என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருமணத் திருத்தலம் என்பதால் ஸ்ரீபரிமளசுகந்த நாயகியை வழிபட திருமணத்தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மூலவர்     – உத்தவேதீஸ்வரர்
    அம்மன்     – அரும்பன்ன வனமுலைநாயகி
    தல விருட்சம் – உத்தாலமரம்
    தீர்த்தம்     – பதும, சுந்தர, காவிரி தீர்த்தங்கள்
    பழமை     – 1000 வருடங்களுக்கு முன்
    புராணப் பெயர்     – திருத்துருத்தி, குற்றாலம்

    திருத்துருத்தி குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 37-ஆவது சிவத்தலமாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுந்தரருக்கு உண்டான நோய் இத்தலத் தீர்த்தத்தில் நீராட நீங்கியதென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

    தல விருட்சம் உத்தால மரம். இதைக் கொண்டு உத்தால வனம் எனப்பட்டது மருவி குத்தாலம் ஆயிற்று.

    தலவரலாறு

    ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இத்திருக்கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர்ச் சோழ மன்னர்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. இத்தலத்தில் ஸ்ரீ சௌந்திர நாயகி ’ஸ்ரீ சக்கர பீட நிலையாய நம’ என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம வடிவில் அமைந்துள்ளார். ஸ்ரீபரிமளசுகந்த நாயகி ’பிந்து தர்பண விந்துஷ்டாயின நமஹ’ என்ற வடிவிலும் அமைந்துள்ளார். பரத மகரிஷி தமக்குக் குழந்தைப்பேறு வேண்டி செய்த யாகத்தில் தோன்றியவர் ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி

    கோயில் அமைப்பு

    ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தியைக் காணலாம். கொடிமரத்தில் கொடிமர விநாயகர் உள்ளார். வலப்புறம் உத்தால மரம் உள்ளது. நந்தியைக் கடந்து உள்ளே செல்லும்போது இடப்புறம் அம்மன் சன்னிதி உள்ளது. அதற்கடுத்து உள்ளே மகாலட்சுமி சன்னிதி, சபாநாயகர் சன்னிதிகள் உள்ளன. எதிரில் உற்சவமூர்த்திகள் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் அடிமுடிகாணா அண்ணலும், தட்சிணாமூர்த்தியும் உள்ளனர். கருவறை வெளிச்சுற்றில் நவக்கிரகம், மங்களசனீஸ்வரர், பைரவர், விசுவநாதர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், ஆரியன் ஆகியோர் உள்ளனர். அருகே லிங்கத் திருமேனிகள் உள்ளன. அடுத்து 63 நாயன்மார்கள் உள்ளனர். திருச்சுற்றில் வலம் வரும்போது சண்டிகேஸ்வரர் சன்னிதி காணப்படுகிறது.

    மூலவர்– உக்தவேதீஸ்வரர். அம்மன்– அரும்பன்ன வனமுலையம்மன். இறைவனே இங்கு திருமணம் நடத்தியதால் எப்பேர்ப்பட்ட திருமண தடையும் நீங்கிவிடும். தன்னால் தீண்டப்படும் பொருள்கள் எல்லாம் அழிந்ததால் வருத்தமடைந்த அக்னி இங்கு வந்துதான் தன் குறையைப் போக்கி அனைவருக்கும் பயனுள்ளவன் ஆனான். இங்கு பார்வதி, காளி ஆகியோரும், காசிபன் , ஆங்கீரசன், கவுதமன், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர் ஆகிய சப்த ரிஷிகளும் இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர்.

    திருமணத் திருத்தலம் என்பதால் ஸ்ரீபரிமளசுகந்த நாயகியை வழிபட திருமணத்தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    அமைவிடம்

    அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை உத்தவேதீஸ்வரர் திருக்கோயில்,
    குத்தாலம் (திருத்துருத்தி),
    நாகப்பட்டினம் மாவட்டம்.
    பரம்பொருளின் மீது வைத்திருந்த அதீத பக்தியின் காரணமாக, ஒரு தொழிலாளி உருவாக்கிய அந்த பாதுகை, 14 ஆண்டுகள் அயோத்தியின் அரியாசனத்தில் வீற்றிருந்து அரசு புரிந்தது.
    அயோத்தியில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார், ஆத்மபந்து. அவருக்கு ராமபிரானின் மீது அளவுகடந்த அன்பும், பக்தியும் இருந்தது. ராமபிரான் வனவாசம் செல்வதற்கான எந்த முகாந்திரம் காணப்படாத காலகட்டம் அது. தசரதர் தன்னுடைய மூத்த மகனான ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருந்தார். அதற்கான ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. பல நாடுகளில் இருந்தும் பலரும் வருகை தந்து, ராமனுக்கு அன்பு பரிசளித்தனர். இன்னும் பரிசளிக்க பலர் காத்திருந்தனர்.

