என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் கோவிலில் இருந்து புறப்பட்டு கீழ ரதவீதியில் உள்ள செப்பு தேரில் எழுந்தருள்கின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த ேகாவில் வைணவ திருத்தலங்களில் முக்கியமானது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள்- ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா கடந்த 10-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் கோவிலில் இருந்து புறப்பட்டு கீழ ரதவீதியில் உள்ள செப்பு தேரில் எழுந்தருள்கின்றனர்.

    பின்னர் செப்புத்தேரோட்டம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் ெதாடங்குகின்றன. இதற்காக திருக்கல்யாண மண்டபத்தில் பிரமாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது. இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் திருக்கல்யாண விழா நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மதுரை கள்ளழகர் கோவில் ஆகிய கோவில்களில், இருந்து சீர்வரிசைகள் கொண்டுவரப்படுகின்றன.

    விழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
    நம்மாழ்வார் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை கடைசியாக மங்களாசாசனம் செய்துவிட்டு இத்தலத்திலேயே மோட்சம் அடைந்தார் என்று நம்பப்படுகிறது.
    தலச்சிறப்பு : இந்த கோவில் ஏறத்தாழ 2000 வருடம் தொன்மை வாய்ந்தது. 108 வைணவத் திருத்தலங்களில் 8 வது திருத்தலம் ஆகும். ஆழ்வார்களால் பாடல் பெற்ற பெருமாள் வாசம் செய்யும் திருத்தலங்கள் "திவ்ய தேசங்கள்" என்றும், "திருப்பதிகள்" என்றும் அழைக்கப்படுகின்றன. 108 திருப்பதிகளுள் இத்தல பெருமாளுக்குதான் தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது. உபரிசிரவசுவிடம் இருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால் இவருக்கு "அப்பக்குடத்தான்" என்ற திருநாமம் ஏற்பட்டது. இப்பெருமாளின் வலதுகையில் ஒரு அப்பக்குடத்தை அணைத்தவண்ணம் உள்ளது. இந்திரனுக்கு கர்வம் போக்கியும், மார்க்கண்டேயருக்கு எம பயம் போக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம், பாவம் போக்கியும் அருளிய தலம்.

    பெருமாளின் பஞ்சரங்கதலம் என்று சொல்லக்கூடிய ஐந்து அரங்களில் இதுவும் ஒன்று ஆகும். பெருமாளுக்கு முன்பே ஸ்ரீதேவி எழுந்தருளிய தலம், நான்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ள தலம், மார்க்கண்டேயனுக்கு பெருமாள் அருளிய தலம், எனப் பல பெருமைகளை உடைய திவ்ய தேசம், தற்போது "கோயிலடி" என அழைக்கப்படும் திருப்பேர் நகர் ஆகும்.

    நம்மாழ்வார் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை கடைசியாக மங்களாசாசனம் செய்துவிட்டு இத்தலத்திலேயே மோட்சம் அடைந்தார் என்று நம்பப்படுகிறது. எனவே இத்தலம் வந்து வழிபடுவோருக்கு "வைகுண்ட வாசம் நிச்சயம்" என்பது ஐதீகம். ஐந்து ஸ்ரீரங்கங்களுள் இதுவும் ஒன்று. அதாவது, பெருமாள் சயனக் கோலத்தில் எழுந்தருளியிருக்கும் பஞ்ச ரங்க தலங்களில் இது இரண்டாவது தலமாக விளங்கி வருகிறது. இந்த பஞ்ச ரங்க தலங்கள், உபய காவிரி மத்தியில் அமைந்துள்ளன. அதாவது, பிரிந்து பாயும் இரு காவிரிக்கு மத்தியில் உள்ள தலங்களாகும்.

    ஆதி ரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்),
    அப்பால ரங்கம் - திருப்பேர்நகர் (கோவிலடி),
    மத்திய ரங்கம் - ஸ்ரீரங்கம் (திருச்சி),
    சதுர்த்த ரங்கம் - திருக்குடந்தை சாரங்கபாணி ஸ்தலம் (கும்பகோணம்),
    பஞ்ச ரங்கம்(ஐந்தாவது ரங்கம்) - திருஇந்தளூர் பரிமள ரங்கம் (மயிலாடுதுறை).

