என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ரமா ஏகாதசி விரத்தை மேற்கொண்டால், மகாவிஷ்ணுவின் கருணையைப் பெற முடியும். இந்த ஏகாதசியின் பெருமையைப் பற்றி, பாண்டவர்களில் முதன்மையானவரான தருமருக்கு, கிருஷ்ண பகவான் எடுத்துரைத்துள்ளார்.
    ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள் வரும். இப்படி வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உண்டு. சில வருடத்தில் 25 ஏகாதசிகளும் வருவதுண்டு. கார்த்திகை மாத தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘ரமா’ ஏகாதசி என்பார்கள். இந்த ஏகாதசியின் பெருமையைப் பற்றி, பாண்டவர்களில் முதன்மையானவரான தருமருக்கு, கிருஷ்ண பகவான் எடுத்துரைத்துள்ளார். அவர் சொன்ன கதையை இங்கே பார்ப்போம்.

    புராண காலத்தில் முசுகுந்தன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் அனைவரும் இன்புற்று வாழ்ந்தனர். ஆகையால், மன்னனின் உத்தரவுகளை எதிர் கேள்வியின்றி மக்கள் நிறைவேற்றி வந்தனர். ‘நாட்டு மக்கள் அனைவரும் தவறாது ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்’ என்பதும், நாட்டு மக்களுக்கு முசுகுந்த மன்னன் அறிவித்த உத்தரவுகளில் ஒன்று. அதை மக்களும் சிரத்தையுடன் செய்து வந்தனர்.

    முசுகுந்தனுக்கு, சந்திரபாகா என்று ஒரு மகள் இருந்தாள். அவளை, சந்திரசேனன் என்ற மன்னனின் மகன் சோபனுக்கு மணம் முடித்துக் கொடுத்திருந்தார். ஒரு முறை சந்திரபாகா தன்னுடைய கணவருடன், தந்தையைப் பார்க்க வந்திருந்தார். அப்போது கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி (ரமா ஏகாதசி) வந்தது. தன்னுடைய நாட்டில் வசிக்கும் அனைவரும் அந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது மன்னனின் உத்தரவு. எனவே சோபனும், அந்த விரதத்தை மேற்கொள்ளும் நிலை உருவானது. ஆனால் விரதம் இருந்தால், அவனது உயிருக்கு ஆபத்து நேரிடும் என்ற நிலை இருந்தது.

    தன் கணவனின் நிலையை அறிந்த சந்திரபாகா, அவனை ஏகாதசி விரதம் முடியும் வரை வேறு எங்காவது சென்று தங்கியிருக்கும்படி அறிவுறுத்தினாள். அதற்கு சோபன் மறுத்து விட்டான். “விரதம் இருந்தால், எனக்கு இறப்பு உறுதி என்பதை நான் அறிவேன். ஆனால் வேறு தேசத்தில் போய் தங்கியிருந்தால், விரதத்திற்கு பயந்து போய்விட்டதாக அனைவரும் எள்ளி நகையாடுவர். எனவே விரத்தை நானும் மேற்கொள்கிறேன்” என்று கூறினான்.

    அதன்படியே கார்த்திகை தேய்பிறை ஏகாதசி விரதத்தை மேற்கொண்டான். பசியும், தாகமும் அவனை மிகவும் வருத்தியது. அன்றைய இரவு அவனுக்கு மிகவும் வேதனையாக கடந்தது. மறுநாள் பூஜைக்குப் பிறகே உணவு சாப்பிட முடியும். ஆனால் சூரியன் உதிக்கும் முன்பாகவே சோபனின் உயிர் பிரிந்துவிட்டது. இதை அறிந்த முசுகுந்த மன்னன், சோபனின் உடலை நதியில் விட்டு விட்டார். பின்னர் மகளிடம், “உடன்கட்டை ஏற வேண்டாம். ஏகாதசி விரதத்தை நல்ல முறையில் முடி. விஷ்ணுவின் கருணை உன் மீது பதியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” என்றார்.

    ஆனால் சோபன் மேற்கொண்ட ரமா ஏகாதசி விரதத்தின் பயனாக, அவனது உடல் உயிர்பெற்றது. அவன் விஷ்ணுவின் கருணையால், அனைத்து ஐஸ்வர்யங்களும் நிறைந்த, தேவபுரம் என்னும் நகரத்தின் அபதியாக ஆனான். தங்கம், வைரம், வைடூரியம் உள்ளிட்ட விலைஉயர்ந்த மணிகள் பதிக்கப்பட்ட சிம்மாசனத்தில், அழகிய ஆடை ஆபரணங்களுடன் வீற்றிருந்தான், சோபன். கந்தர்வர்களும், அப்சரஸ்களும், நாட்டியமாடி, இசைபாடி சோபனின் புகழ் பாடினர்.

