என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம் வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் திசையன்விளை சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தினமும் இரவில் சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகையுடன் சப்பரத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 9-ம் நாளான வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து விழாவில் பங்கேற்குமாறு பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார்.
    சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் புற்றடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழாவையொட்டி கடந்த 15-ந் தேதி தை மாத முதல் வெள்ளி அன்று கொடியேற்றப்பட்டது. இதனையடுத்து 22-ந் தேதி தீமிதி திருவிழா நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது. தேர் திருவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் புற்றடி மாரியம்மன் எழுந்தருளினார். இதனையடுத்து கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், வாணவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க நான்கு வீதிகளில் தேர் வலம் வந்து கோவிலை வந்தடைந்தது.

    அதனை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்பட ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.
    மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவில் தேர் பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    வில்லுக்குறி, மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளில் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடந்தது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். தொடர்ந்து வந்த நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தன.

    3-ம் நாளில் செங்கல்பட்டு மறைமாவட்ட கொளப்பாக்கம் பங்குத்தந்தை ஜான் பெஞ்சமின் தலைமையில் திருமுழுக்கு வழங்கும் திருப்பலியும், நற்கருணை பவனியும், நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.

    6-ம் திருவிழாவில் நடந்த புனித செபஸ்தியார் தின திருப்பலியில் முரசன்கோடு பங்குத்தந்தை பெனிற்றோ தலைமை தாங்கினார். திருப்பலியை தொடர்ந்து புனிதரின் அருளிக்கம் முத்தமிடும் நிகழ்வு நடைபெற்றது.

    9-ம் நாளான நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு, முதல் திருவிருந்து திருப்பலியும், இரவு 10 மணிக்கு தேர்ப்பவனியும், சிறப்பு தவில் வாத்தியமும், வாணவேடிக்கையும் நடந்தன. விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு திருவிழா திருப்பலியும், காலை 8.30 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலியும், மதியம் 1 மணிக்கு தேர்பவனியும் நடைபெற்றது. இதில் 3 தேர்கள் கோவிலையொட்டி உள்ள நான்கு வீதிகளும் சுற்றி வந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்ச்சை காணிக்கைகளை செலுத்தினர்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெயக்குமார், இணை பங்குத்தந்தை ஷிஜின், பங்குபேரவை துணை தலைவர் சகாய பால் ததேயுஸ், செயலாளர் புஷ்பாஸ், துணைச் செயலாளர் ஆக்னல் வினு, பொருளாளர் பாபியோன் ராஜ், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.
    கோணான்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோணான்குப்பம் கிராமத்தில் புகழ்பெற்ற புனித பெரியநாயகி அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ஆண்டு பெருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா மற்றும் ஆலயம் கட்டி 301-வது ஆண்டு தொடக்க விழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் சிங்கரயர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெருவிழா கொடியை ஏற்றி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு திருப்பலியும், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆலய பங்குதந்தைகள் தலைமையில் சிலுவை பாதையும் நடந்து வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு 301-வது பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடந்தது. அப்போது பாரம்பரிய முறைப்படி பாளையக்காரர் பொன்.பாலதண்டாயுதம், ஜமீன் அலங்கார உடையில் முகாசபரூரில் உள்ள தனது வீட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியநாயகி அன்னை ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு கோவில் முன்பு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு 3 தேர்கள் தயார் நிலையில் இருந்தன.

    முதல் தேரில் புனித அந்தோணியார் சொரூபமும், 2-வது தேரில் புனித சூசையப்பர் சொரூபமும், 3-வது தேரில் பெரிய நாயகி அன்னை சொரூபமும் வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக செங்கல்பட்டு உயர் மறை மாவட்ட மேதகு டாக்டர் நீதிநாதன் தலைமையில் பெருவிழா திருப்பலி நடைபெற்றது. இதையடுத்து தேரோட்டத்தை பங்கு தந்தையர்கள், பாளையக்காரா் பொன்.பாலதண்டாயுதம் ஆகியோர் தொடங்கி வைக்க, 3 தேர்களும் ஆலயத்தை சுற்றி வலம் வந்தன. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
    திருமங்கலம் அருகே 3000 கிலோ அரிசி, 150 ஆடுகள், 300 சேவல்களுடன் முனியாண்டி சாமி கோவிலில் பிரியாணி திருவிழா நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அதிகாலையில் பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது.
    திருமங்கலம் :

    திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ள முனியாண்டி சாமி கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று திருவிழா நடைபெறும். இங்கு சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு முனியாண்டி சாமி தோன்றியதாக வரலாறு கூறுகிறது.