    ஆத்மபந்துவுக்கு, தானும் ராமபிரானுக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் ஏழையான தன்னால் என்ன பரிசளிக்க முடியும் என்று நினைத்தவர், திடீரென்று ஒரு முடிவுக்கு வந்து ஒரு ஜோடி செருப்பை தயார் செய்து கொண்டு, அரண்மனையின் வாசலில் போய் கூட்டத்தோடு கூட்டமாக நின்றார். அந்த நேரம் பார்த்து முனிவர்களின் கூட்டம் ஒன்று, ராமபிரானைப் பார்ப்பதற்காக அரண்மனைக்குள் நுழைந்தது. அதில் ஒரு முனிவரின் பார்வை, ஆத்மபந்துவின் மீது விழுந்தது.

    முனிவருக்கு, ஆத்மபந்துவின் முகத்தில் இருந்த தவிப்பும், ஏதோ ஒரு காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணமும் புரிந்துபோனது. அவர் ஆத்மபந்துவிடம் சென்று, “என்னப்பா.. ஏதோ சொல்ல விரும்புகிறாய் போல் தெரிகிறதே?” என்று கேட்டார்.

    “மகா முனியே.. நான் ஒரு ராம பக்தன். அவருக்காக ஒரு ஜோடி பாதுகையை செய்து கொண்டு வந்திருக்கிறேன். அதை அவருக்கு பரிசளிக்க வேண்டும் என்ற ஆசை என்னை உந்தித் தள்ளுகிறது. ஆனால் எப்படி உள்ளே போவது, அனுமதி கிடைக்குமா? என்ற அச்சத்தில் நின்று கொண்டிருக்கிறேன்” என்றார்.

    அதைக்கேட்ட முனிவர், “ராமன் எல்லோருக்கும் சொந்தமானவர். நீ என்னோடு வா.. உனக்கான வாய்ப்பை நான் பெற்றுத் தருகிறேன்” என்று, ஆத்மபந்துவை அழைத்துக் கொண்டு அரண்மனைக்குள் சென்றார்.

    அங்கு லட்சுமணன், முனிவர்கள் அனைவரையும் வரவேற்றார். அப்போது ஆத்மபந்துவை அழைத்துச் சென்ற முனிவர், “இவர் ராமபிரானுக்கு ஏதோ ஒரு பரிசளிக்க வேண்டும் என்று வந்துள்ளார்” என்று கூறி ஆத்மபந்துவை, லட்சுமணன் முன்பாக நிறுத்தினார்.

    லட்சுமணன், உடனடியாக ராமர் இருக்கும் அறை நோக்கிச் சென்றார். சிறிது நேரத்தில் உள்ளே இருந்து வெளிப்பட்ட காவலாளி, “இங்கே ஆத்மபந்து என்பவர் யார்? யுவராஜா அவரை அழைக்கிறார்” என்றார்.

    ஆத்மபந்துவுக்கு கையும் காலும் ஓடவில்லை. பறப்பதுபோன்ற நிலையிலேயே, ராமன் இருக்கும் அறைக்குள் நுழைந்தார்.

    ஆத்மபந்துவைப் பார்த்ததும் புன்னகைத்த ராமன், “எனக்காக என்ன பரிசு கொண்டுவந்திருக்கிறாய்?” என்றார்.

    ஆத்மபந்து தான் வைத்திருந்த பைக்குள் இருந்து, ஒரு புத்தம் புது ஜோடி பாதுகையை எடுத்து, ராமனின் காலடியில் வைத்தார்.

    அதைப் பார்த்ததும், “என்னுடைய கால் அளவுக்கு இது சரியாக இருக்குமா?” என்றார், ராமபிரான்.

