என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    தைப்பூச திருவிழாவையொட்டி வடலூர் சத்திய ஞானசபையில் இன்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கடலூர் :

    வடலூரில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சத்தியஞான சபையில் இன்று(வியாழக்கிழமை) ஜோதி தரிசனம் நடக்கிறது. இதற்காக அங்கு பக்தர்கள் குவிந்துள்ளனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் சத்திய ஞானசபையில் இன்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஞானசபையில் நிலை கண்ணாடிக்கு முன்பு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம், வெள்ளை, கலப்பு வண்ண திரை என்று 7 வண்ண திரைகள் உள்ளன. அந்த திரைகள் ஒவ்வொன்றாக விலக்கி நிலை கண்ணாடிக்குள் இருக்கும் ஜோதியை காண்பதே ஜோதி தரிசனமாகும்.

    அதன்படி காலை 6 மணிக்கு நடந்த முதல் ஜோதி தரிசனத்தை காண, சத்திய ஞானசபையின் முன்பு ஆயிரகணக்கான பக்தர்கள் திரண்டனர். பின்னர் நிலை கண்ணாடி முன் காணப்பட்ட 7 திரைகளும் ஒவ்வொன்றாக விலக்கப்பட்டது. அப்போது நிலை கண்ணாடிக்கு பின் வள்ளலார் கரத்தால் ஏற்றி வைத்த தீபம் பிரகாசமாக காட்சி அளித்தது.

    இதை பார்த்த அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ என்ற மகா மந்திரத்தை உச்சரித்து ஜோதியை தரிசனம் செய்தனர்.கொரோனா ஊரடங்கு விதிமுறையின் காரணமாக அன்னாதானம் வழங்கவும் கடைகள் மற்றும் ராட்டினம் அமைக்கவும் என எதற்கும் அனுமதி இல்லை. மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்களின் வருகை என்பது குறைவாகவே காணப்பட்டது.

    தொடர்ந்து காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி மற்றும் நாளை காலை 5.30 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

    தைப்பூசமான இன்று முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் முத்துக்குமார சுவாமி-தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அருள்பாலிக்கின்றனர்.
     
    இங்கு நடைபெறும் அனைத்து விழாக்களிலும் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை மட்டுமே வீதி உலா வருவ வழக்கம். ஆனால் தைப்பூச திருநாள் அன்று மட்டும் முத்துக்குமார சுவாமி-தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை ஆகியோர் சிம்மாசனத்தில் அமர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.

    இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரியும், 10மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சாயரட்டை தீபாராதனையும் நடக்கிறது.

    தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுவாமி அலைவாய் உகந்த பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி கோவில் உள் பிரகாரத்தில் நாளை நடக்கிறது. விழாவில் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்த வண்ணம் உள்ளனர்.

    பழனிமலை முருகன் கோவிலிலும் தைப்பூச திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து நாளை மாலை 4.20 மணிக்கு தைப்பூச திருவிழாவின் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.

    முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே 25 ஆயிரம் பக்தர்களும் முன்பதிவு செய்தனர். முன்பதிவு செய்யாத மற்றும் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. அவர்கள் தரிசனம் மட்டுமே செய்து விட்டு உடனடியாக கிளம்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கோவிலில் தங்குவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

    கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலை சுவாமி நாதர் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று  காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடந்து. 5-ம் படைவீடான இங்கு தைப்பூச திருவிழாவை காண பக்தர்கள் குவியத்தொடங்கி உள்ளனர்.

    6-வது படை வீடான அழகர் கோவில் மலையில் உள்ள பழமுதிர்ச்சோலை எனப்படும் சோலைமலை முருகன் கோவிலும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    ஆசைகள் அனைத்தும் நிறைவேற, தைப்பூசமான இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட வேண்டும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.
    தை பிறந்துவிட்டால், அந்த மாதத்தில் வரும் பூசம் நட்சத்திரம் நம் நினைவுக்கு வரும். ஆசைகள் அனைத்தும் நிறைவேற, தைப்பூசத்தன்று முருகப்பெருமானை வழிபட வேண்டும். அந்தத் திருநாள் 28.1.2021 (வியாழக்கிழமை) வருகின்றது. அன்றைய தினம் ஒவ்வொருவரும் படைவீடுகளில் உள்ள முருகனையோ, பக்கத்து ஆலயத்தில் உள்ள முருகனையோ வழிபடவேண்டும். மாறாக வீட்டு பூஜையறையில், வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப் பெருமான் படம் வைத்து பஞ்சமுக விளக்கேற்றி பழங்கள், கந்தரப்பம் நைவேத்தியம் படைத்தும் வழிபடலாம்.