    இங்கு சுற்றுவட்டார கிராம மக்கள் அனைவரும் வருகை தந்து சாமியை வழிபட்டு சென்றனர். அனைத்து கிராம மக்களும் இங்குவர ஆரம்பித்ததால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து முனியாண்டி சாமியின் தாய் கிராமமான இங்கு இருந்து பிடிமண் எடுத்து சென்று மற்ற கிராமங்களில் வைத்து முனியாண்டி சாமியை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்த ஆண்டு வடக்கம்பட்டியில் 86-வது ஆண்டாக நடைபெறும் இந்த திருவிழாவில், கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் காப்புகட்டி ஒருவாரம் விரதம் இருந்தனர். பின்னர் கிராம மக்கள் அனைவரும், பால்குடம் எடுத்து தாம்பூலத் தட்டுகளுடன் கோவிலுக்கு சென்றனர்.

    கோவில் பூசாரி முனீஸ்வரன் அனைத்து வீதிகளுக்கும் சென்று மக்களை அழைத்து நிலை மாலையுடன் சென்று, நிலை மாலையை முனியாண்டி சிலை மீது வைத்து கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து சாமிக்கு பிரியாணி படையல் திருவிழாவையொட்டி தங்களது வேண்டுதல் நிறைவேறிய பின்பு அதற்கு உரிய நேர்த்திக்கடனாக கிடாய்கள், சேவல்களை பக்தர்கள் வழங்கினர். சேவல்கள் வழங்கும் பக்தர்கள் கூவக்கூடிய சேவலை மட்டுமே வழங்குவது சிறப்பு. 3000 கிலோ அரிசி, 150 ஆடுகள், 300 சேவல்களால் பிரியாணி தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. கோவிலில் நள்ளிரவு பூஜை முடிந்து ஆடு மற்றும் சேவல்களை முனியாண்டி சாமிக்கு பலியிட்டு, அதனை பிரியாணியாக சமைத்து முனியாண்டி சாமிக்கு படையல் செய்து பூஜை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அதிகாலையில் பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது.

    தமிழகம் முழுவதும் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வரும் உரிமையாளர்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டனர். வெளிநாடுகளில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் நடத்தி வருபவர்கள் உள்பட திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சுப்புராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 4 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு வருஷாபிஷேக விழா நடந்தது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 4 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது.

    இதையொட்டி அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. பின்னர் மாலை 6 மணிக்கு மேல் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் வீதி உலா நடைபெற்றது.

    ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் நாட்டுக் கோட்டை நகரத்தார், உபயதாரர்கள் செய்து இருந்தனர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    பெரியகாடு புனித அந்தோணியார் திருத்தல பெருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி பிப்ரவரி 7-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
    பெரிய காடு புனித அந்தோணியார் திருத்தலமானது தனிப் பங்காக உதயமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி பொன்விழா மற்றும் திருத்தல பெருவிழா நாளை  (செவ்வாய்க்கிழமை) தொடங்கி பிப்ரவரி 7-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.

    நாளை அதிகாலை 5.30 மணிக்கு பொன்விழா பொங்கல், காலை 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு செபமாலை, கொடியேற்றம் நடக்கிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி, மறையுரையாற்றுகிறார்.

    27-ந்தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் செபமாலை மற்றும் திருப்பலிக்கு குளச்சல் பங்குத்தந்தை மரிய செல்வன் தலைமை தாங்க, அருட்பணியாளர் பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றுகிறார். விழாவை தொடர்ந்து தினமும் மாலை செப மாலையும், திருப்பலியும் அருட்பணியாளர்களின் மறையுரையும் நடக்கிறது.

    வருகிற 2-ந்தேதி காலை 11 மணிக்கு நோயாளிகளுக்கான திருப்பலி நடக்கிறது. இதற்கு அந்தோணியார்புரம் திரு இருதய ஆண்டவர் சபையின் அருட்பணியாளர் புஷ்ப தாசன் தலைமை தாங்க, எட்டாமடை இணை பங்கு தந்தை அன்பின் தேவ சகாயம் மறையுரையாற்றுகி றார். மாலை 6 மணிக்கு செபமாலை, திருப்பலிக்கு அனந்தன்நகர் பங்குத்தந்தை அல்போன்ஸ் தலைமை தாங்க, புதூர் பங்குத்தந்தை சாம் மேத்யூ மறையுரையாற்றுகிறார்.

    6-ந் தேதி மாலை 6 மணிக்கு செபமாலை, சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. இதற்கு மறை மாவட்ட செயலாளர் இம்மானுவேல் தலைமை தாங்குகிறார். கிறிஸ்து நகர் பங்குத்தந்தை வில்சன் மறையுரையாற்றுகிறார்.