    “சரியாக இருக்கும் பரம்பொருளே.. ஏனெனில் இரண்டு மூன்று நாட்களாக நீங்கள் சரயு நதியில் குளித்து விட்டு வெளியேறியதும், அங்கே பதிந்திருந்த உங்களின் கால் தடத்தை அளந்து எடுத்து, அதை சரி பார்த்து இதை யதார் செய்திருக்கிறேன்” என்று பதிலளித்தார், ஆத்மபந்து.

    ஆச்சரியத்தோடு ஆத்மபந்துவைப் பார்த்த ராமன், அதை காலில் அணிந்தார். ஒரு நபரை நேரிடையாக நிறுத்தி அளவெடுத்து தயார் செய்தால் கூட, இவ்வளவு துல்லியமாக பொருந்திப் போகும் ஒரு பாதுகையை தயார் செய்ய முடியுமா? என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு துல்லியமாக ராமரின் கால்களோடு பொருந்திப்போய் இருந்தது, அந்த பாதுகை.

    ஆத்ம திருப்தியோடு, அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி, அரண்மனையை விட்டு வெளியேறினார். ஆனால் அடுத்த தினங்களிலேயே, ராமரின் பட்டாபிஷேகம் நின்று, அவர் வனவாசம் செல்ல நேர்ந்தது. அப்படி அவர் வனத்திற்கு புறப்பட்டபோது, ஆத்மபந்து அளித்த பாதுகையை மட்டுமே அணிந்து சென்றார்.

    விஷயம் அறிந்து வனத்தில் ராமரை சந்தித்த பரதன், எனக்கு ஆட்சி செய்ய விருப்பம் இல்லை என்றும், நீங்கள் நிர்ப்பந்திப்பதால் ஆட்சி செய்வதாகவும், ஆனால் அரியாசனத்தில் அமரமாட்டேன், அதற்கு பதிலாக உங்களுடைய பாதுகையை வைத்து ஆட்சி செய்வேன் என்று கூறி, ராமன் அணிந்திருந்த பாதுகையை வாங்கிச் சென்றான்.

    பரம்பொருளின் மீது வைத்திருந்த அதீத பக்தியின் காரணமாக, ஒரு தொழிலாளி உருவாக்கிய அந்த பாதுகை, 14 ஆண்டுகள் அயோத்தியின் அரியாசனத்தில் வீற்றிருந்து அரசு புரிந்தது.
    இந்த தலத்திற்கு வந்து அம்மனை தரிசித்தால் நாகதோஷம், கால சர்ப்பதோஷம், களத்திரதோஷம், முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
    தஞ்சாவூர் அருகே மிக அமைதியான சூழலில், பெரிதாக எடுப்பிக்கப்பட்டுள்ள மிகத் தொன்மையான கோவில் வல்லம் ஆலக்குடி சாலையில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

    வல்லம் கடைத்தெருவிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திலும், ஆலக்குடியில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது. மிகச் சக்தி வாய்ந்த இந்த ஏகவுரியம்மனை நாடி ஞாயிறு, செவ்வாய், வெள்ளி நாட்களில் அதிக மக்கள் வருகின்றனர்.

    ஊர்ப்பஞ்சாயத்திலோ, நீதிமன்றத்திலோ நியாயம் கிடைக்கப் பெறாத மக்களும், நீதிமன்றத்திற்குச் செல்ல வசதியற்ற மக்களும் இந்த ஏகவுரியம்மனிடம் வந்து முறையிடுகின்றனர்.

    பக்தர்கள் தங்கள் முறையீட்டை ஒரு காகிதத்தில் எழுதி அதாவது சீட்டு எழுதி அதனை வல்லம் கௌரி அம்மன் கையில் கட்டச் செய்துவிட்டுச் சென்றால், விரைவில் அதற்கான நியாயம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்காகவே இந்த கௌரியம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

