என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று செப்பு தேரோட்டம் நடந்த காட்சி
    X
    ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று செப்பு தேரோட்டம் நடந்த காட்சி

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் செப்பு தேரோட்டம் இன்று இரவு திருக்கல்யாணம் நடக்கிறது

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆண்டாள் திருக்கல்யாணம் தினத்தன்று காலை செப்பு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆண்டாள் திருக்கல்யாண பங்குனி உற்சவம் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினசரி வீதிஉலா சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இன்று இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இன்று காலை செப்பு தேரோட்டம் நடந்தது. கோவிந்தா... கோபாலா.... கோ‌ஷங்களை எழுப்பியபடி பத்தர்கள் செப்பு தேரை இழுத்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆண்டாள் திருக்கல்யாணம் தினத்தன்று காலை செப்பு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதற்காக மேளதாளம் முழங்க ஆண்டாள்- ரங்கமன்னார் கோவிலில் இருந்து இன்று காலை கோவிலின் அருகே உள்ள செப்பு தேர் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் தேரில் வைத்து சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து 7 மணி அளவில் கோவிந்தா கோபாலா என்ற கோ‌ஷம் எழுப்பியபடியே ஏராளமான ஆண் பெண் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    நிலையத்திலிருந்து கிளம்பிய தேர் கீழரத வீதி, மேல ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி என 4 தடவைகள் சுற்றி வந்து மீண்டும் நிலைய அடைந்தது.

    செப்பு தேரோட்டத்தை முன்னிட்டு நகரில் சிறிதுநேரம் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து தேர் வடம் பிடித்து இழுத்தனர். அதிக அளவு பெண் பக்தர்கள் வடம்படித்து இழுத்தனர். செப்பு தேர் ரோட்டத்திற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்து ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி குடும்பத்துடன் வந்து ஆண்டாள்- ரங்கமன்னாரை தரிசனம் செய்தார். செப்பு தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் நகர் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மலர் மாலை, பட்டு வஸ்திரம், கைக்கிளி ஆகிய மங்கலப்பொருட்கள் ஆண்டுதோறும் ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் 5-ம் நாளான கருட சேவையின் போது வெங்கடேசப்பெருமாள் அணிந்து கொள்வதற்காக இங்கிருந்து கொண்டு செல்லப்படும். அதற்கு பதில் மரியாதையாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் பங்குனி மாதம் ஆண்டாள் திருக்கல்யாணத்தின்போது அணிவதற்காக பட்டு வஸ்திரம் கொடுத்தனுப்புவது வழக்கம்.

    இந்த நடைமுறை பல வருடங்களாக நடைபெற்று வருகிறது திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஆண்டாளுக்கு வழங்கிய பட்டு வஸ்திரம் மரியாதையை கோவில் துணை நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு, ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டுவந்து மாட வீதியின் வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் முத்துராஜாவிடம் நேற்று வழங்கினார். அப்போது ரங்கராஜன் என்ற ரமேஷ், வேதபிரான் சுதர்சன் பட்டர், மணியம் கோபி, மற்றும் பட்டாச்சாரியார்கள் பக்தர்களும் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×