என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருநெல்வேலி மற்றும் தென்காசி அருகிலேயே ‘பஞ்ச குரோச தலங்கள்’ எனப்படும் ஐந்து தலங்களும் அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்களை சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம்.
    இந்த பூமியில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும், தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்கு சென்று காசிவிஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மனையும் வழிபட்டு வர வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் பெரும்பாலானவர்களால் அது இயலாத காரியமாகவும் உள்ளது. ஏழை எளியவர்கள் அவ்வளவு தூரம் சென்று இறைவனை தரிசித்து வருவது என்பது சாத்தியமில்லைதான். அதற்காக உருவானவையே ‘பஞ்ச குரோச தலங்கள்’ என்ற ஐந்து சிவாலயங்கள். குரோசம் என்பதற்கு இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக்கூடிய தூரம் என்று பொருள்.

    தேவர்களுக்காகத் தோன்றிய அமுதக்குடத்தை, மனிதர்கள் பயன்பெறுவதற்காக அம்பெய்தி உடைத்தார், ஈசன். அந்த அமுதம் பல்வேறு இடங்களில் ஐந்து குரோசம் வரை பரவி, ஐந்து தலங்களாக மாறியது. இந்த ஐந்து ஆலயங்களே ‘பஞ்ச குரோச தலங்கள்’ எனப்படுகின்றன. திருநெல்வேலி மற்றும் தென்காசி அருகிலேயே இந்த ஐந்து தலங்களும் அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்களை சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம்.

    சிவசைலம்

    தென்காசி மாவட்டத்தில் உள்ளது ஆழ்வார்குறிச்சி. இங்கிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் பரமகல்யாணி உடனாய சிவசைல நாதர் கோவில் உள்ளது. கடனையாறு என்றழைக்கப்படும் கருணையாற்றின் கரையில் அமைந்துள்ள சிவசைலம் என்னும் இந்த ஊர், முன்காலத்தில் கடம்ப வனமாக இருந்திருக்கிறது. நந்திகேஸ்வரர், எழுந்து நிற்கும் தோரணையில் காட்சி தருகிறார். பரமகல்யாணி அம்மன் நான்கு கரங்களுடன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவரை நான்கு புறம் இருந்து தரிசிக்கும் வகையிலான தனிச் சிறப்பு கொண்டது இந்த ஆலயம். திருநெல்வேலியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சிவசைலம் திருத்தலம்.

    ஆழ்வார்குறிச்சி

    திருநெல்வேலியில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும், தென்காசியில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது, ஆழ்வார்குறிச்சி. இங்கு வன்னீஸ்வரர் திருக் கோவில் உள்ளது. அக்னி பகவான் வழிபாடு செய்த இறைவன் என்பதால், இத்தல மூலவர் ‘அக்னீஸ்வரர்’, ‘வன்னியப்பர்’, ‘வன்னீஸ்வரர்’ என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். மூலவரின் சன்னிதி முன்பாக உள்ள தூணில், கர்ப்பமான நிலையில் ஒரு பெண் தெய்வம் அருள்கிறது. சுகப் பிரசவம் ஏற்படவும், விரைவில் திருமணம் நடைபெறவும், காலசர்ப்ப தோஷம், ராகு-கேது தோஷம் நீங்கவும் இந்த பெண் தெய்வத்தை வழிபடுகிறார்கள். பாப நாசத்தில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.

    பாபநாசம்

    திருநெல்வேலியில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பாபநாசம் என்ற ஊர். இங்கு உலகம்மை உடனாய பாபநாசநாதர் கோவில் இருக்கிறது. இறைவன் ‘பாபநாசநாதர்’ என்றும், அம்பாள் ‘உலகம்மை, விமலை’ என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். தேவர்களின் தலைவனான இந்திரனின் பாவங்களை எல்லாம் போக்கி அருளிய இறைவன் என்பதால், இவருக்கு இந்தப் பெயர் வந்தது. தாமிரபரணி ஆறு இவ்விடத்தில் சமநிலை அடைவதால் உச்சிகால பூஜையில் தாமிரபரணியில் உள்ள மீன்களுக்கு நைவேத்திய உணவுகள் படைக்கப்படுகின்றன. நவ கயிலாயங்களில் முதல் தலமாக விளங்கும் இந்த பாபநாசம், சூரிய பகவானுக்குரியதாகத் திகழ்கிறது.

