என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் இறந்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்து பேசாதீர்கள். அது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினரையும் பாதிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
    சனி பகவானுக்கு இரண்டு மைந்தர்கள் ஒருவர் மாந்தி, மற்றொருவர் குளிகன். இதில் குளிகன் சனி பகவானுக்கும் நீலா தேவிக்கும் பிறந்தவர். ஆனால் மாந்தி சனியின் வெட்டுப்பட்ட காலில் இருந்து உருவானவர்.

    வெட்டுப்பட்ட கால் என்றாலே அது சவத்துக்கு சமம். எனவே சவ ஊர்வலங்கள் வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்வதும், இறந்தவரின் ஆன்மாவுக்காக ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்வதும், சவ அடக்கத்துக்கு நம்மால் முயன்ற உதவிகளைச் செய்வதும், மாந்தியின் தோஷத்தை வெகுவாகக் குறைக்கும். இன்னும் சொல்லப்போனால் மாந்தி தோஷம் இல்லாமலே போகும்!

    கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பக்கத்தில் திருநரையூர் எனும் ஸ்தலத்தில் சனிபகவான் தனிச்சந்நிதியில் எழுந்தருளுகிறார். அதுமட்டுமா? தன் மனைவி நீலாதேவி மகன்கள் குளிகன் மற்றும் மாந்தி என குடும்பத்தோடு அருள்பாலிக்கிறார். அங்கே சென்று முறையாக பூஜை செய்து வழிபட்டால் மாந்தி தோஷம் விலகும்.

    பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காடு ஆலயம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. இந்தத் தலத்தில் மாந்தி வழிபட்ட லிங்கம் உள்ளது, அங்கே சென்று அந்த சிவலிங்கத்தை வழிபட்டாலும் மாந்தி தோஷம் நீங்கும்.

    பட்டுகோட்டைக்கு அருகே விளங்குளம் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயத்தில் சனி பகவான் குடும்பத்தோடு காட்சி தருகிறார். அங்கே சென்று வழிபட்டாலும் மாந்தி தோஷம் இல்லாமல் போகும்.

    மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிலும் குறிப்பாக கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தவரை உதவி செய்யுங்கள். அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்து இந்த மாந்தி தோஷத்தின் வீரியத்தைக் குறைத்துக்கொள்ளலாம். குறிப்பாக புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் விரைவாக புத்திர பாக்கியம் பெறுவார்கள்.

    குடும்பத்தில் அமைதியின்மை, நிம்மதியற்ற நிலை, வருமானம் போதுமான அளவிற்கு இல்லையே என்று கலங்குபவர்கள், குடும்பத்தினர் ஆளுக்கொரு பக்கம் பணிபுரிந்து கொண்டு சேர்ந்து வாழ முடியாமல் தவிப்பவர்கள் என்றிருந்தால், மேற்கண்ட பரிகாரங்கள் மிகப்பெரிய பலன்களைக் கொடுக்கும்! பிரச்சினைகள் விரைவாகத் தீரும். தொடர்ந்து சிவபெருமானை வழிபாடு செய்வதும், தினமும் காலையில் சூரிய வழிபாடு செய்வதும், ஆதித்யஹிருதயம் கேட்டு வருவதும் மாந்தி தோஷத்தின் வீரியத்தைக் குறைக்கும்.

    பொதுவாக எந்த ஒரு மனிதர் இறந்தாலும் அவரை தூற்றுவது, அதாவது அவர் கெட்டவராகவே இருந்தாலும் இறந்த பிறகு அவரை தூற்றுவது "பிரேத சாபம்" என்னும் கடுமையான தோஷத்தைத் தரும். இதுவும் மாந்தி தோஷத்தில் ஒரு பகுதியே! எனவே எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் இறந்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்து பேசாதீர்கள். அது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினரையும் பாதிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் கோவிலின் வெளியே நின்றவாறு வழிபட்டு சென்றனர்.
    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் கோவிலில் வழக்கமான பூஜைகள் எளிமையாக நடந்தது.

