என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருச்செந்தூர் கோவிலில் இன்று இரவு 10 மணிக்கு மேல் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
    திருச்செந்தூர் :

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்று நடந்தது.

    அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது, தொடர்ந்து 5.30 மணிக்கு வள்ளி அம்பாள் தபசுக்கு எழுந்தருளினார்.

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சுவாமியை தரிசிக்க நேற்று முதலே திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் திரண்ட வண்ணம் இருந்தது. இன்று திருவிழாவையொட்டி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதிகாலையிலேயே கடலில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமியை தரிசித்தனர்.

    இன்று மாலை 3.20 மணிக்கு மேல் சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி மேலக் கோவில் பந்தல் மண்டபம் முகப்பிற்கு செல்கிறார். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அங்கபிரதட்சனம் செய்த பக்தர்.

    பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்கள். இரவு 10 மணிக்கு மேல் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. இதையொட்டி வழக்கமாக இரவு 7 மணிக்கு நடைபெறும் ராக்கால அபிஷேகம் நடைபெறாது.

    சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான நாலுமூலைக்கிணறு குன்றுமேலய்யன் சாஸ்தா கோவிலிலும் இன்று பங்குனி உத்திரத்திர திருவிழா நடக்கிறது.

    இதை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மின் வசதி மற்றும் பந்தல் வசதிகளும் கோவில் நிர்வாகம் மூலம் செய்யப்பட்டுள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர்(பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    இதையும் படிக்கலாம்...பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்
    நாமும் நமது வாழ்வில் எல்லா நொடிப்பொழுதும் சிறிய சிறிய குறைகளை களைந்து கொள்வதற்கும், தோல்வி வருகின்ற பொழுது நிறைவோடு வாழ்வதற்கும் துணிச்சலை கற்றுக்கொள்வோம்.
    ‘ கடவுள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன் எவராவது இந்த மலையை பார்த்து பெயர்ந்து கடலில் விழு என தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால், அவர் சொன்னவாறே நடக்கும்’ (மாற்கு 11:22-23)

    மனித வாழ்க்கை என்பது எண்ணற்ற சவால்களால் நிறைந்திருக்கிறது. வாழ்க்கை நாம் துணிச்சலோடு எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். மாறி வரும் இந்த உலக சூழலில் ஏராளமான இடர்பாடுகளையும், பின்னடைவுகளையும் நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். துணிச்சல் ஒரு மனிதனை உள்ளத்தில் இருந்து இயக்குகின்ற சக்தி படைத்தது. நாம் கொண்ட தொழிலுக்காகவும், மதிப்புக்காகவும் நம்மை போராடுமாறு நம்மைத் தூண்டுவது துணிச்சலே ஆகும். எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் அதை சந்தித்துதான் ஆகவேண்டும். பிறந்தவுடன் ஒரு மனிதன் வாழ வேண்டிய நோக்கங்களுள் தள்ளப்படுகிறான். பல அறிவு காரியங்களை படைப்பதற்கும், தமது இலக்குகளை, லட்சியங்களை வடிவமைத்து கொள்வதற்கும் நமக்கு தேவையானது துணிச்சல். விஞ்ஞானிகளும் சுதந்திர போராளிகளும் தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கு அவர்களின் துணிச்சலே உதவி செய்திருக்கிறது என்று அவர்களே சான்று பகர்ந்திருக்கிறார்கள்.

    எனவே நாமும் நமது வாழ்வில் எல்லா நொடிப்பொழுதும் சிறிய சிறிய குறைகளை களைந்து கொள்வதற்கும், தோல்வி வருகின்ற பொழுது நிறைவோடு வாழ்வதற்கும் துணிச்சலை கற்றுக்கொள்வோம். சமூக தீமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். வாழ்வில் அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் சமத்துவம் நிலைபெற நாம் போராட வேண்டும். இதை உள்ளத்தில் ஏந்தியவர்களாக இந்த நாளில் தொடர்ந்து வாழ்வதற்கு பழகுவோம்.

