என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    குழந்தைகளுக்கு ஆறாவது ஏழாவது மாதத்தில் பால் பற்கள் முளைக்க ஆரம்பித்து விடும். அப்போதிலிருந்தே நாம் குழந்தைகளின் பற்களை பராமரிக்க தொடங்கி விட வேண்டும்.
    * குழந்தை தினமும் காலை எழுந்ததும், மெல்லிய மஸ்லின் அல்லது மல்துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்து, வாய் மற்றும் பற்களை சுத்தம் செய்தல் வேண்டும். இரவு, படுக்கைக்குச் செல்லும் முன்னர் இவ்வாறு செய்தல் நல்லது. ஒரு வயது வரும் வரை இதை தொடருங்கள். பின்பு பிரஷ் கொண்டு பற்களை துலக்கலாம்.

    * பால் பற்கள் முளைக்கும் போது, ஈறுகள் நம நமவென்று இருக்கும், இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வரலாம். இது வழக்கம் தான். அதனால் குழப்பமின்றி மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.

    * கேரட், ஆப்பிள்களை சிறிய துண்டுகளாக்கி கொடுப்பதால், பற்கள் வலுவுறும்.



    * குழந்தைக்கு 1 வயதாகும் போது, பிரஷ் கொண்டு பல் துலக்குங்கள். காலையிலும், இரவிலும் பல் துலக்குங்கள். இதனால் குழந்தை இதனை தனது அன்றாட செயலாக கருதுவர். நீங்கள் மறந்தாலும், அவர்கள் உங்களுக்கு நினைவூட்டுவர்.

    * அதிகளவு இனிப்பு பதார்த்தங்களை தவிருங்கள். பெரும்பாலும், சாக்லேட்டை தவிர்ப்பது நல்லது.

    * வருடம் ஒரு முறையாவது, குழந்தைகளை பல் மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் கேழ்வரகை சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று கேழ்வரகு ரவையில் உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு ரவை - 1 கப்
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    கடுகு, உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவைக்கு
    தண்ணீர் - 2 கப்
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர், வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் கேழ்வரகு ரவையை போட்டு 5 நிமிடங்கள் கிளறவும்.

    அடுத்து அதில் உப்பு, கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி  போட்டு வேக விடவும்.

    கேழ்வரகு நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூரிய நமஸ்கார யோகாவை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் பல்வேறு உடல் பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம். இது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    உடலின் இயக்கத்திற்கு முக்கியமாக பயன்படும் சுரப்பிகளுக்கும், உறுப்புகளுக்கும் புத்துணர்ச்சி ஊட்டுவதன் மூலம் மூப்பையும், பிணிகளையும் எளிதில் அணுக முடியாதபடி தடுத்து நீண்ட ஆயுளை அளிக்கிறது.

    உடலின் இயக்கம் அனைத்தும் ஒழுங்குபடுத்தப்படுவதால் சிறுவயதினரின் உடல் மன வளர்ச்சி சரியாக அமைய உதவுகிறது. உடலில் சேர்ந்திருக்கும் தேவையற்ற ஊளைச் சதைகளை கரைத்து அழகான உடல் வடிவை அளிக்கிறது. கல்வி பயில்வோருக்கு பரீட்சை நேரத்தில் உண்டாகும் பயம், படபடப்பை நீக்குகிறது.

    சூரிய நமஸ்கார பயிற்சியினால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி நடைபெறுவதால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

