என் மலர்tooltip icon

    ஜார்கண்ட்

    • வகுப்பறையின் பின்வரிசையில் அந்த குரங்கு சாதாரணமாக அமர்கிறது.
    • பள்ளியில் இணைந்த புதிய மாணவர் என டுவிட்டர் பதிவு.

    ஹசாரிபாக்:

    ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனிக்கும் குரங்கு குறித்து வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாக வில்லை.

    ​​மாணவர்கள் நிறைந்த வகுப்பறைக்குள் நுழையும் அந்த குரங்கு பின்வரிசையில் சாதாரணமாக அமர்க்கிறது. அதை பொருட்படுத்தாமல் அந்த வகுப்பு ஆசிரியர் பாடங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பது வீடியோவில் இடம் பெற்றுள்ளது. 


    அரசுப் பள்ளியில் மாணவர்களுடன் காட்டு லங்கூர் பாடம் படிக்கிறார் என்ற தலைப்பில் அந்த வீடியோ இடம் பெற்றுள்ளது. ஒரு வகுப்பில் முன் வரிசையில் குரங்கு அமர்ந்திருப்பது குறித்த புகைப்படமும் இணையதளத்தில் வெளியாகியது. பள்ளியில் இணைந்த புதிய மாணவர் என்று இது குறித்து டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டது. 


    முன்னதாக சில குரங்குகள் இணைந்து மொபைல் போனைப் பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி 18 லட்சம் பாரவையாளர்களையும் ஆயிரக்கணக்கான விருப்பங்களை பெற்றுள்ளது. குரங்குகளும் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி விட்டதாக சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

    • பல கோடி மதிப்பிலான 300 இரு சக்கர வாகனங்களும் எரிந்து நாசமாயின.
    • தீ விபத்திற்கான சரியான காரணத்தை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஜார்காண்ட் மாநிலம் பாலமு மாவட்டம் மதினி நகர் பகுதியில் உள்ள ஷோரூம் குடோன் ஒன்றில் இன்று காலை 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 80 வயது மூதாட்டி ஒருவர் இறந்துள்ளார். மேலும், பல கோடி மதிப்பிலான 300 இரு சக்கர வாகனங்களும் எரிந்து நாசமாயின.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் 5 வாகனங்களுடன் விரைந்தனர். பின்னர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் உயிரிழந்த மூதாட்டி, ஷோரூம் உரிமையாளரின் தாய் என்றும் அவர் தீ விபத்தில் மூச்சு திணறி உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும், இந்த விபத்து குறைந்த மின் அழுத்தம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்றும் இருப்பினும் தீ விபத்திற்கான சரியான காரணத்தை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • 3 பெண்களும் மாந்த்ரீகம் , பில்லி சூனியம் செய்து மக்களை அச்சுறுத்தி வந்ததாக குற்றம்சாட்டி உள்ளனர்
    • ஜார்க்கண்ட் மாநிலத்தில் பில்லி சூனியம் தொடர்பாக 2001இல் இருந்து 2020 வரை 590 பேர் கொல்லப்பட்டுள்ளர்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில், பில்லி சூனியம் வைத்ததாக 3 பெண்களை கிராம மக்கள் சரமாரியாக அடித்து கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சோனஹபுத் காவல் சரகத்திற்கு உட்பட்ட ரானாடி கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.

    இறந்துபோன ஒரு பெண்ணிண் கணவர், மகன் உள்பட 13 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, எட்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக எஸ்எஸ்பி கௌஷல் கிஷோர் தெரிவித்தார்.

    இந்த 3 பெண்களும் மாந்த்ரீகம் , பில்லி சூனியம் செய்து மக்களை அச்சுறுத்தி வந்ததாகவும், அவர்கள் வைத்த சூனியத்தால் கிராமத்தைச் சேர்ந்த சிலரை பாம்பு கடித்ததாகவும் கூறி, கிராம மக்கள் அவர்களை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அருகில் உள்ள மலைப் பகுதியில் உடல்களை தூக்கி வீசியதாக போலீசார் தெரிவித்தனர்.

    தேசிய குற்றப் பதிவுகள் ஆணைய தரவுகளின்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பில்லி சூனியம் விவகாரத்தால் 2001இல் இருந்து 2020 வரை 590 பேர் கொல்லப்பட்டுள்ளர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முதல்-மந்திரியுமான ஹேமந்த் சோரன் தனது பதவியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
    • ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா தனது பக்கம் இழுத்து ஆட்சியை கவிழ்க்க கூடும் என தகவல் வெளியானது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முதல்-மந்திரியுமான ஹேமந்த் சோரன் தனது பதவியை முறைகேடாக பயன்படுத்தி ராஞ்சியில் உள்ள சுரங்கத்தை சட்டவிரோதமாக குத்தகைக்கு எடுத்து ஆதாயம் அடைந்ததாக பா.ஜனதா குற்றம் சாட்டியது. அதோடு அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டது.

