என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    நார்மல் டெலிவரியோ, சிசேரியனோ வயிற்றில் தழும்பு ஏற்படுவது இயல்பு. வீட்டில் இருக்கக் கூடிய இயற்கையான பொருட்களை வைத்து பிரசவ தழும்புகளை மறையச் செய்யலாம்.
    நார்மல் டெலிவரியோ, சிசேரியனோ வயிற்றில் தழும்பு ஏற்படுவது இயல்பு. இந்த தழும்புகள் சில சமயங்களில் மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும். வீட்டில் இருக்கக் கூடிய இயற்கையான பொருட்களை வைத்து பிரசவ தழும்புகளை மறையச் செய்யலாம்.

    • எலுமிச்சையானது தழும்புகளை மறைய வைக்கும் முக்கியமான பொருளாகும். எலுமிச்சையை சின்ன சின்ன துண்டுகளாக கட் செய்து வைத்துக் கொண்டு சிசேரியன் செய்த காயத்தழும்பின் மீது தேய்க்கவும். 6 மாதங்கள் வரை தொடர்ந்து இவ்வாறு செய்து வர தழும்புகள் மறைந்து விடும். எலுமிச்சை சாறு காய்ந்த உடன் 5 நிமிடத்திற்குள் குளிர்ச்சியான தண்ணீரை விட்டு கழுவிவிடுங்கள். வறண்ட சருமத்தினர் எலுமிச்சையை தவிர்க்கவும்.

    • தக்காளியை தோல் உறித்து அதை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். அந்த பேஸ்ட்டை எடுத்து சிசேரியன் தழும்பு உள்ள பகுதிகளில் அப்ளை செய்யவும். இரவு நேரத்தில் தக்காளி சாஸ் அப்ளை செய்து விட்டு காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இந்த தக்காளி சாஸ் தடவி வர பலன் தெரியும்.

    • சோற்றுக்கற்றாழை மிகச்சிறந்த இயற்கை மருந்தாகும். சோற்றுக்கற்றாழையை நன்றாக உரித்து அதன் ஜெல்லினை எடுத்து காய தழும்புள்ள இடத்தில் தடவலாம். இரவில் தடவி வைத்திருந்து பகலில் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவிவிட்டு நன்றாக துடைத்து விடவும். அதன் பின்னர் பேபி லோசனை அந்த இடத்தில் அப்ளை செய்யலாம். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இவ்வாறு செய்து வர தழும்புகள் மறையும்.

    • ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து சிசேரியன் தழும்பு உள்ள இடத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து காய்ந்த உடன் அதன் மேல் வெதுவெதுப்பான நீரை ஊற்றி கழுவவும். இது சில மாதங்களிலே காயத்தழும்பை மறையச் செய்து விடும்.
    கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெய் தீர்வு தருகிறது. கடுகு எண்ணெயை பயன்படுத்தி எப்படி கூந்தல் பிரச்சனையை தடுக்கலாம் என்று பார்க்கலாம்.
    கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெய் தீர்வு தருகிறது. இன்று கடுகு எண்ணெயை பயன்படுத்தி எப்படி கூந்தல் பிரச்சனையை தடுக்கலாம் என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

    * வாரம் இருமுறை கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து குளித்தால் வயதானாலும் நரை முடி எளிதில் வராது. கடுகு எண்ணெயை லேசாக சூடுபடுத்தி தலையில் மசாஜ் செய்தால் நரை முடி மறையும்.

    * ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த எண்ணெயை உபயோகித்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும். வட இந்தியர்களில் கூந்தல் அழகிற்கு இதுதான் காரணம்.

    * கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் ஈரப்பதம் அதிக நேரம் கூந்தலில் நீடிக்கும். எளிதில் வறட்சி அடையாது.

    * பொடுகு அரிப்பினால் கூந்தல் ஆரோக்கியமற்றதாக காணப்பட்டால் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்ய குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

    * மெலிதான கூந்தல் இருந்தால் வாரம் மூன்று நாட்கள் கடுகு எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்து குளித்து வர கூந்தல் அடர்த்தி அதிகரிக்கும்.

    * கூந்தலில் நுனி அடிக்கடி பிளவு உண்டானால் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும். இதனை தடுக்க கடுகு எண்ணெயால் மசாஜ் செய்து வர நுனி பிளவு நீங்கும்.
    கொழுப்பு, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி சிறுதானிய கொள்ளு சோறுவை சமைத்து சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வரகரிசி / சாமை அரிசி / குதிரைவாலி அரிசி - 100 கிராம்
    கொள்ளு - 50 கிராம்
    பூண்டு - 6 பல்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    வறுத்து பொடி செய்து கொள்ள :

    கடலை பருப்பு - 20 கிராம்
    மிளகு - 5 கிராம்
    சீரகம் - 5 கிராம்
    வெந்தயம் - 5 கிராம்
    கொத்துமல்லி - 30 கிராம்
    காய்ந்த மிளகாய் - 3

    தாளிக்க :

    கடுகு - 5 கிராம்
    கறிவேப்பிலை - 5 கிராம்
    பெருங்காய தூள் - சிறிதளவு



    செய்முறை :

    கொள்ளு, வரகரிசி / சாமை அரிசி / குதிரைவாலி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வேகவைத்து கொள்ளவும்.

    பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, அரிந்த பூண்டு நன்கு வதக்கி, வேக வைத்த கொள்ளுவை சேர்த்து பொடியை சேர்த்து வேக விடவும்.

