என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பங்குனி உத்திரமான இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் திரளாக திரண்டு பங்குனி உத்திர விழாவை கொண்டாடினார்கள்.
    குலதெய்வ வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படும் பங்குனி உத்திர விழா இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    பங்குனி உத்திரம் அன்று முருகனை மனமுருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    இதைத் தொடர்ந்து பங்குனி உத்திர நாளில் முருகன் கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் திரண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது.

    இதன்படி பங்குனி உத்திரமான இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் திரளாக திரண்டு பங்குனி உத்திர விழாவை கொண்டாடினார்கள்.

    பெரிய கோவில்கள் முதல் சிறிய கோவில்கள் வரை அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    அதிகாலையிலேயே பக்தர்கள் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்தனர். குறிப்பாக பெண்கள் கூட்டம் முருகன் கோவில்களில் அதிகமாகவே காணப்பட்டது.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று காலையிலேயே நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர். பக்தர்கள் பலர் பால் குடம் மற்றும் மயில் காவடி எடுத்து வந்திருந்தனர். பெண்கள் பால் குடங்களை சுமந்து வந்து முருகனை மனமுருகி வழிபட்டனர்.

    சென்னை வடபழனி முருகன் கோவிலில் இன்று காலையிலேயே பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு திரண்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதன்படி ஆண், பெண் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே உள்ள சாலைகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து முருகனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கோவிலுக்கு வெளியே போடப்பட்டிருந்த கடைகளில் பூக்கள், பழங்கள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சிறிய கடைகளை வைத்திருந்த வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    செங்குன்றத்தை அடுத்துள்ள சிறுவாபுரி முருகன் கோவில் இயற்கை எழில் சூழ்ந்து காணப்படும் கோவி லாகும். சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சிறுவாபுரி முருகனை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அதிகளவில் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். பங்குனி உத்திர திருநாளை யொட்டி, இந்த கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த கோவிலின் முன்பு உள்ள கடைகளில் அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளை வைத்து வியாபாரிகள் விற்பனை செய்வார்கள். இதனை பக்தர்கள் அதிகளவில் வாங்கி செல்வது வழக்கம். இன்றும் அது போன்று விற்பனை சூடு பிடித்திருந்தது.

    சென்னையில் உள்ள கந்தகோட்ட முருகன் கோவிலிலும் இன்று பக்தர்கள் அதிகளவில் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னை ஐஸ்அவுஸ் எட்டாம்படை முருகன் கோவிலில் பெண்கள் புஷ்ப காவடி எடுத்து வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான சிறுவர்- சிறுமிகள் முருகன் காவடி எடுத்து ஆட்டம் போட்ட படியே வந்திருந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    பிரசித்தி பெற்ற குன்றத்தூர் முருகன் கோவிலில் இன்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இரவு 9 மணி வரை சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்கள் பலர் ஆங்காங்கே அன்னதானமும் வழங்கினார்கள்.

    வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி கோவிலில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து வந்திருந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர். வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர்.

    இதே போன்று திருப்போரூர் முருகன் கோவிலிலும் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். மாமல்லபுரம், செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போன்று தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களான திருச்செந்தூர், பழனி, மருதமலை உள்ளிட்ட முருகன் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்கள் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தன.
    பங்குனி உத்திர நாளில் பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
    தமிழ் மாதத்தில் கடைசி மாதமான பங்குனியில், உத்திர நட்சத்திரம் வரும் நாளே பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தென்மாவட்டங்களில் ‘குலதெய்வ வழிபாட்டால் குலம் விருத்தியாகும்’ என்ற வழக்காடு வெகு சிறப்புற்று காணப்படுகிறது. இந்நாளில் தங்களுடைய குலதெய்வம், சாஸ்தாவை மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஆனால் பழனியில் முருகப்பெருமானுக்கு பெரும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக முருகப்பெருமான் சூரர்களுடன் போரில் ஈடுபடும் முன் தன் தாய், தந்தையை வணங்கி பயணத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதுவே பங்குனி உத்திரமாக கொண்டாடப்படுகிறது.

    அதாவது குதிரைகள் பூட்டிய தேரில் முருகப்பெருமானுக்கு வாயு பகவான் தேரோட்டியாக இருக்க முருகனின் படைகள் அணிவகுத்து சென்றன. அப்போது வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழிமறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. காரணம் அறியாமல் அனைவரும் திகைத்து நிற்க, அங்கிருந்த நாரதர் அம்மலையை பற்றி சொல்ல தொடங்கினார்.

    அதில், கிரவுஞ்சன் என்னும் மன்னன் எல்லோருக்கும் தீமைகளை புரிந்த தீய சக்தியானவனாக இருந்தான். அகத்திய முனிவரின் சாபத்தால் அசையாமல் மலையாகி நின்றாலும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருக்கிறான் என்றார். மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசூரன் ஆட்சி செய்து கொண்டு தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகிறான் என்ற தகவலையும் நாரதர் சொன்னார்.

    அதைகேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்து கொண்டு தாரகாசுரனை அழித்துவிட்டு வரும்படி கட்டளையிட்டார். தலைவனின் கட்டளைப்படி வீரபாகுவின் தலைமையில் முருகனின் படைகள் மாயாபுரிப்பட்டினத்துக்குள் நுழைந்தன. இதை அறிந்த தாரகாசூரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். கடும் போர் நடந்ததில் இரு பக்கத்திலும் வீரர்கள் இறந்தனர்.

    போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசூரன், முருகப்பெருமானின் படையில் இருந்த வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான். இதைக் கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசூரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசூரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்தி சாய்த்தான். மூர்ச்சையாகி விழுந்த வீரபாகுவை தாரகாசூரன் எள்ளி நகையாட, முருகனின் படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின.

    மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண்டும் மூர்க்கத்தனமாக தாக்கினான். எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசூரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும், அவனை தொடர்ந்து மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலை தன் வேலையை காட்ட ஆரம்பித்தது. தாரகாசூரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன.

    இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான் போர்க்களத்திற்கு வந்தார். வந்தவரின் வலிமை அறியாமல் தாரகாசூரன் சிறுவன் என முருகனை கிண்டல் செய்தான். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார். தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான் தன் வேலாயுதத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல் மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து தாரகாசூரனை கொன்றது. அதன்பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திர திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

    நடராஜன், இணை ஆணையர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்,பழனி.
    பங்குனி உத்திரம் அன்று நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் சரி, எந்த ஆலய விழாவில் கலந்து கொண்டாலும் சரி மறக்காமல் குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும்.
    மாதம்தோறும் உத்திர நட்சத்திரம் வருகிறது என்றாலும் பங்குனியில் வரும் உத்திரத்திற்கு பெருமை அதிகம். ஏனென்றால் தெய்வங்களே தேர்வு செய்து கொண்ட நட்சத்திரம் அந்த திருநாள்.

    பார்வதி - சிவன் திருமணம், முருகன் --தெய்வானை திருமணம், ஆண்டாள் -ரெங்க மன்னார் திருமணம், மீனாட்சி -சுந்தரேஸ்வர் திருமணம் என தெய்வீகத்திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தில் தான் நிகழ்ந்தன என்று புராணங்கள் கூறுகின்றன.

    இவை மட்டுமா ? ராமாயண சகோதரர்கள் நால்வருக்கும் மிதிலையில் இத்திருநாளில் தான் திருமணம் நடைபெற்றது. ராமன் -சீதா, பரதன்-மாண்டவி, லக்ஷ்மணன் -ஊர்மிளா, சத்ருகன்-சுருதகீர்த்தி என நான்கு இதிகாச ஜோடிகளும் திருமணத்தில் சேர்ந்தது பங்குனி உத்திரத்தில்தான்.

    ஐயப்பன் பந்தள ராஜாவிற்கு மகனாக பிறந்ததும், பாண்டவர்களில் அர்ச்சுனன் தோன்றியதும், முருகப்பெருமானை தேடிச்சென்று மணந்த வள்ளி அவதாரமும் பங்குனி உத்திரமே.

    பங்குனி உத்திர விரதத்தை சிறப்பாக கடைபிடித்தே மஹாவிஷ்ணுவின் மார்பில் ஸ்ரீமஹாலட்சுமி இடம்பிடித்தாள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    சிவபெருமானுக்கு முருகன் பிரணவ உபதேசம் உரைத்து அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையாவாக ஆனதும், நெற்றிக்கண் நெருப்பில் மாண்டுபோன மன்மதனை சிவபெருமான் மீண்டும் எழுப்பித்தந்ததும், பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்ததுதான்.

    ஸ்ரீபிரம்மாவே கொண்டாடிய முதல் உற்சவம் பங்குனி உத்திரத்திருவிழா என்கிறது தலபுராணம். ஸ்ரீ ராமானுஜர் பெருமாளின் திருவடியை அடைய தேர்வு செய்ததும் இந்தப்புண்ணிய நாளைத்தான். காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்ததும் பங்குனி உத்திரத்தில் தான்.

    தமிழில் 12 வது மாதமான பங்குனியும், 12 வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புனித நாள் தான் பங்குனி உத்திரம். சந்திரன் 27 நட்சத்திர கன்னியர்களை மனைவிகளாக ஏற்றுக்கொண்ட தினமும் பங்குனி உத்திர திருநாள் தான்.

    பழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்துமூவர் உற்சவம், சுவாமி மலையிலும் ,திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், திருப்பரங்குன்றத்தில் தெய்வானை கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம், மதுரையில் மீனாட்சி திருமணம் என பங்குனி உத்திர நாளில் விழாக்களின் சங்கமம் மிக மிக அதிகம்.

    சைவ வழிபாடுகளிலும், வைணவ வழிபாடுகளிலும் பங்குனிஉத்திரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இரு சமய வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் போல வேறு எந்த மாதத்திலும் இவ்வளவு சிறப்பான விழா வருவது இல்லை.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா பங்குனி உத்திர திருவிழாதான். பெருமாளுக்கும், தாயாருக்கும் ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நன்னாளில் தான். எனவே, பெருமாளும், தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி சேவை சாதிப்பர். இது ஆலய 5-வது திருச்சுற்றில், பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும்.

    பங்குனி உத்திரப் பெருவிழா தினத்தன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தை கண் குளிர தரிசித்தால் ,திருமணப் பேறு உண்டாகும், பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பது ஐதீகம். இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதிகள் மேலும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு கருத்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை .

    பங்குனி உத்திரத்தன்று கன்னிப்பெண்கள் கல்யாண விரதமிருந்து அருகில் உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களை தரிசித்தால் அவர்களுக்கு கல்யாண வைபோகந்தான். அது போல திருமழபாடியில் நந்திக்கல்யாணம் கண்டால் முந்திக்கல்யாணம்தான்.

    பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.

