என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    பீட்ரூட் உடலில் உள்ள இரத்த கழிவுகளை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். இன்று பீட்ரூட் சூப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீட்ரூட் - 1/4 கிலோ
    தக்காளி - 2
    பெரிய வெங்காயம் - 1
    வெண்ணெய் - 25 கிராம்
    மிளகுத்தூள் - தேவையான அளவு
    கரம்மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    சோளா மாவு - 2 டீஸ்பூன்
    கிரீம் - 1 டீஸ்பூன்
    தண்ணீர் - 3 கப்

    பீட்ரூட் சூப்

    செய்முறை :

    பீட்ரூட்டை தோல் சீவி துருவியால் துருவிக் கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சோளா மாவை அரை கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

    குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, பீட்ரூட்டை போட்டு அத்துடன் மிளகுத்தூள், உப்பு, கரம்மசாலா தூள், வெண்ணெய் சேர்த்து 2 விசில் போட்டு வேக விடவும். வெந்ததும் மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய பீட்ரூட் சாறுடன் கரைத்து வைத்துள்ள சோளமாவு கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்கும் போது அத்துடன் 1 டீஸ்பூன் கிரீம் சேர்க்கவும்.

    சூப்பரான பீட்ரூட் சூப் ரெடி.

    பிரெட் துண்டுகளை நெய்யில் வறுத்து சூடான கப்பில் போட்டு பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகின்றனர். அதை பூர்த்தி செய்யும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்து தங்களது குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்கிறார்கள்.
    குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகின்றனர். அதை பூர்த்தி செய்யும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்து தங்களது குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்கிறார்கள். கல்வி குறித்த விழிப்புணர்வு மக்களிடம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் படித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதே போல தமிழகத்தை பொறுத்தவரை உயர் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    இதையொட்டி கல்வி கற்பிக்கும் நிறுவனங்களும் அதிகமாகி வருகிறது. ஆனால் கல்வி கற்றவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு என்பது போதுமானதாக இல்லை. இதனால் படித்த மாணவ-மாணவிகள் வேலைக்காக அலைந்து திரியும் நிலை உள்ளது. படித்த படிப்பிற்குரிய வேலை கிடைக்காத நிலை என்பது அதிகரித்து விட்டது.

    ஏதோ ஒரு துறையில் படித்து விட்டு, மற்றொரு துறையில் வேலை பார்க்கும் நிலை உள்ளது. இதனால் படித்தவர்களின் திறன் பயன்படாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாடத்திட்டம் என்பது படிக்கும் மாணவர்களுக்கு வேலை வழங்கும் வகையில் இருக்க வேண்டும். அதோடு தொழில் சார்ந்த செய்முறைகளே பாடங்களாக வகுக்கப்பட வேண்டும். அப்படி இல்லாத நிலையில் படிப்பு என்பது வெறும் சான்றிதழ் என்ற அளவில் மதிப்பிடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விடும். எனவே ஒவ்வொரு மாணவரும் ஈடுபட விரும்பும் தொழில்களை பாடத்திட்டங்களாக வடிவமைக்க வேண்டும்.

    வகுப்பறை, மேஜை, நாற்காலி என்ற அளவில் இருக்கும் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் ஒரு தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட வேண்டும். அங்கு ஒவ்வொரு தொழில் சார்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். அந்த தொழில் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் குறைந்தது ஒரு ஆண்டாவது செயல்முறையாக செய்ய வேண்டும். அவர் எந்த தொழில் சார்ந்து பயிற்சி பெறுகிறாரோ அதற்குரிய சான்றிதழை வழங்க வேண்டும். மேலும் படிக்கிற காலத்தில் மாணவர்கள் செய்யும் வேலைக்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் படித்து முடித்து வெளியே வரும் மாணவர்கள் தைரியமாக தொழில்களில் ஈடுபட முடியும். இல்லையென்றால் வேலைக்கு செல்வதற்காக கருவியாகத்தான் படிப்பு சான்றிதழ் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.