    அடுத்து உதிரியாக உள்ள சோற்றுடன், வேக வைத்ததை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆக்கங்கள் இருக்கலாம். ஆனால் அதில் தொலைந்த உறவுகள், பாசங்கள், பந்தங்கள், மனித நேயம், மனிதாபிமானம் நிறையவே.
    தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கின்றன. உண்மை அறிவியலின் உச்சத்தை அடைந்து விட்டான் மனிதன். ஆனால் அத்தனை அறிவுசார் கண்டுபிடிப்புகளும் ஆக்கத்திற்கு ஊக்கம் அளிக்கின்றனவா? அவனது கண்டுபிடிப்புகளின் ஆளுமை ஒரு எல்லையை அடையும் போது சுயநலம் தலைத்தூக்கி, அதனை தான் மட்டும் எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பதில் தானே கவனம் செல்கிறது.

    அந்த அறிவியல் அடுத்த கட்ட முன்னேற்றத்தைக் காணும்போது ஏற்கனவே இன்னொருவன் கண்டுபிடிப்பதை எப்படி அழிக்க முடியும் என்ற அச்சுறுத்தலைத் தானே அது தருகிறது. தொழில்நுட்பம் ஆக்கப்பூர்வமானவற்றுக்கு பயன்படும் விகிதாசாரத்தை ஒப்பிடும் போது அது அழிவு பாதைக்கு இட்டுச் செல்லும் அளவுதான் அதிகம் இருக்கிறது.

    கண்டுபிடிப்புகளின் வழி மாற்றுப் பாதையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது. ரசாயன குண்டுகள், அதனை இட்டுச் செல்லும் வான ஊர்த்திகள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அடுத்தவனை அழிக்கவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வியாபாரம் தான் உலக வர்த்தகத்தில் உச்சத்தில் இருக்கிறது.

    பூமியில் தண்ணீரை இல்லாமல் செய்துவிட்டு செவ்வாய் கிரகத்தில் தண்ணீரைத் தேடும் அவலநிலையை என்ன சொல்வது? உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் தொழிற்கூடங்களை அனுமதித்துவிட்டு புதிய வியாதிகளுக்கு மருந்துகளை கண்டுபிடிப்பது எந்த அறிவுடைமையைச் சார்ந்தது?

    அறுபதுகளில் வாழ்பவர்களை விட இருபதுகளில் வாழும் இன்றைய இளைஞர்கள் அறிவு ஜீவிகள். ஐக்கூ அதிகம் நிறைந்தவர்கள். ஆனால், என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள்? இயற்கையை மறந்த எந்திரத்தனமான ஒரு வாழ்க்கை என்ன சுகத்தை தந்துவிடும்? ரோபோக்கள் போன்று உணர்ச்சியற்ற வாழ்க்கையில் என்ன லாபம் கிடைத்துவிடும்?

    அன்பு, அறம், வீரம், ஞானம், நகைச்சுவை என்று எத்தனையோ பண்புகளோடு, குணாதிசயங்களோடு வாழவேண்டிய நிலைமை மாறி, ‘அழுத்தம்’ என்றே ஒரே அச்சில் சுழன்று வருகிறார்கள். இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். மன உளைச்சலால், மன அழுத்தத்தால் மாய்ந்து போகிறார்கள்.

    இன்றைய இளைய தலைமுறையினர் அத்தை, மாமன், மச்சான், அண்ணன், தம்பி என்ற பாசப் பிணைப்பு கொண்ட உறவுகளையே யார் என்று அறியாமல் வாழ்கிறார்கள். அலைபேசி, வலைத்தளம், முகநூல்கள் என்று ஏதோ ஒரு வேற்று உலகில் சஞ்சரித்து கொண்டிருக்கிறார்கள்.

    உறவுகளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை; யாரையும் மதிப்பதும் இல்லை; அவர்களை சுற்றி எது நடந்து கொண்டிருந்தாலும் அவர்கள் உலகம் கைபேசியில் தான் சுழல்கிறது. நெருங்கிய உறவுகள் இறந்தாலும் கூட அவர்களுக்கு அழத் தெரியவில்லை. உணர்வுகள் மரத்துப்போய்விட்டன.

    அத்தை மகள், மாமன் மகள் என்ற அனிச்சப் பூக்களின் அருமை தெரியாமல் எந்த நாடோ, எந்த ஊரோ, எங்கிருந்தோ வந்த யாரோ ஒருவரை மனைவியாக்கி கொண்டு மனமாச்சரியங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அல்லது பிரிந்து மனஅழுத்ததில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

    தான் நிர்ணயித்த இலக்கை அடைந்து திரும்பி பார்க்கும் போது ஒன்றுமே இல்லாத வெற்றிடம் தான் தெரிகிறது. என்ன வாழ்க்கை? எந்த நோக்கத்திற்காக வாழ்ந்தோம்? விடையே தெரியவில்லை. நம் அறிவை மனிதநேயத்திற்காக, மனிதகுல மேம்பாட்டிற்காக எப்படி பயன்படுத்தினோம்? எங்கோ வேற்றுக் கிரகத்தில் உள்ளவர்களை இங்கு ஆராய்கிறோம். தான் வாழ்ந்த வாழ்க்கையைச் சிந்திக்க தவறிவிட்டோம்.

    அன்றாடம் வறுமைக் கோட்டிற்கு கீழே சென்றுகொண்டிருக்கும் உறவுகளைப் பற்றி சிந்தித்தோமா? பரம்பரை பரம்பரையாய் ஆல மரங்களாய் வாழ்ந்த உறவுகள் ஒற்றை மரமாய் விரைவில் விழப் போவதை கவனத்தில் கொண்டோமா? சூனியம் ஒன்று சூழவிருப்பதை, சூழ்நிலைகளின் தாக்கம் நம்மை பாதிக்கபோவதை உணர்ந்திருக்கிறோமா?

    தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆக்கங்கள் இருக்கலாம். ஆனால் அதில் தொலைந்த உறவுகள், பாசங்கள், பந்தங்கள், மனித நேயம், மனிதாபிமானம் நிறையவே. இந்த கலாசார சீரமைப்புக்கு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம். உங்கள் வாரிசுகளின் எதிர்காலம் அதில் தான் அடங்கி இருக்கிறது.

    எழுத்தாளர் மு.முகமது யூசுப்
    உடல் எடையை குறைக்க உணவுக்கட்டுப்பாட்டுடன் தினமும் யோகப்பயிற்சிகளை செய்து வருவது பக்க விளைவுகள் இல்லாத, அதிகப் பணச் செலவு இல்லாத ஒரு சிறந்த வழியாக உள்ளது.
    தற்காலத்தில் உடல் பருமனை குறைக்க உலகெங்கும் பல்வேறு சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன. உடலில் கொழுப்பு அதிகமாக சேர்ந்துள்ள இடங்களில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் அவற்றை அகற்றுதல், ஹைபோதாலமஸின் திருப்தி மைய கட்டுப்பாடு சிதறா வண்ணம் இருக்க சிலவகை மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது, குடலை சுருங்கச் செய்து குறைந்தளவு உணவை சாப்பிடச் செய்தல், சுரப்பிகளை கட்டுப்படுத்துதல், பசி அதிகம் உண்டாகாமல் இருப்பதற்கான மருந்துகளை உட்கொள்ளுதல் போன்ற பலவிதமான சிகிச்சை முறைகள் உடல் பருமனை குறைக்க உள்ளன.

    உடல் பருமனே பல நோய்கள் உண்டாவதற்கு காரணம் என்பதை மக்கள் உணரத் தொடங்கிய நிலையில் - பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் உடலை இளைக்கச் செய்வதற்கான விளம்பரங்களும் அதிகரித்து உள்ளன.

    ஒருவர் உடல் பருமனை குறைப்பதற்கான விளம்பரங்களை பார்த்து மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவது மிகவும் தவறான செயலாகும். உடல் எடை கூடுகிறதென்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றை முறையாக ஒரு மருத்துவரின் மூலம் அறிந்து, அதற்கு ஏற்ப சரியான மருந்துகளை சாப்பிடுவது நல்லது.

    பொதுவாக உடல் எடையை குறைக்க உணவுக்கட்டுப்பாட்டுடன் தினமும் யோகப்பயிற்சிகளை செய்து வருவது பக்க விளைவுகள் இல்லாத, அதிகப் பணச் செலவு இல்லாத ஒரு சிறந்த வழியாக உள்ளது.

    உடல் எடையைக் குறைக்க ஆசனங்களுள் சூரிய நமஸ்காரம் சிறந்த பயிற்சி ஆகும். பிராணாயாமத்தில் சூரிய நாடியை நன்கு இயங்கச் செய்து (வலது நாசியில் மூச்சை அதிகமாக இயங்கச் செய்து) தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, உடலை லேசாக்கி சுறுசுறுப்புடன் செயல்படச் செய்கிறது.

    ஹைபோதாலமஸில் உள்ள உணவு மையம், திருப்தி மையம் கட்டுப்பாடுடன் செயல்பட சிரசாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனப்பயிற்சிகளும், நாடி சோதனா போன்ற பிராணாயாம பயிற்சிகளும் தியானமும் உதவுகிறது.

    தைராய்டு கோளாறினால் வரும் உடல் பருமனை குறைக்க சர்வாங்காசனம், ஹலாசனம், சிவலிங்காசனம் போன்ற ஆசனப்பயிற்சிகள் உதவுகிறது.
    மருந்து, மாத்திரைகளினால் உடலில் உண்டான கழிவுகளை அகற்ற பிராணாயாமமும், கிரியா பயிற்சிகளும் பயன்படுகிறது.
    உணவை அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளினாலும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது.
    நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான சக்தியை உணவின் மூலம் பெறுகிறோம். நமது உடலின் இயக்கம், உழைப்புக்குத் தகுந்த அளவு உணவை உண்ணும்போது அது உடலுக்கு முழுமையான சக்தியாகிறது. ஆனால் உணவை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது அவை கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகின்றது. இந்தக் கொழுப்பு சேமிப்புதான் உடல் எடையை அதிகரித்து உடலை பருமனாக்கி விடுகிறது.

    பெண்களுக்கு பிருக்ஷ்டபாகம் மற்றும் தொடைகளில் கொழுப்புச் சத்து அதிகமாக சேருகின்றது. ஆண்களுக்கு வயிற்றில் அதிகமாக சேருகின்றது. காலப் போக்கில் உடலெங்கும் வியாபித்து உடல் முழுவதையும் பருமனாக்கி விடுகிறது. அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை உண்பதினாலும், ஒரு நாளில் பல வேளை உண்பதினாலும், உணவு உண்டவுடன் படுத்துத் தூங்குவதாலும், உடலுக்கு எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் போவதினாலும் உடல் பருமனாகி விடுகிறது.

    உணவை அதிகமாக உட்கொள்வதால் மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளினாலும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது.
    நமது மூளையில் உள்ள ஹைபோதாலமஸில் உணவு மையம், திருப்தி மையம் என இரு பிரிவுகள் உள்ளன.

