என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    முருங்கை கீரையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளது. இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல இரத்தம் ஊறும்.
    முருங்கை கீரையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளது. இதில் வைட்டமின்கள் பி , சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம், இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் வளரும் நாடுகளில் இது ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது.

    பசும்பாலைவிட அதிக கால்சியம் சத்து கொண்டது, அதிக புரத சத்துகொண்டது.

    கேரட்டைவிட அதிக வைட்டமின் ஏ கொண்டது.

    கீரை மற்றும் காய்கள், ரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகள் கொண்டதாகவும் மற்றும் ஒரு வலிமையான கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.

    முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் இரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல இரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

    முருங்கை பட்டையோடு வெள்ளைக் கடுகு, பெருங்காயம் இவற்றை சேர்த்து நன்கு அரைத்து சூடாக்கி மூட்டு வீக்கத்தின் மீது பற்று போட சில நாட்களில் மூட்டுவலி குணமாகும்.

    முருங்கை கீரையுடன் உப்பு சேர்த்து இடித்து சாறு எடுத்து அதை இடுப்பில் நன்றாக தேய்த்தால் இடுப்புவலி குறையும்.
    தயிர், சாம்பார் சாதத்திற்கு அருமையாக இருக்கும் இந்த கத்தரிக்காய் பிரை. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கத்தரிக்காய் - 1/4 கிலோ,
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
    மிளகு தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவைக்கு,
    கடுகு - தாளிக்க.

     

    செய்முறை :

    கத்தரிக்காயை நன்றாக கழுவி நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்த பின்னர் கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.

    கத்தரிக்காய் பாதியளவு வெந்தவுடன் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு வேகும்வரை மிதமான தீயில் வதக்கவும். 

    வெந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான கத்தரிக்காய் பிரை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    உடலில் உள்ள முடிகளை அகற்றி வழுவழுப்பாக மாற்றி சருமத்தை அழகாக்கிக் கொள்வதை தற்காலத்து இளம் பெண்கள் விரும்புகின்றனர்.
    பெண்கள் தங்கள் மேனியில் வளரும் முடிகளை நீக்க சேவிங், வேக்சிங் அல்லது த்ரெட்டிங் செய்வது இப்படி எதுவாக இருந்தாலும் அதன் விளைவு என்னவென்று தெரிந்து கொள்வது நல்லது.

    தொடர்ந்து ஹேர் ரிமூவல் செய்வதால் சருமம் பாதிக்கப்படும், அப்படியே விட்டுவிட்டு எப்போதாவது எடுத்தால் முடி வளர்ந்து அதுவே உங்களுக்கு தலைவலியாகிவிடும். முக்கியமான நிகழ்ச்சி மற்றும் மீட்டிங் போது விரைவில் ஹேர் ரிமூவல் செய்து கொள்ளுங்கள்.

    உடலில் உள்ள முடிகளை அகற்றி வழுவழுப்பாக மாற்றி சருமத்தை அழகாக்கிக் கொள்வதை தற்காலத்து இளம் பெண்கள் விரும்புகின்றனர். இதற்காக பார்லர்களுக்குச் சென்று வேக்சிங் செய்து கொள்வதோ அல்லது வீட்டில் இருந்தபடியே கடைகளில் கெமிக்கல் கலந்து விற்கப்படும் கிரீம்களையோ பயன்படுத்துகின்றனர். வேக்சிங், உடலில் தேவையற்ற முடிகளை தற்காலிகமாக நீக்கும் பிரபலமான ஒரு முறையாகும்.

    இது பெரும்பாலானோர் நினைப்பது போல் நவீன முறை அல்ல. எகிப்திய பெண்கள் தங்கள் உடலில் சிறு முடிகளை நீக்க பயன்படுத்திய பண்டைய முறையே ஆகும். ஷேவிங் செய்வது போல் அல்லாமல், வேக்சிங் முறையில் முடி மீண்டும் வளர மூன்று முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும். இது மற்ற முடிகளை நீக்கும் முறைகளில் சாத்தியம் இல்லை என்பதால் பெண்கள் இந்த முறையை அதிகம் விரும்புகின்றனர்.

    வெதுவெதுப்பான அல்லது சூடான மெழுகு பயன்படுத்தி வேக்சிங் செய்வது பொதுவான முறையாகும். இந்த முறையில் பயன்படுத்தப்படும் மெழுகில் முடிகளை
    இலகுவாக நீக்கக்கூடிய சர்க்கரை சேர்ந்து இருக்கும். இது குளிர் வேக்சிங்கை விட மிகவும் ஆற்றல் வாய்ந்த முறையாகும். பெரும்பாலான அழகு நிலையங்களில் செய்யப்படும் வேக்சிங்கும் இது தான்.

    குளிர் வேக்சிங்கில் பயன்படுத்தப்படும் மெழுகு எல்லா மருந்து கடைகளிலும் எளிதில் கிடைக்கக்கூடியது. இந்த முறை பெரும்பாலான பெண்களால் வீட்டிலேயே செய்யப்படுவது.

    சருமத்தில் வளரும் தேவையற்ற முடியின் மீது, முடி வளரும் திசையை நோக்கி மெழுகை ஒரு மெல்லிய அடுக்காக பரப்ப வேண்டும். பின்பு ஒரு துணி அல்லது காகித துண்டு கொண்டு மெழுகு மேல் அழுத்தி, முடி வளரும் திசைக்கு எதிரான திசையில் மிக விரைவாக நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மெழுகு முடியை பற்றி இழுத்து, முடியை நீக்கி மென்மையான சருமத்தைப் பெற வைக்கிறது.

    கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கிற பல பிரச்னைகளுக்கும், கர்ப்ப காலத்தில் உண்டாகிற ரத்தம் அதிகமாக உறைதல் தன்மையே காரணமாக இருக்கலாம். அதற்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
    கருவில் உள்ள குழந்தை சரியான வளர்ச்சியின்றி காணப்படுவது, ஏழு, எட்டு மாதங்களிலேயே தாயின் வயிற்றிலேயே இறந்து போவது, நஞ்சு பிரிவது என கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்கிற பல பிரச்னைகளுக்கும், கர்ப்ப காலத்தில் உண்டாகிற ரத்தம் அதிகமாக உறைதல் தன்மையே காரணமாக இருக்கலாம். அதற்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

    ‘‘எங்கேயாவது அடிபட்டு ரத்தக் கசிவு ஏற்பட்டால், அது உடனே உறைந்தாக வேண்டும். அதுதான் இயல்பானது, பாதுகாப்பானதும்கூட. ஆனால், ரத்தம் ஓடிக் கொண்டிருக்கும் போதே உறைந்தால்? அது ஆபத்தின் அறிகுறி.

    கர்ப்ப காலத்தில் பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு ரத்தம் உறைகிற தன்மை சற்று அதிகமாக இருக்கும். அது ஒரு சிலருக்கு அதீதமானால் ஆபத்து. பரம்பரையாக இந்தப் பிரச்சனை ஒருவரைத் தாக்கலாம். அப்படியில்லாமல் சிலருக்கு முதல் முறையாகவும் பாதிக்கலாம். ஆன்ட்டி த்ராம்பின் 3 குறைபாடு, சி மற்றும் எஸ் புரதக் குறைபாடு உள்ளிட்ட வேறு சில காரணங்களும் இதன் பின்னணியில் இருக்கலாம்.

    முதல் முறை கர்ப்பம் தரிக்கிற சில பெண்களுக்கு கர்ப்பத்தில் சிக்கல்கள் வரும். அடுத்த முறை கர்ப்பம் தரிக்கிற போது, அவர்களது முதல் கர்ப்ப கால வரலாறுகளைக் கேட்டுப் பார்த்தால், மருத்துவர்களுக்கு சந்தேகம் வரும். இன்னும் சில பெண்கள் முதல் கர்ப்பம் உறுதியானதுமே மருத்துவப் பரிசோதனைக்கு வரும் போது, தன் அம்மாவுக்கோ, சித்திக்கோ, தாய்வழி பெண் உறவுகளுக்கோ உண்டான குறைப்பிரசவம், கர்ப்பத்தின் போது எகிறிய ரத்த அழுத்தம் பற்றிச் சொல்வதுண்டு.

    அதன் அடிப்படையில், அவர்களை சில சிறப்பு ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளச் செய்வார்கள். ரத்தம் உறையும் தன்மை கூடுதலாக இருப்பதுதான் முதல் கர்ப்பத்தில் பாதிப்புகள் வந்ததற்கும், தாய் வழிப் பெண்களின் கர்ப்ப கால சிக்கல்களுக்கும் காரணம் என்பது உறுதியானால், அடுத்தக்கட்டமாக அவர்களை ‘ஹை ரிஸ்க்’ பேஷன்ட்டுகளாக பாவித்து, அதிகபட்ச கவனத்துடன் சிகிச்சையளிப்பார்கள். இவர்களுக்கு ரத்தம் உறைவதைத் தடுக்கும் ஊசிகளை தினமும் போட வேண்டியிருக்கும்.

    கர்ப்பம் உறுதியானது முதல், பிரசவத்துக்கு 2 நாள்கள் முன்பு வரை இந்த ஊசியைப் போட்டாக வேண்டும். இதன் மூலம் ரத்தம் உறையாமல், நல்ல முறையில் கரு வளர்ந்து, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். எனவே உங்களுக்கோ, உங்கள் தாய்வழிச் சொந்தங்களுக்கோ மேற்சொன்ன அனுபவங்கள் இருப்பின், தயங்காமல் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்..
    சிறுதானியங்களில் சத்தான உணவுகளை செய்யலாம். இன்று சிறுதானியம், பாசிப்பருப்பு சேர்த்து சத்தான இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பதப்படுத்திய சிறுதானிய மாவு (சாமை, குதிரைவாலி) - தலா 1 கப்.
    பாசிப்பருப்பு - 1 கைப்பிடி

    வறுத்து அரைக்க:

    கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பொட்டுக்கடலை, துவரம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 4-5,
    கட்டி பெருங்காயம் - சிறிது,
    பாதாம், முந்திரி - தலா 6.

    தாளிக்க :

    கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - சிறிது,
    நெய், உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
    மஞ்சள்தூள் - சிறிது.



    செய்முறை

    பாசிப்பருப்பை வேக வைத்து கொள்ளவும்.

    வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

    சாமை, குதிரைவாலி மாவை லேசாக வறுத்து, 1½ கப் வெந்நீர், உப்பு சேர்த்து கிளறி இட்லி சட்டியில் இடியாப்பமாக பிழிந்து ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயைக் காயவைத்து தாளிக்க வைத்திருக்கும் பொருட்களை தாளித்து, மஞ்சள்தூள், உப்பு, வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து இடியாப்பத்தை உதிர்த்து போட்டு நன்கு கலந்து, வறுத்து அரைத்த பொடிகளை தூவி கலந்து, சூடாக சிறிது நெய் விட்டு, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

    குறிப்பு: மேலும் ருசியாக்க வறுத்த முழு முந்திரி, தேங்காய்த் துருவல், மல்லித்தழை, எலுமிச்சைச்சாறு பிழிந்து கலந்து பரிமாறலாம். இதேபோல் வறுத்த சேமியாவை ஆவியில் வேகவைத்து தாளித்தும் செய்யலாம்.
    தொடர்ந்து இருக்கும் இருமல், படி ஏறும்பொழுது மூச்சு வாங்குதல், தடித்த கரகரப்பான குரல் போன்றவை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
    தொடர்ந்து இருக்கும் இருமல், படி ஏறும்பொழுது மூச்சு வாங்குதல், தடித்த கரகரப்பான குரல் போன்றவை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

