search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மூளை சுருங்குதல் எப்படி நடக்கிறது?
    X
    மூளை சுருங்குதல் எப்படி நடக்கிறது?

    மூளை சுருங்குதல் எப்படி நடக்கிறது?

    ஆரோக்கியமுடன் கூடிய வயதானவர்களில் குறைவான தூக்கமுள்ளவருடன் நல்ல தூக்கம் உள்ளவரை ஒப்பிடும்போது குறைவான தூக்கமுள்ளவரின் மூளையின் அளவு கணிசமாக சிறியதாக இருக்கும் சாத்தியக்கூறு அதிகமே.
    வயதாவதை அறிய சிலபல அறிகுறிகள் இருப்பதுபோல் மூளை சுருங்குதலும் மூப்பின் அறிகுறியே. நாம் என்னதான் ஆரோக்கியமாக இருந்தாலும் நம் மூளையின் எடை ஆண்டுதோறும் 0.5 சதவீதம் குறைகிறது.

    சாதாரணமாக வரும் வயது மூப்பினால் மூளையின் எடை 10 வருடத்தில் 1.5 சதவீதம் வரை குறைவதாக கண்டுள்ளனர். இந்த எடை குறைதல் ஒருவர் வாலிப வயதுக்கு வந்தது முதல் ஆரம்பித்து 60 வயதுக்குமேல் முக்கியமாக தெரிய ஆரம்பிக்கிறது. இதற்கு மூல காரணம் நம் மூளையின் செல்கள் இயற்கையாகவே வயது ஆக ஆக குறைவதால் ஏற்படுவதாகும்.

    மூளை சுருங்குதல் இயற்கை எனக் கூறினாலும் வயதாவது மட்டுமே ஒரே காரணம் இல்லை. தூக்கமின்மை, பதட்டப்படுதல் போன்றவை மூளையின் கொள்ளளவை குறைக்கின்றது. ஆரோக்கியமுடன் கூடிய வயதானவர்களில் குறைவான தூக்கமுள்ளவருடன் நல்ல தூக்கம் உள்ளவரை ஒப்பிடும்போது குறைவான தூக்கமுள்ளவரின் மூளையின் அளவு கணிசமாக சிறியதாக இருக்கும் சாத்தியக்கூறு அதிகமே.

    ஒவ்வொரு மணி நேர தூக்கமின்மையும் ஒருவரது உடல் சுருக்கத்துடன் அவரது அறிவாற்றல் திறனில் 0.67 சதவீதம் அளவு குறைக்கின்றது.

    வைட்டமின் பி-12 குறைபாடு கணிசமாக அறிவு செயல் நலிவை ஏற்படுத்தும். ஒரு ஆராய்ச்சியின்படி ஆரோக்கியமான நபர்களில், ஆனால் சாதாரண அளவு வைட்டமின் பி-12 கொண்டவர் களின் மூளை அளவு, ஆரோக்கியத்துடன் அதிக அளவு வைட்டமின் பி-12 கொண்டவர்களின் மூளையின் அளவை விட குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த வகையான செயல் நலிவு கொண்ட மூளை உருவாவதை நம்மால் தடுக்க முடியும், மீட்டெடுக்கவும் முடியும். எப்படி எனில் நம் உடலின் வைட்டமின் பி-12 அளவை மீட்டெடுப்பதன் மூலம்.

    மூளையின் ‘ஹிப்போகாம்பஸ்’ (Hippocampus) தன் அளவில் இருந்து குறைவதால் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படுவது என்பதை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளனர். மூளையின் இப்பகுதி தான் நாம் கற்பதற்கும் நினைவு நிற்பதற்கும் மிகவும் பயன்படுகிறது. மற்றொரு ஆராய்ச்சியில், மன அழுத்தம் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் அதன் நினைவக மையங்களில் குறைவான மூளை திசுக்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

    அதிக வருடங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சிலர் குறைந்த வயதிலேயே இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இவ்வகை மூளைத் திசுக்கள் குறைபாடு அதிகமாகவும் கடுமையாகவும் இருக்கிறது.