    உணவு மைய பிரிவின் மூலம் நமக்குப் பசி உணர்வு தூண்டப்படுகிறது. தேவையான அளவு உணவை உட்கொண்ட பிறகு, திருப்தி மையத்தின் மூலம் போதும் என நினைக்கச் செய்கிறது. திருப்தி மையம் சரியாக செயல்படாமல் அதிகமாக தூண்டப்படும்போது, எவ்வளவு சாப்பிட்டாலும், இன்னும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டு அதிகமாக சாப்பிடச் செய்து விடுகிறது. இதனால் மேலும் மேலும் உடல் எடை கூடிக் கொண்டே போகும்.

    தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோன் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பி பாதிக்கப்படுவதாலும், பிட்யூட்டரி சுரப்பி வேறு பல நோயினால் தாக்கப்படும் போதும், சிலவகை மருந்து மாத்திரைகளால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகளினாலும் உடல் எடை அதிகரித்து விடுகின்றது.

    உடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு

    அரிசி உணவை மிகவும் குறைக்க வேண்டும். கோதுமை மற்றும் ராகியினால் செய்த உணவு வகைகளை அதிகம் சாப்பிடலாம். கீரைகள், காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்க்க வேண்டும்.

    வெங்காயம், கேரட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, தக்காளி, வெண்டைக்காய் போன்றவற்றை பச்சையாக ஒருவேளை உணவாக சாப்பிடலாம். கறிவேப்பிலை மற்றும் பூண்டு கொலஸ்ட்ராலை குறைக்க உதவுவதால், உணவுடன் பூண்டையும், கறிவேப்பிலையை சட்னியாகவும் செய்து அதிகம் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

    விலக்க வேண்டியவை:

    கொழுப்புப் பண்டங்கள், எண்ணெயினால் செய்த பலகாரங்கள், இறைச்சி வகைகள் மற்றும் இனிப்பு வகைகளை மிகவும் குறைக்க வேண்டும். அல்லது விலக்கி விட வேண்டும். காபி, டீ, பால் குடிக்கக் கூடாது.

    வெண்ணெய், நெய், ஜாம் வகைகள், சாக்லேட், கேக்குகள் முட்டை போன்றவற்றை விலக்க வேண்டும். உணவில் உப்பை மிகவும் குறைக்க வேண்டும். அது உடலில் நீரைப் பெருக்கி உடலின் எடையை அதிகரிக்கச் செய்கிறது. மதுபானங்களை விலக்க வேண்டும்.



    உடல் பருமனை குறைக்க பயனுள்ள சாறுகள் :
        
    தினமும் காலையில் வெறும் வயிற்றில் யோகப்பயிற்சி செய்வதற்கு முன்பு கீழ்கண்டவைகளில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து குடிக்கவும் அல்லது ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நாளென மாற்றிக் குடித்து வரலாம். இதனால் விரைவில் உடல் பருமனை குறைக்க முடிகிறது.

    1. ஒரு தம்ளர் நீரில் 2 தேக்கரண்டி தேனும், அரை எலுமிச்சை பழசாற்றையும் கலந்து குடிக்க வேண்டும்.

    2. ஒரு தம்ளர் கேரட் சாறில் 10 மிளகை பொடி செய்து கலந்து குடிக்க வேண்டும். மாலையில் கொள்ளு என்ற தானியத்தினால் தயாரித்த சூப்பை ஒரு தம்ளர் குடிக்க வேண்டும்.

    3. கருணைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக கத்தரித்து உலர்த்தி, பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி கருணைக்கிழங்கு பொடியுடன் ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து சாப்பிட வேண்டும்.

    உடல் பருமனை குறைக்கச் சில பயனுள்ள குறிப்புகள்:

    * எப்போதும் நமக்குத் தேவையான அளவை விட சிறிது குறைத்து சாப்பிட வேண்டும்.

    * தினமும் உணவை உட்கொள்வதற்கு 10 நிமிடம் முன்பாக இரண்டு தம்ளர் இளஞ்சூடான நீரைக் குடிப்பதால், குறைந்தளவு உணவை சாப்பிட துணை புரிகிறது.

    * பகலில் உறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

    * இரவு உணவு உண்டு இரண்டு மணி நேரம் கழித்த பிறகே உறங்கச் செல்ல வேண்டும்.

    * ஒரு நாளைக்கு மூன்று வேளைக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. இடை இடையே நொறுக்குத் தீனிகளை சாப்பிடக் கூடாது.

    * ஆகாரம் உட்கொண்டவுடன் அதிகமாக நீரை குடிக்கக் கூடாது. இதனால் தொந்தி வயிறு அதிகமாகும்.

    * உணவு உட்கொள்வதற்கு முன்பு வயிறு எந்த அளவுக்கு விரிந்து இருக்கிறதோ, அதே அளவு உணவு உட்கொண்ட பிறகும் இருக்க வேண்டும்.

    * வாழ்வதற்காக உண்கிறோம் உண்பதற்காக நாம் வாழவில்லை என்ற கோட்பாட்டை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
    மிளகு சீரக இடியாப்பம் மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு இடியாப்ப வகைகளுள் ஒன்று. இன்று மிளகு சீரக இடியாப்பத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு / இடியாப்ப மாவு - ¾ கப்
    மிளகு - 2 மேஜைக்கரண்டி
    சீரகம் - 2 தேக்கரண்டி
    துருவிய தேங்காய் - ¼ கப்
    நெய் - 1 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    முந்திரிப் பருப்பு - 8
    கறிவேப்பிலை - 1 கொத்து
    பெருங்காயம் - 2 சிட்டிகை



    செய்முறை

    தண்ணீரில் சில சொட்டுகள் நல்லெண்ணெய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அரிசி மாவில் சேர்த்து, மாவாக பிசைந்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை இடியாப்பமாக பிழிந்து இட்லி சட்டியில் வேக வைத்து கொள்ளவும்.

    இடியப்பம் செய்து ஆறியவுடன் உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.

