என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது தமிழக பக்தர்கள் சார்பில் இந்து தர்மார்த்த சமிதி, ஆண்டுதோறும் 11 திருக்குடைகளை சமர்ப்பித்து வருகிறது
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலைகள், திருப்பதி திருக்குடைகள் என்று 2 வகையான மங்கலப்பொருட்கள், ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர சாமிக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

    தமிழகத்தில் இருந்து 150 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பதி திருக்குடைகள் திருமலையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. பெருமாள் எழுந்தருளும்போது, ஆதிசேஷனே திருக்குடையாக அவதரிக்கிறார் என்பது ஐதீகம்.

    திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது தமிழக பக்தர்கள் சார்பில் இந்து தர்மார்த்த சமிதி, ஆண்டுதோறும் 11 திருக்குடைகளை சமர்ப்பித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான திருப்பதி திருக்குடை உற்சவம் கடந்த 3-ந்தேதி பட்டாளம் ஆஞ்சநேயர் கோவிலில் யாக பூஜைகளுடன் தொடங்கியது.

    அதன்பின் சென்னை பூக்கடை சென்னகேசவ பெருமாள் கோவிலில் திருக்குடைகளுக்கு 5-ந் தேதி சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நேற்றுமுன்தினம் திருப்பதிக்கு திருக்குடைகள் வந்து சேர்ந்தன. அதில் 2 திருக்குடைகள் தாயார் கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டன.

    இந்த நிலையில் நேற்று காலை திருமலையில் ஏழுமலையான் கோவில்முன் 9 அழகிய திருக்குடைகளை இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி ஜவகர் ரெட்டி ஆகியோரிடம் சமர்ப்பித்தார்.

    திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், வேலுார் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான நந்தகுமார் உடனிருந்தார்.

    பின்னர் நிருபர்களிடம் ஆர்.ஆர்.கோபால்ஜி கூறியதாவது:-

    திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருக்குடைகளை எடுத்துவந்து ஏழுமலையானுக்கு சமர்ப்பணம் செய்வதும், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் இருந்து மாலைகளை எடுத்துவந்து திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்ப்பணம் செய்வதும் நீண்டகாலமாக வழக்கத்தில் உள்ள நடைமுறைகள் ஆகும்.

    பிரம்மோற்சவ நாட்களில் திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் காணப்படும். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த அளவிலேயே பக்தர்கள் வருகை இருப்பதை பார்க்கும்போது மனதில் ஒருவிதமான நெருடல் ஏற்படுகிறது.

    இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் பிரமாண்ட அளவில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடக்கும். அதில், அலங்கரிக்கப்பட்டு கொண்டுவரும் திருக்குடைகளை சுமார் 15 லட்சம் பக்தர்கள் தரிசிப்பார்கள்.கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருக்குடை ஊர்வலம் நடைபெறவில்லை. இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட், எந்தவித நன்கொடையும் வசூல் செய்யாமல் திருப்பதியில் திருக்குடைகள் சமர்ப்பணத்தை நடத்திவருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதைத் தொடர்ந்து நிருபர் ஒருவர் அவரிடம், ‘தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோவில்கள் மூடப்பட்டு இருக்கிறதே?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், ‘இந்த விஷயத்தில் அரசு தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்றார்.

    பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருக்குடைகள் பவனிவர, திருமலையில் கருட சேவை உற்சவம் இன்று (திங்கட்கிழமை) இரவு நடக்கிறது.
    நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் கீழ்குறிப்பிட்டுள்ள மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்தால் அம்பிகையின் பரிபூரண அருளை பெறலாம் என்பது காஞ்சி மகா பெரியவரின் அருள் வாக்காகும்.
    ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!
    ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ!
    ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!
    ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவி தாயை நமஹ!
    ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவி தாயை நமஹ!
    ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!
    ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!