    ஆசை இல்லாத மனிதன் இல்லை. ஆனால் அந்த ஆசைகள் நியாயமானதாக இருக்கவேண்டும். பொதுவாக ஒருவர் ‘சுயதொழில் செய்து முன்னுக்கு வரவேண்டும்’ என்று ஆசைப்படுவார். மற்றொருவர் ‘நிறையப் படித்து, பெயருக்குப் பின்னால் ஏராளமான பட்டங்களைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்’ என்று விரும்புவார். இன்னும் சிலரோ ‘ஞான மார்க்கத்தில் சென்று ஆன்மிக உலகத்தில் அடியெடுத்து வைக்கவேண்டும்’ என்று விரும்புவர்.

    இதுபோன்ற ஆசைகளை நிறைவேற்றி வைப்பது தெய்வ வழிபாடுகள்தான்.

    ஜாதகத்தில் பாக்ய ஸ்தானாதிபதி இருக்கும் நிலை அறிந்து, அதன் பலமறிந்து வழிபாடுகளை மேற்கொண்டால் நினைத்தது நிறைவேறும். மேலும் ஒவ்வொரு மாதங்களிலும் சிறப்பு நட்சத்திரங்கள், சிறப்பு திதிகளில் அதற்குரிய தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டாலும் எதிர்பார்த்த நற்பலன்களைப் பெற இயலும்.

    அந்த அடிப்படையில் தான் மாதங்கள் தோறும் முருகப்பெருமானுக்குரிய மங்கல நிகழ்ச்சிகள் நடந்தாலும், வைகாசி விசாகமும், தைப்பூசமும், ஐப்பசியில் வரும் கந்த சஷ்டியும், கார்த்திகையில் வரும் திருக்கார்த்திகையும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரமும் முக்கியத்துவம் பெறுகின்றன.

    இவற்றில் தை மாதம் என்பது சூரிய பலத்தோடு இருக்கும் மாதமாகும். தேவர்களின் விழிப்புணர்ச்சி காலம். இந்த மாதத்தில் வரும் பூச நட்சத்திரம் அன்று கந்தப்பெருமானை கைகூப்பி வழிபட்டால், வந்த துயரங்கள் வாசலோடு நிற்கும். சந்ததிகள் தழைக்கும். தனவரவும் திருப்தி தரும்.

    பூசத்தன்று வேலவன் பெயரை உச்சரித்தாலே வெற்றிகள் குவியும். கந்தப் பெருமானை கைகூப்பித் தொழுதால் கவலைகள் அகலும். வேலாயுதனை துதித்தால் வியாபாரம் தழைக்கும். குகனை வணங்கினால் குறைகள் விலகும். ஆறுதல் தரக்கூடிய ஆறு முகத்திற்கும், அருணகிரிநாதப் பெருமான் அழகாக விளக்கம் சொல்கின்றார்.

    ‘சிவனுக்கு ஓங்காரத்தின் பொருளை உரைத்த முகம் ஒன்று, அடியவர்களின் வினை களைத் தீர்க்கின்ற முகம் ஒன்று, சூரனை சம்ஹாரம் செய்வதற்கும், அன்னையிடம் வேல் வாங்குவதற்கும் உரிய முகம் ஒன்று, சூரனை வதைத்த முகம் ஒன்று, வள்ளியை மணந்துகொள்ள வந்த முகம் ஒன்று, தனது வாகனமான மயில் மீது ஏறி நின்று விளையாடும் முகம் ஒன்று.’ இப்படி ஆறுமுகம் பெற்ற அழகனைப் போற்றிக் கொண்டாட உகந்தநாள், தைப்பூசத் திருநாளாகும்.

    முருகப்பெருமானுக்குரிய ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் சென்று வழிபட்டு வந்தால் பகை மாறும். மனம் தெளிவுபெறும். பழனி சென்று வழிபட்டுவந்தால் செல்வ நிலை உயரும். சுவாமிமலை சென்றுவழிபட்டு வந்தால் ஞானம் கைகூடும். திருத்தணிகை சென்று வழிபட்டு வந்தால் கோபம் தணியும். பழமுதிர்சோலை சென்று வழிபட்டு வந்தால் நமது நிலை உயரும். திருப்பரங்குன்றம் சென்று வழிபட்டு வந்தால் திருமணம் கைகூடும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.

    ‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் தைப்பூச திருவிழா முக்கியமான ஒன்றாகும். இந்த திருவிழா நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் தைப்பூச திருவிழா முக்கியமான ஒன்றாகும். இந்த திருவிழா நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் முத்துக்குமார சுவாமி-தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அருள்பாலிக்கின்னறனர்.