    மிளகு சீரகத்தை கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.

    கடாயில் நெய் சேர்த்து, உடைத்த முந்திரிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

    மிளகு சீரகத்தூள், கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

    இதனை, வேகவைத்து உதிர்த்த இடியாப்பம், துருவிய தேங்காய், உப்பு (தேவைபட்டால்) சேர்த்து, கலந்து வைக்கவும்.

    சூப்பரான மிளகு சீரக இடியாப்பம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முடிந்தவரை ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் எப்போதாவது சாப்பிடுவதாலும் பெரிய பிரச்சனை இல்லை.
    ஐஸ்க்ரீமை வாயில் போட்டவுடன் கரைய வேண்டும் என்பதற்காக அதில் சில வேதிப் பொருளைப் பயன்படுத்துகின்றனர். இதில் Sodium benzoate என்கிற வேதிப்பொருள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதுதான் ஐஸ்க்ரீமின் சுவையை அதிகப்படுத்தி நம்மை திரும்பத் திரும்ப சாப்பிடத் தூண்டுகிறது.

    பொட்டாசியம் கார்பைடு மற்றும் செயற்கையான நிறமிகளை சர்க்கரைப் பாகுடன் கலந்து அதை கெட்டியாக்கி அதன் பிறகு ஐஸ்க்ரீமில் பயன்படுத்துகின்றனர். இதுபோன்று சேர்க்கப்படும் வேதிப் பொருள்களால் பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது.

    ‘‘ஐஸ்க்ரீம் தயாரிக்கப் பயன்படுத்தும் பாலில் அது கெடாமல் இருப்பதற்காக சில வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகிறது. ஐஸ்க்ரீம் தயாரிக்கும்போது அதில் சேர்க்கப்படும் Sodium benzoate என்கிற வேதிப்பொருள் பொதுவாக அழகுசாதனப் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.

    மேலும் ஐஸ்க்ரீம் எளிதில் உருகாமல் இருப்பதற்காக அதில் Polysorbate-80 என்கிற வேதிப்பொருளைப் பயன்படுத்துகின்றனர். இப்பொருள் சோப்புகள் மற்றும் ஷாம்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இது நமது உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது. இதனால் உடலில் அலர்ஜி ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்ல பரம்பரையாக வரக்கூடிய புற்றுநோய்களின் வளர்ச்சியைத் தூண்டும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.

    வெனிலா எசன்சுக்குப் பதிலாக ஒரு மலிவான மாற்றுப் பொருளாக Piperonal என்கிற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. National Library of Medicine-ன் Hazardous Substances Data Bank (HSDB) ஆனது. இதை மிதமான நச்சுத்தன்மையுடைய பொருளென்றும், மனித தோலில் எரிச்சல் உண்டாக்கும் பொருளென்றும் பட்டியலிட்டுள்ளது. Pineapple எசன்சுக்குப் பதிலாக Ethyl Acetate என்கிற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது.



    இது தோல் மற்றும் துணி உற்பத்தியின்போது அவற்றை சுத்தப்படுத்தும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் நீராவியானது நாள்பட்ட நுரையீரல், கல்லீரல் மற்றும் இதய சேதம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாக காரணமாகிறது. செர்ரி எசன்சுக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் Aldehyde C-17 என்கிற எரியக்கூடிய திரவப் பொருளானது சாயங்கள், பிளாஸ்டிக், ரப்பர் போன்றவை உற்பத்தி செய்யும்போது பயன்படுத்தப்படுகிறது.’’

    ‘‘அதிக சர்க்கரை, கெட்ட கொழுப்பு, பல்வேறு ரசாயனக் கலவைகளால் தயாரிக்கப்படும் ஐஸ்க்ரீம் பருமன் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கும். ஐஸ்க்ரீமில் சேர்க்கப்படும் பொட்டாசியம் கார்பைடு என்கிற வேதிப்பொருளால் அசதி, வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. சிலர் ஐஸ்க்ரீமில் சேர்க்கப்படும் முட்டைக்குப் பதிலாக Diethylene glycol (DEG) என்கிற பொருளைப் பயன்படுத்துகின்றனர்.

    இது என்சின்களின் உறைவுத் தன்மைக்கு எதிராக செயல்படுகிற பொருளாகவும், Paint remover-ஆக பயன்படும் பொருட்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்தப் பொருளால் சிறுநீரகப்பை மற்றும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படக்கூடும். இது போன்ற தீங்கான மூலப்பொருட்கள் நமது குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் அழிவிற்குக் காரணமாகிறது. மேலும் இதனால் அல்சர், புற்றுநோய், இதயவலி மற்றும் செரிமானப் பிரச்சனைகளும் உண்டாகிறது.

    எனவே, முடிந்தவரை ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் எப்போதாவது சாப்பிடுவதாலும் பெரிய பிரச்சனை இல்லை. கலப்படங்கள் நிறைந்ததாகவே இன்று சந்தைகளில் ஐஸ்க்ரீம் விற்கப்படுவதால் அடிக்கடி சாப்பிடுவது நிச்சயம் ஆரோக்கியக் கேட்டினையே உண்டாக்கும்!’’ 
    ஆண்கள் கவர்ச்சிகரமான உள்ளாடைகளை மனைவியை அணிய வைத்து, ரசிப்பதில் தவறில்லை. அதையும் மனைவியின் ஒப்புதலோடுதான் செய்ய வேண்டும்.
    லாஞ்சரி என்பது பெண்களுக்கான நவீன உள்ளாடை. 20ம் நூற்றாண்டு வரை உள்ளாடைகளை மூன்று காரணங்களுக்காக பெண்கள் பயன்படுத்தினார்கள். உடலை அழகாகக் காட்டுவதற்கு... சுத்தமாக, பளிச்செனக் காட்டுவதற்கு... அடக்கமும் கண்ணியமும் கொண்டவர்களாக தெரிவதற்கு!