    மேலும் தொழிலாளர் களை உற்பத்தி செய்வதாக தான் கல்வி பாடத்திட்டம் இருக்கும். தொழில் முனைவோர்கள் உருவாகுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அரசின் கொள்கைகள், நிதி உதவி, மானியம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கருத்தரங்கு உள்ளிட்ட நிகழ்வுகள் மூலம் தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    அதிக வேலை வாய்ப்பும், தினசரி தேவைகளும் உள்ளதுமான விவசாய தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அப்போது தான் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். இதை செய்வதன் மூலம் தான் நகரங்களை நோக்கி மக்கள் குவிவதை தடுக்க முடியும். தொழில் சார்ந்த வாய்ப்புகள் ஊருக்கு, ஊர் வேறுபடும். அதை கண்டறிந்து புதிய, புதிய தொழில்கள் தொடங்க படித்த இளைஞர்கள் முன்வர வேண்டும். உலகமயமாகிய பொருளாதார சூழலில் தொழில் நிறுவனங்களை நடத்துவது என்பது பெரும் சவாலாக மாறி இருக்கிறது.

    அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் போட்டி இருந்தால் தான் வெற்றிக்கான வழி கண்டறிந்து அடைய முடியும். அதற்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள கல்வியின் பாடத் திட்டமும், தொழில்துறையின் கொள்கைகளும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். அதை சாத்தியமாக்கி விட்டால் படித்த மாணவர்கள் வேலை கேட்பவர் என்ற நிலையில் இருந்து வேலை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து விடுவார்கள். இதன் மூலம் வேலை இல்லா திண்டாட்டம் நீங்கி, நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு வறுமை ஒழிய வாய்ப்பு ஏற்படும்.
    கர்ப்பிணிகள் நார்ச்சத்து மிக்க உணவுகளை டயட் மூலம் கடைப்பிடித்து வந்தால் ஆரோக்கிய பிரசவத்திற்கு வழிவகுக்கும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
    மருத்துவ வசதிகள், தொழில்நுட்பங்கள் அதிகரித்து வந்தாலும் இயற்கை பிரசவங்கள் குறைந்து வருகின்றன. சிசேரியன் அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நார்ச்சத்து மிக்க உணவுகளை டயட் மூலம் கடைப்பிடித்து வந்தால் ஆரோக்கிய பிரசவத்திற்கு வழிவகுக்கும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    தாவர உணவுகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடல் பாக்டீரியாக்களிடம் இருந்து நோய்எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியப்படுத்துகிறது. எனவே இதை கர்ப்பிணி பெண்கள் உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொள்வது தாய்-சேய் இருவரின் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், பிரசவம் இயல்பாக நடைபெறவும் துணை செய்யும் என்று தெரியவந்துள்ளது.

    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிட்னி பல்கலைக்கழக ஆய்வுக்குழு இதை கண்டுபிடித்துள்ளது. “இயற்கை உணவான பெரும்பாலான தாவர உணவுகள் நார்ச்சத்துமிக்கவை. இவற்றை அளவாக சாப்பிட்டு வந்தால் எல்லாவகை ஆரோக்கியமும் கிடைக்கும். வலுவான நோய்எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கும். இதுவே எதிர்கால நோய்களைத் தடுக்கும் சரியான தற்காப்பு நடவடிக்கையாகவும் அமையும்” என்கிறது ஆய்வுக்குழு.

    ஆரோக்கியமுடன் கூடிய வயதானவர்களில் குறைவான தூக்கமுள்ளவருடன் நல்ல தூக்கம் உள்ளவரை ஒப்பிடும்போது குறைவான தூக்கமுள்ளவரின் மூளையின் அளவு கணிசமாக சிறியதாக இருக்கும் சாத்தியக்கூறு அதிகமே.
    வயதாவதை அறிய சிலபல அறிகுறிகள் இருப்பதுபோல் மூளை சுருங்குதலும் மூப்பின் அறிகுறியே. நாம் என்னதான் ஆரோக்கியமாக இருந்தாலும் நம் மூளையின் எடை ஆண்டுதோறும் 0.5 சதவீதம் குறைகிறது.

    சாதாரணமாக வரும் வயது மூப்பினால் மூளையின் எடை 10 வருடத்தில் 1.5 சதவீதம் வரை குறைவதாக கண்டுள்ளனர். இந்த எடை குறைதல் ஒருவர் வாலிப வயதுக்கு வந்தது முதல் ஆரம்பித்து 60 வயதுக்குமேல் முக்கியமாக தெரிய ஆரம்பிக்கிறது. இதற்கு மூல காரணம் நம் மூளையின் செல்கள் இயற்கையாகவே வயது ஆக ஆக குறைவதால் ஏற்படுவதாகும்.