    இங்கு நடைபெறும் அனைத்து விழாக்களிலும் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை மட்டுமே வீதி உலா வருவ வழக்கம். ஆனால் தைப்பூச திருநாள் அன்று மட்டும் முத்துக்குமார சுவாமி-தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை ஆகியோர் சிம்மாசனத்தில் அமர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.

    இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக நகர வீதிகளுக்கு சுவாமிகள் உலா வருவது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக முத்துக்குமார சுவாமி-தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை ஆகியோர் சிம்மாசனத்தில் எழுந்தருளி கோவிலின் திருவாச்சி மண்டபத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாளை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரியும், 10மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சாயரட்டை தீபாராதனையும் நடக்கிறது.

    தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுவாமி அலைவாய் உகந்த பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி கோவில் உள் பிரகாரத்தில் நாளை நடக்கிறது. விழாவில் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கி உள்ளது.

    பழனிமலை முருகன் கோவிலிலும் தைப்பூச திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று மாலை 7.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி,தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அதன்பின்னர் வெள்ளித்தேரோட்டம் நடக்கிறது. சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்களும் நடந்து வருகிறது.

    தொடர்ந்து நாளை மாலை 4.20 மணிக்கு தைப்பூச திருவிழாவின் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இதற்காக பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பல்வேறு வாகனங்களில் சுவாமி படத்தை அலங்கரித்து வைத்துக்கொண்டு பாதயாத்திரை சென்று வருகிறார்கள்.

    இதனையொட்டி கோவிலில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேரோட்டத்தில் பங்கேற்க 25 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் ஏற்கனவே முன்பதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே 25 ஆயிரம் பக்தர்களும் முன்பதிவு செய்தனர். முன்பதிவு செய்யாத மற்றும் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. அவர்கள் தரிசனம் மட்டுமே செய்து விட்டு உடனடியாக கிளம்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கோவிலில் தங்குவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

    கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலை சுவாமி நாதர் கோவிலில் தைப்பூச திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். நாளை விழாவை யொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 9 மணிக்கு சுவாமி-அம்பாள் கோவில் உள்பிரகாரத்தில் புறப்பாடு நடந்தது.

    இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர். இந்த கோவில் அறுபடை வீடுகளில் 4-வது வீடு என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடந்து. 5-ம் படைவீடான இங்கு தைப்பூச திருவிழாவை காண பக்தர்கள் குவியத்தொடங்கி உள்ளனர்.

    6-வது படை வீடான அழகர் கோவில் மலையில் உள்ள பழமுதிர்ச்சோலை எனப்படும் சோலைமலை முருகன் கோவிலும் தைப்பூச திருவிழா விமரிசையாக கொண் டாடப்படுவது வழக்கம். கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில், இன்று காலை தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.

    நாளை தீர்த்தவாரி மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. இங்கும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தை தெப்ப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தெப்ப உற்சவம் இன்று (புதன்கிழமை) மாலை நடைபெகிறது.
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தை தெப்ப திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெப்ப உற்சவத்தையொட்டி தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவின் 10-ம் நாளான நேற்று காலை சுவாமி கேடயத்திலும், அம்மன் வெள்ளிமஞ்சத்திலும் 3-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்தனர்.

    இரவு உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர் யாளி வாகனத்திலும், அகிலாண்டேஸ்வரி புலி வாகனத்திலும் 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். முக்கிய நிகழ்ச்சியான தைத்தெப்ப உற்சவம் இன்று (புதன்கிழமை) மாலை நடைபெகிறது. இதையொட்டி உற்சவர் சன்னதியிலிருந்து மாலை 5 மணிக்கு உற்சவர் ஜம்புகேஸ்வரர், பிரியாவிடை அம்மன், அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆகியோர் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி மாலை 7.30 மணிக்கு திருவானைக்காவல் டிரங்க் ரோடு அருகே உள்ள ராமதீர்த்த குளத்திற்கு வருகின்றனர்.

    அங்கு தெப்பத்தில் ஜம்புகேஸ்வரர், பிரியாவிடை அம்மன், அகிலாண்டேஸ்வரி அம்மன் எழுந்தருளி 3 முறை சுற்றி வந்து தெப்ப உற்சவம் கண்டருளுவர். பின்னர் சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெறும். அங்கிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளியவாறு 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து கோவிலை சென்றடைவர். தைத்தெப்ப உற்சவத்தின் நிறைவு நாளான நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி ஆகியோர் வீதியுலா வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயன்சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் நிறைபுத்தரிசி பூஜை வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான நிறைபுத்தரிசி பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்களை அறுவடை செய்து சன்னதி தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் அதிகாலை 5.30 மணிக்கு ஊர்வலமாக கொண்டு வந்து தாணுமாலயசாமி சன்னதியில் வைப்பார்கள். பின்னர், தாணுமாலயசாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படும்.