    எனவே ஹேமந்த் சோரன் எம்.எல்.ஏ. பதவியை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா முறையிட்து. இதையேற்று முதல்-மந்திரியின் எம்.எல்.ஏ. பதவியை தகுதி நீக்கம் செய்யுமாறு ஜார்க்கண்ட் கவர்னர் ரமேஷ் பைசுக்கு தேர்தல் கமிஷன் கடந்த மாதம் 25-ந்தேதி பரிந்துரை செய்தது. ஆனால் கவர்னர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

    இந்த சூழ்நிலையில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா தனது பக்கம் இழுத்து ஆட்சியை கவிழ்க்க கூடும் என தகவல் வெளியானது.

    இதனால் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் சுமார் 30 பேர் காங்கிரஸ் ஆளும் சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு தனி விமானத்தில் கடந்த 30-ந்தேதி அழைத்து செல்லப்பட்டனர். அங்குள்ள நவ ராய்ப்பூர் சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே ஜார்க் கண்ட் சட்டசபையில் சிறப்பு கூட்டத்தை இன்று கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டுவர இருப்பதாக முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தெரிவித்து இருந்தார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பை யொட்டி சத்தீஷ்கரில் முகாமிட்டு இருந்த 30 எம்.எல்.ஏ.க்கள் ராய்ப்பூரில் இருந்து நேற்று மாலை தனி விமானத்தில் ராஞ்சி வந்தடைந்தனர்.

    இந்த நிலையில் ஜார்க்காண்ட் சட்டசபையில் சிறப்பு கூட்டம் இன்று காலை தொடங்கியது. முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார்.

    தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையில் தீர்மானத்திற்கு ஆதரவாக 48 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். பாஜக வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் சோரன் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

    • கிராம தலைவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இது நிலப்பிரச்சனை காரணமாக நடந்த சம்பவம் என்று துணை கமிஷனர் கூறினார்.

    மேதினிநகர்:

    ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள டோங்ரி பகாதி கிராமத்தில் வசித்து வந்த 50 தலித் குடும்பங்களை கிராமத்தைவிட்டு வெளியேற்றிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த மக்களை, வீடுகளை காலி செய்ய வைத்து, பொருட்களை வாகனங்களில் ஏற்றி அருகில் உள்ள வனப்பகுதியில் போட்டதாவும், கிராம தலைவர் இஸ்சார் அன்சாரி தலைமையிலான கும்பல் தங்களை வெளியேற்றியதாகவும் தலித் சமூக தலைவர் ஜிதேந்திர முஷார் குற்றம்சாட்டினார்.

    இதுபற்றி அந்த கிராமத்தைச் சேர்ந்த 12 நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாத 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கிராம தலைவர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி பலமு மாவட்ட காவல்துறை துணை கமிஷனர் தோடே கூறுகையில், இது நிலப்பிரச்சனை காரணமாக நடந்த சம்பவம் என்றும், வகுப்புவாதம் இல்லை என்றும் தெரிவித்தார்.

    'அந்த நிலம், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்களை வழங்கி உள்ளனர். ஆனால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை. எனினும் சட்டத்தை கையில் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள். தற்போது பழைய காவல் நிலைய கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன' என்றும் துணை கமிஷனர் தெரிவித்தார்.

    • ஜார்கண்ட் கல்வி கவுன்சில் கடந்த சனிக்கிழமை தேர்வு முடிவுகளை வெளியிட்டது.
    • மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

    ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தின் கோபிகந்தர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரசு நடத்தும் பழங்குடியினர் குடியிருப்புப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜார்கண்ட் கல்வி கவுன்சில் கடந்த சனிக்கிழமை தேர்வு முடிவுகளை வெளியிட்டது.

    இதில் 9ம் வகுப்பில் படிக்கும் 32 மாணவர்களில் 11 பேர் தோல்விக்கு சமமாக கருதப்படும் டிடி கிரேடு பெற்றுள்ளனர். 9ம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண்கள் வழங்கியதாக கூறி கணித ஆசிரியர் சுமன் குமார் மற்றும் கிளெர்க் சோன்ராம் சவுரே ஆகியோரை மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இருப்பினும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் எழுத்துப்பூர்வ புகார் எதுவும் வழங்கப்படாததால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

    இதுகுறித்து கோபிகாந்தர் காவல் நிலைய பொறுப்பாளர் நித்யானந்த் போக்தா கூறுகையில், " சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் எழுத்துப்பூர்வ புகார் எதுவும் கொடுக்காததால், இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. சம்பவத்தை சரிபார்த்த பிறகு, பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன், ஆனால் அது மாணவர்களின் எதிர்காலத்தை கெடுக்கும் என்று கூறி மறுத்துவிட்டது" என்றார்.