    இதனால் பக்தர்கள் கோவிலின் வெளியே நின்றவாறு வழிபட்டு சென்றனர். சில பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
    சில நேரங்களில் இந்த இளவரசனை போல நாமும் சிறு, சிறு தோல்விகளை கண்டு சோர்ந்து போய், நம்மை நாமே எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று முடிவு செய்துவிடுகின்றோம்.
    மோசே கர்த்தருடைய சன்னிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை. பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான். (யாத் 6:12)

    பட்டத்து இளவரசன் ஒருவன் எதிரி நாட்டின் மீது போர்த் தொடுக்கப் போகும் பெரிய படைக்கு தலைமை தாங்கி செல்ல ஆயத்தமாகிக் கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக எலி ஒன்று குறுக்கிடவே வாளை எடுத்துக் கொண்டு அதனை வெட்ட துரத்தினான். அவன் எவ்வளவோ முயன்றும் முடியாமல் எலி தப்பியோடிவிட்டது. சோர்ந்து போன இளவரசன், கேவலம் ஒரு எலியை கூட வெட்ட இயலாத நான் எப்படி எதிரி நாட்டோடு சண்டையிட்டு வெற்றி பெற போகிறேன் என்று எண்ணி, யுத்தத்திற்கு போகாமல் பின்வாங்கினான்.

    சில நேரங்களில் இந்த இளவரசனை போல நாமும் சிறு, சிறு தோல்விகளை கண்டு சோர்ந்து போய், நம்மை நாமே எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று முடிவு செய்துவிடுகின்றோம். இஸ்ரவேல் மக்களை விடுவிக்கும்படி எகிப்து சென்ற மோசேக்கு தொடக்கத்தில் அந்த மக்களே செவி கொடுக்கவில்லை. எனவே சோர்ந்து போன அவன், இவர்களே எனக்குச் செவி கொடுக்காதபோது, எகிப்தின் ராஜா எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்று தயங்கி நின்றான். ஆனாலும் அதே மோசேயின் முன்னால் தேவன் அந்த நாட்டு மன்னனையே அடங்கிப் போகவைத்தார்.

    நாம் பெரிய பலசாலிகளாக இருந்தாலும், சில நேரங்களில் சில சின்ன விஷயங்களில் நாம் தோற்றுப் போய் விடக்கூடும். நாம் மிகப்பெரிய திறமை சாலிகளாக இருந்தாலும், சாதாரண சில காரியங்களில் அந்தத் திறமை நமக்கு கை கொடுக்காமல் போக முடியும். மிக வலிமையான ஆவிக்குரிய நிலைகளை உடைய பலர் சில சின்னக்காரியங்களில், சாதாரண மனிதன் அடையும் வெற்றியைக் கூட அடைய முடியாமல், தோல்வி அடையும் வேளைகள் உண்டு. ஆனாலும் இந்தச் சின்ன தோல்விகள், பெரிய வெற்றிகளுக்கு நாம் தகுதியானவர்கள் அல்ல என்பதை முடிவு செய்துவிட முடியாது.

    ஏசுவை சிலுவையின் பாதையில் பின்பற்ற விரும்பிய பேதுருவால் அது கூடவில்லை. ஆனாலும் கர்த்தருடைய வேளை வந்தபோது, பேதுரு அதை விட மிகக்கடுமையான சூழ்நிலைகளிலும் கர்த்தருடைய பலத்தில் மிகப்பெரிய சாதனைகளை புரிந்தான். முதல் தோல்வி, முற்றிலும் தோல்வி என்ற நிலை ஏற்படவில்லை.

    சிறிய சபை கூடுகையில் சில நிமிடங்கள் சில வார்த்தைகளை பிரசங்கிக்க வலுவின்றி நின்ற பலர், பிற்காலத்தில் லட்சம் பேர்களுக்கு முன்னால் நின்று பவுலைப் போல தைரியமாகப் பிரசங்கித்திருக்கிறார்கள். ஆம், சிறு தோல்விகளை சுட்டிக்காட்டி, பெரிய வெற்றிகளுக்கு நேராக நாம் போகக்கூடாதபடி தடை செய்ய விரும்பும் சாத்தானுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    – சாம்சன் பால்
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான வயலில் இருந்து நெற்கதிர்களை அறுவடை செய்து எடுத்து வந்து சாஸ்தா கோவிலில் வைத்து பூஜைகள் நடத்தப்படும்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை 16-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

    அன்று காலை 6 மணிக்கு கோவிலுக்கு சொந்தமான வயலில் இருந்து நெற் கதிர்களை அறுவடை செய்து எடுத்து வந்து சாஸ்தா கோவிலில் வைத்து பூஜைகள் நடத்தப்படும். பின்னர் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு அம்மன் முன்பு படைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து, அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் சுவாமி கைலாசபர்வத வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று காலை மாணிக்கம் விற்ற லீலை நடந்தது. அப்போது சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன், மாணிக்கம் விற்ற லீலை அலங்காரத்தில் காட்சி அளித்தனர். பின்னர் இரவு சுவாமி கைலாசபர்வத வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.