    -அருட்பணியாளர் குருசு கார்மல்,

    மேலப்பெருவிளை, கோட்டார் மறைமாவட்டம்.
    பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில், பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் விண்ணதிர முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
    பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 12-ந் தேதி உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று மாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக காலை 9 மணிக்கு சன்னதி வீதி, கிரிவீதிகளில் தந்தப்பல்லக்கில் சாமி புறப்பாடு நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு அடிவாரம் சவுமிய நாராயண கவர நாயக்கர் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்ணியாக வாஜனம், கலசபூஜை, மாங்கல்ய பூஜை, ஸ்கந்த யாகம், சுப்பிரமண்யா யாகம், பூர்ணாகுதி நடைபெற்றது. அதையடுத்து திருக்கல்யாண சடங்குகள் நடைபெற்றன.

    தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 5.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமிக்கும், வள்ளி-தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’, ‘வீர வேல் முருகனுக்கு அரோகரா’, ‘ஞான தண்டாயுதபாணிக்கு அரோகரா’ என்று விண்ணதிரும் வகையில் கோஷமிட்டனர்.

    தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி, 16 வகை தீபாராதனை நடந்தது. பின்னர் ஓதுவார்கள் தேவாரம் பாடி, கோவில் குருக்கள் வேத பாராயணம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகர், பழனிவேலு, கந்தவிலாஸ் செல்வக்குமார், நவீன், நரேஷ், கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர் ஹரிகரமுத்து, சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் மற்றும் பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    பங்குனி உத்திர திருவிழாவின் 7-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி, காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல், 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பகல் 12.30 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.45 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தலை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது.
    பக்தர்கள் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபலங்கார சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை நேரடியாக முன்பதிவு செய்யலாம்.
    திருமலை

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை, நிஜபாத தரிசனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் உள்ளது. அந்தச் சேவைகளை அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதியில் இருந்து தொடர திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 20-ந்தேதி காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். கொரோனா தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகளின்படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை மற்றும் நிஜபாத தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய, பக்தர்கள் 20-ந்தேதி காலை 10 மணியில் இருந்து 22-ந்தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் எலக்ட்ரானிக் டிப் (குலுக்கல்) முறை மூலம் பக்தர்களுக்கு டிக்கெட்டுகள் ஒதுக்கப்படும். 22-ந்தேதி காலை 10 மணிக்கு பிறகு டிக்கெட்டுகள் பெறுவோரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். இதேபோல் பக்தர்களுக்கு செய்தி மற்றும் எஸ்.எம்.எஸ், இ- மெயில்மூலம் தெரிவிக்கப்படும். டிக்கெட்டுகள் பெறும் பக்தர்கள் டிக்கெட்டுகளின் கட்டணத்தை 2 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

    மறுபுறம் பக்தர்கள் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபலங்கார சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை நேரடியாக முன்பதிவு செய்யலாம்.

    முக்கிய நாட்களில் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. அதாவது, ஏப்ரல் மாதம் 2-ந்தேதி யுகாதி (தெலுங்கு வருடப்பிறப்பு) பண்டிகை அன்று கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ரத்து செய்யப்படுகிறது. ஏப்ரல் மாதம் 10-ந்தேதி ஸ்ரீராம நவமி அன்று தோமாலை சேவை, அர்ச்சனை, வசந்த உற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்படுகிறது.

    ஏப்ரல் மாதம் 14-ந்தேதியில் இருந்து 16-ந்தேதி வரை வசந்த உற்சவம் காரணமாக கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், ஏப்ரல் மாதம் 15-ந்தேதி நிஜபாத தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல் திருமலையில் நடக்கும் பத்மாவதி பரிநய உற்சவத்தையொட்டி மே மாதம் 10-ந்தேதியில் இருந்து 12-ந்தேதி வரை ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபலங்கார சேவை ரத்து செய்யப்படுகிறது.

    ஜூன் மாதம் 14-ந்தேதி ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. ஜேஷ்டாபிஷேகத்தின் 3-வது நாள் அன்று அஷ்டதள பாதபத்மாராதனை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ரத்து செய்யப்படுகிறது. இதை, பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஆர்ஜித சேவை டிக்கெட்டில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற (நெகட்டிவ்) சான்றிதழ் கொண்டு வர வேண்டும் அல்லது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும்.

