என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்கின்றனர்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்று முருகனை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். நெல்லை-தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடந்த ஒரு மாதமாக முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.

    இந்த பக்தர்கள் தங்கள் ஊரில் இருந்து குழுவாக திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். தங்கள் ஊரில் இருந்து முருகன் படத்தை சப்பரத்தில் அலங்காரம் செய்து லோடு ஆட்டோ, மினி லாரி உள்ளிட்ட வாகனங்களில் வைத்துக் கொண்டு வருகின்றனர். மேலும் சில பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஆடிப்பாடி செல்கின்றனர். நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த சுடலை உள்ளிட்ட 3 பேர் நெல்லை தாமிரபரணி ஆற்றில் உள்ள ஒத்தப்பனை சுடலை மாடசாமி கோவிலில் வைத்து 6 அடி நீளத்துக்கு வேல் குத்தி திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்றனர்.

    நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் முருக பக்தர்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள். சில பக்தர்கள் 15 அடி நீளமுள்ள வேல் குத்தி சென்றனர்.

    நெல்லை மாநகரத்தில் உள்ள சாலைகளில் எங்கு பார்த்தாலும் முருக பக்தர்கள் கூட்டத்தை பார்க்கவும், பக்தி கோஷத்தை கேட்கவும் முடிகிறது.

    நெல்லை சந்திப்பு மேம்பாலத்தை கடந்து செல்லும் பக்தர்கள் சாலை குமாரசாமி கோவில் இருக்கும் பகுதியில் சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து செல்கிறார்கள்.

    நெல்லை வழியாக செல்லும் முருக பக்தர்கள் நெல்லை தாமிரபரணி ஆற்றில் காலையிலும், மாலையிலும் புனித நீராடினார்கள். இதனால் தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மதிய நேரங்களில் இந்த பக்தர்கள் கலெக்டர் அலுவலக வெளிப்பகுதியில் தங்கி சமையல் செய்து சாப்பிட்டு செல்கிறார்கள். இதனால் கலெக்டர் அலுவலகம் உள்ள பகுதி முழுவதும் முருக பக்தர்களாக காட்சி அளிக்கின்றனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 5-30மணிக்கு நடக்கிறது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் நிறைபுத்தரிசி பூஜை வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் நெற்பயிர்கள் செழித்தோங்கி அறுவடை அதிகரித்து நாடு செழிப்படைய வேண்டும் என்பதற்காக இந்த நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டு தை மாத நிறைபுத்தரிசி பூஜை நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 5-30மணிக்கு நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலில் கொண்டுவந்து வைக்கப்படும்.

    அங்கு நெற்கதிர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அதன் பிறகு அந்த நெல்மணிகள் மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. அதன் பிறகு அந்த நெல்மணிகளை பகவதியம்மன் முன் மூலஸ்தான மண்டபத்தில் படைத்து சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

    அதன்பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படுகிறது. பின்னர் நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த நெற்கதிர்களை தங்கள் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் வைத்தால் இல்லத்தில் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பதும் விளைநிலங்களில் தூவினால் ஆண்டு முழுவதும் பயிர்கள் செழித்து வளரும் என்பதும் ஐதீகம் ஆகும்.

    நிறைபுத்தரிசி பூஜையையொட்டி பகவதி அம்மனுக்கு தங்க கவசம், வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் சிவ குற்றாலம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அழகேசன், சதாசிவம், ஜெயச்சந்திரன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவ ராமச்சந்திரன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார், கோவில் பொருளாளர் ரமேஷ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புதிய கொடிமரம் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், 13 மலைநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு சுமார் 416 ஆண்டுகள் ஆகிறது.

    எனவே, கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பல்வேறு கட்டங்களாக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருப்பணிகள் முழுவதும் முடித்து கும்பாபிஷேகம் நடத்த முயற்சிகள் நடந்து வருகிறது.