    ஒரு காலில் மட்டும் வீக்கம், வலி என்று இருக்கின்றதா? உங்கள் காலில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம். இந்த அடைப்பு சிறிது உடைத்து அந்த துகள் ரத்த ஓட்டத்தின் மூலமாக நுரையீரல் அடைந்து அங்குள்ள ரத்த குழாயினை அடைத்து கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தலாம். மூச்சு விடுவதில் கடினம், நெஞ்சு வலி போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். மேலும் நடையினைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

    கை வீசி ஆனந்தமாய் நடங்கள்.
    பச்சை நிற செடி கொடி, புல் தரை சூழல், மனமகிழ்ச்சி தரும்.
    ஏதோ சிந்தனை செய்தபடி கவலைப்பட்டுக் கொண்டபடி நடைபயிற்சி செய்யாதீர்கள். மூச்சின் மீது கவனம் வைத்தபடி நடக்கலாம். ஆனால் போக்குவரத்து மிகுந்த நேரத்தில் இவ்வாறு செய்யக்கூடாது.
    * செல்போனை வீட்டில் விட்டு செல்லுங்கள். போனில் பேசியபடியே நடப்பதற்கு நடக்காமலே இருக்கலாம்.
    * நடப்பது உங்களுக்கு இனிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தினை குறைக்கும் என்பதனை அறியுங்கள்.
    * ஒவ்வொரு நேர உணவிற்குப் பின்பும் சிறிது நேரம் நடங்கள்.
    * அதிக நேரம் அமர்ந்தபடி இருக்காதீர்கள்.
    * கண் விழித்தவுடன் படுக்கையில் இருந்து எகிரி குதித்து ஒட்டப்பந்தயம் போல் வேலைகளை ஆரம்பிக்காதீர்கள்.

    நம் மரபணுக்களும் நாம் வளர்ந்த முறையும் நாம் மன அமைதியாக வாழ்க்கையினை ஏற்கும் குறைவினை நிர்ணயிக்கின்றது. எனவே நான் நன்கு இருக்கிறேன் என்ற மன நிலையினை வளர்த்து கொள்ளுங்கள். எப்பொழுதும் சுய உணர்வோடு இருங்கள். திடீரென உடலில் சிகப்பு திட்டுகள் அரிப்புடன் இருந்தால் (அலர்ஜி அல்லாது) நீங்கள் அதிகம் ஸ்ட்ரெஸ் ஆகியிருப்பதன் வெளிப்பாடாகவும் இருக்கலாம் என்பதனை உணருங்கள். குளிர்ந்த ஈரமான டவல் கொண்டு சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் வைக்கலாம்.

    * யோகா, தியானம் போல் மனதினை அமைதி படுத்துவது எதுவும் இல்லை எனலாம். எனவே யோகா, தியானம் பழகுங்கள்.

    * மணமுள்ள பூக்கள், வாசனை இவை ஸ்டிரெஸ்சினை போக்கும். இதனாலேயே நம் முன்னோர் சந்தனம், பன்னீர், ஊதுவத்தி, சாம்பிரானி, மண முள்ள பூக்கள் இவைகளை இறைவனுக்கு பூஜை என்ற முறையில் பயன்படுத்தி வந்தனர்.

    * வாய் விட்டு கத்துவது ஸ்டிரெஸ் நீக்கும் என்பது இன்றைய ஆய்வின் கூற்று. இதைத்தான் மந்திரங்கள், ஓம் என்ற உச்சாடனம் மூலம் அன்றிலிருந்தே செய்து வந்துள்ளனர்.

    * யாரும் பார்க்காமல் அறையினுள் இசைக்கு நடனமிடுங்கள். இதுதான் பண்டைய பஜனை முறைகள்.

    * பாடல்கள் மன அமைதி தருகின்றன.

    * இதனால் மன நிறைவு பெற்று குறைவாக சாப்பிடுவீர்கள்.

    * வாத்திய வாசிப்பு மூளையினை கூர்மையாக்கும்.

    * நல்ல பாட்டு ரத்த நாளங்களை இளக செய்யும்.

    * கூட்டுப் பாடல், பிரார்த்தனை மன மகிழ்வு தரும்.

    * இசை உங்களது வேலையினை துரிதமாக செய்ய வைக்கும்.

    * இசை சிந்தனைத் திறனை கூட்டும்.

    * சக்தி கூடும்.

    * அமைதியான தூக்கம் வரும்.

    * உடல், மன புண்கள் ஆறும்.

    * வலி குறையும்.

    * மறதி நோய் பாதிப்பு குறையும்.

    சரி மீண்டும் முதலில் ஆரம்பித்த நுரையீரலுக்கு வருவோம்.

    * ஒருவர் அதிக அளவு மன உளைச்சலில் இருந்தால் சதா வைரஸ் சளி பாதிப்பு, கிருமி தாக்குதலுக்கு உள்ளாகும் என ஆய்வுகள் கூறுகின்றன.

    * படிகட்டு வேண்டாம், லிப்டில் போவோம் என நீங்கள் நினைத்தால் உங்கள் சுவாச மண்டலத்தினை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

    * ஆஸ்துமா தொல்லை இருந்தாலும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

    * இருமலில் ரத்தம் இருந்தால் உடனடி மருத்துவ கவனம் தேவை.

    * திடீரென குரல் தடித்தோ, கரகரப்பாகவோ மாறினால் உடனடி மருத்துவ கவனிப்பு தேவை.

    * தொடர்ந்து எக்காரணமும் இன்றி பல வாரங்கள் மேல் கை வலி இருந்தால் மருத்துவ கவனம் தேவை.

    * விரல் நகங்களில் நீல நிறம் தெரிந்தால் மருத்துவரை அணுகவும்.