    அதைதொடர்ந்து அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கப்படும். பக்தர்கள் அந்த நெற்கதிர்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்வார்கள். அவ்வாறு நெற்கதிர்களை கொண்டு சென்றால் நெற்கதிர்கள் செழித்து வளர்வது போன்று தங்கள் வாழ்வும், செழிப்படையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    இதேபோல், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நாளை நிறைபுத்தரிசி பூஜை நடக்கிறது.

    நாளை நடைபெறும் தைப்பூச விழாவையொட்டி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் காலை மற்றும் மாலை வேளைகளில் ரிஷப வாகனத்தில் தாணுமாலயசாமி, கருட வாகனத்தில் திருவேங்கட விண்ணவரம் பெருமாள், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மன் ஆகிய மூவரும் நான்கு ரத வீதிகளில் வாகன பவனியாக வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    வடலூர் வள்ளலார் ஞானசபையில் தைபூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் தடைசெய்யப்பட்டுள்ளது.
    வடலூர் :

    கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு தைபூச திருவிழாவையொட்டி வடலூர் வள்ளலார் ஞானசபையில் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவு நடைபெறுகிறது.

    நாளை (28-ந்தேதி) தைப்பூச திருவிழாவையொட்டி காலை 6 மணி 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 , மணி 10 மணி, மறுநாள் காலை 5.30 ஆகிய 6 காலங்களில் 7 திரைநீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

    இதனை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள், லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரளுவது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் வடலூ ருக்கு சிறப்பு பஸ் மற்றும் ரெயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தைப்பூசத்தன்றுகாலை 10 மணிக்கு தருமச்சாலை மேடையில் சிறப்பு நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் சந்திர சேகர் சாகமூரி முன்னிலையிலும், தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தலைமையிலும் நடைபெறுகிறது.

    இதில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ. க்கள், மாவட்ட அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். தைப்பூச விழாவிற்கு பின்னர் ஒருநாள் இடைவெளி விட்டு (30-ந் தேதி) பகல் 12 மணி முதல் மாலை 6 மணிவரை மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்திப்பெற்ற திருஅறைதரிசனம் நடைபெறுகிறது.

    முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திரு அறையில் உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும்.

    அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும் தைப்பூச திருவிழா வையொட்டி பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களும், சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

    ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் இந்த ஆண்டு அந்த கலை நிகழ்ச்சிகள் தடைசெய்யப்பட்டுள்ளது. தைப்பூச விழாவை யொட்டி வடலூர் பகுதிகளில் ஏராளமான கடைகள் அமைக்கப்படும். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கடைகள் அமைக்கப்படவில்லை.
    பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா பந்தல்கால் நாட்டுவிழா தைப்பூச நாளான நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது
    பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் மாதம் 9-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதற்கான பந்தல்கால் நாட்டுவிழா தைப்பூச நாளான நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    நாளை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5.30 மணிக்கு அபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷபூஜை, 9.30 மணிக்கு நிறை புத்தரிசி பூஜை, தொடர்ந்து பந்தல்கால் நாட்டுவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    மேலும், நாளை ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடக்கும் இந்து சமய மாநாட்டிற்கான பந்தல்கால் நாட்டு விழாவும் நடக்கிறது.
    வியாழக்கிழமைகளில், தட்சிணாமூர்த்தி அஷ்டகம் சொல்லிப் பாராயணம் செய்து, ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து, சுண்டல் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள்.
    வியாழக்கிழமையை குருவாரம் என்பார்கள். குருவாரம் என்று சொல்லப்படுகிற வியாழக்கிழமை, குரு பிரம்மாவையும் சிவ சொரூபமாகத் திகழும் ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் மகான்களையும் சித்தர் பெருமக்களையும் வணங்கி வழிபடுங்கள். வளமும் நலமும் தந்தருளும் பிரார்த்தனைகள் இவை என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    சிவாலயங்களில், சிவ கோஷ்டத்தில், ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு சந்நிதி அமைந்திருக்கும். தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தி என்று போற்றுகிறார்கள். தெற்குப் பார்த்த நிலையில் வீற்றிருக்கும் தெய்வங்கள், பொதுவாகவே ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளுவார்கள் என்பது ஐதீகம். இன்னல்களையெல்லாம் தீர்த்து வைப்பார்கள். இம்மையில் எல்லா நிம்மதிகளையும் சந்தோஷங்களையும் அருளுவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    வியாழக்கிழமைகளில், தட்சிணாமூர்த்தி அஷ்டகம் சொல்லிப் பாராயணம் செய்து, ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து, சுண்டல் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள்.

    ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகம் :

    அகணித குணகணமப்ரமே மாத்யம்
    ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்!
    உபரத மனோ யோகி ஹ்ருன் மந்திரம் தம்
    ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
    என்று சொல்லி வணங்கிவிட்டு தொடர்ந்து சொல்லுங்கள்.

    நிரவதி ஸுக மிஷ்ட தாதாரமிட்யம்
    நதஜன மனஸ்தாப பேதைக தக்ஷம்
    பவ விபின தவாக்னி நாமதேயம்
    ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

    த்ரிபுவனகுரும் ஆகமைக ப்ரமாணம்
    த்ரிஜகத் காரண ஸூத்ர யோக மாயம்
    ரவிசத பாஸ்வர மீஹீத ப்ரதானம்
    ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

    அவிரத பவ பாவனாதி தூரம்
    பத பத்மத்வய பாவிணாம் அதூரம்
    பவ ஜலதி ஸுதாரணாங்கிரி போதம்
    ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

    க்ருத நிலய மனிசம் வடாகமூலே
    நிகம சிகாப்ராத போதிதைக ரூபம்
    த்ருத முத்ராங்குஸி கம்ய சாருரூபம்
    ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

    த்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்
    பத பத்மானத மோக்ஷதான தக்ஷம்
    க்ருத குருகுலவாஸ யோகி மித்ரம்
    ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

    யதிவரஹ்ருதயே ஸதாவிபாந்தம்
    ரதிபதி சதகோடி ஸுந்தராங்க மாத்யம்!
    பரஹித நிரதரத்மனாம் ஸுஸேவ்யம்
    ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

    ஸ்மித தவள விகாஸிதான னாப்ஜம்
    ஸ்ருதி ஸுலபம் வ்ருஷபாதிருட காத்ரம்
    ஸித ஜலஜ ஸுசோப தேணா காந்திரம்!
    ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

    வ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்
    குருவர தேவ ஸந்திதௌ படேத்ய:
    ஸகல துரித துக்க வர்க்க ஹசனிம்
    வ்ரஜதி சிதம் ஞானவான் சம்புலோகம்!

    இந்த அஷ்டகத்தைச் சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள். கஷ்டமெல்லாம் தீர்த்தருள்வார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்ப திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று நடந்த தெப்பம் முட்டுத்தள்ளும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சாமி, அம்மனை தரிசனம் செய்தனர்.
    உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது சிறப்பு. அதில் முக்கிய திருவிழாவாக சித்திரை திருவிழா, ஆடி முளைக்கொட்டு, ஆவணி மூலஉற்சவம், ஐப்பசி திருவிழா, தை தெப்ப திருவிழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்தாண்டுக்கான தை மாத தெப்பத்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பல்வேறு பகுதியில் உள்ள மண்டபங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கி்ன்றனர். 8-ம் நாள் விழாவில் வலைவீசி அருளிய லீலைக்காக டி.பி.மெயின் ரோட்டில் உள்ள மண்டபத்திலும். 9-ம் நாளான நேற்று முன்தினம் சப்தாவர்ண சப்பரத்தில் 4 சித்திரை வீதிகளிலும் வலம் வந்தனர்.

    தெப்ப திருவிழாவுக்காக தெப்பம் கட்டும் பணி நிறைவடைந்தது. எனவே தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி அம்மனும், சாமியும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பாடாகி காமராஜர் சாலை வழியாக முக்தீஸ்வரர் கோவிலில் எழுந்தருளினர். அங்கிருந்து தெப்பக்குள்தை சென்றடைந்து, அங்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் 11-ம் நாளான இன்று (புதன்கிழமை) சிந்தாமணி கிராமத்தில் கதிரறுப்பு திருவிழா நடைபெற உள்ளது.

    இதையொட்டி அம்மனும், சாமியும் தங்க பல்லக்கில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பட்டு, அம்மன் சன்னதி, கீழமாசி வீதி, காமராஜர் சாலை, கீழவெளிவீதி, சிந்தாமணி ரோடு வழியாக கதிரறுப்பு மண்டபத்தை சென்று அடைவர். அங்கு 9.35 மணிக்கு மேல் தெப்பம் தலை முகூர்த்தம் விழா நடைபெறும்.

