என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • வைட்டமின் பி1, பி2, பி3 குறைபாடு காரணமாக மனச் சோர்வு தொடர்கிறது.
    • மன சோர்வு காரணமாக உடலின் ஆற்றலும் குறைகிறது.

    தொடர்ந்து சோர்வாக உணர்தல், அதிகமாக சிந்திப்பது மற்றும் பதட்டமாக இருப்பது ஆகியவை மன சோர்வின் அறிகுறிகளாகும். மன சோர்வு காரணமாக, ஒரு நபர் மிகவும் பலவீனமாக உணரலாம். இதனால் உடலின் ஆற்றலும் குறைகிறது. உடலில் வைட்டமின் பி1, பி2 மற்றும் பி3 குறைபாடு காரணமாகவும் பல நேரங்களில் மனச் சோர்வு தொடர்கிறது.

    மன சோர்வு மிகவும் பொதுவானது. ஆனால் நீண்ட காலமாக அதை புறக்கணிப்பது உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. மன சோர்வு காரணமாக, தூக்கத்தில் பிரச்சனை, தனியாக இருப்பது போன்ற உணர்வு, பசியின்மை, சீக்கிரம் கோபப்படுதல் மற்றும் மெதுவாக சிந்திப்பது போன்ற பல அறிகுறிகள் காணப்படுகின்றன.

    மனசோர்வை நீக்கும் வழிமுறைகள்:

    மன சோர்வை நீக்க ராகியை உட்கொள்ளலாம். கால்சியம், நார்ச்சத்து, சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் ராகியில் காணப்படுகின்றன. இதனை உட்கொள்வதால் மன சோர்வு நீங்கி எலும்புகள் வலுவடையும். இதனை கோதுமை மாவுடன் கலந்து ரொட்டி செய்து சாப்பிடலாம்.

    மன சோர்வை நீக்க வால்நட்ஸை உட்கொள்ளலாம். இதில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளது. இதனை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுகிறது மற்றும் மூளை சக்தியை அதிகரிக்கிறது.

    மன சோர்வைத் தவிர்க்க, உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால், உடலின் சரியான ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இது உடல் மற்றும் மன சோர்வு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். மன சோர்வைத் தடுக்க, நாள் முழுவதும் 7 முதல் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.

    மன சோர்வைத் தவிர்க்க, தினசரி சுய-கவனிப்பு வழக்கத்தைப் பின்பற்றவும். சுய பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றுவது பதட்டத்தை குறைக்கும் மற்றும் உங்கள் மனநிலையும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சுய பாதுகாப்பு வழக்கத்தைப் பின்பற்றுவது உங்களுக்கு மன அமைதியைத் தரும், மேலும் நீங்கள் உங்கள் மீது கவனம் செலுத்தவும் முடியும்.

    உடற்பயிற்சி

    மன சோர்வைக் குறைக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். உடற்பயிற்சி செய்வது நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். மேலும் மனநலமும் நன்றாக இருக்கும். மன சோர்வை நீக்க உடற்பயிற்சி, யோகா, சுவாசப் பயிற்சி போன்றவற்றில் ஈடுபடவும்.

    மன சோர்வை நீக்க இயற்கையான வழிமுறைகளை பின்பற்றலாம். இருப்பினும், உங்களுக்கு ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை இருந்தால், உங்கள் மருத்துவரிடம் கேட்ட பிறகு இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

    • இனப்பெருக்க உறுப்புகளை ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் கருவி.
    • அல்ட்ராசவுண்ட் மூலம் கருப்பை உள்புற அசாதாரணங்களை கண்டறியலாம்.

    இந்த சோதனை பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை ஆய்வு செய்ய மருத்துவர்களால் செய்யப்படும் மருத்துவ முறையாகும். இது இடுப்பு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் வகையாகும். இதில் கருப்பைகள், ஃபலோபியன் குழாய்கள், கருப்பை வாய் மற்றும் யோனி பகுதிகளில் பரிசோதனை செய்ய இந்த கருவி பயன்படுகிறது.

    அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் சோதனையானது உங்கள் உள் உறுப்புகளின் படங்களை உருவாக்க உயர்ந்த அதிர்வெண் அலைகளை பயன்படுத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் கருப்பை உள்புற அசாதாரணங்களை கண்டறியலாம்.

