என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருமலை பிரம்மோற்சவ விழாவில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் உற்சவர் மலையப்பசாமி, ‘ராஜமன்னார்’ அலங்காரத்தில் கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 9 மணியளவில் கோவிலில் உள்ள கல்யாணோற்சவ மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் உற்சவர் மலையப்பசாமி, ‘ராஜமன்னார்’ அலங்காரத்தில் கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சர்வ பூபால வாகனத்தில் உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வாகனச் சேவையில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பிரசாந்திரெட்டி, சனத்குமார், முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    சொர்ணவல்லித் தாயார், பிரம்மா, மகாலட்சுமி, ஸ்ரீராமர், நட்சோதி மன்னன் போன்றவர்களே இத்திருக்கோவில் வந்து பித்ரு தர்ப்பணம் செய்துள்ளனர் என்றால், இக்கோவிலின் மகிமையும், பித்ரு தர்ப்பணத்தின் மகிமையும் நமக்கு விளங்கும்.
    மகாளய அமாவாசை தினத்தன்று திலதர்ப்பணபுரி கோவிலை தரிசிப்பது மிகப் பொருத்தமாக இருக்கும். இந்த திலதர்ப்பணபுரி திருக்கோவில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

    தல மூர்த்தி : ஸ்ரீ முக்தீஸ்வரர்
    தல இறைவி : சொர்ணவல்லி
    தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
    தல விருட்சம் : மந்தார

    திலதர்ப்பணபுரி திலம் என்றால் எள், புரி என்றால் தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு தலங்கள் 7 உள்ளன. அவை காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி விளங்குகிறது. ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப்படுகின்றன.

    ராமாயணத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்லும் போது ஜடாயு என்ற பறவை ராவணனிடம் இருந்து சீதையை காப்பாற்ற முயன்று சிறகுகள் வெட்டப்பட்டு இறந்தது. சீதையைத் தேடி ஸ்ரீ ராமரும், லட்சுமணனும் இலங்கையை நோக்கிப் பயணம் மேற்கொண்டனர். ஸ்ரீ ராமருக்கு தனது தந்தை தசரதனுக்குச் செய்ய வேண்டிய பித்ரு காரியங்களைச் செய்யாமல் இருப்பது மனதிற்கு மிகவும் வேதனையைக் கொடுத்தது.

    அதை நேரத்தில் தன் பொருட்டு உயிரை விட்ட ஜடாயு பறவைக்கும் பித்ரு பூஜை செய்ய விரும்பினார் ஸ்ரீ ராமர். அவ்வாறாக இலங்கைக்கு செல்லும் பாதையில் இந்த திலதர்ப்பணிபுரிக்கு வந்து இங்குள்ள அரசலாற்றில் நீராடி தன் தந்தை தசரதனுக்கும், ஜடாயு பறவைக்கும் வந்து இங்குள்ள அரசலாற்றில் நீராடி தன் தந்தை தசரதனுக்கும், ஜடாயு பறவைக்கும் பித்ரு கடமைகளைச் செய்தார். அவர்களும் மனம் குளிர்ந்து ஸ்ரீராமரின் பித்ரு கைங்கர்யங்களை நேரில் வந்து ஏற்றுக் கொண்டு அவர்களை ஆசீர்வதித்தனர். இவ்வாறாக இத்தலம் பித்ரு தலம் ஆகியது.

    கோதாவரி நதிக் கரையில் போகவதி என்னும் ஊரை நட்சோதி மகாராஜா ஆண்டு கொண்டிருந்தார். அவரது அரசவைக்கு ஒருநாள் நாரதர் பெருமான் வருகை புரிந்தார். அரசர் நாரதரிடம், இந்தியத் திருநாட்டிலே எந்த தலம் புண்ணியத் தலமாக விளங்குகிறது என்று வினவினார்.

    அதற்கு நாரதர், எந்தத் திருத்தலத்தில் நாம் செய்யும் பிண்ட தானத்தை பித்ருக்கள் நேரில் வந்து பெற்றுச் செல்கின்றரோ, அந்தக் திருத்தலமே புண்ணியத் திருத்தலம், எனக் கூறினார். மன்னன் பல திருத்தலங்களுக்குச் சென்று, கடைசியாக திலதர்ப்பணபுரி திருத்தலம் வந்து, அமாவாசை அன்று பித்ரு பூஜைகள் செய்து, பிண்ட தானம் வழங்கினார். பித்ருக்கள் நேரில் வந்து பிண்ட தானம் பெற்று மனம் குளிர்ந்து ஆசி வழங்கினர்.

