search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    நாளை தைப்பூச திருவிழா: அறுபடை முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிய தொடங்கினர்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் தைப்பூச திருவிழா முக்கியமான ஒன்றாகும். இந்த திருவிழா நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் தைப்பூச திருவிழா முக்கியமான ஒன்றாகும். இந்த திருவிழா நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் முத்துக்குமார சுவாமி-தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அருள்பாலிக்கின்னறனர்.

    இங்கு நடைபெறும் அனைத்து விழாக்களிலும் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை மட்டுமே வீதி உலா வருவ வழக்கம். ஆனால் தைப்பூச திருநாள் அன்று மட்டும் முத்துக்குமார சுவாமி-தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை ஆகியோர் சிம்மாசனத்தில் அமர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.

    இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக நகர வீதிகளுக்கு சுவாமிகள் உலா வருவது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக முத்துக்குமார சுவாமி-தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை ஆகியோர் சிம்மாசனத்தில் எழுந்தருளி கோவிலின் திருவாச்சி மண்டபத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாளை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரியும், 10மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சாயரட்டை தீபாராதனையும் நடக்கிறது.

    தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுவாமி அலைவாய் உகந்த பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி கோவில் உள் பிரகாரத்தில் நாளை நடக்கிறது. விழாவில் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கி உள்ளது.

    பழனிமலை முருகன் கோவிலிலும் தைப்பூச திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று மாலை 7.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி,தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அதன்பின்னர் வெள்ளித்தேரோட்டம் நடக்கிறது. சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்களும் நடந்து வருகிறது.

    தொடர்ந்து நாளை மாலை 4.20 மணிக்கு தைப்பூச திருவிழாவின் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இதற்காக பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பல்வேறு வாகனங்களில் சுவாமி படத்தை அலங்கரித்து வைத்துக்கொண்டு பாதயாத்திரை சென்று வருகிறார்கள்.

    இதனையொட்டி கோவிலில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேரோட்டத்தில் பங்கேற்க 25 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் ஏற்கனவே முன்பதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே 25 ஆயிரம் பக்தர்களும் முன்பதிவு செய்தனர். முன்பதிவு செய்யாத மற்றும் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. அவர்கள் தரிசனம் மட்டுமே செய்து விட்டு உடனடியாக கிளம்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கோவிலில் தங்குவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

    கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலை சுவாமி நாதர் கோவிலில் தைப்பூச திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். நாளை விழாவை யொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 9 மணிக்கு சுவாமி-அம்பாள் கோவில் உள்பிரகாரத்தில் புறப்பாடு நடந்தது.

    இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர். இந்த கோவில் அறுபடை வீடுகளில் 4-வது வீடு என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடந்து. 5-ம் படைவீடான இங்கு தைப்பூச திருவிழாவை காண பக்தர்கள் குவியத்தொடங்கி உள்ளனர்.

    6-வது படை வீடான அழகர் கோவில் மலையில் உள்ள பழமுதிர்ச்சோலை எனப்படும் சோலைமலை முருகன் கோவிலும் தைப்பூச திருவிழா விமரிசையாக கொண் டாடப்படுவது வழக்கம். கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில், இன்று காலை தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.

    நாளை தீர்த்தவாரி மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. இங்கும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
    Next Story
    ×