    மூளை சுருங்குதல் இயற்கை எனக் கூறினாலும் வயதாவது மட்டுமே ஒரே காரணம் இல்லை. தூக்கமின்மை, பதட்டப்படுதல் போன்றவை மூளையின் கொள்ளளவை குறைக்கின்றது. ஆரோக்கியமுடன் கூடிய வயதானவர்களில் குறைவான தூக்கமுள்ளவருடன் நல்ல தூக்கம் உள்ளவரை ஒப்பிடும்போது குறைவான தூக்கமுள்ளவரின் மூளையின் அளவு கணிசமாக சிறியதாக இருக்கும் சாத்தியக்கூறு அதிகமே.

    ஒவ்வொரு மணி நேர தூக்கமின்மையும் ஒருவரது உடல் சுருக்கத்துடன் அவரது அறிவாற்றல் திறனில் 0.67 சதவீதம் அளவு குறைக்கின்றது.

    வைட்டமின் பி-12 குறைபாடு கணிசமாக அறிவு செயல் நலிவை ஏற்படுத்தும். ஒரு ஆராய்ச்சியின்படி ஆரோக்கியமான நபர்களில், ஆனால் சாதாரண அளவு வைட்டமின் பி-12 கொண்டவர் களின் மூளை அளவு, ஆரோக்கியத்துடன் அதிக அளவு வைட்டமின் பி-12 கொண்டவர்களின் மூளையின் அளவை விட குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த வகையான செயல் நலிவு கொண்ட மூளை உருவாவதை நம்மால் தடுக்க முடியும், மீட்டெடுக்கவும் முடியும். எப்படி எனில் நம் உடலின் வைட்டமின் பி-12 அளவை மீட்டெடுப்பதன் மூலம்.

    மூளையின் ‘ஹிப்போகாம்பஸ்’ (Hippocampus) தன் அளவில் இருந்து குறைவதால் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படுவது என்பதை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளனர். மூளையின் இப்பகுதி தான் நாம் கற்பதற்கும் நினைவு நிற்பதற்கும் மிகவும் பயன்படுகிறது. மற்றொரு ஆராய்ச்சியில், மன அழுத்தம் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் அதன் நினைவக மையங்களில் குறைவான மூளை திசுக்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

    அதிக வருடங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சிலர் குறைந்த வயதிலேயே இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இவ்வகை மூளைத் திசுக்கள் குறைபாடு அதிகமாகவும் கடுமையாகவும் இருக்கிறது.

    மூளை நலிவிற்கும், அல்சைமர் மற்றும் பக்கவாதம், பெருமூளை வாதம், மரபு சார்ந்த மூளை செல்கள் குறைபாடு (Huntington disease) மற்றும் சேதமடையும் டிமென்சியா (Dementia) போன்றவற்றுக்கும் பல மருத்துவ காரணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    மூளையின் தோற்றத்தை விளக்கும் படம்

    மேற்கூறிய நோய் கொண்டவர் களுக்கு மூளை செயல் நலிவு இருப்பின் நோய்களின் தாக்கம் வருவதுடன் உடலுக்கு பலத்த சேதத்தையும் தரும்.

    அல்சைமர் மற்றும் சில வகை டிமென்சியா நோய்களில் மூளை செல்கள் படிப்படியாக தங்கள் செயல்பாட்டை இழப்பதுடன் செல்கள் ஒன்றுக்கொன்று தகவல் பரிமாற்றம் செய்துகொள்வதும் இயலாமல் போகின்றது. புது நினைவுகள் உருவாக மற்றும் நாம் சிந்தித்து திட்டமிட்டு நினைவில் கொள்ள உதவும் மூளையின் பாகங்கள் அல்சைமர் நோயில் தாக்கப்படுகின்றது. இருப்பினும் மூளையின் மற்ற பாகங்களும் சுருங்குகின்றன.

    நீரிழிவு நோயும் மூளையின் செயல் நலிவுக்கு மற்றொரு காரணமாக உள்ளதை இன்னொரு ஆராய்ச்சியில் கண்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியில் 614 நபர்களின் மூளையை காந்த அதிர்வு படமெடுத்தல் (MRI Scan) மூலம் பரிசோதித்தனர். இதில் 10 வருட காலம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையின் கொள்ளளவு குறைவாக இருந்தது. மேலும் அதிக காலம் நீரிழிவு நோய் இருந்தவர்களுக்கு அதிக சுருக்கமும் காணப்பட்டது.