    திலதர்ப்பணபுரி திருத்தலம் நுழையும் போதே ஒரு சிறந்த, அரிய விஷயம் நம்மை வியப்படைய வைக்கிறது. திருக்கோயிலை பார்த்துக் கொண்டு, மேற்கு நோக்கி ஆதி விநாயகர் சன்னதி உள்ளது. இந்த விநாயகரை நரமுக விநாயகர், மனித முக விநாயகர் என்றும் அழைக்கின்றனர். வேழ முகம் தோன்றுவதற்கு முன்பாக உள்ள மனித முகத்துடன் கணபதி காட்சி தருகிறார். ஜடாமுடியுடனும், ஆனந்த முத்திரையுடனும் காட்சி தருகிறார்.

    திலகைப்பதி, கோவில்பத்து, சிதலபதி என்ற பெயர்களையும் உடைய திலதர்ப்பணபுரி ஆலய சிவ சன்னதியில், நம்பிக்கையோடு செய்யப்படும் எள் தர்ப்பணம், யாகம், அர்ச்சனை அனைத்தும் விசேஷம் வாய்ந்தது.

    திருக்கோயிலின் தெற்கு புறத்தில் ராமர் தன் கையாலேயே பிடித்து வைத்து பூஜை செய்த அழகநாதர் இருக்கிறார். நந்திகேஸ்வரர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, மகாவிஷ்ணு, அஷ்டபுஜ துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், சூரியன், சந்திரன், பைரவர், நாயன்மார்களில் முதன்மையான நால்வர் சன்னதிகள் உள்ளன. இந்த சாமி சிலைகள் அனைத்தும் நுட்பமான வேலைபாடுகளுடன் அச்சில் வார்த்தது போல அழகாக உள்ளன.

    கிழக்கு நோக்கி பத்தாயிரம் ருத்ராட்சங்கள் கொண்ட ருத்ராட்சப் பந்தலின் கீழ் நாகம் குடை பிடிக்க ஸ்ரீ முத்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். அருகிலேயே சொர்ணவல்லித் தாயார் சன்னதி உள்ளது.

    சிவபிரானின் சொல் பேச்சு கேட்காமல், பார்வதி தனது தந்தை நடத்தும் யாகத்திற்குச் சென்றார். அங்கு தனது தந்தை தட்சனால் அவமானப் படுத்தப்பட்டு திரும்பினார். அந்த பாவம் தீர இங்கு வந்து மந்தார மரம் ஒன்றை நட்டு வைத்து அங்கேயே குடிகொண்டார்.

    சில காலங்கள் கழித்து சிவன் மனம் மாறி பார்வதியை தன் இடபாகத்தில் அமர்த்திக் கொண்டார். பார்வதியால் நடப்பட்ட மந்தார மரமே இங்கு தலவிருட்சமாகக் திகழ்கிறது. பிதுர் லிங்கங்களுக்கு நேராக வலது காலை மண்டியிட்டு ரமர் தர்ப்பணம் செய்யும் காட்சி. நட்சோதி மன்னன் தர்ப்பணம் செய்யும் காட்சி போன்றவற்றை இத்திருக்கோயிலில் காணலாம்.