    • கைதான சீமா பத்ராவின் கணவர் மகேஷ்வர பத்ரா ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சுனிதா உருக்கமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அசோக்நகரில் வசித்து வருபவர் சீமா பத்ரா. பாரதிய ஜனதா பெண் தலைவரான இவர் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவரது வீட்டில் பழங்குடி இனத்தை சேர்ந்த சுனிதா( வயது 29) என்ற பெண் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக இவரை சீமா பத்ரா கொடூரமாக சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. சூடான பொருட்களை சுனிதா உடலில் வைத்தும், இரும்பு கம்பியால் பயங்கரமாக தாக்கியும் அவர் சித்ரவதை செய்தாக புகார்கள் எழுந்தது.

    இரும்பு கம்பியால் அடித்ததில் சுனிதாவின் பற்கள் உடைந்தன. மேலும், முகம் முழுவதும் காயங்கள் ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் துடித்தார். ஆனாலும் சீமா பத்ரா இதனை கண்டுகொள்ளவில்லை. இதன் உச்சகட்டமாக சுனிதாவை கழிவறையில் சிதறி கிடந்த சிறுநீரை நாக்கால் சுத்தம் செய்யுமாறு கட்டாயபடுத்தியதாக கூறப்படுகிறது.

    வேலைக்கார பெண்ணை தனது தாய் கொடுமைபடுத்தியதை அறிந்த சீமா பத்ராவின் மகன் ஆயுஸ்மான் அவருக்கு உதவ முன் வந்தார். வீட்டில் நடந்த கொடுமை பற்றி அவர் தனது நண்பர்களிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் மூலம் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து செயல்பட்டு சீமா பத்ரா வீட்டில் இருந்த சுனிதாவை மீட்டனர். முகம் மற்றும் உடலில் பல இடங்களில் காயங்களுடன் இருந்த அவர் ஆஸ்பத்திரியில் சிசிச்சைக்காக சேர்க்கபட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக சீமா பத்ராவை சஸ்பெண்டு செய்து பாரதீய ஜனதா நடவடிக்கை எடுத்தது. மேலும் ராஞ்சி போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைதான சீமா பத்ராவின் கணவர் மகேஷ்வர பத்ரா ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சுனிதா உருக்கமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவரால் படுக்கையில் சரிவர எழுந்து உட்கார கூட முடியவில்லை. வாயில் பல பற்கள் இல்லாமல் மோசமான நிலையில் உள்ளார்.

    தன்னை சீமா பத்ராவின் மகன்தான் காப்பாற்றினார். தனக்கு சில நாட்களாக சாப்பாடு, குடிநீர் கூட கொடுக்கவில்லை என உருக்கமாக பேசி உள்ளார். வேலைக்கார பெண்ணுக்கு மகன் உதவுவதை அறிந்த சீமா பத்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை உடல் நிலை சரியில்லை என கூறி அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிளஸ்-2 மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    • தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் தும்சா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படித்து வரும் பிளஸ்-2 மாணவியை ஜார்க்கண்ட் வாலிபர் ஷாருக் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார். இந்த காதலை ஏற்க மாணவி மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஷாருக் சம்பவத்தன்று மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் மாணவி அலறினார்.

    உடல் கருகிய நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி அறிந்த மாணவியின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். சம்பந்தப்பட்ட வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தும்ஷா நகரில் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இச்சம்பவம் தொடர்பாக ஷாருக்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிளஸ்-2 மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு.
    • ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் பேருந்துகள் முலம் பயணம்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அமைத்துள்ளன. முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வரும் நிலையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை தன் பெயரில் சோரன் பெற்றதாக அம்மாநில எதிர்க்கட்சியான பா.ஜ.க. குற்றம் சாட்டியது.

    மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இது குற்றம் என்பதால், அவரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என அம்மாநில ஆளுநரிடம் பா.ஜ.க. மனு கொடுத்தது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் கருத்துக்களை ஆளுநர் ரமேஷ் பைஸ் கேட்டிருந்தார். இதையடுத்து சோரனை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வது தொடர்பான தனது பரிந்துரையை ஜார்க்கண்ட் ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் சோரனின் முதலமைச்சர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தார்மீக அடிப்படையில் முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்றும், ஜார்கண்ட் மாநில சட்டசபையை கலைத்து விட்டு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தி உள்ளது.

    இதனிடையே, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் குதிரை பேர முயற்சியில் எதிர்க்கட்சியான பாஜக ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது. ஹவுராவில் கார் ஒன்றில் கட்டுக்கட்டாக பணத்துடன் மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிடிப்பட்ட நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜகவின் ஆபரேஷன் தாமரை' திட்டம் அம்பலமாகி விட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.

    மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்த்ததுபோல், ஜார்கண்ட் மாநிலத்திலும் சோரன் ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் ஜார்க்கண்ட்டில் ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்எல்ஏக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை சோரன் அரசு மேற்கொண்டுள்ளது.

    இதையடுத்து தலைநகர் ராஞ்சியில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் லக்கேஜ்களுடன் எம்எல்ஏக்கள் குவிந்தனர். அவர்களுடன் ஹேமந்த் சோரன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் இரண்டு பேருந்துகள் மூலம் எம்எல்ஏக்கள் புறப்பட்டுச் சென்றனர்.

    குந்தி மாவட்டத்தில் உள்ள லத்ரது அணை பகுதிக்கு அமைச்சர்கள் மற்றும் ஏஎம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சென்ற  காட்சி வெளியானது. அங்குள்ள விருந்தினர் விடுதியில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 


    நாங்கள் வேறு இடங்களுக்கு செல்ல உள்ளதாகவும், எங்கு செல்வோம் என தெரியவில்லை என்றும் அமைச்சர் சத்யானந்த் போக்தா தெரிவித்துள்ளார். இதனிடையே, ஜார்க்கண்ட் எம்எல்ஏக்கள் சத்தீஷ்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    81 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 49 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு மட்டும் 30 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சியில் 18 எம்எல்ஏக்களும், ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளனர். எதிர்க்கட்சியான பாஜகவிற்கு 26 எம்எல்ஏக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஜார்க்கண்ட் முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார்.
    • நிலக்கரி சுரங்கத்துக்கான ஒதுக்கீட்டை ஹேமந்த் சோரன் அவரது பெயரில் பெற்றுள்ளதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2019-ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைத்துள்ளன. முதல் மந்திரியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார்.

    இதற்கிடையே, நிலக்கரி சுரங்கத்துக்கான ஒதுக்கீட்டை தன் பெயரிலேயே ஹேமந்த் சோரன் பெற்றுள்ளதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இது குற்றம் என்பதால், அவரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என அம்மாநில கவர்னரிடம் பா.ஜ.க. மனு கொடுத்தது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் கருத்துக்களை கவர்னர் கேட்டிருந்தார்.

    இந்நிலையில், தேர்தல் ஆணையம் நேற்று தன் பதிலை கவர்னருக்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • பழங்குடியின வளர்ச்சிக்காக, இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் திட்டம்.
    • பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை.

    பழங்குடியின சமுதாயத்தின் வளர்ச்சிக்காக, திறன் பயிற்சி அளிக்கும் கிராமின் உத்யாமி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் 2வது கட்டத்தை ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜுன் முண்டா நேற்று தொடங்கி வைத்தார். 


    நிகழ்ச்சியில் பேசிய அர்ஜுன் முண்டா, பழங்குடியின மக்களின் நீடித்த வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் முழுமையான நோக்கம் என்றார். இத்திட்டத்தையும் சேர்த்து, பழங்குடியின பகுதிகளின் முன்னேற்றத்திற்காக, மத்திய அரசு ரூ.85,000 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக கூறினார்.

    பழங்குடியின இளைஞர்கள் அதிக திறன் உடையவர்களாக உள்ள நிலையில், அந்தத் திறனை அவர்கள் சரியான முறையில், சரியான இடத்தில் பயன்படுத்தி, உரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  

    • மேற்குவங்காளத்தில் காரில் 50 லட்ச ரூபாய் பணத்துடன் ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் பிடிபட்டனர்.
    • அவர்கள் 3 பேரையும் கட்சியில் இருந்து காங்கிரஸ் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் முதல் மந்திரியாக செயல்பட்டு வருகிறார்.

    இதற்கிடையே, மேற்குவங்காள மாநிலத்தின் ஹவுராவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு காரில் மிகப்பெரிய அளவில் பணம் கொண்டு செல்லப்படுவதாக அம்மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்திய போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் ராணிஹடி என்ற பகுதியில் வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தினர். அந்தக் காரில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சஷப், நமன் பிக்சல் கொங்கரி ஆகிய 3 பேர் பயணித்தது தெரியவந்தது.

    காரின் பின்பகுதியில் போலீசார் சோதனை நடத்தியபோது இருக்கைக்கு பின்னே கட்டுகட்டாக பணம் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பணத்தைக் கைப்பற்றிய போலீசார் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் உள்பட காரில் பயணித்த 5 பேரை கைது செய்தனர்.

    காரில் இருந்து மொத்தம் 50 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தப் பணம் யாரிடம் பெறப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், மேற்குவங்காளத்தில் காரில் பணத்துடன் பிடிபட்ட 3 எம்.எல்.ஏ.க்களையும் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஆனால், ஜார்க்கண்டில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சித்து வருவதாகவும், இதற்காக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பா.ஜ.க. மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

    ×