என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    அம்மன் அணிந்த வளையல்களை அணிந்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பதால் வளையல்கள் பெறுவதற்கு ஆலயத்துக்கு பெண்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
    திருபுவனம் தலையாரிதெருவில் பாதாள மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் முழுவதும் பக்தர்கள் அம்மனுக்கு வளையல் வாங்கி ஆலயத்தில் கொடுத்து வருவார்கள்.

    ஆடி மாத கடைசி வெள்ளி அன்று அம்மனுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட வளையல்கள் அனைத்தும் அலங்காரமாக அணிவிக்கப்படும். அதன்படி நேற்று 1 லட்சம் வளையல்களால் அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார்.

    அம்மன் அணிந்த வளையல்களை அணிந்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பதால் வளையல்கள் பெறுவதற்கு ஆலயத்துக்கு பெண்கள் வந்த வண்ணம் இருந்தனர். வளையல் அலங்காரத்தில் அம்மமனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைகளை ஆறுமுகம் பூசாரி செய்தார். சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி சந்துரு மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.
    ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் புனித நீராட முடியாமல் வேதனையுடன் சென்றனர்.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடித் திருவிழா தொடங்கியதை அடுத்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவின் பேரில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு கடந்த 1-ந்தேதி முதல் தடை விதித்தனர்.

    கோவிலில் குருக்கள் மட்டும் அன்றாட பூஜைகள் செய்து வந்தனர். கோவிலில் நடந்த 17 நாட்கள் திருவிழா நிகழ்ச்சிகள் வளாகத்தில் நடைபெற்று முடிந்தது.

    இந்த நிலையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்கள் தவிர வருகிற 23-ந் தேதி வரை மற்ற நாட்களில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கி உள்ளது.

    இதனையடுத்து 15 தினங்களுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி அளித்தது.

    அதை தொடர்ந்து இன்று ராமேசுவரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலையில் காசிக்கு நிகராக கருதப்படும் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடினர்

    பின்னர் ராமேசுவரம் கோவிலில் உள்ள சுவாமி சன்னதி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தனர்.

    கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் புனித நீராட முடியாமல் வேதனையுடன் சென்றனர்.
    இத்தல பெருமாள் பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்குள்ள மிகப்பெரிய “கதாயுதம்’ பீமன் உபயோகித்ததாக கூறுகின்றனர். இத்தலத்தை இப்பகுதி மக்கள்” குட்டநாடு திருப்பூர் ‘என்று அழைக்கின்றனர்.
    மூலவர் - மாயப்பிரான்
    தாயார் - பொற்கொடி நாச்சியார்
    தீர்த்தம் - பிரக்ஞாசரஸ் தீர்த்தம்
    ஊர் - திருப்புலியூர்
    மாவட்டம் - ஆலப்புழா
    மாநிலம் - கேரளா

    தல வரலாறு;

    சிபி சக்கரவர்த்தியின் மகனான விருஷாதர்பி என்பவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அவன் ஏதோ ஒரு சாபத்தினால் கடுமையான நோய் ஏற்பட்டது. அத்துடன் அவனது நாட்டில் கொடிய வறுமையும் உண்டாயிற்று.

    அப்போது சப்தரிஷிகள் அவனது நாட்டிற்கு வருகை புரிந்தனர். அவர்களிடம் மன்னன் தனக்கும் தன் நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பெரிய ஆபத்தை போக்கினால் தான், தானம் ஏதும் கொடுப்பதாக கூறினான். தானம் என்ற சொல்லைக் கேட்டவுடன் ரிஷிகளுக்கு கோபம் வந்தது. உன் போன்ற மன்னர்களிடம் தானம் பெருவது மிகப்பெரிய பாவமாகும் என மறுத்து விட்டனர்.

    இருந்தும் மன்னன், ரிஷிகளுக்கு கொடுப்பதற்காக அவரது மந்திரிகள் மூலம் தங்கத்தையும் பழங்களையும் அனுப்பி வைத்தான் இதையும் ஏற்க மறுத்துவிட்டனர். இந்த செயலால் மன்னன் கோபமடைந்து மாபெரும் யாகம் ஒன்றை நடத்தி அதில் தோன்றிய தேவதையை ரிஷிகளை கொல்வதற்காக அனுப்பி வைத்தான்.

    இதை அறிந்த ரிஷிகள் தங்களை காக்கும்படி பெருமாளிடம் வேண்டினார். இவர்களது வேண்டுதலை ஏற்ற பெருமாள், இந்திரனை புலியாக மாறும்படி செய்தார், புலி தேவதையை கொன்றது. இதனால் இத்தலம் “திருப்புலியூர்’ என பெயர் பெற்றது.