    கவர்ச்சியான உள்ளாடைகளில் மனைவியைப் பார்ப்பதை பல கணவர்கள் விரும்பத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு இதனால் ஒரு  ஃபேன்டஸியும் செக்ஸுக்கான அகத்தூண்டலும் கிடைக்கிறது.

    பொதுவாக ஆணுக்கு, அழகான பெண்ணை பார்த்தவுடனேயே பாலியல் தூண்டுதல் கிடைத்து விடுகிறது. பெண்ணுக்கு அப்படியல்ல... மனம் ஓர் ஆணை விரும்பினால்தான் செக்ஸுக்கான அகத்தூண்டுதல் பெண்ணுக்குக் கிடைக்கும். ஒரே வித உடைகளில் மனைவியைப் பார்க்கும் ஆண்களுக்கு காலப்போக்கில் ஒருவிதமான சலிப்பு ஏற்பட்டுவிடும். அந்த சலிப்பை விரட்ட, கவர லாஞ்சரி பெண்களுக்கு உதவும்.



    இது நவீன யுகம்... பெண்கள், ஆண்களுக்கு இணையாக எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்... பல துறைகளில் பிரகாசிக்கிறார்கள்... எல்லாவற்றையும் அறிந்தும் வைத்திருக்கிறார்கள். மனைவி படுக்கையறைக்குள் லாஞ்சரி அணிந்து வருகிறாரா? கணவனிடம் உறவுக்கு ‘ஓ.கே.’ சொல்கிறார் என்று அர்த்தம். பெண்கள் லாஞ்சரியை தாராளமாக அணியலாம்.

    அதே நேரத்தில், வெறும் உள்ளாடை சார்ந்து மட்டும் கவர்ச்சி அமையாது என்பதையும் நினைவில் கொள்ளவும். பெண்களின் உடலமைப்பில்தான் கவர்ச்சி இருக்கிறது. பேக்கிங் அழகாக இருந்தால் போதுமா? உள்ளே இருக்கும் பொருள் தரமாக இருக்க வேண்டாமா? எனவே, பெண்கள் கணவனைக் கவரும் விதமாக உடலழகைப் பராமரிப்பது அவசியம். ஆண்கள் கவர்ச்சிகரமான உள்ளாடைகளை மனைவியை அணிய வைத்து, ரசிப்பதில் தவறில்லை. அதையும் மனைவியின் ஒப்புதலோடுதான் செய்ய வேண்டும்.

    ‘கவர்ச்சியான உள்ளாடைகளோடு பார்ப்பதால் மட்டுமே மனைவி மீது செக்ஸ் ஈர்ப்பு வருகிறது’ என்று ஒருவர் சொல்கிறாரா? அவருக்கு மனநலம் சார்ந்த பிரச்சனை இருக்கிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
    அரிசி, துவரம் பருப்பு, மிளகு சீரகம் கொண்டு செய்யும் இந்த டிபனை மாலையில் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சரிசி - 1 கப்
    துவரம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - ¾ தேக்கரண்டி
    தேங்காய் - 1 கப்
    தண்ணீர் - 2¼ கப்
    தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப

    தாளிக்க

    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    கடுகு - ½ தேக்கரண்டி
    பெருங்காயம் - 1 சிட்டிகை
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    கொத்தமல்லி இலை - சிறிதளவு



    செய்முறை

    அரிசி மற்றும் பருப்பை கழுவி குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின், தண்ணீரை வடித்து ஒரு சுத்தமான துண்டில் தண்ணீரை வடித்து பரப்பவும்.

    முதலில் மிளகு மற்றும் சீரகத்தை கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு, அரிசி மற்றும் பருப்பை சேர்த்து, ரவா போல பொடியாக கவனமாக அரைக்கவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து  சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களை வரிசையாக சேர்த்து தாளித்த பின்னர் தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். துருவிய தேங்காய், உப்பு சேர்க்கவும்.

    பின்னர் அரைத்த அரிசி கலவை சேர்த்து கைவிடாமல் நன்றாக கலந்து விடவும்.

    குறைந்த தீயில் 5 நிமிடங்கள் மூடி வேக வைக்கவும். தேங்காய் எண்ணெய் சேர்க்கவும் (விரும்பினால்). நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும்.

    கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன் ஒரே அளவு உருண்டைகளாக எடுத்து, மொத்தமான அடைகளாகத் தட்டவும். ஒவ்வொரு முறையும் கைகளில் எண்ணெய் தடவிக்கொள்ளவும். பாலிதீன் பை அல்லது வாழை இலையில் தட்டலாம்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் செய்து வைத்த அடைகளை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு மிதமான தீயில் இரு புறமும் பொன்னிறமாகும் வரை சுட்டெடுக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கூந்தல் பிரச்சனைகளுக்கு ஆயுர்வேதத்தில் பயன்படுத்தும் மூலிகைப் பொருட்கள் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும்.
    கூந்தலை வளர்ப்பது பெரிதல்ல... அதை பராமரிப்பதுதான் மிகவும் கஷ்டமான விஷயம். சிலர் முடி உதிர்வதால் பெரிதும் மனவேதனைக்கு ஆளாகியிருக்கின்றனர். தற்போது அனேகமானோர் கூந்தல் உதிர்தல் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே கூந்தல் உதிர்தல் பிரச்சனை ஆரம்பித்துவிட்டால், உடனே அதற்கான தீர்வை பெறுவதற்கு முயல்வது மிகவும் அவசியமாகிறது. இத்தகைய கூந்தல் உதிர்தல் பிரச்சனை வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை (முதுமை) வயது, சில மருந்துகளின் பக்கவிளைவுகள், கர்ப்பம் மற்றும் மாதவிடாயின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதிகமான மாசுக்கள், அதிகப்படியான கெமிக்கல்களைப் பயன்படுத்துவது என்று பல. ஆனால் இத்தகைய காரணங்களால் ஏற்படும் பிரச்சனையை கட்டுப்படுத்தவோ அல்லது உதிர்தலின் அளவை குறைக்கவோ முடியும்.