    இதற்காக புதிய கொடிமரம் கொண்டு வரப்பட்டு தயார் செய்யப்பட்டு வந்தது. முதல் கட்டமாக புதிய கொடிமரம் நாட்டு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடைதிறப்பு, காலை 6 மணி சத்சங்க நாமம், 7 மணிக்கு கொடிமர சடங்குகள், 9.30 மணிக்கு கொடி மரம் நாட்டப்பட்டது. தொடர்ந்து கொடிமர சடங்குகள், ராமநாம பிரார்த்தனை ஆகியவை நடந்தது. மாலை 6.30 மணிக்கு ஆதிகேசவ பெருமாளுக்கு கும்பாபிஷேகம் விரைவில் நடக்க வேண்டி தொடர்ந்து 41 நாட்கள் நடந்த ராமநாம ஜெப வேள்வி நிறைவு பெறும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழுத்தலைவர் சிவ குற்றாலம், உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நகை சரிபார்க்கும் அதிகாரி சங்கர், கொடிமரம் அன்பளிப்பாக வழங்கிய ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தை சேர்ந்த சாமி, திருக்கோவில் தந்திரி சங்கர நாராயண குரு, கண்காணிப்பாளர் ஆனந்தன், கோவில் மேலாளர் மோகன் குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பிராம்மி தேவியை வழிபட்டு பலன் அடைந்த தாந்திரீகர்கள் கூறிய ஒரு பரிகாரத்தை பின்பற்றுவதால், நாமும் நம் தலைவிதியும் மாறுவதோடு வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைக்கப் பெறலாம்.
    மனிதனாக பிறந்த அனைவரது வாழ்விலும் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான பிரச்சனை இருக்கும். குறிப்பாக ஒரு சிலர் தாங்கள் பிறந்த நாள் முதல் தற்போதைய தினம் வரை, வாழ்கியல் சந்தோசம் என்பதையே இழந்து, அதே சமயம் பல்வேறு வகையான கஷ்டங்களை அனுபவித்து வருபவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் தங்களுடைய துன்பங்கள் நீங்க பல்வேறு ஆலயங்களுக்கு சென்று வழிபடுவார்கள். இருப்பினும் சில தாந்த்ரீக பரிகாரங்களையும் அதனுடன் சேர்த்து செய்யும்போது கூடிய விரைவில் நல்ல பலன்களை கொடுக்கும்.

    தாந்திரீக வழிபாட்டில் சப்தகன்னியர்கள் வழிபாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வாழ்வில் அனைத்து சுகங்களையும் அருளுகின்ற தெய்வமான பிராம்மி தேவிக்கு பூஜை செய்து தங்களுக்கு தேவையான பலன்களை தாந்த்ரீக முறைகளை பயில்பவர்கள் பெறுகின்றனர். அப்படியே பிராம்மி தேவியை வழிபட்டு பலன் அடைந்த தாந்திரீகர்கள் கூறிய ஒரு பரிகாரத்தை பின்பற்றுவதால், நாமும் நம் தலைவிதியும் மாறுவதோடு வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைக்கப் பெறலாம்.

    உங்கள் வீட்டின் பூஜை அறையில் அம்பாள் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய அளவு தாம்பாளத் தட்டில் மஞ்சள் தூள் கலந்த நீரை ஊற்றி, இரண்டு தீபங்களை ஏற்றி கிழக்குத் திசையை நோக்கி பார்த்தவாறு அந்த தட்டில் வைத்து, சிறிது கற்கண்டுகளை நைவேத்தியமாக வைத்து ஓம் ப்ராம்மியே நமஹ என்கிற மந்திரத்தை 108 முறை ஜபித்து வர வேண்டும்.

    இந்த பரிகார வழிப்பாட்டை தினந்தோறும் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளாக செய்வதால் மட்டுமே எதிர்பார்த்த பலன்களை பெற முடியும்.

    இந்த தாந்த்ரீக பரிகாரங்கள் தினமும் செய்துவர தங்கள் வாழ்வில் சிறிது, சிறிதாக நல்ல படியான மாற்றங்கள் ஏற்படுவதை நீங்களே உணர முடியும்.
    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் பணிவிடை, உச்சிப்படிப்பு, அய்யா வாகனத்தில் பவனி வருதல், அன்னதர்மம் போன்றவை நடந்தது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, தொடர்ந்து பணிவிடை, காலை 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல்லக்கு வாகனத்தில் தேருக்கு எழுந்தருளல் போன்றவை நடந்தன. மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடந்தது.

    அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் வைகுண்டசாமி வீற்றிருக்க காவி உடை தரித்து, தலைப்பாகை அணிந்த அய்யா வழி பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சிக்கு பாலபிரஜாதிபதி அடிகளார் தலைமை தாங்கினார். பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தேர் தலைமை பதி முன்பு இருந்து புறப்பட்டு கீழரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. அங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அய்யாவுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பன்னீர், பூ மற்றும் பழ வகைகளை சுருளாக வைத்து வழிபட்டனர்.