    இக்கோயில் மகாளய பட்சமாகிய 15 நாட்கள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் செய்யப்படும் காருண்ய தர்ப்பணம் இங்கு மிக விசேஷம். சொர்ணவல்லித் தாயார், பிரம்மா, மகாலட்சுமி, ஸ்ரீராமர், நட்சோதி மன்னன் போன்றவர்களே இத்திருக்கோவில் வந்து பித்ரு தர்ப்பணம் செய்துள்ளனர் என்றால், இக்கோவிலின் மகிமையும், பித்ரு தர்ப்பணத்தின் மகிமையும் நமக்கு விளங்கும்.*
    ஸ்ரீகாளஹஸ்தி கோவில் நவராத்திரி விழாவில் உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சன்னதி எதிரில் பொம்மை கொலு அருகில் கூஷ்மாண்டதேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சன்னதி எதிரில் பொம்மை கொலு அருகில் கூஷ்மாண்டதேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதைத்தொடர்ந்து மாலை 7.30 மணியளவில் உற்சவர் ஞானப் பிரசுனாம்பிகை தாயார் கூஷ்மாண்டதேவி அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள பாலஞானாம்பாள் சன்னதி வரை ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அங்கு தாயாருக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதில் கோவில் நிர்வாக அதிகாரி ெபத்தி.ராஜு மற்றும் வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
    கருட வாகனத்தில் எழுந்தருளும் உற்சவர் மலையப்பசாமிக்கும், மூலவர் ஏழுமலையானுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து அனுப்பி வைக்கப்படும் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் அணிவிக்கப்படும்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதையொட்டி இன்று (திங்கட்கிழமை) மாலை கருட சேவை நடக்கிறது. கருட வாகனத்தில் எழுந்தருளும் உற்சவர் மலையப்பசாமிக்கும், மூலவர் ஏழுமலையானுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து அனுப்பி வைக்கப்படும் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் அணிவிக்கப்படும்.

    ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் நேற்று திருமலைக்கு வந்தன. முன்னதாக திருமலையில் பேடிஆஞ்சநேயர் கோவிலில் அருகில் உள்ள பெரியஜீயர் சுவாமிகள் மடத்துக்கு மாலைகள் கொண்டு வரப்பட்டன. அங்கு வைத்து ஆண்டாள் சூடிய மாலைகளுக்கு பெரியஜீயர் சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள் தலைமையில் சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.

    இதையடுத்து தமிழக அமைச்சர் சேகர்பாபு, ஏழுமலையான் கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் சேர்மன் ரவிச்சந்திரன், அணைக்கட்டு தொகுதி ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் பெரியஜீயர் சுவாமிகள் மடத்தில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளை கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலுக்குள் கொண்டு சென்று மூலவரிடம் சமர்ப்பணம் செய்தனர்.
    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தாயார் திருவடி சேவை நேற்று நடைபெற்றது. அனுமதி இல்லாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலின் உபகோவிலான இந்த கோவிலில் விசேஷமானதாக கருதப்படும் நவராத்திரி உற்சவம் கடந்த 6-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி தினமும் மாலை தாயார் மூலஸ்தானத்தில் இருந்து நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அந்தவகையில் நவராத்திரி 5-ம் நாளான நேற்று வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை வைபவம் நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று மாலை கமலவல்லி தாயார் (உற்சவர்) மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க உள் வீதிகளில் அரையர் சேவையினை கேட்டபடி வலம் வந்தார். அப்போது கமலவல்லி நாச்சியார் சந்திர சூரியன் சவுரி கொண்டை, நெத்தி பட்டை, கலிங்க தொரா, காசு மாலை, முத்து மாலை, பவள மாலை, தங்க நெல்லிக்காய் மாலை, வைரத்தாலான பெருமாள் பதக்கம், வலது ஹஸ்தத்தில் கிளி, இடது ஹஸ்தத்தில் திருஆபரணங்கள், வைர திருமாங்கல்யம், பாத சலங்கை, தோடா (சிலம்பு) அணிந்திருந்தார்.

    பின்னர், நவராத்திரி மண்டபத்தில் பொற்பாதங்கள் (திருவடி) தெரிய எழுந்தருளினார். அங்கு அவருக்கு அமுது செய்விக்கப்பட்டது. இதன் பின்னர் தாயார் மூலஸ்தானம் சென்றடைந்தார். தாயாரின் திருவடியை பக்தர்கள் சேவித்தால் செல்வம் பெருகும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும் என்பது ஐதீகம்.