    அடிவயிறு அல்லது இடுப்பு அல்ட்ராசவுண்ட் டிரான்ஸ்யூசர் பயன்படுத்தப்படும். இப்பரிசோதனையில் மருத்துவர் அல்லது பரிசோதனை செய்யும் நிபுணர் யோனி பகுதி வழியாக 2 அல்லது 3 அங்குல அல்ட்ராசவுண்ட் ஆய்வை செருகுவார். இது கர்ப்பத்தை கண்காணிக்கவும், அறுவை சிகிச்சைக்கு திட்டமிடவும் உதவிபுரியும்.

    கர்ப்ப காலத்தில் கருவின் இதயத்துடிப்பை கண்காணிக்கவும், கருச்சிதைவு அல்லது முன்கூட்டிய பிரசவம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் காரணங்கள் உள்ளதா அல்லது ஏதேனும் மாற்றங்களுக்கான அறிகுறி உணரும் போது கருப்பை வாயை பார்க்க இவை பரிந்துரைக்கப்படுகிறது.

    நஞ்சுக்கொடி அசாதாரணங்களை பரிந்துரைக்கவும். அசாதாரண ரத்தபோக்குக்கான மூலத்தை கண்டறியவும், சாத்தியமான கருச்சிதைவை கண்டறியவும், ஆரம்ப கர்ப்பத்தை உறுதிப்படுத்தவும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்படுகிறது.

    அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் யோனியின் உட்புறம் செருகுவதால் இது அசெளகரியத்தை கொடுக்கலாம். இந்த கருவியானது யோனியின் வடிவத்தை வளைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதன் செயல்முறை முடிந்தவரை வலியற்றதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சொரியாசிஸ் என்பது தன்னுடல் நோய் எதிர்ப்பு பாதிப்பு தோல் நோயாகும்.
    • ஒருவருடத்தில் இருந்து மற்றவருக்கு தொற்றுவது இல்லை.

    சொரியாசிஸ் என்பது தன்னுடல் நோய் எதிர்ப்பு பாதிப்பு தோல் நோயாகும். மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் இந்த நோய் வரலாம். இது ஒருவருடத்தில் இருந்து மற்றவருக்கு தொற்றுவது இல்லை. புகைபிடித்தல், அதிக மது அருந்துதல் இந்நோய் பாதிப்பை அதிகரிக்கிறது.

    சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி கீழ்க்கண்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்:

    1) பறங்கிப்பட்டைச் சூரணம் 1 கிராம், சிவனார் அமிர்தம் 200 மி.கி, பலகரை பற்பம் 200 மி.கி. ஆகியவற்றை இருவேளை, தேன் அல்லது வெந்நீரில் சாப்பிடலாம்.

    2) கந்தக ரசாயனம் 1 கிராம் அல்லது கந்தக மெழுகு 200 மி.கி, இரு வேளை சாப்பிட வேண்டும்.

    3) பறங்கிப்பட்டை ரசாயனம் 1 கிராம் வீதம் இரு வேளை சாப்பிட வேண்டும்.

    4) அறுகன்புல் தைலம், வெட்பாலை தைலம் இவைகளை நோய் பாதித்த தோலில் பூச வேண்டும்.

    5) வைட்டமின் டி குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வாதம், பித்தம், கபம் தான் நோய்களுக்கு முக்கிய காரணம் என்கிறது சித்தமருத்துவம். இது உடல் உறுப்புகளுக்கு மட்டுமல்ல , ஒவ்வொரு உடல் செல்களுக்கும் பொருந்தும். அந்த வகையில் தோல் என்பது நம் உடலில் பரந்து விரிந்த மிகப்பெரிய உறுப்பு. அதில் வாத, பித்த கப ஏற்றத்தாழ்வுகள் வராமல் தடுக்க உதவுவது தான் எண்ணெய் குளியல் என்கிறது சித்தமருத்துவம்.

    உணவுமுறைகள்:

    பால், முட்டை வெள்ளைக்கரு, முருங்கைக் கீரை, பசலைக்கீரை, பாதாம், அவகோடா, வால்நட், உளுந்தங்களி, வெந்தயக்களி இவைகளை சாப்பிட வேண்டும். இளம் சூரிய வெயிலில் சிறிது நேரம் உலாவுவது நல்லது. இந்நோய் உள்ளவர்களுக்கு தீவிர மன உணர்ச்சிகளான கவலை, சோகம், பயம், பதட்டம், கோபம், மன அழுத்தம் காணப்படும். எனவே இவற்றை போக்க இறை பிரார்த்தனை, தியானம் செய்யலாம்.