    இதனால் இருதய பாதிப்பு நேர்வதும் தவிர்க்கப்படுகிறது. நுரையீரல், குடல், சிறுநீரகம், தோல் முதலியவற்றிலிருந்து கழிவுப் பொருட்கள் சரியாக வெளியேற உதவுகிறது. ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. மலச்சிக்கல் அஜீரணம் மற்றும் வயிற்றில் வாயுவினால் உண்டாகும் கோளாறுகளை விரைவில் நீக்கி ஜீரண சக்தியை மிகச் செய்கிறது. 
    நமது முயற்சிகளும் சரியான திட்டமிடல்களும் நம்மை இன்னும் உயர்வான இடத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
    வெற்றி பெற திட்டமிடுங்கள் சரியான திட்டமிடலே பாதி வெற்றியைத் தந்துவிடுகிறது. எதையும் சரியாகத் திட்டமிடும்போது நாம் பாதி இலக்கினை எட்டிவிட்டோம் என்ற நிம்மதி நமக்குள்ளே பிறந்துவிடும். தேர்வுகளின்போது பாடங்களைச் சரியான திட்டமிடலோடு படிக்கத் தொடங்கினால் போதும் வெற்றிக்கனிகள் உங்கள் பக்கமே வரும்.

    வாழ்க்கையும் நமக்கு பல நேரங்களில் தேர்வுகளையே ஞாபகப் படுத்தும். அதைச் சரியான முறையில் நாமும் கையாள வேண்டும் என்பதையே நம்முடைய ஒவ்வொரு நிமிடமும் நமக்கு ஞாபகப்படுத்தும். மிகச் சரியான முறையில் நாம் வாழ்க்கையை எதிர்கொள்வது அவசியமாகிறது. கடைசி நிமிடத் தயாரிப்புகள் சில நேரங்கள் வேண்டுமானால் நமக்கு கை கொடுக்கலாம். பல சமயங்களில் அதுவே நமக்கு மிகப்பெரிய எதிரியாக வந்து நிற்கும். நம்முடைய நிகழ் நிமிடங்களை நாம் மிகச்சிறப்பான முறையிலே அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

    அடுத்தடுத்த நிமிடங்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் நிகழ் காலங்களை சரியான வகையில் நாம் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். பல நேரங்களில் நாம் ரெயில்களையும் பேருந்துகளையும் தவற விட்டதின் மூலமாகவே நமது நல்ல வாய்ப்புகளை இழந்திருப்போம். அதற்கு நம்முடைய சாதாரண கவனக்குறைவே காரணமாக இருந்திருக்கும். மிகப்பெரிய சாதனைகளை சிறு சிறு கவனக்குறைவுகளின் மூலமாகவோ சரியான திட்டமிடல் இல்லாமலோ நடக்காமல் போயிருக்கும்.

    உங்கள் மேல் உள்ள அதீத அன்பாலும் தாங்கள் வாழ்விலே பட்ட கஷ்டங்கள் எக்காரணம் கொண்டும் தங்களின் குழந்தைகள் படக்கூடாது என்பதிலே மிகுந்த அக்கறை உடையவர்கள் பெற்றோர்கள். அவர்களின் உணர்ச்சி வசப்பட்ட சில செயல்பாடுகளை நாம் தொந்தரவு என்று ஒரு போதும் கருதிடக் கூடாது.

    நம்முடைய பெற்றோர்கள் நம்மை சரியான புரிதலோடு வழிகாட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடையவர்கள் யாரும் இங்கே தோற்றுப் போவதில்லை. அவர்களுடைய அன்பை நாம் ஒருபோதும் உதாசீனப் படுத்திட கூடாது. ஒவ்வொரு முறையும் நம்மீது அதீத அக்கறையோடு அவர்கள் சொல்வதை மனதிலே கொண்டு செயல்படும்போதே வெற்றி எளிதிலே கிடைத்து விடும் பொருளாகி விடுகிறது. நம்முடைய உயரங்களும், வளர்ச்சிகளும் நிச்சயமாக அடுத்தவருடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர வேண்டும். நமது முயற்சிகளும் சரியான திட்டமிடல்களும் நம்மை இன்னும் உயர்வான இடத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

    முனைவர்.நா.சங்கரராமன்
    எளிதில் போகாத இருமல், மூச்சு வாங்குதல், மாடி ஏற இயலாமை, இருமும் பொழுது வெளி வரும் சிறு ரத்த கசிவு இவை நுரையீரலின் சிறிது அல்லது பெரிய பாதிப்பாக இருக்கக் கூடும்.
    உங்கள் நுரையீரல் நன்கு இல்லை என்பதைச் சொல்லும் சில அறிகுறிகள் :

    எளிதில் போகாத இருமல், மூச்சு வாங்குதல், மாடி ஏற இயலாமை, இருமும் பொழுது வெளி வரும் சிறு ரத்த கசிவு இவை நுரையீரலின் சிறிது அல்லது பெரிய பாதிப்பாக இருக்கக் கூடும்.

