search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா கோவில்"

    • இக்கோவிலின் கருவறையில் மகாவிஷ்ணு நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் இருக்கிறார்.
    • இங்கு வந்து வழிபடுபவர்களுக்குப் பயம் விலகி, நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், அடுவச்சேரியில் அமைந்திருக்கிறது, வாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோவில். இங்கு அட்சய திருதியை தொடங்கி, 8 நாட்கள் லட்சுமி தேவி அஷ்டலட்சுமியாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தோற்றத்தில் காட்சியளித்து அருள்கிறார். சிறப்பு மிக்க இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.

    தல வரலாறு

    விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக அமைந்தது, பரசுராமர் அவதாரம். பரசுராமர் ஒருமுறை, மகாலட்சுமியைத் தன் கைகளால் தழுவிய நிலையில் இருப்பது போன்ற மகாவிஷ்ணு சிலை ஒன்றை உருவாக்கினார். அதனை ஓரிடத்தில் நிறுவி, ஆலயம் அமைத்தார். பின்னர் அதை வேதியர்களிடம் ஒப்படைத்துச் சென்றார். பரசுராமரிடம் இருந்து அந்தக் கோவிலைப் பெற்றவர்கள், கோவிலுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் சிறப்பாகச் செய்து, லட்சுமி தேவியின் அருளைப் பெற்றுச் செல்வ நிலையில் உயர்ந்தனர்.

    பிற்காலத்தில் அவர்களது மரபுவழியில் வந்தவர்கள், கோவில் பணிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருக்கத் தொடங்கினர். அதனால், அவர்களுக்கு லட்சுமியின் அருள் கிடைக்காமல் போனது. மேலும் அவர்கள் செல்வத்தை இழந்து, வறுமையில் வாடினர். கோவில் பணிகள் எதையும் செய்யாததாலும், கோவிலுக்கு வந்து வழிபடுபவர்கள் இல்லாமையாலும், அந்த இடம் மனித நடமாட்டமில்லாமல் மாறிப் போனது. ஒரு கட்டத்தில் வழிபாடின்றி கிடந்த ஆலயத்தில் பூஜைகளைச் செய்ய, லட்சுமிதேவியே அங்கு வந்தாள்.

    அங்கிருந்த சாலக்குடி ஆற்றில் நீரெடுத்து, கோவில் பணிகள் அனைத்தையும் செய்து வரத் தொடங்கினாள். அப்படி ஒருநாள் லட்சுமி தேவி நீர் எடுத்து வரும்போது, அவரைப் பார்த்து வில்வமங்கள சுவாமிகள் ஆச்சரியமடைந்தார். அவர், லட்சுமி தேவியிடம் "ஆற்றில் இருந்து நீரெடுத்துச் செல்வது ஏன்?" என்று கேட்டார். லட்சுமி தேவி, அங்கிருக்கும் மகாவிஷ்ணு கோவில் குறித்த செய்தியைத் தெரிவித்து, அங்கு கோவில் பணி செய்து வந்தவர்கள், அதனைத் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிட்ட தகவலையும் சொன்னாள்.

    வில்வமங்கள சுவாமிகள், கோவிலைப் புறக்கணித்தவர்கள் திருந்திட, அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி, அவர்கள் மீது கருணைப் பார்வையைச் செலுத்தி, அவர்களை நல்வழிப்படுத்த லட்சுமிதேவியிடம் வேண்டினார். லட்சுமிதேவியும் அவர் வேண்டுகோளை ஏற்று, அட்சய திருதியை நாள் முதல் எட்டு நாட்களுக்கு, ஆலயத்தில் அஷ்டலட்சுமியாக இருந்து அருள் புரிவதாகவும், அவர்களது வறுமையைப் போக்கி அருளுவதாகவும் கூறினாள். உடனே வில்வமங்கள சுவாமிகள், கோவில் பணிகளைச் செய்து வந்தவர்களை அழைத்து வந்து, அக்கோவிலில் மீண்டும் வழிபாடுகளைச் செய்யும்படி அறிவுறுத்தினார்.