    மூளையிலுள்ள தசைக் கட்டுப்பாட்டுக்கு உதவும் கிரே மேட்டர் (Grey matter) தான் அதிகமாக பாதிக்கப்படுகிறது. இவ்வகை கிரே மேட்டர் தான் நமக்கு பார்வை, கேட்கும் திறன், பேசுதல், ஞாபக சக்தி மற்றும் உணர்வு களுக்கு மூல காரணமாக இருக்கிறது.

    மூளையின் செயல் நலிவுக்கு நம்மால் கட்டுப்படுத்த முடியாத சில காரணங்கள் உள்ளன. இது தவிர நம்முடைய வாழ்க்கை முறைகளாலும் மூளை பாதிக்கப்படுகின்றது.

    உடற்பயிற்சி குறைவாக இருந்தாலும் அது நம் மூளையை பெரிதும் பாதிக்கும். நம் உடலை சரிவர செயல்படுத்தாமல் இருந்தால் மூளையில் ‘ஹிப்போகாம்பஸ்’ உள்பட எட்டு பகுதிகளில் ரத்த ஓட்டம் குறைகின்றது. பத்து வருடத்தில் நம்முடைய மூளையிலுள்ள நியூரான் களின் அடர்திறன் அதிகரிக்கப்படாமல் நம் மூளையின் கொள்ளளவு குறைவதை நம்மால் அறிய இயலும். இந்த சுருக்கத்தன்மை தான் நம் மூளையின் செயல் நலிவிற்கு மூல காரணம்.

    உடற்பயிற்சியின்மை மூளைச் சிதைவு (குறிப்பாக அல்சைமர், பார்க்கின்சன் போன்ற) நோய்களை ஏற்படுத்தும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது. எனவே உடற்பயிற்சியால் நாம் அடையும் உன்னத நன்மையை புரிந்து கொண்டு முறையாக உடற்பயிற்சி செய்துவந்தால், அதுவே மூளை சுருங்குதலைத் தடுக்க உதவும்.

    முனைவர் ராஜன் ராமசுவாமி, சென்னை.
    முறையான இரவு தூக்கம் நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியம். இவ்வாறு உடல் நலத்தை கெடுக்கும் தூக்கமின்மைக்கு என்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதனைப் பார்ப்போம்.

    முறையான இரவு தூக்கம் நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியம். அவ்வாறு இல்லாத பொழுது உடல் ஆரோக்கியம் கெடுகின்றது. இவ்வாறு உடல் நலத்தை கெடுக்கும் தூக்கமின்மைக்கு என்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதனைப் பார்ப்போம்.

    பலர் குறுகிய காலமாக தூக்கமின்மையால் அவதிப்படுவதாக கூறுவார்கள். சிலர் தூக்கமின்மை அறிகுறிகள் சமீப காலமாக ஏற்படுவதாகக் கூறுவார்கள். சிலர் நெடுங்காலமாக தூக்கமின்மை காரணமாக அவதிப்படுவதாகக் கூறுவர்.

    நெருங்கிய உறவினை இழத்தல், வேலை செய்யும் இடத்தில் அதிக ஸ்ட்ரெஸ், உடலில் வலி, நீண்ட கால நோய், விடாத கவலை இவை அனைத்தும் ஒருவருக்கு தூக்கமின்மையினை ஏற்படுத்த முடியும்.

    செயற்கை விளக்குகளை அதிகம் உபயோகித்தல் கூட தூக்கத்திற்கு தொந்தரவினைக் கொடுக்கும். அவ்வாறு அலுவலகத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளவர்கள் காலை, மாலை சிறிது நேரம் சூரிய ஒளியில் இருக்கலாம். இது உங்கள் தூக்க நேரம், தரம் இரண்டினையும் உயர்த்தும்.

    அதிகமான நீலநிற ஒளியில் மாலையில், இரவில் இருக்க வேண்டாம். டி.வி. பெட்டிகளை கூட இரவில் முழுமையாக அணைத்து விடுங்கள். நீலஒளி உடலினை பகல்நேரம் போல் உணர வைக்கும். எனவே மாலை, இரவில் நீல ஒளியினை தவிர்த்து விடுங்கள்.