    பங்குனி உத்திரம் அன்று நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் சரி, எந்த ஆலய விழாவில் கலந்து கொண்டாலும் சரி மறக்காமல் குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குலதெய்வ வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும்.
    பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெற்றாலும் பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை வரை திறந்து இருக்கும். நாளை இரவு கோவில் நடை அடைக்கப்படும்.
    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் கோவிலில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தன. விழாவின் 9-ம் நாளான நேற்று பள்ளிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.

    இதற்காக யானை மீது சாமி ஊர்வலம் நடந்தது. சரங்குத்தியில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆறாட்டு விழா இன்று பகல் 11.30 மணிக்கு நடந்தது. இதற்காக பம்பை நதியில் அமைக்கப்பட்டிருந்த குளத்தில் ஐயப்பனுக்கு ஆறாட்டு நடந்தது.

    இதனை காண இன்று அதிகாலை முதலே கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். ஆறாட்டு விழா முடிந்த பின்னர், இன்று மாலை விழா முடிந்ததும், கோவில் கொடி இறக்கப்படுகிறது.

    பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெற்றாலும் பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை வரை திறந்து இருக்கும். நாளை இரவு கோவில் நடை அடைக்கப்படும்.

    அடுத்து சித்திரை விஷூ பண்டிகைக்காக கோவில் நடை அடுத்த மாதம் 10-ந் தேதி திறக்கப்படுகிறது. 15-ந் தேதி சித்திரை விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக 18-ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
    பங்குனி உத்திரம் தினத்தன்று காதில் பூ வைத்து காட்சி தருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர். இதற்கு ஒரு புராண கதை உள்ளது. அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    பங்குனி உத்திரம் தினத்தன்று காதில் பூ வைத்து காட்சி தருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர். இத்தலத்தில் பங்குனி உத்திர விழா விசேஷமாக நடக்கிறது. அன்று ஒரு நாள் மட்டும் நரசிம்மர், தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார்.

    ஒருசமயம் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் ஆஞ்சநேயர் நீராடிய போது ஒரு சாளக்கிராமம் கிடைத்தது. அதை ஆஞ்சநேயர் பூஜைக்காக எடுத்துக் கொண்டு வான்வழியே பறந்து வந்தார். நாமக்கல் தலத்தில் நீராடுவதற்காக அவர் இறங்கினார். சாளக்கிராமத்தை கீழே வைக்க முடியாது என்பதால் என்ன செய்வது என யோசித்த வேளையில் தீர்த்தக்கரையில் மகாலட்சுமி தாயார், தவம் இருப்பதைக் கண்டார்.

    அவளை வணங்கிய ஆஞ்சநேயர், அவளது தவத்திற்கான காரணத்தைக் கேட்டார். திருமலை, நரசிம்ம வடிவில் தான் பார்த்ததில்லை என்றும் அந்த வடிவத்தைக் காணதான் தவம் இருப்பதாகவும் கூறினாள். ஆஞ்சநேயர் அவளது கையில் சாளக்கிராமத்தைக் கொடுத்து, நீராடி விட்டு, வந்து வாங்கிக் கொள்வதாக சொன்னார். குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து வாங்கிக் கொள்ளாவிட்டால், சாளக்கிராமத்தை தரையில் வைத்து விடுவேன் என லட்சுமி நிபந்தனை விதித்தாள்.

    ஆஞ்சநேயருக்கு சில காரணங்களால் தாமதமாகி விட்டது. தாயார், சாளக்கிராமத்தை கீழே வைத்து விட்டாள். தாமதமாக வந்த ஆஞ்சநேயர் சாளக்கிராமத்தை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. அது பெரிய மலையாக உருவெடுத்தது. அம்மலையில் நரசிம்மர் தோன்றி தாயாருக்கு அருள் செய்தார். இவர் லட்சுமி நரசிம்மர் எனப்பட்டார். ஆஞ்சநேயரும் இங்கேயே தங்கி விட்டார்.

    நரசிம்மரின் மடியில் லட்சுமி இருந்ததால், லட்சுமி நரசிம்மர் என்றழைக்கப்படுகிறார். ஆனால் லட்சுமி இவரது மடியில் இல்லாமல் மார்பில் இருக்கிறாள். இவளை வணங்கிட கணிதத்தில் புலமை பெறலாம் என்பது நம்பிக்கை. சாளக்கிராமத்தைக் கொண்டு வந்த ஆஞ்சநேயருக்கு நரசிம்மர் கோவில் எதிரே தனிக்கோவில் இருக்கிறது. 18 அடி உயரமுள்ள இவர் கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.

    பங்குனியில் இங்கு 15 நாள் விழா நடக்கிறது. பங்குனி உத்திரத்தன்று காலையில் மூலஸ்தானத்திலுள்ள நரசிம்மர் தாயார் சன்னதிக்கு எழுந்தருளி சேர்த்தியாக காட்சி தருகிறார். அப்போது விசேஷ அபிஷேகம் நடக்கிறது. அதன் பின் இருவரும் முன்மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளுகின்றனர். அன்று ஒரு நாள் மட்டுமே சுவாமி தாயார் இருவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆண்டாள் திருக்கல்யாணம் தினத்தன்று காலை செப்பு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆண்டாள் திருக்கல்யாண பங்குனி உற்சவம் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினசரி வீதிஉலா சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இன்று இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இன்று காலை செப்பு தேரோட்டம் நடந்தது. கோவிந்தா... கோபாலா.... கோ‌ஷங்களை எழுப்பியபடி பத்தர்கள் செப்பு தேரை இழுத்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆண்டாள் திருக்கல்யாணம் தினத்தன்று காலை செப்பு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதற்காக மேளதாளம் முழங்க ஆண்டாள்- ரங்கமன்னார் கோவிலில் இருந்து இன்று காலை கோவிலின் அருகே உள்ள செப்பு தேர் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் தேரில் வைத்து சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து 7 மணி அளவில் கோவிந்தா கோபாலா என்ற கோ‌ஷம் எழுப்பியபடியே ஏராளமான ஆண் பெண் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    நிலையத்திலிருந்து கிளம்பிய தேர் கீழரத வீதி, மேல ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி என 4 தடவைகள் சுற்றி வந்து மீண்டும் நிலைய அடைந்தது.

