search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புதிய கொடிமரம் நாட்டும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.
    X
    ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புதிய கொடிமரம் நாட்டும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புதிய கொடிமரம் நாட்டு விழா

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புதிய கொடிமரம் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், 13 மலைநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு சுமார் 416 ஆண்டுகள் ஆகிறது.

    எனவே, கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பல்வேறு கட்டங்களாக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருப்பணிகள் முழுவதும் முடித்து கும்பாபிஷேகம் நடத்த முயற்சிகள் நடந்து வருகிறது.

    இதற்காக புதிய கொடிமரம் கொண்டு வரப்பட்டு தயார் செய்யப்பட்டு வந்தது. முதல் கட்டமாக புதிய கொடிமரம் நாட்டு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடைதிறப்பு, காலை 6 மணி சத்சங்க நாமம், 7 மணிக்கு கொடிமர சடங்குகள், 9.30 மணிக்கு கொடி மரம் நாட்டப்பட்டது. தொடர்ந்து கொடிமர சடங்குகள், ராமநாம பிரார்த்தனை ஆகியவை நடந்தது. மாலை 6.30 மணிக்கு ஆதிகேசவ பெருமாளுக்கு கும்பாபிஷேகம் விரைவில் நடக்க வேண்டி தொடர்ந்து 41 நாட்கள் நடந்த ராமநாம ஜெப வேள்வி நிறைவு பெறும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழுத்தலைவர் சிவ குற்றாலம், உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நகை சரிபார்க்கும் அதிகாரி சங்கர், கொடிமரம் அன்பளிப்பாக வழங்கிய ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தை சேர்ந்த சாமி, திருக்கோவில் தந்திரி சங்கர நாராயண குரு, கண்காணிப்பாளர் ஆனந்தன், கோவில் மேலாளர் மோகன் குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×