    திருத்தேர் பணிவிடைகளை பையன் செல்ல வடிவு, பையன் நேம்ரிஸ் ஆகியோர் செய்திருந்தனர். தொடர்ந்து அய்யா வைகுண்டசாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் பல மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    மாலையில் தேர் நிலைக்கு வந்தது. இரவு அய்யா வைகுண்டசாமி ரிஷப வாகனத்தில் வீதி வலம் வருதலும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது .

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், தொடர்ந்து கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடைபெறும்.
    கோவையில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
    வடவள்ளி :

    கோவையில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் முருக பெருமானின் 7-வது படைவீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தைப்பூச திருவிழா நடைபெற கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 21-ந் தேதி இரவு வாஸ்துபூஜை மற்றும் 22-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

    இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் 3 மணி முதல் 6 மணிக்குள் சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து சிறிய தேரில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் வீதி உலா வருகிறார். இதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. கொரோனோ பரவல் காரணமாக தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று (புதன்கிழமை) இரவு பாதயாத்திரை வரும் பக்தர்கள், பால்குடம், பால்காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் பக்தர்கள் காலை 7 மணிக்கு மேல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மலைக்கோவிலுக்கு கார் மற்றும் இரண்டு சக்கர வாகன ங்கள் செல்ல அனுமதி இல்லை. இந்த தகவலை கோவில் உதவி ஆணையாளர் (பொறுப்பு) விமலா தெரிவித்துள்ளார்.
    முக்கூடல் அருகே சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழா தேர் பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
    முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியன நடைபெற்றது. தினமும் இரவில் பல்சுவை பட்டிமன்றம், கிராமிய கலைநிகழ்ச்சி போன்றவை நடைபெற்றது.

    9-ம் நாளான நேற்று முன்தினம் மாலை ஆராதனை நடைபெற்றது. இரவில் புனித சின்னப்பரின் தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் தேரின் முன்பாக கும்பிடு சேவை செய்து வழிபட்டனர்.

    10-ம் நாளான நேற்று காலையில் திருவிழா திருப்பலி நடந்தது. தொடர்ந்து புனிதரின் தேர் பவனி நடைபெற்றது. விழாவில் பங்குத்தந்தைகள் அலோசியஸ் அடிகளார், சந்தியாகு அடிகளார், அலெக்ஸ் அடிகளார், செல்வராஜ் அடிகளார், சுதர்சன அடிகளார், ஊர் தலைவர் பிரகாசம், செயலாளர் ஆர்.எஸ்.வில்சன், பொருளாளர் செபஸ்தியான், துணை தலைவர் ஆரோக்கியம், கணக்கர் சார்லஸ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் இரவில் கொடியிறக்கம் நடைபெற்றது. தொடர்ந்து நகைச்சுைவ பட்டிமன்றம், மின்னொளி கபடி போட்டி நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை சிங்கம்பாறை இறைமக்கள் செய்து உள்ளனர்.
    சுரண்டை புனித அந்தோணியார் தேர்பவனி அனைத்து தெருக்களிலும் பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    சுரண்டை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலை ஜெபமாலை, திருவிழா திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. மறை மாவட்டத்தை சேர்ந்த பங்குதந்தைகள் தினமும் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கினர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் மாலை நடந்தது. தேரில் புனித அந்தோணியார் எழுந்தருளி அனைத்து தெருக்களிலும் பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் தேர் பவனியை தொடங்கி வைத்தார். மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்குதந்தை லாரன்ஸ் தலைமையில் அருட்சகோதரிகள், ஊர் பொறுப்பாளர்கள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.
    வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை தைப்பூச விழா நடைபெற உள்ளது. வருகிற 29-ந்தேதி 5 சுவாமிகள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    திருச்சியை அடுத்த குமார வயலூரில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. மிகவும் பழமையான இக்கோவிலில் தைப்பூசப் பெருவிழா நாளை (வியாழக்கிழமை) சிறப்பாக நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அர்ச்சனைகள் நடைபெறும்.

    பகல் 12 மணியளவில் அபிஷேக ஆராதனை நடைபெறும். 1 மணிக்கு கோவிலில் இருந்து உற்சவர் முத்துகுமாரசுவாமி புறப்பட்டு உய்யகொண்டான் ஆற்றில் தீர்த்தவாரி கண்டருள்வார். அதன் பின்னர் அதவத்தூர் ஆற்றங்கரையில் அமைந்துள்ள மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8.30 மணி அளவில் சுவாமிக்கு சர்வ அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெறும்.