    செப்பு தேரோட்டத்தை முன்னிட்டு நகரில் சிறிதுநேரம் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து தேர் வடம் பிடித்து இழுத்தனர். அதிக அளவு பெண் பக்தர்கள் வடம்படித்து இழுத்தனர். செப்பு தேர் ரோட்டத்திற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்து ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி குடும்பத்துடன் வந்து ஆண்டாள்- ரங்கமன்னாரை தரிசனம் செய்தார். செப்பு தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் நகர் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மலர் மாலை, பட்டு வஸ்திரம், கைக்கிளி ஆகிய மங்கலப்பொருட்கள் ஆண்டுதோறும் ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் 5-ம் நாளான கருட சேவையின் போது வெங்கடேசப்பெருமாள் அணிந்து கொள்வதற்காக இங்கிருந்து கொண்டு செல்லப்படும். அதற்கு பதில் மரியாதையாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் பங்குனி மாதம் ஆண்டாள் திருக்கல்யாணத்தின்போது அணிவதற்காக பட்டு வஸ்திரம் கொடுத்தனுப்புவது வழக்கம்.

    இந்த நடைமுறை பல வருடங்களாக நடைபெற்று வருகிறது திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஆண்டாளுக்கு வழங்கிய பட்டு வஸ்திரம் மரியாதையை கோவில் துணை நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு, ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டுவந்து மாட வீதியின் வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் முத்துராஜாவிடம் நேற்று வழங்கினார். அப்போது ரங்கராஜன் என்ற ரமேஷ், வேதபிரான் சுதர்சன் பட்டர், மணியம் கோபி, மற்றும் பட்டாச்சாரியார்கள் பக்தர்களும் கலந்து கொண்டனர்.
    பங்குனி தேரோட்டத்தையொட்டி தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
    பங்குனி உத்திர தேரோட்டம் இன்று மாலை நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்தனர்.

    தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனியில் தைபூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 12ம் தேதி திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    6ம் நாளான நேற்று மாலை முத்துக்குமாரசாமி, வள்ளிதெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சி தொடங்கியது. மாலை 5.30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்ற போது பக்தர்கள் அரோகரா கோ‌ஷம் விண் அதிரும் வகையில் இருந்தது.

    இரவு 8 மணி அளவில் வெள்ளி தேர் பவணி திருஆவினன்குடி கோவில் தெற்கு வெளிபிரகாரத்தல் நடைபெற்றது. இதில் கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. இதற்காக காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி, 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல், 9 மணிக்கு தந்த பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பகல் 12.30 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4.45 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்தலை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது.

    பங்குனி தேரோட்டத்தையொட்டி தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பல்வேறு காவடிகள் எடுத்து பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் கிரிவீதிகளில் உற்சாகமாக ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பங்குனி உத்திர திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது. தற்போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் ஒரே சமயத்தில் பழனியில் குவிந்தனர். இதனால் அடிவாரம், கிரிவீதி, திருஆவினன்குடி, மலைக்கோவில் மற்றும் பழனி நகர் முழுவதும் பக்தர்கள் வெள்ளம் காணப்பட்டது.

    உத்திர திருவிழாவில் முருகனை தரிசித்து செல்வது மனதிற்கு நிம்மதியை அளிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
    வீட்டில் திருமண வயதில் பெண்ணோ, மகனோ உள்ளவர்கள் இம்முருகனுக்கு இந்த பரிகாரத்தை செய்தால் உடனே நல்ல வரன் அமைவது கண்கூடு.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் அருகே கலசபாக்கம் கிராமத்தையொட்டி அமைந்துள்ளது எலத்தூர் நட்சத்திர கோவில். இங்கு எழுந்தருளி இருக்கும் முருகன் சுயம்பு மூர்த்தி ஆகும்.

    முருகன் சின்ன லிங்க வடிவில் (ஆவுடையார் இல்லாமல்) அமைந்திருப்பதால் முருகனுக்கு சிவசுப்ரமண்யன் என்று பெயர். இம்முருகன் மிகவும் சக்தி வாய்ந்தவர். சுற்று வட்டாரத்தில் உள்ள முப்பது கிராமத்தாருக்கும் இவரே குல தெய்வம்.

    மலை மேல் வள்ளி தெய்வானையோடு நின்ற கோலத்தில் மிக அழகாக காட்சி தருகிறார். மலை அடிவாரத்தில் பெரிய குளமும், மலை ஏறும் பாதையில் பிள்ளையார், இடும்பன், நவகிரகம் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகளும் உள்ளன. இக்குளத்தில் என்றும் நீர் வற்றுவதே இல்லை. மலை மேல் சுனை உள்ளது. உடம்பில் மரு உள்ளவர்கள், இச்சுனையில் உப்பு, மிளகு போட்டால் மரு உடனே நீங்கிவிடுகிறது.