    • இறந்த தோலின் கடின மான உருவாக்கம் தான் கால் ஆணி.
    • கத்தி பிளேடு முதலியவைகளைக் கொண்டு சுரண்டி எடுக்கக்கூடாது.

    இறந்த தோலின் கடின மான உருவாக்கம் தான் கால் ஆணி ஆகும். பொருத்தமில்லாத காலணிகளை அணியும்போது, வைட்டமின் ஏ சத்துக்குறை பாடு, அதிக உடல் எடை இருப்பவர்கள், கரடுமுரடான தரையில் திடீரென அதிக நேரம் நடப்பது, ஹை ஹீல்ஸ் கொண்ட காலணிகளை அணிந்து அதிக பளு தூக்குவது, மிகக் கடினமான உடற்பயிற்சி செய்வது போன்றவற்றால் கால் ஆணி வரலாம்.

    எக்காரணம் கொண்டும் ஆணியை கத்தி பிளேடு முதலியவைகளைக் கொண்டு சுரண்டி எடுக்கும் வேலையை செய்யக்கூடாது.

    பூண்டு பேஸ்டை கால் ஆணி இருக்கும் இடத்தில் கட்டி வைத்தால் அதில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடன்ட் பொருள் கால் ஆணியைக் குணப்படுத்தும்.

    படிகக் கல்லை வைத்து நன்றாகத் தேய்த்துவிட்டு தோலை மிருதுவாக்கும் களிம்பை அந்த இடத்தில் தடவவும். பின்னர் மருந்து நிரப்பப்பட்ட கால் ஆணிப் பட்டையை தினமும் அந்த பகுதியின் மேல் ஒட்டி விட வேண்டும். இவ்வாறு சுமார் ஒரு வாரம் தொடர்ந்து செய்தால் கால் ஆணி குணமாக வாய்ப்பு உண்டு.

    சில நேரங்களில் சில பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம். எனவே, கால் ஆணி தானே என்று அலட்சியமாக இருக்காமல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

    • வளர்ச்சிதை மாற்றுப் பொருட்கள் சிறுநீரகம் மூலம் தான் வெளியேற்றப்படுகிறது.
    • பக்க விளைவுகளால் பெரிதும் பாதிக்கப்படுவது சிறுநீரகம் தான்.

    உடம்பில் மருந்துகளின் பக்க விளைவுகளால் பெரிதும் பாதிக்கப்படும் உறுப்புகளில் ஒன்றாக சிறுநீரகம் திகழ்கிறது. ஏனெனில், பெரும்பாலான மருந்துகள் மற்றும் அதன் வளர்ச்சிதை மாற்றுப் பொருட்கள் சிறுநீரகம் மூலமாக தான் வெளியேற்றப்படுகிறது.

    அப்போது அதுசிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். மருத்துவமனையில் சேர்க்கப் படும் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளில் 20 சதவீதத்தினருக்கு மருந்துகளின் பக்க விளைவே காரணம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் 60 வயதை கடந்தவர்கள், ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், இதய செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, எலக்ட்ரோலைட் சமநிலையின்மை மற்றும் செப்சிஸ் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு மருந்துகளின் பக்கவிளைவுகளினால் சிறுநீரக பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

    பொதுவாக மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் அந்த மருந்தை உட்கொள்வதை நிறுத்திய பின்னர் மீண்டும் சிறுநீரக செயல்பாடு பழைய நிலைக்கு திரும்பும். ஆகையால் நீங்கள் எந்த ஒரு நோய்க்கும் மருந்தை உட்கொள்வதற்கு முன்னர் மருத்துவரை கலந்தாலோசித்து அவர் பரிந்துரைக்கும் மருந்து மற்றும் அளவுகளை பின்பற்றினால் சிறுநீரக பாதிப்பு ஏற்படாது.

    • பெண்கள் அந்தரங்கம் குறித்த விஷயங்களை டாக்டரிடம் சொல்ல தயங்குகிறார்கள்.
    • இது வெட்கப்பட வேண்டிய விஷயமல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

    கர்ப்பிணிகள் மருத்துவரிடம் தனக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொள்வது அவசியம். ஏனெனில் பெரும்பாலான பெண்கள் தங்கள் அந்தரங்கம் குறித்த விஷயங்களை மருத்துவர்களிடம் கூட நேரடியாக சொல்ல தயங்குகிறார்கள்.