    அவர்களும் சுவாமிகள் சொன்னபடி, கோவில் பணிகளை மீண்டும் செய்யத் தொடங்கினர். பின்னர் ஆலயத்தில் அட்சயதிருதியை தொடங்கி எட்டு நாட்களுக்கு லட்சுமி தேவி, அஷ்டலட்சுமியாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தோற்றத்தில் அவர்களுக்குக் காட்சிஅளித்தாள். அதனால் கோவில் பணிகள் செய்தவர்களும், கோவிலுக்குச் சென்று வழிபட்டவர்களும் மீண்டும் அனைத்துச் செல்வங்களையும் பெற்று, உயர்ந்த நிலையை அடைந்தனர் என்று இக்கோவிலின் தலவரலாறு சொல்லப்படுகிறது.

    ஆலய அமைப்பு :

    கேரளக் கட்டுமான முறையில் அமைந்த இக்கோவிலின் கருவறையில் மகாவிஷ்ணு நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் இருக்கிறார். இவருக்குப் பின்புறத்தில் லட்சுமி தேவி சிற்பம் இருக்கிறது. அட்சய திருதியை நாளில் தொடங்கி 8 நாட்களுக்கு மட்டும் மகாவிஷ்ணுவின் இடதுபுறத்தில் லட்சுமிதேவி அமர்ந்த நிலையில் காட்சியளிப்பாள். இந்த ஆலயத்தில் மகாவிஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    இங்கு வந்து வழிபடுபவர்களுக்குப் பயம் விலகி, நீண்ட ஆயுள் கிடைக்கும். மாங்கல்ய பலன், குழந்தைப்பேறு கிடைக்கும். விவசாயம் மற்றும் வணிகம் பெருகும் என்பதுடன் அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும் என்பது பொதுவான பலனாக இருக்கிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், பட்டுத்துணி, கண்ணாடி ஆகியவற்றை வாங்கிக் கோவில் சன்னிதியில் சமர்ப்பித்து வழிபடுகின்றனர். கோவில் அர்ச்சகர்கள், சமர்ப்பிக்கப்படும் பட்டுத்துணி மற்றும் கண்ணாடியை வழிபாட்டிற்குப் பின்பு, மீண்டும் பக்தர்களிடமேத் திருப்பித் தந்துவிடுகின்றனர்.

    இந்தப் பொருட்களை வீட்டின் பூஜையறையில் வைத்தால், வீட்டில் செல்வம் பெருகும் எனும் நம்பிக்கை இருக்கிறது. இதே போன்று, சுமங்கலிப் பெண்கள் அரிசி மற்றும் மஞ்சள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து வழிபடுகின்றனர். அரிசியை மகாவிஷ்ணுவுக்கும், மஞ்சளை லட்சுமி தேவிக்கும் சமர்ப்பிப்பதாகச் சொல்லி, அர்ச்சகர் சொல்லும் மந்திரங்களைச் சொல்லி வழிபடுகின்றனர்.

    இதன் மூலம், வீட்டிலிருக்கும் அனைவருக்கும் நல்ல உடல் நலமும், பொருள் வளமும் கிடைக்கும் என்கின்றனர். இந்தத் திருத்தலத்தில் சித்திரை மாதம் அட்சய திருதியை நாளில் தொடங்கி 8 நாட்கள் லட்சுமிதேவி, அஷ்டலட்சுமியாக அருள்கிறார்.

    அட்சய திருதியை நாள் அன்று வீரலட்சுமி, இரண்டாம் நாளில் கஜலட்சுமி, மூன்றாம் நாளில் சந்தான லட்சுமி, நான்காம் நாளில் விஜயலட்சுமி, ஐந்தாம் நாளில் தான்யலட்சுமி, ஆறாம் நாளில் ஆதிலட்சுமி, ஏழாம் நாளில் தனலட்சுமி, எட்டாம் நாளில் மகாலட்சுமியாக காட்சி தருகிறாள். இந்த எட்டு நாட்களிலும் தாம்பூல சமர்ப்பண வழிபாடு எனும் சிறப்பு வழிபாடு நடத்தப் பெறுகிறது.