    ரிஷிகள் அனைவரும் பெருமாள் ஒருவரே பரம்பொருள் மற்ற அனைத்தும் மாயை என நினைத்து வழிபாடு செய்தனர். இதனால் பெருமாள் இவர்களுக்கு மாயப்பிரான் ஆக காட்சியளித்தார்.

    இத்தல பெருமாள் பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்குள்ள மிகப்பெரிய “கதாயுதம்’ பீமன் உபயோகித்ததாக கூறுகின்றனர். நம்மாழ்வார் காலத்தில், இப்பகுதியில் ஒரு பெரிய நகரம் இருந்ததாக அவரது பாடலின் மூலம் அறியப்படுகிறது. இத்தலத்தை இப்பகுதி மக்கள்” குட்டநாடு திருப்பூர் ‘என்று அழைக்கின்றனர்.

    திருவிழா

    மார்கழி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொடியேற்றம், பத்தாம் நாள் ஆராட்டு நடைபெறுகிறது. தை மாதம் முதல் தேதியில் காவடியாட்டம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    திறக்கும் நேரம்

    காலை 5 மணி முதல் பகல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை .
    கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    ஆவணி மாத பூஜை, நிறை புத்தரிசி பூஜை, ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார்.

    தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. ஆனால் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.

    இன்று அதிகாலை 5 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு நெய்யபிஷேகம் நடைபெறும். சிறப்பு பூஜையாக காலை 5.55 மணி முதல் 6.20 மணி வரை நிறை புத்தரிசி பூஜை நடைபெறும்.

    அப்போது பாலக்காடு, ஆரியங்காவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு சபரிமலைக்கு கொண்டு வரப்பட்ட நெற்கதிர் கட்டுகள் கோவிலில் பூஜைக்காக வைக்கப்படும். சிறப்பு பூஜைக்கு பிறகு ஐயப்ப பக்தர்களுக்கு தந்திரி, மேல் சாந்தி ஆகியோர் நெற்கதிர்களை பிரசாதமாக வழங்குவார்கள்.

    இந்த மாதம் 23-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஆவணி மாத பூஜையையொட்டி ஓணம் பண்டிகையும் 21-ந் தேதி சேர்ந்து வருவதால் 8 நாட்கள் தொடர்ச்சியாக சபரிமலையில் பூஜைகள், வழிபாடு நடைபெற உள்ளது.

    கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள், தரிசனத்திற்கு 48 மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று, அங்கு ஆட்கள் கூடியதும், அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை பற்றிய செய்திகளைக் கூறியும், நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார்.
    புனித பிரான்சிஸ் சவேரியார், 1506ம் ஆண்டு, ஏப்ரல் 7ம் நாள், இஸ்பெயின் நாட்டின் Navarre என்ற ஊரில், புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். அப்பகுதியில் பாஸ்கு மொழியே பேசப்பட்டது. இவரது தந்தை யுவான் தெயாசு அவர்கள், அந்நாட்டின் அரசவையில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார். சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் அவர். பிரான்சிஸ் சவேரியார், தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்து, தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார்.

    1525ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டின், உலகப் புகழ் பெற்ற பாரிஸ் பல்கலைக்கழகத்தில், மெய்யியல் மற்றும் இறையியல் கற்கத் தொடங்கினார். 1530ம் ஆண்டு மெய்யியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். பின்னர் 1530ம் ஆண்டு முதல் 1534ம் ஆண்டு வரை, அதே கல்லூரியில் இறையியல் மாணவர்களுக்கு விரிவுரையாளராக பணியாற்றினார். அச்சமயத்தில், "இனிகோ' எனப்படும், இலொயோலா இஞ்ஞாசியார், தனது 39வது வயதில், அங்கு கல்வி கற்க வந்தார்.

    இஞ்ஞாசியார், பிரான்சிஸ் சவேரியாரைப் பார்க்கும் போதெல்லாம், "பிரான்சிஸ், ஒருவர் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் அவருக்கு என்ன பயன்?'' என்ற, இயேசுவின் திருச்சொற்களைச் சொல்லி வந்தார். இந்த வார்த்தைகள் சவேரியாரின் வாழ்வையே திசை திருப்பின. இலொயோலா இஞ்ஞாசியாருடன் இணைந்தார் அவர். 1534ம் ஆண்டு இயேசு சபை என்னும் இயக்கத்தை தொடங்கிய புனித இஞ்ஞாசியாருடன் இருந்த முதல் ஆறு தோழர்களில் புனித பிரான்சிஸ் சவேரியாரும் ஒருவர்.

    பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஏழு தோழர்களும், கல்வியை முடித்து, புனித பூமிக்குச் செல்லும் நோக்கத்தில், இத்தாலியின் வெனிஸ் நகருக்கு வந்தனர். அந்நகரில், 1537ம் ஆண்டு, ஜூன் மாதம் 24ம் நாள், சவேரியார், அருள்பணியாளராக திருப்பொழிவு செய்யப்பட்டார். வெனிஸ் நகரில் இவர்கள் தங்கியிருந்த சமயத்தில், இவர்களது போதனைகள் மற்றும் நோயாளிகள் மத்தியில் ஆற்றிய நற்பணிகளால், மத்திய இத்தாலியில் இவர்களது புகழ் பரவியது.

    பல கத்தோலிக்க அரசர்கள், இவர்களின் பணிகளை நாடினர். புதிதாக பலரும் இவர்களுடன் இணைந்தனர். புனித பூமிக்குச் செல்லும் ஆவல் நிறைவேறாததால், இஞ்ஞாசியார் தலைமையில், இவர்கள் அனைவரும் உரோம் நகர் வந்து, அப்போதைய திருத்தந்தை 3ம் பவுல் அவர்களிடம் தங்களை அர்ப்பணித்தனர். அதேநேரம், போர்த்துக்கல் அரசர் 3ம் ஜான் அவர்கள், கிறிஸ்தவர்களுக்கும், ஆசியாவில் தனது புதிய காலனி நாடுகளில் நற்செய்தியை அறிவிக்கவும், உழைப்பில் ஊக்கமுள்ள அருள்பணியாளர்களைத் தந்து உதவுமாறு திருத்தந்தையிடம் வேண்டினார்.

    திருத்தந்தையின் விருப்பத்தின்பேரில், புனித இஞ்ஞாசியார், தனது தோழர்களில் ஒருவரை, ஆசியாவுக்கென தேர்ந்தெடுத்தார். ஆனால் அவர், நோயால் தாக்கப்படவே, அவருக்குப் பதிலாக, சவேரியாரைக் குறித்தார், இஞ்ஞாசியார். தனது தலைவர் குறித்த அடுத்த நாளே, அதாவது, 1540ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் நாள், சவேரியார், இந்தியாவுக்குச் செல்வதற்காக, உரோம் நகரிலிருந்து முதலில் லிஸ்பன் நகருக்குப் பயணமானார். திருத்தந்தை 3ம் பவுல் அவர்களும், 1540ம் ஆண்டு செப்டம்பர் 27ம் நாள், இயேசு சபையை, ஒரு துறவு சபையாக அங்கீகரித்தார்.

    புனித சவேரியார், லிஸ்பன் நகரில் ஓராண்டு இறைப்பணி செய்த பின்னர், இந்தியாவிற்கு கப்பல் பயணத்தை மேற்கொண்டார். 1542ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி கோவாவை வந்தடைந்த அவர், முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும், பின்னர் கோவாவிலிருந்து கேரளா வழியாக தென் தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றினார். குறிப்பாக, கன்னியாகுமரி, கோட்டயம், குளச்சல், ஆலந்தலை, தூத்துக்குடி மற்றும் மணப்பாடு பகுதிகளில் தங்கி இறைப் பணியாற்றி வந்தார்.

    இங்கு கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று, அங்கு ஆட்கள் கூடியதும், அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை பற்றிய செய்திகளைக் கூறியும், நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார். புனித பிரான்சிஸ் சவேரியார், மணப்பாட்டில் தங்கியிருந்த குகை, அதற்குள் இருக்கும் சிறிய கிணறு ஆகியன, இன்றும் அவரின் புனித வாழ்வுக்குச் சான்றுகளாக உள்ளன. கடற்கரையில் உள்ள அந்தக் கிணற்று நீர், உப்பு இல்லாத நல்ல குடிநீராக இன்றும் புதுமையாக இருப்பதை, திருப்பயணிகள் சுவைத்து புனிதப் பரவசம் அடைகின்றனர்.
    கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தினசரி திருவிழா காலங்களில் காலை மற்றும் மாலையில் கோவில் வளாகத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த உபகோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் வெயிலுகந்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. காலை 7 மணிக்கு ரமேஷ் ஆறுமுகம் வல்லவராயர் மேளதாளங்கள் முழங்க ஆவணி திருவிழா கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமரம் வண்ண மலர்களாலும் பட்டாடைகளாளும் அலங்கரிக்கப்பட்டது. காலை 7.45 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பஞ்சாங்கம், தேவாரம் பாடப்பட்டது.

    நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனரும், தக்கார் பிரதிநிதியுமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் கண்காணிப்பாளர் ராமசுப்பிரமணியன், கோவில் மணியம் நெல்லையப்பன், அலுவலர்கள் பிச்சையா, வேலான்டி ஒதுவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாலையில் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் உலா நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தினசரி திருவிழா காலங்களில் காலை மற்றும் மாலையில் கோவில் வளாகத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கொடியேற்றம் நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
    மதுரை ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் சீனிவாச பெருமாளுக்கு சகல பூஜையும், வண்ண வளையல்களால் மாலை அலங்காரமும் செய்யப்பட்டது.
    மதுரை திருநகர் மகாலட்சுமி காலனி அருகே உள்ள ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் சுவாதி கருட பஞ்சமி விழா நடைபெற்றது.

    விழாவையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சீனிவாச பெருமாளுக்கு சகல பூஜையும், வண்ண வளையல்களால் மாலை அலங்காரமும் செய்யப்பட்டது. இதனையடுத்து பெருமாளுக்கு மகா தீபாராதனை நடந்தது.

    மேலும் பல்லக்கில் புறப்பாடு நடந்தது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
    இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் 25-ந் தேதி (10-9-2021) வெள்ளிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து விநாயகப்பெருமானை வழிபட வேண்டும்.
    எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும் விநாயகரை வழிபட்ட பிறகு தொடங்குவதே நம்முடைய வழக்கம். ‘பிள்ளையார் சுழி’ போட்டு தொடங்கும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைப்பதாக நம்பிக்கை. கணங்கள் அனைத்திற்கும் அதிபதியாக இருப்பதால், அவரை ‘கணபதி’ என்கிறோம். அந்தக் கணபதிக்கு உகந்த திதி ‘சதுர்த்தி’ திதியாகும். மாதந்தோறும் சதுர்த்தி திதி வந்தாலும், ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியை மட்டுமே ‘விநாயகர் சதுர்த்தி’ என்று கொண்டாடுகிறோம்.

    இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் 25-ந் தேதி (10-9-2021) வெள்ளிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து விநாயகப்பெருமானை வழிபட வேண்டும். அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டும், அவல், பொரி, கடலை படைத்தும் விநாயகரை வணங்கி வந்தால் கவலைகள் தீரும். உங்களுடைய கனவுகள் நனவாகும்.

    அனைத்து பொருட்களிலும் எழுந்தருளி அருள்பவர், விநாயகப் பெருமான். மஞ்சள், பசு சாணம், சந்தனம் என்று எதை வேண்டுமானாலும் பிள்ளையாராக பிடித்து வைத்து வழிபடலாம். விக்கிரகம் வைத்துதான் வழிபட வேண்டும் என்ற ஐதீகம் விநாயகருக்குக் கிடையாது. ஆலயத்திற்குச் சென்றும் வழிபடலாம், வீட்டில் இருந்தபடியேயும் வழிபாட்டை தொடரலாம். தும்பிக்கை வைத்திருக்கும் விநாயகரை, நம்பிக்கையோடு வழிபாடு செய்தால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்துசேரும். துன்பங்கள் தூரமாக விலகி ஓடும்.

    ‘சதுரம்’ என்றால் ‘நான்கு பக்கங்கள் பூர்த்தியாகிய அமைப்பு’ ஆகும். அதே போல் நம்முடைய வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக, சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். விநாயகர் சதுர்த்தி அன்று, அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கடலை, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும். மேலும் அவருக்குப் பிடித்த அருகம்புல், வன்னி இலை, எருக்கம்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ போன்றவற்றையும் வைத்து வழிபட வேண்டும்.

    விநாயகருக்கு முன்பாக நின்று, தோப்புக்கரணம் போட்டு தலையில் குட்டிக்கொண்டு வணங்குவது பக்தர்களின் வழக்கம். கஜமுகாசூரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி, தினந்தோறும் தனக்கு முன்பாக 108 தோப்புக்கரணம் போட வைத்தான். அந்த அசுரனை விநாயகப்பெருமான் அழித்தார். இதையடுத்து அசுரனுக்கு பயத்தால் போட்ட தோப்புக்கரணத்தை, விநாயகரின் முன்பாக பக்தியோடு தேவர்கள் அனைவரும் செலுத்தினர். இதுவே விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவதன் காரணமாகும்.

    திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை, விநாயகருக்கு உகந்த நாட்களாகும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க, விநாயகருக்கு மோதகம் நிவேதனம் செய்ய வேண்டும். துன்பங்கள் சிதறி ஓட சிதறுகாய் உடைக்க வேண்டும். கணபதி கவசம் பாடினால் மனம் மகிழும் வாழ்க்கை கிடைக்கும். ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர் களுக்கு அருள் கொடுப்பவர், ஆனைமுகப் பெருமான். இத்தகைய சிறப்புமிக்க விநாயகப் பெருமானை, ஆவணி சதுர்த்தியில் பூவணிந்து வழிபட்டால் தேவைகள் பூர்த்தியாகும். செல்வ வளம் பெருகும்.

    ‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
    இறைவனை வழிபாடு செய்வதில் ஒன்பது வகைகள் இருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் சொல்கிறார்கள். அந்த ஒன்பது வகையான வழிபாடுகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.
    இறை வழிபாடு என்றாலே, ஒன்று ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது, அல்லது வீட்டின் பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களை வணங்குவது என்பதாகத்தான் பலரும் கருதிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இறைவனை வழிபாடு செய்வதில் ஒன்பது வகைகள் இருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் சொல்கிறார்கள். அந்த ஒன்பது வகையான வழிபாடுகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    கேட்பது : இறைவனுடைய பெருமைகளையும், புகழையும் காதாரக் கேட்பது, இதனை ‘கேட்டல் வழிபாடு’ என்கிறார்கள். கோவில்களில் மற்றும் பிற இடங்களில் நடைபெறும் ஆன்மிக சொற்பொழிவுகளை இதற்கு சான்றாகக் கூறலாம். இறைவனைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் சொல்வதைக் கேட்டு, தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். கேட்பது என்பது சாதாரண காரியம் என்று நினைக்கக்கூடாது. அதற்கு மனம் ஒத்துழைக்க வேண்டும். அதனால்தான் இறை வழிபாட்டில், ‘கேட்டல்’ முறைக்கு முதலிடம்.

    பாடுவது : இறை வழிபாட்டில் இரண்டாவது சிறப்பைப் பெறுவது, ‘பாடுதல்.’ இறைவனை தங்களின் பாட்டால், தன் வசப்படுத்தி அவன் அருளைப் பெற்றவர்கள் ஏராளமானவர்கள். அவர்களில் தேவாரம், திருவாசகம் பாடிய அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் முதன்மையான இடத்தைப் பெறுகிறார்கள். இவர்கள் பாடிய பாடல்களைக் கேட்டு, அதற்கு தகுந்தாற்போல் இறைவன் நடந்துள்ளார் என்பதை நாம் படித்திருக்கிறோம். பக்தியோடு இணைந்த பாடலுக்கு எப்போதும் சக்தி உண்டு. அப்படிப்பட்ட பாடலின் வாயிலாகவும் நாம் இறைவனின் அருளைப் பெற முடியும்.

    நினைப்பது : இறைவனின் சிந்தனையிலேயே மூழ்கியிருப்பது என்று இதனைச் சொல்வார்கள். இதுவும் சாதாரண விஷயம் அல்ல. இது ஒரு தியான நிலைக்கு ஒப்பானது. மனிதனின் மனம் என்பது எண்ண ஓட்டங்கள் நிறைந்தது. நொடிக்கு ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்கும், கட்டுக்குள் அடங்காத குதிரை போன்றது மனம். அதனை ஒருநிலைப்படுத்தி, இறைவனைப் பற்றி மட்டுமே சிந்திப்பது, அவன் நினைவிலேயே மூழ்கியிருப்பது என்பது அசாதாரணமான விஷயம். அந்த வகையில் ‘நினைத்தல்’ என்பதும் இறை வழிபாட்டில் உயர்வான ஒரு நிலை என்பதை மறுப்பதற்கில்லை.

    அடிதொழுதல் :இறைவனின் அடியைத் தொழுவதுதான், நாம் பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் ஒரே வழி. நம்முடைய வாழ்க்கையானது இன்பமும், துன்பமும் நிறைந்த கடல் போன்றது. அதில் நம்மை மூழ்கிவிடாமல் கைதூக்கி விடுவது, இறைவனின் திருவடிதான். அதனைப் பற்றிக்கொண்டவர்களே, அதிகமாக வாழ்க்கையின் பெருந்துயரில் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். எந்த நிலையிலும், எப்படிப்பட்ட துயரம் வாட்டியபோதிலும் இறைவனையே தொழுது பேறு பெற்ற நாயன்மார்கள் இதற்கு சான்றாக இருக்கிறார்கள்.

    பூஜித்தல் : இறை வழிபாட்டில் ஐந்தாவதாக இருப்பதுதான், இந்த காலகட்டத்தில் பலரும் பின்பற்றும் நடைமுறையில் ஒன்றான ‘பூஜித்தல்.’ இறைவனை வழிபாடு செய்ய ஆகம விதிகளும், வழிபாட்டு முறைகளும் வகுத்து வைக்கப்பட்டிருந்தாலும், எப்படி பூஜித்தாலும், அந்த வழிபாட்டில் பக்தியும், அன்பும் இருந்தால் இறைவனின் அருளை நிச்சயமாக பெற முடியும் என்பதே, பலரது அனுபவ வார்த்தை. இதற்கு உதாரணமாக நாயன்மார்களில் ஒருவராக இருக்கும் கண்ணப்ப நாயனாரைக் கூறலாம். அவர் இறைவனுக்கு, அன்பு மிகுதியால் இறைச்சியை அமுதாக படைத்தவர்.