    இது வெட்கப்பட வேண்டிய அல்லது பயப்பட வேண்டிய விஷயமல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் கருத்தரிக்க முயற்சிக்கும் போது பாலியல் குறித்த பிரச்சனைகள், இனப்பெருக்க உறுப்பு பிரச்சனைகளை மருத்துவரிம் மறைக்க கூடாது. கருத்தரிப்பதற்கு முன்பும் கருத்தரித்த பிறகும் ஆரோக்கியமான குழந்தையை பெறுவதற்கு நீங்கள் விரும்பினால் இந்த பிரச்சனைகளை நீங்கள் மருத்துவரிடம் மறைக்க கூடாது.

    அடிவயிற்று வலி

    மாதவிடாயின் போது பிடிப்புகள், மார்பக வலி மற்றும் தலைவலி உண்டாகலாம். சில பெண்களுக்கு மிதமானது முதல் தீவிரமானது வரை இந்த வலி இருக்கும் சிலருக்கு தாங்க முடியாத அளவுக்கு இருக்கலாம். காலப்போக்கில் ஒவ்வொரு மாதமும் வேதனையாக மோசமானதாக இருக்கும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    உடலுறவின் போது வலி

    தாம்பத்தியம் மேற்கொள்ளும் போது உடலுறவில் தீவிரமாக வலி இருந்தால் இது இயல்புதான் என்று நினைக்காமல் மருத்துவரிடம் ஆலோசியுங்கள். ஏனெனில் பிறப்பு உறுப்பில் வறட்சி தன்மை இருந்தால் உடலுறவின் போது அசெளகரியம் உண்டாக்குவதோடு வலியையும் ஏற்படுத்தும். இதற்கு ஈஸ்ட்ரோஜன் குறைபாடும் காரணமாக இருக்கலாம்.

    பெண்களுக்கு உடலுறவின் போது பிறப்புறுப்பு வறட்சியாகவே இருந்தால் அல்லது உறவுக்கு பின்பு பெண் உறுப்பில் ரத்தக்கசிவு இருந்தால் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

    வெள்ளைப்படுதல்

    பெண்களின் பிறப்புறுப்பில் கசியும் வெள்ளைப்படுதல் பெண் உறுப்பை பாதுகாக்கவே. ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் போதும் முன்பு அல்லது பின்பு இந்த வெள்ளைப்படுதல் இருக்கும். இது எல்லாருக்குமே பொதுவானது. ஆனால் சிலருக்கு வெள்ளைப்படுதல் அதிகரிப்பதோடு அவை நிறத்திலும் மஞ்சள் பச்சை என்று இருந்தால் அது உடனடியாக கவனிக்க வேண்டியதே. உடனடி சிகிச்சை தேவையாக இருக்கலாம்.

    பெண் உறுப்பு பகுதியில் கட்டி

    பெண்களின் பிறப்புறுப்பு பகுதியின் உட்பகுதி வல்வா என்று அழைக்கப்படும். இந்த இடத்தில் வரும் புடைப்புகள் மற்றும் வளர்ச்சியை கண்டறிந்தால் நீங்கள் தாமதிக்காமல் மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும். இது ஹெர்பேஸ் அல்லது மருக்கள் போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்க்களின் அறிகுறியாக இருக்கலாம். அதனால் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் உங்கள் பாலியல் வரலாறு குறித்து வெளிப்படையாக இருப்பது அவசியம். 

    • குழந்தைகள் இரண்டு வாரங்கள் வரை கூட மலம் கழிக்காமல் இருப்பார்கள்.
    • மலம் கழிக்கும் போது வாயு திரட்சியால் வயிறு வீங்குவது.

    மலச்சிக்கல் என்பது பெரியவர்களுக்கு மட்டும் அல்ல. பிறந்த குழந்தைகளுக்கு கூட வரலாம். குழந்தைகளின் அழுகை, மலம் கழிக்கும் போது அலறல் மற்றும் முக மாற்றம் போன்ற அறிகுறிகளோடு மலச்சிக்கலை பெற்றோர்கள் அறியலாம்.

