என் மலர்tooltip icon

    பீகார்

    • தேர்தலை ஒட்டி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
    • அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

    பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலுக்காக முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.

    தேர்தலை ஒட்டி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவேன் என்றும் வாக்கு கொடுத்துள்ளார்.

    இந்நிலையில்,பீகார் மாநிலத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பை முதலமைச்சர் நிதிஷ் குமார் வெளியிட்டுள்ளார். 

    • நேபாளம், வங்கதேசம் மற்றும் மியான்மர் போன்ற வெளிநாட்டவர்களும் வாக்காளர் பட்டியலில் கண்டறியப்பட்டுள்ளனர்.
    • அடுத்த விசாரணை ஜூலை 28 அன்று நடைபெற உள்ளது.

    சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் ஆணையம் பீகார் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் விளைவாக, 35 லட்சத்திற்கும் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.

    தேர்தல் ஆணையத்தின் ஆய்வின்படி, சுமார் 12.5 லட்சம் வாக்காளர்கள் உயிரிழந்திருந்தும், அவர்களின் பெயர்கள் இன்னும் பட்டியலில் உள்ளன. 17.5 லட்சம் வாக்காளர்கள் பீகாரை விட்டு நிரந்தரமாக வெளியேறிவிட்டனர்.

    5.5 லட்சம் வாக்காளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்துள்ளனர். நேபாளம், வங்கதேசம்மற்றும் மியான்மர் போன்ற வெளிநாட்டவர்களும் வாக்காளர் பட்டியலில் கண்டறியப்பட்டுள்ளனர்.

    வாக்காளர்கள் தங்கள் படிவங்களைச் சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் ஜூலை 25 வரை கால அவகாசம் தந்துள்ளது.

    இந்தத் திருத்தப் பணிகள் குறித்து எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்த வாக்காளர் நீக்கம் தேர்தல் முடிவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

    குறைந்த அளவிலான நீக்கம்கூட ஒரு தொகுதிக்கு ஆயிரக்கணக்கான வாக்காளர்களைப் பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    வாக்காளர் தகுதியைச் சரிபார்க்க ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம் என்று நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. அடுத்த விசாரணை ஜூலை 28 அன்று நடைபெற உள்ளது.

    இந்த நடவடிக்கையானது பீகாரின் அரசியல் நிலப்பரப்பில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • 2 பேர் துப்பாக்கியால் சுரேந்திர கெவத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.
    • பீகாரில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஷேக்புரா பகுதியை சேர்ந்தவர் சுரேந்திர கெவத் (வயது 52). பா.ஜ.க. சேர்ந்த அவர் அக்கட்சியின் கிசான் மோர்ச்சா தலைவராக பணியாற்றினார்.

    இந்த நிலையில் சுரேந்திர கெவத் தனது வயல்கள் உள்ள பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் துப்பாக்கியால் சுரேந்திர கெவத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.

    இதில் அவரது உடலில் 4 தோட்டாக்கள் பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவரை மீட்டு பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சுரேந்திர கெவத் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாட்னாவில் பிரபல தொழில் அதிபர் கோபால் கெம்கா அவரது வீட்டுக்கு முன்பு சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இதையடுத்து பீகாரில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில் பா.ஜ.க தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2020-25 இலக்கை இரட்டிப்பாக்குவதே எங்கள் குறிக்கோள்.
    • நாட்டிலேயே அதிக வேலையின்மை விகிதம் உள்ள மாநிலங்களில் பீகார் ஒன்றாகும்.

    பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ஒரு பெரிய வாக்குறுதியை அளித்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவேன் என்று வாக்கு கொடுத்துள்ளார்.

    "அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு.. நாங்க தரோம் - பீகார் முதல்வர் ப்ராமிஸ் அரசு வேலைகள் மற்றும் பிற வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் 2020-25 இலக்கை இரட்டிப்பாக்குவதே எங்கள் குறிக்கோள். இதை அடைய, தனியார் துறையில், குறிப்பாக தொழில்துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதற்காக ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்படுகிறது" என்று குமார் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

    மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இளைஞர்களை சுயதொழில் வாய்ப்புகளுடன் இணைக்க திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க, ஜன்நாயக் கர்புரி தாக்கூர் திறன் பல்கலைக்கழகத்தை மாநில அரசு அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    நாட்டிலேயே அதிக வேலையின்மை விகிதம் உள்ள மாநிலங்களில் பீகார் ஒன்றாகும். வேலை வாய்ப்புகள் இல்லாததால் பீகாரிகள் தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பிற மாநிலங்களுக்கு அதிகளவில் குடிபெயர்ந்து வருகின்றனர். கடந்த 2015 முதல் தற்போதுவரை நிதிஷ் குமார் பீகாரின் முதல்வரின் முதல்வராக தொடர்வது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.
    • இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக சிராக் பஸ்வான் அறிவித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.