    • பகல் 12 மணிக்கு பிறகு காப்பி, டீ இரண்டினையும் நிறுத்தி விடுங்கள். கேலின் தூக்க தரத்தினை வெகுவாய் பாதிக்கும்.
    • பகலில் நீண்ட நேரம் தூக்கம் வேண்டாம். இது இரவு தூக்கத்தினைக் கெடுக்கும்.
    • தூங்கும் நேரமும், விழிக்கும் நேரமும் எப்பொழுதும் முறையாக இருக்கட்டும். • ஆல்கஹாலை நம் வாழ்வில் இருந்து அடியோடு ஒழித்து விடுவோம்.
    • படுக்கை அறை அமைதியாக, சுத்தமாக இருக்க வேண்டும்.

    • இரவு வெகு நேரம் சென்று உணவு அருந்தாதீர்கள்.
    • மாலையிலேயே மனது ரிலாக்ஸ் ஆகி விடட்டும்.
    • மாலையோ, இரவோ குளியுங்கள்.
    • உங்கள் படுக்கை, தலையணை இவை முறையாக இருக்க வேண்டும்.
    • உறங்கப் போவதற்கு முன்பு கடின உடற்பயிற்சி செய்யக்கூடாது.

    நீண்ட ஆய்வுகள் கூறுவது முறையற்ற தூக்கம், குறைவான தூக்கம். இவை தவிர 89 சதவீதம் குழந்தைகளின் எடை கூட காரணமாய் இருக்கின்றன. இதே காரணம் தான் 55சதவீதம் பெரியோர்களின் எடை கூடவும் காரணமாய் இருக்கின்றன. அளவு குறைவான தூக்கம் ஹார்மோன் குறைபாடுகளை ஏற்படுத்துகின்றது. தேவையான அளவு தூக்கம் உடையவர்கள் தேவையான அளவே உண்கின்றனர். ஆரோக்கியமாய் இருக்கின்றனர்.

    கடந்த பல வருடங்களாக அநேகரும் குறைந்த அளவே தூங்குகின்றனர். இதன் காரணமாகவே அதிக மக்கள் நோய் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். அதிக கவனக்குறைவுடன் இருக்கின்றனர். தூக்க குறைபாடு இருதய நோய், வாதம் பாதிப்பிற்கு காரணமாக இருக்கின்றது.

    தூக்க குறைபாடு சர்க்கரை நோய் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. தூக்க குறைபாடு மனச்சோர்வினை ஏற்படுத்துகின்றது. நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது. உடலில் வீக்கங்கள் ஏற்படுகின்றன. நாம் பழகும் முறையில் பண்பற்ற மாறுதல்கள் ஏற்படுகின்றன. நல்ல தூக்கம் 7-8 மணி நேரம் இருக்கும் பொழுது குறைபாடுகள் நீங்குகின்றன. எனவே முறையாய் தூங்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டு நம் ஆரோக்கியத்தினை நாமே ஏற்படுத்திக் கொள்வோம்.
    கடல் உணவில் இறால் பெரும்பாலானவர்களால் அதிகம் விரும்பி சாப்பிடக் கூடியது. இறால் பெப்பர் பிரை அனைவரும் விரும்பக் கூடியதாகும். அதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 250 கிராம்
    பச்சை மிளகாய் - 4
    இஞ்சி - 25 கிராம்
    பூண்டு - 25 கிராம்
    வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிது
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
    எண்ணெய்  - தேவையான அளவு
    உப்பு  - தேவையான அளவு

    இறால் பெப்பர் பிரை

    செய்முறை :

    இறாலை சுத்தமாக கழுவிக்கொள்ளவும்.

    இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள இறாலைப்போட்டு, அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறாமாக வதங்கியதும் அதில் இஞ்சி கலவையை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை நன்கு பிரட்டி விட வேண்டும்.

    இறால் அதிக நேரம் வேக வைக்க கூடாது. இறால் அளவுக்கு அதிகமாக வெந்துவிடாத வகையில் பக்குவமாக இறக்கி ஆறியதும் பரிமாறலாம்.

    சூப்பரான இறால் பெப்பர் பிரை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சில உணவுகளை சாப்பிடும் போது அதனுடன் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும். எந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட கூடாது என்று பார்க்கலாம்.
    * தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமே ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும்.

    * வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.

    * பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.

    * வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.

    * மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது. அவ்வாறு உண்டால் “வெண் மேகம்“ போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

    * காலையில் வெறும் வயிற்றில் காபி, டீ குடிக்கக் கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர் குடிக்கலாம்.

    * உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.

    * ஆஸ்துமா, சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

    * மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது.

    * நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.

    * வயிற்றுப்புண், மஞ்சள் காமாலை உள்ளவர்கள் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்க்க கூடாது.

    * பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது.

    * தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.

    * கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்துச் சாப்பிடக்கூடாது.

    * மூட்டுவலி, வாத நோயாளிகள், அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக் கூடாது.

    பெண்கள் நேர்த்தியான ஸ்டைலை தரும் கொண்டைகளை எப்படி எளிதாக போடுவது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    எல்லா கூந்தல் ஸ்டைலும் ஒரே சமயத்தில் கூலாகவும் அதேசமயத்தில் ஸ்டைலாகவும் இருப்பதில்லை. ஆனால், கொண்டை ஹேர்ஸ்டைல் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் எல்லா நேரத்திற்கும் பொருந்தும் ஒரு ஸ்டைல். நீங்களும் இதை சுலபமாக பெறலாம்.

    வால்யுமைஸிங் ஷாம்பூ மற்றும் கண்டிஷ்னர் கொண்டு கூந்தலை நன்றாக சுத்தம் செய்யவும். கூந்தலை துண்டை பயன்படுத்தி துடைக்கவும். கொஞ்சம் ஈரம் கூந்தலில் இருக்கும் நிலையில் துளி ஹேர் சீரமை கூந்தலில் பூசவும். கூந்தலில் வேர் முதல் நுனி வரை பரவலாக சீரத்தை தடவவும். கூந்தலை இயற்கையாக உலர்த்தலாம். அல்லது, பிலாஸ்ட் டிரை செய்துகொள்ளலாம்.

    கூந்தலை பகுதிகளாகப் பிரித்து ஸ்ட்ரெய்டென் செய்யவும். தலையின் உச்சியில் கூந்தலை ஒரு ஹை போனி டெயிலாக போட்டுக்கொள்ளவும். இதை ட்விச்ட் செய்து கொண்டையாக முடிக்கவும். பின்களைக் கொண்டு இதை இறுக்கவும். வலிமையான ஹோல்டிங் ஸ்ப்ரே மற்றும் ஷைன் ஸ்பிரேவைக் கொண்டு முடிக்கவும்.

    உங்களுக்கு நீளமான கூந்தல் இல்லையென்றால், ஹேர் எக்ஸ்டென்ஷன் (சவுரி) வைத்துக்கொள்ளலாம்.
    இயற்கை முறையில் செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட தூய தேங்காய் எண்ணெய் கொண்டு, குழந்தையின் கால்கள் தொடங்கி தலை வரை மசாஜ் செய்ய வேண்டும்.
    பிறந்த குழந்தைகள் சத்தான உணவு உட்கொண்டு ஆரோக்கியமாக வளர்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அவர்களுக்கு மசாஜ் செய்வது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதால், சிறந்த இரத்த ஓட்டம், அவர்களின் தொடு உணர்ச்சிகள், அவர்களின் உடல் நலன், உடலின் ஈரப்பதம் என அனைத்தும் மேம்படுகின்றன. மேலும் குழந்தைகளின் உடலில் காயம் பட்டிருந்து, அது கவனத்திற்கு வராது போயிருந்தால், அப்படிப்பட்ட காயங்களை, தடுப்புகளை மசாஜ் செய்யும் போது கண்டறியலாம்.

    இயற்கை முறையில் செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட தூய தேங்காய் எண்ணெய் கொண்டு, குழந்தையின் கால்கள் தொடங்கி தலை வரை மசாஜ் செய்ய வேண்டும்; காலில் இருந்து தொடங்குவதால், குழந்தையின் உடலில் உள்ள சூடு எளிதில் வெளியேறும். குழந்தையை குளிப்பாட்டும் போதும் தண்ணீரை காலில் இருந்தே ஊற்றத் தொடங்குவர்; அதுவும் இந்த சூடு வெளியேறும் காரணத்திற்காகவே!

    குழந்தையின் கால்களில், மிருதுவாக உருவிவிட்டு மசாஜ் செய்யவும். தொடையிலிருந்து தொடங்கி, கீழ்வரை மசாஜ் செய்யவும்.

    குழந்தையின் உள்ளங்கால்களில் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும்.