    இந்த 7 நாமங்களை தினசரி 11 முறை உச்சரித்தால் ஆயிரம் நாமங்களை உச்சரித்ததற்கு சமம். ஈஸ்வர ஸ்வரூபமாக விளங்கும் காஞ்சி மகா பெரியவர் அன்னை லலிதையின் ஆயிரம் திருநாமங்களில், தனது உள்ளுணர்வால் தேர்ந்தெடுத்து கொடுத்துள்ளார். இந்த ஏழு நாமாக்கள் அதிசயங்கள் பல நிகழ்த்தும் என்பது முன்னோர் வாக்கு.
    சங்குக்கு ஆகாயத்தில் உள்ள வேத மந்திரங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. சங்கில் உள்ள ஜலதாளயோக ஜோதி சக்தியானது நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுத் தரும் ஆற்றல் கொண்டது.
    தேவர்களும், அசுரர்களும் ஒன்றிணைந்து பாற்கடலை கடந்த போது லட்சுமியுடன் சங்கும் சேர்ந்து வெளியில் வந்தது. இந்த உலகுக்கு சங்கு அறிமுகமானது இப்படித்தான்.

    லட்சுமியின் அழகில் மயங்கி அவளை திருமணம் செய்து கொண்ட மகா விஷ்ணு, சங்குவை இடது கையில் ஏந்தி ‘சங்கு சக்கர தாரி’யாக மாறினார். அன்று முதல் விஷ்ணுவின் படைகளில் ‘சங்குப் படை’ முக்கியமானதாக மாறியது என்று விஷ்ணு புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு, லட்சுமி இருவரிடமும் சங்கு நிலை பெற்றுள்ளதால், அது செல்வம், வெற்றி உள்பட அனைத்தையும் தரும் என்று புராணங்கள் சொல்கின்றன.

    லட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் சங்கு, ஓம் எனும் பிரணவ மந்திர வடிவில் அமைந்துள்ளது. சங்கில் இருந்தும் ஓம் எனும் ஒலி எழும். இந்த ஓலி துர்சக்திகளை விரட்டும் ஆற்றல் கொண்டது. எனவேதான் வீட்டில் சங்கு வைத்து வழிபடுவது நல்லது என்று கூறப்படுகிறது. சங்கில் நீர் விட்டு கும்பத்தின் மேல் வைத்து, பூக்கள் போட்டு, பூஜை செய்து ஆராதனை நடத்தி, சங்கில் உள்ள நீரை சாமி சிலைகள் மீது அபி ஷேகம் செய்தால் அது தீர்த்தமாக மாறி விடும் என்கிறார்கள்.

    இப்படி சாதாரண நீரை, சக்தி வாய்ந்த மகா தீர்த்தமாக மாற்றிவிடும் சக்தி படைத்த சங்கின் முன்பாகத்தில் கங்கை, மத்தியில் வருணன், பின்பாகத்தில் பிரஜாபதி வசிக்கிறார்களாம். இவர்கள் தவிர சங்கில் குபேரன் உள்பட எல்லா தேவதைகளும் வசிப்பதாக சொல்கிறார்கள். இதனால்தான் சைவ, வைணவ ஆலய வழிபாடுகளில் சங்கு பிரதான இடம் வகிக்கிறது.

    சங்கின் பிறப்புக்கு தேவி மகாத்மியத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது......

    கிருஷ்ணரின் மகனாக சுதர்மன் என்பவன் அவதரித்தான். ராதையின் சாபம் காரணமாக இவன் அசுரகுலத்தில் சங்கசூடன் என்ற பெயரில் பிறக்க நேரிட்டது.
    சங்கசூடன் தான் பெற்ற வரத்தால் தேவர்களை கொடுமைப்படுத்தினான். இதனால் சிவபெருமான் அவனை சூலத்தால் அழித்து சாம்பலாக்கினார். அவனது எலும்புகள் தான் ஆழ்கடலில் விழுந்து சங்குகளாக மாறியதாக சொல்கிறார்கள்.