    “அப்பால ரங்கம்” என்பதற்கு இரு பொருள்படும். ஸ்ரீரங்கத்திற்கு அடியில் இருப்பதால் அப்பால என்றும், ஸ்ரீரங்கத்தைவிடத் தொன்மையானது என்பதால் காலத்தால் அப்பால் இருக்கும் பழமையானது என்று பொருள்படும் அப்பால என்ற வார்த்தை கூறப்படுகிறது. ஸ்ரீரங்கத்திற்கு முன்பே பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளியதால், "ஆதி ரங்கம்" என்னும் பொருள்பட "அப்பால ரங்கம்" என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

    இத்தலத்தில் கர்ப்பக்கிரகத்தில் மூலவர் அப்பக் குடத்தான் என்னும் அப்பால ரங்கநாதர், புஜங்க சயனத்தில் மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். திருமகள் கேள்வன் என்பதற்கிணங்க பெருமாளின் மார்பில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள். தசாவதார ஒட்டியாணம் அணிந்து அருகில் மார்க்கண்டேய மகரிஷி அமர்ந்திருக்க வலது கையால் அப்பக் குடத்தைப் பற்றியபடி காட்சி தருகிறார் பெருமாள். தனி சந்திதியில் கமலவல்லித்தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார். உட்பிரகாரத்தில் விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர் ஆகியோர் தரிசனம் தருகிறார்கள்.

    இத்திருக்கோயிலுக்கு சோழ, பல்லவ மன்னர்களும், அதன் பின்பு விஜயநகர மன்னர்களும் திருப்பணி செய்திருக்கிறார்கள்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவத்தில் 4-வது நாளில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து புஷ்கரணிக்குக் கொண்டு வரப்பட்டனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து புஷ்கரணிக்குக் கொண்டு வரப்பட்டனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி எழுந்தருளி, 5 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    புஷ்கரணியில் பவனி வந்த தெப்பத்தின் உள்ளே மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டது. வேத பண்டிதர்கள் வேத பாராயணம் செய்தனர். புஷ்கரணியின் கரைகளில் அமர்ந்திருந்த பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
    பழனியில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் பல்வேறு ஊர்களில் இருந்து காவடிகளுடன் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் முருகப்பெருமான் வெள்ளிக்காமதேனு, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

    மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. முத்துக்குமார சுவாமி, வள்ளி தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் நடத்தப்பட்டு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதன் பின் மணக்கோலத்தில் சுவாமி வெள்ளத்தேரில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாளை பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்காக காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் திருஆவினன்குடி கோவிலில் சுவாமி அருள்பாலித்தல், பகல் 12.45 மணிக்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    பழனி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மாடுகளில் அமர்ந்து வந்த காட்சி.

    2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டத்தில் பக்தர்கள் முழுவதுமாக பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அடிப்படை வசதிகளையும் சுகாதார வசதிகளையும் நிறைவேற்றித் தர அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. 6 ஏ.டி.எஸ்.பி.க்கள், 12 டி.எஸ்.பி.க்கள் மற்றும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு ஊர்களில் இருந்து தற்போது பழனி நோக்கி பக்தர்கள் கூட்டம் வரத் தொடங்கியுள்ளதால் நகரமே விழாக்காலம் பூண்டுள்ளது.

    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி மலைக்கோவிலில் இன்று முதல் வருகிற 20ந் தேதி வரை 4 நாட்களுக்கு தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று இரவு நடந்த தங்கரத புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட எஸ்.பி. சீனிவாசன், கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் உள்பட பலர் தங்க ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதையும் படிக்கலாம்....பங்குனி உத்திர விரதத்தை அனுஷ்டிப்பது எப்படி?
    பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சுந்தர மகாலிங்கத்துக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோ‌ஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை புரிந்த ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டிருக்கு முன்பு குவிந்தனர்.

    காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சுந்தர மகாலிங்கத்துக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

    இந்த நிலையில் சதுரகிரி கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் மலைப் பகுதியில் அமைந்துள்ள நிலையில் வனத்துறையினர் பக்தர்களை எந்தவித சோதனையும் செய்யாமல் அனுப்பி வருவதால் அவர்கள் என்ன கொண்டு செல்கிறார்கள் என்பது தெரியாத நிலை உள்ளது.

    பாலிதீன் பைகளுக்கு தடை, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை என்ற தடைகள் அறிவிப்பளவில் இருந்தாலும் வழக்கமாக சோதனை செய்யும் நடைமுறை என்பது தற்போது இல்லை.