    பிறந்தது முதல் 6 மாதம் வரை உள்ள குழந்தைகள் தாய்ப்பால் மட்டும் குடிப்பவர்களாக இருந்தால் அவர்கள் மலம் கழித்தல் என்பது தாய்ப்பாலுக்கு பிறகு இருக்கும். நாள் ஒன்றுக்கு இரண்டு முறை. சில நேரங்களில் பிறந்த உடன் 5 முதல் 7 வரை இருக்கலாம். இது இயல்பானது.

    குழந்தைகள் இரண்டு வாரங்கள் வரை கூட மலம் கழிக்காமல் இருப்பார்கள் அல்லது தாமதமாகலாம். எனினும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்குமான மலச்சிக்கலின் அறிகுறிகள் மாறுபடும். சில நாட்கள் வரை குழந்தைகள் மலம் கழிக்காமல் இருக்கலாம்.

    அறிகுறிகள்:

    * மலம் வெளியேற்றும் போது குழந்தை சிவந்த முகத்துடன் 10 நிமிடங்களுக்கு மேல் கஷ்டப்படலாம். இது மலம் கழிப்பதில் சிரமத்தை குறிக்கிறது.

    * மலம் கழிக்கும் போது குழந்தை குழப்பமடையலாம். இது வலியுடன் இருப்பதை குறிக்கிறது.

    * மலம் கழிக்கும் போது வாயு திரட்சியால் வயிறு வீங்குவது. வாயு வெளியேற்றம் கடினமாக இருப்பது.

    * மலம் வெளியேறாமல் ஆசனவாய் வாய்பகுதியில் நீண்ட நேரம் இருப்பது.

    * குழந்தையின் வயிறு வழக்கத்திற்கு மாறாக வீங்கியதாகவும் தொடுவதற்கு கடினமாகவும் இருக்கலாம்.

    * கடுமையான மலச்சிக்கல் என்கோபிரெசிஸை ஏற்படுத்தலாம் இது குழந்தையின் டயபர் அல்லது உள்ளாடைக்குள் ஒரு சிறிய அளவு திரவ மலம் தன்னிச்சையாக கசிவை உண்டாக்கலாம்.

    * கடுமையான சந்தர்ப்பங்களில் குழந்தை நகரும் போது மலத்தில் ரத்தப்போக்கு உண்டாகலாம். குழந்தை மலத்தை வெளியேற்ற சிரமப்படலாம். மலம் கழிக்கும் வழக்கத்தில் மாற்றங்கள் தொடர்ந்து இருந்தால் மலச்சிக்கல் இருக்கலாம்.

    மலச்சிக்கல் உண்டாக காரணம்:

    * குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்கவில்லை என்றால் அரிதாக கடினமான மலத்தை கவனிக்கலாம்.

    * தண்ணீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படலாம்.

    * திட உணவில் குறைந்த நார்ச்சத்து இருப்பதால் மலத்தை கடினப்படுத்தலாம்.

    * மலச்சிக்கல் உண்டாவது இரைப்பை குடல் நோய்த்தொற்றின் விளைவாக இருக்கலாம்.

    • இதயம் தொடர்பான நோய்கள் யாருக்கும் வரலாம்.
    • பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்.

    இதயம் தொடர்பான நோய்கள் யாருக்கும் வரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக, கொலஸ்ட்ரால், அதிக பிபி, சர்க்கரை நோய் போன்ற பிரச்சனை உள்ளவர்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பின்வரும் குறிப்புகளை பின்பற்றுவது முக்கியம்.

    இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளில் இருந்து விலகி இருங்கள். பாஸ்ட் புட் மற்றும் ஓட்டல்களில் விற்கப்படும் உணவுகளை தவிர்த்து வீட்டில் செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. அதற்கு பதிலாக, பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். இதனால் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

    சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். எனவே, எப்போதும் உங்களை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள் மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும் உணவு விஷயங்களில் இருந்து விலகி இருங்கள்.

    கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் உணவின் அளவை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். இதய நோய்களுக்கு கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    மன அழுத்தம் பல வகையான நோய்களை ஏற்படுத்தும். எனவே மன அழுத்தத்தை சீராக நிர்வகிப்பதன் மூலம், பல நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெந்நீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • வெந்நீரைக் குடித்தால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும்.

    வெந்நீர் குடிப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சளி, இருமல் போன்ற பிரச்சனைகளும் வெந்நீரை குடிப்பதால் விலகும். இதய ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில், வெந்நீரைக் குடிப்பது அதில் சாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது.