    “மாணிக்கம் விற்ற லீலை”க்கான புராண வரலாறு வருமாறு:- முன்பொருகாலத்தில் மதுரையை ஆண்ட வீரபாண்டியன் என்ற அரசன் நீதியுடன் ஆட்சி புரிந்தான். அவனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த நேரத்தில் வேட்டையாட சென்ற அரசன் புலிக்கு இரையாகி இறந்தான். அந்த நேரத்தில் அரசனின் காமக்கிழத்தியரின் மக்கள் அரண்மனைக்குள் புகுந்து சகல செல்வங்களையும், அரசனின் மகுடத்தையும் கவர்ந்து சென்றனர். இதற்கிடையில் இளவரசனுக்கு முடிசூட்டலாம் என்று அமைச்சர்கள் முடிவு செய்தனர்.

    அப்போது, மணிமகுடம் உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்கள் களவு போனதை அறிந்து சோமசுந்தர பெருமானிடம் முறையிட கோவிலுக்கு சென்றனர். அப்போது சோமசுந்தர பெருமானே ஒரு நவரத்தின வியாபாரியாக தோன்றி அங்கு வந்து நடந்ததை கேட்டறிந்தார். மேலும் அவர் புதிய மணிமகுடம் செய்ய விலை உயர்ந்த நவமணிகளை கொடுத்து, அந்த மணிகளின் வரலாறு, குணம், குற்றங்கள், யார் எந்த மணியை அணிய வேண்டும் என்ற விவரங்களையும் கூறினார். பின்னர் புதிய மணிமகுடம் செய்து அதனை இளவரசனுக்கு சூட்டி, அவரை அபிடேகபாண்டியன் என்று அழையுங்கள் என்று கூறி விட்டு இறைவன் மறைந்தார்.

    இதற்கிடையில் கவர்ந்து செல்லப்பட்ட செல்வங்களும், மணிமகுடமும் மீண்டும் கிடைக்க பெற்று அனைவரும் நலமுடன் வாழ்ந்தார்கள். மேலும் அபிடேகப்பாண்டியன் செங்கோல் வழுவாமல் ஆட்சி புரிந்தான் என்று புராணம் கூறுகிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர் ஏழுமலையான் சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் 2 கருட சேவை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கருட பஞ்சமியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முதல் கருட சேவை நடந்தது. இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை உற்சவர் ஏழுமலையான் சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    2-வது கருட சேவை நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமியையொட்டி வருகிற 22-ந்தேதி நடக்கிறது. மேற்கண்ட இரு கருட சேவை நிகழ்ச்சிகளில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    இங்கு தாயாருக்கு என்று தனி சன்னதி கிடையாது. லட்சுமி தாயார் மூலவரின் நெஞ்சிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஐதீகம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மூலவர் - திருவாழ்மார்பன்
    தாயார் - ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசன்
    தீர்த்தம் - லட்சுமி தீர்த்தம் என்ற புஷ்கரிணி
    ஊர் - திருப்பதிசாரம்
    மாவட்டம் - கன்னியாகுமரி

    தல வரலாறு;

    முற்காலத்தில் ஞானாரண்யம் என அழைக்கப்பட்ட சுசீந்திரத்தில் சப்தரிஷிகள் தவமிருந்தனர், இறைவன் சிவ வடிவில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். இருந்தும் முனிவர்கள் இறைவனை, திருமாலின் உருவிலே காண சோம தீர்த்தக் கட்டம் என்ற இடத்தில் தவம் புரிந்தனர்.

    அவர்களது தவத்திற்கு மகிழ்ந்து, திருமால் உருவில் காட்சி கொடுத்தார் இறைவன். இத்தலத்தில் தங்கி பக்தர்களுக்கு காட்சி தந்தருள வேண்டும் என முனிவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். எனவே திருமால் சப்தரிஷிகள் சூழ பிரசன்ன மூர்த்தியாக சுமர்ந்து அருள்புரிகின்றார்.