    அன்பு : இறைவன் மீது கொண்டிருக்கும் அன்பும், காதலும் கூட ஒருவகையான வழிபாடுதான். ராதை, மீராபாய் போன்றவர்கள், தங்களுடைய அன்பினால் இறைவனையே கட்டிப்போட்டவர்கள். பாண்டவர்களில் ஒருவனான சகாதேவன், பல்லாயிரம் உருவமாக பெருகி நின்ற கிருஷ்ணனை, தன்னுடைய அன்பு காரணமாக உள்ளத்திலேயே கட்டிப்போட்ட கதையை, நாம் மகாபாரதத்தில் பார்க்கிறோம்.

    ஒப்படைத்தல் :இறைவழிபாட்டிலேயே கடைசியாக இருப்பது, இந்த ‘ஒப்படைத்தல்.’ தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணிப்பது. இதனை ஒருவித சரணாகதி என்றும் சொல்லலாம். இது ஒரு உயர்வான வழிபாட்டு முறை. இதனை மகான்கள் மட்டுமே செய்திருக்கிறார்கள். ஆன்மிகத்தின் உச்சமாக இந்த வழிபாட்டு முறை இருக்கிறது.

    வணங்குதல் : திருவடி தொழுதல், பூஜித்தல், வணங்குதல் ஆகிய மூன்றும் ஒன்றுபோல தோன்றினாலும், அவற்றிற்குள் சிறிய அளவிலான வித்தியாசம் இருக்கிறது. இங்கே வணங்குதல் என்பதை ‘தலைவணங்குவது’ என்று பொருள் கொள்ளலாம். திருவடி தொழுதல் மற்றும் பூஜித்தலில் பக்தி முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் வணங்குவதில், நாம் நம்முடைய ஆணவத்தை இறைவனின் காலடியில் சமர்ப்பிக்கிறோம். ‘நான்’ என்ற அகங்காரத்தை விடுத்து, ‘எல்லாம் நீ’ என்று இறைவனுக்கு தலை வணங்கும் முறை இது.

    தொண்டு : தன்னலம் கருதாது செய்யும் தொண்டு, எப்போதும் இறைவனை நெருங்குவதற்கான நேரடி வழி என்றுதான் சொல்ல வேண்டும். ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்’ என்ற வாசகம் இந்த வழிபாட்டிற்கு பொருத்தமாக இருக்கும். பாடல்களின் வாயிலாக இறைவனை வழிபட்டவர் திருநாவுக்கரசர் என்றாலும், அவர் தன்னுடைய தள்ளாத வயதிலும் பல தொண்டுகளைச் செய்தவர். அதனால்தான், கயிலைக் காட்சியைக் காண தன் உடல் நோக கயிலை நோக்கிப் புறப்பட்ட திருநாவுக்கரசருக்கு, திருவையாறிலேயே அந்தக் காட்சியை அருளியவர் சிவபெருமான். நீங்கள் செய்யும் தொண்டு, இறைவனையே உங்களைத் தேடி வரவைக்கும்.
    கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் வரலட்சுமி விரதத்தில் பக்தர்கள் பங்கேற்க தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருமலை :

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி விரத பூஜை நடைபெறுவது வழக்கம்.

    ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் வரலட்சுமி விரதத்தில் பக்தர்கள் பங்கேற்க தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பக்தர்கள் ரூ.1001ஐ ஆன்லைனில் செலுத்தி, தேவஸ்தான வெப்சைட்டில் சென்று இதற்குண்டான டிக்கெட் பெற்று பங்கேற்கலாம். இந்த டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு தபால் துறையின் சார்பில் மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட பிரசாதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

    இந்த வரலட்சுமி விரத டிக்கெட்டுகளை www.Tirupatibalaji.Ap.Gov.In என்ற தேவஸ்தான இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம். வரும் 20-ந்தேதி காலை 10 மணி முதல் 12 மணிவரை வரலட்சுமி விரத பூஜை நடைபெற உள்ளது.

    அர்ச்சகர்கள் பத்மாவதி தாயார் மூலவர் சந்நிதியில் இருந்தபடி வரலட்சுமி விரத பூஜையை மேற்கொள்ள உள்ளனர். பக்தர்கள் தங்கள் வீடுகளில் வேஸ்தான தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி மூலம் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் கட்டப்படுவதற்கு முன்பு 1248 ஆண்டுகள் முற்பட்டது, திருவட்டார் கோவில் என மதிலக கிரந்தம் என்ற நூல் கூறுகிறது.
    திருவட்டாரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில், 108 வைணவ திருப்பதிகளில் ஒன்றானதும், நம்மாழ்வாரால் சாசனம் செய்யப்பட்டதுமாகும்.

    திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் கட்டப்படுவதற்கு முன்பு 1248 ஆண்டுகள் முற்பட்டது, திருவட்டார் கோவில் என மதிலக கிரந்தம் என்ற நூல் கூறுகிறது. திருவட்டார் பரளியாற்றின் கரையில் 3 ஏக்கர் 27 செண்ட் நிலத்தில் அமைந்துள்ள இக்கோவில் பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுகிறது. இந்த கோவில் கோதை, பரளி மற்றும் தாமிரபரணி என்ற மூன்று ஆறுகளால் சூழப்பட்டுள்ளது. பரளியாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலை சுற்றி ஓடுவதால், 'வட்டாறு' என்றும், பின்னர் 'திருவட்டாறு' என்றும் அழைக்கப்படுகிறது.

    தற்போது கருவறை கூரைப்பகுதி புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. கோவில் கருவறை மூன்று அறைகளைக்கொண்டது. இங்கு ஆதிகேசவப்பெருமாள் பாம்பணை மேல் பள்ளிகொண்டு இடது கை தூக்கிப்போட்ட நிலையிலும், வலது கை யோக முத்திரை அணிந்தும், தெற்கில் தலைவைத்தும் மேற்கு திசை நோக்கி பள்ளிகொண்டு அருளுகிறார். திருமுடிமேல் ஆதிகேசன் குடைபிடித்துள்ளது. சயன கோல இந்த ஆதிகேசவப் பெருமாள் சிலை கல்லால் ஆன சிலையல்ல.

    சயனகோலம் 16 ஆயிரத்து எட்டு சாளகிராமம், கடுகு சர்க்கரை யோகத்தால் அமைக்கப்பட்டதாகும். பங்குனி மாதம் 3-ந் தேதியிலிருந்து 8-ந் தேதி வரையும் புரட்டாசி மாதம் 3-ந் தேதியிலிருந்து 5-ந் தேதி வரையும் சூரியன் மறையும் போது செங்கதிர்கள் திரு உருவத்தின் மீது விழும் படியாக கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சிரசு, உடல், பாதம் என மூன்று வாயில்கள் வழியாக பகவானை தரிசிக்க முடியும். சுவாமியின் நடுவாயில் கோவில் பீடத்தில் நித்தியபலி ஸ்ரீபலி மூர்த்தி, உற்சவ மூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் உள்ளன.

    தற்போது பாலாலயத்தில் உற்சவ மூர்த்தி சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது.

    இங்கு ஸ்ரீகிருஷ்ணன், ஐயப்பசுவாமி ஆகியோருக்கு தனித்தனி சன்னதி உள்ளது.

    பக்தர்களை காக்க ஆதிகேசவ பெருமாள் இங்கு வந்ததற்கு ஒரு கதையை கூறுகிறார்கள்.

    பிரம்மதேவன் தட்சண மேருவில் உள்ள காஞ்சன கிரியில் வைத்து விஷ்ணு தரிசனம் கிடைப்பதற்காக அதர்வண வேதத்தை உச்சரித்து ஒரு யாகம் நடத்த ஆரம்பித்தார். பிரம்மனின் மந்திர உச்சரிப்பில் அபசுரம் கலந்ததால் தீபடர்ந்து எரிந்து ஆகாயம் வரை சென்றது. அந்த தீயிலிருந்து கேசன், கேசி என்ற இரண்டு அரக்கர்கள் தோன்றினர். கேசன் மலையபர்வதத்தில் அமர்ந்து பிரம்மாவை நோக்கி தவமிருந்தான். மேலும் பல வரங்கள் கேட்டு தன் தவ வலிமையை பெருக்கிக்கொண்டான். தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினான்.

    கேசனின் தங்கை ஒரு முறை நாகலோகம் சென்றாள். அங்கு இந்திரனைக்கண்டாள். அவனது அழகில் மயங்கி தன்னை மணந்து கொள்ளும்படி கேட்டாள். இந்திரன் மறுத்தான். இந்திரன் தன்னை உதாசீனப்படுத்தியதால் அவனைப்பழிவாங்க நினைத்தாள் கேசி.

    அதைத்தொடர்ந்து இந்திரன் தன்னை பலாத்காரம் செய்யமுயன்றதாக கேசி கூற கோபாவேசத்துடன் இந்திரனைத்தேடி நாகலோகம் செல்கிறான் கேசன். இந்திரனோடு ஏழுநாட்கள் போரிட்டு இறுதியில் கேசன் வெற்றி பெற இந்திரன் ஓடி ஒளிகிறான். கேசன் அரம்பையர்களை சிறைபிடிக்கிறான். சூரியனை, சந்திரனை, தேவர்களை அவமானப்படுத்துகிறான். முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒன்றாகக்கூடி திருமாலிடம் முறையிட விஷ்ணு கருடன் மீதேறி கேசனுடன் போரிட சாகாவரம் வாங்கிய கேசனை திருமாலால் கொல்ல முடியவில்லை. அப்போது பராசக்தி விஷ்ணுவிடம்,” அவனை கொல்ல முடியாது. அவன் மரணமற்றவன். ஆதிசேஷன், கேசனை சுற்றி வளைத்து அரண் கட்டட்டும். நீ அதன்மேல் சயனிப்பாய்” என்று கூற திருமாலும் அதே போல் பள்ளி கொண்டார்.