    இதற்கு இயற்கை முறைகளே சிறந்தது. அதிலும் ஒருசில ஆயுர்வேதத்தில் பயன்படுத்தும் மூலிகைப் பொருட்கள் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு கட்டுப்படுத்த முடியும். கூந்தல் உதிர்தலைத் தடுக்கும், அத்தகைய பொருட்கள் என்னவென்பதையும் அவை எவ்வறு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    1. வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலாம்.

    2. இரண்டு முட்டைகளை உடைத்து அதில் இருக்கும் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்த்தபின். 15-20 நிமிடங்கள் கழித்து அலசலாம்.

    3. வெந்தயத்தை கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்து தலையில் தேய்த்து 20-30 நிமிடங்கள் கழித்து அலசலாம்.

    4. செம்பருத்தி (செவ்வரத்தை) இலையை அரைத்து அதனை தலையில் தேய்த்து ஊறவிட்டு பின்னர் நன்கு அலசி விடலாம்.

    5. இரவில் லேசான சூட்டில் தேங்காய் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு பின்னர் காலையில் தலைக்கு குளிக்கலாம்.

    6. ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும். அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம்.



    7. வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும்.

    8. சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும்.

    9. வெந்தயம், வேப்பிலை, கறிவேப்பிலை, பாசிபருப்பு, ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலசி வந்தால் கூந்தல் பளபளக்கும்.

    9. ஹேர் ரையர் (hair dryer) அடிக்கடி உபயோகித்தால் தலை வறண்டு, முடியின் வேர்கள் பழுதடைந்து விடும். அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது.

    10. ஆலிவ் எண்ணெயை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

    11. முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து, ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் கூந்தல் பளபளக்கும்.

    12. முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன், வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும்.

    13. இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணெய் தடவுவது கிடையாது. அது முற்றிலும் தவறு. தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும். அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.

    14. எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். சிறிது  நல்ல எண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறிது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். முடி உதிர்வதையும் தடுக்கலாம்.

    15. கறிவேப்பிலை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இளநரையை தடுக்கலாம்.

    பாலில் கலந்த விஷம் எத்தனை கொடியதோ, எத்தனை பேரை காவு வாங்குமோ, அப்படித்தான் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் விஷமத்தனமான கருத்துகளும்.
    கத்தி முனையை விட பேனா முனை சக்தி வாய்ந்தது. வில் முனையை விட சொல் முனை வலிமையானது. காரணம் புரட்சியாளர்களும், தலைவர்களும் தங்கள் கருத்துகளை பேனா முனையில் உருக்கி எழுதி மக்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றியதன் விளைவாக ஆட்சி மாற்றங்கள், நாட்டு விடுதலை, சமுதாய புரட்சி என்று பல சம்பவங்கள் நடந்துள்ளதை நாம் அறிவோம்.

    தற்போது பேனா முனைக்கெல்லாம் வேலையில்லை. விஞ்ஞானத்தின் விஸ்வரூப கட்டமைப்புக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு விரல்களின் மீட்டலில் கணினிகளிலும், செல்போன்களிலும் கருத்துகளை விரைவாக எடுத்து வைக்கும் அவசரங்கள் அரங்கேறத்தொடங்கி விட்டன.

    கடந்த காலங்களில் ஒருவர் கதை, கட்டுரை, கருத்துரை, விமர்சனம் ஆகியவற்றை எழுதுகிறார் என்றால், அதற்காக அவர் எழுதி எழுதி கிழித்துப்போடும் காகிதங்கள் அதிகமாக இருக்கும். இன்றைக்கு அந்த நிலை இல்லை. அதேநேரம் இன்று கருத்துகளின் கூர்மையும், அது அனைவரையும் சென்றடையும் நேரமும் குறைந்து விட்டது.

    இரவுக்கு பகல் எப்படியோ, அதேபோல கருத்துக்கு எதிர்கருத்து எப்போதுமே உண்டு. கருத்துமோதல்கள் என்பது காலம் காலமாக உலக அளவில் இருந்து வரும் ஒரு கலை. அந்த கருத்து சுதந்திரம் என்பது எல்லை மீறும்போது பல மனங்களை காயப்படுத்தி விடுகிறது. சமுதாயத்தையே சில நேரங்களில் சீர்குலைத்துவிடுகிறது.

    பாலில் கலந்த விஷம் எத்தனை கொடியதோ, எத்தனை பேரை காவு வாங்குமோ, அப்படித்தான் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் விஷமத்தனமான கருத்துகளும். குறிப்பாக ஒருவர் தெரிவிக்கும் கருத்துக்கு ஆக்கப்பூர்வமான பதில் சொல்ல முடியாத நிலையில், சிலர் ஆபாச வார்த்தைகளால் ‘கமெண்ட்’ செய்வதை பார்க்க முடிகிறது.