    கோவில் கருவறையில் ஏகவுரி அம்மனைச் சுற்றியபடி இரண்டு நாகங்கள் இருப்பதை காணலாம். ராகுவும், கேதுவும் அம்மனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலம் இது. ராகு, கேது தோஷம் நீங்கும் தலம். இந்த தலத்திற்கு வந்து அம்மனை தரிசித்தால் நாகதோஷம், கால சர்ப்பதோஷம், களத்திரதோஷம், முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    ஏகவுரி அம்மன் கோவிலில் பிராது கட்டும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. சொத்தை பறிகொடுப்பது, திருட்டு போன்ற சம்பவங்களுக்கு அம்மனிடம் பிராது கொடுப்பதால் நியாயம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை. இதுபோன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நடந்த சம்பவங்களை கோவில் பூசாரியிடம் ஒரு வரிவிடாமல் கூறுவார்கள். அதற்கு பூசாரி அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்து முறையிடுவார். இதைக்கேட்டு ஏகவுரி அம்மன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கச்செய்கிறாள் என்பது ஐதீகம்.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரத நாட்டியம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    விழாவின் 9-ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக காலை 7.30 மணிக்கு சாமியும், அம்பாளும் தட்டு வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் பவனி வந்து மீண்டும் கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் அம்பாள் உடன் கூடிய சாமி, அறம் வளர்த்த நாயகி அம்மன், விநாயகரை தனித்தனியாக வாகனங்களில் எழுந்தருளச் செய்து மலர்களால் அலங்கரித்து மேள, தாளம் முழங்க எடுத்து வரப்பட்டது. அம்பாளுடன் கூடிய சாமியை அம்மன் தேரிலும், அறம் வளர்த்த நாயகி அம்மனை இந்திரன் தேர் சப்பரத்திலும், விநாயகரை பிள்ளையார் தேரிலும் எழுந்தருள செய்தனர்.

    சரியாக 9.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. விநாயகர் தேர், அம்மன் தேர், சப்பரத் தேர் என அடுத்தடுத்து இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். தேர்கள் ரதவீதிகளில் வலம் வந்து 12 மணிக்கு மீண்டும் நிலைக்கு வந்தன. பின்னர் சாமிகள் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.

    தேரோடும் வீதியில் பக்தர்களுக்கு பானகம், மோர், தண்ணீர் மற்றும் அன்னதானம் போன்றவை பல்வேறு அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்டன.

    தேரோட்ட நிகழ்ச்சியில் நாகர்கோவில் மேயர் மகேஷ், அரசு வக்கீல் மதியழகன், குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், கண்காணிப்பாளர் சிவகுமார், முன்னாள் கண்காணிப்பாளர் சோனாச்சலம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குற்றாலிங்கம், சுசீந்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் கமலேஸ்வரி, பேரூராட்சி தலைவி அனுசுயா, துணைத்தலைவர் சுப்பிரமணியபிள்ளை பேரூராட்சி கவுன்சிலர்கள் செண்பகவல்லி, வசந்தி, வள்ளியம்மாள், வீரபத்திர பிள்ளை, காசி, சுரேஷ், ஆனிஎலிசபெத், கலைச்செல்வி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், சுசீந்திரம் தெய்வீக இயல், இசை, நாடக சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    10-ம் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு மேல் கோவில் அருகாமையில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழாவும், நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகம், பக்த சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    தங்குதடை இல்லாத வாழக்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், மங்கல வாய்ப்புகளையும், மாபெரும் சக்தியையும் பொங்கிவரும் உள்ளத்தில் தன்னம்பிக்கையையும், செந்நிற கனிவைத்து தீபாராதனை செய்ய வேண்டும்.
    வருவாய் அதிகரிக்க வேண்டுமானால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். வாரத்தின் ஏழு நாட்களில் மூன்றாவது நாளாக இடம்பிடிப்பது செவ்வாய்க்கிழமை. பொருளாதார நிறைவையும் வழங்குவது அங்காரகன்தான். அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி.

    முருகப்பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை இந்த தெய்வங்களை வணங்கினால் கவலைகள் அகலும். செந்நிற ஆடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்பது; நைவேத்தியமாக அன்றை தினம் அங்காரகனுக்கு முக்கியத்துவம் உகந்த நாளாகும். தங்குதடை இல்லாத வாழக்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், மங்கல வாய்ப்புகளையும், மாபெரும் சக்தியையும் பொங்கிவரும் உள்ளத்தில் தன்னம்பிக்கையையும், செந்நிற கனிவைத்து தீபாராதனை செய்ய வேண்டும்.

    கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அமைந்த செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு பலன் அதிகம் உண்டு. வேலை வணங்குவதே வேலை எனச் சொல்லி வீட்டில் வேல் வழிபாடும் செய்யலாம். வீட்டு பூஜையறையின் நடுவில் வேல் வைத்து இருபுறமும் இரு விளக்குகள் வைத்து ஒரு விளக்கில் மூன்று திரிகளும், மற்றொரு விளக்கில் மூன்று திரிகளும் ஆக ஆறு தீபமிட்டு ஆறுமுகற வழி செய்து வந்தால், சீரும் சிறப்பும் வந்து சேரும். இந்த விரதத்தை மேற்கொள்ளும்போது, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள்ள படம் வைத்து வழிபட வேண்டும்.

    முன்னதாக விநாயகர் படத்தையும் வைத்து வழிபட வேண்டும். அன்னதான பிரியர் முருகன் என்பதால், செவ்வாய்கிழமை அன்னதானம் வழங்கினால் முருகனின் முழு அருளுக்கு பாத்திரமாகலாம். செவ்வாய்கிழமை பிறந்தவர்களும், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள். ரத்த சம்பந்தமான நோய் இருப்பவர்கள், ஒன்பது வாரம் இல்லத்தில் விரதம் இருந்து 10 வது வாரம் பலன் தரும் பரிகார தலத்திற்கு சென்று வழிபட்டால், நிலைமை சீராகும். வாழ்வு சிறக்கும்.
    கல்யாண ரங்கநாத பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார் கோவில் நந்தவனத்தில் எழுந்தருளினர். அங்கு அவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
    திருவெண்காடு அருகே உள்ள திருநகரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்யதேச கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும், பஞ்ச நரசிம்மர் கோவில்களில் இரணியன் நரசிம்மர் மற்றும் யோக நரசிம்மர் சுவாமிகள் தனிசன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.

    இந்த கோவிலில் அக்னி நட்சத்திர காலத்தில் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். கடந்த 60 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட இந்த உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

    இதனையொட்டி கல்யாண ரங்கநாத பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார் கோவில் நந்தவனத்தில் எழுந்தருளினர். அங்கு அவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனையடுத்து பாசுரங்கள் பாடப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதனையடுத்து நந்தவனத்தில் புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதில், கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன், உபயதாரர் சீனிவாசன், பக்த ஜன சபை தலைவர் ரகுநாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 60 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட வசந்த உற்சவம் தற்போது தொடங்கியுள்ளது, பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ‘கூழ் குடித்தாலும் குருகூரில் வசித்து திருவடி சேர்’ என்றொரு பழமொழி உண்டு. இந்த குருகூரின் மற்றொரு பெயர் ஆழ்வார் திருநகரி என்பதாகும். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
    ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) ஆதிநாதன் திருக்கோயில் 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வார் அவதாரத் தலம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது. இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார்.

    ‘கூழ் குடித்தாலும் குருகூரில் வசித்து திருவடி சேர்’ என்றொரு பழமொழி உண்டு. இந்த குருகூரின் மற்றொரு பெயர் ஆழ்வார் திருநகரி என்பதாகும். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று.

    இங்கே கோவிந்த விமானம் என்கிற விமானத்தின் கீழ், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். இவரது திருநாமம் ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் என்பதாகும். முதன் முதலில் பெருமாள் தோன்றி நின்ற தலம் என்பதால், ‘ஆதிநாதன்’ என்று அழைக்கப்பட்டார். ஆதிநாதவல்லி மற்றும் குருகூர்வல்லி என இரண்டு தாயார்கள் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலித்து வருகிறார்கள்.

    வைணவ சித்தாந்த வழிகாட்டிகளுள் ஒருவரான நம்மாழ்வார் அவதரித்த தலம் இது. நம்மாழ்வாரின் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள இத்தலத்து இறைவனை, பிரம்ம தேவர், நம்மாழ்வார், மதுரகவிகள் ஆகியோர் தரிசித்து பேறு பெற்றுள்ளனர். இத்தலத்தின் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் மற்றும் தாமிரபரணி நதி ஆகியவை ஆகும். பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், ஆழ்வார் பெயராலேயே வழங்கப்பெறும் திருத்தலம் இது ஒன்றுதான் என்றால் அது மிகையாகாது.