    கடையம்

    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ளது கடையம். இங்கு நித்யகல்யாணி உடனாய வில்வவனநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இறைவனின் திருநாமம் ‘வில்வவனநாதர்.’ “காணி நிலம் வேண்டும் பராசக்தி..’ என்று பாரதியார் வேண்டிய சக்தியாக, இந்த ஆலயத்தில் அருளும் நித்யகல்யாணி அம்மன் திகழ்கிறார். சிவபெருமான், பிரம்மதேவனுக்கு வில்வ பழத்தை வழங்கினார். அதை மூன்றாக உடைத்த பிரம்மன், ஒரு பாகத்தை கயிலாய மலையிலும், மற்றொரு பாகத்தை மேரு மலையிலும், இன்னொரு பாகத்தை துவாத சாந்த வனத்திலும் நட்டார். மூன்றாவது பகுதியை பிரம்மன் நட்ட, துவாத சாந்த வனத்தில்தான், வில்வவனநாதர் கோவில் இருக்கிறது. இங்குள்ள வில்வ மரத்தில் எப்போதாவதுதான் காய் காய்க்கும். அதை உடைத்துப் பார்த்தால், அதன் உள்ளே சிவலிங்க பாணம் போன்று விதை இருப்பதை காணலாம் என்கிறார்கள். இந்த ஆலயத்தின் கோவில் கதவில், ராமரின் தந்தையான தசரதனால், சிரவணனன் கொல்லப்பட்ட காட்சிகள் சிற்பகமாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் ராமாயணத்தோடு தொடர்புடைய நிறைய சிற்பங்களும் காணப்படுகின்றன. திருநெல் வேலியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், தென்காசியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திலும் கடையம் உள்ளது.

    திருப்புடைமருதூர்

    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு வடகிழக்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக் கோவில். இத்தல இறைவனின் புராணப் பெயர், ‘புடார்க்கினியீஸ்வரர்’ என்பதாகும். அம்பாளின் திருநாமம், கோமதி அம்மன். மூலவரின் திருமேனி மீது காயம்பட்ட வடு உள்ளது. இதனால் சுயம்புவாக தோன்றிய இந்த மூலவரின் மீது சந்தனாதித் தைலம் மட்டுமே பூசி பூஜை செய்கிறார்கள். அபிஷேகம் எதுவும் கிடையாது.

    “நாறும் பூவின் நடுவில் நிற்பவனே நினை தரிசிக்க எனக்கு அருள்புரிவாயோ..” என்று கேட்ட கருவூர் சித்தருக்காக, சுயம்புவான இத்தல மூலவர் சற்றே சாய்ந்து காட்சியளித்தார். அந்த சாய்வு நிலையிலேயே மூலவரை நாம் தரிசிக்கலாம். தேடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை, செவிசாய்த்து கேட்பவர் என்பதாகவும் இதனை பொருள் கொள்ளலாம்.
    பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வல்லம் புறவழிச்சாலை பாலம் வழியாக பழனி செல்வதற்கு திருச்சி நோக்கி பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
    அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வருகிற 28-ந்தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ள உள்ள பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக பல ஊர்களில் இருந்து வருவது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று வல்லம் புறவழிச்சாலை பாலம் வழியாக பழனி செல்வதற்கு திருச்சி நோக்கி பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது தஞ்சை கீழவாசல் மற்றும் பல பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை மேற்கொண்டனர்.
    பொறையாறு அருகே காட்டுச்சேரியில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் வனபத்ரகாளியம்மன் கோவில் பூஜை விழா நடைபெற்றது. மீண்டும் பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்யும் நிகழ்வு 2025-ம் ஆண்டு நடைபெறும்.
    மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே காட்டுச்சேரியில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் வனபத்ரகாளியம்மன் கோவில் பூஜை விழா 20 மற்றும் 21-ந் தேதிகளில் நடைபெற்றன.. பேழை (பெட்டி) ஒன்றில் வைக்கப்பட்டிருக்கும் பத்ரகாளியம்மனை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெட்டியில் இருந்து வெளியே எடுத்து 2 நாட்கள் மட்டும் சிறப்பு பூஜைகளுடன் மக்கள் வழிபாட்டிற்காக வைப்பது வழக்கம்.