    பெருமாளின் அம்சமான நம்மாழ்வாரின் தாய் இத்தலத்தில் பிறந்தார். குருநாட்டு காரிமாறன் என்ற சிற்றரசனுக்கும் நாஞ்சில்நாட்டு திருப்பதிசாரத்தில் இருந்து திருவாழிமார்ப பிள்ளை மகளான உதய நங்கைக்கும் மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்தது.

    பல ஆண்டுகள் கழிந்தும் பிள்ளைப்பேறு இல்லை என வருந்தி தம்பதிகள் மகேந்திரகிரி அடிவாரத்திலுள்ள திருக்குறுங்குடி சென்று, அதன் வழியே ஓடும் நதியில் நீராடி அங்குள்ள நம்பியிடம் பிள்ளை வரம் வேண்டி நின்றனர்.

    பெருமாளும் அவருக்கு காட்சி கொடுத்து யாமே உனக்கு மகனாக பிறந்து 16 வயதிலே அனைத்து விதமான கீர்த்திகளையும் பெற்று உங்களுக்கு புகழ் தேடித் தருவேன், பிறக்கும் குழந்தையை திருநகரில் உள்ள புளியமரத்தடி எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கூறி மறைந்தார்.

    பின் சில நாட்களிலேயே உதய நங்கை கருவுற்றாள், தமிழர் முறைப்படி மகப்பேறுக்காக தாய் வீடான திருவண்பரிசாரம் அனுப்பப்பட்டால். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பௌர்ணமி திதியில் நம்மாழ்வார் பிறந்தார்.

    குறுங்குடிப் பெருமாளின் ஆணைப்படி குழந்தையை திருநகரியில் உள்ள புளிய மரத்துக்கு பொற்தொட்டிலில் இட்டு எடுத்து வந்தனர். அக்குழந்தை தவழ்ந்து தவழ்ந்து புளியமரப் பொந்தினுள் ஏரி தெற்கு நோக்கி பத்மாசனத்தில் ஞானமுத்திரை ஏந்தியவராய் அங்குள்ள ஆதிநாராயணரை தியானித்து நின்றது.

    இந்நிகழ்ச்சியைக் பார்த்த அனைவரும் வியந்து போயினர். 16 ஆண்டுகள் இந்த பாலமுனி, இறை தியானத்திலே இருந்தார். இவ்வாறு திருப்பதிசாரம் நம்மாழ்வாரின் அவதார தலமாகவும், ஆழ்வார்திருநகரி அவர் ஞானம் பெற்ற தலமாகவும் விளங்குகின்றது.

    மூலவரான திருவாழ்மார்பன் நான்கு கைகளுடன் சங்கு, சக்கரம் ஏந்தி அபய ஹஸ்தத்துடன், அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கிறார். ஒன்பது அடி உயரமுள்ள இச்சிலை “கடு சர்க்கரை யோகம்’ என்ற கூட்டினால் சமைக்கப்பட்டது.

    கல்லும் ,சுண்ணாம்பும் சேர்த்து செய்யப்பட்ட உருவத்தின் மேல் கடுகும் சர்க்கரையும் சேர்த்து ஒருவித பசையினால் பூசப்படும் முறைக்கு கடுசர்க்கரை யோகம் என்பர். எனவே மூலவருக்கு அபிஷேகம் கிடையாது உற்சவருக்கு மட்டுமே.

    இங்கு தாயாருக்கு என்று தனி சன்னதி கிடையாது. லட்சுமி தாயார் மூலவரின் நெஞ்சிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஐதீகம். பெருமாள் லட்சுமியின் உருவம் பொறித்த பதக்கத்துடன் தங்க மாலை ஒன்றை அணிந்துள்ளார்.

    திருவிழா :

    பெருமாள் குலசேகர ஆழ்வாரை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்ற ஆடி சுவாதி திருநாள், சித்திரையில் 10 நாள் திருவிழா, புரட்டாசி சனி, ஆவணி திருவோணம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இவருக்கு மட்டுமே ஊஞ்சல் சேவை நடக்கிறது.

    திறக்கும் நேரம்:

    காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
    புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. 14-ந் தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது தனி சிறப்பாகும். இதனால் மூலஸ்தான அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படாமல் தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

    இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆவணி திருவிழா நேற்றுகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடி மரத்திற்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் வேதமந்திரங்கள் முழங்க கோவில் குருக்கள், கொடி மரத்தில் கொடியை ஏற்றி வைத்தனர்.

    கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் நேற்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இதன்காரணமாக பக்தர்கள் இன்றி கொடியேற்றுவிழா எளிமையாக நடந்தது.