    குருகு என்றால் ‘பறவை, சங்கு’ எனப் பல பொருள் உண்டு. இத்தலத்தில் உள்ள பெருமாளை, சங்கன் எனும் சங்குகளின் தலைவன் வழிபட்டதால் இத்தலம் ‘குருகூர்’ எனப் பெயர் பெற்றது. பிரளய காலம் முடிந்த பின் தோன்றிய முதல் தலம் என்பதால் ‘ஆதி ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஆதிசேஷனின் அவதாரமாகிய லட்சுமணன், திருப்புளியாழ்வாராக இங்கு அவதரித்தமையால் இத்தலம் ‘சேஷ ஷேத்ரம்’ எனப்படுகிறது.

    நான்முகனிடம் உயிர்களைப் படைக்கும் பணியினை பரந்தாமன் அளித்திருந்தார். இருப்பினும் பிரம்மனுக்கு அது தொடர்பாக சிறிது ஐயம் ஏற்பட்ட காலத்தில் எல்லாம் திருமாலின் உதவியை நாடினார். ஒருமுறை திருமாலைச் சந்திக்க எண்ணி ஓராயிரம் வருடங்கள் கடும் தவம் புரிந்தார் பிரம்மதேவர். இதையடுத்து அவர் முன் விஷ்ணு தோன்றினார். பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவரது படைப்புத் தொழிலுக்கு, எல்லா காலத்திலும் உறுதுணையாக இருப்பதாக வாக்களித்தார். இவ்வாறு பிரம்மதேவருக்கு அருள்புரிவதற்காக அவதரித்த தலமே குருகாசேத்திரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் ஆகும்.

    கோவில் அமைப்பு :

    திருக்கோவில் ராஜகோபுரம் மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்புடன் அமைந்துள்ளது. ஆதிநாதவல்லி, பரமபத நாதன், சக்கரத்தாழ்வார், தசாவதாரம், குருகூர் நாச்சியார், நம்மாழ்வார் ஆகிய சன்னிதிகள் அமைந்துள்ளத் தலமாகும். கட்டிட அமைப்பால் வெவ்வேறு காலங்களில் விரிவு படுத்தப்பட்டிருந்தாலும், நம்மாழ்வார் காலத்திலேயே திருக்கோவில் பிரசித்தி பெற்றிருந்தாலும் விரிவு படுத்தல் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்து உள்ளது.

    ஆதிசேஷனின் அவதாரமாகவும், ராமாயணத்தில் லட்சுமணனின் அவதாரமாக தோன்றியவர் திருப்புளியாழ்வார். இவர் நம்மாழ்வார் 16 ஆண்டுகள் பேசாத குழந்தையாக தவம் மேற்கொள்வதற்காக அங்கு நின்றார். அந்தப் புளிய மரப் பொந்தில் நம்மாழ்வார் இருந்தார். இந்த புளியமரத்தின் அடியில் நம்மாழ்வார் சன்னிதி அமைந்துள்ளது. புளிய மரத்திற்கும், சன்னிதிக்கும் பூஜை உண்டு. புளிய மரத்தின் அடியில் 36 திவ்ய தேசப் பெருமாள்களும் காட்சி தருகின்றனர். இந்தப் புளிய மரம் 5,100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும். ஆனால் பழுக்காது. இரவில் இதன் இலைகள் உறங்குவதில்லை. நம்மாழ்வார் உற்சவ விக்கிரகம் உலோகம் கொண்டு செய்யப்பட்டதில்லை. தாமிர பரணித் தண்ணீரினை காய்ச்சக் காய்ச்ச முதலில் உடையவர் விக்கிரகமும், பின்னர் நம்மாழ்வார் விக்கிரகமும் வெளிவந்துள்ளது.

    நவதிருப்பதிகளில் குரு தலம் :

    இத்தலத்தைச் சுற்றி 8 திருப்பதிகள் உள்ளன. இதனையும் சேர்த்து ‘நவதிருப்பதி’ எனப்படுகிறது. இந்த நவதிருப்பதிகளும் இப்போது நவக்கிரகங்களின் தலங்களாகக் கருதப்படுகின்றன. அதில் இத்தலம் குருவுக்குரியதாகும்.