    செங்குந்தர் மரபினர் இந்த பூஜை விழாவை நடத்துகின்றனர். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு இந்த விழா நடைபெற்றது. பூஜை விழா இந்த ஆண்டு கடந்த 20-ந்தேதி மற்றும் 21-ந் தேதிகளில் நடைபெற்று இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நிறைவு பெற்றது.

    முன்னதாக கடந்த 19-ந் தேதி நள்ளிரவு அம்மனை பேழையில் இருந்து எழுந்தருள செய்து பழங்கள், இனிப்பு, மலர்கள், வாசனை திரவியங்களுடன், மங்கள வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் சீர்வரிசை ஊர்வலம் நடைபெற்றது.

    20-ந் தேதி அதிகாலை மகாதீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து 21-ந் தேதி நள்ளிரவு வரை பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    அதன் பின்னர் தொடங்கிய சிறப்பு பூஜையுடன், அம்மனை மீண்டும் பேழையில் வைக்கும் நிகழ்ச்சி நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை செங்குந்தர் மரபினர் மற்றும் காட்டுச்சேரி ஊர் பொது மக்கள் செய்திருந்தனர். மீண்டும் பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்யும் நிகழ்வு 2025-ம் ஆண்டு நடைபெறும்.

    தமிழகத்தில் காட்டுச்சேரி உள்பட 7 இடங்களில் மட்டுமே இதுபோன்று, காளியம்மனுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பூஜை விழா வழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருக்களாச்சேரி, காட்டுச்சேரி, திருபட்டினம் (காரைக்கால் மாவட்டம்), குடவாசல், வலங்கைமான், தஞ்சாவூர் அருகே மாரியம்மன்கோவில், வாழ்மங்கலம் ஆகிய 7 இடங்களில் இத்தகைய காளியம்மன் பூஜை நடைபெறுவது சிறப்பம்சம்.
    முருகனுக்கு உகந்த் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி மனமுருகி வழிபட்டால், பட்ட கஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கிவைத்து அருளுவான்.
    முருகப்பெருமானை எப்படி வழிபட்டாலும் ஏற்றுக் கொண்டு அருளுவான் என்கிறார்கள் பக்தர்கள். அதேசமயம் முருக மந்திரத்தைச் சொல்லி மனமுருகி வழிபட்டால், பட்ட கஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கிவைத்து அருளுவான். அடைந்த துன்பங்களில் இருந்தெல்லாம் ஆனந்த வாழ்க்கையை மாற்றித் தந்திடுவான் கந்தன்.

    ஓம் செளம் சரவணபவ
    ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் செளம் நமஹ

    எனும் முருகப்பெருமானின் மந்திரத்தை, செவ்வாய்க்கிழமைகளில் அவசியம் சொல்லி வாருங்கள். செவ்வாய்க்கிழமையில் காலையும் மாலையும் இந்த மந்திரத்தைச் சொல்லி வாருங்கள். முடிந்தால் நெய்விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். இந்த மந்திரத்தை 21 முறை அல்லது 54 முறை அல்லது 108 முறை சொல்லி வாருங்கள். அதேபோல், செவ்வாய்க்கிழமை என்றில்லாமல் எல்லா நாளும் சொல்லி வழிபடுங்கள். தினமும் சொல்லி வழிபடுங்கள்.

    நம் வினைகளையெல்லாம் தீர்த்துவைப்பான் வேலவன். சிக்கல்களையெல்லாம் போக்கி அருளுவான் சிங்காரவேலன்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் :

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் 4-ம் நாளான நேற்று காலை நம்பெருமாள் இரட்டை பிரபை வாகனத்தில் புறப்பட்டு 4 உத்திரை வீதியில் வலம் வந்ததார்.

    பின்னர் பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி வீரேஸ்வரம் ஆஸ்தானம் மண்டபம் சென்றடைந்தார். அங்கிருந்து மாலை 6 மணிக்கு தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக உத்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இரவு 9.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது.