    அதே நேரம் சோபன், தான் இருந்த ஏகாதசி விரதத்தை தெய்வ பக்தி இல்லாமல் செய்த காரணத்தால், அவன் அதிபதியான நகரம் நிலையற்ற தன்மை கொண்டதாக இருந்தது. இந்த நிலையில் ஒரு முனிவரின் மூலமாக, தன் கணவனின் நிலையை அறிந்த சந்திரபாகா, தான் மேற்கொண்ட ஏகாதசி விரதத்தின் பலனைக் கொண்டு, சோபன் ஆளும் நகரத்தை நிலையானதாக மாற்ற உறுதிகொண்டாள். அதன்படியே, தன்னுடைய எட்டு வயது முதல் இதுவரை மேற்கொண்டு வந்த ஏகாதசி விரதங்களின் பலனைக் கொண்டு, சோபனின் நகரத்தை பிரளய காலம் வரை அழியாதபடிக்கு நிலையானதாக மாற்றினாள். பின்னர், தன்னுடைய கணவனுடன் சேர்ந்து அந்த நகரத்தின் ராணியாக வீற்றிருந்து இன்புற்று வாழ்ந்தாள்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்தது, கார்த்திகை மாதத்தின் தேய்பிறையில் வரும் ரமா ஏகாதசி விரதம். இந்த விரத்தை மேற்கொண்டால், மகாவிஷ்ணுவின் கருணையைப் பெற முடியும்.
    திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் இன்று பஞ்சரத உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7வது நாளான இன்று பஞ்சரத உற்சவம் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகள் தேசாதி பலிஜ குல கவரை செட்டியார் சார்பில் விமரிசையாக செய்யப்பட்டு இருந்தது.

    வேதகிரீஸ்வரர்திரபுரசுந்தரி சமேதராக கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தனிப்பெரும் பரம்பொருளான நித்யா தேவியை வழிபாடு செய்தால், பெரும் செல்வம் வந்துசேரும். திடீர் அதிர்ஷ்டமும் வாய்க்கும். அவளுக்குரிய காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
    திதி நித்யா தேவிகளில், பதினைந்தாம் நித்யா தேவியாக திகழ்பவள் சித்ரா. பளபளவென மின்னும் கதிர்களை வீசும் திருமேனி கொண்டவள். பல்வேறு ரத்தினங்கள் பதித்த மகுடத்தில் பிறைமதி சூடியவள். வெண் பட்டாடை உடுத்தி, பல் வகையான ஆபரணங்களை மேனி முழுவதும் அணிந்து அழகே வடிவாய்த் திகழ்கிறாள். பாசம், அங்குசம், அபயம், வரதம் தரித்த நான்கு திருக்கரங்கள் கொண்ட இவள், பக்தர்களின் பயத்தை போக்குபவள். என்றும் நிலையானவள். கனவிலும், நினைவிலும் அடியவர்கள் இதயத்தில் வீற்றிருப்பவள். உதிக்கின்ற சூரியனைப்போல் ஞான ஒளி வீசி அறியாமை இருளை விரட்டுபவள். அண்டங்கள் அனைத்திலும் மகிமை வெளிப்படத் திகழ்பவள். தனிப்பெரும் பரம்பொருளான இவளை வழிபாடு செய்தால், பெரும் செல்வம் வந்துசேரும். திடீர் அதிர்ஷ்டமும் வாய்க்கும்.

    வழிபட வேண்டிய திதிகள்:- பவுர்ணமி, தேய்பிறை பிரதமை.

    மந்திரம்:-

    ஓம் விசித்ராயை வித்மஹே

    மஹா நித்யாயை தீமஹி

    தன்னோ தேவி ப்ரசோதயாத்
    இந்த இளைஞர்கள் பெரும்பாலும் 90 சதவீதம் பேர் பட்டப்படிப்பு படித்து பல்வேறு இடங்களில் பணியில் உள்ளனர். இருந்தும் அவர்கள் பழமை மாறாமல் இருக்க அம்மன் நடனங்களை தொடர்ந்து பழகி ஆடி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான அம்மன் கோவில்கள் உள்ளது.