    நாம் வெந்நீரைக் குடித்தால், உடலில் ரத்த ஓட்டம் சீராகும். சரியான ரத்த ஓட்டம் காரணமாக, ரத்த அழுத்த அளவு சாதாரணமாக இருக்கும்.

    ரத்த அழுத்தத்திற்கும், இதய ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு என்பது நாம் அனைவருக்கு தெரியும். இதன் பொருள் ரத்த அழுத்தம் சீராக இருந்தால், இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயமும் குறைகிறது.

    நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரை ஒன்று அல்லது இரண்டு கப் குடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி வெந்நீர் குடிப்பதும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

    உண்மையில், நீங்கள் சூடான தண்ணீரைக் குடிக்கும்போது, உடல் குளிர்ச்சியடையும் செயல்முறையைத் தொடங்குகிறது.

    இந்நிலையில், வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது, இது எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடல் பருமன் இதய ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    எனவே, உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். மொத்தத்தில், சூடான நீரைக் குடிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நல்ல விளைவைக் கொண்டிருக்கிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஆனால், எதையும் அதிகமாகச் செய்வது சரியல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    வெந்நீரிலும் இதே நிலைதான். வெந்நீரை அதிகமாக குடித்தால், உணவுக்குழாயில் உள்ள நல்ல திசுக்களை சேதப்படுத்தி, சுவை மொட்டுக்களை கெடுத்து, நாக்கில் பல பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே, நீங்கள் தொடர்ந்து சுடுநீரை குடிக்க விரும்பினால், அதை குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்வது நல்லது.

    • ரத்த அழுத்தத்தில் இருந்து விடுபட மனதை இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும்.
    • தினமும் காலையில் எழுந்தவுடன் ரத்த அழுத்தத்தை பார்க்க வேண்டும்.

    உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பின் அளவை கட்டுப்படுத்த வேண்டும். தொடர்ந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்வது, குறிப்பாக மது அருந்துவது, புகைப்பிடிக்காமல் இருப்பது, தேவை இல்லாத விஷயங்களுக்கு கோபப்படுவது, மனதை இறுக்கமாக வைத்துக்கொள்வது, மன அழுத்தம், மனதை இலகுவாக வைத்துக்கொள்ளாமல் எதற்கெடுத்தாலும் கோபமாக பேசுவது போன்றவற்றை குறைத்துக்கொள்ளும் போது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும்.

    ரத்த அழுத்தத்தில் இருந்து விடுபட மனதை இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும். அல்லது யோகா செய்வதன் மூலமாகவும், உடல் எடையை குறைப்பதன் மூலமாகவும், உணவுப்பழக்க வழக்கம் மூலமாகவும் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும்.

    எல்லோருக்கும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் ஆசை. எனவே ரத்த அழுத்தத்தை கவனிக்க ஒவ்வொருத்தரும் வீடுகளில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் கருவையை வைத்திருப்பது அவசியம். இப்பொழுதெல்லாம் ரத்த அழுத்தத்தை சோதிக்கும் கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. தினமும் காலையில் எழுந்தவுடன் ரத்த அழுத்தத்தை பார்க்க வேண்டும். காலையில் செய்யப்படும் பரிசோதனை தான் சரியான ரத்த அழுத்த பரிசோதனையாக இருக்கும்.

    மேலும், நாம் வருடா வருடம் பிறந்தாள் கொண்டாடுவது போன்று 30 வயதை கடந்தவுடன் ஒவ்வொரு வருடமும் உடல் முழுவதையும் பரிசோதனை செய்துகொள்வது மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    • உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்புக்கு சுமார் 100 கோடி பேர் ஆளாகி உள்ளனர்.
    • இதயம், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

    உலக அளவில் உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்புக்கு சுமார் 100 கோடி பேர் ஆளாகி உள்ளனர். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளை, இதயம், சிறுநீரகம், கண்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்பு வெளிப்பட்டு சிகிச்சைக்கு சென்ற பிறகே நோய் பாதிப்பின் தீவிரத்தை அறிய முடியும். ஆகவே வேறு நோய் பாதிப்புக்கு சிகிச்சைக்கு செல்லும் போது டாக்டரிடம் ரத்த அழுத்த பரிசோதனையையும் மேற்கொள்வது அவசியம்.