    ஒவ்வொரு கால் விரலையும், நன்றாக எண்ணெய் தடவி, சொடக்கு போடுவது போல், மெதுவாக இழுத்து விடவும்.

    குழந்தையின் கைகளில், மெதுவாக மேலிருந்து கீழாக உருவிவிட்டு மசாஜ் செய்யவும்.

    இரு கைகளின் மணிக்கட்டுகளிலும் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும்.

    குழந்தையின் கை விரல்கள் ஒவ்வொன்றிலும் எண்ணெய் தடவி, சொடக்கு போடுவது போல், மெதுவாக இழுத்து விடவும்.

    குழந்தையின் மார்புப் பகுதியில், உங்கள் உள்ளங்கைகளைக் கொண்டு, மெதுவாக மசாஜ் செய்யவும்.

    குழந்தையின் வயிற்று பகுதி முழுதும், நன்றாக எண்ணெய் தடவி, மெதுவாக மசாஜ் செய்யவும்.

    குழந்தையின் முதுகு பரப்பு முழுவதும், நீவிவிடும் வகையில், மசாஜ் செய்யவும். முதுகெலும்பு தொடரிலும் நன்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்யவும்.

    குழந்தையின் பின்புட்டப்பகுதியிலும் எண்ணெய் தடவி நன்கு மசாஜ் செய்யவும்.

    குழந்தையின் முகம், அது பிறந்த புதிதில் நீங்கள் எப்படி மசாஜ் செய்துள்ளீரோ அதை பொருத்தே அமையும். ஆகையால், முகத்தில் கவனத்துடன் மசாஜ் செய்யவும்.

    குழந்தையின் தலையின் அமைப்பும் மசாஜினை பொருத்து மாறுபடும். அதனால், தலையில் மசாஜ் செய்யும் போது அதிக கவனத்துடன் இருப்பது நல்லது.

    மசாஜ் செய்வதால், குழந்தைகள் பலம் அடைவர்; அவர்களின் எலும்பு வளர்ச்சி மேம்பாடு அடையும். இது அவர்களுக்கு ஓய்வு உணர்வையும் அளிக்கும். மசாஜினை குழந்தைகள் மகிழும் வகையில் செய்துவிடவும்..!
    சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் ஓமம், கற்பூரவல்லி சேர்த்து சூப் செய்து பருகலாம். இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கற்பூரவல்லி இலை - 15,
    ஓமம் - 2 டீஸ்பூன்,
    சீரகம் - 2 டீஸ்பூன்,
    தனியா - 2 டீஸ்பூன்,
    மிளகு - 4 எண்ணிக்கை,
    சுக்குத்தூள் - ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 4 பல்,
    சோம்பு - சிறிது (தேவைப்பட்டால்),
    உப்பு - தேவைக்கு,
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),
    வெற்றிலை - 4,
    கொத்தமல்லி - சிறிதளவு
    நெய் - 2 டீஸ்பூன்.

    ஓமம் கற்பூரவல்லி சூப்

    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கற்பூரவல்லி இலையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை சேர்த்து வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.

    மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, வதக்கிய கற்பூரவல்லி இலை, வெற்றிலையுடன் சேர்த்து 2 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

    சூப் நன்கு கொதித்து 1 கப்பாக சுண்டியதும் வடித்து பரிமாறவும்.

    சத்தான ஓமம் கற்பூரவல்லி இலை சூப் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கர்ப்ப காலத்தில் எப்போதெல்லாம் பயணம் செய்யலாம், எப்போதெல்லாம் பயணம் செய்யக்கூடாது என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கர்ப்பகாலத்தில் நிறைய பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால், குழந்தை வயிற்றில் இருக்கும்போது பயணம் செய்வது மிகவும் சிரமமான ஒன்று. நீங்கள் கர்ப்பகால பயணங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவையும், கர்ப்பகாலத்தில் செய்யக்கூடாதவையும் இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    நீங்கள் தாராளமாக முதல் மூன்று மாதங்கள் பயணம் செய்யலாம். ஆனால், வாந்தியும், களைப்பும் உங்கள் பயணத்தை மோசமானதாக மாற்றிவிடும். கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    அடுத்த மூன்று மாதங்கள் : கழிவறைக்கு உங்கள் வருகை குறைந்து வருவதால் பயணம் செய்ய இது ஒரு நல்ல நேரம். நீங்கள் குழந்தையை பம்ப் செய்து, அதிக ஆற்றலுடன் இருப்பீர்கள். ஆனால் நடைபயிற்சியின் போது கவனமாக இருக்க வேண்டும் ஒருவேளை நீங்கள் கீழே விழுந்தால் அது குழந்தைக்கு ஆபத்தாய் முடியும்.