    சங்கில் 16 வகை சங்குகள் இருந்தாலும் இடம்புரி சங்கு, வலம்புரி சங்கு, திருகு சங்கு ஆகிய 3 வகை சங்குகள் முக்கியமானவை. இதில் இடம் புரி சங்குகள் அதிகமாக கிடைக்கும். லட்சத்தில் ஒரு சங்குதான் வலம்புரி சங்காக இருக்கும். ஆலயங்களில் சாதாரணமாக செய்யப்படும் சங்கு, சப்தாகர்ஷண சக்தி பூஜைகளில் இடம்புரி சங்கையே பயன்படுத்துவார்கள். திருகு சங்குகள் திருஷ்டி போக்கவும், வாஸ்து குறைபாடுகளை நீக்கவும் பயன்படும்.

    வலம்புரி சங்கு புனிதமும் ஆற்றலும் நிறைந் தது. இடது கையால் பிடிக்க தகுந்த அமைப்புடன் இருப்பது வலம்புரி சங்காகும். ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான பொய்கை ஆழ்வார் சங்கின் அம்சமாக அவதரித்தவர் ஆவார். தோஷங்களில் மிக உயர்ந்த தோஷமான பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டும் ஆற்றல் வலம்புரி சங்குக்கு உண்டு.

    வீட்டில் வலம்புரி சங்கு வைத்து வழிபட்டு வந்தால் மற்றவர்களுக்கு உதவும் அளவுக்கு நம் பொருளாதார நிலை உயரும்.செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் வலம்புரி சங்கில் பால் வைத்து 27 செவ்வாய்க் கிழமை அம்மனை வழிபட்டு வந்தால் எல்லா தோஷங்களும் நீங்கி விடும். சங்குக்கு வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்து சங்கு காயத்ரியை 108 முறை ஜெபித்தால் வற்றாத வளம் வந்து சேரும்.

    பெருமாளுக்கு பால், தேன், இளநீர், சந்தனம் உள்பட 12 வகை பொருட்களை 1008 சங்காபிஷேகமாக செய்தால் நல்ல குணம் உண்டாகும். சங்கு தெய்வீகப் பொருளாகக் கருதப்படுவதால் அதற்கு ‘புனிதமான பாத்திரம்’ என்றும் ஒரு பெயர் உண்டு. எனவே தான் அதில் ஊற்றப்படும் நீர் புனிதமானதாக மாறுகிறது. அந்த தீர்த்தத்தை குடித்தால் ஆயுள் பெருகும்.

    சங்கு தீர்த்தம் போலவே சங்கு ஒலியும் மகிமை நிறைந்தது. சங்சொலி கேட்டதும் தீய சக்திகள் ஓடி விடும். எனவே தான் பூஜை தொடங்கும் முன்பு சங்சொலி எழுப்புவது இன்னமும் நடைமுறையில் உள்ளது. சோமவார சங்காபிஷேகத்தை நம்மால் நடத்த இயலாவிட்டாலும் பரவாயில்லை. அந்த அபிஷேகத்தை கண் குளிர தரிசனம் செய்தாலே சங்கடங்கள் நீங்கி விடும் என்பது ஐதீகம்.

    சங்காபிஷேகத்தில் தீர்த்தம் தவிர மூலிகைகள், பச்சிலைகள், வாசனைத் திரவியங்கள் கலந்தும் பயன்படுத்தலாம். இத்தகைய சங்கு அபிஷேகங்களை கண்டால் 7 பிறவி பாவங்கள் விலகுமாம். அதோடு இழந்த பொருள், பதவி கிடைக்கும். இம்மை - மறுமை வினைகள் தீரும். சங்காபிஷேக தீர்த்தத்தை அருந்தியவர்களுக்கு அகாலமரணம் என்பது வராது. உடலில் தோன்றும் 4446 வகை நோய்கள் நீங்கும்.