    உயர் ரத்த அழுத்தம் இருப்பது என்பதை நாம் கவனிக்காமல் விட்டால் முக்கியமான உறுப்புகளை பாதிக்க ஆரம்பிக்கும். குறிப்பாக இதயம், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். உயர் ரத்த அழுத்தம் அதிகமாகும் போது இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கு கூட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாது உயர்ரத்த அழுத்தத்தினால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயலிழப்பதற்கு கூட வித்திடலாம். கண்கள் பாதிக்கப்படலாம்.

    ஆனாலும் 50 சதவீதம் பேருக்கு ரத்த அழுத்தம் இருப்பது வெளியே தெரிவது இல்லை. அதிலும் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் தான் சிகிச்சை மேற்கொள்கின்றனர். இருப்பினும் இந்த 50 சதவீதம் பேர் கூட முறையான சிகிச்சையை எடுத்துக்கொள்வதில்லை.

    வேறு எந்த பாதிப்புகளினால் ரத்த அழுத்தம் வந்தாலும் அது சிறுநீரகத்தை பாதிக்கும். சிறுநீரகத்தை பொறுத்தவரை ரத்த அழுத்தத்தினை சரியாக கவனிக்கவில்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிறுநீரகத்தின் வழியாக உடலில் உள்ள புரதச்சத்துக்குள் குறைய ஆரம்பிக்கும். சிறுநீரகம் சுருங்கத்தொடங்கும். பின்னர் நிரந்தரமாக சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்.

    தற்போதுள்ள காலக்கட்டத்தில் நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிகமாக சிறுநீரக செயலிழப்பு என்பது அதிகமாகிக்கொண்டே வருகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

    • இன்றைக்கு உடல் உழைப்பு அதிகம் இல்லாத வேலைகளை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
    • மருத்துவரின் ஆலோசனையுடன் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது நல்லது.

    இன்றைய காலகட்டத்தில் உடல் உழைப்பு அதிகம் இல்லாத வேலைகளை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் கணினி முன்பு அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்யும் நிலை இருக்கிறது. நவீன வாழ்க்கைமுறையும் அதற்கேற்பத்தான் அமைந்திருக்கிறது.

    அப்படி உட்கார்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவது ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதே நிலை தொடரும்போது இதய நோய், நீரிழிவு, புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயமும் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கின்றன.

    உட்காருவதற்கும், நிற்பதற்கும், உடற்பயிற்சிக்கும், தூங்குவதற்கும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும். அதனை மையமாகக்கொண்டு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 40 முதல் 75 வயது வரை உள்ள 2 ஆயிரம் பேரின் தினசரி செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. உட்காருதல், நின்றல், உறங்குதல், உடல் செயல்பாடுகளில் ஈடுபடுதல் போன்றவற்றில் தினமும் எவ்வளவு நேரம் ஈடுபடுகிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டது.

    அதனை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் தினமும் எந்தெந்த செயல்களுக்கு எவ்வளவு நேரத்தை செலவிட வேண்டும் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கிறார்கள். அதன்படி தினமும் 6 மணி நேரம் வரை உட்கார்ந்திருக்கலாம், 5 மணி 10 நிமிடங்கள் வரை நிற்கலாம். இரண்டு மணி நேரம் 10 நிமிடங்கள் வரை லேசானது முதல் மிதமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.

    அதேபோல் 2 மணி நேரம் மற்றும் 10 நிமிடங்கள் வரை மிதமானது முதல் தீவிரமான உடல் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். 8 மணி 20 நிமிடங்கள் வரை தூங்குவதற்கு ஒதுக்கலாம் என்று நேரத்தை வகைப்படுத்தி இருக்கிறார்கள்.

    நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உட்காருவதற்கு அதிக நேரத்தை செலவிட்டதை மாற்றியமைத்து லேசான உடல் செயல்பாடுகளில் கூடுதல் நேரத்தை செலவிட்டிருக்கிறார்கள். அவர்களின் சர்க்கரை அளவில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

    வயது, ஒட்டுமொத்த உடல்நலம், உடல் திறன், வேலை மற்றும் தனிப்பட்ட விருப்பம் போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு மருத்துவரின் ஆலோசனை பெற்று ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது நல்வாழ்வுக்கு வித்திடும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

    ×