    உற்சவ காலங்களில் ஆழ்வார், திருமஞ்சன மண்டபத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருள்வதும், சேவாகாலம் நடைபெற்ற பின்னர் தைலக்காப்பு செய்யப்படுவதும் இங்கு மட்டுமே நடைபெறும் விசேஷ மாகும். மார்கழி திருவாதிரை அன்று ஆழ்வாருக்கும், ராமானுஜருக்கும் ஒரே ஆசனத்தில் திருமஞ்சனம் நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சியாகும். சித்திரையில் உத்திர நட்சத்திரத்தை இறுதியாகக் கொண்டு 10 நாள் பெருமாளுக்கும், வைகாசியில் விசாகம் இறுதி நாளாகக் கொண்டு 10 நாள் ஆழ்வாருக்கும் மகோற்சவங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

    நவ கருட சேவை :

    நம்மாழ்வார் வைகாசி விசாக நட்சத்திரத்தன்று அவதரித்தார். ஆதலால் இத்தலத்தில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பெரும் திருவிழாக்களில், ஆழ்வார்திருநகரி வைகாசி விசாகப் பெருந்திருவிழா குறிப்பிடத்தக்கது. வைகாசி விசாகத்தை இறுதி நாளாக வைத்து, கோவிலில் கொடியேற்றப்படும். இந்த திருவிழாவின் 5-ம் நாள் உற்சவம் முக்கியத்துவம் பெற்றது. அன்றைய விழாவில் ஆழ்வார் திருநகரியைச் சுற்றியுள்ள 8 திருப்பதிகளில் இருந்தும் எம்பெருமாள்கள், பல்லக்கில் ஆழ்வார் திருநகரி வந்தடைவார்கள். ஆதிநாதர் கோவில் முற்றத்தில் நவ திருப்பதி பெருமாள்களுக்கும் திருமஞ்சனம், திருவாராதனை செய்யப்படும். இரவு 11 மணி அளவில் இறைவன் கருட வாகனத்தில் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு காட்சி தருவார்.

    திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயில் பாதையில், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்வார்திருநகரி அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருக்கு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் அடிக்கடி செல்கின்றன.
    மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் திருவிழாவின் இன்று (செவ்வாய்க்கிழமை) நூற்றுக்கால் மண்டபத்தில் திருநாண் பூட்டுதல், திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
    மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் இரவில் சுவாமி, அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் 5-ம் நாளான நேற்று சிவ பக்தியில் சிறந்த செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு அவளது தாயாக தாயுமானசுவாமி வந்து பிரசவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ரத்தினாவதிக்கு மருத்துவம் பார்க்க, சுகப்பிரசவ மருந்தும், பீஜாதானமும் (வரதானம் நெல்) பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் பிரசவம் பார்த்து குழந்தையை தொட்டிலில் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலையில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி, அறுபத்து மூன்று நாயன்மார்களை எழுந்தருள செய்து தெரு அடைச்சான் விழாவாக கொண்டாடப்பட்டது. திருவிழாவின் 6-ம் நாள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தில் அம்மன் காலையில் நந்தவனத் திருக்குளத்தில் எழுந்தருளி தவசு பூஜை செய்தல், பின்னர் திருக்கல்யாண உற்சவத்திற்கு மாலை மாற்றுதல் வைபவம் நடைபெறுகிறது.

    பிறகு நூற்றுக்கால் மண்டபத்தில் திருநாண் பூட்டுதல், திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அப்போது திருமாங்கல்ய பிரசாதம், சந்தனம், கற்கண்டு, தாலிசரடு ஆகியவை சுமங்கலி பெண்களுக்கு வழங்கப்படும். பின்னர் திருக்கல்யாண விருந்து அளிக்கப்படுகிறது. மாலையில் யானை வாகனம் மற்றும் பல்லக்கில் சுவாமி, அம்மன் காட்சிக் கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் தாயார் பூச்சாற்று உற்சவத்தின் உள்கோடை உற்சவம் தொடங்கியது.
    பூலோக வைகுண்டம் எனப்போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வருகிற 13-ந் தேதி வரை நடக்கிறது. கடந்த 4-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை வெளிக்கோடை உற்சவம் நடைபெற்றது.  