    பக்தர்கள் தங்களின் உடல் நல ஆரோக்கியம், திருமலை-திருப்பதி தேவஸ்தான ஊழியர்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    23 மாதங்களுக்கு பிறகு கிரிவலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டது போன்று காட்சி அளித்தது.
    பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது.

    தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்ததையடுத்து அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டன.

    இந்த நிலையில் இந்த மாதத்திற்கான பவுர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மதியம் 2.10 மணிக்கு தொடங்கி இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு நிறைவடைகிறது. 23 மாதங்களுக்கு பிறகு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பக்தர்கள் நேற்று காலையில் இருந்தே தனித்தனியாக கிரிவலம் சென்றனர். காணும் இடமெல்லாம் பலர் அன்னதானம் வழங்கினர்.

    திருவண்ணாமலையில் நேற்று மாலை கிரிவலம் சென்ற பக்தர்களின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.

    மாலை சுமார் 5 மணிக்கு மேலிருந்து பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. இதனால் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் ஈசான்ய மைதானம், அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள நகராட்சி மைதானம், திருக்கோவிலூர் சாலையில் உள்ள மைதானம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கு பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. கிரிவலப்பாதையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு பக்தர்கள் கற்பூர தீபம், நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதனால் கோவில் முன்பு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    23 மாதங்களுக்கு பிறகு கிரிவலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டது போன்று காட்சி அளித்தது.

    பங்குனி உத்திர விரதத்துக்கு பல கதைகள் உண்டு. அவற்றில் பார்வதி விரதம் இருந்து சிவபெருமானை மணாளனாக அடைந்தது முக்கியத்துவம் வாய்ந்தது.
    18-3-2022 பங்குனி உத்திரம்

    பங்குனி உத்திரம் பெரும் பேறு பெற்ற சிறப்பான நாள் ஆகும். இந்த நாளில் பல தெய்வத் திருமணங்கள், தெய்வ அனுகூலம் ஏற்பட்ட பல காரியங்கள் நடைபெற்றுள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மாதம் தோறும் உத்திரம் நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம்தான் சிறப்புக்குரியதாக இருக்கிறது. மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருமணம், ஆண்டாள்- ரெங்க மன்னார் திருமணம், ராமர்- சீதை திருமணம் என பல தெய்வத் திருமணங்கள் இந்த நாளில் நடைபெற்றது அதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இதனால் இந்த தினத்தில் மேற்கொள்ளும் விரதத்தை ‘கல்யாண விரதம்’ என்றும் சொல்வார்கள்.

    இந்த சிறப்புமிக்க நாளில் சிவபெருமானையும், அவரது மகன் என்று புராணங்கள் சொல்லும் முருகப்பெருமானையும் விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் நிற்க, சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு கன்னியில் நிற்கும் வேளையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. திருமணம் தடைபடுபவர்கள், இந்த நன்னாளில் ஆலயங்களுக்குச் சென்று சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்.

    பக்தர்கள் வேண்டும் வரங்களைத் தந்தருளும் தெய்வங்களை, தேவர்கள் பலரும் இந்த பங்குனி உத்திர நாளில் வழிபட்டு வரம் பெற்றுள்ளனர். விஷ்ணுவின் திருமார்பில் திருமகள் இடம் பிடித்தது, இந்த விரதத்தை கடைப்பிடித்துதான். தேவர்களின் தலைவனான இந்திரனும் இந்த விரதத்தை மேற்கொண்டு, இந்திராணியை கரம் பிடித்திருக்கிறான். பிரம்மன் சரஸ்வதியை தன் நாவில் குடிகொள்ளச் செய்ததும், சந்திரன் 27 அழகு வாய்ந்த நட்சத்திரப் பெண்களை மணம் முடித்ததும் கூட இந்த விரதத்தை மேற்கொண்டுதான். இந்த விரதத்தை கடைப்பிடித்தவர்களும், அதனால் பலன் அடைந்தவர்களும் எண்ணிலடங்காதவர்கள். திருமணமாகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் இன்பம் தரும் இனிய விரதம் இது.

    பங்குனி உத்திர விரதத்துக்கு பல கதைகள் உண்டு. அவற்றில் பார்வதி விரதம் இருந்து சிவபெருமானை மணாளனாக அடைந்தது முக்கியத்துவம் வாய்ந்தது.