    கடந்த வாரம் சரண் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரியும், லோக் ஜன்சக்தி (ராம் விலாஸ்) கட்சி தலைவருமான சிராக் பஸ்வான், 'வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போகிறேன். பீகாரின் வளர்ச்சிக்காக தேர்தலில் போட்டியிடுவேன்' என தெரிவித்தார்.

    லோக் ஜனசக்தி கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் முக்கிய அங்கம் வகிக்கிறது என்பதால், சிராக் பஸ்வானின் இந்த அறிவிப்பு பீகாரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், சிராக் பஸ்வானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் பட் பாட்னா சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.

    • முதலமைச்சர் நிதிஷ் குமாரால் பீகார் மாநில நிர்வாகத்தை கட்டுப்படுத்தவில்லை.
    • பிரதமர் மோடி, அமித் ஷா ஆகிய இருவரால் இங்கே நிர்வாகம் நடத்தப்படுகிறது.

    பீகாரில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

    இது தொடர்பாக பீகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு கூறியதாவது:-

    முதலமைச்சர் நிதிஷ் குமாரால் பீகார் மாநில நிர்வாகத்தை கட்டுப்படுத்தவில்லை. பிரதமர் மோடி, அமித் ஷா ஆகிய இருவரால் இங்கே நிர்வாகம் நடத்தப்படுகிறது. இதனால் இந்தியாவின் குற்றங்களில் தலைநகராக பீகார் மாறிவருவதற்கு இருவரும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

    ஆதார் கார்டு, ரேசன் கார்டு ஆகியவை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆவணங்கள் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறிவிட்டது. வாக்காளர்கள் பட்டியல் தீவிர திருத்த பணியை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தேர்தல் ஆணையம் சரியான நேரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் , வீதியில் இறங்கி போராடுவோம்.

    இவ்வாறு கிருஷ்ணா அல்லவாரு தெரிவித்துள்ளார்.

    • அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றார்.
    • முதல் மந்திரி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலுக்காக முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். பீகார் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, முதல் மந்திரி நிதிஷ்குமார் கூறியதாவது:

    அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். இதற்காக பீகார் இளைஞர் ஆணையத்தை அமைக்கலாம் என அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை அளித்தல், அவர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் அதிகாரம் பெற்ற, திறமையானவர்களாக மாற்ற ஆலோசனைகள் வழங்குவதே இந்த ஆணையத்தின் நோக்கம்.

    மது, போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளை தடுக்க திட்டங்கள் வகுப்பதும் ஆணையத்தின் பணிகளாகும்.

    மாநிலத்தில் அதிக பெண்கள் பணியிடத்தில் நுழைந்து ஆட்சி, நிர்வாகத்தில் பெரிய பங்கு வகிப்பதை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

    • பில்லி சூனியம் செய்ததாக கிராமத்தினர் சந்தேகம்.
    • அடித்து கொலை செய்து எரித்து கொலை செய்துள்ளனர்.

    அமானுஷ்ய சடங்குகள் செய்ததாக ஒரே குடும்பத்தினரைச் சேர்ந்த ஐந்து பேரை, கிராமத்தினர் ஒன்று சேர்ந்து கொடூரமாக அடித்துக் கொலை செய்து, தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலம் பூர்ணிமா என்ற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சில நாட்களாக மர்மமாக முறையில் மரணம் ஏற்பட்டது. இதற்கு காரணம் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் அமானுஷ்ய சடங்குகள் வளர்ப்பதுதான் காரணம் என நம்பினர்.

    இதனால் அந்த குடும்பத்தினரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். நேற்று கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து அந்த வீட்டிற்கு சென்று பாபுலால் ஒரான், சீதா தேவி, மஞ்ஜீத் ஒரான், ரானியா தேவி, டாப்டோ மொஸ்மாத் ஆகியோரை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். அத்துடன் அவர்களுடைய ஆத்திரம் தீரவில்லை. பின்னர் அவர்களை எரித்துள்ளனர்.

    அந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்று எப்படியோ தப்பித்து, போலீசில் தனது குடும்பத்தினருக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார். மேற்கொண்டு அந்த குழந்தையால் விவரித்து கூறமுடியவில்லை.

    அந்த குழந்தை அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் உள்ளனர். இதற்கிடையே சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரியவந்துள்ளதால், கிராமத்தினர் வீடுகளை காலி செய்து வெளியேறிவிட்டார். போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம மக்களை தூண்டிவிட்டதாக நகுல் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • கொடிய சதித்திட்டம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்தார்
    • மல்லிகார்ஜுன கார்கே, இந்த திருத்தம் கிட்டத்தட்ட எட்டு கோடி மக்களைப் பாதிக்கும் என்று கூறினார்.

    வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. ஆர்.ஜே.டி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகவுள்ளார்.

    தேர்தல் ஆணையம், ஜூன் 24 அன்று பீகாரில் தகுதியுள்ள குடிமக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக சிறப்பு திருத்தம் (SIR) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வெளியிட்டது.

    நகரமயமாக்கல், புலம்பெயர்தல், புதிய வாக்காளர்கள் மற்றும் வெளிநாட்டு சட்டவிரோத குடியேற்றவாசிகள் போன்றவர்களை கண்டறிய இந்த இந்த திருத்தம் அவசியம் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.