    அமைவிடம் :

    எர்ணாகுளத்தில் இருந்து ஆலுவா செல்லும் பேருந்தில் அத்தாணி என்னும் இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து மேற்கே 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் அடுவச்சேரியை அடையலாம்.

    • பராசக்தியின் உத்தரவை ஏற்று அந்த இடத்தில் ஒரு சிறிய கோவில் கட்டப்பட்டது.
    • செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் சிறப்பு தரிசனம் நடத்தி வருகிறார்கள்.

    கேரள மாநில தலைநகரம் திருவனந்தபுரத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் பட்டத்தின், மரப்பாலம் முட்டடா சாலையின் மேற்குப்பகுதியில் சக்தி வாய்ந்த ஆதிபராசக்தி கோவிலான பிரசித்தி பெற்ற மாங்குளம் ஸ்ரீ பராசக்தி தேவி கோவில் உள்ளது. அனந்தபுரியின் மூகாம்பிகை என்றழைக்கப்படும் இக்கோவிலில், தினசரி பூஜை நடைபெற்று வருகிறது.

    இந்த கோவில் திருநடையில் நினைத்த காரியங்கள் நிறைவேறவும், நோய்களில் இருந்து நிவாரணம் பெறவும் பலா, அன்னாசி உள்பட முள்ளுள்ள பழங்களை படைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

    இந்த கோவில் உருவான வரலாறு குறித்த விவரம் வருமாறு:-

    ஆதிபராசக்தியின் பக்தரான கோவில் தலைமை பூசாரி, பல ஆண்டுகளுக்கு முன் கொடுங்கல்லூர் கோவில் தரிசனம் முடிந்து திரும்பும் வழியில், முக ஐஸ்வர்யத்துடன் ஒரு மூதாட்டியும், ஒரு இளம்பெண்ணும் பேசிக்கொண்டு இருப்பதை கண்டார். அவர்களை சந்தித்த அவருக்கு பெண்கள் பூஜை ரகசியங்களை சொல்லி கொடுத்தனர். இதை தொடர்ந்து வீட்டிற்கு வந்த அவர் தனி அறையில் அமர்ந்து தமிழில் உருக்கமாக பிரார்த்தனை செய்ய தொடங்கினார்.

    அப்போது தான் குடி இருக்க தனியாக இடம் வேண்டும் என வேண்டினார். அடுத்த நாள் அவர் தந்தையின் கனவில் தோன்றிய தேவி, ஆதிபராசக்தியின் அருள் பக்தரிடம் நிறைந்து உள்ளது எனவும், ஆதலால் பக்தரின் வேண்டுதலை ஏற்று இப்போது வசிக்கும் இடத்திலேயே ஒரு சிறிய கோவில் கட்டி கொடுக்கவும் என்று கூறி கனவில் இருந்து மறைந்தார்.

    பக்தர்கள் வருகை

    பராசக்தியின் உத்தரவை ஏற்று அந்த இடத்தில் ஒரு சிறிய கோவில் கட்டப்பட்டது. அதில் அந்த பக்தர் பூசாரியாக ஆதிபராசக்திக்கு பூஜை வழிபாடுகளை நிறைவேற்றினார். பூஜைகளை முறைப்படி கற்றிராத அந்த பூசாரி நாளடைவில், முற்றும் தெரிந்த பூசாரியை போல் ஆதிபராசக்தியின் அருளால் பூஜை வழிபாடுகளை நிறைவேற்றி வருகிறார். இந்த கோவில்தான் மாங்குளம் ஸ்ரீபராசக்தி தேவி கோவிலாக அறியப்படுகிறது. ஆதி பராசக்தியின் அருட் செயலை கேள்விப்பட்டு கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, அண்டை மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வர தொடங்கினர்.