    * காரணம் இன்றி எடைகுறைந்தாலும் நுரையீரல் பற்றிய கவனமும் தேவை.

    * இரவு முழுவதும் இருமல் உங்களை தூங்கவிடாமல் செய்தால் முதலில் படுக்கை சுகாதாரத்தினை கவனிக்கவும், மேலும் மருத்துவ ஆலோசனை பெறுக.

    * எப்பொழுதும் சோர்வாக இருந்தால் பல பரிசோதனை களோடு நுரையீரலுக்கும் கவனம் செலுத்த வேண்டும்.

    * புகைப் பிடிப்பவராயின் முதலில் இந்த நொடியே அதனை விட்டு விடுங்கள்.

    * பிளீச்சிங்பவுடர், தரைவிரிப்பு, வேக்கம் கிளீனர், வாஷ்பேஸின், வீட்டில் அடைந்த பகுதி, பூச்சுக்கொல்லிகள், பெயிண்ட் போன்றவை உங்கள் நுரையீரலுக்கு தீங்கு விளைவிப்பவை, அதனை ஜாக்கிரதையாக கையாளவும்.

    அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு உண்டாகும் கழுத்து, முதுகெலும்பு, இடுப்பு போன்ற வலிகளுக்கான உடற்பயிற்சிகளை பார்க்கலாம்.
    உடல் உழைப்பு அற்ற வாழ்க்கைமுறையினால் மூளை, கழுத்து, முதுகெலும்பு, கண்கள், விரல்கள், இடுப்பு உள்ளிட்ட உறுப்புகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. நீண்ட நேரம் அலுவலகத்தில் அமர்ந்தே வேலை செய்பவர்கள், இருந்த இடத்திலேயே சில எளிய பயிற்சிகளைச் செய்ய முடியும். அலுவலகத்தில் பணிபுரிவோர் ஃபிட்டாக இருப்பதற்கான எளிமையான பயிற்சிகளை பார்க்கலாம்.

    பயிற்சி 1: நிமிர்ந்த நிலையில் நாற்காலியில் அமர வேண்டும். வலது கையை வலது கன்னத்தில் பதித்து, இடது பக்கம் மெதுவாகத் திருப்பி, சில விநாடிகளில் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதுபோல இடது பக்கத்துக்கும் என தலா மூன்று முறை செய்ய வேண்டும்.

    பலன்கள்: மூளையில் இருந்து வரும் நரம்புகளைத் தூண்டிவிடும். கழுத்துப்பிடிப்பு இருந்தால், சரியாகும். மூளைக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். மன அழுத்தத்தைச் சரிசெய்யும். மூளையைப் புத்துணர்வு பெறவைக்கும். தூக்கக் கலக்கத்தில் இருப்பவர்கள், உற்சாகமாக வேலை செய்ய உதவும்.

    பயிற்சி 2: இரு கைகளையும் கோத்து, கட்டை விரல்களை தாடையின் அடியில்வைத்து, கழுத்தை மெதுவாக மேலே தூக்கி, பழைய நிலைக்கு வர வேண்டும். இதேபோல, கைகளை தலைக்குப்பின் கோத்து, கழுத்தை மென்மையாகக் கீழே அழுத்த வேண்டும். இப்படி, மூன்று முறை செய்ய வேண்டும்.

    பலன்கள்: கழுத்துப்பிடிப்பு இருந்தால், சரியாகும். மூளைக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். மூளையைப் புத்துணர்வு பெறவைக்கும். தூக்கக் கலக்கத்தில் இருப்பவர்கள், உற்சாகமாக வேலை செய்ய உதவும்.

    பயிற்சி 3: நாற்காலியில் நேராக அமர்ந்தபடி, தலையை இடது தோள்பட்டையின் பக்கமாக, காது தோள்பட்டையில் படும்படி, சாய்க்க வேண்டும். பின், வலது தோள்பட்டையின் பக்கம் சாய்க்க வேண்டும். இதேபோல், தலையை  மேலே உயர்த்தியும் கீழே குனிந்து தரையைப் பார்த்தபடியும் செய்ய வேண்டும்.

    பலன்கள்: மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லும். கழுத்துப் பகுதி வலிமை பெறுவதுடன், அந்தப் பகுதியில் இறுக்கம் குறையும். வளைவுத்தன்மை அதிகரிக்கும்.

    உணவுக்குப் பின், இரண்டு மணி நேரம் கழித்து இந்தப் பயிற்சிகளைச் செய்யலாம். அலுவலகத்தில் உள்ளவர்கள், காலை 11 மற்றும் மதியம் 3 மணி அளவில், கை விரல்கள், கழுத்து, தோள்பட்டை போன்றவற்றுக்கான பயிற்சிகளைச் செய்வது புத்துணர்வு அளிக்கும்.
    பள்ளி விடுமுறை நாட்கள் பெற்றோர்களும், பிள்ளைகளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய காலம். சுருக்கமாகச் சொன்னால் விடுமுறை நாட்கள் வீணடிக்க வேண்டிய நாட்கள் அல்ல பயன்படுத்த வேண்டிய நாட்கள்.
    மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பள்ளி விடுமுறை காலம் வந்துவிட்டது. ஆனால் இந்த இரண்டு மாதங்கள் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்த மாணவர்களுக்கு சில நாட்களிலேயே சலிப்பு தட்டியிருக்கும். எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதை விட சிரமமானது எதுவும் இல்லை என்பது மாணவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.

    பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டால் அது பள்ளிகளுக்குத்தான் விடுமுறையன்றி, கல்வி கற்பதற்கும், கொண்டாடுவதற்கும் விடுமுறையல்ல. இன்னும் சொல்லப்போனால் அது பல வித்தைகளை கற்றுக்கொள்ள ஒதுக்கப்பட்ட காலம். எதைச் செய்தாலும், செய்யாவிட்டாலும் விடுமுறை நாட்களில் ஒரு தமிழ் நாளிதழையும் ஒரு ஆங்கில நாளிதழையும் தவறாமல் படித்துவிட வேண்டும். நாகரிக மக்களின் அடையாளமே அவர்கள் உலக நிகழ்வுகளை தெரிந்திருப்பார்கள் என்பதுதான்.

    உலகநாடுகள், உலக மக்கள்தொகை பெருக்கம் உலக அரசியல், உலக பொருளாதாரம், உலக வரலாறு, உலக வர்த்தகம், உலக தத்துவங்கள், உலக தொழில்நுட்பம் என்று உலகளாவிய விஷயங்களை தெரிந்தவர் தான் சமூகத்தில் முழு மனிதனாக மதிக்கப்படுகிறார். ஆனால் உலக அறிவு இல்லாத ஒரு மாணவன், நாகரிகம் எட்டிப்பார்க்காத காடுகளில் வாழும் கற்கால மனிதனுக்கு சமமாக கருதப்படுவார். செய்தித்தாள் படிக்காத சென்டினல் என்ற பழங்குடி மக்கள் இன்னும் அந்தமான் தீவுகளில் வாழ்கிறார்கள்.

    அவர்களை பேட்டி காணச்சென்ற ஜான் ஆலன் சா என்ற அமெரிக்க செய்தியாளரைக் கொன்று கடலில் வீசிவிட்டார்கள். அவர்கள் அனைவரும் செய்தித்தாள் வாசிப்பது இல்லை. எனவே உலக நடப்பு நிலவரங்கள் அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு தெரிந்த செய்திகள் எல்லாம் அந்த தீவில் பெய்த மழையும், அடித்த வெயிலும் உள்ள செடிகளும், கொடிகளும், மிருகங்களும்தான்.

    பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி செய்யவும், விளையாடவும் நேரம் இருந்திருக் காது. அதுவும் தீவிரமாக படிக்கும் மாணவர்களுக்கு நேரம் இருக்கவே இருக்காது. ஆனால் விடுமுறை நாட்களில் அதற்கான நேரம் நிச்சயம் இருக்கும். பள்ளி மாணவர்கள் தினமும் ஒரு மணிநேரம் ஓட்டபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபடவேண்டும். இறகு பந்து, டென்னிஸ், கிரிக்கெட் போன்று வழக்கமாக விளையாடும் குழந்தைகள் கூட ஒரு மணிநேரம் ஓடியாக வேண்டும். பெற்றோர்களும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காலை ஒரு மணிநேரம் நடைபயிற்சி செய்யத்தொடங்கலாம். சில வாரங்களுக்குப் பிறகு ஓடலாம். குடும்பமாக காலையில் ஓடினால் ஒரு குழு உணர்வை வீட்டில் ஏற்படுத்த முடியும். குடும்ப ஆரோக்கியம் பேணவும் அது உதவும்.

    பிறநாட்டு மொழிகள் கற்றுக்கொள்பவர்களுக்கு வேலை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. எனவே இந்த இரண்டு மாதத்தில் பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பான், சீனா போன்ற பிறநாட்டு மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியை கற்க மாணவர்கள் முயற்சி செய்யலாம். இன்று ஆன்லைன் மொழிக்கல்வி வசதி இருக்கிறது. அது இலவசமாக கிடைக்கிறது. சில மாணவர்களுக்கு மொழி கல்வி இயற்கையாகவே வந்துவிடும். அப்படிப்பட்டவர்கள் பல மொழிகளை ஒரே நேரத்தில் கற் கவும் முடியும். ஓரளவுக்கு புலமை பெற்றபின் அயல்நாடுகளுக்குச் சென்று நமது தமிழ் மொழியை கற்பிக்கும் வாய்ப்பும் இந்தப் பிள்ளைகளுக்கு எளிதில் கிடைக்கும். தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு இந்தத் துறையில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பிருக்கிறது

    சில மாணவர்களுக்கு கலை மீது தீராத ஆர்வம் இருக்கும். இசைக்கருவி வாசித்தல், பாடுதல், ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல் போன்ற கலைகளில் அந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி எடுக்க சிறந்த நேரம் அடுத்த 60 நாட்கள். தொலைக்காட்சியில் விவாதம் நடத்தும் இளம் நெறியாளர்கள் இப்படி பயற்சி எடுத்தவர்கள்தான்.

    எல்லா பெற்றோருக்கும் தேசிய கடமை ஒன்று உண்டு. அது குழந்தைகளுக்கு தரவேண்டிய அறிவியல் கல்வி. அறிவியலை கற்று சரியாக புரிந்துகொண்ட மக்கள் வாழும் நாடுகள் மட்டும்தான் இன்று சிறந்து விளங்குகின்றன. அந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் சம உரிமையும், சம நீதியையும், சம மரியாதையையும் வழங்க முன் வந்திருக்கிறார்கள். அறிவியல் சரியாக கற்ற மக்கள், சக மனிதனையும் பிற உயிரினங்களையும், கடலையும், காடுகளையும், மலைகளையும், நதிகளையும் உண்மையிலேயே நேசிக்கிறான். அவர்கள்தான் இயற்கையை பாதுகாக்க உண்மையான அக்கறையும் காட்டுகிறார்கள். மக்கள் தொகையையும் கட்டுப்படுத்திவிட்டார்கள். எனவே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அறிவியலில் ஆர்வம் வரும் வகையிலான அறிவியல் நூல்களை அறிமுகம் செய்ய வேண்டும். இன்று அதற்கான ‘என்செக்கிளேப்பீடியா’ என்ற நூல்கள் வந்துவிட்டன. அவற்றை பிள்ளைகளுக்கு விடுமுறை நாட்களில் வாங்கித்தாருங்கள். அறிவியல் ஆர்வத்தை தட்டி எழுப்பினால் அந்த மாணவன் தானாகவே படிக்க ஆரம்பித்துவிடுவான். பிறகு அவனது அறிவியல் வேட்கையையும், அறிவியல் வளர்ச்சியையும் யாராலும் தடுத்து விட முடியாது.