    விழாவில் முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடக்க உள்ளது. இதையொட்டி மீனாட்சி அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும், சுந்தரேசுவரர் வெள்ளி சிம்மாசனத்திலும் எழுந்தருளி நாளை காலை 5 மணிக்கு மேல் கோவிலில் இருந்து புறப்பட்டு, தெப்பக்குளம் சென்றடைவர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமியும், அம்மனும் எழுந்தருளி காலை 2 முறையும், இரவு ஒரு முறையும் தெப்பத்தில் தெப்பக்குளத்தை வலம் வருவர்.

    மேலும் எந்தாண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு தெப்பக்குளத்தில் அதிகமான அளவு தண்ணீர் நிரம்பி அழகுற காட்சி அளிக்கிறது. மேலும் பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில் சாமியும், அம்மனும் தெப்பத்தில் வலம் வரும் காட்சி மிகவும் சிறப்பாக இருக்கும். எனவே தெப்பத்திருவிழாவை காண பக்தர்கள் ஆவலோடு உள்ளனர்.

    ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    சென்னைவாசிகளுக்கு எத்தனையோ அம்மன் ஆலயங்கள் இருந்தாலும் பவுர்ணமி தினத்தன்று ஒரே நாளில் வழிபட வேண்டிய மூன்று அம்மன் ஆலயங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும்.
    சென்னைவாசிகளுக்கு எத்தனையோ அம்மன் ஆலயங்கள் இருந்தாலும் பவுர்ணமி தினத்தன்று ஒரே நாளில் வழிபட வேண்டிய மூன்று அம்மன் ஆலயங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும்.

    திருவுடையம்மன், வடிவுடையம்மன், கொடியிடையம்மன் ஆகியோரே அந்த மூன்று அம்மன்கள் ஆவார்கள். திருவுடையம்மன் ஆலயம் மீஞ்சூர் அருகே மேலூர் எனும் ஊரில் இருக்கிறது. வடிவுடையம்மன் திருவெற்றியூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். கொடியிடையம்மன் திருமுல்லைவாயலில் ஆலயம் கொண்டு இருக்கிறாள்.

    சென்னையை சுற்றி இந்த மூன்று அம்மன்களும் முக்கோண புள்ளிப்போல அமைந்து இருக்கிறார்கள். பொதுவாக சக்தியின் வடிவத்தை இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று சொல்வார்கள். அந்த வகையில் திருவுடையம்மன் இச்சா சக்தியாகவும், வடிவுடையம்மன் ஞான சக்தியாகவும், கொடியிடையம்மன் கிரியா சக்தியாகவும் திகழ்கிறார்கள். இந்த மூன்று அம்மன்களும் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது.

    இவர்களை ஒரே நாளில் வழிபட வேண்டும். அதுவும் காலையில் திருவுடையம்மனையும், மதியம் வடிவுடையம்மனையும், மாலையில் கொடியிடையம்மனையும் வழிபட வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். இந்த மூன்று அம்மன்களையும் வழிபட்டால் நீங்கள் விரும்பும் அனைத்து பலன்களையும் பெற முடியும்.
    இந்த மூன்று அம்மன் விக்கிரகங்களும் ஒரே சிற்பியால் செய்யப்பட்ட சிறப்புக்குரியவர்கள். அதன் பின்னணியில்தான் இந்த மூன்று அம்மன்களையும் பவுர்ணமி தினத்தன்று ஒரே நாளில் வழிபட வேண்டும் என்ற ஐதீகம் அடங்கி உள்ளது. இந்த ஐதீகத்துக்கு தொடர்புடைய அந்த வரலாறு வருமாறு:-

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மீஞ்சூர் அருகில் உள்ள மேலூர் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. அந்தப் பகுதியில் ஒரு சிறிய கிராமம் உருவானது. அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரு செல்வந்தரின் பசு அப்பகுதியில் சுகந்தவனம் என்ற அடர்ந்த காட்டின் உள்ளே சென்று ஒரு மேட்டுப்பகுதியில் பசு தானே பால் சொரிவதையும், பாம்பு ஒன்று பாலை அருந்துவதையும் அபூர்வ காட்சியாகக் கண்டு மெய்சிலிர்த்தனர்.

    அந்த முட்புதரை விலக்கிப் பார்த்தபோது புற்றானது சிவலிங்க வடிவமாக இருந்தது. சிவபெருமான் புற்றுவடிவில் அங்கு வாசம் செய்ததால் ஊர்மக்கள் அவ்விடத்தில் கோவில் கட்டினார்கள். அந்தச் சுயம்பு லிங்கத்துக்கு திருமணங்கீஸ்வரர் எனப் பெயர் சூட்டி வழிபட்டு வந்தார்கள்.