    குறிப்பாக செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் சிறப்பு தரிசனம் நடத்தி வருகிறார்கள். இதை தொடர்ந்து ஆதிபராசக்தியின் பக்தனான தலைமை பூசாரி, பிரச்சினைகளுக்கு பரிகார மார்க்கங்களை சொல்லி கொடுக்க தொடங்கினார். அவர்களின் துன்பங்களுக்கு பூசாரி பல்வேறு பரிகாரங்களை பரிந்துரை செய்து வருகிறார். நினைத்த காரியங்கள் நிறைவேறவும், நோய், நொடிகளில் இருந்து மீண்டு வரவும் இங்கு பரிகாரம் சொல்லி கொடுக்கப்படுவதால் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் தேவியை தரிசிக்க கோவிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். ஸ்ரீ ஆதிபராசக்தி தேவியையும், ஸ்ரீ பத்ரகாளி தேவியையும், சமமாக வழிபடும் இக்கோவிலில் திருவிழா நாட்களில் நடத்தப்படும் அஷ்டலட்சுமி பூஜை, படைப்பு, பூப்படை ஆகியவை சிறப்பானவையாகும்.

    ஆதிபராசக்தியின் தெய்வீக அருள் குடிகொண்ட இக்கோவிலில் நாளைமறுநாள் (சனிக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை 11 நாட்கள் மகாகாலேஸ்வர யாகம் நடக்கிறது.மகாகாலேஸ்வர யாக பூஜைகள் 16-ந் தேதி இரவு 8 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    • கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் லட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள்.
    • பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 66 வது திவ்ய தேசம்.

    மூலவர் - நாவாய் முகுந்தன்

    தாயார் - மலர்மங்கை நாச்சியார்

    தீர்த்தம் - கமல தடாகம்

    திருவிழா - வைகுண்ட ஏகாதசி, திருவோணம்

    மாநிலம் - கேரளா

    தல வரலாறு :

    பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 66 வது திவ்ய தேசம். முன்னொரு காலத்தில் மகாலட்சுமியும், கஜேந்திரனும் தாமரைப் பூக்களை பறித்து பெருமாளைப் பூஜித்து வந்தனர். ஒரு நாள் கஜேந்திரனுக்கு அர்ச்சனை செய்வதற்கு பூக்கள் இல்லாமல் போனது.

    எனவே கஜேந்திரன் பெருமாளிடம் தனது நிலையை கூறி வருத்தப்பட்டான். உடனே பெருமாள் தேவியை அழைத்து இனிமேல் பூ பறிக்க வேண்டாம் கஜேந்திரனுக்கு விட்டுக் கொடு என்றார். லட்சுமியும் அவ்வாறே செய்தாள். இதனால் மகிழ்ந்த கஜேந்திரன் ஏராளமான பூக்களைப் பறித்து பெருமாளை தரிசித்து வந்தான்.

    பூஜையின்போது பெருமாள், லட்சுமி தேவியை தன்னுடனே தங்க சிம்மாசனத்தில் அமர செய்து, கஜேந்திரனின் பூஜையை ஏற்று தரிசனம் தந்ததாக வரலாறு கூறுகிறது.

    கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் லட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள். ஒருமுறை 9 யோகிகள் சேர்ந்து பெருமாளை நினைத்து தவம் செய்துள்ளனர். எனவே இத்தலம் நவகிரக ஸ்தலம் என அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் "நாவாய் ஸ்தலம்' ஆனது. இதை தற்போது "திருநாவாய்" என அழைக்கிறார்கள். மிகப்பழமையான இக்கோயிலின் உட்புற சுவர்களில் காலத்தால் அழியாத பல ஓவியங்கள் இன்றும் உள்ளன.