    இரவு 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு வயலூர் வழியாக வரகாந்திடலை இரவு 10 மணிக்கு அடைகிறார். அங்கு மண்டகப்படி பெற்று கீழ வயலூர் தைப்பூச மண்டபத்திற்கு இரவு 11 மணிக்கு வந்தடைகிறார். அங்கு மகா தீபாராதனை நடைபெற்று நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு வடகாபுத்தூர் கிராமம் வந்தடைகிறார்.

    29-ம் தேதி காலை 8.30 மணிக்கு வடகாபுத்தூரில் இருந்து புறப்பட்டு உய்யகொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் சுவாமி, அல்லித்துறை பார்வதீஸ்வரர் சுவாமி, சோழங்கநல்லூர் காசி விஸ்வநாத சுவாமி, சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சந்திப்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பிறகு சோமரசம்பேட்டை நான்கு வீதிகளில் 5 சுவாமிகளும் வலம் வந்து சோமரசம்பேட்டையில் உள்ள தைப்பூச மண்டபத்தில் பகல் 12 மணிக்கு எழுந்தருள்வார்கள்.

    அங்கு அனைத்து சுவாமிகளும் தங்கி இரவு 7 மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். இரவு 7.15 மணிக்கு மேல் தத்தமது திருக்கோவில்களுக்கு சுவாமிகள் புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும்.

    தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் வருவதற்காக திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வயலூர் முருகன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கோவில் செயல் அதிகாரி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) காலை நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்தரவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விழாவின் 4-ம் நாளான 22-ந்தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7-ம் நாளான நேற்று திருச்சிவிகையில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் உள்திருவீதிகளில் வலம் வந்து ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதியை வந்தடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளினார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணியளவில் நம்பெருமாள் கண்ணாடிஅறை சென்றடைந்தார். காலை 7.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு உத்தரவீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு உத்தரவீதிகளில் வலம் வந்து நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) காலை நடைபெறுகிறது. அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு 4.30 மணிக்கு வருகிறார். காலை 4.45 மணிமுதல் காலை 5.15 மணிவரை ரதரோஹணம் (தனுர்லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்தர வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது. 28-ந்தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 29-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். அத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் அசோக்குமார் (கூடுதல் பொறுப்பு) மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி பீர் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. கந்தூரி விழா நிறைவு நாளான கொடி இறக்கும் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
    நாகையை அடுத்த நாகூரில் பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 21-ந் தேதி வாணவேடிக்கை நிகழ்ச்சியும், 22-ந் தேதி பீர் அமர வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் கடந்த 23-ந்தேதியும், நேற்று முன்தினம் ஆண்டவர் சமாதியில் சந்தன பூசும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    3 நாட்கள் விரதம் இருந்த பீர் நேற்று மாலை கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு தர்காவில், 3 ஆண்டவர் சமாதி முன்பு, செய்யது பள்ளிவாசல், பீரோடும் தெருவில் உள்ள விளக்கு தூண் முன்பு பாத்திஹா ஓதப்பட்டது.

    பின்னர், சில்லடி தர்கா அருகில் சென்று பீர் விரதத்தை முடிந்து கொண்டார். அங்கியிருந்து கடற்கரைக்கு சென்ற பீர், எலுமிச்சை பழத்தை கடலை நோக்கி வீசினார். அதை அங்கு கூடி இருந்த திரளானோர் ஆர்வத்தோடு எடுத்துச் சென்றனர். கந்தூரி விழா நிறைவு நாளான கொடி இறக்கும் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வருஷாபிஷேக விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 5½ ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.22 கோடி செலவில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் மூலவராக வெங்கடாசலபதியும், வலதுபுறம் ஸ்ரீதேவியும், இடது புறம் பூதேவியும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள்.

    இந்த கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    கும்பாபிஷேகம் நடந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து வருஷாபிஷேக விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவை, 9 மணிக்கு புண்ணி யாகவாசனம், 10 மணிக்கு சத்த கலச பூஜை ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு திருமஞ்சனம் சாத்துதலும், 11 மணிக்கு யாகசாலைபூஜையும், மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. இந்த பூஜைகளை பாலாஜி அர்ச்சகர் தலைமையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர்கள் நடத்துகிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி, செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய தலைவர் சேகர் ரெட்டி, துணைத் தலைவர் ஆனந்தகுமார் ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர் மோகன் ராவ், கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான உதவி செயல் அலுவலர் மோகன், ஆய்வாளர் சாய் கிருஷ்ணா ஆகியோர் செய்துள்ளனர்.
    ×