    ஒரு காலில் மட்டும் வலி, வீக்கம்-இது உங்கள் காலின் ஆழ்ந்து உள்ள ரத்த நாளத்தின் ரத்த உறைவு அடைப்பின் காரணமாக இருக்கலாம். இதில் ஆபத்து என்னவென்றால் இந்த உறைவு உடைந்து சிறு துகல்களாக ரத்த ஓட்டத்தில் பயணம் செய்யலாம். அது நுரையீரலை அடைந்து அங்குள்ள ரத்த குழாயில் ரத்த ஓட்டத்தினை நிறுத்தி ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி போன்ற ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

    (சாதா சளி, ஜீரம் என்பதே மனிதனை தளர்வாக்கி விடுகின்றது. நுரையீரலில் சளி, கூடவே மனஉளைச்சல் இவை கிருமி தாக்குதலை அதிகப்படுத்தும். முறையான ஆன்டிபயாடிக் மருந்து எடுத்தே இதனை சரி செய்ய முடியும்.)

    மாடி ஏறி இறங்குவதில் மூச்சு வாங்குதல் இருந்தால் வயது காரணம் என நீங்களே அலட்சியமாய் இருந்து விடாதீர்கள். விடாது புகை பிடிப்பவர்களா? யார் எவ்வளவு சொன்னாலும் கேட்காதவரா? அடிக்கடி மருத்துவரிடம் உங்கள் நுரையீரலை பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதையாவது செய்யுங்கள்.
    சளி, இருமலில் ரத்தம் இருந்தால் தாமதம் செய்யாமல் மருத்துவரை அணுகுங்கள்.

    இன்று உலகம் செய்தி மயமானதாகி விட்டது. சரியான செய்திகளும், தவறான செய்திகளும் மக்களை சென்றடைகின்றன. மருத்துவத்தினைப் பொறுத்த வரை ‘ஒரே மாதத்தில் சர்க்கரை நோயினை சரி செய்யலாம்’. ‘உணவுக் கட்டுப்பாடு இல்லாமலே 20 கி குறைக்கலாம் போன்ற தவறான கவர்ச்சி செய்திகள் மக்களை வெகுவாய் ஈர்க்கின்றன.

    மருத்துவ ஆய்வுகள் கூறும் செய்திகள் விஞ்ஞான ஆதாரத்தினை கொண்டதாக இருக்கும். எந்த முறை மருத்துவமாக இருந்தாலும் அது தீர ஆராயப்பட்டு மக்களை சென்றடைந்தால் நன்மையே.

    அது போல இருதய பாதிப்பினைப் பற்றி ஆய்வுகள் கூறும் பொழுது ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளே இருதய பாதிப்பினை ஏற்படுத்துவதில் முக்கிய காரணமாகின்றன என்று கூறுகின்றன. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கிருமி தாக்குதல், சிகரெட், சுருட்டு பிடித்தல் போன்றவையும் ரத்த குழாய் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

    தோசை, நாண், இட்லி, சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மலபார் முட்டை கறி. இன்று இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 6,
    வெங்காயம் - 2,
    இஞ்சி - சிறிய துண்டு,
    தக்காளி - 2,
    ப. மிளகாய் - 4,
    பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி,
    மிளகாய் தூள், மல்லி தூள் - தலா 1 தேக்கரண்டி,
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி,
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி,
    முதல் தேங்காய் பால் - ஒரு கப்,
    இரண்டாவது தேங்காய் பால் - ஒரு கப்,
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
    கடுகு, சீரகம் - தலா கால் தேக்கரண்டி,
    கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு பாதியாக வெட்டி வைக்கவும்.

    பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    பின்னர் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டவும்.

    அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி, மசாலா நன்கு வதங்கிய பின் இரண்டாவது தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

    மசாலா வாசம் போனதும் முட்டையை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும்.

    கடைசியாக முதல் தேங்காய பால் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதி வர துவங்கியதும் இறக்கி பரிமாறவும்.

    சுவையான மலபார் முட்டை கறி தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாயுத் கோளாறு இருப்பவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலி மற்றும் செரிமானக்கோளாறு ஏற்படுவதுண்டு. இதற்கு வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டே தீர்வு காணலாம்.
    வாயுத் கோளாறு இருப்பவர்களுக்கு அடிக்கடி வயிற்று வலி மற்றும் செரிமானக்கோளாறு ஏற்படுவதுண்டு. இதற்கு முக்கிய காரணமாக அமைவது நாம் அன்றாடம் சாப்பிடும்போது, நீர் குடிக்கும்போது அதிகமான காற்றையும் சேர்த்து விழுங்கிவிடுவது.

    அதே போல கரியமில வாயு சேர்த்த குளிர்பானங்கள் உட்கொள்ளும்போது அதில் இருக்கும் வாயு நம் வயிற்றினுள் சென்று சேர்கிறது. இப்படி கார்பனேடட் பானங்களைக் குடிப்பதாலும் வாய்வுக் கோளாறு ஏற்படுகின்றது.

    இதனை போக்கும் வீட்டு மருத்துவத்தை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    * ஓமத்தை இளம் வறுப்பாக வறுத்து பொடியாக்கி பனை வெல்லம் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் வாய்வு கலைந்து இரைச்சல் நிற்கும்.

    * தேங்காயை துருவி பால் எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்று புண் சரியாவதுடன் வயிற்றுவலியும் சரியாகும்.

    * கைப்பிடி அளவு முருங்கைக்கீரையை சுத்தம் செய்து, அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து இடித்துச் சாறு பிழிந்து அதில் அரை டீஸ்பூன் அளவு சாற்றைக் குடித்து வந்தால் வயிறு உப்புசம் விரைவில் சரியாகிவிடும்.



    * மணத்தக்காளி இலைகளை நன்றாக அரிந்து மண்சட்டியில் போட்டு தாரளாமாக தண்ணீர் விட்டு சுண்டக்காய்ச்சி வடிகட்ட அதை காலை மாலை என குடித்து வந்தால் கைகால்களில் வாய்வுத்கோளாறுகளால் ஏற்பட்ட வலிகள் நீங்கும்.

    * இளம் பிரண்டையை நார் உரித்து தேவையான அளவு காய்ந்த மிளகாய், புளி, வெள்ளைப்பூண்டு, தேங்காய், உளுந்து போன்றவற்றைச் சேர்ந்து நல்லெண்ணெயில் வதக்கி உப்பு சேர்த்து மையாக அரைத்து மூன்றுவேளையும் உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு வாய்வுக் கோளாறு விலகும்.

    * காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், சுக்கு போன்றவற்றை சம அளவு எடுத்து நெய் விட்டு தனித்தனியாக வறுத்து பொடியாக்கி அரை டீஸ்பூன் அளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்வுத் தொல்லை விலகும்.

    * இஞ்சியை இடித்துச் சாறு பிழிந்து சிறிது நீர் விட்டு பனைவெல்லம் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். அதோடு சிறிதளவு ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் சேர்த்து கிளறி பாகு பதமானதும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் வாய்வுத்தொல்லை விலகும்.

    * சுக்கு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை சம அளவு எடுத்து அதனுடன் சிறிது பெருங்காயம் மிளகு சேர்த்து வறுத்துப் பொடியாக்கி ஒரு டீஸ்பூன் அளவு சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் செரிமானக் கோளாறுகள் விலகும்.