    திறக்கும் நேரம் - காலை 5 மணி முதல் பகல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 7;30மணி வரை

    • மதுரை மீனாட்சி அம்மனே, இங்கு மீன்குளத்தி பகவதியாக வீற்றிருப்பதாக தல வரலாறு சொல்கிறது.
    • கொடிமரத்தைக் கடந்தால், மூலவரான மீன்குளத்தி பகவதி அம்மனை தரிசிக்கலாம்.

    கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பல்லசேனா என்ற ஊர். இங்கு மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மனே, இங்கு மீன்குளத்தி பகவதியாக வீற்றிருப்பதாக தல வரலாறு சொல்கிறது. அதுபற்றி பார்ப்போம்.

    முன்னொரு காலத்தில் கடும் பஞ்சம் காரணமாக சிலர் பாலக்காடு மாவட்டத்தின் கிழக்குப் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். அங்கு காணப்பட்ட செழிப்பு காரணமாக, அவர்களின் வணிகமும் செழித்து வளர்ந்தது. அதனால் அவர்கள் அங்கேயே நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினர். அவர்களில் மதுரை மீனாட்சி அம்மனின் மீது அளவு கடந்த பக்தி கொண்ட ஒரு பெரியவர் குடும்பமும் இருந்தது.

    அவர்கள் அவ்வப்போது மதுரைக்குச் சென்று மீனாட்சியை தரிசனம் செய்து வருவது வழக்கம். ஒரு முறை அவர் தன் குடும்பத்துடன் மீனாட்சியை தரிசித்து விட்டு ஊர் திரும்பினார். மறுநாள் பல்லசேனாவில் உள்ள ஒரு குளத்தில் குளிப்பதற்காகச் சென்றார். குளத்தின் கரையில் குடையை விரித்து, தான் கொண்டு வந்திருந்த பொருட்களை அதன் அடியில் வைத்து விட்டு குளித்தார்.

    கரைக்கு வந்து குடையை எடுக்க முயன்றபோது, அதை அசைக்கக் கூட முடியவில்லை. பொருட்களையும் எடுக்க முடியவில்லை. பலமுறை முயற்சித்தும் பலன் இல்லாததால் பயந்து போன அவர், வீட்டிற்குச் சென்று குடும்ப உறுப்பினர்களிடம் நடந்ததைச் சொன்னார். அவர்களும், விஷயத்தைக் கேள்விபட்ட ஊர் மக்கள் பலரும் அங்கு குவிந்தனர். அவர்களாலும் குடையையும், அதன் அடியில் இருந்த பொருட் களையும் அசைக்க முடியவில்லை.

    அப்போது அங்கே ஒரு அசரீரி கேட்டது. "இந்த தள்ளாத வயதில் நீ என்னை தரிசிப்பதற்காக மதுரைக்கு வர வேண்டாம். உனக்காக நானே இங்கு வந்துள்ளேன். எனக்கு இங்கே ஒரு கோவில் கட்டு" என்றது அந்தக் குரல். இதையடுத்து அந்தப் பெரியவரும், குடும்பத்தினரும் இணைந்து அங்கு அம்மனுக்கு ஒரு ஆலயம் எழுப்பினர். குடை மண்ணில் பதிந்து போனதால், இந்த பகுதிக்கு 'குடைமன்னு' என்ற பெயரும் உண்டு.

    இந்த ஆலயத்தின் கொடி மரம் தேக்கு மரத்தால் ஆனது. இதை செப்புத் தகடு கொண்டு வேய்ந்துள்ளனர். கொடிமரத்தைக் கடந்தால், மூலவரான மீன்குளத்தி பகவதி அம்மனை தரிசிக்கலாம். இது தவிர சப்த மாதர்கள், கணபதி, வீரபத்திரர், துர்க்கை, பரமேஸ்வரன், பைரவர், சாஸ்தா ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்தக் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும், மாசி மாதம் நடைபெறும் 8 நாள் திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது.

    ×