search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கர்த்தரை கூப்பிடுங்கள்...
    X
    கர்த்தரை கூப்பிடுங்கள்...

    கர்த்தரை கூப்பிடுங்கள்...

    ஆண்டவர் உடனே எசேக்கியாவின் ஜெபத்தைக் கேட்டு அவருடைய ஆயுசில் பதினைந்து வருடங்களைக் கூட்டிக் கொடுத்தார். பிரியமானவர்களே, ஆண்டவர் உண்மையுள்ளவர், அவர் ஜெபத்தைக் கேட்டு பதிலளிக்கிறவர்.
    நம் அருமை ஆண்டவரை எப்போது வேண்டுமென்றாலும் நாம் கூப்பிடலாம். எப்போது வேண்டுமென்றாலும், அவருடைய பொன் முகத்தை நோக்கிப் பார்க்கலாம். ஏனென்றால், அவர் உறங்குவது இல்லை.

    “ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி ரட்சிக்கப்படுவேன்” (2 சாமு. 22:4).

    “நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை விடுவிப்பார்” என்பதுதான் வேதத்திலே தாவீது ராஜாவின் சாட்சியாய் இருந்தது. எத்தனை முறை அவர் திரும்பத் திரும்ப அவ்விதமாய் சொல்லுகிறார் என்பதை வேதத்திலே சங்கீத புஸ்தகத்தில் வாசித்து அறியலாம்.

    சிங்கங்களும், கரடியும் அவருக்கு எதிராய் வந்தபோது, ‘கர்த்தரை அல்லாமல் வேறு யாரை நோக்கிக் கூப்பிடுவது?’. பெரிய கோலியாத் இஸ்ரவேலரை நடுங்க வைத்துக் கொண்டிருந்தபோது தாவீது கர்த்தரைத் தவிர வேறு யாரையும் நோக்கிக் கூப்பிடவில்லை. அவர் மனித உதவியையும் நாடவில்லை. தன் சுய பலத்தையும் சார்ந்து கொள்ளவில்லை. அவர் சொல்லுகிறார், “நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்”. (சங். 18:6).

    நீங்கள் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுங்கள். பிரச்சினை சிறியதோ, பெரியதோ போராட்டம் கொடியதோ, பயங்கரமானதோ, ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுங்கள், உங்களுக்கு விடுதலை உண்டு. ஏனென்றால் விடுதலையை கர்த்தர் வாக்களித்திருக்கிறார்.

    ஆண்டவர் சொல்லுகிறார், “ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்”. (சங். 50:15).

    ஆண்டவர் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தங்கள் எத்தனை அருமையானவை.

    “கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்”. (ஏசா. 65:24).

    “என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும், உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரே. 33:3) என்று சொல்லுகிறார்.

    வேதத்திலே, எசேக்கியா ராஜா வியாதிப்பட்டார். ‘நீர் மரித்துப்போவீர், குடும்ப காரியங்களை ஒழுங்குபடுத்தும்’ என்று ஏசாயா தீர்க்கதரிசி திட்டமும் தெளிவுமாய் கூறிவிட்டார். அந்த நேரத்தில் எசேக்கியா செய்தது என்ன? தம்முடைய முகத்தை சுவர் பக்கமாய் திருப்பி ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டார்.

    ஆண்டவர் உடனே எசேக்கியாவின் ஜெபத்தைக் கேட்டு அவருடைய ஆயுசில் பதினைந்து வருடங்களைக் கூட்டிக் கொடுத்தார். பிரியமானவர்களே, ஆண்டவர் உண்மையுள்ளவர், அவர் ஜெபத்தைக் கேட்டு பதிலளிக்கிறவர்.

    வேதம் சொல்லுகிறது: “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (சங். 145:18). “அவர் சமீபமாய் இருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்” (ஏசா. 55:6). “நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்” (சங். 86:7).
    Next Story
    ×