    திருவிழாவின்போது தினமும் கோவில் வளா–கத்தில் கிராம இளைஞர்கள் அம்மன் நடனம் ஆடுவது வழக்கம்.

    கடந்த காலங்களில் இது போன்ற அம்மன் ஆட்டங்களை வெகு–விமர்சையாக ஆடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழாக்கள் நடத்த–படமால் இருந்து வந்தது. இதனால் சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் அம்மன் ஆட்டம் ஆடுவது குறைய தொடங்கியது.

    இந்த நிலையில் பழமை மாறாமல் இருக்க மீண்டும் இந்த பகுதி இளைஞர்கள் அம்மன் நடனங்களை கற்றும் அதை ஆடியும் வருகின்றனர்.

    தற்போது சித்திரை திருவிழா அம்மன் கோவில்க–ளில் நடந்து வருகிறது. ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி தாலுகா கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் பெரிய மாரியம்மன் பண்டிகை கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    தொடர்ந்து தினமும் சாமிக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து இரவு நேரங்களில் 2 மணி நேரம் அம்மன் நடனங்களை அடி நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

    இந்த இளைஞர்கள் பெரும்பாலும் 90 சதவீதம் பேர் பட்டப்படிப்பு படித்து பல்வேறு இடங்களில் பணியில் உள்ளனர். இருந்தும் அவர்கள் பழமை மாறாமல் இருக்க அம்மன் நடனங்களை தொடர்ந்து பழகி ஆடி வருகின்றனர்.

    இளைஞர்கள் மத்தியில் அம்மன் ஆட்டத்திற்கு ஆர்வம் இருப்பதால் அப்ப–குதி சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரைத் தெப்பத் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.

    திருவிழாவின் இறுதி நாளான நேற்று இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மாலை 6 மணிக்கு மேல் தெப்பக்குளத்தை சுற்றிலும் உள்ள அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு தெப்பக்குளம் ஜொலிக்கும் வகையில் கோலாகலமாக இருந்தது. தெப்பக் குளத்தின் நடுவே உள்ள நீராழி மண்டபம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரகாசமாய் காணப்பட்டது.

    இரவு 7.50 மணிக்கு கோவிலில் இருந்து இரு தட்டு வாகனங்களில் சாமி அம்பாள் மற்றும் பெருமாள் ஆகியோர் மேளதாளத்துடன் எழுந்தருளி கோவிலின் அருகில் உள்ள தெப்பக் குளத்தில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினர். ஜொலிக்கும் தெப்பக்குளத்தில் 8.10 மணிக்கு தெப்பம் முதல் சுற்று ஓடத்தொடங்கியது. தெப்பம் 3 முறை உலா வந்தது.

    தெப்பம் உலா வரும்போது மரபுப்படி தெப்பத்தை வடம்பிடித்து இழுப்பது வழக்கம். அதுபோல் தெப்பத்தின் முதல் சுற்றை காக்கமூர் இளைஞர்களும், 2-வது சுற்றை மேலத்தெரு இளைஞர்களும், 3-வது சுற்றை கீழத்தெரு இளைஞர்களும் வடம் பிடித்து இழுத்து வந்தனர். 3-வது சுற்று திருவாவடுதுறை ஆதீனம் அருகே வந்தபோது வாணவேடிக்கை நடத்தப்பட்டது.

    தெப்பத்திருவிழா நிகழ்ச்சியில் குதிரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். தெப்பத்திருவிழா முடிந்த பின்பு சாமி அம்பாள், பெருமாள் மீண்டும் தட்டு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் உலா வந்தனர். அப்போது பக்தர்கள் திருக்கண் சார்த்தி வழிபாடு செய்தனர். நள்ளிரவில் ஆராட்டு விழா நடந்தது.
    கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் வருகிற 14-ந் தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது.
    108 வைணவ திவ்ய தேசங்களில் 3-வது தலமாகவும், 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்விய பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாக விளங்குவது கும்பகோணம் சாரங்கபாணி கோவில்.

    இந்த கோவிலில், கடந்த 6-ந் தேதிசித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதேபோல, நேற்று முன்தினம் இரவு சாரங்கபாணி-சக்கரபாணி ஓலை சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றனர்.