    சங்கு நிலையான தன்மை கொண்டது. சுட்டாலும் அது வெண்மையேத்தரும். பஞ்சபூதங்களால் சங்கை எந்த மாற்றமும் செய்ய இயலாது. அது போல மனிதனும் மாறாத இயல்புடன் இறைவனை பூஜிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இறைவழிபாட்டில் நம் முன்னோர்கள் சங்கை சேர்த்துள்ளனர். சங்காபிஷேகம் நடத்துபவர்களுக்கு தெளிவான மனநிலை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். குறிப்பாக கணவன் - மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

    சங்குக்கு ஆகாயத்தில் உள்ள வேத மந்திரங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. சங்கில் உள்ள ஜலதாளயோக ஜோதி சக்தியானது நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுத் தரும் ஆற்றல் கொண்டது.

    சங்கை அருகில் வைத்து எந்த கடவுளை வேண்டினாலும், அந்த இறைவனின் சக்தி நமக்கு முழுமையாக கிடைக்கும். எனவே ஆலயத்தில் நடக்கும் சங்காபிஷேங்களில் கலந்து கொள்வது உங்களை மேன்மைப்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்.

    வீட்டிலும் சங்கு வழிபாட்டை உரிய முறையில் செய்தால், இந்த பிறவியில் எல்லா இன்பத்தையும் பெற முடியும்.
    சபரிமலை மண்டல-மகர விளக்கு பூஜையை முன்னிட்டு அடுத்த மாதம் 17-ந் தேதி முதல் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைப்பார். 21 -ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின்னர் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம் ஆகியவை நடைபெறும், அதனை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். தினமும் நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உட்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

    கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதையொட்டி, சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன் பதிவு கடந்த 3-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி திறக்கப்படுகிறது. 17-ந் தேதி முதல் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வராத பட்சத்தில் அந்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அய்யப்ப பக்தர்களுக்கான மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் நவராத்திரி விழாவின் 2-வது நாளில் உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மகாவிஷ்ணு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று மாலை 4 கால அபிஷேகத்துக்கு பின் உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மகாவிஷ்ணு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் உற்சவர் தாயார் கோவில் உள்ளே வலம் வந்தார். மூலவர் தாயார் சன்னதிக்கு எதிரே உற்சவருக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர். கொலு பொம்மை கண்காட்சி நடந்தது. திரளான பக்தர்கள் கண்டு களித்தனர்.
    சித்தூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம், சாகம்பரி அலங்காரம், இரவு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    சித்தூரில் நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது. சித்தூர் பெஸ்த தெருவில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் அம்மன், காசி விசாலாட்சி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நேற்று காலை அம்மனுக்கு அபிஷேகம், சாகம்பரி அலங்காரம், இரவு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெண்ணை அலங்காரத்தில் கேரளா மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் அலங்காரம் செய்யப்படுகிறது.
    பெருமாளும் லட்சுமியைத் தாங்கி லட்சுமி நரசிம்மராய் புன்னகை சிந்த இத்தலத்தில் எழுந்தருளினார். நங்கையாகிய லட்சுமி தோன்றிய இடம் நங்கைநல்லூராகி, நங்கநல்லூர் என மருவி அழைக்கப்படுகிறது.
    சுவாமி : ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்

    தலச்சிறப்பு : ஐந்து தலை நாகத்தின் மீது அமர்ந்தபடி ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹர் அருள்பாலிப்பது சிறப்பு ஆகும். கருட சேவை மஹோத்ஸ்வம் 24-05-2009 அன்று நடைபெற்றது. இதில் ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ பெருமாள் நங்கநல்லூர், ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கீழ்கட்டளை, ஸ்ரீ ஒப்பிலியப்ப பெருமாள் இராம்நகர் மடிபாக்கம், ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ பெருமாள் ஆதம்பாக்கம், ஸ்ரீ கோதண்டராமர் மடிப்பாக்கம், ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாள் நங்கநல்லூர், ஆறு பெருமாள்களும் ஒன்றாக சேவை சாதித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோடானு கோடி புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே பெருமாளை பெரிய திருவடியாக கருடனில் சேவிக்க முடியும்.