    * சுக்கைப் பொடியாக்கி இரண்டு சிட்டிக்கை எடுத்துக் தேன் சேர்த்துக் குழைத்து காலை, மாலை என இரண்டுவேளைச் சாப்பிட்டால் வயிற்றுவலி சரியாகிவிடும்.

    * ஒரு டீஸ்பூன் சப்ஜா விதைகளை வெந்நீரில் ஊற வைத்து குடியுங்கள், வயிற்று இரைச்சல் தெரியாமல் போய்விடும்.
    தாய்ப்பாலுக்கும், பால் பவுடர், பசும்பால் உள்ளிட்ட புட்டிப்பாலுக்கும் இடையே உள்ள விட்டமின் வித்தியாசங்களைத் தெரிந்துகொண்டால், தாய்ப்பாலைத் தவிர, வேறு பாலை குழந்தைக்குக் கொடுக்க நினைக்கமாட்டோம்.
    தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் இவ்வுலகில் வேறு எந்த உணவிலும் இல்லை. தாய்ப்பால் உணவாக மட்டுமல்ல; தேவைக்கு ஏற்ப மருந்தாகவும் குழந்தைக்குப் பயன்படுகிறது.

    தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை தொடர்ந்து கொடுத்து வந்தாலே, விட்டமின் மருந்துகள் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. அந்தளவுக்கு அனைத்துச் சத்துக்களையும் கொண்டது இந்த உயிர்ப்பால். தாய்ப்பாலுக்கும், பால் பவுடர், பசும்பால் உள்ளிட்ட புட்டிப்பாலுக்கும் இடையே உள்ள விட்டமின் வித்தியாசங்களைத் தெரிந்துகொண்டால், தாய்ப்பாலைத் தவிர, வேறு பாலை குழந்தைக்குக் கொடுக்க நினைக்கமாட்டோம்.

    * தாய்ப்பால் ஓர் இயற்கை உணவு.
    * இயற்கையான முதல் நோய்த் தடுப்பு மருந்து.
    * தாய்ப்பால் அருந்துவதால், குழந்தை உடலின் வெப்பநிலை சரியான அளவில் வைக்கப்படும்.
    * சோடியம் குறைவாக இருப்பதால், குழந்தையின் சிறுநீரகத்துக்கு நல்லது.



    * வயிற்றுப்போக்கு, ஆஸ்துமா, ஒவ்வாமை, சருமநோய், காதில் சீழ் வடிதல் போன்ற நோய்களைத் தவிர்க்கும். தாய்ப்பால் தரவல்ல தரமும், சத்தும், பாதுகாப்பும் இதில் இருக்காது.

    பசும்பால் அல்லது பால் பவுடரை கொதிக்க வைத்து, பாட்டில் மற்றும் ரப்பரை சுத்தமாகக் கழுவி, வெதுவெதுப்பான சூடுநீரில் சுத்தப்படுத்தி, அதன் பிறகு டப்பாவில் பால் ஊற்றி குழந்தைக்குக் கொடுப்பது, என இந்தச் செய்முறைகளில் ஏதேனும் சுகாதாரக் குறைவு ஏற்பட்டால், அது குழந்தைக்கு நோயை உண்டாக்கும். மேலும், இவற்றை தயார் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரமும் அதிகம். அதற்குள், குழந்தையின் பசியும் அழுகையும் அதிகமாகி விடும்.

    பால் பவுடர் டப்பாவின் காலாவதி தேதியைச் சரிபார்க்காமல் கொடுப்பதால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் குழந்தைகளுக்கு ஏற்படலாம்.

    சில பெண்கள், தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டு விடும் என்பதால் தாய்ப்பால் கொடுக்காமல், அல்லது குறுகிய காலத்திலேயே தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தி விடுவார்கள். சிலருக்கு அழகு பற்றிய எண்ணம் இருக்காது. ஆனால், தாய்ப்பால் கொடுக்க அலுப்பு, தூக்கத்தில் எழ சோம்பேறித்தனம் போன்ற காரணங்களால் குழந்தைக்கு பசும்பால் கொடுப்பார்கள்.