    இதனையொட்டி வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஓலை சப்பரத்தில் சாரங்கபாணி-சக்கரபாணி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஓலை சப்பரம் 4 வீதிகளிலும் வலம் வந்து கோவிலை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
     
    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேரோட்டம் வருகிற 14-ந் தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    ஆண்டவர் உடனே எசேக்கியாவின் ஜெபத்தைக் கேட்டு அவருடைய ஆயுசில் பதினைந்து வருடங்களைக் கூட்டிக் கொடுத்தார். பிரியமானவர்களே, ஆண்டவர் உண்மையுள்ளவர், அவர் ஜெபத்தைக் கேட்டு பதிலளிக்கிறவர்.
    நம் அருமை ஆண்டவரை எப்போது வேண்டுமென்றாலும் நாம் கூப்பிடலாம். எப்போது வேண்டுமென்றாலும், அவருடைய பொன் முகத்தை நோக்கிப் பார்க்கலாம். ஏனென்றால், அவர் உறங்குவது இல்லை.

    “ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி ரட்சிக்கப்படுவேன்” (2 சாமு. 22:4).

    “நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை விடுவிப்பார்” என்பதுதான் வேதத்திலே தாவீது ராஜாவின் சாட்சியாய் இருந்தது. எத்தனை முறை அவர் திரும்பத் திரும்ப அவ்விதமாய் சொல்லுகிறார் என்பதை வேதத்திலே சங்கீத புஸ்தகத்தில் வாசித்து அறியலாம்.

    சிங்கங்களும், கரடியும் அவருக்கு எதிராய் வந்தபோது, ‘கர்த்தரை அல்லாமல் வேறு யாரை நோக்கிக் கூப்பிடுவது?’. பெரிய கோலியாத் இஸ்ரவேலரை நடுங்க வைத்துக் கொண்டிருந்தபோது தாவீது கர்த்தரைத் தவிர வேறு யாரையும் நோக்கிக் கூப்பிடவில்லை. அவர் மனித உதவியையும் நாடவில்லை. தன் சுய பலத்தையும் சார்ந்து கொள்ளவில்லை. அவர் சொல்லுகிறார், “நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்”. (சங். 18:6).

    நீங்கள் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுங்கள். பிரச்சினை சிறியதோ, பெரியதோ போராட்டம் கொடியதோ, பயங்கரமானதோ, ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுங்கள், உங்களுக்கு விடுதலை உண்டு. ஏனென்றால் விடுதலையை கர்த்தர் வாக்களித்திருக்கிறார்.

    ஆண்டவர் சொல்லுகிறார், “ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்”. (சங். 50:15).

    ஆண்டவர் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தங்கள் எத்தனை அருமையானவை.

    “கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்”. (ஏசா. 65:24).

    “என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும், உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரே. 33:3) என்று சொல்லுகிறார்.

    வேதத்திலே, எசேக்கியா ராஜா வியாதிப்பட்டார். ‘நீர் மரித்துப்போவீர், குடும்ப காரியங்களை ஒழுங்குபடுத்தும்’ என்று ஏசாயா தீர்க்கதரிசி திட்டமும் தெளிவுமாய் கூறிவிட்டார். அந்த நேரத்தில் எசேக்கியா செய்தது என்ன? தம்முடைய முகத்தை சுவர் பக்கமாய் திருப்பி ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டார்.

    ஆண்டவர் உடனே எசேக்கியாவின் ஜெபத்தைக் கேட்டு அவருடைய ஆயுசில் பதினைந்து வருடங்களைக் கூட்டிக் கொடுத்தார். பிரியமானவர்களே, ஆண்டவர் உண்மையுள்ளவர், அவர் ஜெபத்தைக் கேட்டு பதிலளிக்கிறவர்.

    வேதம் சொல்லுகிறது: “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (சங். 145:18). “அவர் சமீபமாய் இருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்” (ஏசா. 55:6). “நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்” (சங். 86:7).
    கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் முன்பதிவு முறையை கேரள போலீசார் கடைபிடித்து வந்தனர். இதன் மூலம் அசம்பாவிதங்கள் ஏற்படுவதும் தடுக்கப்பட்டது.
    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி கோவிலுக்கு வந்து செல்ல வசதியாக கேரள போலீஸ் துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் முன்பதிவு முறையை கேரள போலீசார் கடைபிடித்து வந்தனர். இதன் மூலம் அசம்பாவிதங்கள் ஏற்படுவதும் தடுக்கப்பட்டது.

    அதே நேரம் முன்பதிவு செய்யாத பக்தர்களும் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டது.

    இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்குவதை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்த கோபன் நிருபர்களிடம் கூறியதாவது:

    சபரிமலை கோவில் வளர்ச்சிக்காக அரசு ரூ.140 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் சபரிமலை மாஸ்டர் பிளான் திட்டத்திற்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    ஆன்லைன் முன்பதிவை நிறுத்துவது குறித்து அரசுடன் ஆலோசனை நடத்திய பின்பே முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    உப்பு உணவில் மட்டும் முக்கியத்துவம் வாய்ந்த தில்லை. ஆன்மீக ரீதியாகவும் உப்பு பல்வேறு பயன்களையும் நமது வேண்டுதல்களையும் நிறைவேற உப்பானது பயன்படுத்தப்படுகிறது.
    பல ஆலயங்களில் நாம் கல் உப்பைக் கொண்டு பரிகாரம் செய்வதை நாம் பார்த்திருப்போம். கல் உப்பை நாம் அன்றாடம் வைத்து பூஜை செய்வதன் மூலம் வாழ்வில் பல நன்மைகள் நமக்கு உண்டாகின்றது.

    பாவம் தீர வேண்டும் என்பதற்காக நாம் உப்பு நிறைந்த கடல்நீரில் குளித்து நமது பாவங்களை கழுவுகின்றோம். உப்பு உணவில் மட்டும் முக்கியத்துவம் வாய்ந்த தில்லை. ஆன்மீக ரீதியாகவும் உப்பு பல்வேறு பயன்களையும் நமது வேண்டுதல்களையும் நிறைவேற உப்பானது பயன்படுத்தப்படுகிறது.

    உப்பானது செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி தேவிக்கு இணையாக கூறுகின்றனர். ஏனென்றால், லஷ்மி தேவியும் கடலில் தோன்றியதால்தான் உப்பை ஜீவா ஆத்மாவிற்கு இணையாக ஒப்பிடுகின்றனர். கடலில் நீராடினால் சகல தோஷங்களும் நீங்கி நம்மை தூய ஆத்மாவாக மாற்றுகிறது. உப்பு வைத்து சுத்தி போடுவதால் நமது உடலில் உள்ள தோஷங்கள் நீங்கும். நாம் என்னதான் தீங்கு செய்யாமல் நல்வழியில் சென்றாலும் நம்மை அறியாமலே சில தவறுகள் நடக்கத்தான் செய்கின்றது. இதனை தடுக்க உப்பை நாம் அன்றாடம் வழிபடுவதன் மூலம் நமது அனைத்து பிரச்சினைகளும் தீரும்.

    இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதன்மூலம் நீங்கள் நினைத்தவை உங்களை நாடி வரும். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து இரண்டு கைகளிலும் கல் உப்பை எடுத்துக்கொண்டு கிழக்குப் புறமாக அமர்ந்து கொள்ள வேண்டும். மடியில் காகிதத்தை வைத்து கைகளை தொடைகளில் வைத்து உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும். பின்னர், கைகளை இறுக்கமாக உப்புடன் சேர்த்து மூடி கொள்ள வேண்டும். அதன்பின்பு, உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை நீங்கள் மனதில் நினைத்து வேண்டுவது எல்லாம் நமக்கு கிடைக்கும்.
    வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
    தேனி மாவட்டம் வீரபாண்டியில் புகழ்பெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 8 நாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழாஇன்று தொடங்கி வருகிற 17-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவையொட்டி இன்றுகவுமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. மஞ்சள் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் முல்லைப்பெரியாற்றில் நீராடினார்கள். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆற்றங்கரையில் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து கோவில் முன்பு உள்ள பெரிய தொட்டியில் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
    இது தவிர கரகம், காவடி, ஆயிரம் கண்பானை, மண்கலயத்தில் தீர்த்தம் எடுத்து வந்து கம்பத்துக்கு ஊற்றுதல் மற்றும் உடலில் சேறு பூசி கவுமாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

    திருவிழாவை காண தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகாலை 1 மணியில் இருந்தே வரத்தொடங்கினர். உப்புக்கோட்டை விலக்கில் இருந்து உப்பார்பட்டி விலக்கு வரை சுமார் 2 கிலோமீட்டர் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வசதிக்காக உப்புக்கோட்டை விலக்கு மற்றும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது.
    தேனி, போடி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், வருசநாடு ஆகிய ஊர்களில் இருந்து வரும் சிறப்பு பஸ்கள் உப்புக்கோட்டை விலக்கிலும், சின்னமனூர், தேவாரம், கம்பம், குமுளி ஆகிய ஊர்களில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்திலும் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கிறது.