    இதனால் உறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தாயார் திருவடி சேவையை கண்டு தரிசிப்பார்கள். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக நேற்று நடைபெற்ற தாயார் திருவடி சேவையை தரிசிக்க பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    ஆஞ்சநேயரை வழிபட்டால் அஷ்டமத்து சனி, ஏழரை நாட்டுச் சனி, ராகு-கேது பெயர்ச்சி காலங்கள் மற்றும் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் துயரங்களில் இருந்து நாம் தப்ப முடியும்.
    ஆதிசங்கரரின் பஞ்சரத்தினம், துளசி தாசரின் அனுமன் சாலீசா, புரந்தரதாசரின் ஆஞ்சநேயர் கீர்த்தனங்கள், ஆஞ்சநேய கவசம் மற்றும் அஷ்டோத்திர சதநாமாவளி போன்றவற்றை தினமும் பாராயணம்செய்து வந்தால், நாம் செய்யும் நல்ல காரியங்கள் அனைத்திலும் ஆஞ்சநேயர் துணை இருப்பார். உடல் வலிமை, மன வலிமை இரண்டும் ஒருங்கே கிடைக்கும்.

    அது மட்டுமல்ல ஆஞ்சநேயர் அன்பாலும், தன்பலத்தாலும் சனி, ராகு, கேது மற்றும் செவ்வாயை கட்டுப்படுத்தி வைத்துள்ளார்.

    எனவே ஆஞ்சநேயரை வழிபட்டால் அஷ்டமத்து சனி, ஏழரை நாட்டுச் சனி, ராகு-கேது பெயர்ச்சி காலங்கள் மற்றும் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் துயரங்களில் இருந்து நாம் தப்ப முடியும்.

    மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைவதையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் அடுத்த மாதம் 13-ந் தேதி குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது.
    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. நவக்கிரகங்களில் குருபகவானுக்குரிய கோவிலான இந்த கோவில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற தலமாகும். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த விழாவை முன்னிட்டு குருபகவானுக்கு லட்சார்ச்சனை விழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அடுத்த மாதம் (நவம்பர்) 13-ந் தேதி (சனிக்கிழமை) குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குருபெயர்ச்சியை முன்னிட்டு ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழாவும், லட்சார்ச்சனையும் நடக்கிறது. ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.

    லட்சார்ச்சனை கட்டணம் ரூ.400 ஆகும். லட்சார்ச்சனை பிரசாதமாக குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் வழங்கப்படும். காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வரைவோலை அல்லது மணியார்டர் மூலம் தொகை அனுப்புபவர்கள் உதவி ஆணையர், செயல்அலுவலர், ஆபத்சகாயேஸ்வரர் கோவில், ஆலங்குடி, வலங்கைமான் வட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

    வரைவோலை எடுப்போர் கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி கிளையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இந்த தகவலை கோவில் தக்காரும் உதவி ஆணையருமான செ.சிவராம்குமார் மற்றும் உதவி ஆணையரும் செயல் அலுவலருமான பி.தமிழ்ச்செல்வி ஆகியோர் தெரிவித்தனர்.
    ராமேசுவரம் கோவிலில் நவராத்திரி 4-ம் நாள் விழாவில் பர்வதவர்த்தினி அம்பாள் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளிய காட்சி அளித்தார்.
    நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு தினமும் அம்பாள் ஒவ்வொரு அவதாரத்தில் வருகின்ற 14-ந் தேதி வரையிலும் ஒன்பது நாட்களும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    நவராத்திரி திருவிழாவின் 4-வது நாளான நேற்று ராமேசுவரம் கோவிலில் பர்வதவர்த்தினி அம்பாள் சரஸ்வதி அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

    திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக வருகிற 15-ந் தேதி சாமி அம்பாள் அம்பு எய்தல் நிகழ்ச்சியானது கோவிலின் உள்ளேயே நடைபெறுகின்றது. வழக்கமாக நவராத்திரி திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியான சாமி அம்பாள் அம்பு எய்தல் நிகழ்ச்சியானது ராமேஸ்வரம் கோவிலோடு சேர்ந்த உபகோவிலான பத்திரகாளியம்மன் கோவில் அருகே வைத்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமை இந்த 3 நாட்களை தவிர்த்து வழக்கம்போல் மற்ற நாட்களில் மட்டும் பக்தர்கள் கொலு மண்டபத்தில் நடைபெறும் அம்பாள் பூஜைகளை காண அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது.
    நாகர்கோவில் மேலராமன்புதூரில் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 14-ந்தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.
    நாகர்கோவில் மேலராமன்புதூரில் பரிசுத்த திருக்குடும்ப ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருவிழா திருப்பலி நடக்கிறது.