    அது மட்டுமின்றி தங்களது தரப்பு பிரச்சினைகளை நியாயப்படுத்த கத்தரித்து கற்பனையுடன் தொகுக்கப்பட்ட படக்காட்சிகளை வெளியிடுகின்றனர். இதை பார்த்து உண்மை என்று நம்பி பலரும் தங்கள் கருத்துகளை பதிவிடும் சூழலும், கொதித்தெழும் நிலைமையும் நீடிக்கிறது.

    அதை விடவும் மோசமாக தொலைக்காட்சிகளில் போடப்படும் அவசர செய்தி (பிரேக்கிங் நியூஸ்) பாக்ஸ்களை அப்படியே எடுத்து பொய் தகவல்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள். இது அவசர உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது பொய்யான தகவல் என்பதே பலருக்கும் தெரியாமல் முடிந்து போய்விடுகிறது என்பதுதான் காலக்கொடுமையாக உள்ளது.



    அதுமட்டுமா, கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் பெண் மற்றும் ஆண் அரசியல்வாதிகளின் அழகையும், குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி மீம்ஸ் என்ற பெயரில் பதிவிடுகிறார்கள். கடந்த காலங்களில் பத்திரிகைகளில் கேலிச்சித்திரம் மற்றும் கருத்து சித்திரம் வரைந்து வெளியிடும் பழக்கம் ஏற்பட்டது. அந்த சித்திரங்களை பார்த்து சம்பந்தப்பட்டவர்களே சிரித்து இருக்கிறார்கள். காரணம் அதில் உள்நோக்கம் இருக்காது.

    ஆனால் இன்று அந்த நிலை மாறிவருகிறது. சமூக ஊடகங்களில் வலம் வரும் கேலிச்சித்திரம் சம்பந்தப்பட்டவர்களை கோபமடையச்செய்கிறது. அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு மன வலியையும் ஏற்படுத்துகிறது. இதனால் காவல் துறையில் புகார் கொடுக்கும் நிலைமைக்கு பலரும் தள்ளப்படுகிறார்கள். இருப்பினும் யாரோ ஒருவர் அனுப்பும் மோசமான கருத்து, பலரால் பகிரப்பட்டு விடுகிறது. இதில் யாரை பிடித்து காவல்துறை விசாரிக்கும்? இது இன்றைய காலத்தின் ஒரு கவலைக்குரிய விஷயமாகவே மாறி வருகிறது.

    அதுமட்டுமின்றி தங்களுக்கு பிடிக்காத தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பது, அவர்கள் இறந்து விட்டதுபோல கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை பதிவிடுவது போன்ற பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இது எப்படி கருத்து சுதந்திரமாகும்? சமூக வலைத்தளங்களில் உண்மை முகங்களை விடவும் பொய் முகங்களே அதிகமாக வெளிக்காட்டப்படுகிறது. இது இந்த சமுதாயத்தை அச்சுறுத்தும் மிகவும் ஆபத்தான அறிகுறி.

    அதுமட்டுமின்றி ஒரு கருப்பு நிறமுடைய குண்டான ஆணும், சிகப்பு நிறம் கொண்ட ஒல்லியான பெண்ணும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு நெல்லை அல்வா ஆப்பிரிக்காக் காரனுக்கு கிடைத்து உள்ளது என்று பதிவிடுகிறார்கள். அழகை யார் நிர்ணயிப்பது. ஒருவருக்கு அழகாக தெரியும் ஒன்று மற்றவருக்கு அவலட்சணமாக தெரியலாம். ஒருவருக்கு லட்டு பிடிக்கும், இன்னொருவருக்கு ஜாங்கிரி பிடிக்கும். இரண்டுமே இனிப்புதான். ஆனால் பொருள் வேறு அல்லவா?

    மணப்பெண்கூட அந்த மாப்பிள்ளையை ஏற்றுக்கொண்டு விட்டார். ஆனால் அதை பார்க்கும் மற்றவர் மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அந்த வன்மத்தை புகைப்படத்துடன் பதிவாக கொடுக்கிறார்கள். இதை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்தால் அவர்களது மனநிலை எப்படி இருக்கும். அதை பதிவிடும் முன்பு நமது வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி இருக்கும்? என்று சிந்தித்தால், இப்படிப்பட்ட பதிவுகள் வெளியிடும் மனது யாருக்கும் வராது.

    சமூக வலைத்தளம் என்பது பொழுதுபோக்குக்கும், பொது அறிவு தேடலுக்குமான களமாக இருக்க வேண்டும். போர் என்றால் கூட விதிமுறை உண்டு. ஒரு விளையாட்டு என்றாலும் ஒரு விதிமுறை உண்டு. விதிமுறை இல்லாத கருத்து சுதந்திரம் என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாகவே இருக்கிறது.

    எனவே, கருத்தை பதிவிடும் ஒவ்வொருவரும் அந்த கருத்தால் மற்றவருக்கு என்ன பயன்? என்று சிந்தித்து பதிவிடுவது முக்கியம். மற்றவர்கள் இதயத்தை குத்திக்கிழிக்கும் எந்த ஒரு கருத்தும் மனங்களை கொள்ளை கொள்ளாது என்பதை கருத்தில் கொண்டால், விரும்பத்தகாத, அருவருக்கத்தக்க கருத்துகளும், படக்காட்சிகளும், வீடியோ காட்சிகளும் வலைத்தளங்களில் வட்டமடிக்காது.

    அது இந்த சமுதாயத்திற்கு மட்டுமல்ல, எதிர்கால சந்ததிக்கும் ஒரு வழிகாட்டுதலாக அமையும். சமூக பொறுப்பு என்பது முதலில் தனி மனிதனிடம் இருந்துதான் தொடங்குகிறது என்பதை நாம் எப்போதும் மறந்து விடக்கூடாது.

    -முத்துக்குட்டி 
    ×