    கடைசி மூன்று மாதங்கள் : இந்த காலகட்டத்தில் நீங்கள் வெளிபயணங்களை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை சில முக்கியமான காரணங்களுக்காக பயணம் செய்ய நேர்ந்தால் நம்பத்தகுந்த மருத்துவர் உங்கள் அருகில் இருப்பது அவசியம்.

    எப்போதெல்லாம் பயணம் செய்யலாம்

    1. மருத்துவரிடம் அனுமதி பெற்ற பின் பயணம் செய்யலாம், உங்கள் பயண விவரங்ககளை முன்கூட்டியே அவரிடம் சொல்லி அவர்களின் ஆலோசனைபடி நடந்து கொள்ளவும்.

    2. பயணம் செய்யும் வாகனம் மிகவும் முக்கியமானது. விமானம் மற்றும் கார் பயணங்கள் பேருந்து, ரயில் பயணங்களை விட பாதுகாப்பானது.

    3. மருத்துவ வல்லுனரின் அறிவுரைப்படி நடக்கவேண்டும். அது மட்டுமின்றி சரியான பயண முகவர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    4. செல்லக்கூடிய இடத்தில் நல்ல மருத்துவர்கள் உள்ளதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

    5. உங்களின் மருத்துவ காப்பீட்டை உறுதிசெய்வது நல்லது. ஏனெனில் கர்ப்பகால சிக்கல்கள் அதிக செலவை ஏற்படுத்தும்.

    6. உங்களின் மருத்துவ குறிப்புகளின் ஒரு நகல் உங்களுடன் இருப்பது நல்லது. குறிப்பாக அதிக நாட்கள் தங்க நேரும்போது மருத்துவ குறிப்புகள் உடனிருத்தல் மிகவும் அவசியமாகும்.

    எப்போதெல்லாம் பயணம் செய்யக்கூடாது

    1. இரத்தக்கசிவு இருக்கும்போது: இது ஒருவேளை கருசிதைவின் அறிகுறியாக இருக்கலாம்.

    2. கடுமையான தலைவலி இருக்கும்போது: தலைவலி பம்ப்-ல் உள்ள பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். எனவே மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது.

    3. பார்வை குறைபாடு உள்ளபோது: தெளிவின்மை மற்றும் மங்கலான பார்வை உங்கள் பார்வை நரம்பு பாதிப்பை குறிக்கிறது.

    4. வயிற்றில் வலி ஏற்படும்போது: நீங்கள் எங்கு பயணம் செய்வதாக இருந்தாலும் அதை தவிர்த்துவிடுங்கள். உங்கள் குழந்தையின் ஆரோக்கியமே அனைத்தையும்விட முக்கியம்.
    இந்த ஆசனம் செய்வதால், தொடைகள் நன்கு ஸ்ட்ரெட்ச் ஆகி, இடுப்பு பகுதி நன்கு விரிவடைந்து, இனப்பெருக்க உறுப்புகள் நன்கு ஆரோக்கியமாக செயல்படும்.
    செய்முறை

    இந்த ஆசனம் பட்டாம்பூச்சியின் நிலை போன்று இருக்கும். இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் நேராக உட்கார்ந்து, படத்தில் காட்டியவாறு இரண்டு பாதங்களும் ஒன்றோடு ஒன்று தொடும் நிலையில், கைகளால் பாதங்களைப் பிடித்துக் கொண்டு, மெதுவாக மேலும் கீழுமாக அசைக்க வேண்டும்.

    இந்த ஆசனத்தை 1 நிமிடம் செய்த பின்னர் சிறிது ஓய்வு எடுத்து பின்னர் மறுபடியும் செய்ய வேண்டும். இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.

    பயன்கள்

    இந்த ஆசனம் செய்வதால், தொடைகள் நன்கு ஸ்ட்ரெட்ச் ஆகி, இடுப்பு பகுதி நன்கு விரிவடைந்து, இனப்பெருக்க உறுப்புகள் நன்கு ஆரோக்கியமாக செயல்படும். மாதவிடாய் பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த ஆசனம் நல்ல பலனை அளிக்கும்.
    ×