    7-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு திருப்பலி நடக்கிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து நடைபெறும் திருப்பலிக்கு குளச்சல் வட்டார முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி சேல்ஸ் தலைமை தாங்க, அழிக்கால் பங்குத்தந்தை ஜெல்பரின் மறையுரையாற்றுகிறார்.

    காலை 11 மணி திருப்பலிக்கு ஆலஞ்சி வட்டார முதன்மை பணியாளர் ஜேசுதாசன் தலைமை தாங்க, கன்னியாகுமரி இணை பங்கு பணியாளர் சுரேஷ் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறுகிறது. இதற்கு மறைமாவட்ட பொருளாளர் அலாய்சியுஸ் தலைமை தாங்க, கேசவன் புத்தன் துறை பங்குத்தந்தை ஜெகன் மறையுரையாற்றுகிறார்.

    திருவிழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு தந்தைகள் இணைந்து செய்து வருகிறார்கள்.
    பழனி முருகன் கோவிலில், தைப்பூசம் மற்றும் வார விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    முருகப்பெருமானின் 3-ம்படைவீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.

    குறிப்பாக வார விடுமுறை, மாத கார்த்திகை, சஷ்டி ஆகிய விசேஷ நாட்களில் பக்தர்கள் அதிகம் வருகின்றனர். இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி பாதயாத்திரையாக வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக காலை, மாலை வேளையில் திண்டுக்கல் சாலை, உடுமலை சாலை, கிரிவீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    தைப்பூச திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் பக்தர்கள் அதிகாலை முதலே பழனியில் குவிந்தனர். இதனால் அடிவாரம் பாதவிநாயகர் கோவில் பகுதி, சன்னதி வீதி, பூங்கா ரோடு, பஸ்நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் திரளாக காணப்பட்டனர்.

    பக்தர்கள் வருகையால் திருஆவினன்குடி கோவில், மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். மேலும் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்லும் பாதைகளான படிப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    அவர்கள் மலைக்கோவிலில் சுமார் 2 மணிநேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தற்போது பல இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனிடையே நாளை நடக்கும் குடியரசு தின விழாவை முன்னிட்டு ராஜகோபுரம், தங்க கோபுரம் ஆகியவற்றுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    திருமூலநகர் குருசு மலையில் மலைக்குகை மாதா மற்றும் புனித தோமையார் ஆலயத்தை சினிமா டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று திறந்து வைத்தார்.
    கன்னியாகுமரி அருகே அழகப்பபுரம் திருமூலநகர் குருசு மலையில் கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், சினிமா தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் மலைக்குகை மாதா மற்றும் புனித தோமையார் ஆலயம் கட்டி கொடுத்துள்ளார்.

    இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. இந்த விழாவுக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி. செல்வகுமார் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மைக்குரு வி.ஜி. பன்னீர்செல்வம், முதன்மைச் செயலாளர் நூர்பர்ட், வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குரு ஜான் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமூல நகர் குருசுமலை பங்குத்தந்தை பீட்டர் பாஸ்டின் வரவேற்று பேசினார்.

    இதில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலயத்தை அர்ச்சித்து திறந்து வைத்து திருப்பலியை நிறைவேற்றினார். இந்த விழாவில் சினிமா டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மலைகுகை மாதா ஆலயத்தை திறந்து வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், இந்த ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வரும்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பி.டி.செல்வகுமார் என்னை அழைத்தார். அப்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் வர முடியவில்லை. இந்த ஆலயத்தை ஒரு இந்து கட்டி கொடுத்திருப்பது மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது இதை கட்டி கொடுத்த பி.டி.செல்வகுமாரை பாராட்டுகிறேன்.

    நான் எங்கு சென்றாலும் என்னை நடிகர் விஜய்யின் தந்தை என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். என் மகனுக்கு நல்ல ஒரு தந்தையாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

    விழாவில் கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் பேசுகையில், இந்த குருசுமலையில் மலைகுகை மாதா மற்றும் புனித தோமையார் ஆலயத்தை கட்டிக் கொடுத்திருப்பதை பெருமையாக கருதுகிறேன். இது கடவுள் எனக்கு கொடுத்த ஒரு பாக்கியமாகும். இந்த குருசுமலை சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது என்றார்.

