search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில்
    X
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில்

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை நாளை நடக்கிறது

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயன்சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் நிறைபுத்தரிசி பூஜை வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான நிறைபுத்தரிசி பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்களை அறுவடை செய்து சன்னதி தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் அதிகாலை 5.30 மணிக்கு ஊர்வலமாக கொண்டு வந்து தாணுமாலயசாமி சன்னதியில் வைப்பார்கள். பின்னர், தாணுமாலயசாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படும்.

    அதைதொடர்ந்து அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கப்படும். பக்தர்கள் அந்த நெற்கதிர்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்வார்கள். அவ்வாறு நெற்கதிர்களை கொண்டு சென்றால் நெற்கதிர்கள் செழித்து வளர்வது போன்று தங்கள் வாழ்வும், செழிப்படையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    இதேபோல், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நாளை நிறைபுத்தரிசி பூஜை நடக்கிறது.

    நாளை நடைபெறும் தைப்பூச விழாவையொட்டி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் காலை மற்றும் மாலை வேளைகளில் ரிஷப வாகனத்தில் தாணுமாலயசாமி, கருட வாகனத்தில் திருவேங்கட விண்ணவரம் பெருமாள், அன்ன வாகனத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மன் ஆகிய மூவரும் நான்கு ரத வீதிகளில் வாகன பவனியாக வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    Next Story
    ×