    கருடனில் பெருமாள் வருவது மிக்க விசேஷம், அருள் பாலிப்பதில் ஒரு நொடி கூட தாமதிப்பதில்லை என்று தான் எல்லா திவ்ய தேசங்களிலும் கருடன் நின்ற கோலத்தில் எப்போதும் புறப்படத் தயாரான நிலையில் சேவை சாதிக்கின்றார். நதியில் விழுந்த கட்டை எதைப்பற்றியும் கவலைப் படாமல் கடலை அடைவதைப் போல காய்சினப் பறவை ஏறி அருள் பாலிக்கும் பெருமாளை பற்றினால் நாமும் முக்தி அடையலாம் என்பது நம்பிக்கை.

    தல வரலாறு : பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவருக்கு பிரகலாதனுக்காக தூணைப்பிளந்து கொண்டு வந்த நரசிம்மரை தரிசிக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. இதற்காக யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தீயின் நடுவே உக்கிர கோலத்தோடு தோன்றினார் நரசிம்மர். அவரைக் கண்டு பரவசப்பட்ட ஜமதக்னி, சாந்தமாக இருக்கும் படியும், தான் பெற்ற தரிசனம் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டுமென வரம் கேட்டார். பெருமாளும் லட்சுமியைத் தாங்கி லட்சுமி நரசிம்மராய் புன்னகை சிந்த இத்தலத்தில் எழுந்தருளினார். நங்கையாகிய லட்சுமி தோன்றிய இடம் நங்கைநல்லூராகி, நங்கநல்லூர் என மருவி அழைக்கப்படுகிறது.

    நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

    திருவிழாக்கள் : நரசிம்ம ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி.

    அருகிலுள்ள நகரம் : சென்னை.

    கோயில் முகவரி :

    ஸ்ரீ ஸர்வமங்கள ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ சுவாமி திருக்கோவில்,
    24 தில்லை கங்கா நகர்,
    நங்கநல்லூர், சென்னை - 600 061.
    துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.
    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்தது. தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீவேங்கடேசன் அவதாரம். பக்தர்களின் நலனுக்காக அவர் திருமலையில் எழுந்தருளி இருக்கிறார். புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.

    பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.

    புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.

    அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்டவேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.

    புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.

    ராமேசுவரம் கோவில் நவராத்திரி திருவிழாவின் 2-வது நாளான இன்று அம்பாள் அன்னபூரணி அலங்காரத்திலும், மூன்றாவது நாளான நாளை சிவதுர்க்கை அலங்காரத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
    ராமேசுவரம் கோவிலில் நவராத்திரி திருவிழா நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவில் முதல் நாளான நேற்று இரவு 7 மணி அளவில் பர்வதவர்த்தினி அம்பாள் மகாலட்சுமி அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகளும் நடைபெற்றன. முன்னதாக காலை 11 மணி அளவில் கொலுமண்டபம் முன்பு அம்பாளின் தங்க ஸ்ரீசக்கரம் வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க பால், பன்னீர், இளநீர், தேன், மாப்பொடி, மஞ்சள் பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.

    இறுதியாக புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தங்க ஸ்ரீசக்கரத்திற்கு மகா தீபாராதனை, பூஜைகளும் நடைபெற்றன. தங்க ஸ்ரீசக்கர பூஜை மற்றும் மகாலட்சுமி அலங்காரத்தை காண ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் கோவிலுக்கு வந்தனர். மேலும் நவராத்திரி திருவிழா நடைபெறும் இந்த 9 நாட்கள் மட்டுமே தான் அம்பாளின் தங்க ஸ்ரீசக்கரம் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும்.

