search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்
    X
    மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்

    திருமணம் கைகூடச் செய்யும் ‘கல்யாண விரதம்’

    பங்குனி உத்திர விரதத்துக்கு பல கதைகள் உண்டு. அவற்றில் பார்வதி விரதம் இருந்து சிவபெருமானை மணாளனாக அடைந்தது முக்கியத்துவம் வாய்ந்தது.
    18-3-2022 பங்குனி உத்திரம்

    பங்குனி உத்திரம் பெரும் பேறு பெற்ற சிறப்பான நாள் ஆகும். இந்த நாளில் பல தெய்வத் திருமணங்கள், தெய்வ அனுகூலம் ஏற்பட்ட பல காரியங்கள் நடைபெற்றுள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மாதம் தோறும் உத்திரம் நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம்தான் சிறப்புக்குரியதாக இருக்கிறது. மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருமணம், ஆண்டாள்- ரெங்க மன்னார் திருமணம், ராமர்- சீதை திருமணம் என பல தெய்வத் திருமணங்கள் இந்த நாளில் நடைபெற்றது அதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இதனால் இந்த தினத்தில் மேற்கொள்ளும் விரதத்தை ‘கல்யாண விரதம்’ என்றும் சொல்வார்கள்.

    இந்த சிறப்புமிக்க நாளில் சிவபெருமானையும், அவரது மகன் என்று புராணங்கள் சொல்லும் முருகப்பெருமானையும் விரதம் இருந்து வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் நிற்க, சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு கன்னியில் நிற்கும் வேளையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. திருமணம் தடைபடுபவர்கள், இந்த நன்னாளில் ஆலயங்களுக்குச் சென்று சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்.

    பக்தர்கள் வேண்டும் வரங்களைத் தந்தருளும் தெய்வங்களை, தேவர்கள் பலரும் இந்த பங்குனி உத்திர நாளில் வழிபட்டு வரம் பெற்றுள்ளனர். விஷ்ணுவின் திருமார்பில் திருமகள் இடம் பிடித்தது, இந்த விரதத்தை கடைப்பிடித்துதான். தேவர்களின் தலைவனான இந்திரனும் இந்த விரதத்தை மேற்கொண்டு, இந்திராணியை கரம் பிடித்திருக்கிறான். பிரம்மன் சரஸ்வதியை தன் நாவில் குடிகொள்ளச் செய்ததும், சந்திரன் 27 அழகு வாய்ந்த நட்சத்திரப் பெண்களை மணம் முடித்ததும் கூட இந்த விரதத்தை மேற்கொண்டுதான். இந்த விரதத்தை கடைப்பிடித்தவர்களும், அதனால் பலன் அடைந்தவர்களும் எண்ணிலடங்காதவர்கள். திருமணமாகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் இன்பம் தரும் இனிய விரதம் இது.

    பங்குனி உத்திர விரதத்துக்கு பல கதைகள் உண்டு. அவற்றில் பார்வதி விரதம் இருந்து சிவபெருமானை மணாளனாக அடைந்தது முக்கியத்துவம் வாய்ந்தது.

    ஒருமுறை சாபம் காரணமாக, தக்கன் என்பவனுக்கு மகளாகப் பிறந்தாள், உமாதேவி. தாட்சாயணி என்ற பெயருடன் சிறுவயது முதலே சிவனின் மீது விருப்பம் கொண்ட அன்னை, தவம் இருந்து சிவனை மணம் செய்து கொண்டாள். ஆனால் தக்கன், சிவபெருமானுக்குரிய மரியாதையை வழங்கவில்லை. அவருக்கு சேரவேண்டிய அவிர்பாகத்தைக் கூட கொடுக்காமல், மற்ற தேவர்கள், முனிவர்களை அழைத்து யாகம் செய்தான். இதனால் வெகுண்டெழுந்த தாட்சாயிணி, யாக குண்டத்தில் விழுந்து, அந்த யாகத்தை பலனற்றதாக மாற்றினாள்.

    தக்கனுக்கு மகளாக பிறந்த காரணத்தினால் ஏற்பட்ட களங்கத்தை போக்கிக் கொள்வதற்காக, பார்வதி என்ற பெயருடன் மலையரசன் இமவான் மகளாக தோன்றினாள். காஞ்சிபுரத்தில் ஆற்றின் ஓரம் மணலால் சிவலிங்கம் பிடித்து வைத்து வழிபட்டாள். திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. ஆற்று நீரில் மணல் லிங்கம் சிதைந்து விடுமே என்று, அந்த லிங்கத்தை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். பார்வதியின் அன்பை பார்த்து வியந்த பரமேஸ்வரன், சிவலிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அவளை திருமணம் செய்து கொண்டார். அந்நாளே பங்குனி உத்திர திருநாள் ஆகும்.

    பங்குனி உத்திரத்தன்று சிவாலயங்களில் திருக்கல்யாண விழா விமரிசையாக நடத்தப்படுகிறது. பங்குனி உத்திரத்தையொட்டி ஆண்டு தோறும் மகோற்சவம் நடைபெறும்.
    Next Story
    ×