    28-ந் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 29-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். அத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் அசோக்குமார் (கூடுதல்பொறுப்பு), உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    வீட்டு நிலைவாசலில் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் கண் திருஷ்டி விலகும். குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக அகலும்.
    விளக்கேற்றி வழிபடுவது பூஜைகளிலும் வழிபாடுகளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. எந்த பூஜையாக இருந்தாலும் வழிபாடாக இருந்தாலும் விளக்கேற்றுவது என்பது முதலில் செய்யப்படுகிற வழிபாட்டு முறையாக கருதப்படுகிறது.

    பொதுவாகவே தினமும் விளக்கேற்றச் சொல்கிறது சாஸ்திரம். அதுவும் காலையும் மாலையும் விளக்கேற்ற வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். குறிப்பாக, செவ்வாய், வெள்ளிக்கிழமை முதலான நாட்களில் விளக்கேற்ற வேண்டும்.

    விளக்கேற்றி நமக்குத் தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடுவது மிகுந்த பலன்களைத் தந்தருளும். அதேபோல், எந்தத் தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் விளக்கேற்ற வேண்டும். ஏதேனும் ஒரு உணவை நைவேத்தியமாகப் படைத்து வேண்டிக்கொள்ளவேண்டும்.

    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், வீட்டு நிலைவாசலில் எலுமிச்சையை சரிபாதியாக்கி அதில் மஞ்சள் தோய்த்து வைக்க வேண்டும். அதேபோல், வாசலின் இரண்டு பக்கமும் அகல் விளக்குகள் மாலை வேளையில் ஏற்றி வைக்க வேண்டும்.

    வாசலில், எலுமிச்சையையும் அகல் விளக்கையும் வைத்துவிட்டு, பூஜையறையில் வழக்கம் போல் விளக்கேற்ற வேண்டும். அம்பாள் ஸ்துதி சொல்லி பாராயணம் செய்யலாம்.

    அதேபோல், கனகதாரா ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி முதலானவற்றை பாராயணம் செய்து வேண்டிக்கொள்ளலாம்.

    வாசலில் வைத்திருக்கும் எலுமிச்சையும் விளக்கும் உங்கள் வீட்டுத் திருஷ்யைப் போக்கி அருளும். அம்மனின் சக்தி இல்லத்துக்குள் வியாபித்து காக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
    நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது.

    விழாவின் 4-வது நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ஒரு புராண வரலாறு கூறப்படுகிறது. அதாவது, வேதபட்டர் என்பவர் சுவாமிக்கு நெய்வேத்தியம் படைக்க யாசகம் பெற்ற நெல்மணிகளை காயவைத்து விட்டு தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது கடும் மழை பெய்தது. சுவாமிக்கு நெய்வேத்தியம் படைக்க காயவைத்த நெல்மணிகள் மழையில் நனைந்து விடுமே என்று வேதனையுடன் வேதபட்டர் வந்து பார்த்தார். அப்போது நெல்மணிகளை ஈசன் மழையில் நனையாமல் வேலியிட்டு காத்து அருளியதாக வரலாறு கூறுகிறது. இதுவே ‘திருநெல்வேலி’ என பெயர் வரக்காரணம் என்று கூறப்படுகிறது.

    இதை நினைவு கூறும் வகையில் நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட வைபவம் நடந்தது. இதற்காக சுவாமி முன்பு ஒரு பெரிய தட்டில் நெல்மணிகள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை பக்தர்கள் இருகைகளில் எடுத்து போட்டு சாமியை வழிபட்டனர். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

    முன்னதாக, காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள், சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது.

    வருகிற 28-ந் தேதி நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் சிந்துபூந்துறை தீர்த்தவாரி மண்டபத்தில் வைத்து சுவாமி, அம்பாள் தைப்பூச தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து 29-ந் தேதி சவுந்தரிய சபா மண்டபத்தில் நடராஜர் திருநடன காட்சி நடக்கிறது.

    வருகிற 30-ந்தேதி சுவாமி நெல்லையப்பர் கோவில் எதிரே உள்ள சந்திர புஷ்கரணி என்ற வெளித்தெப்பத்தில் இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. இதில் மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வலம் வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
    கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 19-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 28-ந் தேதி நடக்கிறது.

    கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் முருகன்குன்றம் வேல்முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 10 நாட்கள் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த 19-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவின் முதல்நாள் அதிகாலை 5.30 மணிக்கு நிர்மால்ய தரிசனம், காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு யாகசாலை பூஜை, 9 மணிக்கு ராஜமேளம், 10.30 மணிக்கு கொடி ஏற்றம் நடந்தது. பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 12 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு சமய உரையும், இரவு 7 மணிக்கு பஜனை, 8 மணிக்கு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாமியுடன் அம்பாள் கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.

    10-ம் நாள் திருவிழாவான 28-ந்தேதி தைப்பூச திருவிழா நடக்கிறது. இதையொட்டி அன்று மாலை 6 மணிக்கு உற்சவமூர்த்தி கிரிவலம் வருதல், இரவு 7 மணிக்கு கார்த்திகை பொய்கை குளத்தில் சாமிக்கு தீர்த்தவாரி ஆராட்டு ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் நற்பணி மன்றத்தினர் செய்து வருகிறார்கள்.
    பட்டீசுவரர் கோவில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரூரில் அமைந்து இருக்கும் ஒரு இந்து சைவ சமய கோவில் ஆகும்.
    கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து "பேரூர் " என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம். நால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம், மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு "நடராஜப்பெருமான்" ஆனந்த தாண்டவம் ஆடியபோது அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு....

    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற இக்கோவில் கோவை மாநகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது.

    இக்கோவில் கரிகால சோழன் என்னும் சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடப்பெற்றதாகும். இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் அருள்பாலிக்கிறார். இங்கிருக்கும் லிங்கம் சுயம்பு லிங்கம் என்று நம்பப்படுகிறது. தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக இத்திருக்கோவிலின் தூண்கள் அமைந்துள்ளன. இவற்றை பக்தர்கள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.

    இத்திருக்கோவிலின் புராதனப் பெயர் பிப்பலாரண்யம் (பிப்பலம் = அரச மரம்; ஆரண்யம் = காடு).மேலும், காமதேனுபுரி, பட்டிபுரி,ஆதிபுரி, தட்சிண கயிலாயம், தவசித்திபுரம், ஞானபுரம், சுகலமாபுரம், கல்யாணபுரம், பிறவா நெறித்தலம், பசுபதிபுரம், மேலை சிதம்பரம் போன்ற மற்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.

    வரலாறு

    இக்கோவில் கரிகால் சோழன் என்னும் சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் இக்கோவிலுக்கு வருகை புரிந்து தேவாரப் பாடல்கள் பாடியிருக்கிறார். பிற்காலத்தில் சோழ பேரரசன் முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சியில் இக்கோவிலில் அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு, கோவிலுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு நன்கொடைகள் அங்குள்ள சுவர்களில் ஆவணப்படுத்தப்பட்டன. பின்னர் பதினேழாம் நூற்றாண்டு வரை கொங்கு சோழர்கள், போசளப் பேரரசு, விஜயநகரப் பேரரசு மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சியின் கீழ் பல்வேறு நன்கொடைகள் இக்கோவிலுக்கு அளிக்கப்பட்டு வந்துள்ளன.

    இக்கோவிலின் கனக சபை பதினேழாம் நூற்றாண்டில் அழகாத்ரி நாயக்கரால் கட்டப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் 63 நாயன்மார்களைக் கொண்ட மண்டபம் கட்டப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் கல்யாண மண்டபம் மற்றும் முன் மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு விமானமும் செப்பனிடப்பட்டது.

    பெயர் காரணம்

    ஒரு சமயம் பிரம்ம தேவர் படைப்புத் தொழிலினிடையே சோர்வுற்றுக் கண்ணயர்ந்து விட்டார். இதை அறிந்த திருமால் காமதேனுவை அழைத்து “நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத்தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட்டார். அதன்படி காமதேனுவும் இமயமலையில் அருந்தவமிருந்ததராம். ஆனால் சிவபெருமான் அருள் சித்திக்கவில்லை.