    சோழநாட்டினை ஆண்டு வந்த விக்கிரம சோழ மன்னன் ஒரு தடவை வடநாடு மீது போர் தொடுத்து, வெற்றி பெற்று சுகந்தவனம் வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தான். காலை பூஜைக்காக விசாரித்த மன்னன் சுகந்தீஸ்வரர் (திருமணங்கீஸ்வரரர்) வரலாற்றை அறிந்து, இத்திருக்கோவில் சிவனை வழிபட்டபோது, சக்தி (அம்மன்) இல்லாமல் சிவன் மட்டுமே உள்ளதை கண்டான். உடனே மன்னன் சிற்பியை அழைத்து, சிவனுக்கு நிகராக சக்தியை அம்மன் சிலையாக வடித்து பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவிட்டான்.

    அம்மனை வடிக்க தேர்ந்த கல் ஒன்றைக் கொண்டு வர, சிற்பி அலைந்து திரிந்து மலை உச்சியில் கல் ஒன்றைக் கண்டான். அதனை கீழே கொண்டுவரும்போது கைபிடி நழுவி உருண்டு விழுந்ததில் கல் உடைந்து மூன்று பாகங்களாக ஆனது.

    அந்த சிற்பி தான் தவறு செய்து விட்டதாக நினைத்து கையைச் சிதைத்துக் கொள்ள முற்பட்டான் அப்போது அம்மன் தோன்றி - தவறு உன்னிடம் இல்லை. நான் இங்கு மட்டும் இச்சா சக்தியாக தனித்து இல்லாமல், ஞான சக்தியாக வடிவுடையம்மனாக (புற்றீஸ்வரர் தியாகராஜ சுவாமி திருக்கோவில், திருவெற்றியூர்), கிரியாசக்தியாக கொடியிடை அம்மனாக (மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில், திருமுல்லைவாயல்) ஆக முப்பெரும் சக்திகளான இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி வடிவமாக நாம் உருக்கொள்ளவே மூன்று பாகங்கள் ஆனோம். மூவகை உருவையும் வடித்து மேற்படி திருக்கோவில்களில் பிரதிஷ்டை செய்து விடுவாயாக என உத்தரவிட்டு மறைந்தாள். அதன்படி திருப்பணிகள் செய்து, மூன்று அம்மன்களுக்கும் தனி சன்னதிகளாக அமைக்கப்பட்டது.

    முதல் சக்தியான திருவுடையம்மன் நான்கு கர நாயகி, மேலிருகரங்கில் பாச அங்குசம். கீழ்வலக்கரம் அபய முத்திரையாகவும் இடக்கரம் வரஹஸ்தமாகவும் திருக்கோலம் கொண்டு காட்சி தரும் திருமேனியாள் கருணை வடிவே உருவாகி நிற்கிறாள். அம்மனின் அழகிய வதனத்தில் என்றும் வாடாத புன்னகை. அன்னையின் ஒரு கரம் ‘என்னைச் சரணடை’ என்பது போல காட்டுகிறது.

    ஆறு வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ திருவுடையம்மனை வணங்கி வருபவர்களுக்கு திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். புத்திர பாக்கியம் இல்லாதோர் ஸ்ரீதிருவுடையம்மனை ஆறுவாரம் அபிஷேகம் செய்து வழிபடுவோருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.

    ஆறு வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீதிருவுடையம்மனை வணங்கும் மாணவ-மாணவிகள் படிப்பிலும், அறிவிலும், சிறந்து வாழ்க்கையில் உயர்வடைவார்கள்.
    கடன், சத்ரு, நோய் போன்றவற்றை தீர்க்கும் சக்தி வாய்ந்தது. முன் ஜென்ம பாவங்களையும் தீர்க்கும் சக்தி திருவுடையம்மன் ஆகும்.

    மேலூர் திருவுடையம்மன் ஆலயம் பற்றி கூடுதல் தகவல்களை ஆலய செயல் அலுவலர் எம்.கிருஷ்ணமூர்த்தியிடம் 99768 49791 என்ற எண்ணிலும், கோவில் பணியாளர் ஏழுமலையை 82487 39713 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    அடுத்து நாம் செல்ல வேண்டிய ஆலயம் திருவெற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் ஆலயம்.

    பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும்,வாசுகி என்ற பாம்பிற்கு அருள் புரிய புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். கிழக்குச் சுற்று வெளிப் பிரகாரத்தின் வலதுபுறம் இறைவி வடிவுடை அம்மன் சந்நிதி அமைந்திருக்கிறது. ஞானசக்தியாக, வடிவுடை நாயகியைத் தொழுவோருக்கு அற்புதமான மணவாழ்க்கை அமையும்.