    ஆனால் ஏற்கனவே ஆளும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவதாக தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஆர்.ஜே.டி எம்.பி. மனோஜ் ஜா இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இதற்கிடையே, மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா இந்த உத்தரவு இளம் வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமையில் இருந்து பறிக்கும் நோக்கம் கொண்டது என்றும், இது பாஜக-விற்கு சாதகம் என்றும் குற்றம் சாட்டினார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இதை கொடிய சதித்திட்டம் என்று விமர்சித்தார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்த திருத்தம் கிட்டத்தட்ட எட்டு கோடி மக்களைப் பாதிக்கும் என்றும், இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் கூறினார்.

    ஆர்ஜேடி முக்கிய தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், இந்த திருத்தப் பணி ஏன் பீகாரில் மட்டும் மேற்கொள்ளப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த திருத்தப் பணியை ஆதரித்து, எதிர்க்கட்சிகள் தோல்விக்கு சாக்குப்போக்கு தேடுவதாகக் குற்றம் சாட்டியது.

    தேர்தல் ஆணையம், பீகாரில் திருத்தப் பணியின் முதல் கட்டம் சீராக முடிவடைந்துள்ளதாகவும், இந்த செயல்முறை ஆளும் கட்சிக்கு சாதகமாக கையாளப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. ஜூலை 25 வரை ஆவணங்களை சமர்ப்பிக்க வாக்காளர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

    • பெட்ரோல் பங்க் ஊழியர் தவறுதலாக ரூ.720க்கு பெட்ரோல் நிரப்பி உள்ளார்.
    • கடுங்கோபமடைந்த போலீசார், பங்க் ஊழியரை அறைந்துள்ளார்.

    பீகார் மாநிலம், சீதாமர்ஹி மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் போலீஸ் ஒருவர் வந்து தனது பைக்கில் ரூ.120க்கு பெட்ரோல் நிரப்ப சொல்லி இருக்கிறார்.

    ஆனால், பெட்ரோல் பங்க் ஊழியர் தவறுதலாக ரூ.720க்கு பெட்ரோல் நிரப்பி உள்ளார்.

    இதனால், கடுங்கோபமடைந்த போலீசார், பங்க் ஊழியரை அறைந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், போலீசாரை சுற்றி வளைத்து தாக்கினர்.

    இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பின் மோதல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதற்கிடையே, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பீகாரில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
    • பா.ஜ.க.வின் நோக்கம் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கண்ணியமான வாழ்க்கையை உறுதிசெய்வது என்றார்.

    பாட்னா:

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பீகார் சென்றடைந்தார். அங்கு பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

    காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் போன்ற கட்சிகளுக்கு ஒரே ஒரு குறிக்கோள்தான், ஆட்சியில் நீடிப்பது.

    ஆனால் பா.ஜ.க.வின் நோக்கம் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வது.

    சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சியடையும் கொள்கைகளை உருவாக்குவது. அனைவருக்கும் சுயமரியாதையுடன் வாழ உரிமை உண்டு என்பதை உறுதி செய்வது. எங்கள் அரசாங்கத்தால் இதுவும் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவின் பொருளாதாரத்தை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற நாம் அனைவரும் பாடுபடுகிறோம் என தெரிவித்தார்.

    • மலையிலிருந்து நீர்வரத்து அதிகரித்ததால், நீர்வீழ்ச்சி ஆக்ரோஷமாக மாறியது.
    • மேலும் மூன்று பெண்கள் தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள லங்குரியா மலை நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த ஆறு பெண்களை உள்ளூர் கிராம மக்கள் துணிச்சலுடன் காப்பாற்றியுள்ளனர். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை லங்குரியா நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்தனர். அப்போது, ஆறு பெண்கள் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென மலையிலிருந்து நீர்வரத்து அதிகரித்ததால், நீர்வீழ்ச்சி ஆக்ரோஷமாக மாறியது. இதனால் மற்ற சுற்றுலாப் பயணிகள் பயத்தில் ஓடிவிட்டனர். ஆனால், இந்த ஆறு பெண்களும் வெள்ளத்தின் நடுவில் சிக்கிக்கொண்டனர்.

    உடனடியாகச் செயல்பட்ட உள்ளூர் கிராம மக்கள், முதலில் ஒரு பெண்ணை பாறையைக் கடந்து பாதுகாப்பாக மீட்டனர். அப்போது மேலும் மூன்று பெண்கள் தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆனாலும், கிராம மக்கள் அவர்களை மிகுந்த சிரமத்துடன் பள்ளத்தாக்கிலிருந்து மீட்டனர். மற்ற இரண்டு பெண்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இந்த மீட்பு நடவடிக்கையின்போது, ஒரு பெண் பாறையில் மோதி காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் லங்குரியா நீர்வீழ்ச்சியில் இவ்வளவு கடுமையான நீர் ஓட்டத்தை இதற்கு முன் பார்த்ததில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    ×