    ஒருமுறை சாபம் காரணமாக, தக்கன் என்பவனுக்கு மகளாகப் பிறந்தாள், உமாதேவி. தாட்சாயணி என்ற பெயருடன் சிறுவயது முதலே சிவனின் மீது விருப்பம் கொண்ட அன்னை, தவம் இருந்து சிவனை மணம் செய்து கொண்டாள். ஆனால் தக்கன், சிவபெருமானுக்குரிய மரியாதையை வழங்கவில்லை. அவருக்கு சேரவேண்டிய அவிர்பாகத்தைக் கூட கொடுக்காமல், மற்ற தேவர்கள், முனிவர்களை அழைத்து யாகம் செய்தான். இதனால் வெகுண்டெழுந்த தாட்சாயிணி, யாக குண்டத்தில் விழுந்து, அந்த யாகத்தை பலனற்றதாக மாற்றினாள்.

    தக்கனுக்கு மகளாக பிறந்த காரணத்தினால் ஏற்பட்ட களங்கத்தை போக்கிக் கொள்வதற்காக, பார்வதி என்ற பெயருடன் மலையரசன் இமவான் மகளாக தோன்றினாள். காஞ்சிபுரத்தில் ஆற்றின் ஓரம் மணலால் சிவலிங்கம் பிடித்து வைத்து வழிபட்டாள். திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. ஆற்று நீரில் மணல் லிங்கம் சிதைந்து விடுமே என்று, அந்த லிங்கத்தை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். பார்வதியின் அன்பை பார்த்து வியந்த பரமேஸ்வரன், சிவலிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அவளை திருமணம் செய்து கொண்டார். அந்நாளே பங்குனி உத்திர திருநாள் ஆகும்.

    பங்குனி உத்திரத்தன்று சிவாலயங்களில் திருக்கல்யாண விழா விமரிசையாக நடத்தப்படுகிறது. பங்குனி உத்திரத்தையொட்டி ஆண்டு தோறும் மகோற்சவம் நடைபெறும்.
    பறக்கையில் பிரசித்தி பெற்ற மதுசூதனப் பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    குமரி மாவட்டம் பறக்கையில் பிரசித்தி பெற்ற மதுசூதனப் பெருமாள் கோயில் உள்ளது.

    இந்த கோவில் பங்குனித் திருவிழா கடந்த 9-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு சாமி பூப்பந்தல் வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது.

    இதுபோல் தினமும் காலை கணபதி ஹோமம், மற்றும் காலை, மாலை நேரத்தில் சாமி பல்வேறு வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சிகள் நடந்தது.

    4-ம் திருவிழா 12-ம் தேதி நடந்தது. அன்று மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கடந்த 15-ந்தேதி 7-ம் திருவிழா நடந்தது. அன்று மாலை சமயச் சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு தோல்பாவை கூத்து போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதனையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. இதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இன்று இரவு 9 மணிக்கு சப்தாவர்ணமும், வெள்ளி கருடவாகனத்தில் சாமி வேட்டைக்கு எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடக் கிறது. 10-ம் திருவிழா நாளை (18-ந்தேதி) நடக்கிறது.

    இதில் முக்கிய நிகழ்ச்சியாக இரவு 11 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது.
    திருவள்ளூரில் வருகிற 20-ந்தேதி வீரராகவ பெருமாள் புட்லூர் புறப்பாடு உற்சவம் நடைபெறுகிறது. 21-ந் தேதி அதிகாலை, 2 மணிக்கு புட்லூரில் இருந்து பெருமாள் திருவள்ளூர் கோவிலுக்கு திரும்புவார்.
    திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில் ஆண்டுதோறும் புட்லூர் கிராமத்திற்கு புறப்படும். திருவூரல் மகோத்சவம் நிகழ்ச்சி வரும் 20-ந்தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி, அன்றைய தினம் வீரராகவர் பெருமாள் கோவிலில் இருந்து உற்சவர் பெருமாள் அதிகாலை 5 மணிக்கு புட்லூர் புறப்படுகிறார். பின்னர் அங்கு மதியம் 1 மணிக்கு திருமஞ்சனம் அதனைத் தொடர்ந்து இரவு 9:30 மணிக்கு புட்லூர் கிராமத்தில் திருவீதி புறப்பாடு நடைபெறும்.