    வனத்துறை அலட்சியத்தால் சோதனை ஏதும் செய்யப்படாமல் பக்தர்கள் சென்று வருகின்றனர். இனிவரும் காலங்களிலாவது வனத்துறையினர் பக்தர்களை சோதனை செய்து வனப்பகுதிக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி முன்னாள் முதல்வர் சுப்பிரமணியன் (வயது 74) சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்து விட்டு இறங்கினார். பச்சரிசி மேடு பகுதியில் வந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த சுப்பிரமணியன் அங்கேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்த வனத்துறையினர் அவரது உடலை மீட்டு மலை அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தன்னைத்தானே அழித்து கொள்வது என்பது ஒரு சமூகத்தை மீண்டும் கீழான நிலைக்கு தான் தள்ளுகின்ற சூழ்நிலை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
    நான் உன்னோடு இருக்கின்றேன், உன்னை மீட்பதற்காக உள்ளேன் என்கிறார் ஆண்டவர் (எரேமியா 30:11)

    இந்தியாவில் 5 நிமிடங்களுக்கு ஒரு நபரும், ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரும் தற்கொலை செய்வதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. தற்கொலை என்ற எண்ணத்தோடு மனிதர்கள் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பள்ளி இறுதி ஆண்டு தேர்வில் முடிவுகள் வெளியாகின்ற போது பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிற செய்திகள் தொடர்ந்து வருவது வேதனைக்குரிய செயலாகத்தான் இருக்கிறது.

    தினமும் ஆசிரியர் அடித்தால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலையோடு மாணவர்கள் அலைவது, திரிவது இயற்கையான ஒன்று, அதற்கு காரணமாக இன்று கருதப்படுவது இன்றைய கல்வி திட்டம். ஓடியாடி விளையாடி பட்டாம் பூச்சியான் திரிந்து ஆரோக்கியமாய் கல்வி கற்று வளர வேண்டிய குழந்தைகள் இன்று அறைகளுக்குள் அடைக்கப்பட்டு கல்வி என்ற பெயரில் அவர்கள் தாக்கப்படுகிறார்கள். இந்த சூழல்கள் தான் தற்கொலை உணர்வுக்கு காரணம் என்று உளவியலாளர்கள் எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் இன்றைய கல்வி திட்டம் மாறுகிறதா என்றால்? இல்லை மீண்டும் மீண்டும் மாணவர்களை அடிமைப்படுத்தும் ஒரு அமைப்பாகத்தான் மாறி கொண்டிருக்கிறது. இந்த இளம் வயது கற்றல் என்பது சமுதாய வளர்ச்சியில் ஒரு நல்ல அறிகுறி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

    தன்னைத்தானே அழித்து கொள்வது என்பது ஒரு சமூகத்தை மீண்டும் கீழான நிலைக்கு தான் தள்ளுகின்ற சூழ்நிலை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுடைய மென்மையான உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து குழந்தைகளை ஆரோக்கியமான சூழல்களில் நாம் வளர்க்கும் போது நிச்சயமாக இந்த உணர்வில் இருந்து பாதுகாக்க முடியும். முடிந்த அளவுக்கு இந்த சூழல் மறைய தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற மனநிலையோடு தொடர்ந்து பயணிப்போம்.

    - அருட்பணியாளர் குருசு கார்மர், மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    பழனி முருகன் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) முதல் 20-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் பங்கேற்கும் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று (வியாழக்கிழமை) முதல் 20-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் பங்கேற்கும் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. இதில், கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு வடம் பிடித்து தங்கரதத்தை இழுத்தனர்.

    முன்னதாக சாயரட்சை பூஜைக்கு பிறகு தங்க மயில் வாகனத்தில் சின்னகுமாரர் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.

    சித்திரை திருவிழாவில் சுவாமி வீதி உலா வரும் நேரங்களில் பக்தர்களால் சுவாமிக்கு சாத்துப்படி செய்ய இறைவனுக்கு உகந்த மாலைகள் சாத்துப்படி செய்யலாம்.
    மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். இதையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 5-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

    இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர், பஞ்சமூர்த்திகளுடன் காலை, இரவு இரு வேளைகளிலும் 4 மாசி வீதிகளில் வலம் வந்து காட்சி அளிப்பர்.

    எனவே நகரில் விட்டவாசல், அம்மன் சன்னதி தெரு, நான்கு மாசி வீதிகளிலும் போடப்படும் பந்தல்களை சுவாமி வாகனங்கள் தட்டாதவாறு 30 அடி உயரத்திற்கு மேல் அமைத்து கொள்ள வேண்டும். மேலும் வேப்பிலைத் தோரணங்களையும், சுவாமி வாகனங்கள் தட்டாமல் அமைக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும் சித்திரை திருவிழாவில் சுவாமி வீதி உலா வரும் நேரங்களில் பக்தர்களால் சுவாமிக்கு சாத்துப்படி செய்ய இறைவனுக்கு உகந்த மாலைகள் சாத்துப்படி செய்யலாம். ஆனால் கேந்திபூ, மருதை வேர்கள் வைத்து கட்டப்பட்ட மாலைகள் சாத்துப்படிக்கு ஏற்று கொள்ளப்படமாட்டாது. திருக்கல்யாண தினத்தன்று மூலஸ்தான அம்மன், சுவாமிக்கும், உற்சவர் அம்மன், சுவாமிக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் மட்டுமே பட்டு பரிவட்டங்கள் சாத்தப்படும்.