    அச்சமயம் நாரத முனிவர் தஷிணகைலாயம் பற்றிச்சொல்ல, காமதேனுவும் கன்றுடன் அந்த இடத்தை அடைந்தது. அங்கே ஆதிலிங்க மூர்த்தியாகக் காஞ்சி நதிக்கரையில் இருந்த சிவபெருமானுக்கு தினமும் பாலபிஷேகம் செய்து தவமிருந்தது. ஒரு நாள் காமதேனுவின் கன்றான பட்டி, அந்த ஆதிலிங்க மூர்த்தியின் மேல் கவிந்திருந்த புற்றை விளையாட்டாய்க் குலைத்து விட்டது. கன்றின் குளம்படி சிவபெருமானின் திருமுடியில் அழுந்தப் பதிந்து விட்டது.

    பதறிப்போன காமதேனுவின் வருத்தத்தைப் போக்கும் விதமாக, சிவபொருமான் தோன்றினார். “பார்வதி தேவியின் வளைத் தழும்மை என் மார்பகத்தில் ஏற்றது போல் உன் கன்றின் குளம்படித் தழும்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்று ஆறுதல் கூறினார். “இது முக்தி தலம் என்பதால், நீ வேண்டும் சிருஷ்டி ரகசியத்தை இங்கே அருள முடியாது. அதை திருக்கருவூரிலே அருளுகிறேன். இங்கே நீ தொடர்ந்து தவமிருந்து எனது நடன தரிசனத்தைக் காணலாம். உன் நினைவாக இத்தலம் பட்டிபுரம் காமதேனுபுரம் என்று வழங்கப்படட்டும். எனக்கு பட்டிநாதர் என்ற ஒரு திருப்பெயரும் இவ்வூரில் வழங்கட்டும்” என்று அருளினார்.

    இந்த புராணத்தை மெய்ப்பிக்கும் வகையில் சிவலிங்கத்தின் திருமுடியில் குளம்படித் தழும்பை இன்றும் காணலாம். இந்நிகழ்வின் காரணமாக இக்கோவிலில் இருக்கும் இறைவன் பட்டீசுவரர் என்றே அழைக்கப்படுகிறார்.

    பாடல் பெற்ற தலம்

    இத்தலம் தேவாரம் போன்ற சமய இலக்கியங்களிலும் பல வரலாற்று இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அருணகிரிநாதரால் பாடப்பட்ட திருப்புகழ் மூலமாக இத்தலத்தை பற்றிய ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய தகவல் கிடைக்கின்றன. சோழர்களின் பூர்வ பட்டையம் இவ்வாலயத்தின் வரலாற்றையும் இத்தலத்தில் வாழ்ந்த மக்களை பற்றியும் தகவல்களை கொண்டுள்ளது. இக்கோவிலுள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுகளில் இருந்து ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த வழக்கங்களை அறிந்துகொள்ள முடிகிறது.

    சிறப்பு

    இக்கோவிலில் பல்வேறு கோபுரங்களும் மண்டபங்களும் உள்ளன. இக்கோவிலின் மண்டபம் ஒன்றில் செய்யப்பட்ட நடராஜர் சிலை உள்ளது. அம்மண்டபத்தின் தூண்களில் அழகிய சிற்பங்களும் அதன் மேற்கூரையில் கல்லால் ஆன சங்கிலியும் அமைந்துள்ளன.

    இக்கோவிலில் பட்டி விநாயகர் சன்னிதியும், அரச மரத்தடியில் அரசம்பலவாணர் (சிவபெருமான்) சன்னிதியும் அமைந்துள்ளன. அந்த அரச மரத்தின் அடியில் சிவபெருமான் தாண்டவமாடியதாக நம்பப்படுகிறது. இக்கோவில் பிறவாப்புளி (புளியமரம்) மற்றும் இறவாப்பனை (பனைமரம்) ஆகியவற்றை தல விருட்சமாகக் கொண்டுள்ளது.

    வழிபாட்டு நேரம்

    இத்திருக்கோவிலை அனைத்து நாட்களிலும் வழிபடலாம்.

