
இந்த நிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது. முன்னதாக புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கண்ணூஞ்சல் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின்பு திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபத்திற்கு சுவாமியும்-அம்பாளும் எழுந்தருளினர்.
பிறகு அழகிய மணவாள ரெங்கநாத பெருமாளும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார். இதன் பின்பு வேதமந்திரங்கள் முழங்க காலை 11.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்பு சுவாமி, அம்பாள், அழகிய மணவாள ரெங்கநாத பெருமாளுக்கும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருக்கல்யாண நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட புதிய மஞ்சள் கயிற்றை பெண்கள் அணிந்து கொண்டனர். திருக்கல்யாண விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமையில் திருப்புவனம் சரக கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் கோவில் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.