    பின்னர் மறுநாள் 21-ந் தேதி அதிகாலை, 2 மணிக்கு புட்லூரில் இருந்து பெருமாள் திருவள்ளூர் கோவிலுக்கு திரும்புவார்.

    இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    பங்குனி உத்திரம் தினத்தன்று நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம். இவர்களது திருமணம் எப்படி நடந்தது தெரியுமா?
    மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டு விட்டது. நாட்டின் அரசிக்கு திருமணம் என்றால் சும்மாவா? மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர்.

    திருமணத்திற்கு நாள் குறித்த அன்று மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறையவே அப்பிக் கிடந்தது. தனது மணாளனை முதன் முதலாக சந்தித்த அனுபவம் அப்போது அவளை சிலிர்ப்பு கொள்ளச் செய்தது. எட்டு திக்கும் வென்று, இமயத்தையும் வென்றுவர சென்றபோதுதான் சிவபெருமானை முதன் முதலாக சந்தித்தாள் மீனாட்சி. சிவபெருமானின் பார்வை பதிந்த மாத்திரத்தில் அவளது மூன்று தனங்களில் ஒன்று மறைந்து போயிற்று. அப்போதுதான், தன்னுடைய மணாளன் இவரே என்று எண்ணி, நாணினாள். ஒரு நல்ல நாளில் பூலோகம் வந்து மணந்து கொள்வதாக சிவபெருமான் உறுதியளித்ததை இப்போதும் நினைத்து மகிழ்ந்தாள். அப்போது, அவள் ஆவலோடு எதிர்பார்த்த சிவபெருமான் வந்து கொண்டிருந்தார்.

    மகா விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள், தேவகனங்களும் உடன் வந்தனர். புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணிகலன்களாகவும் கொண்டு காட்சிதரும் சிவபெருமான் அந்த கோலத்தில் இருந்து மாறியிருந்தார். சுந்தரேசுவரராக-மதுரை மாப்பிள்ளையாக வந்தார். பங்குனி உத்திர நாளில் நல்ல நேரம் வந்ததும் மீனாட்சியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தனது மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

    திருமணம் முடிந்ததும் தடபுடலாக விருந்து நடக்குமே? அது மீனாட்சி கல்யாணத்திலும் நடந்தது. மலைபோல் சாதம் சமைக்கப்பட்டது. அதில் ஒரு பகுதி மட்டுமே காலியாகி இருந்தது. இதையறிந்த மீனாட்சி, அதுபற்றி தனது மணாளன் சிவபெருமானிடம் கூறினார். உடனே சிவபெருமான் குண்டோதரர்கள் இருவரை அங்கு வரவழைத்தார். மீதமுள்ள சாதம், பலகாரங்களை சாப்பிடுமாறு அவர்களை பணித்தார். அவர்கள் இருவரும் அடுத்த சில நிமிடங்களிலேயே அத்தனை உணவு வகைகளையும், பலகாரங்களையும் வேகமாக தின்று தீர்த்து விட்டனர்.

    தாகத்தை தணிக்க பெரிய அண்டாக்களில் இருந்த தண்ணீரை மடக் மடக் என்று குடித்தனர். பெரிய அண்டாக்கள் எல்லாம் அவர்களுக்கு சிறிய டம்ளர்கள் போல் இருந்தன. அந்த தண்ணீர் அவர்களுக்கு போதவில்லை. தாகம்... தாகம்... என்று கத்தினார். அப்போது சிவபெருமான், தன் கையை வைத்து அங்கு ஒரு நதியை உருவாக்கினார். அந்த நதி நீரை குடித்து குண்டோதரர்கள் தாகம் தணிந்தனர். சிவபெருமான் தன் கையை வைத்து உருவாக்கியதால் அந்த நதி “வைகை’’ ஆயிற்று. -இதுதான் மீனாட்சி திருக்கல்யாண வரலாறு.
    திருப்பதியில் தெப்பல் உற்சவம் நடந்து வருகிறது. 4-வது நாளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் புஷ்கரணியில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களில் ஒன்றான தும்பூரூ தீர்த்தம் முக்கோட்டியில் இன்றும், நாளையும் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    இது குறித்து விஜிலென்ஸ் அதிகாரி பாலி ரெட்டி கூறியதாவது, இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையும் நாளை காலை 6 மணி முதல் 10 மணி வரையும் தும்பூரூ தீர்த்தத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்த சூழ்நிலையிலும் இன்று இரவு தும்பூரூ தீர்த்த யாத்திரைக்கு அனுமதி இல்லை.அன்ன பிரசாதம் துறை சார்பில் பாபவிநாசம் அணை அருகே பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்படும்.