    நேற்று உள்கோடை உற்சவம் தொடங்கியது. வெளிக்கோடை உற்சவத்தின் போது உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை வேளையில் வெளிக்கோடை மண்டபத்தில் புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். உள்கோடை உற்சவத்தின் முதல் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வெளிக்கோடை நாலுக்கால் மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளிய பின் இரவு 7.30 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு உள்கோடை ஆஸ்தான மண்டபத்தை சென்றடைந்தார். மூலஸ்தான சேவை கிடையாது

    பின்னர் அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். பூச்சாற்று உற்சவத்தையொட்டி தினமும் மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணிவரை தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது. 13-ந்தேதி வீணை வாத்தியம் கிடையாது. இரவு 8 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்களில் 54 முறை 8 வாரம் செய்து வந்தால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
    மன விரக்தி, மன அழுத்தம், சலிப்பு, சோம்பல், பயம், பதட்டம் இவற்றில் இருந்து விடுபட திங்கள் கிழமை அல்லது புதன், அல்லது சனிகிழமைகளில் காலை 7 இல் இருந்து 9 மணிக்குள் அருகில் உள்ள வராகி கோவிலுக்கு சென்று அகல் விளக்கில் இலுப்ப எண்ணெய் ஊற்றி கருப்பு துணியல் திரி போட்டு,

    “ ஓம் ஐம் வராகி நம ” என்று 54 முறை 8 வாரம் செய்து வந்தால் மேற்குறிய பிரச்சனைகளில் இருந்து விடு படலாம்.
    கோவிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்.
    விஷ்ணு கோவிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படும். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும். கோவிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்.

    கோவிலில் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதன் அருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம். கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது.
    அதற்கு அடுத்து இருப்பது துவஜஸ் தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும்.

    இந்த கொடிக்கம்பத்தில் தான் கோவிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள். அதற்கு அடுத்து பெருமாளின் வாகனமான கருடனின் மண்டபம் அமைந்துள்ளது. இவரை வணங்கிய பின் மூலஸ்தானத்தில் உள்ள பெருமாளை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும். அதன்பின் லட்சுமி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், சரஸ்வதி, ஆழ்வார்கள் ஆகியோரை தனித்தனியே வணங்க வேண்டும்.

    கோவிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து இறைவா! நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன், இதில் எனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது உனக்கு தெரியும்.

    அதன்படி வரம் கொடு என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும், பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படும்படியாக பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும்படியாக சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும்.
    அவினாசி கோவில் சித்திரை திருவிழாவில் 16-ந்தேதி மாலை 6 மணிக்கு தெப்பத்தேர்விழா, 17-ந் தேதி நடராஜர் தரிசனம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பெருங்கருணை நாயகி அவினாசிலிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பு பெற்றுள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறும்.

    கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. தற்போது சகஜ நிலை திரும்பியதால் இந்த ஆண்டு கடந்த 5ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

    நேற்று இரவு 9.30 மணியளவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் விநாயக பெருமான் மூசிக வாகனத்திலும், சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில்வாகனத்திலும், பூமி நீளாதேவி கரிவரதராஜப்பெருமாள் கருடவாகனத்திலும் எழுந்தருளி 63 நாயன்மார்களுக்கு காட்சி தந்த வைபவம் நடந்தது.

    அப்போது கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு கடைவீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரதவீதி, கிழக்கு ரத வீதிவழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வீதிகளில் வழிநெடுகிலும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு பூரம் குடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதை திரளான பக்தர்கள் பார்வையிட்டனர். இன்று மாலை 4 மணிக்கு கற்பகவிருட்ச விழா, இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி, யானை வாகன காட்சிகள் நடைபெறுகிறது.

    நாளை 11ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளுகின்றனர். 12ந் தேதி காலை 8 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து சிறிது தொலைவு இழுத்து நிறுத்தப்படுகிறது. பின்னர் 13ந் தேதி காலை 8 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து நிலை சேர்க்கப்படும். 14ந் தேதி காலை 8 மணிக்கு அம்மன் தேர் வடம்பிடித்து இழுத்துநிலை சேர்க்கப்படுகிறது. 15ந் தேதி வண்டித்தாரை நிகழ்ச்சி நடக்கிறது. 16ந்தேதி மாலை 6 மணிக்கு தெப்பத்தேர்விழா, 17ந் தேதி நடராஜர் தரிசனம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 18ந் தேதி மஞ்சள் நீர் விழா மற்றும் மயில் வாகன காட்சியும் நடக்கிறது.
    ×