search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாணிக்கம் விற்ற அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன்
    X
    மாணிக்கம் விற்ற அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன்

    மதுரை ஆவணி மூலத்திருவிழா: மாணிக்கம் விற்ற அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் சுவாமி கைலாசபர்வத வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று காலை மாணிக்கம் விற்ற லீலை நடந்தது. அப்போது சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன், மாணிக்கம் விற்ற லீலை அலங்காரத்தில் காட்சி அளித்தனர். பின்னர் இரவு சுவாமி கைலாசபர்வத வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.

    “மாணிக்கம் விற்ற லீலை”க்கான புராண வரலாறு வருமாறு:- முன்பொருகாலத்தில் மதுரையை ஆண்ட வீரபாண்டியன் என்ற அரசன் நீதியுடன் ஆட்சி புரிந்தான். அவனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த நேரத்தில் வேட்டையாட சென்ற அரசன் புலிக்கு இரையாகி இறந்தான். அந்த நேரத்தில் அரசனின் காமக்கிழத்தியரின் மக்கள் அரண்மனைக்குள் புகுந்து சகல செல்வங்களையும், அரசனின் மகுடத்தையும் கவர்ந்து சென்றனர். இதற்கிடையில் இளவரசனுக்கு முடிசூட்டலாம் என்று அமைச்சர்கள் முடிவு செய்தனர்.

    அப்போது, மணிமகுடம் உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்கள் களவு போனதை அறிந்து சோமசுந்தர பெருமானிடம் முறையிட கோவிலுக்கு சென்றனர். அப்போது சோமசுந்தர பெருமானே ஒரு நவரத்தின வியாபாரியாக தோன்றி அங்கு வந்து நடந்ததை கேட்டறிந்தார். மேலும் அவர் புதிய மணிமகுடம் செய்ய விலை உயர்ந்த நவமணிகளை கொடுத்து, அந்த மணிகளின் வரலாறு, குணம், குற்றங்கள், யார் எந்த மணியை அணிய வேண்டும் என்ற விவரங்களையும் கூறினார். பின்னர் புதிய மணிமகுடம் செய்து அதனை இளவரசனுக்கு சூட்டி, அவரை அபிடேகபாண்டியன் என்று அழையுங்கள் என்று கூறி விட்டு இறைவன் மறைந்தார்.

    இதற்கிடையில் கவர்ந்து செல்லப்பட்ட செல்வங்களும், மணிமகுடமும் மீண்டும் கிடைக்க பெற்று அனைவரும் நலமுடன் வாழ்ந்தார்கள். மேலும் அபிடேகப்பாண்டியன் செங்கோல் வழுவாமல் ஆட்சி புரிந்தான் என்று புராணம் கூறுகிறது.
    Next Story
    ×