    திருக்குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்ற சிந்தனை நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் ஜெரேமியாஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் சாம் மேத்யூ மறையுரையாற்றுகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி திருப்பலிக்கு அருட்பணியாளர் துரைசாமி தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருவிழா திருப்பலியும், திருக்குடும்பம் ஒரு பொறுப்பு என்ற சிந்தனை நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் ஆண்ட்ரூஸ் தலைமை தாங்க அருட்பணியாளர் ஸ்டான்லி மறையுரையாற்றுகிறார்.

    13-ந் தேதி அன்று காலை 6 மணி திருப்பலிக்கு கார்மல் பள்ளி அருட்தந்தையர்கள் தலைமை தாங்கி மறையுரையாற்றுகின்றனர். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனையும், திருக்குடும்பம் ஒரு திருஅவை சிந்தனை நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் ஜாய் தலைமை தாங்க அருட்பணியாளர் டேவிட் மைக்கேல் மறையுரையாற்றுகிறார்.

    14-ந்தேதி அன்று காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி, முதல் திருவிருந்தும், திருக்குடும்பம் ஒரு கோவில் சிந்தனை நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் தேவதாஸ் தலைமை தாங்க அருட்பணியாளர் வின்சென்ட் எட்வின் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு தேர் திருப்பலி நடக்கிறது. பிறகு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, அருட்சகோதரிகள், பங்கு மக்கள், ஊர்நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
    திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
    திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணிவரை 2 மணிநேரம் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அப்போது ஜாதிபத்திரி, பிஸ்தா, உலர்ந்த பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, ரோஜா மலர்கள், தாமரை மலர்கள் உள்பட பல வண்ணமலர்கள், கொய் மலர்கள், நீல நிறத்திலான புனித மாலைகள், வெட்டி வேர், துளசி, பன்னீர் இலை, ஆஸ்திரேலிய பப்பாளி, திராட்சை கொத்துகள் ஆகியவற்றால் செய்யப்பட்ட மாலைகளை உற்சவர்களுக்கு அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. பிரத்யேக கிரீடங்களும் அணிவிக்கப்பட்டன.

    மேலும் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்த ரெங்கநாயக்கர் மண்டபத்தில் 20 திறமையான கைவினைஞர்கள் 3 நாட்களாக வேலை செய்து தாமரை வடிவிலான மண்டபத்தை உருவாக்கினர்.

    நவராத்திரியின் ஒன்பது நாட்களும், விரதம் இருந்து அவரவர் சக்திகேற்றவாறு மகாசக்தியை ஆவாகனம் செய்து, தினமும் நிவேதனம் படைத்து வழிபட வேண்டும்.
    நவராத்திரி வழிபாடு நாட்களில், வீடுகளிலும் வைணவக் கோவில்களிலும் வைக்கப்படும் கொலு, மிகவும் பிரசித்திப் பெற்றது. பலவிதமான தெய்வ, மகான், மனித பொம்மைகளை, படிகள் அமைத்து அதில் அடுக்கி வைப்பார்கள். ‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் செய்யப்படும் பொம்மையை வைத்து என்னை வழிபடுபவர்களுக்கு, நான் சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’ என்று தேவி பாகவதத்தில் அம்பாள் கூறியிருக்கிறார். எனவேதான் நவராத்திரி நாட்களில், அம்பிகைக்குப் பிடித்த பொம்மைகளை வைத்து அலங்கரித்து அவளது அருளை வேண்டுகின்றனர். மனிதன் படிப் படியாக ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து பரிணாம வளர்ச்சி பெற்று, இறுதியில் கடவுளுடன் இரண்டறக் கலக்க வேண்டும் எனும் தத்துவத்தையே கொலுப்படிகளும், அதில் வைக்கப்படும் பொம்மைகளும் உணர்த்துகின்றன.