    பாபவிநாசம் அணை அருகே முதலுதவியும், 2 ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உணவருந்த ஏதுவாக தும்பூரூ தீர்த்தம் செல்லும் வழியில் ஆங்காங்கே சாலையோரங் களில் குடிநீர் குழாய்கள், ஏணிகள், தடுப்பு வேலிகள், இரும்பு ஏணிகள், கயிறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பக்தர்கள் சமையல் பாத்திரங்கள் கற்பூரம், தீச்சட்டி போன்றவற்றை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. சுகாதாரத்துறையின் கீழ் 80-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    காவல்துறை, வனத்துறை மற்றும் விஜிலன்ஸ் துறையினர் ஒருங்கிணைந்து பாபவிநாசம் முதல் தும்பூரூ தீர்த்தம் வரை பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியாளர்களை நியமித்து பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி செல்ல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று தரிசனம் செய்வதற்காக திருப்பதியை சேர்ந்த நாகபூ‌ஷணம், சண்முகம், மஞ்சுளா, குப்பையா ஆகிய 4 பக்தர்கள் ரூ 300 டிக்கெட்டில் தரிசனம் செய்தனர். தரிசனம் முடித்து இலவச லட்டு பெறுவதற்காக 29-வது கவுண்டருக்கு சென்றனர்.

    அங்கு தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்த ஊழியர் 2 லட்டுக்களை கொடுத்துவிட்டு 2 டிக்கெட்டுக்கான லட்டுகளை ஏற்கனவே வாங்கி சென்று விட்டதாக தெரிவித்தார். நாங்கள் இப்போதுதான் தரிசனம் செய்து விட்டு வருகிறோம். எனவே எங்களது லட்டுக்களை யாரும் வாங்கி சென்றிருக்க முடியாது என பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் லட்டு வழங்கும் கவுண்டர் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் பக்தர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    திருப்பதியில் நேற்று 64,368 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 31,179 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.52 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
    தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் ஊத்துக்கோட்டை அருகே இந்த சுருட்டப்பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் பள்ளி கொண்டீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
    சிவபெருமானின் தத்புருஷ முகத்திற்குரிய தலம் இது. சென்னையில் இருந்து சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுருட்டப்பள்ளி. இத்தல மூலவரின் திரு நாமம், பள்ளிகொண்டீஸ்வரர்.

    அம்பாளின் பெயர், மரகதவல்லி. பாற்கடலைக் கடைந்த வேளையில், முதலில் வெளிப்பட்டது கொடிய விஷம்தான். அது உலகை அழிக்கும் முன்பாக, தான் உண்டு உலக உயிர் களைக் காத்தார் சிவபெருமான். வீரிய விஷத்தின் காரணமாக ஈசனுக்கு சிறு மயக்கம் உண்டானதாகவும், அதனால் அவர் அம்பாளின் மடியில் தலை சாய்த்து படுத்திருந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

    அப்படி அவர் அம்பாள் மடியில் தலைசாய்த்து படுத்திருக்கும் சயன கோலத்திலேயே, இறைவன் இங்கு காட்சி தருகிறார். இவரை வழிபாடு செய்தால் குடும்ப பிரச்சினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    அரிய காட்சியாகப் பள்ளி கொண்டுள்ள சுருட்டப்பள்ளி இறைவனைத் தேடி வந்து வணங்கினால் சகல தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். சுருட்டப்பள்ளியில் மட்டுமே சிவன் பள்ளி கொண்ட கோலத்தைக் காண முடியும்.
    சபரிமலையில் இன்று (வியாழக்கிழமை) இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.
    பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 8-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது.

    மறுநாள் பங்குனி ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கொடியை ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து விழா நாட்களில் தினமும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும், நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பிறகு மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். 19-ந் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.
    ×