    விழாவில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகை பவி டீச்சர், கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் சிவ பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் ஜான் கிறிஸ்டோபர், மாவட்ட துணைத்தலைவர் ஜெபர்சன், சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன், மாவட்ட மகளிரணி தலைவி ஸ்ரீரங்கநாயகி, மாவட்ட மாணவரணி தலைவர் பழனிகுமார், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் காப்பித் துறை, பொட்டல்குளம் அன்னை வேளாங்கன்னி கல்லூரி நிறுவனர் பீட்டர் யேசுதாஸ் மற்றும் திருமூல நகர் குருசுமலை பங்கு பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு நடன நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    முன்னதாக புனித ஜார்ஜியார் ஆலய அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா 28-ந் தேதி நடக்கிறது.
    தென்காசி மாவட்டம் கடையம் அருகே இயற்கை எழிலோடு அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இங்கு 1,001 படிகளுக்கு மேல், மலை உச்சியில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். கடையத்தின் மருமகனான மகாகவி பாரதியார் ‘குகைக்குள் வாழும் குகனே' என்று ஸ்தலத்தை பற்றி போற்றிப் பாடியது இந்த தோரணமலை முருகனைத்தான்.

    மலையே தோரணம் போல் அமைந்த காரணத்தால் ஸ்தலம் தோரணமலை என்று அழைக்கப்படுகிறது. அகத்தியர் மாமுனிவர் அமர்ந்து தமிழ் வளர்த்த மலை இது. இம்மலையில் 64 சுனைகள் உள்ளன. இந்த சுனைகளில் உள்ள நீரை கொண்டே முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வரும் 28-ந் தேதி நடக்க இருக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து கணபதி ஹோமம் நடக்க உள்ளது. 8 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதனை தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத தோரணமலை முருகன் திருக்கல்யாணம் நடக்கிறது.

    பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையுடன் அன்னதான பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு 501 சரவண ஜோதி திருவிளக்கு பூஜை நடக்க உள்ளது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு, திருவிளக்கு ஏற்றி முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செண்பகராமன் செய்து வருகிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
    நாகையை அடுத்த நாகூரில் பிரசித்திபெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று முன்தினம நடைபெற்றது. சந்தனக்கூடு நாகையில் உள்ள அபிராமி அம்மன் திடலில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டது

    முக்கிய வழியாக வந்து நாகூர் எல்லையை சந்தனக்கூடு சென்றடைந்தது. பின்னர் பாரம்பரிய முறைகாரர் வீட்டில் சந்தன குடத்தை வாங்கி கூட்டில் வைக்கப்பட்டது. இதையடுத்து கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு, நேற்று அதிகாலை 4.30 மணியளவில் தர்காவின் பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப், ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசினார். இந்த நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    இன்று (திங்கட்கிழமை) கடற்கரைக்கு பீர் செல்லும் நிகழ்ச்சியும், 27-ந்தேதி(புதன்கிழமை) கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    சந்தனம் பூசும் நிகழ்ச்சியையொட்டி பாதுகாப்பு பணியில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராம் தலைமையில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார்மீனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா முன்னிலையில் 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 1,500 போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி. ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
    மதுரை அருகே சோழவந்தானில் உள்ள பிரசித்திபெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை 9.05மணி அளவில் நடைபெறுகிறது. விழாவையொட்டி கடந்த சனிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்று காலை சிறுவர், சிறுமிகள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.

    மாலை 5 மணியில் இருந்து முதல் கால யாக பூஜையும், நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. இரவு மூன்றாம் கால யாக பூஜைநடந்தது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நான்காம் கால யாக பூஜையுடன் தீபாராதனை நடக்கிறது .

    காலை 8.30மணி அளவில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் குடங்களை மேளதாளத்துடன் எடுத்து கோவிலை வலம் வந்து 9.05 மணி அளவில் ராஜகோபுரம் விமானம், மூர்த்திக்கு அபிஷேகம் செய்து மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதைத்தொடர் விநாயகர், முருகன், ஜெனகை மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தீபாராதனை நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் கே. ராஜூ, சேவூர் ராமச்சந்திரன், தேனி எம்.பி. ரவீந்திரநாத், மாணிக்கம் எம்.எல்.ஏ. உள்பட இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், திருப்பணி குழுவினரும் கலந்து கொள்கின்றனர்.

    கும்பாபிஷேக விழாவையொட்டி சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கியராஜ் தலைமையில் போலீசாரும, தீயணைப்பு நிலைய அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையில் தீயணைப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேரூராட்சி சார்பாக நவீன கழிப்பறை வசதி ஏற்பாடு, கூடுதலாக தெருவிளக்கு, குடிநீர் வசதி, சுகாதார வசதி செய்துள்ளனர். நகர கூட்டுறவு வங்கி சார்பாக பக்தர்களுக்கு இனிப்பு, லேமினேசன், ஜெனகை மாரியம்மன் திரு உருவப்படம், குளிர்பானங்களும் வழங்குகின்றனர். எம்.வி.எம். குழுமம் சார்பாக நிறுவனர் மணிமுத்தையா பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக விழிப்புணர்வு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று இரவு இருந்தே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சோழவந்தானில் குவிந்துள்ளனர்.
    ×