    உபயதாரர் மற்றும் பக்தர்கள் வழங்கும் காணிக்கை பரிவட்டங்கள் வாமாலையாக சூட்டப்படும். இந்த உற்சவம் தொடக்கம் முதல் அழகர்கோவில் கள்ளழகர் திருவிழா முடியும் 20-ந் தேதி வரை கோவில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ உபயதிருக்கல்யாணம், தங்கரதம் உலா ஆகிய சேவைகள் பதிவு செய்து நடத்தப்படாது.

    திருவிழாவில் நன்கொடையாளர்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்க விரும்பும் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், மஞ்சள் கயிறு, குங்குமம் மற்றும் இதர அனைத்து பொருட்களையும் கோவில் அலுவலகத்தில் நேரடியாக வழங்கி உரிய ரசீது பெற்று கொள்ளலாம். இந்த பொருட்கள் தொடர்பாக எந்த ஒரு தனி நபரிடமோ, நிறுவனத்திடமோ தொடர்பு கொள்ள வேண்டாம். அவ்வாறு யாரேனும் தனிப்பட்ட நபர்கள் அணுகினால் கோவில் நிர்வாகத்திடமும், 0452-2349868, 2344360 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிக்கலாம்...பங்குனி உத்திர விரதத்தை அனுஷ்டிப்பது எப்படி?
    ராகு பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று லட்சார்ச்சனை தொடங்கியது. நாளை (வெள்ளிக்கிழமை) வரை லட்சார்ச்சனை நடக்கிறது. பின்னர் 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரையும் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருநாகேஸ்வரத்தில் ராகு தலம் எனப்போற்றப்படும் நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு ராகு பகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிப்பது சிறப்பம்சம் ஆகும். ராகுபகவான் 1½ ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது ராகு பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்படுகிறது.அதன்படி வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 3.13 மணிக்கு ராகுபகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

    இதையொட்டி வருகிற 19-ந் தேதி கணபதி பூஜை, யாகசாலை பூஜையுடன் ராகு பெயர்ச்சி விழா தொடங்குகிறது. தொடர்ந்து 20-ந் தேதி 2 கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் 21-ந் தேதி காலை 10.30 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையும், பிற்பகல் 2.30 மணிக்கு கடம் புறப்பாடு, மகா அபிஷேகம், சிறப்பு பாலபிஷேகமும், 3.13 மணிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும் மகா தீபாராதனையும் நடைபெற உள்ளது.

    ராகு பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று லட்சார்ச்சனை தொடங்கியது. நாளை (வெள்ளிக்கிழமை) வரை லட்சார்ச்சனை நடக்கிறது. பின்னர் 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரையும் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

    ராகு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும்.
    பங்குனி உத்திர விரதத்தை 8 வயதில் இருந்து 80 வயது உள்ளவர்கள் வரை அனுஷ்டிக்கலாம். விரதம் இருப்பதற்கு முன்தினம் இயல்பாக உண்பதைவிட குறைவாக உண்ண வேண்டும். அன்று மூன்று வேளை பழச்சாறு அருந்தலாம். எளிதில் செரிக்கக்கூடிய உணவை சிறிதளவில் ஒரு வேளை உண்ணலாம். வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கபட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம். நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோயிலிற்கு செல்லலாம். பங்குனி உத்திரத்தன்று விரதம் இருப்பவர்கள் காலைக்கடனை முடித்து விட்டு பூஜை பாராயணங்களை செய்து முடிக்க வேண்டும்.

    நாளை முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம். வேலை உள்ளவர்கள் “ஓம் சரவண பவ” என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். இதன் மூலம் நமது மனமானது இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும். அதனால் மனம் செம்மை அடையும்.

    அன்று சிவபெருமானுக்கும் உமையன்னைக்கும் அபிஷேக ஆராதனை செய்து தூப தீப நைவேத்தியங்களை செய்து முடிக்க வேண்டும். ஒரு தம்பதியினரை அழைத்து வந்து அவர்களுக்கு பூஜை செய்து தாம்பூலத்தில் புடவை, வேட்டி வைத்து கொடுக்க வேண்டும். வயிறு நிரம்ப அன்னம் படைக்க வேண்டும். சிவபெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக்கோலத்தில் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும். விரதத்தின் போது மவுனமாக இருப்பது சிறப்பு.