    பக்தர்களின் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிக பஸ் நிலையங்கள் உள்ளிட்ட 7 இடங்களில் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர குடிநீர் தொட்டியும், தற்காலிக குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரக்கேடு ஏற்படுவதை தவிர்க்க 400 துப்புரவு பணியாளர்கள் 3 ஷிப்டுகளாக பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் சுமார் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு, கடத்தல் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் போலீஸ் நிலையம், கோவில் வளாகம் உள்பட 5 இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் போலீசார் வீடியோ கேமரா மூலம் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். இதே போன்று தேனி தீயணைப்பு கோட்ட அலுவலர் கல்யாண குமார் தலைமையில் 3 தீயணைப்பு வாகனங்கள் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    விழாவையொட்டி நாளை (புதன்கிழமை) அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடும்,நாளைமறுநாள் புஷ்ப பல்லக்கில் புறப்பாடும், 13-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது. 16-ந்தேதி தேர் நிலைக்கு வருதல் மற்றும் முத்துப்பல்லக்கில் தேர் தடம் பார்த்தல், 17-ந்தேதி ஊர் பொங்கலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
    சித்திரை திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுரேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகநயினார் மற்றும் கோவில், பேரூராட்சி பணியாளர்கள் செய்து உள்ளனர்.
    ஆண்டு தோறும் ராமநவமி அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் - சேரகுலவல்லி தாயார் திருக்கல்யாண உற்சவம் எனப்படும் சேர்த்தி சேவை நடைபெறும்.
    குலசேகர ஆழ்வார் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் பெருமாள் திருமொழிஎன்றபகுதியைபாடியுள்ளார். குலசேகர ஆழ்வார் மன்னராக இருந்த போதிலும் பெருமாள் மீது கொண்டிருந்த பக்தி காரணமாக தனது ஒரே மகளான சேரகுலவல்லியை ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு திருமணம் செய்து வைத்தார். அன்று முதல் சேரகுலவல்லி ரெங்கநாதரின் நாயகிகளில் ஒருவராக வணங்கப்பட்டு வருகிறார்.

    இவருக்கு பெரிய சன்னதியின் 2-ம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தின் மேற்கு பகுதியில் சன்னதி உள்ளது. குலசேகர ஆழ்வார், சேரகுலவல்லியை பெருமாளுக்கு ராமநவமி நாளில் திருமணம் செய்து கொடுத்ததாக ஐதீகம். இதனால் ஆண்டு தோறும் ராமநவமி அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நம்பெருமாள் - சேரகுலவல்லி தாயார் திருக்கல்யாண உற்சவம் எனப்படும் சேர்த்தி சேவை நடைபெறும்.

    இந்த ஆண்டு ராமநவமி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைந்தார். அங்கு காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார்.

    பின்னர் நம்பெருமாள் சேரகுலவல்லி தாயாருடன் பகல் 1 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை சேர்த்திசேவைகண்டருளினார்.அர்ச்சுனமண்டபத்திருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு 5 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
    குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை(வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.
    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருவீழிமிழலையில் பிரசித்தி பெற்ற வீழிநாதசாமி கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 61-வது தலமான இத்தலத்தில் மகாவிஷ்ணு, பிரமன், இந்திரன், வசிஷ்டர் ஆகியோர் இறைவனை வழிபட்டுள்ளனர்.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோணா தொற்று காரணமாக சித்திரை திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கடந்த 4-ந் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் 6- ம் நாளான நேற்று கார்த்தியாயனி அம்பாள், கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கல்யாணசுந்தரேஸ்வரர் அம்பாளுக்கு திருமாங்கல்யத்தை சூட்டினார். அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர். திருவாடுதுறை ஆதீன 24-வது குருமகாசந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    இந்த ஆலயத்தில் இறைவன் சம்பந்தருக்கும், திருநாவுக்கரசருக்கும் படிக்காசு வழங்கும் நினைவாக திருவாவடுதுறை ஆதீனம் மூத்த மற்றும் இளைய ஓதுவாரகளுக்குபடிக்காசு மற்றும் பொற்கிழி வழங்கி அவர்களை வாழ்த்தினார். நாளை(வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் திருவாவடுதுறை ஆதீன நிர்வாகிகள் செய்து உள்ளனர்.
    ×