    தாய்ப்பாலால் குழந்தைக்குக் கிடைக்கும் இணையற்ற நோய் எதிர்ப்பு சக்தி, சத்துக்கள், சீரான உடல் எடை அதிகரிப்பு ஆகியவற்றைவிட, அழகும், அலுப்பும் முக்கியத்துவம் பெற்று விடுமா என்பதை ஒருகணம் சிந்தித்தால், குறைந்தது 6 மாதம், அதிகபட்சம் 1 வயதுவரை தங்கள் குழந்தைக்குப் பாலூட்ட தாய்மார்கள் உறுதியேற்று விடுவார்கள்.
    இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த கத்தரிக்காய் சட்னி. இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கத்தரிக்காய் - கால் கிலோ
    தக்காளி - 3
    கடுகு, உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
    மிளகாய் வத்தல் - 8
    பெரிய வெங்காயம் - 3
    எண்ணெய் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :


    கத்தரிக்காய், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாயை வறுத்துக் கொள்ளவேண்டும்

    பிறகு கத்தரிக்காய், வெங்காயம், தக்காளியை சேர்த்து சுருள வதக்கவும்

    நன்கு ஆறிய பின் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கத்தரிக்காய் சட்னி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் சில சமயம் கோபமாகவும், எரிச்சலோடும் பேசுகிறார்களே? சிறு வயதிலேயே ஏன் இப்படி? என்பதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகளின் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் முதல் பொறுப்பு பெற்றோர்கள்தான். ஏனென்றால் அவர்கள்தான் குழந்தைகளுக்கு முன்மாதிரி. இதுதான் உலக நியதியும்கூட. முதலில் அம்மாவும், அப்பாவும் தான். பிறகுதான் இந்த சமூகம் எல்லாம்.

    குழந்தைகள் இப்படி நடந்து கொள்வது பெற்றோர்களைப் பார்த்துத்தான். குழந்தைகள் முன்பாகவே பெற்றோர்கள் சண்டைபோட்டுக் கொண்டால் அது அவர்கள் மனதில் பதிந்துவிடும். சாப்பாட்டில் உப்பு குறைவு அல்லது அதிகம் என்பதற்காக அப்பா சாப்பாட்டுத் தட்டை தூக்கி எறிந்தால் குழந்தையும் ஒருநாள் இதையே செய்யும்.

    கூட்டுக் குடும்பங்கள் மறந்து தனிக் குடும்பங்கள் அதிகமாவதாலும், குழந்தைகளை கவனிப்பது, கண்டிப்பது, தட்டிக் கொடுப்பது போன்றவையும், அதிகமாக செல்லம் கொடுப்பது, எதை கேட்டாலும் வாங்கிக் கொடுப்பது போன்றவையும் தற்போது அதிகரித்துள்ளது.