    காலை : 05:30 முதல் 01:00 வரை

    மாலை : 04:00 முதல் 09:00 வரை
    ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புஷ்பாபிஷேக விழா வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
    ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புஷ்பாபிஷேக விழா வருகிற 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம் நடக்கிறது. காலை 7 மணிக்கு மிர்துஞ்சயஹோமம், கலச பூசை, 9 மணிக்கு தீபாராதனை, 9.30 மணிக்கு அம்மனுக்கு கும்பாபிஷேகமும், 10 மணிக்கு ஆலமூடு அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம், 11 மணிக்கு பொங்கல் வழிபாடு நடக்கிறது.

    மதியம் 12 மணிக்கு சுமங்கலி பூஜை, அன்னதானம் நடைபெறும். 1 மணிக்கு தீபாராதனை, மஞ்சள் நீராடுதல், 2 மணிக்கு ஊட்டுப்படைப்பும் நடைபெறும். மாலை 5 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வருதல், திருவிளக்கு பூஜை நடைபெறும். இரவு 7 மணிக்கு தீபாராதனை, புஷ்பாபிஷேகம், 9 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி அருணாசலம் மற்றும் பக்தர்கள் சேவா சங்கத்தினர், விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
    திருமூலநகர் குருசுமலையில் மலைகுகை மாதா, புனித தோமையார் ஆலயம் திறப்பு விழா இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. முன்னதாக மாலை 5 மணிக்கு புனித ஜார்ஜியார் ஆலய அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது.
    உலக சுற்றுலா தலமான கன்னியாகுமரி அருகே திருமூலநகர் குருசு மலையில் கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் தனது சொந்த செலவில் மலைக்குகை மாதா, புனித தோமையார் ஆலயம் கட்டி கொடுத்துள்ளார். இதன் திறப்பு விழா இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. முன்னதாக மாலை 5 மணிக்கு புனித ஜார்ஜியார் ஆலய அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது.

    விழாவுக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், சினிமா தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் தலைமை தாங்குகிறார். தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மைக்குரு வி.ஜி.பன்னீர்செல்வம், முதன்மை செயலாளர் நூர்பர்ட், வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குரு ஜான் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். திருமூல நகர் குருசுமலை பங்குத்தந்தை பீட்டர் பாஸ்டின் வரவேற்று பேசுகிறார்.

    விழாவில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலயத்தை அர்ச்சித்து திறந்து வைக்கிறார். விழாவில் சினிமா டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், அமீர், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், நடிகைகள் சாஷி அகர்வால், மாஸ்டர் புகழ் பவி டீச்சர், மறைந்த வசந்தகுமார் எம்.பி.யின் மகன் விஜய் வசந்த் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை குருசுமலை பங்குதந்தை பீட்டர் பாஸ்டின், கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார், திருமூலநகர் ஊர் மக்கள், பங்கு பேரவை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் ஏற்கனவே பொட்டல்குளம் அய்யன்மலையில் மூலிகை தியான மண்டபம் தனது சொந்த செலவில் கட்டிகொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி சாமிக்கு அபிஷேகம், இரவில் மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. 25-ந் தேதி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு அலங்காரத்துடன் சாமி திருவீதி உலா, 26-ந் தேதி சாமிக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம், மின் அலங்காரத்துடன் சாமி திருவீதி உலா, 27-ந் தேதி இரவு 12 மணி அளவில் திருக்கல்யாண வைபோகம் நடக்கிறது.

    விழாவில் 28-ந் தேதி தைப்பூச நாளன்று சொர்க்கவாசல் திறப்பு மற்றும் ஈரோடு மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி, நாமக்கல் மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தமிழரசு ஆகியோர் முன்னிலையில் மாலை 3.30 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 29-ந் தேதி சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம், இரவில் முத்து பல்லக்கில் சாமி ஊர்வலம், 30-ந் தேதி தேதி சத்தாபரணம், மின் அலங்காரத்தில் சாமி திருவீதி உலா, நிறைவு நாளான 31-ந் தேதி வசந்த விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டின் படி திருவிழாவுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களும் முககவசம் அணிந்து வருமாறும், சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்யுமாறும் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் சரஸ்வதி சதாசிவம், செயல் அலுவலர் முருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    ×