    திருவிழாவின் 2-வது நாளான இன்று அம்பாள் அன்னபூரணி அலங்காரத்திலும், மூன்றாவது நாளான நாளை சிவதுர்க்கை அலங்காரத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 15-ந் தேதி சாமி அம்பாள் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வழக்கமாக நவராத்திரி திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியான சாமி அம்பு எய்தல் நிகழ்ச்சியானது ராமேசுவரம் கோவிலோடு சேர்ந்த உப கோவிலான பத்திரகாளி அம்மன் கோவில் அருகே உள்ள திடலில் வைத்து சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனாபரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் கோவிலின் உள்ளேயே இந்த ஆண்டு அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    நெல்லையப்பர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்கள் கொலுவை பார்த்து வணங்கி செல்கிறார்கள். நவராத்திரி திருவிழா வருகிற 15-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கியது.

    கோவில் சோமவார மண்டபத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின் அடையாளமான கொலு வைக்கப்பட்டு உள்ளது. அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு தினமும் காலை 10.30 மணி அளவில் ஹோமம் வளர்த்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

    காந்திமதி அம்பாள் சன்னதியில் இரவு 7 மணியளவில் லட்சார்ச்சனையும், அதை தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பக்தர்கள் கொலுவை பார்த்து வணங்கி செல்கிறார்கள். நவராத்திரி திருவிழா வருகிற 15-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    திருவிழா நாட்களில் அய்யா வைகுண்ட தர்மபதி அன்னம், கருட வாகனம், மயில், ஆஞ்சநேயர், சர்பம், மலர்முக சிம்மாசனம், குதிரை, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வருவார்.
    சென்னை மணலிபுதுநகரில் அமைந்துள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு நேற்று காலை 6.30 மணியளவில் அய்யா திருநாம கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

    அப்போது, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருநாமக் கொடியை பக்தர்கள் சுமந்தபடி சுற்றி வந்து அய்யா சிவ, சிவ அர, கர என்ற உகப்படிப்பு நாமத்தை எழுப்பினர். அப்போது 60 அடி உயர கொடி கம்பத்தில் திருநாமக் கொடி ஏற்றப்பட்டது.

    விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மாலை அய்யா காளை வாகனத்தில், பதிவலம் வந்தார். அதைத்தொடர்ந்து திருவிழா நாட்களில் அய்யா வைகுண்ட தர்மபதி அன்னம், கருட வாகனம், மயில், ஆஞ்சநேயர், சர்பம், மலர்முக சிம்மாசனம், குதிரை, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வருவார்.

    விழாவின் முக்கிய நிகழ்வான, சரவிளக்கு பணிவிடை, திருக்கல்யாண ஏடு வாசிப்பு எட்டாம் நாளான 15-ந்தேதி இரவு நடைபெறும். திருத்தேர் உற்வசம் 10-ம் நாளான 17-ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெறும். அன்று இரவு திருநாம கொடி அமர்தல் நிகழ்வுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா நடைபெறும் நாட்களில் கோவில் நிர்வாகம் சார்பில் 3 வேலைகளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் 2-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் கொலு வீற்றிருந்தார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டு நவராத்திரி உற்சவ விழா 17-ம் தொடங்கியது. இந்த விழா வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது.

    நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படாது. எனவே பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை மட்டும் தரிசித்து சென்றனர். மேலும் அர்ச்சனை கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்கு செய்யப்பட்டது.

    நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி அம்மன் எழுந்தருளி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி தருவார்.

    நவராத்திரி விழாவின் 2-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் கொலு வீற்றிருந்த காட்சி.

    அரசு அறிவித்தப்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் வழக்கம் போல் கோவிலுக்குள் அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் நடைபெறும். கோவில் திறந்து பக்தர்களை அனுமதிக்கும் நாட்களில் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலஸ்தான அம்மன் அலங்காரத்தை பக்தர்கள் நேரில் தரிசனம் செய்யலாம்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    ×