    ஆவணி முதல் வார ஞாயிற்றுக்கிழமையான வருகிற 22-ந் தேதி சிம்ம வாகனத்திலும், இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான வருகிற 29-ந் தேதி அன்னவாகனத்திலும் அம்மன்புறப்பாடு நடைபெற உள்ளது. அடுத்தமாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி சிம்மவாகனத்திலும், தொடர்ந்து விழா நாட்களில் படிச்சட்டங்களில் அம்மன்புறப்பாடு நடக்கிறது.

    இந்த புறப்பாடுகள் அனைத்தும் கோவிலுக்குள் நடைபெறும். கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் வெளியில் புறப்பாடு இல்லை. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முத்துப்பல்லக்கு விழாவும், 17-ந் தேதி விடையாற்றியும் நடக்கிறது. அடுத்தமாதம் 12-ந் தேதி கோவில் வளாகத்தில் தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 14-ந் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. தெப்பத்திருவிழா நடைபெறவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர்.
    சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக, இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக பொது தீட்சிதர்கள் சார்பில் கோவிலில் அறிவிப்பு பலகை ஒன்றயைும் வைத்துள்ளனர்.
    41 அடி உயர ஆயிரம் கண்ணுடையாளுக்கு ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பூக்குழி, பால்குடம், முளைப்பாரி என வெகு விமரிசையாக நடைபெறும்.
    திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டி கிராமத்தில் ஆயிரம் கண்ணுடையாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 41 அடி உயரத்தில் அம்மன் சிலை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் 3 நாட்கள் திருவிழா நடைபெறும், ஆயிரம் கண்ணுடையாளுக்கு ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பூக்குழி, பால்குடம், முளைப்பாரி என வெகு விமரிசையாக நடைபெறும்.

    இந்த நிலையில் கொரோனா பரவலால் வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று பக்தர்கள் இல்லாமல் பூஜைகள் நடத்தப்பட்டது. கோவில் பணியாளர்கள் பால்குடம் எடுத்து, முளைப்பாரி எடுத்து அம்மனுக்கு குடம், குடமாக பால் அபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பூச்சொரிதல் நடைபெற்றது.

    கோவில் நிர்வாகி சக்தி அம்மாள் கூறும்போது, வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.ஆனால் தற்போது கொரோனா காலம் என்பதால் அரசு விதிமுறைகளின்படி பக்தர்கள் இல்லாமல் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், கொரோனாவில் இருந்து மக்களை காத்திடவும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது என தெரிவித்தார்.
    நல்ல தூக்கம் மட்டுமல்ல நிம்மதி மற்றும் நம்மிடமுள்ள சொத்துக்களும் பொருட்களும் நம்மை விட்டு போகாமல் இருக்கவும், அசூன்ய சயன விரதம் செய்ய வேண்டும் என்று பத்ம புராணத்தில் ஒரு குறிப்பு வருகிறது.
    சிரவண மாத கிருஷ்ண பட்ச துவிதியை திதி கிருஷ்ணர் மகாலட்சுமியுடன் சுகமாகத் தூங்கும் நாள் என புராணங்கள் கூறுகின்றது. அதனை அசூன்ய சயன விரதமாக அனுஷ்டிக்க வேண்டும். அனைத்து வைணவத் தலங்களிலும் முக்கியமாக சயன கோலத்தில் இருக்கும் தலங்களில் அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அசூன்யம் என்றால் சூனியம் இல்லாதது என்று பொருள். சயனம் என்றால் படுக்கையில் படுத்தல். நல்ல தூக்கம் மட்டுமல்ல நிம்மதி மற்றும் நம்மிடமுள்ள சொத்துக்களும் பொருட்களும் நம்மை விட்டு போகாமல் இருக்கவும், அசூன்ய சயன விரதம் செய்ய வேண்டும் என்று பத்ம புராணத்தில் ஒரு குறிப்பு வருகிறது. இது ஒரு வித்தியாசமான விரதம்.

    இதன் மூலமாக நமக்கு நிம்மதியான தூக்கமும், நிறைவான வாழ்க்கையும், தம்பதிகளிடையே அன்யோன்யமும் குடும்பத்தார் இடையே சினேகித உறவும், நட்பும் நல்ல முறையில் விளங்கும். அசூன்ய சயன விரத நாளில் விடியற்காலை எழுந்து வழக்கமாக பூஜைக்கு எப்படி தயாராவது போலவே தயாராக வேண்டும் .  அவசியம் அன்று திருமால் ஆலய தரிசனம் செய்ய வேண்டும். குறிப்பாக பள்ளிகொண்ட பெருமாள் சேவை தரும் ஆலய தரிசனம் சாலச் சிறந்தது.