    மேலே சொன்ன செயல்கள் அனைத்தையும் நாம் மாணவர்களுக்கு திணிக்கக் கூடாது. அவற்றை அறிமுகம் செய்ய வேண்டும். விடுமுறைக்கால கல்விப்பயிற்சி அவர்களது சொந்த விருப்பத்தின் பேரில் செய்பவையாகவும் அவர்கள் விரும்பும் காலத்தில் செய்வதுமாக இருத்தல் வேண்டும். எதையாவது ஒரு நல்ல காரியத்தை செய்து முடித்துவிட்டால் பெற்றோர்கள் அந்த பிள்ளையை பாராட்ட வேண்டும். ஒரு அற்புதமான கலையை 50 நாட்களில் கற்றுக்கொண்டால் அவர்களுக்கு பரிசு கொடுப்பதைப் போல சுற்றுலாதலங்களுக்கு அழைத்துச்செல்லலாம். நீங்கள் பிறந்த ஊருக்கு உங்கள் குழந்தையை அழைத்துச்சென்று நீங்கள் வாழ்ந்த சூழ்நிலையை விளக்கிக் கூறலாம்.

    ஒரு கடினமான சாகச பயணமாக ஒரு மலை மீது ஏறலாம். 50 கி.மீட்டர் தூரம் நடக்கலாம். வெகு துரத்திற்கு சுற்றுலா பயணம் செல்லலாம்.

    புனித ஜார்ஜ் கோட்டை, செஞ்சிக்கோட்டை, வேலூர் கோட்டை போன்ற வரலாற்று பிரசித்திப்பெற்ற இடங்கள், இயற்கை எழில்மிக்க உயிரியல் பூங்காவிற்கு போய் வரலாம். வசதி படைத்தவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள சுற்றுலாதலங்களுக்கு சென்று வரலாம்.

    பத்து வயதிற்குட்பட்ட குழந்தைக்கு விடுமுறையில் நீச்சல் கற்றுத்தருவது சாலச்சிறந்தது. அருகில் உள்ள நீச்சல் குளத்திற்கு முப்பது நாட்கள் அனுப்பி வைத்தால் குழந்தை நீச்சல் கற்றுக்கொள்ளும். அதன் பின்னர் நீர்நிலைகளை பார்த்தால் ஏற்படும் அச்சம் அகன்றுவிடும். மிருக காட்சி சாலை, காவல் நிலையம், ரெயில் நிலையம் என்று குழந்தைகளை அழைத்துச்சென்று காட்டலாம். அருங்காட்சியகத்திற்கும் மீன் காட்சியகத்திற்கும், கோளரங்கத்திற்கும் அவசியம் அழைத்துச்செல்ல வேண்டும்.

    பள்ளி விடுமுறை நாட்கள் பெற்றோர்களும், பிள்ளைகளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய காலம். சுருக்கமாகச் சொன்னால் விடுமுறை நாட்கள் வீணடிக்க வேண்டிய நாட்கள் அல்ல பயன்படுத்த வேண்டிய நாட்கள். பல அடிப்படை கேள்விகளுக்கு விடை காண வேண்டிய நாட்கள். ஆபிரகாம் லிங்கன் சொன்னதுபோல கோடாரியை தீட்ட வேண்டிய நாட்கள். எதிர்காலத்தில் மாணவச்செல்வங்கள் படைக்கப்போகும் சாதனைக்கு இந்த நாட்களில் உங்களது உடலையும், உள்ளத்தையும் பட்டை தீட்ட பயன்படுத்துங்கள்.

    முனைவர் செ.சைலேந்திரபாபு, காவல்துறை இயக்குனர்.
    வட மாநிலங்களில் வெந்தயக்கீரை பிரியாணி மிகவும் பிரபலம். இன்று எளிய முறையில் வெந்தயக்கீரை பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெந்தயக்கீரை - 1,
    பிரியாணி அரிசி - 1/2 கிலோ,
    தேங்காய்ப்பால் - 1 கப்,
    சின்ன வெங்காயம் - 10,
    தக்காளி - 2,
    கறிவேப்பிலை - 10,
    தேங்காய் எண்ணெய் - தேவைக்கு,
    கிராம்பு, ஏலக்காய், பட்டை - தலா 2,
    பூண்டு - 10,
    வரமிளகாய் - 2,
    கொத்தமல்லி பவுடர் - 1½ டீஸ்பூன்



    செய்முறை :

    வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    பூண்டு, வரமிளகாய், தனியா தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடானதும் வெந்தய கீரையை போட்டு வதக்கி வைத்துக்கொள்ளவும்.

    குக்கரில் நெய், தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, ஏலக்காய், பட்டை சேர்த்து தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வதக்கிய வெந்தயக்கீரை, அரிசி சேர்த்து தேவையான அளவு தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும். .

    இப்போது சூப்பரான கமகமக்கும் ஆரோக்கியமான வெந்தயக்கீரை பிரியாணி தயார்.

    இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. முறையான உணவு, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
    இந்த மக்கள் தொகையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நோய்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. மக்களை அவதியுறவைக்கும் நோய்களில் சர்க்கரை நோயும், இரத்த அழுத்த நோயும் தான் முதலிடம் வகிக்கிறது. இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த சகோதரர்களாக மக்களை ஆட்டிப் படைக்கின்றன.

    இன்று 63 சதவிகிதமாக உள்ள நீரிழிவு நோயாளியின் எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 20 சதவிகிதம் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் நம் உணவு முறையே. மேலும் நகர வாழ்க்கையின் தாக்கமும் ஒரு காரணம். போதிய உடற்பயிற்சியின்மை என பல பாதிப்புகளின் வெளிப்பாடே நீரிழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது.

    நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும். இத்தகைய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட வைப்பது நம் உணவு முறையே. முறையான உணவு, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

    காய்கறிகள்

    கத்தரி பிஞ்சு, சுரைக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, வெண்டைக்காய், கோவைக்காய், பீன்ஸ், சாம்பல் பூசணி, புடலங்காய், வாழைத்தண்டு, காளி பிளவர், வெண்பூசணி, பாகற்காய், வாழைப்பூ, காராமணி, கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வாழை பிஞ்சு, நூல்கோல், முருங்கைக் காய், வெள்ளரிக்காய், சௌசௌ இவைகளுடன் கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, புதினா சேர்த்து பச்சடியாக தினமும் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோயின் பாதிப்பிலிருந்து எளிதில் மீளலாம்.

    கீரைகள்

    சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கீரைகளுக்கும் உண்டு. கறிவேப்பிலை, தூதுவளைக் கீரை, ஆரைக்கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக் கீரை, துத்திக் கீரை, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லாரைக் கீரை, கொத்தமல்லிக் கீரை இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து தினமும் 1 டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம், அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை எதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

    உகந்த பழங்கள்

    சாத்துக்குடி 1, ஆரஞ்சு 2, ஆப்பிள் (தோலுடன்) 1, கொய்யா (சிறியது) 2, பேரிக்காய் (சிறியது) 2, வெள்ளரிக்காய் 2, அன்னாசிப்பழம் 4 வளையங்கள், தர்பூசணி 1 துண்டு, மேல் சொன்ன பழங்களில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டுள்ள அளவுகளில் தினமும் உண்ணலாம். உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பசி அல்லது தாகம் எடுத்தால் வெள்ளரி, அரிசிப்பொரி, மோர் (கறிவேப்பிலை, கொத்தமல்லி சீரகம் கலந்தது), கோதுமை உப்புமா, அவித்த சுண்டல், சிறுபயறு, கொண்டைக் கடலை, கொள்ளு, தட்டைப்பயிறு இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.

    எலுமிச்சை சாறு 200 மி.லி., வாழைத்தண்டு சூப் 200 மி.லி., அருகம்புல் சூப் 200 மி.லி., நெல்லிக்காய் சாறு 100 மி.லி கொத்தமல்லி சூப் 100 மி.லி. , கறிவேப்பிலை சூப் 100 மி.லி. இவற்றில் ஏதாவது ஒன்றை சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது. எண்ணெயில் வறுக்கப்பட்ட அனைத்து அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

    முட்டை 1 (வெள்ளைக் கரு மட்டும்) மீன் 2 துண்டுகள் கோழிக்கறி 100 கிராம் (அவித்தது) மேற்கண்ட உணவுகளை முறையாக சாப்பிட்டும் தினமும் உடற்பயிற்சியும், நடைபயிற்சியும், செய்து வந்தால் சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
    தாழ்வு மனப்பான்மை, விடாமுயற்சியின் மீது நம்பிக்கையின்மை, மற்றவர்களுடைய வெற்றியைக் கண்டு வெதும்புதல், சோம்பேறித்தனம் போன்றவை தன்னம்பிக்கை குறைவாக இருப்பதின் வெளிப்பாடு ஆகும்.
    ஒரு மனிதன் உயர்வதற்கு விடாமுயற்சி, கடின உழைப்பு, திட்டமிடல் போன்ற பல குணநலன்கள் கூறப்படலாம். ஆனால் அவை எல்லாமே ‘தன்னம்பிக்கை’ என்ற அடித்தளத்திலிருந்து தான் உருவாகுகின்றன. நம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும் தன்னம்பிக்கை நிரம்பப்பெற்றவர்கள் சோர்வு அடைவதில்லை. துவண்டு போவதில்லை. தாழ்வு மனப்பான்மை, விடாமுயற்சியின் மீது நம்பிக்கையின்மை, மற்றவர்களுடைய வெற்றியைக் கண்டு வெதும்புதல், சோம்பேறித்தனம் போன்றவை தன்னம்பிக்கை குறைவாக இருப்பதின் வெளிப்பாடு ஆகும்.

    நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் தேவை. அந்த நம்பிக்கை, என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும் என்ற மனஉறுதியுடன் அமைய வேண்டும். அப்படி இருந்தால் வெற்றி உங்களை தேடிவரும். அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல. விடாமுயற்சியினால் தான். தன்னம்பிக்கையும் உற்சாகமும் மட்டும் இருந்தால் போதும். வெற்றி இலக்கை அடைந்துவிடலாம். சிந்தனையைவிடச் செயல்தான் எல்லோரையும், எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும்.

    வெற்றி பெறுவோம் என்ற திடமான மன உறுதியில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தொடர்ந்து விடாது செயலாற்றிக் கொண்டேயிருந்தால் வெற்றிக்கனியை பறிக்கமுடியும். தன்னம்பிக்கையே உலகின் மிகச்சிறந்த ஆயுதம். தன்னம்பிக்கையே நோய்களையும், உடல் வலியையும், மனவேதனைகளையும் நீக்குகிறது. பிரச்சினைகள் வரும் போது, இது என் விதி என்று மனம் தளரக் கூடாது. மாறாக, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி நம்பினால், நீங்கள் புதியவனாக மாற முடியும். அந்த தன்னம்பிக்கை தோல்வியுறுபவர்களை வெற்றியாளராக்கும்

    தன்னம்பிக்கை கொண்டுள்ளோர் தங்களது உறவினர்கள் அல்லது நண்பர்களாக இருந்தாலும் அனைவரிடமும் நம்பிக்கையைத் தூண்டிவிடுகின்றனர். மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவதை வெற்றியடைவதற்கான ஒரு முக்கிய வழிமுறையாகத் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள் வகுத்துக் கொண்டுள்ளனர். தன்னம்பிக்கையைக் கற்றுக்கொள்ள முடியும், வளர்த்துக்கொள்ள முடியும் என்பது நல்ல விஷயம். உங்களது சொந்த தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதிலோ உங்களைச் சுற்றிலும் உள்ளவர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதிலோ நீங்கள் ஈடுபடும்போது, அந்த முனைப்பு நல்ல பலன் தரும்.

