search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வனபத்ரகாளியம்மன்
    X
    வனபத்ரகாளியம்மன்

    காட்டுச்சேரியில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் வனபத்ரகாளியம்மன் கோவில் பூஜை

    பொறையாறு அருகே காட்டுச்சேரியில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் வனபத்ரகாளியம்மன் கோவில் பூஜை விழா நடைபெற்றது. மீண்டும் பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்யும் நிகழ்வு 2025-ம் ஆண்டு நடைபெறும்.
    மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே காட்டுச்சேரியில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் வனபத்ரகாளியம்மன் கோவில் பூஜை விழா 20 மற்றும் 21-ந் தேதிகளில் நடைபெற்றன.. பேழை (பெட்டி) ஒன்றில் வைக்கப்பட்டிருக்கும் பத்ரகாளியம்மனை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெட்டியில் இருந்து வெளியே எடுத்து 2 நாட்கள் மட்டும் சிறப்பு பூஜைகளுடன் மக்கள் வழிபாட்டிற்காக வைப்பது வழக்கம்.

    செங்குந்தர் மரபினர் இந்த பூஜை விழாவை நடத்துகின்றனர். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு இந்த விழா நடைபெற்றது. பூஜை விழா இந்த ஆண்டு கடந்த 20-ந்தேதி மற்றும் 21-ந் தேதிகளில் நடைபெற்று இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நிறைவு பெற்றது.

    முன்னதாக கடந்த 19-ந் தேதி நள்ளிரவு அம்மனை பேழையில் இருந்து எழுந்தருள செய்து பழங்கள், இனிப்பு, மலர்கள், வாசனை திரவியங்களுடன், மங்கள வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் சீர்வரிசை ஊர்வலம் நடைபெற்றது.

    20-ந் தேதி அதிகாலை மகாதீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து 21-ந் தேதி நள்ளிரவு வரை பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    அதன் பின்னர் தொடங்கிய சிறப்பு பூஜையுடன், அம்மனை மீண்டும் பேழையில் வைக்கும் நிகழ்ச்சி நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை செங்குந்தர் மரபினர் மற்றும் காட்டுச்சேரி ஊர் பொது மக்கள் செய்திருந்தனர். மீண்டும் பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்யும் நிகழ்வு 2025-ம் ஆண்டு நடைபெறும்.

    தமிழகத்தில் காட்டுச்சேரி உள்பட 7 இடங்களில் மட்டுமே இதுபோன்று, காளியம்மனுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பூஜை விழா வழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருக்களாச்சேரி, காட்டுச்சேரி, திருபட்டினம் (காரைக்கால் மாவட்டம்), குடவாசல், வலங்கைமான், தஞ்சாவூர் அருகே மாரியம்மன்கோவில், வாழ்மங்கலம் ஆகிய 7 இடங்களில் இத்தகைய காளியம்மன் பூஜை நடைபெறுவது சிறப்பம்சம்.
    Next Story
    ×