    மாலை பூஜையறையில் விளக்கேற்றி கிருஷ்ணர் - ராதை அல்லது மஹாவிஷ்ணு மஹாலஷ்மி இணைந்த  விக்ரகம் அல்லது படத்தை ஒரு பலகையில் கோலமிட்டு வைத்து ஆவாகனம் செய்ய வேண்டும். அதனைப்  பூக்களால் அலங்கரிக்க வேண்டும். இப்பூஜையை தனியாகச் செய்வதைவிட, தம்பதிகளாக அமர்ந்து செய்வது உத்தமம்.  ரங்கநாத அஷ்டகம் கிருஷ்ணாஷ்டகம் மற்றும் பெருமாளுக்குரிய தோத்திரப் பாடல்களைப் பாடி அர்ச்சனை செய்ய வேண்டும்.  ஏலக்காய், குங்கும பூ போட்டு காய்ச்சிய வாசனையுள்ள பசும்பால் நிவேதனம் செய்ய வேண்டும்.புதிதாக வாங்கப்பட்ட பஞ்சுமெத்தை அல்லது பாய், தலையணை, போர்வையுடன் கூடிய படுக்கையில் கிருஷ்ணரையும் மகாலட்சுமியையும் சயனிக்க வைக்க வேண்டும்.

    அப்போது தாலாட்டுப்பாட வேண்டும்.
    “மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
    ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்சிறுதொட்டில்
    பேணியுனக்குப் பிரமன் விடுதந்தான்
    மாணிக்குறளனே தாலேலோ!
    வையம் அளந்தானே தாலேலோ!”

    என்று பாடி, பள்ளி அறையைச் சாத்திவிட்டு இரவு பகவான் சிந்தனையோடு படுத்து உறங்க வேண்டும்.  மறுநாள் காலை எழுந்து, முறையாகப்  புனர் பூஜை செய்து, கிருஷ்ணர், மஹாலக்ஷ்மி விக்கிரஹம்படம், தக்ஷிணை, வெற்றிலை பாக்கு பழம் புஷ்பம் வைத்து தானம் செய்து விட வேண்டும். இந்த விரதத்தை எல்லோரும் கடைப் பிடிக்கலாம். நன்றாக தூக்கம் வருபவர்களும் கூட.
    ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நெல்லையில் மூடப்பட்ட கோவில்களின் முன்பு பக்தர்கள் வழிபட்டனர். பள்ளிவாசல்கள் மூடப்பட்டதால் முஸ்லிம்கள் வீடுகளில் தொழுகை நடத்தினர்.
    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பெரும்பாலான கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கவில்லை.

    இதேபோன்று தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மூடப்பட்டன. அங்கு வழிபட பொதுமக்களை அனுமதிக்கவில்லை. இதுதொடர்பான அறிவிப்பு பலகைகள் வழிபாட்டு தலங்களின் முகப்பில் வைக்கப்பட்டு இருந்தன.

    ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று அம்மன் கோவில்களில் கூட்டம் அலைமோதும். தற்போது பக்தர்களுக்கு தடை காரணமாக, கோவில்களுக்குள் பக்தர்களை அனுமதிக்கவில்லை. எனினும் கோவில்களில் வழக்கமான பூஜைகள் எளிமையாக நடந்தது.

    நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பேராத்துசெல்வி அம்மன் கோவில், டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்கள் பூட்டப்பட்டு இருந்ததால், அவற்றின் வெளியே நின்று பக்தர்கள் வழிபட்டனர்.

    நெல்லையப்பர் கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்காததால் பலரும் வெளியில் நின்றே வழிபட்டு சென்றனர்.

    மேலப்பாளையம், பேட்டை, டவுன், சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டு இருந்தன. வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசல்களில் நடைபெறும் சிறப்பு தொழுகை நேற்று நடத்தப்படவில்லை. எனவே முஸ்லிம்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.

    இதேபோன்று பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயமும் மூடப்பட்டு இருந்தது. அங்கு பொதுமக்கள் பிரார்த்தனை நடத்த அனுமதிக்கப்படவில்லை.
    ×