    சுய ஆற்றல், சுய உழைப்பு ஆகியவைதான் தன்னம்பிக்கையை உருவாக்கிக்கொள்வதற்கான இரண்டு முக்கிய அம்சங்கள். இதுதொடர்பான இலக்குகளை அடைவதில் நாம் வெற்றி பெறும்போது, சுய ஆற்றலை நாம் உணர்கிறோம். ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெறுவதற்காக நாம் கடுமையாகப் பாடுபட்டால், நம்மால் வெற்றி பெற முடியும் என்ற அறிதலில் நம்பிக்கை பிறக்கிறது. தோல்விகள் குறுக்கிடும்போது துவண்டுவிடாமல், சிக்கலான சவால்களை எதிர்கொண்டு வெற்றி நடை போடுவதில் இப்படிப்பட்ட நம்பிக்கைதான் நம்மை வழிநடத்துகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டில் பயங்கரமான சூறாவளி ஒன்று வீசியது. விசிகோத்தை ஆண்ட மன்னன் ஸ்விந்திலா என்பவனின் மகுடத்தை அந்தச் சூறாவளி வெளிக் கொணர்ந்தது. 1200 வருடங்கள் பூமிக்கடியில் புதைந்திருந்த மகுடம் அது. இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துவது எதை? உங்கள் தன்னம்பிக்கை மகுடம் கூட உங்களுக்குள்ளேயே அடியில் புதைந்திருக்கிறது. அதை வெளிக்கொணருங்கள் என்பதைத்தான். இந்த தன்னம்பிக்கை வந்தவுடன் உங்கள் தோற்றம் மிடுக்குறும். பார்வை ஒளி பெறும். பேச்சு வலிமை பெறும்.

    கார்டினல் கிப்பன்ஸ் என்ற முதுபெரும் பேரறிஞர் தாம் இறந்து போவதற்கு முன்பாகக் கூறிய வார்த்தைகள் இவை:. நான் 86 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்திருக்கிறேன். நூற்றுக்கணக்கானவர்கள் வெற்றியின் முனையைத் தொட்டதைக் கண்டிருக்கிறேன். வெற்றியடைவதற்குத் தேவையான குணங்களில் தலையாயது தன்னம்பிக்கைதான் என்றார்.

    தன்னம்பிக்கை உன்னுள் இருக்கும்வரை, எல்லா உள்ளங்களும் உன் விழியை நாடும். ஆண்டவன் உன்னை எங்கு வைக்கிறாரோ அங்கிரு, அந்த இடத்தில் அமைதியாக இருந்து பணியாற்று. எனது குறிக்கோள் என்ன என்பதை நானே நிர்ணயித்துள்ளேன். ஆகவே அதை அடைய தீவிரமாகவும், முழு முயற்சியுடனும் தொடர்ந்து ஈடுபடுவேன். வெற்றி பெறுவேன் என தினமும் உறுதி கொள்.

    நியாயம், தர்மம் இவற்றின் அடிப்படையில் அல்லாது மற்ற வழியில் வரும் வெற்றி நிலைக்காது என்பதால் தன்னம்பிக்கையுடன் நேர்மையான வழியிலேயே நிச்சயம் வெற்றியைப் பெறுவேன், வெற்றி நிச்சயம் என்ற தன்னம்பிக்கை சிந்தனையை காலை எழுந்தவுடன் மனதிற்குள் கூறிக் கொள்ளுங்கள்.

    மனிதனுக்கு இரு கைகளை விட முக்கியமானது தன்னம்பிக்கை. யானைக்கு பலம் தும்பிக்கை. மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்ற வார்த்தையை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. மறந்தால் பூமியில் நிலைத்து வாழ முடியாது. ஆகவே அந்த தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வெற்றி சிறிதளவு பெற்றாலும் உங்கள் தன்னம்பிக்கை வலிமை பெறும். அதாவது நீங்களே உங்களை சோதனைக்குள்ளாக்க ஆயத்தமாகுங்கள்.

    -அன்பரசி சேதுபதி, 8-ம் வகுப்பு, அமல அன்னை மேல்நிலைப்பள்ளி, காரங்காடு.
    முள்ளங்கியில் நீர்சத்து அதிகளவில் உள்ளது. கோடைகாலத்தில் முள்ளங்கிளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
    தேவையான பொருட்கள்

    முள்ளங்கி - 1,
    வெங்காயம் - 1,
    பச்சை மிளகாய் - 1,
    காய்ந்த மிளகாய் - 1,
    பயத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
    தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
    வறுத்த வேர்கடலை உடைத்தது - 1 டேபிள் ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    பயத்தம்பருப்பை நன்றாக கழுவி ஊற வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முள்ளங்கியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் போட்டு தாளித்த பின்னர் பச்சைமிளகாய், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    அடுத்து அதில் ஊறிய பயத்தம்பருப்பு, முள்ளங்கி, உப்பு சேர்த்து வதக்கவும்.

    முள்ளங்கி வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடிவைத்து மிதமான தீயில் வேக வைக்கவும்.

    முள்ளங்கி வெந்ததும் தேங்காய்த்துருவல், வேர்க்கடலை போட்டு பிரட்டி பரிமாறவும்.

    சூப்பரான சத்தான முள்ளங்கி பொரியல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    ×