    அன்று முழுவதும் இறைவனைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி சிவபுராணம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றைப் படிக்கலாம். இறைவனின் நாமாவளிகளைக் கூறலாம். பட்டினி கிடந்து பசித்திருக்க வேண்டும். துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம். கோவிலுக்கு சென்று வணங்கி இரவில் பால், பழம் உண்டு, படுக்கையில் படுக்காமல் தரையில் துணி விரித்துப் படுக்கவேண்டும்.

    முடிந்தால் பகல் வேளையில் ஏழை- எளியவர்ளுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர் வளம் பெறுவார்கள். மாலையில் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உளள கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம். பிறகு இரவில் சாத்வீக மான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

    தொடர்ச்சியாக 48 ஆண்டுகள் இந்த விரதத்தை அனுஷ்டித்து வந்தால் அடுத்த ஜென்மத்தில் தெய்வீகப் பிறவியை பெறுவார்கள் என்கின்றன புராணங்கள்.
    திருப்புவனம் புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது.
    திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அப்பர், அருணகிரிநாதர், திருஞான சம்பந்தர் போன்ற சமய புலவர்களால் பாடப்பெற்ற சிறப்பு மிக்க தலமாகும். மேலும் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 36-வது திருவிளையாடல் இங்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா 11 நாட்கள் நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து அருள்பாலித்தனர்.

    இந்த நிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது. முன்னதாக புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கண்ணூஞ்சல் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின்பு திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபத்திற்கு சுவாமியும்-அம்பாளும் எழுந்தருளினர்.

    பிறகு அழகிய மணவாள ரெங்கநாத பெருமாளும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார். இதன் பின்பு வேதமந்திரங்கள் முழங்க காலை 11.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்பு சுவாமி, அம்பாள், அழகிய மணவாள ரெங்கநாத பெருமாளுக்கும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருக்கல்யாண நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

    பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட புதிய மஞ்சள் கயிற்றை பெண்கள் அணிந்து கொண்டனர். திருக்கல்யாண விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில் திருப்புவனம் சரக கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் கோவில் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நாளை நடக்கிறது. 19-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து திருச்சிவிகையில் மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார்.

    பின்னர் சித்திரை வீதிகளில் வலம்வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியாக தாயார் சன்னதிக்கு இரவு 8.30 மணிக்கு வந்து சேர்ந்தார். இரவு 11.30 மணிக்கு தாயார் சன்னதியில் திருமஞ்சனம் கண்டருளி இரவு 12.30 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைந்தார்.

    8-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி எல்லைக்கரை ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 11 மணிக்கு சென்றடைகிறார். அங்கிருந்து நம்பெருமாள் குதிரை வாகனத்தில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.45 மணிக்கு கோரதம் அருகே வையாளி கண்டருளுகிறார்.

    திருவிழாவின் 9-ம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) நம்பெருமாள்-தாயார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை தான் நம்பெருமாளும், தாயாரும் ஒருசேர இருப்பார்கள். ஒருசேர இருக்கும் காட்சியை சேர்த்தி சேவை என்று அழைப்பர். தாயாரையும், பெருமாளையும் ஒருசேர தரிசிக்கும் தம்பதிகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது ஐதீகம்.

    இந்த சேர்த்தி சேவையை தரிசிக்க லட்சக்கணக்கான தம்பதிகள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தருவர். ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தினத்தன்று இந்நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்நிகழ்ச்சியையொட்டி கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் காலை 6 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியாக காலை 9.30 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைகிறார். பின்னர் சமாதானம் கண்டருளி பகல் 12 மணிக்கு முன்மண்டபம் வந்து சேருகிறார். பகல் 12.30 மணியிலிருந்து பகல்1.15 மணிவரை முதல் ஏகாந்தம் நடைபெறுகிறது.

    பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு பங்குனி உத்திர மண்டபத்திற்கு பகல் 2மணிக்கு வந்து சேருகிறார். மூலஸ்தானத்திலிருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் பகல் 2 மணிக்கு புறப்பட்டு சேர்த்தி மண்டபத்தை பகல் 2.15 மணிக்கு வந்தடைகிறார். பகல் 3 மணி முதல் இரவு 10.30 மணி வரை பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு கோரதத்துக்கு (தேருக்கு) வருகிறார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் நடைபெறுகிறது. பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 20-ந்தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    ×