான் என உத்தவ் பாலாசாகேப் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், " முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நில மோசடியை அம்பலப்படுத்தியது பா.ஜனதா கட்சி தான். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர் பவன்குலே, பிரவீன் தட்கே, நாகோ கானர் நாக்பூர் நில பரிவர்த்தனை தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதன்பிறகு தான் நாங்கள் அந்த பிரச்சினையை கையில் எடுத்தோம்.

    துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் ஆதரவாளர்களான பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டேயை அம்பலப்படுத்த விரும்பியது தெளிவாக தெரிகிறது.

    நான் பா.ஜனதா மாநில தலைவராக இருக்கும் போது தேவேந்திர பட்னாவிசை முதல்-மந்திரியாக பார்க்க விரும்புகிறேன் என சந்திரசேகர் பவன்குலே கூறிய மறுநாளே நாக்பூர் நில மோசடி அம்பலமாகி உள்ளது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நிலமோசடியை திசைத்திருப்ப திஷா சலியன் மரணம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    விரைவில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யிடம் புகார் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×