    பங்குனி உத்திரம் இங்கு பத்து நாள் உத்ஸவமாக மிகச்சிறப்பாக நடக்கிறது. ஏழாம் நாள் தேரோட்டமும் மற்றும் பங்குனி உத்திரத்தின் முதல் நாள் இரவு முருகனுக்கு கல்யாண உத்ஸவமும் வெகு விமர்சையான நடக்கும்.

    வீட்டில் திருமண வயதில் பெண்ணோ, மகனோ உள்ளவர்கள் இம்முருகனுக்கு கல்யாண உத்ஸவத்தன்று ஒரு ஜோடி பருப்பு தேங்காய் (பணையாரம்) பிடித்துக் கொடுத்தால் உடனே நல்ல வரன் அமைவது கண்கூடு. மறு நாள் பங்குனி உத்திரத்தன்று முருகன் ஊருக்குள் சென்று அங்கு ஓடும் ஆறில் தீர்த்தவாரி கண்டருளுவார். எலத்தூரில் அமைந்துள்ள பிருஹன்நாயகி சமேத கரகண்டேஸ்வரரே இவரின் தாய் தந்தையாக கருதப்படுகிறார்கள். இச்சிவன் கோவிலும் மிக சிறியதாக இருந்தாலும் மிகவும் சிறப்பான ஸ்தலமாக விளங்குகிறது.

    இவ்வூர்க்காரர்கள், இம்முருகனை குல தெய்வமாக கொண்டவர்கள். அதனால் எந்த ஊரில் இருந்தாலும் பங்குனி உத்திர திருவிழாவிற்கு ஊருக்கு வந்து விடுவார்கள்.
    இரு குன்றினையும் காவடிபோல் தூக்கி வந்த இடும்பாசுரன் முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றதுபோல் இன்றும் பக்தர்கள் காவடி தூக்கிச்சென்று முருகப்பெருமானின் பேரருளைப் பெறுகின்றனர்.
    முருகன் கோவில்களில் பழனி கோவிலில் பங்குனி உத்திரம் விழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த விழாவின்போது பழனிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். பழனி முழுவதும் காவடி காட்சிகளாக இருக்கும். முருக பக்தர்கள் காவடி எடுப்பதற்கு ஒரு புராணக்கதை கூறப்படுகிறது.
    பார்வதிதேவிக்கும் பரமசிவனுக்கும் திருமணம் நடந்த சமயம் தேவர்களும் முனிவர்களும் மற்றும் எல்லோரும் தெய்வீக திருமணத்தைக் காண கயிலை செல்கின்றனர். இதனால் வடபுறம் தாழ்ந்து தென்புறம் உயர்ந்தது. பூமியை சரிசமமாக செய்வதற்கு சிவபெருமான் அகத்திய முனிவரை தென் திசைக்கு அனுப்பி வைத்தார். அகத்திய முனிவரும் தென்திசையில் பொதிய மலையில் தங்கினார். அகத்திய முனிவர் அங்கிருந்த காலத்தில் தாம் வழிபட சிவகிரி, சக்திகிரி என்னும் இரு சிகரங்களைக் கொண்டு வருமாறு தன் சீடனாகிய இடும்பாசுரனிடம் கட்டளையிட்டார்.

    இடும்பாசுரன் மிகப்பெரிய பக்திமான். தன் குருவான அகத்தியர் இட்ட கட்டளையை நிறைவேற்ற தன் மனைவி இடும்பியுடன் கயிலை சென்று முருகப்பெருமானுக்கு உரிய கந்தமலையில் உள்ள சிவகிரி, சக்திகிரி என்னும் இரு குன்றுகளையும் பெயர்த்தெடுத்து ஒரு பெரிய பிரமதண்டத்தின் இரு புறங்களிலும் காவடியாகக் கட்டினான்.

    தன் தோள் மீது பிரமதண்டத்தின் மையப் பகுதியை வைத்துக்கொண்டு பொதிய மலைக்குத் திரும்பி வரும்வழியில் திருவாவினன்குடிக்கு மேலே ஆகாயத்தில் பறந்த போது முருகப்பெருமான் அவ்விருமலைகளையும் அங்கேயே இறங்குமாறு செய்து அவ்விடத்திலேயே நிலைபெறச்செய்து விட்டார். தன்னையறியாமல் தரையில் இறங்கிய இடும்பன் எவ்வளவு முயன்றும் பிரமதண்டத்தின் ஓரங்களில் கட்டிய மலைகளை அசைக்கமுடியாமல் திகைத்து நின்றான். மறுபடி அக்காவடியைத் தூக்க முயன்றபோது சிவகிரி குன்றின் மீது ஓர் அழகிய சிறுவன் கோவணத்துடன் ஆண்டியின் உருவில் சிரித்துக் கொண்டு நிற்பதைக் கண்டான்.

    அச்சிறுவனால் தான் மலையை அசைக்கக் கூட முடியவில்லை எனக்கருதிய இடும்பாசுரன் அச்சிறுவனை மலையில் இருந்து இறங்கும்படி அதட்டினான். சிறுவனோ மலை தனக்கே சொந்தம் என வாதிட்டான். சினம் கொண்ட இடும்பாசுரன் சிறுவனை தாக்க முயன்றான். தாக்க வந்த இடும்பன் வேரற்ற மரம் போல் சாய்ந்துவிட அவன் மனைவி இடும்பி கணவனை காப்பாற்ற சிறுவனை வேண்டினாள். தன் தவ வலிமையால் நிகழ்ந்தவற்றை அறிந்த அகத்தியர் முருகப்பெருமானை வணங்கினார்.