    குழந்தைகள் கேட்கும் அனைத்தையும் வாங்கிக் கொடுப்பதும் தவறு, எதையுமே வாங்கிக் கொடுக்காமல் இருப்பதும் தவறு. அடம் பிடித்து அழுவதால் எல்லாம் நமக்கு கிடைத்துவிடும் என்ற சிந்தனை குழந்தைக்கு வந்துவிட்டால் அவ்வளவு தான். எது தேவையோ அதை வாங்கிக் கொடுங்கள். அடம் பிடித்து அழுது புரண்டால் ஒன்று புரியவையுங்கள் அல்லது புறக்கணியுங்கள்.
    இயற்கை முறையை பயன்படுத்தி நீளமான மற்றும் உறுதியான நகங்களை பெற முடியும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அழகை பராமரிக்க வேண்டும் என்றால் முதலில் மனதில் வருவது முகத்தை பராமரிப்பது என்பது தான். இது தான் பலரது மனதில் தோன்றுவது. ஆனால் அதையும் மீறி சிலர் கைகள் கால்கள் என உடலில் உள்ள அங்கங்களின் மீதும் கவனம் செலுத்துகின்றனர். அப்படியும் கூட அவர்களில் சிலர் நகங்களை பற்றி கவலை கொள்வதில்லை. அப்படியே அக்கறை உள்ளவர்களும் கூட, அதை அழகாக வைக்க முற்படுவார்களே தவிர ஆரோக்கியமாக வைக்க முற்படுவதில்லை. இயற்கை முறையை பயன்படுத்தி நீளமான மற்றும் உறுதியான நகங்களை பெற முடியும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    ஆரோக்கியமான நகங்களை பெற, அதை ஹைட்ரேட் செய்வது அவசியம். இதற்காக நகத்துக்கு மேல் உள்ள தோலைப் பராமரிப்பது அவசியம். உறுதியான நகங்களை பெற கிரீம் மற்றும் ஆயில் கொண்டு மேற் தோலை அடிக்கடி ஹைடிரேட் செய்ய வேண்டும். நகங்கள் உறுதியாக புரோட்டின், பயோட்டின், இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    நகத்தை கடிப்பதாலோ அல்லது நகத்தில் உள்ள அழுக்கை முரட்டுத்தனமாக எடுப்பதாலோ நக நுனிகளில் ஸ்ட்ரெஸ் முறிவு ஏற்படும். நாளடைவில் நகமே உடைந்து விழுந்து விடும். அதே போல் சிலருக்கு நகத்தை வைத்து எதையாவது சுரண்டும் பழக்கம் இருக்கும். சில பெண்கள் இதை பயத்தினால் செய்வதுண்டு. இது நகத்தின் மேல் கோடுகள் போல் தோற்றத்தை உருவாக்கி விடும்.



    வீட்டில் உள்ள பொருட்களை துடைக்கும் போது, பெண்கள் கையில் ரப்பர் கையுறை அணிந்து கொள்வது நல்லது. அதனால் நகத்திற்கு ஆபத்தை விளைவித்து, அதனை உடைக்க செய்யும் ஆபத்தான ரசாயனத்தில் இருந்து அதனை பாதுகாக்கலாம்.

    தரமற்ற நெயில் பாலிஷ்களை பயன்படுத்தினால், நகங்கள் வலுவிழந்து, ஆரோக்கியமிழந்து போய்விடும்.

    நகம் புறத்தோல்களுக்கு கீழ் தான் வளரும். அதனால் புறத்தோலை மசாஜ் செய்தால், அந்த இடத்திற்கு இரத்தத்தை கொண்டு வந்து நகங்கள் ஆரோக்கியமாக வளர உதவி புரியும். இதற்கென சிகிச்சைக்கு செல்வதற்கு பதிலாக, வெறுமனே மசாஜ் செய்தால் போதிய பலனை அது அளிக்கும்.

    நகங்களை மென்மையானதாக்க, நகப்படுக்கைகளை சுத்தம் செய்வது அவசியம். ஆனால் வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும்.

    நகங்கள் மற்றும் அதன் புறத்தோல் போன்றவற்றிற்கு மெனிக்யூர் முறையை சீரான முறையில் செய்து கொள்வது அவசியம். அதே போல் தினமும் சருமத்தின் மீது மாய்ஸ்சுரைசர் தடவினால், நகங்கள் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.
    சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை ஏதாவது ஒருவகையில் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று கேழ்வரகு, மோர் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - கால் கப்
    தண்ணீர் - 1 கப்
    மோர் - 1 கப்
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு, சீரகம் - கால் டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :

    கேழ்வரகு மாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    வறுத்த கேழ்வரகு மாவை தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சவும்.

    கைவிடாமல் காய்ச்ச வேண்டும். அப்போது தான் அடிபிடிக்காது. கேழ்வரகு நன்றாக வெந்து வரும் போது இறக்கி குளிர வைக்கவும்.

    நன்றாக ஆறிய பின்னர் அதில் மோர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கேழ்வரகு கலவையில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கேழ்வரகு - மோர் கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×