    ஆதிசேஷனின் அணையில் கேசன் அடங்கிவிட்டதை கண்ட கேசி கங்கை நதியை தியானித்தாள். கங்கை இரண்டு நதிகளாக பிரிந்து வந்தாள். அவை ஆதிசேஷனை அழிக்க ஆக்ரோஷத்துடன் ஓடி வந்தன. பூமாதேவி பரமன் இருந்த தலத்தை உயரும்படி அருள செய்ய இரண்டு நதிகளும் பரமன் சயனித்த தலத்தை சுற்றிசுற்றி வந்தன. கேசி பெருமாளின் பெருமையை உணர்ந்து பணிந்தாள். கேசன் எல்லா காலத்திலும் எழுந்து விடாமல் இருக்கவும், உலக நன்மைக்காக ஆதிசேஷனின் மேல் துயில் செய்கிறார் பகவான். கேசியால் கொண்டு வரப்பட்ட கங்கை நதியின் இரு பிரிவுகளே கோதையாறாகவும் பரளியாறாகவும் ஆயின என்பது ஐதீகம்.

    இங்கு அல்லா மண்டபம் உள்ளது. இங்கு நடைபெற்ற பூஜை அல்லா பூஜை எனப்பட்டது. இப்பொதும் அல்லா பூஜை நடைபெற்று வருகிறது.

    கதழிப்பழம், பால் பாயாசம் வழிபாடு இங்கு சிறப்பு வாய்ந்தது.

    கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளியுணர்த்தல் நடைபெறுகிறது. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.

    கோவிலில் 1991-ம் ஆண்டும் 1994-ம் ஆண்டும் நகைகள் கொள்ளயடிக்கப்பட்ட துர்சம்பவங்கள் நடந்துள்ளன. முதல் கொள்ளை வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு குற்றவாளிகள் தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கின் போது கைப்பற்றப்பட்ட நகைகள் கருவூலத்தில் உள்ளன.

    சமீபத்தில் குமரி மாவட்டத்துக்கு வருகை தந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம், ”கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. மேலும் கோவிலில் வரையப்படும் மியூரல் ஓவியங்கள் தரமற்று உள்ளன. கோவில் திருப்பணி வேலைகள் மிகவும் தாமதமாக நடக்கின்றது. பதினான்கு ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் வேலைகள் இன்னும் முடியவில்லை” என பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். அப்போது அதற்கு பதிலளித்த அமைச்சர், ”கோவிலில் தற்போது ஆறரை கோடி ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகிறது. கோவிலில் வரையப்படும் மியூரல் ஓவியங்களை திருச்சூரில் உள்ள ஓவியக்கல்லூரி முதல்வர் மேற்பார்வையில் வரைவதற்கு ஏற்பாடு செய்யப்படும், இந்த ஆண்டுக்குள் கும்பாபிஷேக விழா நடத்தப்படும். மேலும் சுவாமி பங்குனி திருவிழாவுக்கு ஆறாட்டுக்கு எழுந்தருளும் மேற்கு நடையில் பரளியாற்றுக்கு குறுக்கே உள்ள பாலம் பழுதடைந்துள்ளது. அதை சம்பந்தப்பட்ட துறையிடம் கூறி சரிசெய்யப்படும்” என்றார்.

    விரைவில் பணிகளை நேர்த்தியாக முடித்து கோவிலில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான புஷ்பாபிஷேக விழா 16-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமை கோவிலில் உள்ள அனைத்து சாமிகளுக்கும் புஷ்பாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம்.

    அதுபோல் இந்த ஆண்டுக்கான புஷ்பாபிஷேக விழா 16-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. அதன்படி அன்று மாலை 6.30 மணிக்கு கோவில் நடைபெறும் நித்திய காரிய பூஜைகள் முடிந்த பின் தட்சணாமூர்த்தி, கொன்றையடி, தாணுமாலய சன்னதி, திருவேங்கட விண்ணவரம் பெருமாள், நவகிரக மண்டபம், கைலாசநாதர், சாஸ்தா, ராமர் சன்னதி, மற்றும் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் உட்பட அனைத்து சாமிகளுக்கும் புஷ்பாபிஷேகம் நடக்கிறது.

    கிரேந்தி, வாடா மல்லி பூக்களை தவிர்த்து மீதமுள்ள பூக்களால் புஷ்பாபிஷேகம் விழா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
    ×