    நவராத்திரியின் ஒன்பது நாட்களும், விரதம் இருந்து அவரவர் சக்திகேற்றவாறு மகாசக்தியை ஆவாகனம் செய்து, தினமும் நிவேதனம் படைத்து வழிபட வேண்டும். துர்காஷ்டகமும், லட்சுமி அஷ்டோத்திரமும், சரஸ்வதி அஷ்டோத்திரமும் படித்து வணங்க வேண்டும். சிறுவயது பெண் பிள்ளைகள், கன்னிப்பெண்கள் மற்றும் சுமங்கலிப் பெண்களை அழைத்து, அவர்களை அம்மன் வடிவமாக ஆராதிக்க வேண்டும். சுமங்கலிப் பெண்கள் விரதமிருந்து, வீட்டில் தங்களால் முடிந்த அளவில் கொலுப் படிகள் அமைத்து அலங்கரித்து வழிபட வேண்டும். மேலும் பெண்களை வீட்டிற்கு அழைத்து அவர்கள் மனமும், வயிறும் நிறையும் வகையில் செய்ய வேண்டும். இதன் மூலம் அம்பிகையின் அருளை நாமும் பெறலாம்.

    நவராத்திரி ஐந்தாம் நாளான இன்று அன்னையை, சும்பன் எனும் அசுரனின் தூதுவனான சுக்ரீவன் வந்து சந்தித்து பேசுவான். அவனது தூது பேச்சை கேட்டப்படி அன்னை சிம்மாசனத்தில் வீற்றிருப்பாள்.

    அந்த சமயத்தில் அவளது தோற்றம் புன்னகை ததும்ப காட்சி அளிப்பதாக இருக்கும். இத்தகையை வடிவத்தில் அன்னையை அலங்கரித்து வழிபட வேண்டும்.

    இந்த அலங்காரத்தில் அன்னையை மோகினி என்பார்கள். வைஷ்ணவி என்றும் மகாகாளி என்றும் இந்த அவதாரத்தை சொல்வதுண்டு. எனவே காளிக்குரிய பாரிஜாத மலர் கொண்டு அன்னையை வழிபட வேண்டும். அப்போது நீலாம்பரி ராகத்தில் அன்னையை துதித்து பாடினால் காளிதேவி ரசித்து கேட்டு மகிழ்ச்சி அடைவாள்.

    இன்று 6-வயது குழந்தையை அம்மனாக பாவித்து வழிபட வேண்டும். அந்த சிறுமிக்கு இலவங்கப்பட்டையும் சந்தனமும் கொடுக்கலாம். சிலர் தாமிரம் கொடுப்பதுண்டு.

    இன்றைய தினம் அம்பாளை பவளமல்லி மற்றும் சாம்பல் நிற இலைகள் கொண்டு பூஜிப்பது அதிக பலன்களை தரும். அது போல அம்பாளை மாதுளம் பழம் படைத்து வழிபடலாம். நைவேத்திய வகைகளில் தயிர் சாதம் படைக்க வேண்டும்.

    இன்றைய வழிபாடு அனைத்து வகை செல்வங்களையும் கொண்டு வந்து நமக்கு தரும். மேலும் நீங்கள் எந்த செல்வம் வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அல்லது ஆசைப்படுகிறீர்களோ அவை அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

    வடிவம் : மோகினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்)
    பூஜை : 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.
    திதி : பஞ்சமி
    கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.
    பூக்கள் : கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.
    நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல்.
    ராகம் : பஞ்சமாவரணை கீர்த்த னைகள் பாட வேண்டும். பந்துவராளி ராகமும் பாடலாம்.
    பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.
    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக்கிய விழா நாட்களிலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலிக்கின்றார்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக்கிய விழா நாட்களிலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    இதனால் 2-ம் திருநாளில் மட்டும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று காப்பு வாங்கி கைகளில் கட்டி வேடம் அணிந்தனர். தசரா குழுவினரும் மொத்தமாக காப்புகளை வாங்கி சென்று, தங்களது ஊர்களில் விரதம் இருந்த பக்தர்களுக்கு வழங்கினர். தொடர்ந்து பல்வேறு ஊர்களிலும் வேடம் அணிந்த பக்தர்கள் அந்தந்த ஊர்களில் பக்தர்களிடம் காணிக்கை வசூலித்து வருகின்றனர்.

    தசரா திருவிழாவின் 3-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரையிலும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 5-ம் திருநாளான நேற்று இரவில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் கோலத்தில் அம்மன் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து காட்சி அளித்தார்.

    6-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) முதல் 9-ம் திருநாளான வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) வரையிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    தொடர்ந்து 10 முதல் 12-ம் திருவிழா நாட்களில் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் கோவில் முன்பாக பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெறுகிறது.
    ×