    மூளை நலிவிற்கும், அல்சைமர் மற்றும் பக்கவாதம், பெருமூளை வாதம், மரபு சார்ந்த மூளை செல்கள் குறைபாடு (Huntington disease) மற்றும் சேதமடையும் டிமென்சியா (Dementia) போன்றவற்றுக்கும் பல மருத்துவ காரணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    மூளையின் தோற்றத்தை விளக்கும் படம்

    மேற்கூறிய நோய் கொண்டவர் களுக்கு மூளை செயல் நலிவு இருப்பின் நோய்களின் தாக்கம் வருவதுடன் உடலுக்கு பலத்த சேதத்தையும் தரும்.

    அல்சைமர் மற்றும் சில வகை டிமென்சியா நோய்களில் மூளை செல்கள் படிப்படியாக தங்கள் செயல்பாட்டை இழப்பதுடன் செல்கள் ஒன்றுக்கொன்று தகவல் பரிமாற்றம் செய்துகொள்வதும் இயலாமல் போகின்றது. புது நினைவுகள் உருவாக மற்றும் நாம் சிந்தித்து திட்டமிட்டு நினைவில் கொள்ள உதவும் மூளையின் பாகங்கள் அல்சைமர் நோயில் தாக்கப்படுகின்றது. இருப்பினும் மூளையின் மற்ற பாகங்களும் சுருங்குகின்றன.

    நீரிழிவு நோயும் மூளையின் செயல் நலிவுக்கு மற்றொரு காரணமாக உள்ளதை இன்னொரு ஆராய்ச்சியில் கண்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியில் 614 நபர்களின் மூளையை காந்த அதிர்வு படமெடுத்தல் (MRI Scan) மூலம் பரிசோதித்தனர். இதில் 10 வருட காலம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையின் கொள்ளளவு குறைவாக இருந்தது. மேலும் அதிக காலம் நீரிழிவு நோய் இருந்தவர்களுக்கு அதிக சுருக்கமும் காணப்பட்டது.

    மூளையிலுள்ள தசைக் கட்டுப்பாட்டுக்கு உதவும் கிரே மேட்டர் (Grey matter) தான் அதிகமாக பாதிக்கப்படுகிறது. இவ்வகை கிரே மேட்டர் தான் நமக்கு பார்வை, கேட்கும் திறன், பேசுதல், ஞாபக சக்தி மற்றும் உணர்வு களுக்கு மூல காரணமாக இருக்கிறது.

    மூளையின் செயல் நலிவுக்கு நம்மால் கட்டுப்படுத்த முடியாத சில காரணங்கள் உள்ளன. இது தவிர நம்முடைய வாழ்க்கை முறைகளாலும் மூளை பாதிக்கப்படுகின்றது.

    உடற்பயிற்சி குறைவாக இருந்தாலும் அது நம் மூளையை பெரிதும் பாதிக்கும். நம் உடலை சரிவர செயல்படுத்தாமல் இருந்தால் மூளையில் ‘ஹிப்போகாம்பஸ்’ உள்பட எட்டு பகுதிகளில் ரத்த ஓட்டம் குறைகின்றது. பத்து வருடத்தில் நம்முடைய மூளையிலுள்ள நியூரான் களின் அடர்திறன் அதிகரிக்கப்படாமல் நம் மூளையின் கொள்ளளவு குறைவதை நம்மால் அறிய இயலும். இந்த சுருக்கத்தன்மை தான் நம் மூளையின் செயல் நலிவிற்கு மூல காரணம்.

    உடற்பயிற்சியின்மை மூளைச் சிதைவு (குறிப்பாக அல்சைமர், பார்க்கின்சன் போன்ற) நோய்களை ஏற்படுத்தும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது. எனவே உடற்பயிற்சியால் நாம் அடையும் உன்னத நன்மையை புரிந்து கொண்டு முறையாக உடற்பயிற்சி செய்துவந்தால், அதுவே மூளை சுருங்குதலைத் தடுக்க உதவும்.

    முனைவர் ராஜன் ராமசுவாமி, சென்னை.
    Next Story
    ×