    அக்கணமே இடும்பாசுரனும் உயிர்பெற்று எழுந்து முருகப்பெருமானின் திருவிளையாடல் அறிந்து மூவரும் முருகப்பெருமானை வணங்கி பக்தியோடு துதித்தனர். குரு பக்தியை மெச்சிய முருகப்பெருமான் இடும்பனை பழனி தலத்தின் காவல் தெய்வமாக இருக்கும்படி பேரருள் செய்தார்.

    இரு குன்றினையும் காவடிபோல் தூக்கி வந்த இடும்பாசுரன் முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றதுபோல் இன்றும் பக்தர்கள் காவடி தூக்கிச்சென்று முருகப்பெருமானின் பேரருளைப் பெறுகின்றனர். இளவரசனாக முருகன் இடும்பனுக்குக் காட்சியளித்ததால் இன்றும் பழனி முருகனுக்கு ராஜ அலங்காரம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
    பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருவதாக ஐதீகம். அன்று திருவிளக்கு பூஜை செய்தால், பாவங்கள் விலகி புண்ணியம் பெறலாம்.
    ஸ்ரீரங்கத்துப் பெருமாள் பங்குனி உத்திரத்தன்று காவிரியைக் கடந்து உறையூர் நாச்சியார் கோவிலுக்குச் சென்று கமலவல்லியோடு சேர்த்தியில் இருந்து வருவார். அன்று உறையூரில் பங்குனித் திருவிழா நிகழ்ந்ததை சங்க இலக்கியம் குறிக்கிறது.

    பங்குனி உத்திர நாளில் காஞ்சி வரதராஜர், பெருந்தேவித் தாயார் சந்நதியில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக வரதராஜர் காட்சி தருவார்.

    காஞ்சியில் கம்பை நதிக்கரையில் மாமரத்தினடியில் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபட்ட பார்வதி, இறைவன் திருவிளையாடலால் கம்பை நதியில் பெருகிய வெள்ளம், சிவலிங்கத்தைச் சிதைத்து விடுமே என்று அன்பால் பதறி, சட்டென்று அதை ஆரத் தழுவிக் கொண்டாள். அவள் அன்பை உணர்ந்து காட்சி தந்த அரன், தேவியைத் திருமணம் செய்து கொண்ட தினமும் இதுவே.

    இன்றும் பங்குனி உத்திரத்தன்று காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இரவில் சுவாமி திருமணம் நடக்கும்போது, முன்பே வேண்டிக் கொண்டவர்கள் தங்கள் திருமணத்தையும் அப்போது நடத்திக் கொள்வது உண்டு.

    மகேசன், மதுரையில் மீனாட்சியை மணம்புரிந்து கொண்ட நாளும் இதுவே. ஆண்டவனையே ஆண்ட தமிழச்சி ஆண்டாளுக்கும் ஆழிமழைக் கண்ணனுக்கும் பங்குனி உத்திர நன்னாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமணம் கோலாகலமாய்க் கொண்டாடப்படுகிறது.

    லோபமுத்திரை அகத்தியரையும், பூரணா, பூஷ்கலா ஐயப்பனையும், ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்ட தினம் இதுதான். நந்திதேவர் திருமணம் நடந்த நாளும் இதுவே. திருமழபாடியில் அன்று நந்தி கல்யாணம் கண்டால், திருமணத் தடைகள் நீங்கு என்பது நம்பிக்கை. பங்குனி உத்திரத்தன்று சில கோவில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும்.

    பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருவதாக ஐதீகம். அன்று திருவிளக்கு பூஜை செய்தால், பாவங்கள் விலகி புண்ணியம் பெறலாம்.

    காரைக்கால் அம்மையார் முக்திடையந்த தினம் என்பதால், அன்று தண்ணீர்ப்பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம் என சாத்திரங்கள் கூறுகின்றன.

    பழநியில் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் தொடங்கியது பங்குனி உத்திர நாளில்தான். தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் அவதாரமானது, அர்ஜுனன் பிறந்தது, வள்ளி அவதாரம் செய்தது ஆகியவையும் இந்நாளில்தான்.

    ரதிதேவியின் வேண்டுதலை ஏற்று, திருலோக்கியில் மன்மதனை உயிர்ப்பித்ததும் பங்குனி உத்திரத்தில்தான். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்ததும் இந்த நாளில்தான்.

    திருக்கழுக்குன்றம் அஷ்டகந்தக திரிபுரசுந்தரி அம்மனுக்கு மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும் அபிஷேகம் நடைபெறும். ஆண்டுக்கு மூன்று நாட்களில் மட்டுமே முழு மகாபிஷேகம் (உச்சி முதல் பாதம் வரை) நடைபெறும். அவற்றுள் முக்கியமான நாள், பங்குனி உத்திர திருநாள். சந்திர பரிகாரத் தலமான திங்களூர் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர நன்னாளில் காலையில் 6 மணிக்கு சூரியக் கதிர்களும், மறுநாள் மாலை 6 மணிக்கு சந்திரனின் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுவது அபூர்வமான தரிசனம். இதனை தரிசித்தால் எல்லா வளமும் கிடைப்பதோடு, மனப் பிரச்சினைகள் நீங்கி, மனத்தெளிவுடன் வாழலாம்.
    ஷண்முக கவசத்தை நாள்தோறும் ஆறு முறை பாராயணம் செய்தல் சிறப்பு. கவசத்தை வார்த்தை பிழையின்றி ஓத வேண்டும். குமாரஸ்தவம் ஓதிய பின்பு ஷண்முக கவசத்தை ஓதுவது மிகவும் சிறப்பு.
    வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும் போது அவற்றில் இருந்து வெளியேற நமக்கு உறுதுணையாக இருப்பது பக்தி என்னும் அமுத சுரபி. அதிலும் முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு வினை எல்லாம் விலகி போகும். எனவே தினந்தோறும் நாம் பூஜிக்க கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதில் சண்முக கவசத்தை படிப்பதால் நமது மனம் சுகம் பெறும். இவற்றை தினமும் பாராயணம் செய்வதால் கல்வி, தொழிலில் உள்ள எதிர்ப்புகள் அனைத்தும் பனிபோல் விலகும். அதுமட்டுமின்றி மகிழ்ச்சியுடன் வாழ வழிவகை செய்யும்.

    ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் (Shanmuga kavasam). அண்டமாய் அவனியாகி பாடல் வரிகள். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். ஷண்முக கவசத்தை இயற்றியவர் பாம்பன் சுவாமிகளாவார். 30 செய்யுள்கள் கொண்ட இக்கவசம் ஒவ்வொரு பாடலின் முதல் எழுத்தாக உயிர் எழுத்து மற்றும் மெய் எழுத்துகளை கொண்டுள்ளது (உயிர் எழுத்து – 12, மெய் எழுத்து – 18). ஷண்முக கவசத்தை முழு நம்பிக்கையுடன் பாராயணம் செய்வோர்க்கு தீராத நோய், சங்கடம் தரும் வழக்கு, செய்வினை, சூன்யம் போன்றவை நீங்கி முருகன் அருள் கிட்டுவது உறுதி. ஷண்முக கவசத்தை நாள் தோறும் ஆறு முறை பாராயணம் செய்தல் சிறப்பு. கவசத்தை வார்த்தை பிழையின்றி ஓத வேண்டும். குமாரஸ்தவம் ஓதிய பின்பு ஷண்முக கவசத்தை ஓதுவது மிகவும் சிறப்பு. இது உலகத்தின் நோய் மருந்து இதை கண்டிப்பாக தினமும் விடியல் காலையும் மாலையும் கண்டிப்பாக கேட்கவும்….

    அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித்
    தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி
    எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன
    திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க…(1)

    ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க
    தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க
    சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க
    நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க…(2)

    இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை
    முருகவேள் காக்க, நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க
    துரிசஅறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க
    திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க…(3)

    ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க
    தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க
    ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க, எந்தன்
    ஏசிலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க…(4)

    உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க
    தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க
    புறம்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும்
    பிறங்கு மால்மருகன்காக்க, பின்முதுகைச் சேய் காக்க…(5)

    ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்த்தியோன் காக்க, வம்புத்
    தோள்நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய
    நாணினை அங்கி கெளரிநந்தனன் காக்க, பீஜ
    ஆணியை கந்தன்காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க…(6)

    எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க
    அம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க
    விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க
    செஞ்சரண நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க…(7)

    ஏரகத் தேவன்என்தாள் இரு முழங்காலும் காக்க
    சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க
    நேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க
    சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க…(8)

    ஐயுறு மலையன்பாதத்து அமர் பத்து விரலும் காக்க
    பையுறு பழநி நாத பரன், அகம் காலைக் காக்க
    மெய்யுடன் முழுதும், ஆதி விமல சண்முகவன் காக்க
    தெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க…(9)

    ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம்
    பலிகொள் இராக்கதப்பேய் பலகணத்து எவை ஆனாலும்
    கிலிகொள எனைவேல் காக்க, கெடுபரர் செய்யும் சூன்யம்
    வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க…(10)

    ஓங்கிய சீற்றமே கொண்டு உவணிவில் வேல் சூலங்கள்
    தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யாதி
    பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்,
    தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க…(11)

    ஒளவியமுளர் ஊன் உண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர்
    தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனைமல் கட்டத்
    தவ்வியே வருவா ராயின், சராசரம் எலாம் புரக்கும்
    கவ்வுடைச் சூர சண்டன் கைஅயில் காக்க காக்க…(12)

    கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை
    கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு
    நடையுடை எதனா லேனும் நான் இடர்ப் பட்டி டாமல்
    சடுதியில் வடிவேல் காக்க சானவிமுளை வேல் காக்க…(13)

    ஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள்
    சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி
    நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி
    உகமிசை இவையால், எற் குஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க…(14)

    சலத்தில் உய்வன்மீன் ஐறு, தண்டுடைத் திருக்கை, மற்றும்
    நிலத்திலும் சலத்திலும் தான் நெடுந்துயர் தரற்கே உள்ள
    குலத்தினால், நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை
    பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க…(15)

    ஞமலியம் பரியன்கைவேல், நவக்கிரகக்கோள் காக்க
    சுமவிழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராண ரோகம்,
    திமிர்கழல் வாதம், சோகை, சிரமடி கர்ண ரோகம்
    எமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க…(16)

    டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி, கண்ட மாலை
    குமுறு விப்புருதி, குன்மம், குடல்வலி, ஈழை காசம்,
    நிமிரொணா(து) இருத்தும்வெட்டை, நீர்பிரமேகம் எல்லாம்
    எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க…(17)

    இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்
    முணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்முளை, தீமந்தம்
    சணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்த
    பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும்சக்தி வடிவேல் காக்க…(18)

    தவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய்
    சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உடற்று விக்கல்,
    அவதிசெய் பேதி சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை
    எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க…(19)

    நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம்
    அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல்
    இமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப்பகந்த ராதி
    இமைப்பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க…(20)

    பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்
    கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி
    எல்லினும் கரிய மேனி எமபடர், வரினும் என்னை
    ஒல்லையில் தார காரி ஓம் ஐம் ரீம் வேல் காக்க…(21)

    மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும்
    தண்ணிறை ஜலத்தின் மீதும்சாரி செய் ஊர்தி மீதும்
    விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை
    நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க…(22)

    யகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல்முன் காக்க
    அகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்பின் காக்க
    சகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க
    சிகரமின் தேவ மோலி திகழ் ஐவேல் கீழ்மேல் காக்க…(23)

    ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்
    செஞ்சய வேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி
    விஞ்சிடு திசையில் ஞான வீரன் வேல் காக்க, தெற்கில்
    எஞ்சிடாக் கதிர்கா மத்தோன் இகலுடைக் கரவேல் காக்க…(24)

    லகரமே போல் காளிங்கன்நல்லுடல் நெளிய நின்று
    தகர மர்த்தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்,
    நிகழ்எனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க, மேற்கில்
    இகல் அயில்காக்க, வாயுவினில் குகன் கதிர்வேல் காக்க…(25)

    வடதிசை தன்னில் ஈசன்மகன்அருள் திருவேல் காக்க
    விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க
    நடக்கையில் இருக்கும்ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில், கீழ்க்
    கிடக்கையில் தூங்குஞான்றும் கிரிதுளைத்துள வேல்காக்க…(26)

    இழந்துபோகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்,
    வழங்கும் நல் ஊண் உண்போதும் மால்விளையாட்டின் போதும்
    பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்
    செழும்குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க…(27)

    இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்
    வளர் அறுமுகச் சிவன்தான் வந்தெனைக் காக்க காக்க
    ஒளிஎழு காலை, முன்எல் ஓம் சிவ சாமி காக்க
    தெளிநடு பிற்பகல் கால், சிவகுரு நாதன் காக்க…(28)

    இறகுடைக்கோழித் தோகைக்கு இறைமுன் இராவில் காக்க
    திறலுடைச் சூர்ப்பகைத்தே, திகழ்பின் இராவில் காக்க
    நறவுசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னில் காக்க
    மறைதொழு குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க…(29)

    இனம்எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க
    தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க
    நனி அநுபூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்
    கனிவோடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்கவந்தே…(30)

    … ஸ்ரீ சண்முக கவசம் முற்றிற்று. “எனை ஆதரித்த பரம ரகசிய சக்தி எனை நம்பினோரை ஆதரியாது நிற்குமோ, ஐயம் வேண்டாம்!” – பாம்பன் சுவாமிகள்
    முருகப்பெருமானின் கோபத்தை தணிக்க இளநீர்க் காவடி, தீர்த்தக் காவடி, தயிர்க்காவடி, பால்காவடி கொண்டு வந்து பங்குனி திருநாளில் வழிபட்டால் நம்வீட்டில் தொழில் சிறந்து, செல்வம் பெருகும்.
    உலக புகழ்பெற்ற புண்ணியத்தலமாகவும், அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகவும் பழனி திகழ்கிறது. நக்கீரர், அருணகிரிநாதர் ஆகியோர் முருகப்பெருமானை புகழ்ந்து பாடி அவன் அருளை பெற்ற திருத்தலம் என்பதால் தனிச்சிறப்பு பெற்று திகழ்கிறது. பழனியில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பு பெற்றதாக விளங்குகிறது. ஆன்மிக அன்பர்கள் பழனியை திருவிழா நகரம் என்றும் அழைக்கின்றனர்.

    பன்னிரு கைகளை கொண்டு, ஆறுமுகங்களோடு சூரனை வென்ற மாவீரன். அசுரர்களை அழித்தபின் இந்திரன் தனது மகள் தெய்வானையை பங்குனி மாத உத்திர நட்சத்திர திருநாளில் முருகப்பெருமானுக்கு மணமுடித்து கொடுத்தார். அத்திருமண நாளே மண்ணுலகில் பங்குனி உத்திர திருநாளாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் காலை, மாலை இருபொழுதும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் கிரிவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் தங்கமயில், வெள்ளிக்காமதேனு, வெள்ளியானை, ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனத்தில் உலா வருகிறார்.

    பங்குனிஉத்திர பெருவிழாவில் பழனியாண்டவர் உலா வருவது கண்கொள்ளா காட்சியாக அமையும். இதை காண கண் கோடி வேண்டும் என்பர். ‘பாசி படர்ந்த மலை, பங்குனித்தேர் ஓடும் மலை’ என்று பாடும் பெருமை உடையதாய் பழனி மலை விளங்குகிறது. பங்குனி திருவிழாவில் கலந்து கொண்டு முருகப்பெருமானை வணங்கினால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். பாவ வினைகள் ஒழிந்து நல்வினை பிறக்கும், இல்லம் செல்வமயமாய் செழிக்கும். குழந்தைபேறு கிட்டும். கல்யாணம் கைகூடி வரும்.

    முருகப்பெருமானின் கோபத்தை தணிக்க இளநீர்க் காவடி, தீர்த்தக் காவடி, தயிர்க்காவடி, பால்காவடி கொண்டு வந்து பங்குனி திருநாளில் வழிபட்டால் நம்வீட்டில் தொழில் சிறந்து, செல்வம் பெருகும். வாழ்வில் பல வெற்றிகள் கிடைக்க தீர்த்தக்காவடி எடுத்து பழனி ஆண்டவனின் அருளை பெறுங்கள், ஆனந்தம் அடையுங்கள்.

    பழனிவேலு, சித்தனாதன் சன்ஸ், பழனி.
    ×