    பௌர்ணமி நாட்களில் பக்தர் கூட்டம் அலை மோதுவதால் நாள் முழுவதும் நடை திறந்திருக்கிறது. மூன்றாவதாக மாலையில் நாம் செல்ல வேண்டிய ஆலயம் திருமுல்லைவாயலில் உள்ள கொடியிடையம்மன் சமேத மாசிலாமணீஸ்வரர் ஆலயம் ஆகும். திருவொற்றியூரில் இருந்து புறநகர் பகுதியின் வழியாக மிக எளிதாக திருமுல்லைவாயலுக்கு சொல்லலாம்.

    இத்தலத்தில் நந்தி தேவர் திரும்பிய நிலையில் இருக்கிறார். மன்னன் வெற்றியின் சின்னமாக அங்கிருந்த வெள்ளெருக்குத் தூண்களைக் கொண்டு வந்து கோயில் கட்டினான். மன்னன் வாளால் வெட்டிய அடையாளம் தற்போதும் சிவலிங்கத்தில் உள்ளது. எனவே சந்தனக்காப்புடன் இறைவன் காட்சியளிக்கின்றார்.
    இத்தலத்து இறைவி கொடியிடை நாயகி கிரியா சக்தியாக அழைக்கப்படுகிறாள்.

    அசுவினி முதலான் 27 நட்சத்திரங்களும் செய்த பாவம் நீங்க கொடியிடை நாயகியை வணங்கி சாபம் நீங்கிய இடம். இந்திராணி இத்தலத்து அம்மனை வழிபட்டு இந்திரனை மீளப்பெற்ற தலம். பௌர்ணமி நாளில் மேலூரிலுள்ள திருவுடை அம்மனைக் காலையிலும் திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மனை உச்சியிலும், வட திருமுல்லைவாயிலிலுள்ள கொடியிடை அம்மனை மாலையிலும் விரதம் இருந்து வழிபட்டால், காசி - இராமேஸ்வரம் சென்று வந்த பலன் கிடைக்கும்.
    நாளை 15-ந்தேதி பவுர்ணமி தினம் வருகிறது. எனவே மிக அரிதான அன்றைய தின வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள்.

    சகல சக்திகளும் கிடைக்கும்

    இச்சா சக்தி  விருப்பங்களை நிறைவேற்றுபவள், சவுந்தர்யத்தின் இருப்பிடம், லாவண்யமானவள், மனதை சுண்டி இழுத்து அதில் எண்ணற்ற கனவுகளை விதைப்பவள், அமைதிக்கான ஆதாரம், நமக்கு சவுபாக்கியங்களை தருபவள்.

    ஞான சக்தி

    அறிவு தருபவள், சகல வித்தைகளிலும் நமக்கு வெற்றி தருபவள், நமது புத்தியில் உறைபவள், கவிதையாக, காவியமாக, சங்கீதமாக அருள் பாலிப்பவள்.

    கிரியா சக்தி

    வாழ்க்கை வளம்பெற தூண்டிவிடுபவள், துவக்கிவைப்பவள், ஒளிமயமான வாழ்க்கையை நமக்கு அமைத்துக் கொடுப்பவள், செல்வம், செல்வாக்கு தந்து சுகமான வாழ்வருளும் சர்வேஸ்வரி.
    பழனி முருகன் கோவிலில் 10 மாதங்களுக்கு பிறகு, தைப்பூச திருவிழாவையொட்டி தங்கரத புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து தங்கரத புறப்பாடு நடைபெற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பழனி முருகன் கோவிலில், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது தைப்பூச திருவிழா நடைபெற்று வருவதால், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் பழனி முருகன் கோவிலில் அனுமதிக்கப்படுகின்றனர்.

    தைப்பூச திருவிழாவின் 5-ம் நாளில் கோவில் நிர்வாகம் சார்பில் தங்க ரத புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவில் நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் பழனி மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெற்றது.

    முன்னதாக சாயரட்சை பூஜைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளினார். பின்பு அவருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கோவில் உட்பிரகாரத்தில் தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் நடந்த தங்கரத புறப்பாட்டில் கோவில் செயல்அலுவலர் கிராந்திகுமார்பாடி, உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் வடம் பிடித்து தங்க ரதத்தை இழுத்தனர்.

    கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு மார்ச் 24-ந்தேதி முதல் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தைப்பூச திருவிழாவையொட்டி 10 மாதங்களுக்கு (308 நாட்கள்) பிறகு நேற்று தங்கரத புறப்பாடு நடைபெற்றது.

    தைப்பூச திருவிழாவுக்கு பின்னர் தொடர்ந்து தங்கரத புறப்பாடு நடைபெற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×